Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 13
அன்று ஞாயிற்றுக்கிழமை.
மாமியாரும் மாமனாரும் ஆனந்தியை பெண் பார்க்க திருச்சி செல்வதற்கு நல்ல நாள் பார்க்க ஜோதிடரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். விராட் முக்கியமான வேலையிருப்பதாகக் கூறி காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறான். போலீஸ்காரனுக்கு ஏது சனி ஞாயிறு! எல்லா நாளும் ஒன்றுதானே! அவன் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! பெரிதாக வேலையில்லை. காலையிலேயே சமையல் முடிந்து விட்டது. துணியும் துவைத்துப் போட்டாகியது. பாத்திரம் தான் கழுவ வேண்டும். மதியம் எல்லாரும் உணவு உண்டபின் பார்த்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு வாரம் அணிய வேண்டிய துணிகளை இஸ்திரி செய்ய வேண்டும். பெண் பார்க்க ஊருக்குச் செல்ல துணிமணி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மெதுவாய் வீடு பெருக்கித் துடைத்தாள் செல்வி.
காலையிலிருந்தே அவளுக்கு சூரஜின் நினைவுதான்.
செல்விக்கு சூரஜ் தன்னைப் பெண் பார்க்க வந்த தினம் நினைவுக்கு வந்தது. ஆனந்தியும் இப்போது நான் அன்றிருந்த மனநிலையில்தான் இருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள். அன்றைய நினைவைத் தொடர்ந்து திருமணநாள், அன்றைய இரவு, அதைத் தொடர்ந்து தன் தேன்நிலவு என்று ஒவ்வொன்றாய் நினைவில் வந்து அவளை அலைக்கழித்தது.
ஒரு வேலையையும் செய்யப் பிடிக்காமல் அமர்ந்துவிட்டாள். ஏதேதோ நினைவுகள் வந்து அவளை அழுத்தியது.
சூரஜ் யூஎஸ் சென்று நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இன்னும் இர..ண்டு மாதங்கள் இருக்கு.. அவர் வரதுக்கு.. என்று நினைத்துக் கொண்டாள். பின்னாலேயே இரண்டு மாதங்கள்தான் என்று நினைத்துக் கொண்டாள். இப்படி தத்துபித்துன்னு நெனக்கறியே! ஒனக்கு அறிவே கெடையாதா? என்று தன்னைத் தானே திட்டியும் கொண்டாள். சரி யாராவது பார்த்து ஏதாவது நினைக்கப் போகிறார்கள் என்று எழுந்தாள். ஆனால் வேலை எதுவும் செய்யப் பிடிக்காமல் தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அன்று தன் வீட்டில் அழுதது போல இங்கும் அழுதுவிடுவோமோ என்று அவளுக்கு பயமாய் இருந்தது. அன்று அழுதது வேறு ஒன்றுக்காக! இன்றும் கிட்டத்தட்ட அதே காரணம் என்றாலும் இன்றைய சூழ்நிலை வேறாயிற்றே!
கொழுந்தனுக்கு திருமணம் பேசவிருக்கிறார்கள். அதுவும் அவளுடைய அன்புத் தங்கையை. இரு பக்க சந்தோஷம். சந்தோஷமாய் இருப்பதை விட்டு இப்படி கண்டதையும் யோசிக்கலாமா! நீ அழுதால் விராட் உன்னைதான் தவறாக நினைப்பான். பெரிசா எனக்கு அட்வைஸ் பண்ணாங்க! இவங்களுக்குன்னு வரும்போது அழுகைதானே வருது! இதுல எனக்கு சொல்ல வந்துட்டாங்கன்னுதான் நெனப்பான்!
செல்வி! அழுது கிழுது வெச்சுடாத! உனக்குதான் அசிங்கம்! தனக்குத் தானே சொல்லிக் கொண்டே அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டாள். அது பத்தாம் வகுப்பு கணிதப் புத்தகம். தான் வேலை செய்யும் பள்ளியில் தனக்குத் தரப்பட்ட சிலபஸ் புத்தகம். அதைப் பிரித்து அல்ஜீப்ராவில் கவனத்தைச் செலுத்தினாள். நடுநடுவே கவனம் சிதறினாலும் கவனத்தை இழுத்துப் பிடித்து வைத்தாள். காலிங் பெல் ஓசை கேட்டது.
அத்த வந்துட்டாங்க! இனிமேதான் நீ கவனமா இருக்கணும் செல்வி என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள். ஆனால் உள்ளே வந்தது விராட்! உள்ளே நுழையும் போதே அண்ணியின் முகவாட்டத்தை கவனித்துவிட்டான்.
"அம்மா இன்னும் வரலியா பாபி?"
"இன்னும் வரல! நீங்க வர லேட்டாகும்னு நெனச்சேன்! நீங்க சீக்ரம் வந்துட்டீங்களே!"
"ஆமா! போன வேல சீக்ரம் முடிஞ்சுருச்சு! அதான் கௌம்பி வந்துட்டேன்!"
