கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

2.சக்திமான்

Appusiva

Moderator
Staff member


“எவ்ளோ நாளா இந்த ப்ராப்ளம் இருக்கு?” என்றார் டாக்டர் ராமசுப்பு.

“சரியா மார்ச் 5 மதியம் மூணு மணியில இருந்து டாக்டர்” என்றான் கணேஷ்.

‘சரியா நாப்பது நாளாகுது… .இல்லியா?”

“சார்…அதில்ல… நான் சொல்றது… 2011 மார்ச்’

தவறவிட்ட பேனாவை டாக்டர் குனிந்து எடுக்கவில்லை.

“என்னாப்பா சொல்ற?!!...”

“ஆமா சார்….எட்டு வருஷமா…”

‘அட அதில்லப்பா….. டைம் மொதக்கொண்டு ஞாபகமா சொல்றியே!!!”.

“அதான் சார் ப்ரச்னையே…. மைனூட்டா எல்லாமே ஞாபகம் வந்து தொலைக்குது. ஒரு மின்னல் மாதிரி மூளையில வெளிச்சமா வந்துது. ப்ரமோஷனுக்காக ஒரு எக்ஸாம்….ஆன்ஸர் நல்லாவே தெரியுது…. ஆனா எழுதறத்துக்குள்ள அது சம்மந்தமா நான் படிச்ச நெறயா விஷயம்……. அப்புறம்…டிவில பார்த்தது…நெட்ல தேடினதுன்னு தேதி டைம் பிரகாரம் வரிசைகட்டி நிக்குது…. எக்ஸாம் ஊத்திக்கிச்சி”

“அட கடவுளே…”

“டாக்டர்….பரிதாபப்படறீங்க…. ஆனா இது மிகப்பெரிய வரம்னு எல்லாரும் உசுப்பேத்தறாங்க… முடியல”

“தியானம்…. யோகா…ஏதாச்சும் ட்ரை பண்ணீங்களா?”

“ஆச்சு டாக்டர்…. ஆனா பாருங்க....சின்ன வயசுல பணம்கட்டி யோகா போனேன்….அந்த க்ளாஸ் எடுத்த மேடம் வெள்ளுடையில அழகா பேசி சாந்தமா சொல்லிக்கொடுத்தாங்க…காலைல என்னா சாப்டாங்களோ…திடீர்னு மைக்ல சத்தம்… கும்பல்லயும்… மேடமும் ஒண்ணுமே நடக்காத மாதிரி… கண்ணை மூடிக்கிட்டு…… நான் சின்ன பையனா… ஹாஹா…சிரிப்பா சிரிச்சு… ஹாஹா… ஹப்பாட்ட அடி வாங்கி…ஞாபகம் வந்துருது”

“தீய வைக்க… வேறென்ன”

“குமுதத்தில ஐநூறு வார்த்தையில கதைப்போட்டின்னான்.எழுதறேன்…… முப்பத்தெட்டு… மைனஸ்…. ஐநூறு… மீதம்… நானூத்தி அறுபத்திரண்டு.. ன்னு அலாரம் அடிச்சிட்டேயிருக்கு…. கிழிச்சு கடாசிட்டேன்”

“ம்…. சரி”

“அதில பாருங்க….. எட்டு தபா கிழிச்சேன். முப்பத்துமூணு பீஸு…. ஒரு அரை பீஸு”

“அதென்ன அரை…. சரிவிடு…நானே அரையாயிடுவேன்போல…”

“தரமான….. அப்டீன்னு சொல்ற ஒரு இலக்கிய பத்திரிக்கை சார்…. அவங்க எந்தெந்த மாசம் எத்தினி ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணாங்க….. நான் எத்தனை வார்த்தையில எத்தனை லட்டர் போட்டேனெல்லாம்…….”

