Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 20
மறுநாள் காலை சூரஜ் பல வேலைகள் உள்ளதென்று பட்டியலிட்டுக்கொண்டு அலுவலகம் கிளம்பினாலும் செல்வி இல்லாத வெறுமை அவனை தாக்கத் தொடங்கியிருந்தது. அதன் தாக்கம் அவனுடைய அலுவலக வேலைகளை வெகுவாக பாதித்தது.
கடுகடுப்பான மனநிலையில் மந்தமாக வேலை செய்து கொண்டிருந்தவனை அவனுடைய தங்கையும் தன் பங்குக்கு சீண்டுவது போல கைபேசியில் அழைத்தாள்.
"பையா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!"
"சொல்லும்மா!"
"நேர்ல வரேன்! டைம் இருக்குமா?"
"வா! உனக்கில்லாத டைமா! லஞ்ச்க்கு அப்புறம்! மூணு மணிக்கு பேசற மாதிரி வா! பத்திரமா வா!"
"சரி!"
சொன்னது போல மூன்று மணிக்கு அவனுடைய அலுவலகத்தில் இருந்தாள்.
"சொல்லும்மா! சாப்டியா?!"
"ம். நீங்க சாப்டீங்களா?"
"ம். சாப்டேன்! என்ன விஷயம்?"
"ம்! நான் ஒண்ணு சொல்வேன்! கோபப் படக்கூடாது!"
"எனக்குத் தெரியும்! நீ மேல படிக்க யூஎஸ் போகணும்! அதுக்குதானே வந்திருக்க! தாராளமா படி! நான் எல்லா ஏற்பாடும் பண்ணித் தரேன்! உன் படிப்பு என் பொறுப்பு!"
அவன் பேசுவதை பொறுமையாய்க் கேட்டுக் கொண்டிருந்தாள். குடும்பப் பொறுப்பை தோள் மேல் சுமப்பதால் அவன் தன் மனைவியின் பொறுப்பை மறந்துவிட்டான் என்று நினைத்துக் கொண்டாள்.
"சரி! தேங்க்ஸ்! என் படிப்பு உங்க பொறுப்பு! நீங்க சந்தோஷமா ஏத்துக்கறீங்க! ஆனா உங்க மனைவியின் சந்தோஷத்துக்கு யார் பொறுப்பு ஏத்துப்பாங்க!"
"ஏன்? அவளுக்கென்ன? நல்லாதானே இருக்கா?"
"அவங்க நல்லா இருந்தா அம்மா என்கிட்ட அவங்கள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகலாமான்னு கேட்டிருக்க மாட்டாங்க!"
"அவ உடம்புக்கு என்ன சுட்கி?!" பதறினான்.
"ஏன் உங்களுக்கு தெரியாதா?"
"ஐயோ! தெரியாது! என்னாச்சு என் டமிலுக்கு!"
"ஒண்ணும் ஆகல! ஒண்ணுமே ஆகல! அதான் பிரச்சனை!"
"கொஞ்சம் புரியற மாதிரி சொல்லேன்!"
"பையா! என் படிப்புக்கு, விராட் பையாவோட கரீருக்கு அம்மா அப்பாவோட செலவுக்கு எல்லாம் பொறுப்பு எடுத்த வரைக்கும் போதும்! இனிமே பாபியோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க! உனக்கில்லாத டைமான்னு எனக்கு டைம் ஒதுக்கறீங்க! அவங்களுக்கு டைம் ஒதுக்க மனசில்லயா? லவ் பண்ணிதானே கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அவங்களுக்கு என்ன வேணுமோ அதையும் நீங்கதானே குடுக்கணும்! ஒரு புருஷனா அவங்களுக்கு என்ன தேவைன்னு பாத்து அத நிறைவேத்தற வழியப் பாருங்க! அவங்க கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து நம்மளுக்காக எல்லாம் பண்றாங்க! ஆனா நீங்க அவங்கள மறந்துட்டீங்க! உங்களுக்கு குழந்தை பிறக்கலன்னு அவங்களதான் எல்லாரும் கேள்வி கேக்கறாங்க! பாவம் பாபி! உங்கள மனசில நெனச்சதுக்காக அவங்கள நீங்க கொண்டாட வேணாம்! அட்லீஸ்ட் மட்டம் தட்டாமலாவது இருக்கலாம்ல! போதும் இந்த ஆஃபீஸ கட்டிகிட்டு நீங்க அழுதது. பாபிய வெளிய கூட்டிட்டுப் போங்க! சந்தோஷமா அவங்க கூட குடித்தனம் பண்ணுங்க! அவங்க சந்தோஷமா இருந்தாதான் நம்ம குடும்பம் விளங்கும்! நான் சின்ன பொண்ணுதான்! ஆனா அவங்களோட மன வருத்தம் என்னன்னு எனக்கு புரியுது! புருஷனா இருந்தும் உங்களுக்கு புரியலயா?"