"ஓ! சரி! மேக்ஸ் சிலபஸ்ல கொஞ்சம் வெரிஃபை பண்ண வேண்டியிருக்கு. நான் அத முடிச்சிட்டு வந்திடறேன்!" சொல்லிக் கொண்டே தன்னுடைய அறைக்குப் போனாள்.
நல்ல வேள! இவன் என்ன கவனிக்கல! தப்பிச்சேன் என்று நினைத்துக் கொண்டாள்.
என்னாச்சு இவங்களுக்கு? காலைல கூட நல்லாதானே இருந்தாங்க! நினைத்தபடியே மாடியேறினான். உடைமாற்றிக் கொண்டு கீழே வந்தான். அண்ணியிடம் தேநீர் கேட்கலாம் என்று நினைத்து அவளுடைய ரூமின் அருகே போனான். அறைக்கதவு திறந்து இருந்தது. உள்ளே போனான். அவள் இவன் வந்ததையே கவனிக்கவில்லை. புத்தகம் திறந்துதான் இருந்தது. அவளும் ஒரு நோட்டில் பேனாவை வைத்து கணக்கு போடுவதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள். ஆனால் உண்மையில் எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். என்னவென்று கவனித்தான். ஸ்ரீராமஜெயம் எழுதுவது போல சூரஜ் சூரஜ் என்று எழுதிக் கொண்டிருந்தாள். தமிழில்தான் எழுதிக் கொண்டிருந்தாள். ஆனால் அவனுக்குதான் இப்போது தமிழ் நன்றாக எழுதவும் படிக்கவும் பேசவும் தெரியுமே! பார்த்துவிட்டு ஒன்றுமே பேசாமல் வந்த சுவடு தெரியாமல் வெளியேறினான்.
அவனுக்கு வருத்தமாயிருந்தது. எவ்வளவு காதல் இருந்தால் இப்படி தன்னை மறந்து இருப்பார்கள். நான் வீட்டின் அந்த மூலையில் வந்தாலே இங்கே கவனமாயிருப்பார்கள். இப்போது நான் அவர்கள் அறைக்குள் சென்று கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவர்கள் அருகில் நின்றிருக்கிறேன். அவர்களுக்குத் தெரியவே இல்லையே! அண்ணா நீ சீக்கிரமா வாண்ணா! அண்ணி பாவம்! உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க! இப்ப என்ன செஞ்சு இவங்க மனச மாத்தறது! நினைத்தபடி தானே தேநீர் கலந்தான். இரண்டு கோப்பைகளில் ஊற்றி எடுத்துக் கொண்டு அண்ணியின் அறைக் கதவைத் தட்டினான்.
"பாபி!"
இவன் எதுக்கு இப்ப கூப்பிடறான்? மனதுக்குள் கடுத்தபடியே நிமிர்ந்து பார்த்தாள். கையில் தேநீர் கோப்பையுடன் விராட் நிற்பதைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியுடன் எழுந்து சென்று வாங்கிக் கொண்டாள். அவன் தேநீரை அவளிடம் கொடுத்துவிட்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான். அவளும் வந்து அவனுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள். தேநீரை உறிஞ்சியபடியே சொன்னாள்.
"ஸாரி! விராட்!"
"எதுக்கு பாபி?"
"வெளிய போய்ட்டு வந்தவருக்கு டீ போட்டுத் தராம நான் போய் உள்ள உக்காந்துட்டேன். வெரி ஸாரி!"
"அதனால என்ன பாபி! நீங்க மேக்ஸ் ஸிலபஸ் பாக்கணும்னு சொல்லிட்டுதானே உள்ள போனீங்க!"
".."
பாவம்! இவங்க மனச இப்ப மாத்தியாகணுமே! என்ன பண்லாம்? நினைத்துக் கொண்டான்.
அவளுக்கு இன்னும் அதிகமாக குற்ற உணர்ச்சி தாக்கியது. அவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. இல்லை இப்படியே இருந்தால் நிச்சயம் அழுதுதான் வைப்போம்! கடவுளே! ப்ளீஸ் காப்பாத்து! மனதுக்குள் கடவுளை துணைக்கழைத்தாள்.
இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அவன் இரண்டு கோப்பைகளையும் எடுத்துக் கொண்டு போய் ஸிங்கில் போட்டுவிட்டு வந்து திரும்பவும் அமர்ந்தான். தொலைக்காட்சியை ஓடவிட்டான். ஒவ்வொரு சேனலாக மாற்றினான். மாற்றும் போது அண்ணியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே இருந்தான். சேனல் மாற்றியபடியே இருக்கும் போது ஒரு சேனலில் கர்னாடக இசைக்கச்சேரி ஓடிக் கொண்டிருந்தது. சுதா ரகுநாதன் பாடிக்கொண்டிருந்தார்.
"ஹேய்! அத வைங்க! அந்த கச்சேரிய வைங்க!"
"இதுவா!" கேட்டு கச்சேரியை வைத்தான்.
