கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

11. வாழை

Appusiva

Moderator
Staff member
“ அப்பாவை ஆஸ்பிடலில் விட்டுட்டு வந்திருக்கேண்ணே… பர்ஸ் எடுத்துட்டுவர மறந்துட்டேன். ஒரு அம்பது ரூபா கொடேன். வீட்டுக்கு வந்து தந்திடுறேன்… “

என்று சண்முகம் கேட்க சற்று கலங்கிதான் போனேன். சண்முகத்திற்கு அதிகபட்சம் ஒரு இருபத்தைந்து வயதுதான் இருக்கும். என்னைவிட நான்கு அல்லது ஐந்து வயது சிறியவன். சிறுவயதில் சண்முகம் வீடுதான் எங்களுக்கு விளயாட்டு மைதானம். அவனது அப்பா, ஒரு பெரிய எண்ணெய் மில் ஓனர். நல்ல வருமானம். அவர்கள் வீட்டில்தான் எங்கள் தெருவிலேயே முதலில் டிவி வாங்கினார்கள். அதோடு அவனது அப்பா வைத்திருந்த புல்லட். பலதடவை எங்களை சவாரி கூட்டிப்போயிருக்கிறார். நாங்கள் பார்க்காத விளையாட்டுபொம்மைகள், சித்திரக்கதைகள் எல்லாமும் அங்கே எங்களுக்கு கிடைக்கும்.

ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்தில், அவருக்கு ஏதோ தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சி. மொத்த சொத்துக்களும் இழந்துவிட்டார். அதோடு அவருக்கு சர்க்கரை வியாதியும் முற்றிவிட, இருந்த ஒரே வீட்டையும் விற்றுதான் செலவினங்களை சமாளித்து வந்தார். கல்லூரி போக ஆரம்பித்த காரணத்தால் சண்முகம் உடன் பழகும் வாய்ப்பு எனக்கு குறைந்தது. அவனும் தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ ஃபைனான்ஸ் கம்பெனியில் பியூன் ஆக சேர்ந்துவிட்டான். அவனது சின்ன தம்பி ரமேஷ் மட்டும் பள்ளிக்கு சென்று வந்துகொண்டிருந்தான்.

அவன் சண்முகத்திற்கு எட்டு வயது இளையவன். தாமதமாக பிறந்த செல்லம். சிறுவயது முதலே கஷ்டத்திற்கு பழகிய குழந்தை.

“ என்னாச்சு சண்முகம்…. அப்பாவுக்கு சுகர் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுக்கலையா… ? “

“ எடுக்கறோம்ணே… இது சளி, காய்ச்சல்ன்னார்… அதான் கூட்டிவந்தேன்..”

“ இந்தா நூறா வச்சுக்கோ, செலவ பாரு… திருப்பில்லாம் தரவேணாம் “

“ அய்யோ… அப்பா திட்டுவார்… நான் வீட்டுக்கு வந்து தந்திடுறேன். அப்புறம் எங்கண்ணே மூணுவருஷமா உங்கள ஆளயே காணோம்..? “

“ வடக்க போட்டுட்டாங்கப்பா… ஆனா போனவருஷம் கூட வந்தேனே.. “

“ ஓ… சரிண்ணே… “

“ தம்பி.. என்ன படிக்கிறான்… ? “

“ இந்த வருஷம் பிளஸ் டூ ண்ணே… “

“ சரிப்பா… “ என்று விட்டு நான் கிளம்பினேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள். நான் வேலைக்காக வடக்கு பக்கம் சென்று. சமீபத்தில்தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். ஊருக்கு அவ்வப்போது வந்து போனாலும், நாங்கள் புது வீடு கட்டி இடம் மாறிவிட்டதால் பழைய நண்பர்களை பார்ப்பது அரிது. இன்று பஸ் விட்டு இறங்கியதும், “ சௌந்தர் அண்ணே … “ என்ற சண்முகத்தின் குரலைக்கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தவன்,

அவனது வாழ்வில் அடிபட்ட தோற்றத்தைக்கண்டு கொஞ்சம் கலங்கிதான் போனேன்.

வீட்டுக்கு போனபோது அம்மா யாரோடோ பேசிக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் ,

“ ஏண்டா… போன் பண்ணி எவ்வளவு நேரமாவுது… எங்க போன… ? “ என்றார்.

“ நம்ம சண்முகம் இல்லம்மா… அட, அந்த எண்ணெய் மில் வச்சிருந்தாரே கணேசன்… அவர் பையன்….. “

“ ச….ரி…. அதுக்கென்ன… “

“ அவங்கப்பா கணேசண்ணனை, உடம்பு சரியில்லாம ஆஸ்பிடலில் சேர்த்திருக்கானாம். லூசுப்பையன், பர்ஸ் எடுக்காம போயிருக்கான். “

“ எவ்ளோப்பா குடுத்த.. ? “

என்றார் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவர்.

