Annapurani Dhandapani
Active member
காதல் மொழி – 3
காலை எழுந்து எப்போதும் செய்யும் யோகாவை செய்து முடித்தாள். வாசலில் கோலம் போடுதல், அம்மாவுக்கு காய் நறுக்குதல் போன்ற வேலைகளையும் செய்துவிட்டு குளிக்கப் போனாள்.
குளித்து தயாராகி வந்த போது அப்பா தன் உடற்பயிற்சி முடித்துவிட்டு திரும்பியிருந்தார். காலைச் சிற்றுண்டியை அவசரமாக முழுங்கிவிட்டு வேலைக்கு ஓடினாள். ஆனால் அவளால் வேலையில் முழு மனதாக ஈடுபட முடியவில்லை. திரும்பத் திரும்ப சூரஜ் நினைப்புதான் வந்து கொண்டே இருந்தது. நாராயணியிடம் கேட்டு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தாள். தன்னுடைய அப்பாவுக்கு அழைத்தாள்.
"என்னம்மா செல்வி! இந்த நேரத்தில கூப்பிட்டிருக்க! உடம்புக்கு எதுனா..?"
"இல்லப்பா! அதெல்லாம் ஒண்ணுமில்ல. உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே! ம் .. கொஞ்சம் தனியா!"
"சரி! நீ அந்த தமிழ் க்ளாஸ் எடுப்பியே! அந்த காபி ஷாப்ல வெயிட் பண்ணும்மா! ட்யூட்டி முடியற நேரம்தான். ஹாஃப் அன் ஹார்ல வந்துடறேன்."
"சரிப்பா!" அவள் காபி ஷாப்பை அடைந்து எப்போதும் அமரும் இடத்தில் அமர்ந்தாள். சரியாக இருபது நிமிடங்களில் அவளுடைய அப்பா கிரிதரன் வந்து சேர்ந்தார். இருவருக்கும் காபியை ஆடர் செய்துவிட்டு மகளைப் பார்த்தார்.
"சொல்லும்மா!"
"அப்பா! வந்து ஒரு முக்கியமான விஷயம்!"
"ம். சொல்லும்மா!"
"அப்பா! உங்களுக்கே தெரியும்! இப்ப வரைக்கும் உங்ககிட்ட நான் எந்த விஷயத்தையும் மறைச்சதில்ல!"
"சரி!"
"இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு குழப்பம்!"
".."
"எனக்கு மிஸ்டர் சூரஜ் ராத்தோடை பிடிச்சிருக்குன்னு நெனக்கிறேன். அதனாலதான் நீங்க காட்டின மாப்பிள்ள போட்டோ எல்லாத்லயும் எதோ ஒரு குறை தெரிஞ்சிது. எல்லாத்தையும் சூரஜோட கம்பேர் பண்ணிட்டு இது நல்லால்ல, அது நல்லால்லன்னு தள்ளிகிட்டு இருந்திருக்கேன். எனக்கு இதுதான் பிரச்சனைன்னு இப்பதான் புரிஞ்சுது. புரிஞ்சப்றம் வேலையே செய்ய முடியல. அதான் உங்ககிட்ட சொல்லிடலாம்னு லீவு போட்டேன்!" தெளிவாகக் கூறினாள்.
"இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கே?"
"தெரிலயே! அதனாலதான் உங்ககிட்ட சொன்னேன். பிடிச்சிருக்கு! ஒரு வேளை கல்யாணம் பண்ணிக்க நீங்க ஒத்துக்கலன்னா கொஞ்சம் வருத்தமா இருக்கும்! ஆனா என் மனச மாத்திக்கிட்டு, நீங்க காட்ற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் டைம் வேணும். !"
"சரிம்மா! நான் யோசிச்சிட்டு சொல்றேன்! நீ காபியக் குடி!" சொல்லிவிட்டு தானும் குடித்தார்.
"அந்தப் பையனோட செல் நம்பர் குடும்மா!"
நம்பரைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்.
"அப்பா! நீங்க என்ன தப்பா நெனக்காதீங்கப்பா!"