கச்சேரியை வைத்துவிட்டு அவள் முகத்தை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ப்ரம்மமொக்கடே பரப்பிரம்மமொக்கடே
தந்தனா நாஹீ தந்தனா நா புரே தந்தனா நாபலா தந்தனானா பலா தந்தனானா பலா தந்தனானா
தந்தனானா பலா தந்தனானா "
செல்வி கூடவே பாடினாள். கொஞ்சம் கொஞ்சமாக சுதா ரகுநாதனின் பாட்டில் ஒன்றிவிட்டாள். அலை பாய்ந்து கொண்டிருந்த அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலைக்கு வந்தது. மனம் மாற மாற, முகமும் மாறியது. எப்போதும் போல உற்சாகம் அவளை தொற்றிக் கொண்டது. அவனுக்கு அப்பாடாவென்று இருந்தது.
"உங்களுக்கு கர்னாடிக் ம்யூஸிக் ரொம்ப பிடிக்குமா பாபி!"
"ம். ரொம்ப பிடிக்கும்!"
"உங்க ஃபேவரைட் ஸிங்கர் யார்?"
"எல்லாரையுமே பிடிக்கும்! ஒவ்வொரு ஸிங்கர் கிட்டயும் ஒரு யுனீக்னஸ் இருக்கு! அதனால எல்லாரையும் பிடிக்கும்!"
"உங்களுக்குத் தெரியுமா பாபி! அண்ணனுக்கும் கர்னாடிக் ம்யூஸிக் ரொம்ப பிடிக்கும்! அதுவும் இதோ.. இது மாதிரி ஆ.. ன்னு இழுத்து பாடினா ரொம்ப பிடிக்கும்!"
செல்வியின் முகத்தில் பல்ப் எரிந்தது!
"அப்டி இழுத்தா ஆலாபனைன்னு சொல்லுவாங்க!"
"ஆங்! அதான்! ஆலாபனை பண்ணி அப்றம் ஸ்வரம் பாடி பாடற பாட்டு அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்! ஆனா அண்ணனுக்கு பாடத் தெரியாது. சும்மா பாத்ரூம் ஸிங்கர்தான்!"
"அவருக்கு வேற என்ன பிடிக்கும்?"
"உங்க ஊர் ரஜ்னிகாந்த் பிடிக்கும்! ரொம்ப பிடிக்கும்! சின்ன வயசில ரஜ்னி மாதிரி ட்ரஸ் வேணும்னு அடம் பிடிச்சு கேட்டு வாங்கி போட்டுப்பான்!"
"இஸ் இட்! என்கிட்ட இதப்பத்தி சொன்னதேயில்லையே!"
"ம்! ஒரு பாட்டு ஒண்ணு! ரஜ்னி சாரியட்ல போய்ட்டே பாடுவார்! ம்..!" யோசித்து பாடலின் வரி தெரியாமல் பாடலை அரைகுறையாக ஹம் செய்தான்!
"ஒருவன் ஒருவன் முதலாளி!
உலகில் மற்றவன் தொழிலாளி!"
செல்வி பாடிக் காட்டினாள்.
"ஆங்! இதேதான். அவனுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது! மீனிங் தெரியாது! லிரிக்ஸ் தெரியாது! பாடவும் தெரியாது! ஆனா எப்பவும் இததான் ஹம் பண்ணுவான்!"
"வாவ்! ஸோ ஸ்வீட்! ரொம்ப நல்ல கருத்தான பாட்டு!" செல்விக்கு தொலைந்த உற்சாகம் திரும்ப வந்திருந்தது.
"சரி பாபி! நீங்க பாருங்க!" எழுந்து சென்றான்.
"பாட்டுதானே! கொஞ்சம் சௌண்ட் வைங்க! காதால கேட்டுக்கறேன்." அவன் டிவியின் சத்தத்தை அதிகப்படுத்தினான்.
பாடிக் கொண்டே பாத்திரம் தேய்த்தாள். துணிகளுக்கு இஸ்திரி செய்தாள். விராட்டின் சீருடையையும் இஸ்திரி செய்து அவனிடம் கொடுத்தாள். கணித சிலபஸையும் கவனம் சிதறாது பார்த்து முடித்தாள். திரும்பவும் வந்து ஹால் சோபாவில் வந்து அமர்ந்து டிவியைப் பார்க்க ஆரம்பித்தாள். விராட் தன் கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
"விராட்!" செல்வி மெதுவாய் அழைத்தாள்.
"பாபி!" நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
"ரொம்ப தேங்க்ஸ்!"
"எதுக்கு பாபி?"
"காலைலேர்ந்து ரொம்ப ஃப்ரஸ்ட்ரேடட்டா இருந்தேன்! யூ ஹெல்ப்ட் மீ டு கெட் ரிட் ஆஃப் இட்! தேங்கஸ்!"
"என்ன பாபி! இதுக்கு போய் தேங்கஸ் சொல்லிகிட்டு! அன்னிக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணினீங்க! இன்னிக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணினேன்! அவ்ளவ்தான்!"