“ வந்து நூறு ரூபா… …. “ என்றுவிட்டு அவர் யார் என்பதுபோல் கேள்வியாய் பார்த்தேன்.

“ இது யாருன்னு பாக்கறயா… உனக்கு அடையாளம் தெரியலையா.. இதுதான் இப்போ ஆஸ்பத்திரியில இருக்கற கணேசன்.. “ என்றார் அம்மா.

சத்தியமாய் அடையாளம் தெரியவில்லை.

ஆஜானுபாகுவாய் புல்லட்டில் ஆரோகணித்து செல்லும் கணேசன் கண்ணிலேயே இருக்க, இவரோ ஒட்டி, முடியெல்லாம் இழந்து, உடலே சுருங்கி குனிந்தபடி சோகமாய்….

“ அண்ணா…. நீங்களா, சுத்தமா அடையாளம் தெரியல…. என்ன இப்படி இளைச்சிட்டீங்க… ? “ என்றேன்.

“ வயசாவுது இல்ல சௌந்தரு… அதில்லாம சக்கர வேற… இந்தப்பக்கம் வந்தேன்.. நீ வரதா அக்கா சொல்லிச்சு.. பாத்து நாளாச்சேன்னு உட்காந்துட்டேன்.. “ என்று மெல்லிய குரலில் பேசினார்.

“ அது சரிண்ணா… நீங்க ஆஸ்பிடல்…லன்னு… அவன் , நம்ம சண்முகம் சொன்னான்…? “

அம்மா குறுக்கிட்டார்.

“ உடம்பெல்லாம் கணேசனுக்கு பொருட்டில்லப்பா… பையன் கவலைதான் அவனை போட்டு எடுத்திடுது..”

“ நான் என்னக்கா செய்றது.. நல்லாதான் வளத்தேன். அப்பா இல்லாத பையனை நீ பொறுப்பா படிக்க வச்சே… நான் நல்லா செல்லம் கொடுத்தேன். படிப்பு வர்ல… உனக்கு சம்பாதிச்சு தரேன்னு அவன் வேலைக்கு போறப்போ கொஞ்சம் பெருமையாதான் இருந்தது. “ என்றவர், சற்று நேரம் தலைகுனிந்து அமைதியாய் இருந்தார்.

“ நல்ல பையன்தாம்பா, சண்முகம். அவன் வேலைக்கு போற ஆபிஸ் பக்கத்திலேயே ஒயின்ஷாப்பு, இவனுங்க வேலை முடிஞ்சு வர ராத்திரி ஆயிடுது. செட்டு சேர்ந்தது சரியில்ல. பழகிட்டான். இப்போ ராத்திரி போக பகல்லயும் அவனால குடிக்காம இருக்கமுடியறதில்ல..” என்றார் அம்மா.

“ அப்போ… வேலைக்கு…? “ என்றேன்.

“ அதல்லாம் போறதில்லப்பா… இதோ … கணேசன்தான் இங்க புதுசா போட்ருக்க ஆயில்மில்லுக்கு வேலைக்குபோய் சமாளிச்சுக்கறான். சின்னபையனாவது நல்லா படிச்சு மேல வரணும்னு வெறியா கஷ்டப்படறான். பெரியவன்கிட்ட இன்னிக்கு நீ மாட்டிட்ட… தெனம் ஊர் சுத்த வேண்டியது.. யார்ட்டயாவது ஏதாவது பொய் சொல்லி ஐம்பது, இருபதுன்னு புடுங்க வேண்டியது… ஃபுல்லா போதையேத்திக்கிட்டு அப்பங்கிட்ட சண்டையிழுக்க வேண்டியது…” என்றார் அம்மா.

அதே சமயம் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தோம். அது சண்முகம். இந்த கடைசிக்கும் அந்த கடைசிக்குமாய் தள்ளாடிக்கொண்டிருந்தான்.

“ ண்ண்ணேய்…. சௌந்தரு …அண்ணே.. ழொம்ப தேங்க்…சு… இன்னிக்கு சந்தோஷமா……க்…இருக்..க்.. அட… டேய் கணேசா… இங்க என்ன பண்ற…? “
என்று கத்திக்கொண்டிருந்தான்.

கணேசன் அண்ணனை பார்க்க மிகப்பரிதாபமாக இருந்தது. அவருக்கும் சண்முகத்திற்கும் மிக பெரும் சண்டை வரும்போல் தெரிந்ததால், நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு சட்டென்று கடைவீதி பக்கம் ஒதுங்கிவிட்டேன். செல்லும் வழியில் எங்கள் பள்ளியின் அருகில் சென்றபோது சிறுவயதில் நாங்கள் கவலையின்றி விளையாடிய நினைவுகள் அலைமோதியது. எங்கள் பள்ளிகட்டிடம் மிக சிதிலமடைந்து காணப்பட்டது. அதன் தோற்றம் கணேசன் அண்ணனின் பரிதாபமான விரக்தியடைந்த பார்வையை காரணமின்றி ஞாபகமூட்டியது.