சூரஜுக்கு மண்டையில் ஆணி அடித்தது போல இருந்தது!
'அடக் கடவுளே! நான் என் டமிலை சுத்தமா கவனிக்கவே இல்லயே! அவ வருத்தமா இருக்காளா? எனக்கு தெரியலையே!'
"நான் கிளம்பறேன்!"
"ம்!"
"பாபிய உண்மையாவே லவ் பண்றீங்கன்னா தினமும் வீட்டுக்கு சீக்கிரம் வாங்க! அவங்க கூட குடும்பம் நடத்துங்க!" சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
சூரஜுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.
'சின்னப் பொண்ணு வந்து சொல்ற மாதிரி ஆயிடுச்சா என் நிலைமை!' என்று நினைத்தான்.
அவன் கைபேசி மீண்டும் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தான். அவன் தம்பி விராட் அழைத்தான்.
"சொல்லு விராட்! ட்ரிப்பெல்லாம் எப்டி இருக்கு?"
"நல்லா இருக்கு பையா!" விராட்டின் குரல் கொஞ்சியது!
'உனக்கு கூட குரல் கொஞ்சுமா?' என்று நினைத்தான் சூரஜ்!
"ஆனந்தி என்ன சொல்றா?"
"ம்!" வெட்கத்துடன் இழுத்தான் விராட்.
'அவன் வெட்கப்படறது இங்க தெரியுதே' என்று நினைத்து சிரித்துக் கொண்டான் சூரஜ்.
"சரி! சொல்லு எதுக்கு கால் பண்ணின?"
விராட்டின் கொஞ்சிய குரல் கடுமையாக மாறியது.
"நீ ஏன் இப்டி பண்ற?"
"நான் என்னடா பண்ணினேன்?"
'அதுக்குள்ள குரல மாத்திட்டானே! போலீஸ்காரன்னு நிரூபிக்கறான்.'
"கரெக்ட்தான்! நீதான் ஒண்ணும் பண்ண மாட்டேங்கறியே!"
"நீ என்ன சொல்லணும் நெனக்கிறியோ, அத நேரடியா சொல்லு! எனக்கு ஆஃபீஸ்ல நெறைய வேலை இருக்கு!" கடுப்பானான்.
"நான் நேரடியா சொல்றேன்! நீ பாபியை விரும்பிதானே கல்யாணம் பண்ணிகிட்ட! அப்றம் ஏன் அவங்கள இப்டி பழி வாங்கற! உன்ன லவ் பண்ணின ஒரே பாவத்துக்காக அவங்க எல்லா கொடுமையும் அனுபவிக்கணுமா!"
'இவனுமா!'
"என்ன விராட்!?" எதையோ சொல்ல ஆரம்பித்தான் சூரஜ்.
"நான் சொல்லி முடிச்சிடறேன்! நீ ஏன் குழந்தை வேணாம்னு முடிவு பண்ணின?" விராட் கேட்டான்.
சூரஜ் அதிர்ந்தான்!
"அது உனக்கெப்டி தெரியும்? டமில் சொன்னாளா?"