அவள் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். பதிலுக்கு புன்னகைத்தான்.
அழைப்பு மணி சத்தம் கேட்டது. மாமியார் மாமனார் வந்தனர். வரும் போதே நல்ல பசியுடன் வந்தனர். நால்வரும் வட்டமாக அமர்ந்து உணவு உண்டபடி பேசினார்கள்.
"வர வெள்ளிக் கிழமைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சரியா இருக்குமா விராட்!"
"டேட் என்ன?"
செல்வி பார்த்துச் சொன்னாள்.
"அதுக்கப்புறம்?"
"அந்த வெள்ளிக்கும் அப்புறம் வர புதன் கிழமை!"
"அப்ப அந்த வெள்ளிக்கிழமையே ஓகே தான்! என்ன பாபி?"
"ம்! ஓகே!"
"எல்லாம் ரெடி பண்ணணும் செல்வி!"
"சரி அத்த! என்னென்ன ரெடி பண்ணிக்கனும்னு சொல்லுங்க அத்த! நான் ரெடி பண்ணிக்கறேன்!"
"சரிம்மா! விராட் ட்ரெயின் டிக்கெட் சமாசாரத்த நீ பாத்துக்குவியா!"
"ஓகே! ஈவ்னிங் ஆன்லைன்ல புக் பண்ணிடலாம்!"
அனைவரும் சாப்பிட்டு எழுந்தனர்.
"சரி! ரொம்ப டயர்டா இருக்கு! நாங்க அரை மணி ரெஸ்ட் எடுத்திட்டு வரோம்! அப்றம் பேசலாம்!" கௌரியும் தீன்தயாளும் எழுந்து சென்றனர்.
செல்வி இஸ்திரி செய்து தந்த தன்னுடைய சீருடையை அலமாரியில் வைத்துவிட்டு கதவை தாழிட்டுக் கொண்டான். ஏஸியைப் போட்டுக் கொண்டான். கட்டிலில் கவிழ்ந்து படுத்தபடி அண்ணனுக்கு போன் செய்தான்.
"சூரஜ் பையா!"
"ஹாங்! விராட்! போலோ!"
"பையா! இண்டியா எப்ப வர?"
"என்னடா! இப்டி கேக்கற? இன்னும் ரெண்டு மாசம் இருக்கே.. ப்ராஜெக்ட் முடிய! முடிஞ்சதும் வந்துடுவேன்! நீ என்ன உன் பாபி மாதிரியே கேக்கற!"
"பாபி பாவம் பையா! உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க! இவ்ளோ நாளா எனக்கு தெரிலன்னு நெனக்கிறேன். இப்ப நானும் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்ல! அதோட வலி என்னன்னு இப்பதான் தெரியுது! அதான்! அவங்க உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்கன்னு இப்பதான் புரியுது!"
"என்னடா செய்ய? இன்னும் ரெண்டே ரெண்டு மாசம்தான்! அப்றம் ஓடி வந்துடுவேன்! எனக்கு மட்டும் வருத்தமாயில்லயா! அவகூட நீங்க எல்லாம் இருக்கீங்க! எனக்கு இங்க யார் இருக்கா சொல்லு! ஒவ்வொரு செகண்டும் அவ நெனப்புலதான் இருக்கேன்!"
"நீ சொல்றதும் சரிதான்!"
"ஆனா ஒண்ணு! அவள மட்டும் என்கூட கூட்டிகிட்டு வர முடிஞ்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்! இப்ப அவள விட்டுட்டு வந்ததினால ரெண்டு மடங்கு சந்தோஷப்படறேன்!"
"என்ன பையா சொல்ற? ரெண்டு மடங்கு சந்தோஷமா? ஆர் யூ மேட்?" என்ன உளர்றான் என்று நினைத்துக் கொண்டான்.
"ஹ்ம்! விராட்! அவ என் கூட வந்திருந்தா எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும்! ஆனா அவ என் கூட இல்ல! அவள நீங்க எல்லாரும் பத்திரமா பாத்துக்கறீங்க! அவ உங்களுக்காக எல்லாம் செய்யறா! இது மூலம் நீங்க எல்லாரும் என் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கீங்கன்னு புரியுதுல்ல! அதான் நான் ரெண்டு மடங்கு சந்தோஷமா இருக்கேன்!"
"என்னமோ பையா! நீ சொல்றது எல்லாம் சரிதான்! ஆனா மிஸ் பண்ற வலி கொஞ்சம் அதிகமாதான் இருக்கோன்னு தோணுது!"
"அது இருக்கதான் செய்யும்!"
"புரியுது! சரி சீக்ரமா ப்ராஜெக்ட்ட கம்ப்ளீட் பண்ற வழியப்பாரு!"
"சரிடா! ஆனந்திகிட்ட ரொம்ப கேட்டேன்னு சொல்லு! வெச்சுடவா!"
"ம். பை!"