ஆனால், ஒரு சுற்று சுற்றி வருவதற்குள் கண்ணில் பட்ட மூன்று ஒயின்ஷாப்களும் அதை தேனீக்கள் போல மொய்த்துக்கொண்டிருந்த கூட்டமும் வெலவெலக்கச்செய்தன.

கிட்டத்தட்ட பாதிபேர், இளவயதினர்தாம். இது பல்வேறு இடங்களில் கண்ணில் பட்டிருந்தாலும் இன்று அதன் முழு ரூபமும் என் மனதில் பொளேரென்று அறைந்தது.
அன்று சரியான தூக்கம் வரவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே நான் கிளம்பிவிட்டேன்.

அதன்பின் வந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நான்கைந்து தடவை ஊருக்கு வந்து சென்றிருப்பேன். முடிந்தவரை பழைய நண்பர்களை பார்ப்பதை தவிர்த்தேன். ஆனாலும் ஒரு தீபாவளி லீவில் ஊருக்கு வந்தபோது … கடைவீதியில் என் முதுகை யாரோ தட்ட, திரும்பிப்பார்த்தேன். சட்டென்று அனிச்சை செயலாய் என் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை சற்று உள்ளே தள்ளிக்கொண்டேன்.

அது சண்முகம்.

“ என்னண்ணே… தீவாளி பர்ச்சேஸா… ? “ என்றான்.

“ இல்ல சண்முகம்… வந்து இந்த வருஷம் போனஸ்கூட இல்ல… சம்பளமும் இன்னும் வர்ல… “ என்று சம்மந்தமில்லாமல் உளறிக்கொட்டினேன்.

“ ஹா..ஹா.. அண்ணே அதுக்குதான் சம்பள வேலைக்கெல்லாம் போகக்கூடாது… நாம நாலுபேருக்கு போனஸ் தரணும்… ” என்றான்.

அப்போதுதான் அவனை முழுதாக கவனித்தேன். ஆளே சற்று மாறிதான் இருந்தான். வேட்டியும் வெள்ளை நிற சட்டையும் கையில் பெரிதான மோதிரமும்.

“ அப்பா எப்படி இருக்கார் சண்முகம்… ? “ என்றேன்.

“ அடடா .... உங்களுக்கு தெரியாதா… அவர் இறந்து ஒரு வருஷம் ஆவுதுண்ணே… தெய்வம் அவர்.. இருக்கும்போது அவர் அருமை எனக்குத்தெரியல. என் பேரில ரெண்டு லட்ச ரூபா பாங்கில சேர்த்து வச்சிருந்திருக்கார். எனக்கு கலங்கிடுச்சு. அவர மாதிரி ஆயில்மில் ஆரம்பிச்சு பெரிய ஆளாவணுமின்னு வெறியா ஆயிட்டது. கொஞ்சம் ட்ரீட்மெண்ட் எடுத்து குடிய விட்டேன். அவரு பணத்தை முதலா வச்சு ஆரம்பிச்சேன். இப்போ பரவால்லண்ணே… பத்து பேர் வேலைக்கு இருக்காங்க.. “ என்றான்.

அதன்பின் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, அவன் அவனது பைக்கில் கிளம்பினான். நான் நீண்ட நாட்களுக்குப்பின் ஒருவிதமான நட்பின் மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப எத்தனித்தேன். கண்ணில் பட்ட ஒயின்ஷாப்களின் கூட்டம் சற்று கலக்கத்தையே ஏற்படுத்தியது.

பயந்துபயந்து குடித்த காலம் போய், இப்போது இது ஒரு அத்தியாவசிய தேவை போலவே மாற்றப்பட்டது எதன்பொருட்டு என்ற கேள்வி மண்டையக் குடைந்தது.
வீட்டை நெருங்கும் வேளையில்,

“ சௌந்தர் அண்ணே … “

என்ற குரல் கேட்டு திரும்பினேன். அது, சண்முகத்தின் தம்பி, ரமேஷ். எவ்வளவு பெரியவனாகிவிட்டான்.

“ வாப்பா, ரமேஷ்… எப்படி இருக்க… ? “ என்றேன்.

“ நான் நல்லாருக்கேண்ணே… “ என்றவன் தயங்கியபடி கேட்டான்.

“ அண்ணனை ஆஸ்பிடலில் விட்டுட்டு வந்திருக்கேண்ணே… பர்ஸ் எடுத்துட்டுவர மறந்துட்டேன். ஒரு அம்பது ரூபா கொடேன். வீட்டுக்கு வந்து தந்திடுறேன்… “ .
 

Selvipandiyan

Active member
அட பாவி!இது தொடர் கதையா தொடருவானுங்க போலிருக்கே?!குடிக்கு விமோசனமே இல்ல
 
Top