கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

28. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 28


விராட் - ஆனந்தி திருமணமாகி பத்து மாதங்கள் முடிந்த நிலையில் ஆனந்தி கருவுற்றாள்.

ஒரு சனிக்கிழமை மாலை நேரம்! எல்லாரும் வீட்டில் இருந்தார்கள். விராட் அன்று சீக்கிரமே வந்துவிட்டான்.

மும்முரமாக எதோ வரைந்து கொண்டிருந்த ஆனந்தி திடீரென்று மயங்கி விழுந்தாள்.

விராட் பயந்து போய் மயங்கியவளை தன் கட்டிலில் படுக்க வைத்தான்.

தீபிகா மயங்கி விழுந்த ஆனந்தியை பரிசோதித்துவிட்டு அவள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிவித்தாள்.

கௌரிக்கும் தீன்தயாளுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சூரஜ் தம்பியை தூக்கிச் சுற்றி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். செல்வி தீபிகாவை கட்டிக் கொண்டு சந்தோஷப்பட்டாள். ஆனந்திக்கு மயக்கம் தெளியவில்லை.

விராட்டுக்கும் தீபிகாவுக்கும் சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

இருவரும் யாரும் பார்க்காத நேரத்தில் மொட்டை மாடிக்குப் போனார்கள். இவர்கள் எங்கே போகிறார்கள் என்று செல்வி கவனித்துக் கொண்டிருந்தாள்.

"சுட்கி! ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கு. இன்னொரு பக்கம் கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு!"

"செல்வி பாபி பாவம்!"

"இது மாதிரியெல்லாம் உளறக்கூடாது!" என்று கூறிக் கொண்டே அங்கே வந்தான் சூரஜ்!

"பையா.. அது வந்து.." தீபிகா இழுத்தாள்.

"இங்க பாருங்க! நம்ம வீட்ல ஒரு புது குழந்தை வரப்போகுது! எவ்ளோ சந்தோஷமான விஷயம்! நம்ம எல்லாரும் அந்தக் குழந்தைய வரவேற்க தயாரா இருக்கணும். அத விட்டுட்டு கண்டத பேசக்கூடாது!" கடிந்து கொண்டான்.

"இல்லடா! உனக்கு இன்னும்.." விராட் தயங்கினான்.

"டேய்! எனக்கு உனக்குன்னெல்லாம் யோசிக்காத! நமக்கு! யார் யாருக்கு எப்ப என்ன தரணும்னு அந்த கடவுளுக்கு தெரியும்! சும்மா இதுமாதிரி தத்து பித்துன்னு உளறக்கூடாது! போ! போயி ஆனந்திகிட்ட அன்பா நடந்துக்கோ! அவ முன்னாடி இது மாதிரி பேசி வெக்காத! அவ மனசு கஷ்டப்பட்டா அது அவ வயித்தில வளர்ற குழந்தையதான் பாதிக்கும்! புரியுதா! சுட்கி! உனக்கும்தான்!"

"நல்லா சொல்லுங்க சூரஜ்!" செல்வி அங்கே வந்தாள்.

"பாபி.." விராட் அதிர்ந்தான்.

"விராட்! நீங்க மனசு வருத்தப்படற அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு? உங்க அண்ணன் சொன்னது மாதிரி நமக்கு என்ன தரணும்னு கடவுளுக்கு நல்லா தெரியும்!"

"ஆனா பாபி.."

"தமிழ்ல திருவாசகம் அப்டின்னு ஒரு செய்யுள் தொகுப்பு இருக்கு. சிவபெருமான் மேல மாணிக்கவாசகர் பெருமான் பாடின பாடல்களின் தொகுப்பு. அதுல ஒரு பாட்டு இருக்கு தெரியுமா!

"வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்.
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்

அதுவும் உன்றன் விருப்பு அன்றே."

