கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

10. (முடிவு) நதியிலே புதுப்புனல்

Annapurani Dhandapani

Active member
10.


ஷிவன்யா தினுவைப் பார்த்து ஒரு நன்றியும் ஒரு மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று நினைத்தபடி இருக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, அப்படி ஒரு வாய்ப்பு இருவருக்குமே கிடைக்கவில்லை.

தினு, தன்னுடைய வேலையில் முழு மூச்சாக கவனம் செலுத்தி மிகக் குறைந்த காலத்திலேயே சீஃப் ஆர்கிடெக்ட் என்ற நிலைக்கு உயர்ந்தான். அவனுக்கு அலுவலகத்தில் பல சலுகைகளும் வசதிகளும் தரப்பட்டன.

ஒரு நாள் அவன் ஏதேச்சையாக ஷிவன்யாவை ஒரு வணிக வளாகத்தில் சந்திக்க நேர்ந்தது.

"என்னமோ சவால் விட்டியே? உன்னால முடிஞ்சா சாதிச்சி காட்டுன்னு.. ஆறு மாசத்தில சாதிக்கறேன்னு சொன்னேன்ல.. இதோ பாரு மூணே மாசம்டீ.. மூணே மாசத்தில சாதிச்சி காட்டிட்டேன்.. என் கம்பெனில எனக்கு தனியா கார் குடுத்திருக்காங்க.. நா அப்பவே முப்பதாயிரம் சம்பளம் வாங்கிட்டிருந்தேன்.. இப்ப ஒண்ற லட்சம் டேக் அவே.. அதத்தவிர மற்ற வசதிகள். இன்னும் தனியா வீடு கூட உண்டு.. ஆனா நாந்தான் அது வேணாம்னு சொல்லிருக்கேன்.. அதனால அதையும் பணமாவே குடுக்கறாங்க.. தெரியுமா.. ஹூம்.. யாரப்பாத்து சவால் விட்ட.." என்று ஷிவன்யாவின் முகத்தின் முன்னே சொடுக்கு போட்டு பேசிவிட்டு கடகடவென்று சென்று விட்டான்.

ஒரு பக்கம் அவளுக்கு கோபமாக வந்தாலும் மறு பக்கம் மகிழ்ச்சியாகவே இருந்தது. இனிமே ரேவதி ஆன்ட்டி வருத்தப்பட மாட்டாங்க என்று நினைத்துக் கொண்டாள்.

இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், உடல்நிலை தேறி வந்த தேவராஜை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் அவரோ தன் உற்ற நண்பன் ராகவனை அழைத்துக் கொண்டு வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்.

அவரை நினைத்து ஷிவன்யாவுக்கு மிகுந்த கவலையாக இருந்தது.

"அப்பா! இப்டி உடம்பு சரியில்லாதப்ப எங்கப்பா போறீங்க? வீட்ல இருந்து ரெஸ்ட் எடுங்கப்பா!" என்று கெஞ்சாத குறையாக அவள் சொல்வதை அவர் காதிலேயே வாங்கவில்லை.

மாறாக அவளையும் சில நாள் எங்கேயோ அழைத்துப் போனார்.

"ம்ச்.. நீங்க போகறதையே வேணாம்னு சொல்றேன்.. இதுல நீங்க என்னை வேற எங்கியோ இழுத்தடிக்கிறீங்க!" என்று அவள் கோபமாகச் சொன்னாள்.

ஆனால் அவளுடைய கோபத்துக்கோ சிணுங்கல்களுக்கோ என்றைக்கு மதிப்பிருந்தது இன்று இருப்பதற்கு?

இரண்டு நாட்கள் புதிதாகக் கட்டப்படும் பெரிய குடியிருப்பு வளாகத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே அவளை வெறுமே வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு அவர் யாருடனோ பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தார்.

இவள் ஆர்கிடெக்ட் படித்திருப்பதால் இவளுக்கு அங்கே கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின் மாதிரியை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னும் சொல்லப் போனால் அங்கே பொறுப்பில் இருந்த பொறியாளர் செய்திருந்த சிறிய தவறைக் கண்டுபிடித்து அதை சரி செய்யவும் அவளால் முடிந்தது.

அங்கே அவள் தினுவைப் பார்த்தாள். இவள் கட்டிடப் பொறியாளரிடம் பேசிக் கொண்டிருந்ததை அவனும் கவனித்தான்.

'பரவால்ல! மத்த விஷயத்தில மக்குன்னாலும் படிச்ச படிப்ப ஒழுங்கா படிச்சிருக்கா!' என்று நினைத்துக் கொண்டான்.

ஆனால் அவளிடம் சென்று பேசவில்லை. அவளும் அவனிடம் பேச முயலவில்லை.

மற்றொரு நாள் அவளை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரும் ராகவனும் உள்ளே மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய செவிலி ஒருத்தி வந்து அழைக்கவும் ஷிவன்யாவுக்கு சுறுசுறுவென்று கோபம் வந்தது.

