Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 29
பாட்டியுடன் லூட்டியடிப்பது எல்லாருக்கும் மிகவும் பிடித்துப் போனது. மொழி புரியாவிட்டாலும் கௌரியும் இவர்களோடு சேர்ந்து கொண்டாள். பேசவே முடியாது என்றாலும் கூட தீன்தயாளும் இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொண்டார்.
எப்போதும் பேச்சும் சிரிப்பும் கும்மாளமும் என்று வீடே அதிர்ந்தது. வேலை செய்பவர்கள் கூட ஆச்சர்யப்பட்டனர்.
அடுத்த வாரம் கீர்த்திவாசனும் பூங்குழலியும் வந்து மகளுடன் நாலு நாட்கள் இருந்தனர்.
கிரிதரனும் மங்கையும் செல்வியை அதிகம் கண்டு கொள்ளவில்லை என்றால், இப்போது கீர்த்திவாசனும் பூங்குழலியும் செல்வியை விடவே இல்லை! எது செய்தாலும்,
"செல்விம்மா இதப் பாரு!"
"செல்விம்மா இப்டிதானே!"
என்று எல்லாவற்றுக்கும் செல்வியை முன்னிறுத்தியே தங்கள் வேலையைச் செய்தார்கள்.
கீர்த்திவாசன் லக்ஷ்மி பாட்டியை "அம்மா!" என்றும் பூங்குழலி, "அத்த!" என்று அழைத்தார்கள்!
பூங்குழலி, செல்விக்கும் ஆனந்திக்கும் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில், தாயுமானவர் சுவாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் பிரசாதம் கொண்டு வந்து தந்தாள். தீபிகாவுக்கும் மறக்காமல் இட்டுவிட்டாள்.
"செல்விம்மா! உனக்காக வேண்டிகிட்டு வந்தேன்டா!" என்று கூறி குங்குமத்தை இட்டுவிட்டாள்!
செல்வி, "தேங்க்யூ சித்தி!" என்று கூறி சிரித்தாள்!
"என் செல்லம்!" என்று சித்தி த்ருஷ்ட்டி வழித்தாள்!
ஆனந்தி இதைக் கண்டு கொள்ளவேயில்லை!
இதைப் பார்த்த விராட் வியந்து போனான்! அவனுக்கு, 'இவங்க எல்லாம் எப்டி இவ்ளோ அன்பா இருக்காங்க! நானும் சூரஜும் சுட்கியும் ஒரே ரத்தம்தான்! ஆனா சில சமயம் என்னோடதுன்னு உரிமை உணர்வு வந்துடுது! அண்ணன் கிட்டயும் தங்கை கிட்டயும் சண்டை போடறோம்! இவங்க யாரும் அப்டி ஓன் ப்ளட் ரிலேஷன் கிடையாது! அப்றம் எப்டி இவ்ளோ அன்பு! இந்த ஆனந்தி! அவங்கம்மா அவள விட்டுட்டு அவ அக்கா மகள கொஞ்சிகிட்டு இருக்காங்க! இவ என்னடான்னா கண்டுக்கவே இல்லையே! எப்டி இவங்கல்லாம் இப்டி இருக்காங்க!' என்று நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டுப் போனான்.
பாட்டியும் பேத்திகளும் எதைப் பற்றிப் பேசினாலும் கடைசியில் ஆனந்தனைப் பற்றி பேச்சு வந்து நின்றுவிடும்! எங்கு சுற்றினாலும் எதைப் பற்றிப் பேசினாலும் அதில் ஒரு முறையாவது யாராவது ஒருவராவது ஆனந்தனின் பேச்சை பேசாமல் இருக்க மாட்டார்கள்!
இதைக் கேட்டு கேட்டு, தீபிகா ஆனந்தனை மனம் முழுவதும் நினைக்கலானாள். அவனே அவளுக்கு எல்லாம் என்று நினைக்கத் தொடங்கினாள். அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காக அவனுடைய பெற்றோரிடம் அன்பாக நடந்து கொண்டாள்.
"ஆன்ட்டி! அங்க்கிள்! சாய் லீஜியே!" என்று ஓடி ஓடி பணிவிடை செய்தாள். சமையலில் தமிழ்நாட்டு உணவு வகைகளை மெனக்கெட்டுக் கற்றுக் கொண்டாள்.