அப்டீன்னு! நமக்கு இன்ன பொருள் மேல ஆசை வரணும்னு கூட அந்த சிவபெருமான்தான் முடிவு பண்ணனும்! அவர் நீ இது மேல ஆசைப்படுன்னு கட்டளையிட்டாதான் நமக்கு அது மேல ஆசையே வரும்! அப்டி இருக்கும் போது எப்ப எத யாருக்கு தரணும்னு அவருக்கு தெரியும். அதனால கண்டதையும் நெனச்சு குழம்பக்கூடாது! புரிதா!"

விராட் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"டேய்! என்னடா! குழந்தை மாதிரி!" சூரஜ் தம்பியை சமாதானம் செய்தான்.

"விராட்! கண்டதையும் நெனக்காம நல்லத மட்டும் நெனக்கணும்! ஆனந்தி மயக்கம் தெளிஞ்சதும் உங்களதான் தேடுவா! போங்க!"

"சரி பாபி!" மனம் தெளிந்தவனாய் கீழே இறங்கினான்.

சூரஜ் கண்ணீருடன் நிற்கும் தங்கையை அழைத்து கண்களைத் துடைத்துவிட்டான்.

"சுட்கி! எல்லாம் சீக்கிரமே சரியாய்டும்! டோன்ட் வொர்ரி! ஆனந்தி கன்சீவ் ஆயிருக்கான்னு செக்அப் பண்ணி பண்ணி சொன்ன மாதிரி எனக்கும் சொல்லுவ! ஓகேவா!" அவள் காதில் சொன்னாள் செல்வி.

"கண்டிப்பா பாபி!" கண்களைத் துடைத்துக் கொண்டு சிரித்தபடி சொன்னாள்.

"சரி வாங்க! கீழ போலாம்!" செல்வி கணவனையும் நாத்தனாரையும் அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.

விராட் தன்னுடைய அறையில் மயக்கத்தில் இருந்த ஆனந்தியின் அருகில் வந்து அமர்ந்தான். மயங்கிக் கிடக்கும் மனைவியின் தலையை அன்போடு கோதிவிட்டான். அவனுடைய ஸ்பரிசத்தில் அவள் முழித்துக் கொண்டாள். அருகில் கணவனைக் கண்டதும் வெட்கத்துடன் முகத்தைக் கையால் மூடிக் கொண்டாள்.

விராட் அவள் கையை விலக்கி மென்மையாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

"எவ்ளோ சந்தோஷமான செய்தி சொல்லிருக்க! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடி! ராட்சசி! என் செல்ல ராட்சசி!"

அவள் மெலிதாகப் புன்னகைத்தாள்.

கௌரி பூங்குழலிக்கு போன் செய்து நல்ல செய்தி சொன்னாள். அனைவருக்கும் அழைத்து தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் லட்சுமி பாட்டி இப்போதே ஆனந்தியைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

"என்ன அத்த! இப்ப எப்டி போறது?"

"என் பேத்தி உண்டாயிருக்கா! அவளப் பாக்கணும் மங்கை! ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடு! நான் போய் பாத்துட்டு அவ கூட பத்தே பத்து நாள் இருந்துட்டு வந்துடறேன்! டேய்! கிரிதரா! கூட்டிகிட்டு போடா!"

"அடடா! அம்மா! என்னம்மா நீங்க? சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கறீங்க!"

"டேய்! ப்ளீஸ்டா! நான் ஆனந்திய பாத்துட்டு வந்திடறேன்டா!"

மங்கைக்கும் கிரிதரனுக்கும் ஆச்சரியமாய் இருந்தது. ஆனந்தி அவர்களுக்கு சொந்தப் பேத்தி கூட இல்லை. அவள் மீது பாசம் உண்டு என்று தெரியும். ஆனால் இவ்வளவு பாசமா? சரி! அழைத்துச் செல்வோம்! என்று நினைத்துக் கொண்டார்.

