Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 23
சூரஜ் கண்விழித்தபோது அருகில் செல்வி இல்லை! மணி பார்த்தான். எட்டே முக்கால் என்று காட்டியது. மெதுவாய் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்து வந்தான். ஹால் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் அவனுக்கு பாவமாயிருந்தது.
'இவ தூங்கி நான் பாத்ததேயில்லையே! இப்படி ப்ரக்ஞையே இல்லாம குழந்தை மாதிரி அதுவும் ஹால் சோபால தூங்கறான்னா.. இப்பதான் இவ இயல்பா இருக்கா.. பாதுகாப்பா ஃபீல் பண்றான்னு அர்த்தம்.' என்று தோன்றியது. இப்படியொரு எண்ணம் தோன்றியதும் அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது.
'இவ்ளோ நாளா அவளுடைய இயல்பைக் கூட மறந்து போகச் செஞ்சுட்ட! அவ உன்ன கட்டிக்கிட்டப்றம் பாதுகாப்பா உணரவேயில்லை! கடமையைக் காட்டி அவளக் கட்டிப் போட்டுட்டயேடா சூரஜ்! இது நியாயமா? அவ உன்ன நெனச்சதத் தவிர வேறு என்ன பாவம் பண்ணினா? அவ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கா.. என்னிக்காவது ஒருநாள் உன் வீட்ல அவ இப்டி சிரிச்சி நீ பாத்திருக்கியா? உன்னால அவள சிரிப்பைக் கூட தொலைச்சிட்டாடா! போனதெல்லாம் போகட்டும். இனிமேலாவது அவள அவளா இருக்க வெய்.. நல்லா வாழ வெய்!' என்று அவன் மனம் அவனை இடித்துரைத்தது.
'ஆமா.. இனிமே என் தமிழின் சந்தோஷம் மட்டும்தான் என் குறிக்கோள்!' என்று மனதுக்குள் சபதம் போட்டுக் கொண்டான்.
அவள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். அவளைத் தொந்திரவு செய்ய மனமில்லாமல் அவன் சென்று பல்துலக்கி குளித்துவிட்டு வந்தான்.
கிரிதரன் வேலைக்குக் கிளம்பினார். மருமகனிடம் தலையை மட்டும் அசைத்துவிட்டு சென்றுவிட்டார்.
மங்கை மருமகனுக்கு காப்பியை எடுத்து வந்தாள். மணி ஒன்பதரை ஆகியது. சுருண்டு படுத்திருப்பதால் அசௌகரியமாக உணர்ந்து மெதுவாக முழித்துக் கொண்டாள். இன்னும் தூக்கம் கலையாதவளாக எழுந்து அமர்ந்தாள்.
"தமிழ்! உள்ள போய் படுத்துக்கோ!" என்றான்.
"ம்!" தூங்கியாடுபவளை மெதுவாய் எழுப்பி உள்ளே அழைத்துச் சென்று படுக்க வைத்தான்.
"தூங்கு தமிழ்!" அவன் சொல்லும் போதே திரும்பவும் தூங்கிவிட்டாள்.
சூரஜ், பாட்டியிடம் அளவளாவினான். பாட்டிக்கு மங்கை சேவை செய்யும் போது சமையலை கவனித்தான். காய் நறுக்கிக் கொடுத்து உதவினான். ஆனால் காலைச் சிற்றுண்டி மட்டும் சாப்பிடவே மாட்டேன் என்று மறுத்துவிட்டான்.
"அவளும் இன்னும் சாப்பிடலயே அத்த! நியாயமா நான் காபியே குடிச்சிருக்கக் கூடாது! உங்களுக்காக குடிச்சேன்! அவ எழுந்து வரட்டும் அத்த! ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடறோம்!" என்று கூறினான்.
செல்வி பத்தரை மணிக்கு மெதுவாய் எழுந்து வந்தாள். ஆனால் அப்போதும் அவளுக்கு முழுதாகக் தூக்கம் கலையவில்லை. கொட்டாவி விட்டபடி வந்து ஹால் சோபாவில் வந்து அமர்ந்தாள்.
