கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

16. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 16


விராட் ஆசைப்பட்டபடி இல்லாமல் தாமதமாக திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்து தேதி குறிக்கப்பட்டது. இன்னும் ஐந்து மாதங்கள் கழித்துதான் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண வேலைகள் இரண்டு வீடுகளிலும் ஆற அமர நடந்தன.

விராட்டினால் ஆனந்தியிடம் அதிக நேரம் பேச முடியவில்லை. வீட்டில் யாராவது வந்து போய்க் கொண்டு இருந்தார்கள். வேலையில் கைபேசியைப் பார்க்கவே நேரமிருக்காது! இரவுகளில் ஆனந்தி பேசவும் மாட்டாள். செய்தியும் அனுப்ப மாட்டாள். எனவே தினமும் வேலை முடிந்து வந்ததும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசுவான். அவ்வளவே!

சூரஜுக்கு வேலை பளு மிகுதியாக இருந்தது. அவன் காலை சீக்கிரம் கிளம்பி இரவு மிகவும் தாமதமாக வரலானான். வந்ததும் குளித்து உணவு உண்டதும் உறங்கி விடுவான். பல நாள் இரவு வீட்டுக்கு வரவே முடியாமல் போனது. ஞாயிற்றுக்கிழமையும் அலுவலகத்தில் வேலையிருந்தது.

குழந்தைக்கு முயற்சி செய்யலாமா என்று அன்று ஆவலாகக் கேட்டவன் அதன் பிறகு நின்று பேச நேரமின்றி வேலை வேலை என்று ஓடுவதே வேலையென்று மாறிப் போனான்.

செல்வி மனதளவில் வருத்தப்பட்டாலும் வெளியில் எப்போதும் போல இருந்தாள்.

விராட் ஆனந்தியின் திருமணத்துக்கு தேவையானவற்றை செல்விதான் பொறுப்பாக தயார் செய்ய வேண்டியிருந்தது. விராட் சில சமயம் உதவுவான். பல சமயம் அவனுக்கும் வேலையிருக்கும்.

கௌரி சொல்லச் சொல்ல செல்வி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தயார் செய்து கொண்டாள். நடுவே வீட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டது.

தீபிகா தன் மருத்துவப் படிப்பை பல்கலைக்கழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டு வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மும்பை திரும்பினாள். மும்பையில் மேற்படிப்பை தொடர்வதே அவளுடைய விருப்பமாக இருந்தது. அவள் இங்கேயே வந்து விட்டதால் அவளுடைய அறையைத் தயார் செய்யும் வேலையையும் செல்வி மேற்கொண்டாள். செல்வியின் மேற்பார்வையில் அவளுடைய அறையில் ஏஸி மாட்டப்பட்டது.

சூரஜுக்கு அலுவலகத்தில் கார் கொடுத்துவிட்டனர். அதை நிறுத்த ஷெட் கட்டப்பட்டது. சமையலறை மற்றும் குளியலறை குழாய்கள் துருபிடித்து குத்திக் கொண்டிருந்தது. அதையெல்லாம் மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. எல்லாவற்றுக்கும் செல்விதான் ஓட வேண்டியிருந்தது. அவள் அயர்ந்துவிட்டாள்.

செல்விக்கு திருமணமானவுடன் சூரஜ் யூஎஸ்க்குச் சென்று விட்டான். ஆனால் அவன் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டதே! இன்னும் ஒன்றும் இல்லையா என்று கௌரி ஜாடையாகக் கேட்கத் தொடங்கினாள்.

இங்கே இவர் ஒழுங்காக வீட்டுக்கு வந்தால்தானே எதாவது வரும்! இவரோ ஆஃபீஸே கதியென்று கிடக்கிறார்! இதில் நான் என்ன செய்ய முடியும் என்று செல்விக்குத் தோன்றும்! ஆனால் யாரிடம் என்னவென்று சொல்வது? வீட்டுக்கு பெரியவங்க! இவங்களுக்கு கூட புரியல! இதுல மத்தவங்களுக்கு எங்க புரியப் போகுது? என்று மனதுக்குள் நினைத்தாலும் ஒன்றும் பேசாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவாள்.

பள்ளிக்குழந்தைகள், ட்யூஷன் குழந்தைகள் மற்றும் பிங்கி அவ்வப்போது வந்து பாபி பாபி என்று தன்னை வளைய வருவது இவை மட்டுமே அவள் மனதை புத்துணர்வு பெறச் செய்யும் மருந்து. விராட்டின் திருமணத்துக்கு எல்லாரும் வருவார்கள். எல்லாருடனும் பேசி மகிழலாம் தன் வருத்தத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று செல்வி காத்திருந்தாள்.