"அப்பா! என்னப்பா? எனக்கு எதுக்கு ப்ளட் டெஸ்ட்?" என்று கோபமாகக் கேட்டுக் கொண்டே அந்த மருத்துவரின் அறைக்குள் புயலாய் நுழைந்தாள்.

"ஷிவா! வாட் இஸ் திஸ்? இஸ் திஸ் ஹௌ யூ பிஹேவ் இன் பப்ளிக்?" என்று கடிந்து கேட்டுவிட்டு,

"ஜஸ்ட் டூ வாட் ஐ சே!" என்று மிகவும் கடுகடுத்த முகத்துடன் கட்டளையிட்ட தன் அப்பாவை கோபமாகப் பார்த்துக் கொண்டே அவர் கூறியபடி அந்தச் செவிலியுடன் சென்றாள்.

மாலை வீட்டுக்கு வந்த பின்னர் தன் அப்பாவிடம் பேசாமல் கோபத்துடன் தன்னுடைய அறையில் ஒதுங்கியிருந்தவளை அவளுடைய அப்பா கண்டு கொள்ளவேயில்லை.

'வர வர ரொம்ப பண்றார்.. இவருக்குதான் உடம்பு சரியில்ல.. ப்ளட் டெஸ்ட் பண்ணனும்! எனக்கெதுக்கு டெஸ்ட் எடுக்கறார்ன்னு புரியவேயில்ல.. எதையாவது கேட்டா கடுகடுன்னு மூஞ்ச வெச்சிகிட்டு ஜஸ்ட் டூ வாட் ஐ சே ன்னு சொல்ல வேண்டியது.. அம்மா உயிரோட இருந்திருந்தா இப்டிலாம் நடக்க விட்டிருப்பாங்களா.. அம்மா.. நீ ஏம்மா என்ன விட்டுட்டு செத்து போன.. எனக்கு இந்த அப்பா பிடிக்கவேயில்லம்மா.. ரொம்ப கொடுமை பண்றார்ம்மா..' என்று தனக்குள் அழுதபடியே உறங்கிப் போனாள்.

இரவு உணவு சாப்பிடாமலேயே உறங்கிப் போன மகளை வாஞ்சையுடன் பார்த்த தேவா, மெதுவாக அவளுடைய தலையைக் கோதிவிட்டு அவளுடைய நெற்றியில் முத்தமிட்டார்.

'உன்ன ரொம்ப அலைக்கழிக்கறேன்ல கண்ணம்மா! எனக்கு வேற வழியில்லடா! எல்லாம் சீக்கிரத்திலயே நீ புரிஞ்சிக்குவ..' என்று சொல்லிக் கொண்டே அவளை சாப்பிட எழுப்பினார்.

"ஹூம்.." என்று ஐந்து வயது குழந்தை போல சிணுங்கியபடி எழுந்து வந்தவளை சாப்பிட வைத்து தூங்க அனுப்பினார் தேவா.

மறுநாள் காலை எழுந்து வந்தவள் மிகுந்த உற்சாகத்துடன் அமர்ந்திருந்த தேவாவைக் கண்டு குழம்பிப் போனாள்.

இவளைப் பார்த்ததும்,

"குட் மானிங் குட்டிமா! வா! வா! சீக்கிரம் ரெடியாகி வா! இன்னிக்கு ஒரு சந்தோஷமான நாள்! நா உன்ன ஒரு முக்கியமான இடம் கூட்டிட்டு போகப் போறேன்! வா! வா!" என்று மகிழ்ச்சி பொங்கக் குரல் கொடுத்தார்.

'ஓ! நேத்திக்கு நா கோவப்பட்டேன்னு இன்னிக்கு இப்டி ஜாலியா பேசி கூப்பிடறார்! இது புது டெக்னிக் போலிருக்கு! இவரெல்லாம் என்ன செஞ்சாலும் திருத்த முடியாது! இவர் சொல்றபடி செய்யலன்னா என்னை முறைப்பார்! கோவிச்சிக்குவார்! அப்றம் இவரு உடம்புதான் பாழாகும்! எதுக்கு வம்பு! இவர் சொல்றத செய்யறது பெட்டர்!' என்று நினைத்தபடியே தயாராகி வந்தாள்.

சாதாரண பருத்தியினாலான சுடிதாரில் தயாராகி வந்தவளை நல்ல உயர்ரக டிசைனர் சுடிதார் உடுத்தி வரச் சொன்னார்.

ஷிவன்யாவுக்கு சந்தேகமாக இருந்தது.

"அப்பா! உண்மைய சொல்லுங்க! என்னை யாராவது பொண்ணு கிண்ணு பார்க்க வராங்களா? இல்ல என்னைய எங்கியாவது கூட்டிட்டு போய் மாப்ளய மீட் பண்ண வெக்கப் போறீங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.