செல்வியும் ஆனந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ஜாடை செய்து கொண்டனர்.
சூரஜ் செல்வியின் காதில் கிசுகிசுத்தான்.
"தமிழ்! அநேகமா நம்ம சுட்கிதான் ஆனந்தன உசார் பண்றா போலிருக்கு!"
"சும்மா இருங்க! நம்ம வீட்டுப் பொண்ண நம்மளே குத்தம் சொல்லக் கூடாது!"
"குத்தம் சொல்லல! அவ விருப்பத்ததான் சொல்றேன்! அங்க பாரு! உங்க சித்திக்கும் சித்தப்பாவுக்கும் அவளே சாப்பாடு போடறா! அவங்க எங்க இருக்காங்களோ அங்கயே சுத்தி சுத்தி வரா! ஆனந்தியும் நீயும் ஆனந்தனப் பத்தி பேசும் போதெல்லாம் வாலன்டியரா வந்து உங்க கூட உக்காந்துக்கறா! ரொம்ப மும்முரமா தமிழ் கத்துக்கறா! எல்லாத்துக்கும் மேல ஒண்ணு இருக்கு! எப்பவும் ட்ரஸ்ஸிங்ல ரொம்ப கவனம் செலுத்த மாட்டா! இப்ப என்னடான்னா ஹாஃப் அன் ஆர்க்கு ஒரு முறை கண்ணாடி பாத்துட்டு வரா!"
"ஆமாங்க! சுட்கி விழுந்துட்டா!"
"ஆனா ஆனந்தனுக்கு இவளப் பிடிக்கணுமே!" என்றான் சூரஜ்.
"ஏன் பிடிக்காது! பால் மனசோட இருக்கா நம்ம சுட்கி! அவனுக்கு பிடிக்கலன்னா அப்றம் அவன் வேஸ்ட்டு!" என்றாள் செல்வி.
"ஹேய்! அப்டியெல்லாம் சொல்லாத! அவனுக்கும் ஒரு மனசு இருக்குல்ல! அதுல அவன் யாரையும் நெனக்காம இருக்கணும்! அப்பதான் சுட்கியால சந்தோஷமா இருக்க முடியும்! ஒரு வேள அவன் மனசில வேற யாராவது இருந்தா அப்றம் சுட்கி அவ்ளோதான்! உடைஞ்சு போய்டுவா!"
"ஹூம்! நீங்க சொல்றதும் சரிதான்!"
திகட்டத் திகட்ட பாட்டியும் பேத்திகளும் சீராடினர்!
பாட்டியை அழைத்துக் கொண்டு கீர்த்திவாசனும் பூங்குழலியும் கிளம்பினர். கௌரிக்கும் தீபிகாவுக்கும் தீன்தயாளுக்கும் கண்கலங்கியது. ஆனால் இரண்டு பேத்திகளுக்கும் அழுகை வரவேயில்லை!
விராட்டுக்கு இதுவும் ஆச்சர்யமாய் இருந்தது!
கீர்த்திவாசனும் பூங்குழலியும் லக்ஷ்மி பாட்டியை சென்னையில் பெசண்ட் நகரில் கிரிதரன் வீட்டில் விட்டு அங்கு ஒருநாள் தங்கியிருந்த பின்னர்தான் திருச்சி சென்றனர்! அதில் கிரிதரனுக்கு அலாதி சந்தோஷம் ஏற்பட்டது.
உயிரின் உயிரைத் தாங்கி
உள்ளத்துள் மகிழ்ந்து நிற்கும்
ஆனந்தியின் ஆனந்தம் போற்ற
அன்னை தந்தையும் வந்தனரே!
மகளைக் கொண்டாடியவர்
செல்வியையும் சேர்த்துச் சீராட்ட
மும்பை வாழ் குடும்பத்தினர்
வியப்புடன் இரசித்தனரே!
காதலும் மெல்ல மெல்ல
தீபிகாவின் உள்ளத்தில் வந்து
தென்றலாக நுழைந்ததுவே!
தேனாக இனித்ததுவே!
நாயகனின் பெற்றோரை
நங்கையும் உபசரித்து மகிழ
இல்லத்தின் மற்ற உற்றோரோ
புரிந்ததென நகைத்தனரே!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?