“எனக்குகூட சிலப்பதிகாரம் படிக்க ஒரு வெறி உண்டுப்பா”

“ஆனா நீங்க இதே இங்லீஸ் நாவலதானே ரெண்டுமாசமா உருட்டிட்டிருக்கீங்க. வொய்ப்க்கு காய்ச்சல்னு ரெண்டுமாசம் முன்னால வந்தப்போ இருபத்தஞ்சாம் பக்கம்….. இன்னிக்கு நாப்பத்திரண்டு”

“சரிதான்….. ரொம்பதான் முத்தியிருக்கு”

“அப்போ டோக்கன் நம்பர்கூட பண்ணெண்டு சார்….. இப்போ…. இருபத்துமூணு…. ரொம்ப டல்லா சார்”

“ஆமாப்பா….. அயர்ன் பண்ணகூட தேறமாட்டேங்…… ஹேய்….. என்னநீ….அவுட்டோர் நெறய போறேன்…. க்ளினிக்ல இருக்கற நேரம் கம்மி”

“ஓகே சார்…. விடுங்க”

“நீ என்ன பண்ற….இந்த மாத்திரைகள தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிடு…..நல்லா ரெஸ்டெடு…… செல்ல நோண்டாத….டிவி…புக்ஸ்…..எல்லாம் கொஞ்சநாள் மறந்துடு….ஒரு வாரம் கழிச்சுவா”

“தாங்க்ஸ் டாக்டர்…… போனமாசம் எட்டாம்தேதி ஏதாச்சும் முக்கியமான மீட்டிங்கா சார்?”

“அன்னிக்கு……. ம்… ஆமாப்பா. ஜிகே கல்யாணமண்டபத்தில ஒரு கான்பரன்ஸ்….. ஏன்?”

“சிகப்புகலர் பூபோட்ட டை….கருப்பு கோட்டு”

“அட ஆமாப்பா…. விஷயத்த சொல்லு”

“நீங்க கார்ல இருந்து நடந்து போறப்போ …. ஒரு காக்கா உங்க கோட்ல அசிங்கம் பண்ணிடுச்சே…. அப்புறம் எப்டி சமாளிச்சீங்௧?”

“அதுவா…. வந்து….. யோவ்… வெளியபோய்யா முதல்ல”
**************

“டாக்டரே பிரம்மிச்சு போயிட்டார்டீ…. பயப்படவேணாமாம்….சரியாயிடுமாம்…… ஆமா…. நீ என்ன புதுசேலை…. மேக்கப்?”

ஆர்த்தி சூடான காஃபி டம்ளரை டேபிள்மேல் வைத்தபடி கேட்டாள்,

“வேலைல்லாம் பாதிக்குதுன்னு சொன்னீங்களா… இருங்க ஸ்வீட் எடுத்துட்டு வரேன்” என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

“ஸ்வீட்டா…..என்னடி விஷேசம்?.... கோயிலுக்கெல்லாம் போயிட்டுவந்திருக்க போல?”.

“உங்க பர்த்டே என்னிக்கு?”

“ஆமால்ல…. இல்லியே…. அது நவம்பர் எட்டில்ல?”

“என்னோடது?”

“நவம்பர்….. ல்ல…. ஜூன்…. ஜூன் சிக்ஸ்”

“உங்க புத்திரனோடது……?”

“அது தெரியுமே….. நவம்பர் முப்பது… .நாங்க ஒரே மாசம்”

“எல்லாம் சரி….. இன்னிக்கென்ன நாள்”
இன்னிக்கென்ன?.....”

“உங்க கல்யாண நாள் எப்போ?”

“வந்து….ஏப்ரல்…. பத்து….பதிநாலு… அட இன்னிக்கு…”

“நீங்கல்லாம் பெர்ர்ரிய்ய்ய சக்திமான்… ஆளப்பாரு”

“சாரிடி…. ஆமா?!..... உன் கல்யாணநாள் என்னிக்கு?”

ட்டொம்…..

தலையில் வேகமாக பறந்துவந்து விழுந்து ஒடுங்கிய அலுமினிய குண்டானை மறுநாள் இருபது ரூபாய் கொடுத்து ஒடுக்கெடுத்தபோது….. அது வாங்கியதிலிருந்து எட்டு தடவை ஒடுக்கு சரிபண்ண இருநூற்றுபத்து செலவானதாக அவன் மூளையில் மின்னியது.
 
Top