தேவராஜ் தன் மகளைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு,

"இப்டி ஒரு ஐடியா இருக்குல்ல! நா நோட் பண்ணிக்கறேன்! பட், இப்ப உன்ன பொண்ணு பாக்க யாரும் வரல; உன்னயும் மாப்ள பாக்க கூட்டிட்டு போகல; போதுமா!" என்றார்.

கோபப்பட்டு கத்துவார்; டூ வாட் ஐ சே என்று சொல்வார் என்று எதிர்பார்த்தவளுக்கு வியப்பாக இருந்தது.

'என்ன சிரிச்சிகிட்டே இல்லைங்கறாரு? பொய் கிய் சொல்றாரா? இல்லையே! அப்டியெல்லாம் என்கிட்ட பொய் சொல்ல மாட்டாரே! சரி! என்னதான் நடக்குதுன்னு பாக்கலாம்!' என்று மனதுக்குள் நினைத்தபடியே அவர் கூறிய டிசைனர் சுடிதார் அணிந்து அதற்குத் தக்க நகைகள் அணிந்து மிதமான அலங்காரத்துடன் தயாராகி வந்தாள்.

அவள் வந்ததும், அவளை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்திற்குச் சென்றார் தேவராஜ்.

நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் மகளை நியமிக்கும் முக்கியமான கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அங்கு அந்த நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.

அந்தறுவனத்தின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் முகேஷும் அங்கே இருந்தான்.

தேவராஜையும் ஷிவன்யாவையும் அங்கே கண்டவன் குழம்பினான்.

'இந்த அரக்கிறுக்கும் முழுக்கிறுக்கும் எதுக்கு இங்க வந்திருக்குங்க!'

'ஓ! இந்த கம்பெனி ஷேர்ஸ் வாங்கிருக்காங்க போல.. ஷேர் ஹோல்டர்ங்கற முறையில இங்க வந்திருக்காங்களோ! இருக்கும் இருக்கும்!' என்று நினைத்து அமைதியடைந்தான்.

ஷிவன்யாவுக்கு இந்தக் கூட்டம் எதற்கு என்று புரியவில்லை. தன்னை எதற்காக தன் தந்தை இங்கே அழைத்து வந்திருக்கிறார் என்றும் புரியவில்லை. அவளும் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உரிமையாளரின் மகள் என்று ஒரு இளம்பெண்ணை அங்கே அறிமுகம் செய்யும் தறுவாயில் தேவராஜ் எழுந்தார்.

"எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில்மென்! சாரி ஃபார் த இன்டரப்ஷன்! நீங்க சொல்ற இந்த பொண்ணு இந்த கம்பெனியோட தற்போதைய உரிமையாளரோட பொண்ணா இருக்கலாம்; ஆனா இவரு இந்த கம்பெனியோட உண்மையான உரிமையாளர் இல்ல! இந்த கம்பெனிய ஆரம்பிச்சவர் மிஸ்டர் தேவநாதன். அவர்தான் இந்த கம்பெனியோட உண்மையான உரிமையாளர். அவர் பெத்த பொண்ணு சிவசங்கரி அலெய்ஸ் ஷிவன்யாதான் இந்தக் கம்பெனியோட முழுப் பொறுப்பையும் ஏத்துக்க வேண்டியவ!" என்று சொல்லி தன் மகள் ஷிவன்யாவை எழுப்பி அனைவரிடமும் காட்டினார்.

ஷிவன்யா உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

"வாட் நான்சென்ஸ்?" தற்போதைய மேனேஜிங் டைரக்டரான பரத்வாஜ் எழுந்து கோபமாகக் கேட்க,

"எஸ் மிஸ்டர் பரத்வாஜ்! இந்த கம்பெனி நீங்க ஆரம்பிச்ச கம்பெனியே இல்ல. இதோட முழு உரிமையாளரும் நீங்க இல்ல. உங்க மச்சானும் இந்தக் கம்பெனியோட முதலாளியுமான தேவநாதன் உடம்பு சரியில்லாம இருந்தப்ப அவர ஏமாத்தி இந்தக் கம்பெனியோட பொறுப்புகளை நீங்க சூழ்ச்சி செய்து வாங்கிகிட்டீங்க. சந்தர்ப்ப வசமா அவர் அகாலமா மரணமடைஞ்சதும் இந்தக் கம்பெனி முழுவதையும் உங்க கட்டுப்பாட்டுல கொண்டு வந்து நீங்கதான் இதோட உரிமையாளர்ன்னு சொல்லி இப்ப வரைக்கும் எல்லாரையும் நம்ப வெச்சிட்டிருக்கீங்க!" என்றார் தேவராஜ்.

பரத்வாஜ் தேவராஜ் கூறியதை மறுத்து எதையோ சொல்லத் தொடங்கும் போது,

"இந்தக் கம்பெனியோட பொறுப்பு மட்டுமல்லாது தேவநாதனுடைய மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு, இந்த ஷிவன்யாதான்.