"எனக்கு தெரியாதாம்மா! நீ ஒண்ணும் கவலப்படாத! நான் யோசிச்சி நல்ல முடிவா சொல்றேன்! அது வரைக்கும் நீ கொஞ்சம் அமைதியா இருக்கணும்! சரியா?"
"ம். சரிப்பா! தேங்க்ஸ்ப்பா!" கொஞ்சம் மனது தெளிந்தது போல் இருந்தது.
"சரி வா! வீட்டுக்குப் போகலாம்! செம்ம பசி!" பில்லுக்குப் பணம் தந்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
அப்பாவிடம் சொல்லி விட்டதால் தன் மனதின் சலனம் கொஞ்சம் குறைந்தது போல உணர்ந்தாள். அதனால் அவளால் செய்யும் வேலையில் கவனம் செலுத்தவும் முடிந்தது. அடுத்து வந்த நாட்களில் ஒழுங்காக பள்ளியில் வேலை செய்தாள்.
கிரிதரன் தனது அம்மாவிடமும் மனைவியிடமும் கலந்து பேசினார். லட்சுமி அம்மாள் சூரஜைப் பற்றி உயர்வாகச் சொல்லவில்லை என்றாலும் தவறாகவும் எதுவும் சொல்லவில்லை.
மங்கையர்க்கரசி,
"இது மகளின் வாழ்வு! ஆம்பள பசங்களோட பழகாதவளும் கிடையாது. எல்.கே.ஜில இருந்து பிஜி வரைக்கும் கோ எட் தான். இதுவரைக்கும் யாரையும் பாத்து சலனப்பட்டதே கிடையாது. காதல் வந்தா கள்ளத்தனமும் வரும்னு சொல்வாங்க! ஆனா இவ மத்தவங்க மாதிரி திருட்டுத்தனம் பண்றவ இல்ல! அதே நேரத்தில இப்ப தன் மனசில சின்ன சலனம் ஏற்பட்ட உடனே உங்கள கூப்ட்டு இதுதான் என் பிரச்சனை. நீங்களே முடிவு எடுங்கன்னு சொல்லிருக்கான்னா நம்ம பொண்ணு நம்ம மேல எவ்ளோ நம்பிக்கை வெச்சிருக்கான்னு புரிஞ்சிக்கோங்க! அந்தப் பையனப் பத்தி விசாரிங்க! நல்லவன்னு தெரிஞ்சா, அவனுக்கு கட்டி குடுக்கறதுல எந்த தப்பும் இல்லன்னு நான் நெனக்கிறேன்!" கணவனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசியறியாத மங்கையர்க்கரசி தெளிவாகக் கூறினாள்.
லட்சுமி அம்மாளுக்கு தன் மருமகளின் அறிவுக் கூர்மையையும் தெரியும். அதே போல அவளுடைய விட்டுக் கொடுக்கும் குணமும் தெரியும். மனதுக்குள் மருமகளை மெச்சியபடியே, மகனிடம் சொன்னாள்.
"கிரிதரா! மங்கை சொல்றதும் சரிதான். பையனப் பத்தி நீ முதல்ல விசாரி! மத்ததெல்லாம் அப்றம் பேசிக்கலாம்!"
"சரிம்மா! நீங்க சொல்ற மாதிரியே செய்யறேன்!" சொல்லிவிட்டு எழுந்தாார், கிரிதரன்.
அம்மாவிடம் சொன்னது போலவே தனக்கு நம்பகமான துப்பறியும் நிறுவனத்தில் சொல்லி அடுத்த மூன்றே நாட்களில் சூரஜைப் பற்றி முழுமையான தகவல்கள் அனைத்தையும் பெற்றார்.