"ம்மா! செம்மையா பசிக்கிதும்மா!"
"குட் மானிங் தமிழ்!" சூரஜ் அவளருகில் வந்து அமர்ந்தான்.
"குட் மானிங்!" சொல்லிக் கொண்டே திரும்பவும் கொட்டாவி விட்டு அவன் தோளிலேயே தலையை சாய்ந்து கொண்டாள்.
அவனுக்கு அவளது செய்கை புதிதாய் இருந்தது. அவன் மனதுக்கு இதமாய் இருந்தது.
'நா இவ்ளோ நாள் இப்டிதான் இருந்திருக்கணும்.. இனிமே இருப்பேன்.' என்று நினைத்தபடியே அவள் கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டான்.
"செல்விம்மா! குளிச்சிட்டு வாடா! சாப்பாடு ரெடியா இருக்கு! சாப்பிடலாம்!" மங்கை அழைத்தாள்.
"ம்! போறம்மா!" சொன்னாளே தவிர எழுந்து கொள்ளாமல் சூரஜின் தோளில் தலை சாய்த்தபடியே அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
"போ! குளிச்சிட்டு சாப்ட வா! மாப்ளையும் உனக்காக சாப்டாம வெயிட் பண்றார்!" என்றாள் மங்கை!
"இருங்க அத்த! அவ மெதுவாவே வரட்டும்! எனக்குப் பசிக்கல!" என்றான் அவன்.
இதைக் கேட்டு தெளிவடைந்தவள்,
"ஏன் சூரஜ்! சாப்பட்றதானேப்பா!" என்று செல்லமாய் கோபித்துவிட்டு எழுந்து குளிக்கப் போனாள்.
இருபது நிமிடங்களில் குளித்து தலையில் பூந்துவாலையைக் கட்டிக் கொண்டு சிவப்பு நிற நைட்டியில் வந்தவளைக் கண்டதும் சூரஜுக்கு தலைசுற்றியது.
'இப்டி ஒரு அழகோவியம் என் கண்ணு முன்னால நடமாடிட்டிருக்கா.. நான் அந்தக் காய்ஞ்சு போன ஆஃபீஸ்ல அழுது வடியற மூஞ்சிங்களப் பாத்துகிட்டு என் வாழ்க்கைய வீணாக்கிட்டிருந்தேனே!' தன் தலையில் மானசீகமாக தட்டிக் கொண்டான்.
'இவ உன் பொண்டாட்டிதானே?! இவள இதுக்கு முன்னாடி நைட்டில பாத்திருக்கியா?' தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
'அவ கிட்ட நைட்டி இருக்கா இல்லையான்னு கூட தெரியாதே!?'
'டேய்! உனக்கு வெட்கமால்ல!' தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
அவள் வந்ததும், இருவரும் மங்கையுடனும் பாட்டியுடனும் அமர்ந்து சாப்பிட்டனர்.
"தமிழ்! நம்ம எங்கியாவது வெளிய போயிட்டு வரலாமா? உனக்கு டயர்டா இருந்தா வேணாம்!" மெதுவாகக் கேட்டான்.
"போய்ட்டு வரலாங்க! இருங்க டென் மினிட்ஸ்ல கிளம்பி வரேன்!" என்று கூறி தலையில் கட்டியிருந்த ஈரத்துவாலையை அவிழ்த்தபடியே உள்ளே சென்றாள்.
"எனக்கும் ட்ரஸ் எடுத்துக் குடு! நானும் மாத்திக்கறேன்!" என்று கூறி அவள் பின்னாலேயே அவனும் வந்தான்.
கதவை சாத்திவிட்டு பின்னாலிருந்து அவள் இடுப்பை கட்டியணைத்து அவள் கூந்தலில் வாசம் பிடித்தான்.
"ம்!" அவள் குரல் கொஞ்சியது. அவன் கை வளைவிலேயே இருந்தபடி அவனைப் பார்த்த மாதிரி திரும்பிக் கொண்டாள்.
