கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

31. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 31


அன்று வெள்ளிக்கிழமை! நாளை சனிக்கிழமையன்று பிங்கியின் பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஃபேர்வெல் பார்ட்டி எனப்படும் பிரிவுபசார விழா!

பிங்கி இந்தாண்டுடன் பள்ளிப் படிப்பை முடிக்க இருக்கிறாள். விழாவுக்கு, லட்சுமி பாட்டி கொடுத்திருந்த பாவாடை தாவணியை அணிய ஆசைப்பட்டாள். அதனால் அதை எப்படி கட்டிக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்காக செல்வியைத் தேடி வந்தாள்.

செல்வி அவளுக்கு பாவாடை தாவணியை அணிவித்துவிட்டு தலையை வாரி பின்னலிட்டு குஞ்சலத்தை வைத்து விட்டாள். மல்லிச்சரம் போல ஆனந்தி செய்து கொடுத்திருந்த செயற்கை மலர்ச்சரத்தை வைத்துவிட்டாள். பார்ப்பதற்கு தமிழ்ப்பெண் போலவே இருந்த பிங்கியைக் கண்டதும் செல்விக்கே பிரமிப்பாய் இருந்தது.

பிங்கி செல்வியின் அறையில் தயாராகி வெளியே ஹாலுக்கு வந்தாள். ஆனந்தியும் தீபிகாவும் கௌரியும் அசந்துவிட்டனர்.

தன் பணியிலிருந்து வந்த விராட் பிங்கியைப் பார்த்து வியந்து போனான். குளிக்கப் போகாமல் மனைவியின் அருகில் அமர்ந்துவிட்டான்.

செல்வி அவளை அமரவைத்து திருஷ்ட்டி சுற்றிப் போட்டுவிட்டு பாட்டு பாடினாள். கூடச்சேர்ந்து ஆனந்தியும் பாடினாள்.

"சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்"

சூரஜைக் காண அவனுடன் யூஎஸ்ஸுக்கு சென்றிருந்த டீம் மேட் (team mate) ஒருவனான தமிழ் நண்பன் பால்பாண்டியன், தன் புத்தம்புது மனைவியுடன் சூரஜின் அலுவலகம் வந்திருந்தான். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சூரஜ் வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் வரும்போது செல்வியும் ஆனந்தியும் பாடிக்கொண்டிருந்தனர்.

பாடலைக் கேட்டபடி உள்ளே வந்தார்கள். விராட் எழுந்து வந்தவர்களை வரவேற்றான். பாடல் முடிந்ததும் எல்லாரும் கைதட்டினார்கள்.

சூரஜ் எல்லாருக்கும் நண்பனையும் அவன் மனைவியையும் அறிமுகப் படுத்தினான்.

"இவன் என் நண்பன் பால்பாண்டியன்! எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவன்! இவங்க அவன் மனைவி நித்யா!"

"இவன் என் தம்பி மிஸ்டர் விராட், அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ்!"

"ஹலோ!" விராட் கை கொடுக்க, ஒவ்வொருவராக சூரஜ் அறிமுகம் செய்து வைத்தான்.

"இவங்க என் அம்மா மிஸஸ் கௌரி!"

"இவர் என் அப்பா மிஸ்டர் தீன்தயாள்!"

"இவ என் மனைவி தமிழ்ச்செல்வி!"

"இவங்க என் தம்பி மனைவி ஆனந்தி!"

"இவ என் தங்கை தீபிகா! ஷீ இஸ் எ டாக்டர்!"
எல்லாரும் வணக்கம் சொன்னார்கள்.

அப்படி அறிமுகம் செய்யும் போது பிங்கியைப் பார்த்து,

"ஹேய்! பிங்கி! நீயாடா! அப்டியே தமிழ்ப்பொண்ணு மாதிரியே இருக்கடா!" என்றான்.