பூங்குழலிக்கு போன் செய்தனர். அவள் தான் வேலை செய்யும் பள்ளியில் அடுத்த வாரம் விடுமுறைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அதனால் அடுத்த வாரம் மும்பை செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தாள்.

"பூங்குழலி அடுத்த வாரம் போகட்டும்! நம்ம இந்த வாரம் போகலாம்!" பிடிவாதமாய் சொன்னார் லட்சுமி பாட்டி.

"சரிம்மா! நான் ப்ளைட் புக் பண்றேன்! நம்ம இந்த வாரம் போலாம்மா!" அம்மா தன்னுடைய நேரடி பேத்தியில்லையென்றாலும் தன் மருமகளின் தங்கை மகளையும் தன்னுடைய பேத்தி என்று பாசம் காட்டுவதால் அந்த நிபந்தனையற்ற பாசத்துக்காக மகன் விட்டுக் கொடுத்தார்.

"அரசி! நம்ம மூணு பேருமே போலாம்! ஸ்வீட் எதாவது செய்! நம்ம ரெண்டு பேரும் ரெண்டு நாள்ல வந்துடலாம். அம்மா பத்து நாள் இருந்துட்டு கீர்த்தியோட ரிட்டன் வரட்டும்! நம்ம அம்மாவ ஏர்போர்ட்ல போய் பிக்கப் பண்ணிக்கலாம்! ஓகேயா?"

"ம்! சரிங்க!"

"அம்மா! ஓகேயா?" அம்மாவிடம் கேட்டார்.

"டபுள் ஓகே!" பாட்டி சின்னக் குழந்தை மாதிரி குதூகலத்துடன் பேக் செய்ய ஆரம்பித்தார்.

அம்மாவின் சந்தோஷத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டே ட்ராவல்ஸில் சொல்லி ப்ளைட்டுக்கு புக் செய்தார். பின்னர் சூரஜுக்கு போன் செய்தார்.

"ஹலோ! மாப்ள! சௌக்கியமா?"

"சௌக்கியமா இருக்கேன் மாமா! சொல்லுங்க மாமா!"

"நாளை மறுநாள் நான், உங்க அத்த, லக்ஷ்மி பாட்டி, மூணு பேரும் மும்பை வரோம் மாப்ள! ஆனந்தியப் பாக்கணும்னு அம்மா ஒரே அடம்! சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கறாங்க! டென் டேஸ்! அம்மா உங்க வீட்ல தங்கலாம்னு.. நானும் உங்க அத்தையும் டூ டேஸ்ல கிளம்பிடுவோம்.. அம்மா அடுத்த வாரம் கீர்த்தி வரும்போது ரிட்டன் வந்துடுவாங்க! உங்களுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே!" என்று கேட்டார் கிரிதரன்.

"வாங்க மாமா! இதென்ன மாமா! இப்டி கேக்கறீங்க! வாங்க மாமா! இது உங்க வீடு! பாட்டி இங்க இருந்தா எங்க எல்லாருக்கும் ரொம்ப ஜாலியா இருக்கும்! கண்டிப்பா கூட்டிகிட்டு வாங்க மாமா!"

"ரொம்ப தேங்க்ஸ் மாப்ள! நம்ம நாளன்னைக்கு பாக்கலாம்!"

"ஓகே மாமா! நானே உங்கள பிக்கப் பண்ணிக்கறதுக்கு ஏர்போர்ட் வரேன்! பை மாமா!" சொல்லிவிட்டு செல்வியிடம் விஷயத்தைச் சொன்னான்.

செல்விக்கு ஒரே சந்தோஷம். மாடிக்கு ஓடினாள். பின்னாலேயே சூரஜ் வந்தான். விராட் தன் மொபைலை நோண்டிக் கொண்டிருக்க ஆனந்தி பாதியில் விட்ட படத்தை வரைந்து கொண்டிருந்தாள். தீபிகா படித்துக் கொண்டிருந்தாள்.

"ஆனந்தி! ஆனந்தி!"