சூரஜ் ராத்தோட் மும்பையில் குடியேறிய ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பையில் சொந்த வீடு உள்ளது. தந்தை தீன்தயாள் ராத்தோட் காது கேட்காத வாய் பேச முடியாத ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். அன்னை கௌரி ராத்தோட் படிப்பறிவில்லாத பெண்மணி. சூரஜ் இவர்களின் மூத்த பிள்ளை. பிட்ஸ் பிலானியில் எம் ஈ படித்து இப்போது சென்னையில் வேலை செய்யும் மென்பொறியாளர். இவருக்கு இளையவர், விராட். இவரும் பிட்ஸ் பிலானியில் பி டெக் படித்தவர். இப்போது காவல் துறையில் சேருவதற்காக ஐபிஎஸ் படிக்கிறார். இருவருக்கும் இளையவள், தீபிகா. டில்லி மருத்துவப் பல்கலைகழகத்தில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள்.
தாய் படிக்கவில்லை என்றாலும், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கிறார். அதுவும் இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையத்தில் படிக்க வைத்திருக்கிறார். பிள்ளைகள் மூவரும் நல்ல பிள்ளைகள். தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகள். தன்னுடைய தாய்நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கிக் கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான பெண்மணிதான் சூரஜின் அம்மா!
சூரஜைப் பற்றிய தகவல்கள் திருப்தியாக இருக்கவே, கிரிதரன், சூரஜை சந்திக்க எண்ணினார்.
அப்போது சூரஜே அவரைத் தொடர்பு கொண்டான்.
"ஹலோ! ஸார்! நான் சூரஜ்! ஒங்க டாட்டர் கிட்ட டமில் கத்துகிட்டேன். ஒங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே! ஒங்கள்க்கு எப்போ ஃப்ரீயோ சொல்லுங்கோ! அப்போ நானே வரேன்! எங்க வர்ணும்னு சொல்லுங்கோ!" தமிழைக் கடித்துத் துப்பினாலும் சொல்ல வந்ததை தெளிவாய் சொன்னான்.
"ஓ! மிஸ்டர் சூரஜ்! நானே உங்கள பாக்கணும்னு நெனச்சேன்! நீங்களே கால் பண்ணிட்டீங்க! பை த வே! என் நம்பர் எப்டி கிடைச்சுது?"
"உங்க டாட்டர் கிட்டதான் வாங்கினேன்!"
"ஓ! ஓகே! இன்னிக்கு ஈவ்னிங் ஃபைவ் ஓ க்ளாக் அந்த தமிழ் க்ளாஸ் படிக்கற காபி ஷாப்லயே மீட் பண்லாமே!"
"தேங்கயூ ஸார்! ஐ வில் பீ தேர் அட் ஷார்ப் ஃபைவ்! பை ஸார்!"
"பை!" பேசும் போது கூட எவ்வளவு கண்ணியம் என்று மனதில் நினைத்துக் கொண்டார். அப்போது செல்வி போன் செய்து சூரஜ் தன்னிடம் கைப்பேசி எண் வாங்கிய விவரத்தைக் கூறினாள். இவரும் சூரஜ் பேசிய விவரத்தைக் கூறினார்.
சொன்னது போல மாலை ஐந்து மணிக்கு சூரஜ் வந்தான்.
"ஹலோ ஸார்! ஐ ஆம் சூரஜ்!" என்று கூறி கை கொடுத்து புன்னகைத்தான். ஒரு மகாராஜா மாதிரி கம்பீரமாக வாட்டசாட்டமாக நெடிய உயரத்துடன் முறுக்கு மீசையுடன் அழகாக அதே நேரத்தில் சுண்டிவிட்டால் ரத்தம் வருமளவு சிவந்த நிறத்தில் இருக்கும் சூரஜை பார்த்தவுடன் கிரிதரனுக்கே பேச வாய் வரவில்லை. சிரிக்கும்போது அவன் வசீகரம் இன்னும் கூடியது போல அவருக்குத் தோன்றியது. ஒரு ஆண் இன்னொரு ஆணைப் பார்த்து மயங்குவானா! தனக்கே இவனைப் பார்க்கப் பார்க்க இவ்வளவு பிடிக்கிறது என்றால் தன் மகளுக்கு இவனைப் பிடித்ததில் ஆச்சரியம் இல்லை என்று நினைத்தார்.
"ஹலோ! மிஸ்டர் சூரஜ்! ஐ ஆம் கிரிதரன்! நைஸ் டு மீட் யூ! ப்ளீஸ் டேக் யுவர் சீட்!" கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டு உட்காரச் சொன்னார்.