இந்த ஷிவன்யாதான் உங்க மச்சான், அதாவது உங்க மனைவி தரணியோட அண்ணனான தேவநாதனுடைய ஒரே மகள் சிவசங்கரி! டிஎன்ஏ ரிப்போர்ட் உட்பட அதுக்கு உண்டான எல்லா ப்ரூஃபும், எங்ககிட்ட இருக்கு! அத எங்க கொடுக்கணுமோ அங்க கொடுத்தாச்சு!" என்று கூறிக் கொண்டே அங்கே வந்தார் தேவராஜின் உற்ற நண்பர் ராகவன்.

"ராகவன்! நீங்களா? நீங்க எப்டி.. இன்னும்.." என்று தயக்கத்துடன் இழுத்தார் பரத்வாஜ்.

"எப்டி இன்னும் உயிரோட இருக்கேன்னு கேக்கறீங்களா? இல்ல ஏன் இன்னும் உயிரோட இருக்கேன்னு கேக்கறீங்களா?" என்று ஏளனமாகக் கேட்டார் ராகவன்.

அனைவரும் அதிர்ந்து போய் தேவராஜையும் ஷிவன்யாவையும் ராகவனையும் பார்த்தனர்.

"பரத்வாஜ்! இனிமே உங்க ஆட்டம் முடிஞ்சது." என்று ராகவன் கூறிவிட்டு, தேவராஜைப் பார்த்தார்.

"வெல்! உங்க எல்லாருக்கும், என் மகள் ஷிவன்யாங்கற பெயர்ல இருக்கற இந்த சிவசங்கரி உட்பட எல்லாருக்கும் உண்மைய சொல்ற நேரம் வந்திடுச்சி!

நான் தேவராஜ். ஒரு சாதாரண மெக்கானிக். நான் ஒரு தனியார் நிறுவனத்தில வேல பண்ணிட்டு இருந்தேன். என் மனைவி ஒரு வயசு குழந்தையோட எளிமையான ஆனா ரொம்ப ரொம்ப சந்தோஷமான வாழ்கை வாழ்ந்துட்டிருந்தேன். அப்ப ஒரு நாள் நைட் நானும் என் மனைவியும் குழந்தையோட சினிமாவுக்கு போய்ட்டு திரும்பி வரும்போது ஒரு ஆக்சிடென்ட்ல அவளும் என் குழந்தையும் இறந்துட்டாங்க.

நா வாழ்க்கையே வெறுத்திட்டேன். தற்கொலை பண்ணிக்க போகும்போது இந்தப் பொண்ணு, சிவசங்கரி, ஐந்து வயசுக் குழந்தையா என் காலை கட்டிகிட்டு பசிக்கிதுன்னு அழுதா! சாகறப்ப இவளுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு அப்றமா செத்தா புண்ணியமாவது கிடைக்குமேன்னு நா சாப்பாடு வாங்கி குடுத்தேன்.. சாப்பாடடை பார்த்ததும் இவ முகம் மாறிடுச்சு. இல்ல பிச்சை எடுக்கறது தப்புன்னு அப்பா சொல்லிருக்காங்க. நா உங்க கிட்ட பிச்ச கேட்டிருக்க கூடாது. அத்த அடிச்சாலும் பரவால்ல.. நா பிச்ச எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனா..

எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சி.. இவ பின்னாடியே போனேன்.. இவ ஒரு வீட்டுக்குள்ள போறத பாத்து இவளப் பத்தி அக்கம் பக்கத்தில விசாரிச்சேன்..

இவளோட கஷ்டமான வாழ்க்கைய பத்தி தெரிஞ்சிகிட்டேன். இவள எப்டியாவது காப்பாத்த என்ன பண்லாம்னு யோசிச்சிகிட்டே இருக்கும் போது ஒரு பொம்பளை, இவள வீட்ட விட்டு வெளிய தள்ளி கதவை சாத்தினாங்க. இவ அழுதுட்டே வீட்டு வாசல்ல மயங்கி விழுந்துட்டா..

நா இவள தூக்கிட்டுப் போய் டாக்டர்கிட்ட காட்டினேன்.. இவ சாப்பிட்டு பல நாள் ஆச்சுன்னு டாக்டர் சொன்னப்ப அதிர்ந்துட்டேன்..

வக்கீலா இருக்கற என் நண்பன் ராகவன் கிட்ட இவளப் பத்தி சொல்லி இவள தத்து எடுத்துக்க முடிவு பண்ணினேன்.

அப்பதான் ராகவன் ஒரு பெரிய ஆக்சிடென்ட்ல மாட்டி படுத்த படுக்கையா இருக்கறது தெரிஞ்சது. அவனைப் போய் பார்த்து அவனுக்கு வேண்டிய உதவி செய்து இவளப் பத்தி சொன்னேன்.

அப்பதான் இவ இந்த கம்பெனி உரிமையாளர் தேவநாதனுடைய மகள்; அவரும் அவர் மனைவியும் உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சது.

அவங்களுக்கு நடந்தது, சொத்தை அபகரிக்க நடந்த சதியா இருக்குமோன்னு எனக்கு தோணிச்சு.