அவசரமாய் ஓடி வரும் செல்வியைப் பார்த்து விராட் கேட்டான்.

"பாபி! என்னாச்சு?"

"ஆனந்தி எங்க?"

"உள்ளதான் இருக்கா!"

"என்னக்கா! என்னாச்சு?" கேட்டுக் கொண்டே ஆனந்தி வெளியே வந்தாள்.

"ஆனந்தி! உன்னப் பாக்க நாளான்னிக்கு லக்ஷ்மி பாட்டி இங்க வராங்கடி! பத்து நாள் இங்கதான் இருக்கப் போறாங்க!"

"நெஜமாவா! ஹை! ஜாலி!"

அக்காவும் தங்கையும் ஆனந்தக் கூத்து ஒன்றுதான் ஆடவில்லை! மற்றபடி மகிழ்ச்சியாய் ஒருவருக்கொருவர் கட்டி தழுவிக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இருவரும் பேசிக் கொண்டே கீழே சென்று விட்டார்கள்.

விராட்டுக்கும் சூரஜுக்கும் கூட இவர்களின் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

தீபிகாவுக்கு வியப்பாக இருந்தது.

'செல்வி பாபியோட பாட்டி வந்தா ஆனந்தி பாபிக்கு என்ன வந்தது? இவங்க ஏன் இவ்ளோ சந்தோஷப்படறாங்க?' என்று நினைத்துக் குழம்பியவள் விராட்டிடமும் சூரஜிடமும் கேட்டே விட்டாள்.

"சரியாப் போச்சு போ! உனக்கு பாட்டியப் பத்தி தெரியாது!" என்று கூறி இரு சகோதரர்களும் தங்கள் சகோதரிக்கு பாட்டியைப் பற்றி கூறினார்கள்.

எல்லா லீவுக்கும் ஆனந்தனும் ஆனந்தியும் சென்னை வந்தது பீச்சில் மணல் வீடு கட்டி விளையாடியது அதற்கு சண்டை போட்டது அதை சமாதானம் செய்ய வளையல் வாங்கித் தந்தது அதற்கு ஆனந்தன் அமர்க்களம் செய்தது அதை சமாதானம் செய்ய பேட்டும் பாலும் வாங்கித் தந்தது ஸிக்ஸர் அடித்து பால் காணாமல் போனதற்காக ஆனந்தன் இரவெல்லாம் அழுதது அதற்காக புது பால் வாங்கித் தந்தது என்று எல்லாம் சூரஜ் சொன்னான். மேலும் தான் செல்வியுடன் சென்னை போயிருந்த போது தன்னையும் கேலி கிண்டல் செய்து பேசி சிரித்து விளையாடியது என்று அதையும் சொன்னான்.

ஆனந்தியுடனும் ஆனந்தனுடனும் திருச்சியில் கையில் சாதம் பிசைந்து போட்டதிலிருந்து மருதாணி வைத்து விட்டு சாதம் ஊட்டுவதற்கு ஆனந்தன் சண்டை போட்டது அவனை சமாதானம் செய்ய அவனுக்கும் ஊட்டி விட்டது என்று எல்லாம் விராட் சொன்னான். சமீபத்தில் ஆனந்தி தன் கோபத்தை பார்த்து பயந்து காய்ச்சலில் விழுந்த போது அவளிடம் பாட்டி என்ன சொன்னார் என்பதையும் சொன்னான்.

சகோதரர்கள் இருவரும் சொல்லச் சொல்ல விழி விரிய கேட்டுக் கொண்டிருந்தாள்.