"ஹூம்.. தமிழ்! நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?" அவள் கன்னத்தில் இதழ்களைப் பதித்து எடுக்காமலேயே பேசினான். அவன் முறுக்கு மீசை கன்னத்தில் குறுகுறுக்க அவள் நெளிந்தாள்.
"பயங்கர ரொமான்டிக்கா இருக்கீங்க? என்ன விஷ்யம்?" மெல்லிய குரலில் கேட்டாள்.
"பின்ன! நீ இப்டி ஹாட்டா வந்து கண்ணு முன்னால நின்னா எங்களுக்கும் மூடு வரும்ல.." அவள் கழுத்து வளைவில் முகம் பதித்து மூச்சிழுத்தான்.
"வெளிய போலாமான்னு கேட்டுட்டு இப்டி பண்ணினா எப்டி? இங்கயே கொஞ்சிகிட்டு இருந்துடலாமா?" அவன் மார்பில் முகம் புதைத்தபடியே சிரித்தபடி அவள் கேட்ட தினுசில் அவன் மயங்கிப்போனான்.
அவள் முகத்தை தன் கையால் நிமிர்த்தினான்.
"ஒரு கிஸ் குடேன்!" அவள் மூக்கில் தன் மூக்கை இடித்தபடி கண் நிறைய காதலுடன் கேட்டான்.
மறுக்காமல் அவன் கேட்டதைக் கொடுத்தாள். பதிலுக்கு அவனும் முத்தமிட்டு அவளை விடுவித்தான்.
"நீங்க ட்ரஸ் மாத்திக்குங்க! நான் சிடுக்கெடுத்துட்டு வரேன்!" அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்துவிட்டு சீப்பை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவன் ட்ரஸ் மாற்றிக் கொண்டு ஹால் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான். போன் செய்து வாடகைக் காருக்கு சொன்னான்.
அவள் ட்ரஸ் செய்து கொண்டு வந்தாள். இளஞ்சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தாள். எப்போதும் பின்னலிட்டிருக்கும் தலை இப்போதேு ஈரமாக இருப்பதால் மலையாளப் பெண்கள் போல தலை விரித்து விட்டு, இரண்டு பக்கமும் காதருகே இருந்து கொஞ்சம் முடிக்கற்றையை எடுத்து ஒன்றாகச் சேர்த்து க்ளிப் செய்திருந்தாள். நீளமாக மல்லிச் சரத்தை அழகாக வைத்திருந்தாள். கைப்பையை மாட்டிக் கொண்டு சார்ஜரிலிருந்து தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்து நின்றாள்.
சூரஜுக்கு ஒரு தேவதை நடந்து வருவதைப் போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று அவன் மனதுக்குத் தோன்றியது. அருகில் வந்து நின்றவளின் காதருகே கிசுகிசுப்பாய் கூறினான்.
"தேவதை மாதிரியே இருக்க!"
"ம்! செம ஃபார்மலதான் இருக்கீங்க!" என்று சொல்லி சிரித்தாள்.
"இல்லையா பின்ன!" என்று கூறி அவள் கையை தன் கையுடன் கோர்த்துக் கொண்டான்.
மங்கையிடமும் பாட்டியிடமும் சொல்லிவிட்டு வாடகைக் காருக்காக காத்திருந்தனர். கார் பத்து நிமிடங்களில் வந்தது.
இருவரும் கிளம்பி முதலில் அவள் முன்பு வேலை செய்த சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று நாராயணியை சந்தித்தனர்.