ராகவன் மூலமா, இந்த சொத்துக்கெல்லாம் இவதான் வாரிசு; இவளோட 21வது பிறந்தநாளன்னிக்கு இந்த சொத்துக்கள் எல்லாம் இவ கிட்ட முறைப்படி ஒப்படைக்கப்படணும்னு மிஸ்டர் தேவநாதன் எழுதி வெச்சிருக்கார்ன்னு எனக்கு தெரிய வந்தது.

ராகவன் உதவியோட இவளை என் குழந்தையா வளர்த்தேன்.

இன்னிக்கு இவளுக்கு 21வது பிறந்தநாள்.

இவதான் இந்த சொத்தோட ஏக போக வாரிசு.. அதுக்குண்டான எல்லா டாகுமென்ட்ஸும் இதோ!" என்று எல்லா உண்மைகளையும் சொல்லி முடித்தார்.

"இவதான் தேவநாதனோட பொண்ணுங்கறதுக்கு என்ன ப்ரூப் இருக்கு உங்ககிட்ட?" கூட்டத்தில் யாரோ கேட்டார்கள்.

"நல்ல கேள்வி.. தேவநாதன் இறக்குறதுக்கு முன்னாடி தன்னுடைய, தன் மனைவி, மற்றும் தன் மகளுடைய ரத்த சாம்பிள்களை எடுத்து பத்திர படுத்தி வெச்சுக்க சொல்லியிருந்தார்.. அத வெச்சுதான் இப்போ டி என் ஏ டெஸ்ட் எடுத்திருக்கோம்.. அதுக்கும் எங்ககிட்ட ப்ரூப் இருக்கு.." என்றார் ராகவன்.

நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளராக இருக்கும் பரத்வாஜும் அவருடைய மனைவி தரணியும் அதிர்ச்சியடைந்தாலும் சுதாரித்துக் கொண்டனர்.

"இந்தக் கம்பெனிய என் மனைவியோட நகைகளை வித்து முதலா போட்டு ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட பதினஞ்சி இருபது வருஷமா இத நா எவ்ளோ கஷ்டப்பட்டு நடத்தி முன்னுக்கு கொண்டு வந்திருக்கேன்னு ரெக்கார்ட்ஸ் பார்த்தா எல்லாருக்குமே தெரியும்!

உன் பொண்ணுக்கு நல்லது செய்யணும்னு அடுத்தவங்க கம்பெனில வந்து இப்டி உரிமை கொண்டாடறது சரியில்ல.." என்று பரத்வாஜும் அவர் மனைவி தரணியும் கோபமாகக் கூறினார்கள்.

"பெரியவங்க பேசும் போது குறுக்க பேசறதுக்கு சாரி சார்!" என்று கூறிக் கொண்டே அந்த பெரிய அறைக்குள் தினு நுழைந்தான். அவன் பின்னாலேயே பிரியாவும் நுழைந்தாள்.

அவர்களுக்குப் பின்னால் தினுவின் பெற்றோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

தினுவையும் பிரியாவையும் தன் பெற்றோரையும் பார்த்த முகேஷ் அதிர்ந்தான். ஆனால் தேவராஜ் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"ஏய்! நீ யாருடா?" என்று கத்தத் தொடங்கினார் பரத்வாஜ்.

"சாரி ஜென்டில்மென்! இந்தக் கம்பெனி மிஸ்டர் தேவநாதன் ஆரம்பிச்சதுங்கறதுக்கு எல்லா ப்ரூஃபும் இங்க இருக்கு. இவர் சொல்ற மாதிரி இது பதினஞ்சி வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சதில்ல.. இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சது.

இந்தக் கம்பெனி ஆரம்பிச்சு ரெண்டு வருஷத்திலயே மாநிலத்திலயே சிறந்த நிர்வாகத்துக்கு ஸ்டேட் அவார்ட் வாங்கியிருக்கு. தன் ஊழியர்களுக்கு நிறைவான சம்பளம் நிறைய போனஸ் எல்லாம் குடுத்து நல்லா வெச்சிருக்குன்னு சொல்லி அப்போதைய ந்யூஸ் பேப்பர்ல ஆர்டிக்கல் எல்லாம் வந்திருக்கு பாருங்க." என்று சொல்லி தினு ஒவ்வொன்றுக்கும் நிரூபணங்களை எடுத்து மேஜையில் வைத்தான்.

"எல்லாத்துக்கும் மேல, இந்தக் கம்பெனிய நடத்த தற்காலிக மேனேஜரா அதுவும் ஒரு வருஷத்துக்கு மட்டும்தான் இந்த பரத்வாஜ் நியமிக்கப்பட்டிருக்கார். அதுக்கு உண்டான டாகுமென்ட் காபி இதோ!

ஒரு வருஷத்துக்கு அப்புறமும் தான் உடம்பு தேறி வரலன்னா, இந்தக் கம்பெனிய பொறுப்பா நடத்த ராகவனைதான் நியமிச்சிருந்தார் மிஸ்டர் தேவநாதன்.

