கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

2. (வி)சித்திரமாய்...

Annapurani Dhandapani

Active member
2.

அவன் மும்முரமாகப் படம் வரைந்து கொண்டிருக்க, பின்னாலிருந்து அவனுடைய கண்களைப் பொத்தினாள் அவள்.

அவளுடைய சுகந்த நறுமணமும் விரல்களின் மென்மையும் அவன் இதழ்களில் புன்னகையைத் தோற்றுவித்தன.

"வந்துட்டியா! உனக்காக எவ்ளோ நேரமா காத்துட்டிருக்கேன் தெரியுமா?" என்று பொய்யாய் கோபித்தபடியே அவளுடைய கைபிடித்து தன் முன்னால் அவளை இழுத்தான் அவன்.

"சாரி பிச்சூ! வண்டி ரிப்பேர்! ஆட்டோ பிடிச்சி வரதுக்குள்ள லேட்டாயிருச்சு.." என்று கொஞ்சினாள் அவள்.

"ஏன்? போன வாரம்தானே வண்டி சர்வீஸ் பண்ணி வந்துச்சு? இப்ப என்னாச்சு?" என்று அவன் கேட்க,

"நா மட்டும் வண்டிய எடுத்தா ஒழுங்கா இருக்கும்.. எந்தம்பியும்ல எடுத்துட்டு ஊர சுத்தறான்.. எங்கியாவது கீழ போட்டிருப்பான்.. போட்டுட்டு நைசா கொண்டு வந்து வெச்சிட்டா எனக்கு என்ன தெரியும்? நா எடுக்கறச்சே வண்டி ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்றப்பதான் அவன் வண்டிய கீழ போட்டதே தெரியும்.." என்று அவள் தன் தம்பியின் மீது நீளமாக குற்றப் பத்திரிகை வாசித்தாள்.

"சரி.. சரி.. மச்சானை கோச்சிக்காத.. இனிமே இப்டி ஏதாவது ஆச்சுன்னா எனக்கு கால் பண்ணு.. நா உன்ன பாக்க வரேன்.."

"ஏன்? எங்கப்பா கிட்ட ஒதை வாங்கவா?"

"காதல்ன்னா சில பல அடிகளை வாங்கிதானே ஆகணும்.." என்று அவன் சிரித்தபடியே சொன்னான்.

"சின்ன சின்னதா அடி வாங்கினா பரவால்ல.. பெரிசா மரண அடில்ல வாங்கினேன்.." என்று அவள் கூறி கண் கலங்கினாள்.

அழகான ரோஜாப் பூவைப் போல மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த அவளுடைய முகம் பொலபொலவென்று கண்ணீரை உகுத்தது.

"எங்கப்பா இப்டி நம்ப வெச்சி கழுத்தறுத்து நம்பிக்கை துரோகம் பண்ணுவார்ன்னு நா நெனச்சு கூட பாக்கல.." என்று சொல்லி அழுதாள் அவள்.

"நீ இப்பவே என் கூட வந்துடு மல்லி.. எங்கம்மா உன்ன நல்லா பாத்துக்குவாங்க.."

"நா எப்டி பிச்சூ.. அது சரி வராது.." என்றாள் அவள்.

"அப்டீன்னா நா உன் கூட வந்துடவா?" கேட்டான் அவன்.

"உண்மையாவா? நீ என் கூட வந்துடறியா?" தன் கண்களைத் துடைத்துக் கொண்டு ஆவலாகக் கேட்டாள் அவள்.

"ம்.. ஏன்? உண்மையாவேதான்!" என்றான் அவன்.

"வா பிச்சூ! வா! என் கூட வா! நா உன்ன கூட்டிட்டு போறேன்.. நீ என் கூட இருந்தா உனக்கும் சரி… எனக்கும் சரி.. ரெண்டு பேருக்கும் எந்த கவலையும் இருக்காது.." என்று அவள் கைபிடித்து அழைத்தாள்.

அவன் அவள் முகம் பார்த்து சிரிக்க அவளும் அவனைப் பார்த்து சிரித்தாள்.