நாராயணி இருவரையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தார். அதுவும் சூரஜின் செந்தமிழுக்காக அவனை மிகவும் பாராட்டினார். சிறிது நேரம் பேசிவிட்டு வகுப்பறைகளை சென்று பார்த்தாள். குழந்தைகளுடன் விளையாடினாள். தன்னுடன் பணிபுரிந்தவர்களையும் பார்த்து அளவளாவிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
சூரஜ் அவளைத் தன்னுடைய சென்னை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கு முக்கியமான வேலையிருப்பதாகக் கூறி அவளை தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்குமாறு கூறிவிட்டுப் போனான். அரை மணியில் திரும்பி வந்தான். நண்பர்களுடன் பேசிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
இருவரும் திநகர் வந்தார்கள். அங்கிருந்த பிரபல நகைக்கடையில் அவளுக்குப் பிடித்த மாதிரி பவழம் பதித்த தங்க நகைத் தொகுப்பு ஒன்றை வாங்கினான். அந்த நகைத் தொகுப்பில், தங்க அட்டிகை அதாவது நெக்லெஸ் ஒன்று, அதற்கு இணையாக தொங்கட்டான் உள்ள தங்கக் காதணி, பட்டையான தங்க வளையல்கள் நான்கு, தங்க மோதிரம் இருந்தன. எல்லாவற்றிலும் சின்னதும் பெரியதுமாக பவழக் கற்கள் பதிக்கப் பட்டு அழகிய வேலைப்பாடுடன் இருந்தன. அருகில் இருந்த பிரபல புடவைக் கடையில் அவளுக்குப் பிடித்தமாதிரி பட்டுப்புடவை வாங்கினான். அடர்ந்த வாடாமல்லி நிறத்தில் தங்க சரிகையுடன் குந்தன் கற்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட பட்டுப் புடவை!
மணி மூன்றாகியது. எதாவது சாப்பிடலாம் என்று பெரிய ஐந்து நட்சத்திர உணவகத்துக்கு அழைத்துச் சென்றான். உணவு வகைகளை அவளிடம் கேட்டு அவளுக்குப் பிடித்தவற்றை ஆடர் செய்தான்.
வாங்கிய நகையையும் புடவையையும் அவளிடம் கொடுத்துவிட்டு,
"தமிழ்! இது இன்னும் பத்து நாள்ல வரப்போற நம்ம முதல் வருஷ வெட்டிங் அன்னிவர்ஸரிக்கு என்னோட கிஃப்ட்! உனக்கு பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.
"நீங்கதான் எனக்கு ஏற்கனவே கிஃப்ட் குடுத்திட்டீங்களே!" என்று கூறி புன்னகைத்தாள் அவள்.
"நான் எங்க கிஃப்ட் குடுத்தேன்? இப்பதானே வாங்கியிருக்கேன்!"
"நேத்திலேர்ந்து ஒரு செகண்ட் கூட பிரியாம என் கூடவே இருக்கீங்க! எனக்காக எங்கம்மாவுக்கு உதவில்லாம் செய்யறீங்க! எல்லாத்துக்கும் மேல என்னை வாய் நிறைய தமிழ், தமிழ்ன்னு என்னோட பேர தமிழ்லயே கூப்பிடறீங்களே! அதுதானே பெரிய கிஃப்ட்?" என்று கேட்டாள்.
"ஐயியோ! இது புரியாம லட்சகணக்கில செலவு பண்ணிட்டேனே?!?!" என்று அவன் குறும்பாகச் சொல்ல,
"ஐய.. அதுக்காக இத வேணாம்னு சொல்வேனா? குடுங்க.." என்று கூறி சிரித்துக் கொண்டே அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள். இருவரும் சிரித்துக் கொண்டனர்.
சிரித்துப் பேசிக் கொண்டே, தன் கைப்பேசியில் அவளைப் படம் பிடித்தான். பின்னர் அவளோடு சேர்ந்து ஒரு செல்ஃபீ எடுத்து அதைத் தன் வாட்ஸ்அப் ப்ரொஃபைலில் வைத்தான்.
ஆடர் செய்த உணவு வகைகள் வந்ததும் பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் அவனுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி வந்தது. அதை எடுத்து பார்ப்பதற்குள் அடுத்த செய்தி! அடுத்தது! அதற்கு அடுத்தது! பத்து நிமிடங்களில் பதினைந்து செய்திகள் வந்து விட்டன!