"அவங்க சொல்வாங்களா? நானேதான் கண்டு பிடிச்சேன். நீயும் பாபியும் ஹனிமூன் போன மறுநாள் என்னோட பனியன் காணல! உன் பனியன் என் ஷெல்ஃபில இருந்தது. சரி எப்பவும் போல அம்மாவுக்கு அடையாளம் தெரியலன்னு நெனச்சு உன் ரூம்ல வந்து என் பனியன தேடும் போது ஷெல்ஃபில இருந்து நீ யூஸ் பண்ணனும்னு வாங்கி வெச்சது.. கீழ விழுந்தது. பாத்துட்டு எடுத்து வெச்சிகிட்டேன். முதல்ல பாபி மேலதான் கோவம் வந்தது. பாபிதான் குழந்தை வேணாம்னு உன்ன கம்ப்பல் பண்ணினாங்களோன்னு. ஆனா அப்றம் நீதான் கல்ப்ரிட்னு தெரிஞ்சுகிட்டேன்."
"விராட்.. அது.."
"உனக்கென்ன மனசில பெரிய தியாகின்னு நெனப்பா?! ஏன் நான் தீபிகாவுக்கு அண்ணன் இல்லையா! இல்ல.. உன் கஷ்டத்த நான் ஷேர் பண்ணிக்க மாட்டேனா? உன் கஷ்டத்த உன் கூடப் பொறந்த தம்பி கிட்ட சொல்ல மாட்டியாம்! ஆசப்பட்டு கட்டிக்கிட்டு வந்தவங்க கிட்ட சொல்வியாம்! நம்ம குடும்பத்துக்காக வெளிலேந்து வந்தவங்க தியாகம் பண்ணனுமாம்! இது எந்த வகைல நியாயம்! சரி! தள்ளிப் போட்டுட்ட! முடிஞ்சி போச்சி! இப்பதான் எல்லா பிரச்சனையும் தீந்துடுச்சுல்ல! அப்றம் ஏன் அவங்கள இப்டி தள்ளி வெச்சு கொடுமை பண்ற!"
"விராட் ப்ளீஸ்!"
"இவ்ளோ நாள் அப்பா இப்டிதான் ஒருத்தர பாத்துகிட்டு அடுத்தவங்கள அம்போன்னு விட்டுட்டாரா?"
".." பதிலில்லை.
"உன்னப் பாக்க அவங்க எவ்ளோ ஏங்கினாங்க! நீ அவங்கள பாக்க எவ்ளோ ஏங்கின! பக்கத்தில வந்து பாத்தப்றம் போதும்னு தோணிடுச்சா? நீ யூஎஸ்லேந்து வந்தப்றம் அவங்க பழைய மாதிரி சந்தோஷமா ஆய்டுவாங்கன்னு நெனச்சேன்! ஆனா முன்ன விட மோசமாதான் ஆய்ட்டாங்க!"
".." சூரஜ் மௌனமாக அழுதான்.
"பேசு பையா! வாயடச்சு போச்சா? அவங்க சிரிச்சி எவ்ளோ நாள் ஆச்சுன்னு உனக்கு தெரியுமா? கடைசியா பாபி சிரிக்கறத எப்ப பார்த்த?"
".." விராட் கேட்கும் எந்தக் கேள்விக்கும் சூரஜிடம் பதிலில்லை.
"நீ குழந்தை பெத்துக்கறத தள்ளிப் போட்டது தெரியாம அம்மா பாபியை குத்தம் சொல்றதக் கேக்க மனசு வலிக்குதுடா! ஏன்? நானுமே அவங்கதான் சுயநலமா நடந்துக்கறாங்கன்னு நெனச்சி அவங்கள திட்டிட்டேன். அக்கம் பக்கத்தில இருக்கறவங்க அவங்கள தன்னோட வீட்டு ஃபங்க்ஷனுக்கு வராதன்னு சொல்லிட்டு போறாங்கன்னு உனக்கு தெரியுமா?" என்று கோபமாகக் கேட்டான் விராட்.
"வாட்?" என்று அதிர்ந்தான் சூரஜ்.
"ஒரு பொண்ணா இருந்துகிட்டு பாபியோட கஷ்டம் நம்ம அம்மாவுக்கே புரியல! உனக்கெங்க புரியப் போகுது? அவங்க நமக்காக எல்லாம் செய்றாங்க! ஆனா நீ அவங்கள மறந்துட்ட! இதோ! எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. நான் உன்ன மாதிரி தள்ளி எல்லாம் போட மாட்டேன். நாளைக்கே ஆனந்தி உண்டானா, செல்வி பாபி மனசு என்ன பாடுபடும்? கொஞ்சமாவது யோசிச்சியா?"