பெரிய சத்தத்துடன் இடி இடித்து மழை பெய்யத் தொடங்கியது.

அவர்கள் இருவரும் மழை பெய்கிறதே என்று எங்கும் ஓடாமல் மழையில் இனிமையாக நனைந்தனர்.

"வா பிச்சூ!" அவள் கைபிடித்து அழைத்தாள்.

அவனும் அவளுடன் நடந்தான்.

"நாம ரெண்டு பேரும் இனிமே பிரியவே மாட்டோம்ல பிச்சூ?"

"ஆமா மல்லி! உன்ன விட்டு ஒரு நொடி கூட பிரிய மாட்டேன்.." என்றான் அவன்.

"வா.."

அவன் அந்தப் பேய் மழையில் சுற்றுப்புறத்தை கவனிக்காமல் அவளுடனேயே நடந்து கொண்டிருந்தான்.

"சார்! சார்! பிச்சூ சார்.. பிச்சூ சார்.. கொட்டற மழையில எங்க போறீங்க?" என்று ஒரு பெண்ணின் குரல் அவன் பின்னால் ஓடி வந்தது.

ஆனால் அவன் அதை கவனிக்கும் நிலையில் இல்லை.

"மல்லி! மல்லி!" என்று கூவிக் கொண்டே இலக்கில்லாமல் நடந்து கொண்டிருந்தான்.

எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்ற சுயவுணர்வே இல்லாமல் நடந்து கொண்டிருந்தவன் அந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவர் மேல் ஏறி நின்றான்.

"வாங்க பிச்சூ! இனிமே என்னப் பிரிஞ்சி நீங்க போகவே கூடாது.." கூவம் ஆற்றின் அழுக்கு நீரிலிருந்து மல்லி அவனை அழைப்பது போல இருக்க, அவன்,

"இதோ வரேன் மல்லி! உன் கூடவேதான் இருப்பேன்.. உன்ன ஒரு நொடி கூட பிரியவே மாட்டேன்.." என்று கூவிக் கொண்டே ஆற்றில் குதிக்க முயன்றான்.

அவனுக்குப் பின்னால் ஓடி வந்த இளம்பெண் அவனை ஆற்றுக்குள் குதிக்கவிடாமல் பின்னாலிருந்து பிடித்து இழுத்தாள்.

அவன் நிலை தடுமாறி சாலையில் விழுந்து மயங்கினான். அவனுடைய நெற்றியின் இடது பக்க மூலையிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியது.

"ஐயோ சார்.. சார்.." என்று பதறியவள், அவசரமாகத் தன் கைப்பேசியில் யாரையோ அழைத்தாள்.

சில நொடிகளில் அவளுடைய வயதொத்த இளம்பெண்களும் ஆண்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். கூடவே ஒரு ஆம்புலன்சும் வந்தது.

அடிபட்டு கீழே விழுந்து கிடந்த பிச்சாண்டியை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டு துணைக்கு அவனைக் காப்பாற்றியவளையே ஏற்றி அனுப்பிய அந்த இளைஞர் கூட்டம் அந்த ஆம்புலன்சின் பின்னாலேயே சென்றார்கள்.

****

"ஆன்ட்டீ! ஆன்ட்டீ!" என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தாள் காவேரி.

வாசலில் தேவதை போல நின்றிருந்த இளம்பெண்ணைப் பார்த்து,

"ஆரு மா? இன்னா வோணும்?" என்று கேட்டாள் காவேரி.

"பிச்சாண்டி சார் வீடு.." இழுத்தாள் அவள்.

"பிச்சாண்டி சாரா.." என்று வீட்டுக்குள்ளிருந்து ஒரு ஏளனக் குரல் கேட்டது. அவளுடைய கணவன் முத்துக்கருப்பன்தான் அப்படி கேட்டான்.

காவேரி உள்ளே திரும்பி,

"யோவ்! நீ சொம்மா கெடக்க மாட்ட?" என்று கணவனை அதட்டிவிட்டு,

"அங்காங்.. இதான் பிச்சாண்டி சார் வூடு.. நீ ஆரு மா?" என்று கேட்டாள்.