"காபி ஆர் டீ?" கிரிதரன் கேட்டார்.
"டீ!"
"ரெண்டு டீ!" ஆடர் செய்துவிட்டு, சூரஜைப் பார்த்துக் கேட்டார்.
"எஸ் மிஸ்டர் சூரஜ்! என்ன எதுக்கு பாக்கணும்னு சொன்னீங்க?"
"ஸார்! என்க்கு எதையும் சுத்தி வளைச்சி பேசத் தெர்யாது! ஸ்ட்ரெய்ட்டாவே சொல்றேன்! என்க்கு ஒங்க டாட்டர் டமில் செல்..விய ரொம்ப பிட்ச்சிருக்கு! அவங்கள மேரேஜ் பண்ணிக்க ஆசப்பட்றேன். மொதல்லயே சொல்லிட்றேன். இதப்பத்தி நான் அவங்ககிட்ட பேசினதில்ல. என்க்குதான் அவங்கள பிட்ச்சிர்க்கு. அவங்களுக்கு என்னப் பிட்க்குமான்னு என்க்கு தெர்யாது. அவங்கள மேரேஜ் பண்ணா லைஃப் பூராவும் அவங்கள ரொம்ப ஹேப்பியா வெச்சிக்க என்னால முடியும். என்க்கு உங்க டாட்டர மேரேஜ் பண்ணி குட்க்க ஒங்கள்க்கு ஓகேன்னா, எங்க அப்பா அம்மாவ ஒங்கள வந்து பாக்க சொல்றேன்! இல்லன்னா.. பரவால்ல! நான் அவங்கள டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்." பேசும் தமிழில் தெளிவில்லாவிட்டலும் பேச வேண்டியதை தெளிவாகவே பேசினான்.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல உணர்ந்தார் கிரிதரன்.
"மிஸ்டர் சூரஜ்! இல்ல! மாப்பிள்ளை! ம்.. நீங்கதான் எங்க வீட்டு மாப்பிள்ளை! உங்க பேரண்ட்ஸை வரச் சொல்லுங்க! பேசி நல்ல நாள் பாத்திடலாம்!"
சூரஜ் அவரை ஆச்சரியமாய் பார்த்தான்!
"மாப்பிள்ளை மீன்ஸ்..?"
"ஓ! ஐ ஆம் ஸாரி! மாப்பிள்ளை மீன்ஸ், சன் இன் லா! வீ கால் அவர் சன் இன் லா ஆஸ் மாப்பிள்ளை இன் டமில்! எஸ் மிஸ்டர் சூரஜ்! யூ ஆர் மை சன் இன் லா! புரியலையா, எங்க செல்விக்கும் உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு." சந்தோஷமாக சொன்னார்.
தமிழ்ச்செல்வி தன் மனதில் உணர்ந்ததை தன்னிடம் சொன்னதை, தானும் தன் குடும்பத்துடன் கலந்து பேசியதை, சூரஜைப் பற்றி விசாரித்ததை, பின்னர் சூரஜை சந்திக்க நினைத்ததை என்று ஒன்று விடாமல் கூறினார்.
சூரஜுக்கு மனம் ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அவனுடைய மனதின் மகிழ்ச்சி முகத்தில் பிரதிபலித்தது.
"ரொம்போ ரொம்போ தேங்க்ஸ் ஸார்!"
"ம்ஹூம்.. கால் மீ மாமா!" கிரிதரன் திருத்தினார்!"
"தேங்க்ஸ் மாமா! நான் நாளைக் அம்மா அப்பாவை ஒங்க வீட்க்கு கூட்டி வரேன்."
"ஆனா! நாளைக்கே எப்டி? மும்பைலேர்ந்து அவங்க வர வேணாமா?"
"அவங்க இப்போ சென்னைலதான் இர்க்காங்க! நான் போன வாரமே கூட்டிட்டு வண்ட்டேன்!"
"......"