"டேய்!"
"நாங்க ஹனிமூன் கிளம்பும்போது பாபி ஆனந்திகிட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியுமா? ஆனந்தி! உன்னத் தவிர வேற யாரக் கல்யாணம் பண்ணிகிட்டிருந்தாலும் இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்க மாட்டேன்னு விராட் நெனக்கணும்னு சொல்லி அனுப்பியிருக்காங்க! ஆனந்தி என் கிட்ட சொன்னா! இத அவங்க அட்வைசா சொல்லி இருக்காங்கன்னா, அவங்களும் இததான் ஃபாலோ பண்றாங்கன்னு அர்த்தம்! அவங்களத் தவிர வேற யார் பாபியா வந்திருந்தாலும் நம்ம எல்லாம் இவ்ளோ சந்தோஷமா இருந்திருக்கவே முடியாது! இது உண்மை பையா!"
".."
"பையா! கடைசியா ஒரு வார்த்தை சொல்றேன்! போனதெல்லாம் போகட்டும்! குடும்பத்த பாக்கற அதே நேரத்தில உன்னோட குடும்பம் நடத்த வந்தவங்களையும் கவனி! அவங்க சந்தோஷமா இருந்தாதான் நம்ம குடும்பம் விளங்கும்! நம்ம குடும்பம் விளங்கணுமா வேணாமாங்கறது உன் கைலதான் இருக்கு! நான் வெச்சுடறேன்!" சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் வைத்தே விட்டான்.
சூரஜ் மௌனமாக அழுதான்.
ஒரு பக்கம், 'டமிலை நான் மறந்துதான் போனேன்!' என்று நினைத்தான். மறு பக்கம் சந்தோஷப்பட்டான்.
'என் குடும்பத்தினர் எல்லாரும் அவளை கொண்டாடுகிறார்கள்.. என் சாய்ஸ் தப்பாது..' என்று நினைத்தான்.
திடீரென்று, 'என் சாய்ஸ் தப்பாது! ஆனா அவ சாய்ஸ்?!' என்று தோன்றி பகீரென்றது. அன்று செல்வி சொன்னது நினைவுக்கு வந்தது.
"ஐயோ! இவளப் போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேனே நீங்க நெனக்கக் கூடாதுல்ல!!"
'நான் இப்ப நடந்துக்கறத வெச்சு அவ என்ன இப்டி நெனச்சுட்டான்னா?!'
'ஐயோ! இவரப் போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேனே! அப்டீன்னு அவ நெனக்க கூடாது. என்னப் பத்தி அவ அப்டி நெனக்கவே கூடாது.' என்று நினைத்தான். அவனுக்கு பதற்றமாக இருந்தது.
சூரஜ் செல்வியிடம் அன்பாக நடந்து கொள்வானா?
மனைவியின் பிரிவில் ஏங்கி
மனம் வாடி நின்ற மன்னன்
மங்கையவள் தன் வாழ்வில்
நீக்கமற நிறைந்து நிற்கும்
உண்மை தனை உணர்ந்ததும்
அன்புடன் நெகிழ்ந்து நின்றான்!
மாற்றம் எனும் தென்றல் இனி
அவன் வாழ்வினில் வீசிடுமோ?
தங்கையும் பேச வந்தாள்!
தவறையுமே எடுத்துரைத்தாள்!
மனைவியை நீ மறந்துவிட்டாயென
தமையனைக் கடிந்து கொண்டாள்!
தங்கையின் கல்வி பற்றி
அண்ணனும் அக்கறை காட்ட
மனைவியின் ஆனந்தமாக நீயினி
அவள் வாழ்விலே நில் என்றாள்!
தம்பியும் சினந்தான் அண்ணனிடம்!
பெரும் தியாகியோ நீயெனக் கேட்டான்!
தவறுகள் செய்கிறாய் என்றவனும்
வசந்தத்தை வரவேற்கச் சொன்னான்!
மன்னவனும் குழம்பி நின்றான்!
மனைவியின் அருமை உணர்ந்து
மனநிலையை மாற்றிக் கொள்வானோ?
மகிழ்ச்சியில் திளைத்திடுவானோ?
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?