ஒரு நாள் அவர்கள் பகுதியில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறி அதற்கு தொட்டிலிடும் விழாவுக்கு கௌரியை அழைக்க குழந்தை பெற்ற பெண்ணின் மாமியாரும் அம்மாவும் வந்திருந்தார்கள்.

நம்மூரைப் போலவே வடநாட்டிலும் இந்த தொட்டிலிடும் நிகழ்வை பெரிய விழாவாக எடுத்துக் கொண்டாடுவது வழக்கம்.

வந்திருந்த இரண்டு பெண்களும் கௌரியிடம் மிகவும் அன்பாகவும் மரியாதையுடனும் பேசி தங்கள் வீட்டு விழாவுக்கு அழைத்தனர்.

கௌரியும் அவர்களுக்கு தேனீர் வழங்கி உபசரித்தாள்.

எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருக்கையில் செல்வி தன் ட்யூஷன் வகுப்பை முடித்துக் கொண்டு கீழே வந்தாள். வந்திருந்த பெண்களைப் பார்த்து புன்னகையுடன் நலம் விசாரித்தாள்.

குழந்தைக்கு தொட்டிலிடும் விழா பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தாள்.

ஆனால் வந்திருந்த பெண்கள் இருவரும் கௌரியைத் தனியே அழைத்துப் போய் தயவு செய்து விழாவுக்கு செல்வியை அழைத்து வர வேண்டாம் என்று வேண்டுதல் வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

கௌரிக்கு மனம் கனமாகிப் போனது. அவள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் அவளுடைய முக வாட்டத்தைக் கண்டு செல்வி அவளிடம்,

"என்ன அத்த? உடம்புக்கு எதாவது பண்ணுதா? டாக்டர்கிட்ட போலாமா?" என்று அக்கறையுடன் விசாரித்தாள்.

அதற்கு மேல் பொறுமை காக்க முடியாத கௌரி, தன் மொத்த வருத்தத்தையும் செல்வியின் மீது கோபமாகக் காட்டிவிட்டாள்.

"வந்தவங்க என்ன சொல்லிட்டுப் போனாங்க தெரியுமா? உன் மருமகளை எங்க வீட்டு குழந்தைய பாக்க கூட்டிட்டு வராதன்னு சொல்லிட்டு போறாங்க! நீயும் உண்டாகியிருந்தா எனக்கு இந்த பேச்சு கேக்கற நிலை வந்திருக்குமா? கொஞ்சமாவது இந்த குடும்பத்தை பத்தி நினைச்சி பாத்தியா நீ? உன் விருப்பப்படி என் மகனை கல்யாணம் பண்ணிகிட்டு வந்தியே? ஆனா அவனோட ஒழுங்கா குடும்பம் நடத்த தெரிஞ்சிதா உனக்கு?" என்று கோபமாகக் கேட்டுவிட்டு எழுந்து போய்விட்டாள்.

இதனைக் கேட்ட செல்விக்கு இடி இறங்கியதைப் போல இருந்தது.

'நா இந்த குடும்பத்தை பத்தி நெனச்சி பாக்கலயா? ஏன்? இப்டிலாம் பேசறாங்க? நா என்ன தப்பு செய்தேன்?' என்று தன் மனதுக்குள் நினைத்து வருந்தினாள் செல்வி. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தீன்தயாள் செல்வியின் அருகே வந்து அவளுடைய தலையில் ஆறுதலாகக் கை வைத்தார்.

அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

இதை கவனித்துக் கொண்டே வந்த விராட் என்ன நடந்தது என்று விசாரித்தான். அதே நேரம் வெளியில் சென்றிருந்த தீபிகாவும் வந்து சேர்ந்தாள். அவளும் வீட்டில் நிலவும் அசாத்திய மௌனத்தைக் கண்டு குழம்பினாள். என்னவென்று விசாரித்தாள். ஆனால் அவளுக்கும் எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.

யாரும் பதில் சொல்லாமல் எல்லாரும் ஒவ்வொரு மூலையில் முடங்கியிருப்பதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்ட விராட், தன் அன்னையிடம் கத்தினான்.

"இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?"