"பையா! நானும் தமிழ்ப் பொண்ணுதானே!" என்றாள் பிங்கி!

"இவ எங்க பக்கத்து வீட்டு பொண்ணு, பேபி பிங்கி!" அவளையும் அறிமுகம் செய்து வைத்தான்.

"ஹூம்! பையா! நான் பேபியா!" செல்லமாய் சிணுங்கினாள் சிறுமி!

"எப்பவும் நீ எங்களுக்கு பேபி தான்டா!" சூரஜ் சிரித்தபடி சொன்னான்.

நித்யா தன் கணவனிடம்,

"ஏங்க! இவளப் பாத்தா நம்ம சரவணன் சித்தப்பா பொண்ணு துர்காவப் பாக்காறாப்பல இருக்குல்ல!" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"ம்! நானும் அததான் நெனச்சேன்!" என்றான் பால்பாண்டி.

'தாவணி கட்டிக்கொண்டு வருகிறேன் என்று போனவளைக் காணோமே..' என்று மகளைத் தேடி வந்த யமுனா மகளைக் கண்டதும் அப்படியே அசைவற்று நின்றுவிட்டாள்.

"பிங்கி! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே!" என்று கண்ணீருடன் மகளைக் கண்டதும் முத்தமிட்டுவிட்டு ஹிந்தியில் கூறினாள்.

யமுனாவைக் கண்டதும் பால்பாண்டி,

"யமுனா அத்த! நீங்களா? அப்ப இவ கண்மணிதானே!" என்றான்.

யமுனா அப்போதுதான் அங்கே நின்றிருந்த மற்றவர்களைக் கண்டாள்.

"ஆமா! இவ கண்மணிதான்! ஆனா தம்பி நீங்க யாருன்னு தெரியலையே!" கண்ணைத் துடைத்துக் கொண்டு பாண்டியனிடம் தமிழில் சொன்னாள்.

"நான் பால்பாண்டியன்! உங்க நாத்தனார் அங்கையற்கண்ணியோட மகன்!"

"பாண்டி! நீயா! நல்லா இருக்கியா? சின்னப்ப பாத்தது! அடேயப்பா! எவ்ளோ பெரிசா வளந்திட்ட! ஆனா நீ இங்க எப்டி?" யமுனா முகம் மலர பேசினாள்.

"சூரஜும் நானும் ஒரே ஆஃபீஸ்லதான் வேல செய்றோம்! அவனப் பாக்கதான் வந்தேன்! ஆங்.. அத்த இவ என் மனைவி, நித்யா! போன வாரம்தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு அத்த!" சொல்லிவிட்டு மனைவியிடம் திரும்பி,

"நித்யா, இவங்கதான் செந்தில் மாமா வைஃப் யமுனா!" என்றான்.

சூரஜும் மற்றவர்களும் இதை அதிசயமாய்ப் பார்த்தார்கள். செல்வி வந்தவர்களுக்கு தேநீர் கலந்து எடுத்து வந்தாள். பிங்கியும் தீபிகாவும் எல்லாருக்கும் அதை கொடுத்தார்கள்.

"கண்மணி, இவர் உனக்கு மாமா! இவங்க உனக்கு அக்கா! வணக்கம் சொல்லும்மா!" யமுனா தன் மகளிடம் கூறினாள். பிங்கியும் இருகரம் கூப்பி வணக்கம் சொன்னாள்.

"பாண்டி வாப்பா! நம்ம வீட்டுக்கு வா!" யமுனா அழைக்க,

"வரேன் அத்த! சூரஜ் கிட்ட பேசிட்டு வந்திடறேன்" என்றான்.

"பிங்கி! நீ மாமாவையும் அக்காவையும் கூட்டிட்டு வாம்மா?" மகளிடம் சொல்லிவிட்டு செல்வியிடம் ஏதோ கூறிவிட்டு போனாள்.