"என்ன இத்தன மெஸேஜ்! ஆஃபீஸ்லேர்ந்தா?" செல்வி கேட்டாள்.
பார்த்துவிட்டு சொன்னான்.
"ஆஃபீஸ்லேர்ந்து இல்ல! நம்ம வீட்டு போலீஸ் ஆஃபீஸர் கிட்டேந்து!"
"விராட் கிட்டேந்தா?"
"அவன் மட்டுமில்ல! சுட்கியும் அனுப்பியிருக்கா!"
"என்ன திடீர்ன்னு?"
"இரு! காட்றேன்!" என்று கூறி தன் கைப்பேசியைக் கொடுத்தான்.
விராட்,
"பையா ப்ரொஃபைல் பிக்சர் சூப்பர்!"
"பாபி எப்டி இருக்காங்க!"
"பாட்டி எப்டி இருக்காங்க!"
"பெரிய அத்த மாமா எப்டி இருக்காங்க!"
"பாபி பிக்சர்ல ரொம்ப அழகா இருக்காங்க!"
"அவங்க ஹேர் ஸ்டைல் சூப்பர்!" என்று ஆறு குறுஞ்செய்திகள் அனுப்பியிருந்தான்.
அதையே சுட்கியும் அனுப்பியிருந்தாள்.
ஆனந்தியும் ஆனந்தனும் ஆளுக்கு ஒரு செய்தி, "டிபி சூப்பரா இருக்கு!" என்று!
கடைசியாக சூரஜின் நண்பன் ஒருவனும், "டிபி சூப்பர்!" என்று அனுப்பியிருந்தான்.
அவனுடைய மொபைலை அவனிடம் கொடுத்துவிட்டுக் கேட்டாள்.
"இதுலேர்ந்து என்ன தெரியுது?"
"என்ன?"
"நீங்களும், நம்ம ரெண்டு பேரோட தம்பிங்களும் தங்கைங்களும் உருப்படியா ஒண்ணும் பண்றதில்லன்னு தெரியுது!" என்று கூறி சிரித்தாள்.
அவனும் கூடச் சேர்ந்து சிரித்தான்.
சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பி செல்வியை அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்திலுள்ள லேண்மார்க் புத்தகக் கடைக்குச் சென்றான்.
அவளுக்குப் பிடித்த புத்தகங்கள் வாங்கிக் கொடுத்த போது, அவள் சொன்னாள்;
"நீங்க வாங்கிக் குடுத்த புடவை நகைசெட்டை விட இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குங்க!" என்று.
அவளை நினைத்து அவனுக்கு வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது.
பெசன்ட்நகர் திரும்பி வரும்போது, சூரஜ் கேட்டான்.
"நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வெச்ச அந்த காபி ஷாப்க்கு போலாமா?"
"ம்! போலாம்!" கண்கள் விரிய ஆவலுடன் கூறினாள்.
வெயில் தாழ்ந்திருந்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. முன்பு வெறும் டீ காபி மட்டும்தான் விற்றனர். இப்போது ஃபாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளும் மாலை நேர சாட் வகைளும் விற்கப்பட்டன. வியாபாரத்தை பெரிது படுத்தியிருந்தனர். இடத்தில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தாலும் மேஜை நாற்காலிகள் எல்லாம் மாற்றப்படவில்லை. அவர்கள் வழக்கமாய் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தனர். இரண்டு காபி ஆடர் செய்தனர். இருவருக்கும் பழைய நினைவுகள் வந்து மனதை வருடியது. ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அந்த நாளில் அவன் பேசிய தமிழையும் அவள் பேசிய ஹிந்தியையும் சொல்லிச் சொல்லி இருவரும் சிரித்தனர்.
"நல்லா இருக்கீங்களாக்கா?" என்று ஒரு குரல் பக்கவாட்டிலிருந்து வந்தது.
குரல் வந்த திசையில் இருவரும் திரும்பினர். ஒரு வாலிபன் நின்றிருந்தான். இருவருக்கும் அவனை எங்கயோ பார்த்த உணர்வு ஏற்பட்டது. ஆனால் யாரென்று நினைவுக்கு வரவில்லை.