"என் பேர் சக்தி.. நா சார் வேல பண்ற காலேஜ்லதான் படிக்கறேன்.. இன்னிக்கு காலேஜ் முடிச்சி வீட்டுக்கு வரப்ப சாருக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. அவர ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்னு உங்க கிட்ட இன்ஃபார்ம் பண்ண வந்தேன்.." என்றாள்.

"ஐயியோ.. மாரியாத்தா.. எம்புள்ளைக்கு ஆசிடண்டா.." என்று அலறியவள்,

"நா இன்னா பண்ணுவேன்.. ஒண்ணே ஒண்ணு பெத்தேன்.. அவனும் அத்துகினு பூட்டானே.." என்று பெருங்குரலில் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

இவளுடைய ஒப்பாரியைக் கேட்டு அங்கே கூட்டம் கூடி விட, காவேரியின் வயதொத்த சரசு போன்ற மற்ற பெண்கள் அவளுடன் கூட்டு சேர்ந்து,

"ஐயோ பூச்சாண்டீ! உன்ன தண்ணி லாரிக்காரன் அட்சினு போனானோ.. இல்ல நீயா எதுலனா இட்சினு போனீயோ.." என்று ஒப்பாரியை தொடர்ந்தார்கள்.

தகவல் சொல்ல வந்த சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

"ஐயோ! பிச்சாண்டி சார் உயிரோடதான் இருக்காரு.. அவருக்கு ஒண்ணுமில்ல.." என்று அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

"ஏய்! ஏய்! த.. ச்சீ கய்த! வாயக் கயிவு.. புள்ள நல்லாதான் கீறான்.. சொம்மா ஒப்பாரி வச்சிகினு.." என்று காவேரியை அதட்டி அடக்கிய அவள் கணவன் முத்து, சக்தியைப் பார்த்து,

"நீ சொல்லு பாப்பா!" என்று கேட்டான்.

பிச்சாண்டி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை பற்றிய விவரங்களைக் கூறிய சக்தி அவர்களை கையோடு அங்கு அழைத்துச் சென்றாள்.

மகனைப் பார்த்த காவேரி மீண்டும் தன் பிலாக்கணத்தைத் தொடங்க, நர்ஸ் வந்து அவளை அதட்டி அடக்கினாள்.

"பிச்சாண்டி சார் கொஞ்ச நாள் நல்ல காத்தோட்டமான இடத்தில ரெஸ்ட் எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. நீங்க தப்பா எடுத்துக்கலன்னா எங்க வீட்டுல நா தனியாதான் இருக்கேன்.. நீங்க சார கூட்டிட்டு எங்க வீட்டுல வந்து கொஞ்ச நாள் தங்கிக்கங்க.. சாருக்கு உடம்பு சரியாகற வரைக்கும்.. ப்ளீஸ்!" என்று காவேரியிடமும் அவள் கணவன் முத்துவிடமும் கேட்டாள்.

முதலில் மறுத்த முத்து காவேரி கொடுத்த அழுத்தத்தினால் ஒப்புக் கொண்டான்.

இரண்டு நாட்கள் மருத்துவமனை வாசத்துக்குப் பின் மகன் பிச்சாண்டியை அழைத்துக் கொண்டு சக்தியின் வீட்டுக்குச் சென்றார்கள்.

சிறிய வீடாக இருந்தாலும் நல்ல வசதியாக இருப்பதாகவே உணர்ந்தாள் காவேரி.

"பாருங்க.. நல்ல மெத்து மெத்துன்னு பெட்டு.. குளுகுளுன்னு ஏசி காத்து.. கொழா வசதியோட வூடு.. கனவுல கூட இப்டி ஒரு வூட்ட நம்ளால நென்ச்சி பாக்க முடியுமா? கொஞ்ச நாள் நம்மளும்தான் இந்த வசதிய அனுபவிச்சிக்கலாமே.." என்றாள்.

"ம்.. ம்.." என்று சொன்னாலும் முத்துவின் மனதில் ஏதோ நெருடியது.