"ரியலி! வாவ்! தாதிம்மா! யூ ஆர் கிரேட்!" என்றாள். அதுவும் இப்போது உண்டாகியிருக்கும் ஆனந்தியைப் பார்க்க அடம் பிடித்துக் கிளம்பி வருகிறாள் என்று தெரிந்ததும் தீபிகா அசந்து விட்டாள். தன் சொந்தப் பேத்தி இன்னும் உண்டாகவில்லை என்று வருத்தப்படவேயில்லை. தன் மருமகளின் தங்கை மகள் உண்டாகி இருக்கிறாள் என்று இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்றால் அது எப்பேற்பட்ட பாசம்! எப்பேற்பட்ட அன்பு! பாட்டியின் நிபந்தனையற்ற அன்பில் வளர்ந்ததினால்தான் செல்வி பாபியும் ஆனந்தி பாபியும் இப்படி தன்னலமற்று நம் அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

"நமக்கு இப்டி ஒரு பாட்டியில்லாம போய்ட்டாங்களே பையா!"

"அதனால என்ன சுட்கி! உங்க பாபியோட பாட்டின்னா எனக்கும் பாட்டிதானே! ஆனந்திக்கு பாட்டின்னா விராட்டுக்கும் பாட்டிதானே! எங்க ரெண்டு பேருக்கும் பாட்டின்னா உனக்கும் பாட்டிதானே!" என்றான் சூரஜ்.

தீபிகா மனதுக்குள் ஆனந்துக்கு பாட்டி என்றால் எனக்கும் பாட்டிதான் என்று நினைத்தாள்.

அவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே விராட்டின் கைபேசிக்கு ஆனந்தனிடமிருந்து போன் வந்தது.

ஆனந்தன் விராட்டுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தான். ஆனந்தியிடம் பேச வேண்டும் என்றான். அவன் தீபிகாவிடம் கொடுத்து ஆனந்தியிடம் தரச் சொல்லி கொடுத்துவிட்டான். தீபிகா அதை காதில் வைத்து பேசினாள்.

"ஹலோ! ஆனந்த்! ஹௌ ஆர் யூ?"

"யா! ஃபைன்! ம்.. ஆனந்தி.." இழுத்தான்.

"பாபி கீழ இருக்காங்க! நான் கீழதான் இறங்கிகிட்டு இருக்கேன்!" ஆங்கிலத்தில் சொன்னாள்.

"ஓ! ஓகே!"

"ஏன்? என்கிட்ட பேச மாட்டீங்களா?"

".."

"ஹலோ! லைன்ல இருக்கீங்களா?"

"ம்!"

"ஏன் ஆனந்த்! என்கிட்ட பேச மாட்டீங்களா?"

"அது.. ஆனந்தி கிட்ட குடுங்களேன்!"

அவன் இப்படிதான் செய்வான் என்று எதிர்பார்த்திருந்ததால் அவளுக்கு வருத்தமெல்லாம் ஏற்படவில்லை! ஆனால் பேசினால்தான் என்னவாம் என்று நினைக்காமலும் அவளால் இருக்க முடியவில்லை!

அவள் ஆனந்தியிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு,

"பாபி! உங்க அண்ணன் பேசறார்!" என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

அவள் விராட்டின் மொபைலை கையில் வைத்திருக்கும் போதே அதைப் பார்த்து ஆனந்தனின் நம்பரை தன் மொபைலில் நந்து என்ற பெயரில் சேமித்துக் கொண்டாள்.

அவள் மனதில் ஆனந்தனையே நினைக்க ஆரம்பித்தாள். அதற்காக தன் படிப்பை அவள் விடவில்லை. கண்ணும் கருத்துமாகப் படித்தாள். படிப்பு முடிய இருக்கிறதே! அவள்தான் மேலே படிக்க ஆசை கொண்டிருக்கிறாளே! படிப்பை விட முடியாது, அதே நேரத்தில் ஆனந்தனையும் விட முடியாது. தன் முடிவில் அவள் மிகத் தெளிவாய் இருந்தாள்.