ஆனா ராகவனை இந்த பரத்வாஜ் சதி செய்து இங்க இருந்து துரத்திட்டார்.

இந்தக் கம்பெனி பெயரை மாத்தி தான் ஆரம்பிச்சதா எல்லாரையும் நம்ப வெச்சிட்டிருக்கார்." என்று கூறி முடித்தான் தினு.

அவர்கள் கத்திக் கூச்சலிட முயலும் போது காவல்துறையிலிருந்து பெரிய அதிகாரிகள் வந்து சேர்ந்தனர்.

இந்தக் கூட்டத்தில் பரத்வாஜின் அருகில் அமர்ந்திருந்த ஒருவர், பரத்வாஜைக் கோபமாய் முறைத்தார்.

"சே! நீ இவ்ளோ கீழ்த்தரமான ஆளா இருப்பன்னு துளி கூட நெனச்சி பாக்கல!" என்று அவனைப் பார்த்து அருவருப்புடன் கூறி விட்டு முகேஷின் கையைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.

அவர் பெயர், பூபதி. முகேஷின் காதலி பிரியாவின் தந்தை! முகேஷ் பிரியா கல்யாணம் நடக்கவிடாமல் தடுத்து, பிரியாவை எப்படியாவது பரத்வாஜின் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட துடியாய் துடித்துக் கொண்டிருந்தார்.

அவர் முகேஷைப் பார்த்து,

"என்ன மன்னிச்சிடுங்க மாப்ள! இவன் இவ்ளோ பெரிய ஃப்ராடுன்னு நா நெனச்சி கூடப் பாக்கல. சாரி மாப்ள!" என்றார்.

முகேஷ் அவரைப் பார்த்து முறைத்து விட்டுத் திரும்பிக் கொண்டான்.

"சாரி மாப்ள! அடுத்த முஹூர்த்தத்திலயே உங்களுக்கும் என் மக பிரியாவுக்கும் கல்யாணம் வெச்சிடறேன்.." என்றார்.

"அதல்லாம் அப்பா கிட்ட பேசுங்க.." என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டான்.

முகேஷுக்கு ஒரு பக்கம் பூபதியின் மேல் கோபமாக வந்தாலும் மறுபக்கம் மிகுந்த வியப்புக்குள்ளானான்.

'என்னடா நடக்குது இங்க? இந்த பரத்வாஜ் இவ்ளோ கெட்டவனா?'

'இந்தாளப் போய் பெரிய மனுஷன்னு நெனச்சேன். உண்மையாவே பெரிய மனுஷனான தேவராஜ் சாரைப் போய் அரக்கிறுக்குன்னு நெனச்சேன்.. சே! '

'இந்தப் பொண்ணுக்கு இதனாலதான் கம்பெனி பத்தி கத்து குடுக்க சொன்னாரா?'

'இவதான் எனக்கு இனிமே முதலாளியா?'

'எல்லாத்துக்கும் மேல, இந்த தினு! இவனுக்கு எப்டி இதெல்லாம் தெரியும்? நா இந்தக் கம்பெனியில பல வருஷமா வொர்க் பண்றேன். இது எதுவும் எனக்கு தெரியவே தெரியாது. ஆனா இவன் இப்பதான் ஜாயின் பண்ணினான். இவனுக்கு எப்டி இதெல்லாம் தெரிஞ்சது..' என்று எண்ணி எண்ணித் திகைத்தான்.

தினு அவனருகில் வந்தான்.

"டேய் முகி! பாவம்டா பூபதி அங்கிள்! சரின்னு சொல்லு. ஆக்சுவலா, இந்த டாகுமென்ட்ஸ் எல்லாம் எடுக்க உதவி பண்ணினதே பிரியா அண்ணிதான். அண்ணிதான் பூபதி அங்கிள் கிட்ட நைசா பேச்சு குடுத்து இந்த டாகுமென்ட் எல்லாம் எந்த கப்போர்ட்ல இருக்கும்னு கேட்டு சொன்னாங்க. அண்ணி மட்டும் உதவி செய்திருக்கலன்னா என்னாலயும் இத செய்து காட்டிருக்க முடியாது." என்று அவனுடைய காதில் மெதுவாகக் கிசுகிசுத்தான்.

"அடப்பாவி! அப்ப அவளுக்கும் ஷிவன்யா பத்தி தெரியுமா?"

"சே! சே! அது டாப் சீக்ரெட். அதையெல்லாம் அவங்க கிட்ட சொல்லல! உங்களுக்கும் அண்ணனுக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னா இந்த உதவிய செய்ங்கன்னு சொன்னேன். உடனே அண்ணியும் உதவி செய்துட்டாங்க!" என்றான்.

"நீ ஜகஜ்ஜால கில்லாடிதாண்டா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சிட்ட! தேங்க்ஸ்டா!" என்று கூறிவிட்டு பூபதியைப் பார்த்து சிரித்து வைத்தான் முகேஷ்.