"எஸ்! அம்மாகிட்ட டமில் செல்..விப் பத்தி சொல்லி என்க்கு அவங்கள மேரேஜ் பண்ணி வைங்க.. கேட்டேன். அவங்கள் சரின்னு சொல்லி சென்னை வண்ட்டாங்க! நாளைக் மானிங் டென் ஓ க்ளாக் எங்க அம்மா, அப்பா, என் ஸிஸ்டர் அப்றம் நான் நாங்க நால் பேரும் ஒங்க வீட்க்கு வரோம்!" என்றான்.
அவன் இப்போது தன்னைப் பற்றிக் கூறினான்.
முதன்முதலில் பள்ளியில் வைத்து பார்க்கும்போதே அவளைப் பிடித்துவிட்டது. அவளுடன் பழகவேண்டும் என்றுதான் தமிழைக் கற்றுக் கொண்டான். தமிழ் கற்றுக் கொடுக்கும்போது பொறுமையாக கற்றுத் தந்தது கண்ணியத்துடன் நடந்து கொண்டது அவளுடைய மென்மையான குணம் எல்லாவற்றையும் விட அதிகமாக, அவளுடைய ஆர்பாட்டமில்லாத அமைதியுடன் கூடிய அழகு என்று அவனை ஈர்த்த விஷயங்களைக் கூறினான். அவளிடம் தன் மனதைப் பறி கொடுத்தான். ஆனால் இதை அவளிடம் தெரிவிக்கும் முன்பு தன் அன்னையின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு மும்பை பறந்தான். அன்னை அவனுடைய மனதைப் புரிந்துகொண்டார். அதனால் பெண் பார்க்க கிளம்பி வந்து விட்டார். அவனும் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கூறினான்.
தன் மகளும் தனக்கு வரவிருக்கும் மருமகனும் ஒரே மாதிரி தங்கள் பெற்றோர்களிடம் தங்கள் காதல் விஷயத்தைக் கூறி அனுமதி வாங்கியிருக்கிறார்களே! பெற்றோரை மதிக்கும் எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் என்று நினைத்தார்.
மனம் நிறைய மகிழ்ச்சியுடன் நாளை பார்க்கலாம் என்று கூறி இருவரும் விடை பெற்றனர்.
கிரிதரன் வீட்டில் அனைவரிடமும் நடந்ததைக் கூறினார். சூரஜின் தோற்றத்தை பார்த்தவுடன் அவர் எப்படி மயங்கினார் என்பதைக் கேட்டதும் அவர் மனைவிக்கே வெட்கம் வந்தது. தமிழ்ச்செல்விக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது.
வெட்கத்தில் தன்னுடைய அறைக்குள்ளே ஓடிப்போய் கதவைத் தாழிட்டுக் கொண்டாள். சூரஜுக்கு அழைத்தாள்.
இங்கே அவளைப் பார்த்து சிரித்தபடி அனைவரும் நாளை வரவிருக்கும் விருந்தினர்களை வரவேற்க தயாரானார்கள். கிரிதரன் என்னென்ன சாமான்கள் வேண்டும் என்று கேட்டு பட்டியல் போட்டுக் கொண்டு கடைக்குக் கிளம்பினார்.
லட்சுமி அம்மாளும் மங்கையர்க்கரசியும் விருந்து பற்றி பேசி முடிவு செய்தார்கள்.
தமிழ்ச்செல்வி சூரஜின் எண்ணை அழுத்திவிட்டு அவன் குரலுக்காக காத்திருந்தாள்.
"ஹலோ!" பல நாட்கள் கழித்துக் கேட்ட கரகரத்த அவனுடைய குரலில் அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது.
"ஹலோ! டமில் செல்...வி! கேக்குதா! ஹலோ!" அவன் குரலைக் கேட்டு மனதில் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால் சில விநாடிகள் ஓடிவிட்டது. அதற்குள் அவளிடமிருந்து பதில் வரவில்லையே என்று அவன் தவித்து விட்டான்.
"ஹலோ! கேக்குது! கேக்குது! சூரஜ்! எ...எப்டி இருக்கீங்க!"
"டமில்..... டமில்....." ஒன்றுமே பேசமுடியாமல் தவித்தான்.