கிரிதரனும் மங்கையும் லக்ஷ்மி பாட்டியைக் கூட்டிக் கொண்டு மும்பை வந்திறங்கினார்கள். வந்தவர்களை சூரஜ் விமான நிலையம் சென்று வரவேற்று தன் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

"பாட்டி!" செல்வி ஓடிச் சென்று பாட்டியை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

"செல்விம்மா!" பாட்டியும் பதிலுக்கு கொஞ்சினாள்.

"அம்மா, அப்பா வாங்க! வாங்க!" பெற்றோரை வரவேற்றாள்.

"ஆயியே! ஆயியே! மாஜி! ராம்! ராம்!" என்று கூறி வரவேற்றாள் கௌரி. தீன்தயாள் சைகையால் வரவேற்றார். கிரிதரனின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்.

"பாட்டி!" ஆனந்தி வந்து பாட்டியை கட்டிக் கொண்டாள்.

"ஆனந்தி! என் கண்ணம்மா! ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா! உன்னப் பாக்கணும்னு இந்த கிழவி ஓடி வந்துட்டேன்!"

"வாங்க பெரிமா! வாங்க பெரிப்பா!"

"வாங்க அத்த! மாமா வாங்க! ராம்! ராம்! பாட்டி!"
ஆனந்தியும் விராட்டும் ஒன்றாக வந்து வந்தவர்களை வரவேற்றனர்.

"ஆயியே! ஆயியே! ஆண்டி! அங்கிள்! ஆயியே! ராம்! ராம்! தாதிமா! ராம்! ராம்!" தீபிகாவும் வந்து வரவேற்றாள்.

விராட்டும் ஆனந்தியும் பாட்டியை நமஸ்கரித்தனர்.

"நல்லா இருங்க மாப்ள! நல்லா இரும்மா! இப்டி உக்காரு!" என்று அவளை தன்னருகில் அமரவைத்துக் கொண்டார். ஆனந்தியிடம் செல்லம் கொஞ்சினார்.

செல்வியை விட்டு ஆனந்தியைக் கொஞ்சும் பாட்டியைப் பார்த்ததும் விராட்டுக்கும் தீபிகாவுக்கும் வியப்போ வியப்பு! கௌரியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவர்களின் பாசமழையில் அவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்.

மங்கையும் செல்வியிடம் கொஞ்சாமல் ஆனந்தியிடம் நலம் விசாரித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் விராட் சூரஜிடம் தனியே அழைத்துப் போய் கேட்டே விட்டான்.

"பையா! எப்டி இவங்க செல்வி பாபிய விட்டுட்டு ஆனந்திகிட்ட இவ்ளோ பாசம் காட்றாங்க!"

"அதுதான் அன்பு!"

"நான் திருச்சிலேர்ந்துதான் அத்த மாமா முதல்ல வருவாங்கன்னு நெனச்சேன்! பாத்தா, லக்ஷ்மி பாட்டி வந்திருக்காங்க! ஆச்சர்யமா இருக்கு! செல்வி பாபி இன்னும் உண்டாகலையேன்னு கூட வருத்தமே படலியே!"

"டேய்! நீ அடிதான் வாங்கப் போற!"

"ஸாரி! ஸாரி! தெரியாம சொல்லிட்டேன்! இனிமே இதப்பத்தி பேசவே மாட்டேன்!"

"அப்டிதான்! கம்முனு இருக்கணும்! பாசம் எப்டி காட்றதுன்னு கத்துக்கோ!" சொல்லிவிட்டு தம்பியை கூட்டிக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.

எல்லாரும் வீட்டில் இருந்து பேசி சிரித்து கலாட்டா செய்து கிண்டல் செய்து விளையாடி கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர். வீடே கலகலவென்று இருந்தது. ஆனந்தியின் முகமும் செல்வியின் முகமும் பூப்போல மலர்ந்திருந்தது.

விராட், செல்வி பாபியின் அழகுக்கு காரணமே அவர்களின் இந்தச் சிரிப்புதான் என்று நினைத்தான். ஆனந்தியின் அழகும் கூடியிருப்பது போல உணர்ந்தான்.