"என்னத் தெர்லயாக்கா! நான் இங்கதான் முன்னாடி டேபிள் தொடச்சிகினு இருந்தேன்!" சொல்லிக் கொண்டே பக்கத்து டேபிளில் இருந்த சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களுக்கு அருகே அமர்ந்தான்.
அவன் சொன்னதும் இருவருக்கும் அவனை அடையாளம் புரிந்தது. ஆனால் அன்று ஒல்லியாய் அழுக்காய் கண்களில் ஒளியின்றி வயிறு ஒட்டி சோர்வான முகத்தோற்றத்துடன் இருந்தவன் இன்று கண்களில் ஒளியுடன் பிரகாசமான முகத்துடன் களையாக கழுத்திலும் கைவிரல்களிலும் தங்க செயின் முத்திரை மோதிரம் ராசிக்கல் மோதிரம் எல்லாம் அணிந்து கொண்டு கொஞ்சம் பூசினாற்போல உடம்புடன் வெள்ளைநிற கார்கோ சட்டை கறுப்பு லீவைஸ் ஜீன்ஸ் அணிந்து தமிழ் படங்களில் வரும் செகண்ட் ஹீரோ போல இருந்தான்.
"நீயா! என்ன ஆளே மாறிட்ட! இப்ப எங்க வேலை செய்யற! நல்ல சம்பளம் குடுக்கறாங்க போல! பாக்க ஆளே ஹீரோ மாதிரி ஆயிட்டியே!" என்றாள் செல்வி.
பேரர் இரண்டு காபி கொண்டு வந்து வைத்தான். அவனைப் பார்த்து தனக்கும் ஒன்று என்று சைகை செய்தான். பேரர் சரியென்று தலையாட்டிவிட்டுச் சென்றான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனுக்கும் காபி வந்தது கண்டு செல்விக்கு ஆச்சரியம்.
"ஹே! நாங்க காபி சொல்லி இருபது நிமிஷம் கழிச்சி கொண்டு வரான்! நீ கேட்டதும் அஞ்சு நிமிஷத்தில கொண்டு வந்திட்டானே!" என்றான் சூரஜ்.
"ஏன் ஸார் குடுக்கமாட்டான்! இல்லன்னா சீட்ட கிழிச்சிருவேன்ல! அத்த வுடு ஸார்! தமிழ் நல்லா கத்துகினீங்க போல!" என்றான்.
"நான் தமிழ் நல்லா கத்துகிட்டேன். இவ நல்லா ஹிந்தி கத்துகிட்டா! நீ சொல்லு! நீ எப்டி இவங்க சீட்ட கிழிப்ப! அப்டி என்ன வேலை செய்யற?" என்று விடாமல் கேட்டான் சூரஜ்.
"சொல்றேன் ஸார்! ரெண்டு பேரும் காபிய குடிங்க ஸார்!" என்று கூறிவிட்டு தன் காபியை எடுத்து உரிஞ்சினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்கள் காபியை எடுத்து உரிஞ்சினர். அவன் சொன்னான்.
"ஸார்! இப்ப இந்த காபி ஷாப்பு என்னுது ஸார்! அக்காங்! நான்தான் இந்த ஓட்டலோட மொதலாளி!" என்றான்.
"என்ன?" ஒரே குரலில் கேட்டனர். இருவருக்குமே தூக்கிவாரிப் போட்டது போல இருந்தது.
"எப்படி? எதாவது லாட்டரி அடிச்சுதா! இல்லன்னா யாராவது இந்த ஹோட்டல வாங்க உதவி செஞ்சாங்களா?" செல்வி கேட்டாள்.
"அதெல்லாம் ஒண்ணுல்லக்கா! எல்லாம் ஐயாவோட ப்ரெயின்!" என்றான்.
"ஏய்!?!" என்றான் சூரஜ்.