"......." அவளுக்கும் அதே நிலைதான்.
"ம். நான் வீடியோ கால்ல வரேன்!" சொல்லிக் கொண்டே அழைப்பைத் துண்டித்துவிட்டு காணொளி அழைப்பில் அழைத்தான்.
அவர்கள் இருவரும் காணொளி அழைப்பில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசினர்.
"உங்களுக்கு என்னப் பிடிச்சிருக்குன்னு எங்கப்பா சொன்னார்!"
"ம். உங்கள்க்கும் என்னப் பிட்சிர்க்குன்னு நீங்க சொன்னீங்கனு உங்க அப்பா சொன்னார்!"
"என்னங்க நீங்க! இன்னும் ஏன் நீங்கன்னு கூப்பிடறீங்க? நீன்னே கூப்டுங்க!" அவனைப் பார்த்து கண்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்க உள்ளம் முழுவதும் பூரிப்புடன் கேட்டாள்.
"உங்..... உனக்கு என்னிய பிட்சிர்க்கா!" அவன் கண்களில் காதலுடன் கேட்டான்.
"ம்." தலைகுனிந்து கொண்டாள்.
"பேச மாட்யா!" அவனுடைய காதல் பார்வையைத் தாளமுடியாமல் தலைகுனிந்தபடி மெல்லிய குரலில் பாடினாள்.
"ஒரு மின்சாரப் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
..
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்!
கண்ணாளனே.."
சூரஜ் இந்தப் பாடலின் இந்தி வரிகளைப் பாடினான்.
அவன் பாடுவதை வியப்புடன் பார்த்து சிரித்துக் கொண்டாள்.
"என்க்கு உன்ன மாத்ரி சூப்பரா பாட தெர்யாது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் பாட்வேன்!" என்றான்.
"நீங்க கொஞ்சம் கொஞ்சம் பாடினாலும் எனக்கு கொஞ்சி கொஞ்சி பாடற மாதிரிதான் இருக்கு!"
"இஸ் இட்! உன்க்கு பிட்ச்சிர்க்கா!"
"ம். உங்களையும் பிடிச்சிருக்கு! உங்க பாட்டையும் பிடிச்சிருக்கு! நீங்க கடிச்சி கடிச்சி பேசற தமிழையும் பிடிச்சிருக்கு! ஆனா உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்குமான்னுதான் பயமா இருக்கு!"
"என்க்கு பிட்ச்சா எங்க அம்மாக்கும் ரொம்போ ரொம்போ பிட்க்கும்!"
"நெஜமாவா!" ஆச்சரியமாய்க் கேட்டாள்.
"செல்வி! சாப்பிட வாம்மா!" அப்பா அழைத்தார்.
"குட் நைட் சூரஜ்!"
"குட் நைட் டமில்!"
கைப்பேசி அழைப்பைத் துண்டித்துவிட்டு சாப்பிடச் சென்றாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை முடித்தனர். கிரிதரன் மகளை தூங்க அனுப்பினார்.
"போய்ப் படும்மா! நல்லா தூங்கினாதான் நாளைக்கு மாப்பிள்ளை வரும்போது முகம் பளிச்சுன்னு அழகா இருக்கும்."
"சரிப்பா!" சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துக்கொண்டு உள்ளே ஓடும் மகளை பாசத்துடன் பார்த்தார் கிரிதரன்.
சிறிது நேரத்தில் தூக்கம் வந்தது. கூடவே கனவும் வந்தது. கனவில் சூரஜ் வந்தான். தமிழ்ச் செல்வி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். இருவரும் பேசிச் சிரித்தனர். சிரித்தபடியே தூக்கம் வருது என்றாள். அவன் தன் மடியில் அவளைப் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தான். அவள் அப்படியே தூங்கிப்போனாள்.