லட்சுமி பாட்டி, சின்ன மாப்ள பெரிய மாப்ள என்றும், தீபிகாவை தீபா என்றும் அழைத்துப் பேசினார்.

பாட்டி செல்விக்கும் ஆனந்திக்கும் புடவை வாங்கி வந்திருந்தார். கூடவே தீபிகாவுக்கும் வாங்கி வந்திருந்தார். இது எதற்கு என்று ஆச்சர்யப்பட்டால் ஒருபடி மேலே போய் பக்கத்து வீட்டு பிங்கிக்கும் பாவாடை தாவணி குஞ்சலம் என்று ஒரு காஸ்மெடிக் கடையையே வாங்கி வந்திருந்தார்.

தீபிகா, பாட்டியின் அன்பில் நெகிழ்ந்துவிட்டாள். தாதி என்று அழைத்துக் கொண்டிருந்தவள் பாட்டி என்று அழைக்கத் தொடங்கினாள். விராட்டை அழைத்து தமிழ் கற்றுத் தருமாறு கேட்டாள். எதற்கு என்று கேட்டவனிடம், "பாட்டிய ரொம்ப பிடிச்சு போச்சு! அவங்க கிட்ட பேச தமிழ் கத்துக்கணும்!" என்றாள். மனதுக்குள் ஆனந்தன் மனதை வெல்ல தமிழ் மொழி ஒன்றுதான் வழி என்று நினைத்தாள்.

"கண்மணி! இந்தாம்மா!" என்று பிங்கியிடம் தந்ததும் யமுனா வந்து தடுத்தாள்.

"ஒரு கிழவி! ஆசையா தரேன்னு நெனச்சுக்கோயேம்மா!" என்று சமாதானமாய் சொல்லி வாங்கிக் கொள்ள வைத்தாள்.

மங்கையும் கிரிதரனும் இரண்டு நாட்கள் இருந்து மகள்கள் இருவருடனும் மருமகன்கள் இருவருடனும் சீராடிவிட்டு சென்னை கிளம்பினர்.

வீட்டில் பாட்டியின் வரவால் சில மாற்றங்கள் ஏற்பட்டது. தீபிகா, தமிழ் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பாட்டியுடன் நேரம் செலவிடத் தொடங்கினாள். உணவில் எப்போதாவது தென்னிந்திய உணவு இருக்கும். இப்போது பாட்டிக்காக தென்னிந்திய உணவு மட்டும் செய்தனர். டிவியில் எப்போதும் ஹிந்தி நிகழ்ச்சிகள்தான் ஓடும். இப்போது டிவியே ஓடவில்லை! அதிகம் விடுப்பு எடுக்காத செல்வி பள்ளிக்கு ஒருவாரம் லீவ் போட்டுவிட்டாள். ஏன் என்று விராட் கேட்டதற்கு,

"ஐ டோண் வான்ட் டு மிஸ் திஸ் கோல்டன் மொமென்ட்ஸ்!" என்றாள்.

ஒரு நாள் பாட்டி யமுனாவின் வீட்டுக்கு சென்றார். கண்மணிதான் அழைத்துச் சென்றாள்! யமுனாவைப் பற்றி விசாரித்தார்.

"ஏம்மா கேக்றீங்க?"

"இல்லம்மா! தப்பா எடுத்துக்காத! உன் புருஷன் போலீஸ்காரன்னு செல்வி சொன்னா! உனக்குதான் தெரியுமே! என் மகன், அதான் செல்வியோட அப்பாவும் போலீஸ்காரன்! அதான் போலீஸ் குடும்பம்ன்னா எல்லாரும் ஒண்ணுதானேன்னு கேட்டேன்!"

"பெரிசா சொல்லிக்கற மாதிரியில்ல! அவர் கண்மணி அஞ்சு வயசு இருக்கும் போது ரௌடிங்க தாக்கி இறந்து போய்ட்டார்! முதல்லயே மாமியார் வீட்ல என்ன பிடிக்காது! அவர் போனப்றம் என்ன விரட்டிட்டாங்க!" விரக்தியுடன் பேசினாள்.