"அது வந்து.. எங்க மொதலாளி பொண்ண உசார் பண்ணிட்டேன் சார்! ஃபிகர் இப்ப என் பொண்டாட்டி! சாட் ஐடியால்லாம் என்னுதுதான். அதனால பிஸ்னஸ் நல்லா போச்சி. பய நல்லபடியா ஓட்டல வெச்சி பொழச்சிப்பான், பொண்ண பாத்துக்குவான்னு மாமனார் ஓட்டல எம்பேர்ல எழுதி வெச்சிட்டு ஊரப் பாத்து போய்ட்டாரு." என்று கூலாக கூறிவிட்டு மிச்சக் காபியை உரிஞ்சினான்.
சூரஜுக்கு அவன் பேசும் சென்னைத் தமிழ் அரைகுறையாய் புரிந்தது.
'இவனுக்கு திருமணமாகிவிட்டது. மாமனார் இந்த ஹோட்டல் வாங்க உதவி செஞ்சிருக்கார். இப்ப ஹோட்டல் இவனோடது..' என்று புரிந்து கொண்டான்.
"அடப்பாவி!" என்றாள் செல்வி.
"இன்னா வோண்மோ கேளுக்கா! இப்ப இங்க சாட் வெரைட்டில்லாம் ஆரம்பிச்சுட்டோம்! எதுனா எட்தாரவாக்கா?" என்றான்.
"இல்ல! அதெல்லாம் எதும் வேணாம்! இன்னொரு நாள் வரோம்!" என்றாள் செல்வி.
இவர்கள் பேசுவது சூரஜுக்கு சுத்தமாகப் புரியவில்லை. அதனால் அவன் ஒன்றும் பேசவில்லை.
"வாழ்த்துக்கள்! இந்த ஹோட்டல் இன்னும் பெரிசா வளரனும். அடுத்த முறை நாங்க வரும்போது ஏஸி ஹோட்டலா மாறியிருக்கணும்!" என்று சூரஜ் வாழ்த்திவிட்டு வந்தான்.
"டேங்க்ஷ் ஸார்!" என்றான் அந்த வாலிபன்.
காரில் வீட்டுக்கு வரும்போது,
"தமிழ்! அவன், உசார் பண்ணிட்டேன்னு சொன்னானே! அப்டீன்னா என்ன?" சூரஜ் கேட்க, கார் டிரைவர் இருவரையும் ஒரு மாதிரிப் பார்த்தான்.
"ஸாருக்கு இந்த ஊர் இல்லியா?"
"இல்ல. நான் மும்பை!"
"கொஞ்ச நேரம் பேசாம வரீங்களா?" என்று சூரஜிடம் சொல்லிவிட்டு டிரைவரிடம், "ஸார் ரோட்டப் பாத்து ஓட்டுங்க ஸார்!" என்றாள்.
சூரஜ் மேற்கொண்டு ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என நினைத்து அவனிடம் எதையெதையோ பேசிக் கொண்டே வந்தாள்.
வீடு வந்து வாடகைக் காரை செட்டில் செய்து அனுப்பிவிட்டு வந்தனர். கிரிதரன் வீட்டுக்கு வந்திருந்தார்.
எல்லாரிடமும் புடவையையும் நகையையும் காட்டினாள். அதைவிட புத்தகங்கள் அருமை என்று மூவருமே கூறினார்கள்.
'இவங்க குடும்பமே விசித்திரமா இருக்கு!' என்று நினைத்துக் கொண்டான் சூரஜ்.
இருவரும் சென்று முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வந்தனர்.
"தமிழ்! அந்தப் பையன் உசார் பண்ணிட்டேன்னு சொன்னானே! அப்டீன்னா என்ன?"
இதைக் கேட்டதும்,
"என்ன மாப்ள?" என்றார் கிரிதரன்.
"மாமா! நீங்க சொல்லுங்க! உசார் பண்ணிட்டேன்னா என்ன?"
செல்வி அவசரமாக சூரஜின் வாயை பொத்தினாள்.
"என்னது?" கொஞ்சம் அதிர்ந்தாலும் கடகடவென்று சிரித்தார்.