"என்னடா சொல்ல சொல்ற? உன் மருமகளை தொட்டில் போடற ஃபங்க்ஷனுக்கு கூட்டிட்டு வராதன்னு ஒருத்தி சொல்லிட்டு போறா! இதெல்லாம் எனக்கு தேவையா? இவ மட்டும் இந்நேரம் உண்டாகியிருந்தா எனக்கு இந்த பேச்செல்லாம் கேக்க வேண்டியிருக்காதுல்ல?" என்று தன் மனதிலிருந்ததைக் கொட்டினாள் கௌரி.

விராட்டுககு இது அதிர்ச்சியாக இருந்தாலும் அவனுமே செல்வியின் மீதுதான் குற்றம் சுமத்தினான்.

"என்ன செய்யம்மா? வந்திருக்கறவங்க தன்னைப் பத்தியும் தன் சுகத்தைப் பத்தியும் மட்டுமே நினைக்கற சுயநலவாதியா இருந்தா நம்ம என்ன பண்ண முடியும்?" என்றான்.

இதைக் கேட்ட செல்விக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அவளுடைய வேதனையின் அளவு இன்னும் கூடிப் போனது.

"அரே சூப் ரஹோ பையா! இதென்ன? இப்டி பேசற? நம்ம செல்வி பாபியையா குத்தம் சொல்ற?" என்று தீபிகா தன் அண்ணனிடம் கோபப்பட்டாள்.

தன் அன்னையைப் பார்த்து,

"மா! நீங்க என்ன நினைக்கறீங்க? கல்யாணம் ஆனவுடனே குழந்தை உருவாகிடணும்னா? சில பேருக்கு இப்டிதான் லேட்டாகும்! அதுக்காக நீங்க இப்டிதான் குறை சொல்வீங்களா? நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க லேட்டானா கூட இப்டி சொல்வீங்களா? சொல்ல மனசுதான் வருமா? ஏம்மா நீங்க கூட இப்டி இருக்கீங்க? சே! பாபி மனசு எவ்ளோ வருத்தப்படும்? ஒரு பொம்பளையா இருந்துகிட்டு நீங்களே பாபி மனசை இப்டி நோகடிக்கலாமா? அவங்க நம்ம வீட்டுக்கு வந்ததில இருந்து இப்ப வரை ஒரு நல்ல மருமகளாதானே நடந்துகிட்டிருக்காங்க! அது கூட உங்களுக்கு புரியலயா?" என்று கண்டிப்புடன் கேட்டுவிட்டு செல்வியின் அருகில் சென்றாள்.

"பாபி! அவங்க பேசறதெல்லாம் மனசில வெச்சிக்காதீங்க! ப்ளீஸ்!" என்று செல்வியைத் தேற்றத் தொடங்கினாள்.

செல்வி தீபிகாவின் புரிதலைக் கண்டு கொஞ்சம் ஆறுதலடைந்தாள். ஆனால் கௌரிக்கும் விராட்டுக்கும் இன்னும் கோபம் தணிந்தபாடில்லை.



வீரனாம் விராட்டும் ஆனந்தியின்
கைத்தலம் பற்றி
மாலையிடும் மணநாளைப் பெரியோர் குறித்தனரே!
மன்னவனும் மங்கையும் மகிழ்ச்சியில் திளைத்தனரே!

மணநாளை எதிர்நோக்கி இருவருமே காத்திருக்கத்
தங்கையும் கசடறக் கற்று நல்ல
மருத்துவராகியுமே
மேற்கல்வி தொடரவுமே குடும்பத்தில் வந்திணைந்தாள்!

செல்வியின் மணிவயிறு திறக்கவே இல்லையென்று
மாமியும் குறைகூற மங்கையவள்
கலங்கி நின்றாள்!
மருத்துவராம் தங்கையுமே ஆறுதல் கூறினாளே!

அன்னையுடன் சேர்ந்து தம்பியுமே
கடுமொழிகள்
அண்ணியிடம் முன்வந்து ஆயிரம் உதிர்க்கையிலே
தங்கையுமே துடித்தாள்! அன்னையைக் கடிந்துகொண்டாள்!

பெண்ணவளின் துயரம் நாளை தீர்ந்திடுமோ!
மணிவயிறு திறந்திடுமோ! மகிழ்ச்சி கிட்டிடுமோ!
குறைகளைத் தீர்க்கவுமே இறைவன்
வரம் தருவானோ!

- C. புவனா.

- காதலின் மொழி என்ன?
 
Top