"ரெண்டு மாங்கா இல்ல.. மூணு மாங்கா!" என்று குறும்பாகச் சிரித்தான் தினு.

அவனுடைய குறும்புச் சிரிப்பைப் பார்த்துவிட்டு,

"ம்.. நடத்து நடத்து.." என்று சிரித்தான் முகேஷ்.

பூபதியும் அவனைப் பார்த்து சிரித்தார்.

காவலர்கள் தேவராஜ் மற்றும் தினு கொடுத்த நிரூபணங்களை வைத்தும் ராகவன் கொடுத்த புகாரை வைத்தும் பரத்வாஜைக் கைது செய்தனர்.

ஷிவன்யாவுக்கு இது குழப்பமாகவும் அதற்கு மேல் பேரதிர்ச்சியாகவும் இருந்தது.

தன் தந்தை தன்னிடம் ஏன் இத்தனை கடுமை காட்டினார் என்று புரிந்து கொண்டாள்.

"அப்பா! நீங்க என்னோட அப்பா இல்லையா? இதுக்குதான் என்னை அவ்ளோ ஸ்ட்ரிக்டா வளர்த்தீங்களா.." என்று கேட்டு அழுதாள்.

"நீதாம்மா என் வாழ்க்கையில புது வசந்தத்தை சேர்த்தவ! உன்னை நல்லபடியா வளர்த்து உன்னோட சொத்தை உனக்கு மீட்டுத் தரணும்கறது மட்டும்தான் என் குறிக்கோளா வெச்சிருந்தேன்மா. நீ பெரிய கம்பெனியோட முதலாளிங்கறப்ப உன்னை எல்லாத்துக்கும் தயார்ப்படுத்தணும்ல.. அதனாலதான் நா ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன்.. இந்த வொர்ஸ்ட் அப்பாவ மன்னிச்சிடும்மா.." என்றார் தேவராஜ்.

"நா உங்க சொந்த மகளா இல்லாதப்பவே எனக்காக யோசிச்சி யோசிச்சி இவ்ளோ பண்ணியிருக்கீங்க.. ஒரு வேளை நா உங்க சொந்த மகளா இருந்திருந்தா எவ்ளோல்லாம் பண்ணியிருப்பீங்க.. நீங்கதான் உலகத்திலயே பெஸ்ட் அப்பா.." என்று சொல்லி அவரைக் கட்டிக் கொண்டாள்.

"சரிம்மா! போ! உனக்கு உரிமையான இடத்தில போய் உக்காருமா! இந்த கம்பெனி நிர்வாகத்தை இனி நீ நல்ல முறையில செய்து உங்கப்பா தேவநாதனுடைய பெருமையை திரும்பவும் நிலை நாட்டணும். என் வளர்ப்பு சோடை போகலன்னு நானும் பெருமைப்படணும்! போம்மா!" என்றார் தேராஜ்.

"அப்பா! திடுதிப்புன்னு இவ்ளோம் பெரிய பொறுப்பை என்னால எடுத்துக்க முடியுமான்னு பயமா இருக்குப்பா.." என்றாள் தயங்கிய குரலில்.

ஷிவன்யாவின் செய்கையையும் அழுகையையும் ஒரு புன்னகையுடன் தினு பார்த்துக் கொண்டு நிற்க, அவள் கடைசியாகப் பேசியதைக் கேட்டு அவளருகில் வந்தான்.

"என்னமோ நீ தைரியசாலிதான்னு பெருமை பீத்திகிட்ட! இப்ப என்ன பயப்படற.. நீ பயந்தாங்கொள்ளின்னு ஒத்துக்கோ!" என்று அவளைப் பார்த்து ஏளனமாகச் சொன்னான்.

"யூ.. யூ.." என்று அவள் கோபமாக அவனைப் பார்த்துக் கத்தத் தொடங்க,

"ஏய்! நீ ஆர்கிடெக்ட் படிச்சவதானே! எம்பிஏ முடிச்சதானே? இப்ப எங்கண்ணன் கிட்ட கம்பெனி மேனேஜ்மென்ட்டும் படிச்சிருக்கதானே? இல்ல உங்கப்பா உனக்கு காசு குடுத்து சர்டிஃபிகேட் வாங்க வெச்சிட்டாரா? போடீ! போய் அந்த சீட்ல உக்கார்ந்து இந்த கம்பெனிய பெரிய லெவலுக்கு உயர்த்திக் காட்டுடீ! எப்பவும் அடுத்தவங்களை பார்த்து சவால் விட்டா மட்டும் போறாது! கொஞ்சம் நீயும் சாதிக்கணும்.

நீ பண்ணறது எப்டி தெரியுமா இருக்கு. பொட்டேடோ சிப்ஸ் தின்னுகிட்டே டீவிய பாத்து ரன் அவுட்டான பேட்ஸ்மேனை திட்டற மாதிரி இருக்கு!" என்று குத்திக் காட்டுவது போல பேசினான்.

"ஏய்!" என்று அவனைப் பார்த்து சீறினாள்.