"அருமையான பொண்ணா இருக்க! உன் கூட இருந்து வாழ அந்த பையனுக்கு குடுத்து வெக்கல! அவன் கூட அன்பான வாழ்க்கை வாழ உனக்கும் குடுத்து வெக்கல! கவலப்படாதம்மா! உன்னோட அன்ப நிச்சயமா உங்க மாமியார் வீட்ல புரிஞ்சிப்பாங்க! உன் மகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு! நீயும் உன் புருஷனும் என்ன கனவு கண்டீங்களோ அது உன் மகள் மூலமா நிறைவேரும்!" என்று வாழ்த்தினார். யமுனா கண்கலங்கிவிட்டாள்.

"என்ன போய் நல்ல பொண்ணுன்னு சொல்றீங்களே? என் மாமியார் வீட்ல என்னை சூனியக்காரின்னு சொல்வாங்க!" என்று கண் கலங்கினாள் யமுனா.

"இதோ! உன் வீட்டு சாமி ரும்ல சாமி படமே இல்லையே! உன் புருஷன் படமும்.. உங்கம்மாதானே இவங்க! உங்கம்மா படமும் மட்டும்தானே இருக்கு! அப்போ எந்தளவுக்கு உன் புருஷன தெய்வமா நீ மதிக்கறன்னு இதுலேந்தே தெரியுதேம்மா!" என்றார்.

"அம்மா!" அழுதபடி பாட்டியின் காலில் விழுந்தாள்.

"எழுந்துக்கோம்மா! சீக்கிரமே நீ தமிழ்நாட்டுக்கு வரப்போற! அதுவும் உன் மாமியார் வீட்ல உன்ன மனப்பூர்வமா ஏத்துக்கப் போறாங்க! உன் மகளும் நீயும் உனக்கு உரிமையான உன் கணவன் வீட்ல அந்த வீட்டு மருமகளா நீ வாழப்போற! நீ வேண்ணா பாரு! நான் சொல்றது நடக்கும்!" என்று ஆரூடம் சொன்னார் பாட்டி.

"இதுதான் நீ இவ்ளோ நாளா வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரப் போறது!" என்று கூறிவிட்டு வந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த பிங்கி அம்மாவை அணைத்துக் கொண்டாள்.

"அம்மா! நீங்க வருத்தப்படாதீங்க! அப்பாவோட ரிலேஷன்ஸ் வராட்டி போறாங்க! உங்கள நான் நல்லா கவனிச்சுக்கறேன். இதோ ப்ளஸ் டூ முடிக்கப்போறேன். அப்றம் பெரிய படிப்பு படிச்சு பெரியாளா வந்து உங்கள காப்பாத்துவேம்மா!"

யமுனா மகளை அணைத்துக் கொண்டாள்.




பதவியில் உயர்வு பெற்ற மன்னன்
உறவிலும் உயர்வு கண்டான்!
மனதிற்கினிய மங்கை அவனுக்கு
உயரிய பரிசைத் தந்து விட்டாள்!

காதலின் கனியை இனிதாகக்
கருவில் தாங்கி நின்றாள்!
இன்ப அலைகள் இனிதே பரவின!
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கியது!

செல்வியின் பெற்றோரும் பாட்டியும்
சூலுற்ற நங்கையைக் காண
மும்பைக்கு வந்து சேர்ந்தனரே!
இனிமையின் இனிமை கூடியதே!

பாட்டியின் அன்பையும் பண்பையும்
அனைவரும் பாராட்டி அனுபவிக்க
தீபிகாவும் பாட்டியைக் கொண்டாடி
பரவசத்துடன் உருகி நின்றாள்!


- C. புவனா.


- காதலின் மொழி என்ன?
 
Top