"மாமா! இப்பதான் எங்கம்மா முகத்தில சின்னதா சிரிப்ப பாத்தேன்! உங்கள பாத்ததுனால வந்த சிரிப்பு! ஆமா! எங்கம்மாக்கு கூட சிரிக்கத் தெரியும்னு எனக்கு காட்டினதுக்கு தேங்க்ஸ்! வாங்க மாமா! வாங்க அக்கா!" புதியவர்களிடம் கூறி அன்போடு அழைத்தாள் சிறுமி!

"இதோ உங்க சூரஜ் பையா கிட்ட பேசிட்டு வந்திடறேன்!" பிங்கியிடம் சொல்லிவிட்டு சூரஜைப் பார்த்தான்.

"சூரஜ், இவங்க என்னோட அத்தை! என் தாய்மாமா செந்தில்வேலனோட வைஃப்! இந்தப் பொண்ணு கண்மணி பொறக்கும் போது நான் நைன்த் படிச்சிகிட்டு இருந்தேன். கண்மணிக்கு அஞ்சு வயசிருக்கும்போது எங்க மாமாவ ரௌடிங்க தாக்கி கொலை பண்ணிட்டாங்க! நான் ப்ளஸ்டூ படிச்சிகிட்டு இருந்தேன்! அதுக்கப்றம் அத்தைய காணல! இவங்க டெல்லியில இருக்கறதா சொன்னாங்க! இவங்க எப்டி மும்பை வந்தாங்க!"

"நா, என் தம்பி தங்கை, எங்க பேரண்ட்ஸோட டெல்லில ஒரு ஃபங்ஷன் அடென்ட் பண்ணிட்டு மும்பை வரதுக்கு டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயினுக்கு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும்போது யாரோ இவங்கள கொலை பண்ண வரதா சொல்லி அழுதாங்க! இவங்களோட இவங்கம்மாவும், இந்த பிங்கியும் இருந்தாங்க! பிங்கிக்கு அஞ்சு வயசிருக்கும்! எங்கம்மா உடனே பிங்கிக்கு தலைல எங்க மார்வாடி மாதிரி தலைப்பாகை கட்டிவிட்டு ஆண்குழந்தை மாதிரி ட்ரஸ் பண்ணி விட்டுட்டாங்க! இவங்களுக்கும் தன்னோட சுடிதார குடுத்து போட்டுக்கச் சொன்னாங்க! ரௌடிங்க வந்து எங்ககிட்ட கேக்கும்போது அவங்கம்மாவ பாத்து தன்னோட மாமியார்னு சொன்னாங்க! யமுனாக்காவ பாத்து தன்னோட நாத்தனார்னு சொன்னாங்க! எங்க வழக்கப்படி பெண்கள் தலைல முக்காடு போட்ருப்பாங்க! அத அடுத்த ஆம்பளைங்க எடுக்கக் கூடாது! அதனால ரௌடிங்களால யமுனாக்காவோட முகத்த பாக்க முடியல! ரௌடிங்க போய்ட்டாங்க! நாங்க எல்லாரும் ஒரே ஃபேமிலியா மும்பை வந்திட்டோம்! எங்கப்பா அவருக்குத் தெரிஞ்ச நண்பர் மூலமா மும்பை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல நர்ஸ் வேலை வாங்கிக் குடுத்தார். நா அப்ப ப்ளஸ் டூ முடிச்சிருந்தேன்!"

"ஓ! பெரிய மனசு உங்க பேரண்ட்ஸுக்கு! எங்க அத்தைய இன்னிக்கு உன்னால கண்டுபிடிச்சிட்டேன்! ரொம்ப தேங்க்ஸ் சூரஜ்!"

"நீ கண்டுபிடிச்சா போறாதுடா! யமுனாக்காவ அவங்க மாமியார் அதான் உங்க பாட்டி ஏத்துக்கணும்! அதுக்கு நீ எதாவது பண்ணினா எங்க எல்லாருக்கும் நெஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கும்!"