சூரஜ், டமில்! என் செல்ல டமில்! என்று அவளுடைய போட்டோவை தன் மொபைலில் பார்த்து கொஞ்சினான். அவன் கண்கள் குளமாகியது. முதன் முதலில் அவள் தன்னைப் பார்த்துப் பாடிய பம்பாய் படத்தின் ஹிந்திப் பாடலை பாடிக் கொண்டான். மனதுக்குள் அவளுடன் கழித்த இன்பமான இரவுகளை அசை போடத் தொடங்கினான். அவள் தனக்காக குழந்தையைக் கூட விட்டுக் கொடுத்து இருக்கிறாள். குழந்தையை விட்டுக் கொடுக்க கொஞ்சம் கூடத் தயக்கம் காட்டவில்லையே!?! கடவுளே! என்னையும் என் செல்வியையும் பிரித்து வைத்தது போதும். எங்கள் இருவரையும் ஒன்றாக சேர்த்து வைத்துவிடு! இனி நாங்கள் இருவரும் எங்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாத வரத்தை தந்து உன் அருளால் எங்களை நன்றாக வாழ வைத்து விடு! எங்களுக்கு அருமையான குழந்தைச் செல்வங்களை அளித்து எங்கள் மனதை நிறைத்து விடு என்று மனமுருகி வேண்டினான். அவள் இனிமேல் மனச்சோர்வு அடையாமல் தன் கண்ணுக்குள் வைத்து அவளைக் காக்க வேண்டும். அதற்கு அந்த தெய்வம் தனக்கு எப்போதும் துணையிருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டான்.
அன்று மாலை மடிக்கணிணியை வைத்துக் கொண்டு ரயில் டிக்கட்டை இணையம் வழியாக புக் செய்வதற்கு செல்வியும் விராட்டும் அமர்ந்தனர். இணையத் தொடர்பே இல்லை. இதென்ன வம்பாகிப் போச்சு என்று கைபேசியில் முயற்சி செய்தனர். அதிலும் இணையம் வேலை செய்யவில்லை! சோர்ந்து போனவர்கள் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்!
கௌரி என்னென்ன தயார் செய்து கொள்ள வேண்டும் என்று செல்வியிடம் சொன்னாள். அதன்படி செல்வி ஒரு பட்டியல் தயார் செய்துகொண்டாள். பட்டியலில் உள்ளபடி தேவையானவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். மாலை ஆறு மணியாகியது!
அப்போது, வாசலில் அழைப்பு மணி சத்தம் கேட்டது! விராட் எழுந்து சென்று கதவைத் திறந்தான். ஆச்சரியம், சந்தோஷம், அதிர்ச்சி என உணர்ச்சிகளின் கலவையாய் ஒன்றும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டான்.
கௌரியும் தீன்தயாளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஏன் இவன் இப்படி பேயறைந்ததைப் போல நிற்கிறான் என்று நினைத்து வாசலுக்கு வந்தார்கள்.
அங்கே தன் லக்கேஜ்களை கால்டாக்ஸியில் இருந்து இறக்கி வைத்துவிட்டு பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டுத் திரும்பி வீட்டிலிருப்பவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே உள்ளே வந்தான் சூரஜ்!
கௌரியும் தீன்தயாளும் சந்தோஷத்தில் கண்கள் குளமாக ஓடிச் சென்று மகனைக் கட்டிக் கொண்டு வரவேற்று உள்ளே அனுப்பினர். லக்கேஜ்களை இருவரும் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தனர். விராட் அண்ணனைக் கட்டியணைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டு அம்மாவிடமிருந்து லக்கேஜை வாங்கிக்கொண்டான்.
"விராட்! வாசல்ல யாரு! சொல்லுங்க!" என்று கேட்டுக் கொண்டே வந்த செல்வி உள்ளே வந்த சூரஜைப் பார்த்ததும் அசைவற்று நின்றுவிட்டாள். அவளால் தன் கண்களை நம்ப முடியவில்லை! இரண்டு மூன்று மூறை கண்களை மூடி மூடி திறந்து தான் காண்பது கனவா இல்லை நினைவுதானா என்று உறுதி செய்து கொண்டாள்.
உள்ளே வந்த சூரஜ், தன்னையே நம்பாமல் பார்க்கும் அன்பு மனைவியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளருகில் வந்து அப்படியே அவளைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினான். கௌரியும் தீன்தயாளும் சிரித்துக் கொண்டனர். விராட் சிரித்தபடி திரும்பிக் கொண்டான்.
"டமில்! ஓ! மை டியர் டமில்!"
அவளால் தன் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. அதே நேரம் அவன் செய்கையும் வெட்கத்தை வரவழைக்க,
"ஹ்க்கும்! ஹ்க்கும்! விடுங்க! எல்லார் முன்னாடி இப்டி... விராட் வேற இருக்காரு.." தமிழில் சொல்லி தன் கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
"விராட்! அப்னி ஆங்க் பந்த் கரோ! (கண்ணை மூடிக்கோ!)" என்று மனைவியை விடாமல் தம்பியிடம் ஹிந்தியில் சொன்னான்.