ஆனால் அவன் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

சிக்கன் பிரியாணி தொட்டுக் கொள்ள மட்டன் குருமா எறா தொக்கு என்று அவர்களுக்கு சாப்பிட வகை வகையாக ஆடர் செய்தாள்.

"சாப்பிடுங்க ஆன்ட்டீ! அங்கிள்! சாப்பிடுங்க!" என்று அன்பாகக் கூறியவளைப் பார்த்து கரிசனத்துடன் புன்னகைத்தாள் காவேரி.

"நீ ஆரு மா.. எங்களுக்கு இவ்ளோ உதவி செய்யற.." என்று கேட்டாள் காவேரி.

"நீ ஏன் பாப்பா இந்த வூட்ல தனியா கீற? அப்பாம்மால்லாம் எங்க?" என்று கேட்டான் முத்து.

"எங்க அம்மாவும் அப்பாவும் டாக்டர்ஸ்.. ரெண்டு பேரும் ஒரு மெடிக்கல் கான்ஃபரன்ஸ் அட்டன்ட் பண்ண மும்பை போயிருக்காங்க.. அது மட்டுமில்ல.. எங்க வீடு மதுரையில இருக்கு.. இது நா படிக்கறதுக்காக இங்க சென்னையில வீடு எடுத்து தங்கியிருக்கேன்.. அதனாலதான் வீடு இவ்ளோ சின்னதா இருக்கு.. மதுரையில எங்க வீடு ரொம்ப பெரிசு.." என்றாள் சக்தி.

"அப்டியா கண்ணு.." என்று வியந்தாள் காவேரி.

"நா கீழ விழறப்ப நீ தான் என்ன காப்பாத்தினியா?" என்று கேட்டான் பிச்சாண்டி.

"ஆ.. ஆமா சார்.. வந்து.. நீங்க அடிபட்டு கீழ விழுந்தப்ப நா பாத்து என் ஃப்ரண்ட்ஸ்க்கு கால் பண்ணினேன். அவங்கதான் ஆம்புலன்ஸ் வரவழைச்சாங்க.." என்றாள்.

'இல்லயே.. நானா கீழ விழலயே.. யாரோ என்ன கீழ தள்ளி விட்ட மாதிரி இருந்ததே.. நா பிரிட்ஜ் மேலதானே நின்னுட்டிருந்த ஞாபகம்.. நா ஏன் பிரிட்ஜ் மேல ஏறி நின்னேன்.. ஆனா நா பார்க்லதானே நின்னுட்டிருந்தேன்.. அந்த பிரிட்ஜ்க்கு எப்டி போனேன்..' என்று தனக்குள் சிந்தித்து குழம்பிக் கொண்டிருந்தான் பிச்சாண்டி.

அன்றிரவு எல்லாரும் உறங்கிவிட்டனர் என்று உறுதி செய்து கொண்ட சக்தி, தன் வீட்டு மொட்டை மாடிக்கு பூனை போல சென்றாள்.

தன் கைப்பேசியில் யாரையோ அழைத்தாள்.

".."

"ஆமா சார்.. நீங்க சொன்ன மாதிரி பிச்சூவையும் அவன் பேரண்ட்ஸையும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.."

".."

"இல்ல சார்.. அவங்கம்மாவுக்கு எந்த சந்தேகமும் வந்த மாதிரி தெரீல.. அவங்க என் வீட்டு ஏசிய பார்த்தே ஆஃப் ஆகிட்டாங்க.. அவங்கப்பாவுக்கு லைட்டா டவுட் வந்திச்சி.. பிரியாணியையும் லெக் பீசையும் வாங்கி குடுத்து அவரயும் ஆஃப் பண்ணிட்டேன்.. பிச்சூ என்ன நம்பலையோன்னு சின்ன டவுட்.. ஆனாலும் வேற ஏதோ சொல்லி அவன டைவர்ட் பண்ணிட்டேன்.." என்றாள் சக்தி.

".."

"இல்ல சார்! நா அலர்ட்டா இருக்கேன் சார்.."

".."

"ஓகே சார்.." என்று கூறி தன் கைப்பேசியை அணைத்தாள்.



- தொடரும்....
 
Top