காலை எழுந்து கொள்ளும் போது நேற்றைய நினைவு வந்தது. கனவில் அவளை தட்டித் தூங்க வைத்த சூரஜை நினைத்து சிரிப்பு வந்தது. கனவில் தூங்க வைத்தான். நான் நிஜமாகவே தூங்கிவிட்டேனே! நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டாள். என்றைக்கும் இல்லாமல் அவள் முகம் பூவாய் மலர்ந்திருந்தது. மனதுக்கு பிடித்தவனே கணவனாய் வரப் போவதினாலா, இல்லை அவன் நினைவிலேயே இரவு தூங்கியதாலா எதுவென்று தெரியவில்லை. ஆனால் தான் இன்று மிகவும் அழகாக இருப்பதாக எண்ணிக் கொண்டாள். சூரஜை நினைத்தபடியே வாசலில் அழகாய் பெரிதாய் கோலமிட்டாள்.
"மங்கை! பாத்தியா! உன் பொண்ணுக்கு கல்யாணக் களை வந்திடுச்சு!" லட்சுமி அம்மாள் மருமகளிடம் கூறினாள்.
"ஆமா அத்த! நானும் கவனிச்சேன்!" சொல்லிக்கொண்டே சமையலறையில் நுழைந்தாள்.
"அரசி! நம்ம பொண்ணு செல்வி இன்னிக்கு ரொம்ப அழகா தெரியறாளே! கவனிச்சியா?" அவள் பின்னாலேயே வந்து மனைவியின் காதில் கிசுகிசுப்பாய் கூறினார் கிரிதரன்.
"ம். ம்.!" அவருடைய மீசை காதில் குறுகுறுக்க வெட்கத்தில் நெளிந்தபடி பதில் கூறினாள்.
"என்னடி நெளியற!"
"கூசுதுல்ல!"
"ம். நீ அழகிடி! அதனாலதான் நம்ம பொண்ணும் அழகா இருக்கா!" அழுத்தமாய் அணைத்து சொன்னார்.
"ச்சூ! சும்மா இருங்க! அத்த வந்துடப் போறாங்க! இன்னிக்கு நம்ம பொண்ண பொண்ணு பாக்க வராங்க! இத மனசில வச்சிகிட்டு வேலையப் பாருங்க!" செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.
"சரிடி! கோவிச்சுக்காத! எனக்கு நான் உன்ன பொண்ணு பாக்க வந்த நாள் ஞாபகம் வந்துருச்சா! அதான்!"
"ம். வரும் வரும்!" சிரித்தபடி வேலையைக் கவனித்தாள். அவரும் சிரித்துக் கொண்டே தன் வேலையைப் பார்க்கப் போனார்.
இப்படியே ஒவ்வொருவரும் மகிழ்ச்சியான மனநிலையில் தமிழ்ச்செல்வியை பெண் பார்க்கும் படலத்தை எதிர் பார்த்திருந்தனர்.
மன்னவனே! மங்கையின் நாயகனே!
மொழி தானே கற்க வந்தாய்!
இதயத்தை ஏன் திருடிச் சென்றாய்!
மங்கையின் முன்னே மன்னனாய்த் தோன்றினாய்!
அவள் எண்ணங்களில் வண்ணம் சேர்த்தாய்!
மனக்கதவைத் திறந்து தென்றலாய் நீ நுழைந்தாய்!
நீ பேசும் மழலைத் தமிழே தேனாக
மங்கையின் இல்லத்தில் பாய்ந்ததடா!
தந்தையையும் மயக்கி விட்டாய்!
தமிழில் தேர்ந்த தலைவனுமே
தன் மொழியைத் தலைவிக்குத்
தவறாமல் கற்பிப்பானோ இல்லை
தலைவியின் விழிகளில் விழுந்து
தனை மறந்து மயங்கியே நின்று
சொற்களையும் மறந்திடுவானோ!
புகுந்த வீட்டில் காலூன்றி நின்றிடவே
தலைவியுமே துணையாக நாடுகிறாள்
தானறியா மொழிப்புலமை தேடுகிறாள்!
உள்ளங்களை வென்றிட உந்தனுக்கு
அன்புமொழி ஒன்றே போதுமடி!
மொழிகள் நாளையங்கு சங்கமிக்கும்!
மலர்களைத் தூவியுனை வரவேற்கும்!
- C. Puvana
- காதலின் மொழி என்ன?