"பையா, மைனே நஹி தேகா. ஃபிகர் மத் கரோ. மேரா த்யான் ஔர் கஹின் தா!" (அண்ணா, நான் பாக்கலை. கவலைப்படாதே. என்னோட கவனம் வேற பக்கம் இருக்கு.)
செல்வி வெட்கத்தையும் சந்தோஷத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள். சூரஜ் சில நிமிடங்கள் அவளது தவிப்பை ரசித்துவிட்டு பின் அவளை விடுவித்தான்.
எல்லாரும் ஒன்றாக சேர்ந்து அவனிடம் நிறைய கேள்வி கேட்டனர்!
"இருங்க! இருங்க! எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்! ம்மா! செம்மையா பசிக்கிது! குளிச்சிட்டு வரேன்! காஞ்சி போன ப்ரெட்ட தின்னு தின்னு நாக்கு செத்தே போச்சு!" என்றான்.
"குளிச்சிட்டு வா! இன்னிக்கு உனக்கு பிடிச்ச சமையல்தான்! சாப்பிடலாம்!" என்று கௌரி அழைத்தாள்.
"இதோ டூ மினிட்ஸ்ல வந்துடறேன்!" சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குப் போனான்.
"செல்வி! நீ போய் அவன் குளிக்கறதுக்கு துணிமணி எடுத்துக் குடும்மா!" இங்கிதத்துடன் மாமியார் அனுப்பி வைத்தாள்.
"அத்த.." செல்வி தயங்கி நிற்க,
"பாபி! நான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்! நீங்க போங்க! அண்ணன கவனிங்க!" என்று விராட் அவளை அனுப்பினான்.
கண்களால் நன்றி சொல்லிக் கொண்டே கணவனின் பின்னால் சென்றாள்.
சூரஜ் உள்ளே சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு செல்வியை இழுத்து அணைத்து முகம் முழுதும் முத்த மழை பொழிந்தான்.
"டமில்! மேரி ப்யாரி!"
"சூரஜ்! சூரஜ்!" பேசவே வார்த்தை வராமல் தவித்தாள்.
"ரிலாக்ஸ் டமில்! நான்தான் வந்துட்டேன்ல!"
"சரி ரொம்ப பசிக்கிதுன்னு சொன்னீங்கல்ல! போய் குளிச்சிட்டு வாங்க! சாப்பாடு ரெடி பண்ணி வெக்கிறோம்! சாப்ட்டு பேசலாம்!" என்று கூறி அவனிடமிருந்து விலக அவன் திரும்பவும் அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு அவளை அனுப்பினான்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
"மத்தியானம் உங்கிட்ட பேசும்போது கூட சொல்லல! ஏன் பையா?" செல்லமாக கோபித்தான்.
"மத்தியானம் இவர்ட்ட பேசினீங்களா, விராட்?" செல்வி கொழுந்தனிடம் கேட்டாள்.
"ஆமா பாபி! மத்யானம் போன் பண்ணி எப்ப இண்டியா வருவன்னு கேட்டேன்! இன்னும் ரெண்டு மாசம் இருக்கேன்னு சொன்னான்! ஏன் பையா சொல்லல!?"
"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு சொல்லலடா!" தம்பியிடம் கண்ணடித்து சொன்னான்.
"நாம பேசறப்ப நீ எங்க இருந்த?"
"மும்பை ஏர்போர்ட்ல!"
"அதானா ஏதோ சம்மந்தம் இல்லாம ரெண்டு மடங்கு சந்தோஷம்னு உளறின! அப்பவே எனக்கு டௌட்டுதான்!?"
"எப்டி? இன்னும் ரெண்டுமாசம் இருக்கும்போதே வந்துட்டீங்க?" செல்வி கேட்டாள்.
"போனவாரமே ப்ராஜெக்ட் முடிச்சு ரிப்போர்ட் பண்ணியாச்சு! திரும்ப அடுத்த ப்ராஜெக்ட்ட குடுத்தான்! போடான்னு சொல்லிட்டோம்! வேலைய விட்டு தூக்குவேன்னான்! தூக்குடான்னு சொல்லிட்டோம்! அவனுக்கு எங்களவிட்டா வேற வழி இல்ல! ப்ரமோஷன் கன்ஃபர்ம் பண்ணிட்டான்! அது மட்டுமில்ல! மும்பைல ஒரு ஆஃபீஸ் ஓபன் பண்ணிருக்கான்! அதுக்கு நான்தான் ஆஃபீஸ் ஹெட்! அப்பாயின்ட்மென்ட் ஆடரே கைல குடுத்துட்டான்!"