"யார் என்ன சொன்னாங்க?" என்று கேட்டார்.
"ஒண்ணுமில்லப்பா!" என்று சிரித்துவிட்டு அவள் நடந்ததைக் கூறினாள்.
"ஹா.. ஹா.. ஹா.. மாப்ள! உசார் பண்ணிட்டேன் அப்டீன்னா லவ் பண்ணி கரெக்ட் பண்ணிட்டேன்னு அர்த்தம். அந்த பையன் அவனோட ஓனரோட பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டானாம். ஓனர் பொண்ணையும் குடுத்து ஓட்டலையும் குடுத்துட்டாராம்! அதான்!" கிரிதரன் விளக்கினார்.
அவன் கடகடவென்று சிரித்தான். அவன் என்ன புரிந்துகொண்டான் என்று சொன்னான். இப்போது அவர்கள் சிரித்தார்கள்.
"நீங்கல்லாம் பேசறது புரியுது! அவன் பேசறது ஏன் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது?" சூரஜ் அப்பாவியாய் கேட்டான்.
"நல்லா கேட்டீங்க.. நாங்க பேசறது சாதாரணத் தமிழ்! அவன் பேசறது சென்னைத் தமிழ்! சென்னையின் அடையாளம்!" என்றாள்.
"ஓ! அதான் ஒண்ணும் புரியலையா?"
"சரிதான்! இங்கயே பொறந்து வளந்து பாதி நாள் அவன மாதிரி ஆளுங்களோட பழகற எனக்கே நிறைய வார்த்தைகள் சுத்தமா புரியாது." என்றார் கிரிதரன்.
"அவன் கொஞ்சமாதான் பேசினான். அதனால எனக்கு புரிஞ்சிது. இல்லன்னா எனக்கும் ஒண்ணும் புரிஞ்சிருக்காது!" என்று சொல்லி சிரித்தாள் செல்வி.
"ஆனா அதுக்கு இன்னொரு மீனிங்கும் உண்டு மாப்ள! உசார் பண்றதுன்னா திருடறதுன்னு கூட அர்த்தம். சிட்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி! ஆனா தயவு செஞ்சு இத மறந்துடுங்க! யாராவது தமிழ் நல்லா தெரிஞ்ச உங்க ஹையர் அஃபீஷியல் முன்னாடி எனக்கும் தமிழ் தெரியும்னு நீங்க இத பேசி வெச்சீங்கன்னா அவ்ளாேதான்! உங்க மானமே போய்டும்!" என்றார் கிரிதரன்.
"ஓ! இதுல இவ்ளோ விஷயம் இருக்கா!" என்றான் அவன்.
சென்னைத் தமிழையும் செந்தமிழையும் சூரஜையும் வைத்து அங்கே ஒரு நகைச்சுவை கருத்தரங்கமே நடைபெற, அங்கு பெரிய சிரிப்பலை எழுந்தது.
மன்னவனும் மங்கையும்
மகிழ்ச்சியில் திளைத்து நின்று
புதுவாழ்வு தொடங்குகையில்
இன்ப வெள்ளம் பெருகியதே!
இளையோரின் இன்பம் கண்டு
பெரியோரும் மனமகிழ்ந்து நிற்க
மன்னவனும் செல்வியையும்
தன்னுடனே அழைத்துச் சென்றான்!
காதல் முகிழ்த்த இடம் தொட்டு
காதல் வளர்ந்த பள்ளியிலும்
பெரியோரின் ஆசி பெற்று
பெருமகிழ்ச்சி கொண்டனரே!
நகைகளும் புத்தகங்களும்
நல்பட்டுப் புடவையும் அவன் பரிசளிக்க
புத்தகங்கள் தான் பிடித்தமென்று
நெஞ்சோடு அவள் அணைத்தாள்!
செல்வியின் பெற்றோரும்
புத்தகப் பரிசைப் பாராட்டினரே!
வியப்பிலே உறைந்தவனும் இந்தக்
குடும்பத்தின் சிறப்புணர்ந்தான்!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?