"ச்சும்மா வாயால வடை சுடாத! போய் செயல்ல காட்டு!" என்றான் இன்னும் அதிக ஏளனமாக.

அவள் சென்று அந்தக் கம்பெனி நிர்வாக இயக்குனராகப் பதவியேற்று கைபொப்பமிட்டாள்.

அவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

தேவராஜ் பத்மநாபனிடமும் அவர் மனைவி ரேவதியிடமும் நன்றி தெரிவித்தார்.

"ஷிவாவை நல்லபடியா பாத்துகிட்டீங்க! ரொம்ப நன்றிம்மா!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

"ஐயோ! என்னண்ணா! நன்றியெல்லாம் சொல்றீங்க! இது என் கடமைல்ல!" என்றாள் ரேவதி. ஷிவன்யாவும் ரேவதியுடன் செல்லம் கொஞ்சினாள்.

பிரியாவும் முகேஷும் வந்து ஷிவன்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஷிவன்யா தினுவின் அருகில் வந்து,

"உனக்கு எப்டி இதெல்லாம் தெரியும்?" என்றாள் .

"அது டாப் சீக்ரெட்!" என்றவனைப் பார்த்து தேவராஜ் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

அவன் தன்னை மருத்துவமனையில் வந்து சந்தித்ததையோ ஷிவன்யாவுக்காக அவன் பரிந்து பேசியதையோ, தன் கையிலிருந்த குறிப்பேட்டை கவனித்து எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டதையோ, இரண்டு வாரங்கள் கழித்து அவனே அவருக்குத் தேவையான அத்தனை நிரூபணங்களையும் சேகரித்துக் கொண்டு வந்ததையோ, அவர் யாரிடமும் சொல்லவே இல்லை.

"அப்ப.. உனக்கு.. என்னப்பத்தி.." என்று அவள் கேட்க,

"எங்க வீட்ல இருக்கும் போதே தெரியும்!" என்றான்.

அவள் முகம் சூம்பிப் போனது.

"அப்ப அதுனாலதான் என்கிட்ட சரியாவே பேசலயா!?"

"நா வேல பண்ற கம்பெனியோட முதலாளிகிட்ட நா எப்டி சாதாரணமா பேச முடியும்.. அது தப்புல்ல.." என்றான் எங்கோ பார்த்தபடி.

அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த பொலிவு சுத்தமாக இல்லை.

அவள் தன்னுடைய அப்பாவின் புறமாகத் திரும்ப, அவளுடைய கையைப் பிடித்தவன், நேராக தேவராஜைப் பார்த்து,

"அங்கிள்! உங்க பொண்ணை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! அவள எனக்கு கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா?" என்று கேட்டான்.

தேவராஜ் ஒரு நிமிடம் தடுமாறினாலும் முகம் முழுதும் புன்னகையுடன்,

"சந்தோஷம் மாப்ள!" என்றார்.

ஷிவன்யாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

"என்னடா என்கிட்ட கேக்காம அப்பா கிட்ட கேக்கறானேன்னுதானே யோசிச்ச.. உன்கிட்ட கேட்டா எப்டியும் நீ உங்கப்பா கிட்டதான் கேக்கணும்னு சொல்வ.. அதான்.. எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிகிட்டுன்னு நேரா உங்கப்பாகிட்டயே கேட்டுட்டேன்.." என்றான் சிரிப்புடன்.

"ஒரு வேளை அப்பா ஒத்துக்காம போயிருந்தா.."

"சிம்பிள்.. உன்ன கூட்டிட்டு ஓடியிருப்பேன்.." என்றான்.

"உன் கூட ஓடி வர நானும் ஒத்துக்கலன்னா.." என்று கேட்டாள் ஷிவன்யா.

"ஐயியோ! அப்ப நீ இன்னும் ஒத்துக்கலயா?!" என்று அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

"காலம் முழுக்க, என்ன சிரிக்க வெச்சிகிட்டு எனக்கு இதே மாதிரி எப்பவும் சப்போர்டிவ்வா மோடிவேட் பண்ணிட்டே இருப்பியா?" என்று கண்களில் ஆவலுடன் அவள் கேட்டாள்.

"காலம் முழுக்க நீயும் இதே மாதிரி என்னை சாதிக்க தூண்டிட்டே இருப்பியா?" அவனும் அதே ஆவலுடன் கேட்டான்.

இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆமாம் என்று தலையாட்டியபடியே வாய் கொள்ளச் சிரிப்புடன் தங்கள் கைகளைக் கோர்த்துக் கொண்டனர்.

இதைக் கண்ட முகேஷும் ராகவனும் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர்.

ஒரு சுபயோக சுபதினத்தில் முகேஷ் பிரியாவையும், தினேஷ் ஷிவன்யாவையும் திருமணம் செய்து கொண்டு தங்கள் இல்லறத்தில் நுழைந்தார்கள்.



அவர்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்.




நன்றி. வணக்கம்.

♥♥♥♥♥♥
 
Last edited:
Top