"ஓ! வாவ்! இது க்ரேட் ந்யூஸ் சூரஜ்! ஸோ ஸ்வீட்!" செல்வி மனம் மகிழ்ந்தது. அவளுடைய பாட்டி அன்று அவளுக்கு சொன்னது போல இன்று நடந்தது என்று நினைத்துக் கொண்டாள்! ப்ராஜெட்ட சீக்ரம் முடிச்சதும் கிளம்புவார்! வேற புது ப்ராஜெட் குடுத்தா செய்ய ஒத்துக்க மாட்டார்! கம்ப்பல் பண்ணினா போடா உன் வேலையே வேணாம்ன்னு சொல்லிட்டு உன்னப் பாக்க ஓடி வந்துடுவார்! பாட்டியின் குரல் காதில் ரீங்காரமிட்டது! மானசீகமாக பாட்டி! தேங்க்ஸ் பாட்டி! என்று பாட்டிக்கு நன்றி கூறினாள்!
சத்தம் கேட்டு யமுனாவும் பிங்கியும் வந்து பார்த்து சிறிது நேரம் பேசிவிட்டு சென்றனர். சூரஜ் பிங்கிக்காக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு,
"சூரஜ் பையா! ரொம்ப நன்றி!" என்று தமிழில் சொல்லிவிட்டு,
"செல்வி பாபி, இத அண்ணனுக்கு குடுத்துடுங்க!" என்று சொல்லிக் கொண்டே செல்வியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
"ஏய்! இதென்ன! புதுசா! நான் உன் அண்ணன்டா!" என்று கேட்ட சூரஜிடம்!
"பையா! நான் என்ன சின்ன பொண்ணா? டென்த் ஸ்டான்டர்ட் படிக்கிறேன்! இனிமேல்லாம் பெரிய பாய்ஸ் கூட பேசக் கூடாதுன்னு செல்வி பாபி சொல்லிக் குடுத்திருக்காங்க!" என்று கூறிவிட்டுச் சென்றாள்.
சூரஜ் செல்வியை கேள்வியுடன் பார்க்க, செல்வி சொன்னாள்.
"யமுனா அக்காவும் வேலைக்கு போயிடறாங்க! அவளுக்கு நல்லது கெட்டது நம்மதானே சொல்லிக் குடுக்கணும்! தனியா வளர்றா! அவ கவனமா இருந்தாதானே அவளுக்கு பாதுகாப்பு! அதான்!" என்றாள்.
அதானா பிங்கி இப்பல்லாம் இங்க ரொம்ப வரதில்ல! ஒரு பெண் குழந்தைய வளக்கறது சாதாரண விஷயமில்ல! என்று நினைத்துக் கொண்டான் விராட்.
"இருங்க! இருங்க! நீங்க எப்டி இவ்ளோ நல்லா தமிழ் பேசறீங்க?" செல்வி கணவனிடம் கேட்டாள்.
"ஏன் நான் தமிழ் பேசறதுல என்ன அதிசயம் இருக்கு?" சூரஜ் கேட்டான்.
"எப்பவும் தமிழ கடிச்சு துப்புவீங்களே! இப்ப நல்லா பேசறீங்களேன்னு கேட்டேன்!"
"நீ கூடதான்! ஹிந்திய படாத பாடு படுத்துவ! இப்ப நீ எப்டி இவ்ளோ சூப்பரா ஹிந்தி பேசற?"
"நான் இங்க மும்பைல இருக்கேன்! ஹிந்தி சொல்லித்தர பிங்கி இருக்கா! இதோ விராட் இருக்கார்! சுத்தி வர எங்க பாத்தாலும் ஹிந்திதான். அதனால நான் ஹிந்தி பேசறது அதிசயம் இல்ல! நீங்க தமிழ் பேசறதுதான் அதிசயம்! எப்டின்னு சொல்லுங்க?"
"உனக்கு இங்க ஆள் இருக்கற மாதிரி எனக்கும் அங்க ஆள் இருக்கு!
"என்னது?" கேட்டுவிட்டு கணவனை முறைத்தாள். விராட் வாய்விட்டு சிரித்தான்.
"டேய்! நீ வேற! சும்மா இருடா!" என்று சூரஜ் தம்பியிடம் கூறிவிட்டு செல்வியிடம்,
"யம்மா! மொறைக்காதம்மா! நீ நெனக்கிற மாதிரி ஆள் இல்ல! என் டீம் மேட்! பால்பாண்டி! மதுரக்காரன்! அவன்தான் தமிழ் ஒழுங்கா பேச கத்து குடுத்தான்." சூரஜ் சொன்னான்.
"என்ன இருந்தாலும் நீங்க கடிச்சு கடிச்சு தப்பு தப்பா தமிழ் பேசுவீங்களே அதான் நல்லா இருக்கும்! இதுவும் ஓகேதான்! ஆனா அது சூப்பர்!" என்று செல்வி சொன்னாள்.
"அப்டீன்னா நா ஒன்காக அப்டியே பேஸ்ரேன் டமில்! ஒன்காக நா என் வேணா செய் ரெட்யா இர்கேன்!" என்று பேசிக்காட்ட, செல்வி கட கடவென்று சிரித்தாள்.
அனைவரும் நிறைய பேசினார்கள்! தீபிகாவுக்கு போன் செய்து சூரஜின் வரவைத் தெரிவித்தார்கள். செல்வி தன் அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டு பாட்டியிடமும் பேசினாள்!
"பாட்டி! நீங்க சொன்ன மாதிரியே அவர் சீக்ரமா வந்துட்டார் பாட்டி!"
"ரொம்ப சந்தோஷம் செல்விம்மா! மாப்ளய நான் ரொம்ப கேட்டதா சொல்லும்மா!"
"கண்டிப்பா சொல்றேன் பாட்டி!"
சித்தப்பா, சித்தி, ஆனந்தி, ஆனந்தன் அனைவரிடமும் சூரஜின் வரவை மகிழ்ச்சியாக தெரிவித்தாள்.
விராட்டின் நிச்சயதார்த்தத்துக்கு அனைவரும் விமானத்தில் சென்றுவிடலாம் என்றும் இன்று இன்டர்நெட் வேலை செய்யாததால் அது வேலை செய்ய ஆரம்பித்ததும் விமான டிக்கெட்டை முன் பதிவு செய்துவிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
திருச்சிக்கு விமானத்தில்தான் போவதென்றால் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் போதும். அதனால் நானும் டெல்லியிலிருந்து நேராக திருச்சி வருகிறேன் என்று தீபிகா தெரிவித்தாள். சரி அவளுக்கும் முன்பதிவு செய்துவிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
"சரி சூரஜ்! போய்ப்படு! ஃப்ளைட்ல வந்தது ரொம்ப களைப்பா இருக்கும். போய் நல்லா ரெஸ்ட் எடு!" கௌரி மூத்த மகனிடம் சொல்லிவிட்டு, இளையவனிடம்,
"விராட்! போய் படு! நாளைக்கு திங்ககிழமை! ட்யூட்டிக்குப் போகணும்ல!" என்றாள்.
"சரி! குட்நைட் பையா! குட்நைட் பாபி!" எழுந்தான்.
"குட்நைட்!" என்று ஒரே குரலில் சூரஜும் செல்வியும் சொன்னார்கள். கௌரியும் தீன்தயாளும் எழுந்து தங்களுடைய அறைக்குச் சென்றனர். விராட் வாசல் கதவை சாத்தி மூடி தாழிட்டுவிட்டு மாடியேறினான்.
செல்வி எதோ கேட்க சூரஜ் எதோ சொல்ல செல்வி அவனைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகை செய்தபடி அவர்களுடைய அறைக்கு முன்னால் செல்ல சூரஜ் அவளைப் பார்த்தபடி பின்னாலேயே வந்தான். இருவரும் உள்ளே வந்ததும் கதவை சாத்திக் கொண்டான்.
விராட்டுக்கு சந்தோஷமாயிருந்தது. அண்ணியும் அண்ணனும் இனிமேல் பிரியாமல் இருக்கணும். அண்ணி காலையில் எப்படி வருத்தப்பட்டுக் கொண்டு மனச் சோர்வோடு டல்லா இருந்தாங்க! இன்னிக்கு நைட்டு ரெண்டு பேருக்கும் விடிய விடிய தலை தீபாவளிதான். அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள் என்று கற்பனை செய்துகொண்டு இங்கே இவன் ஆனந்தியை கற்பனையில் கட்டித் தழுவிக் கொண்டிருந்தான். அவளை நினைத்து இனிய கற்பனையில் உறங்கிப் போனான்.
விமானப் பயணத்தால் ஏற்படும் களைப்பு நீங்க சூரஜ் இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்தான். அதன் பின், மும்பை அலுவலகத்தில் சேர்ந்து பொறுப்பை வாங்கிக் கொண்டான்.
பெண் பார்த்து நிச்சயம் செய்யும் தேதியை கீர்த்திவாசனுக்கு தெரிவித்துவிட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
விராட்டென்ற காவல் வீரனவன்
தன்னவளைக் காண்பதற்குத்
தவிக்கின்றான்! துடிக்கின்றான்!
வழியொன்றும் கிட்டவில்லை!
அண்ணனின் பிரிவில் வாடும்
அண்ணியின் தவிப்பறிந்து
அண்ணனிடம் விரைந்து வர
அன்புக் கட்டளை இடுகின்றான்!
இரு திங்கள் முடிவதற்குள்
வருவேனென்று செய்தி சொல்லி
ஏக்கத்தில் தலைவியை ஆழ்த்தி
அன்றிரவே வந்தான் தலைவனுமே!
ஆனந்தத் துள்ளலுடன் நாயகியும்
நாயகனின் ஆசைமுகம் கண்டு
ஆயிரம் காதல் கவிதைகளும்
விழியாலே பேசி நின்றாள்!
தம்பியின் உளம் கவர்ந்தவளை
மணமுடித்து அழைத்து வரத்
தலைமகனும் பெரியோருடன்
தென்திசை நோக்கிக் கிளம்பினானே!
வடக்கும் தெற்கும் சங்கமிக்கும்
பிறிதொரு திருமணமிங்கு கூடிவர
இருமனங்கள் நாளை இணைந்திடுமே!
காதலுக்கு இங்கு மொழியெதற்கு?
- C. புவனா
- காதலின் மொழி என்ன?