"கண்டிப்பா பண்றேன்டா! யார் எவர்ன்னே தெரியாத நீங்கல்லாம் எங்க அத்தைக்கு உதவி பண்ணி இருக்கீங்க! இது என் கடமை! நான் இவங்கள என் பாட்டியோட சேத்து வெப்பேன்!"

"ரொம்ப தேங்கஸ்டா!"

"சரி! நான் அத்த வீட்டுக்குப் போறேன்! பாவம் கண்மணி வெயிட் பண்ணிட்டு இருக்கா!"

"ம்! ஓகே!"

சூரஜின் வீட்டில் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு பாண்டியன் தன் மனைவி நித்யாவை அழைத்துக்கொண்டு கண்மணியுடன் யமுனாவின் வீட்டுக்குப் போனான்.

தீபிகாவும் செல்வியும் ஆரத்தி எடுக்க புதுமணத்தம்பதிகளான பாண்டியனும் நித்யாவும் யமுனா வீட்டுக்குள் வந்தனர்.

யமுனாவின் வீடு மிகச் சாதாரணமாய் இருந்தது. அதிக வசதிகள் இல்லை. அமர்வதற்கு ஒரே ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது.

ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்பது போல பாண்டியனும் நித்யாவும் யமுனாவிடம் அன்பு செலுத்தினார்கள்.

பிங்கி தன் தாவணியை மாற்றிவிட்டு வந்தாள். அம்மா தந்த உணவை உண்டுவிட்டு புதியவர்களிடம் சொல்லிவிட்டு படிக்கப் போய்விட்டாள்.

அவள் போன பின்பு பாண்டியன் கேட்டான்!

"அத்த தயவு செஞ்சு சொல்லுங்க! நீங்க ஓடிப் போய்ட்டதா தான் ஊர்ல எல்லார்கிட்டயும் பாட்டி சொல்லிகிட்டு இருந்தாங்க! என்னதான் நடந்துச்சு! உங்களுக்காக இல்லாட்டியும் கண்மணிக்காக சொல்லுங்க! அவ அந்தக் குடும்பத்து மூத்த பேத்தி! மூத்த பேத்தி மகாலக்ஷ்மின்னு சொல்வாங்க! அவ அவளுக்கு உரிமையான இடத்தில வாழ நீங்கதான் உங்க வாயத் தெறக்கணும்! ப்ளீஸ்!"

"சொல்றேம்பா! நானும் எவ்வளவு நாள்தான் இந்த சுமைய தாங்குவேன்! யாராவது வர மாட்டாங்களான்னு தவிச்சுகிட்டுதான் இருந்தேன்!"

"சொல்லுங்க அத்த!"

யமுனா சொன்னாள். யமுனாவின் தாய் உடல்நிலை சரியில்லாத நேரம்! அவளது மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டது! யமுனா நர்ஸிங் கோர்ஸ் முடித்திருந்தாள். ஒரு மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது! ஆனால் அவள் செலவுக்கு அந்தப் பணம் போதுமானதாக இல்லை! அப்போது அவள் வேலை செய்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஒரு பணக்காரனின் தாயாருக்கு வீட்டோடு தங்கி பணிவிடை செய்ய நர்ஸ் தேவைப்படுவதாகவும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் சொல்லி தமிழ்நாட்டில் இருந்த அரசியல்வாதியிடம் அனுப்பினார்! அந்த பணக்காரன் ஒரு கயவன்! பார்க்கிற பெண்ணையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற இச்சை கொண்டவன்.

வேலையும் கிடைத்தது! முதல் வாரம் வழக்கமாகத்தான் இருந்தது. யமுனாவுக்கு தமிழ் தெரியாது! அடுத்த வாரம் அந்த பணக்காரன் யமுனாவை அடைய நேரம் பார்த்திருந்தான். அந்த நேரத்தில் அவனுடைய மாளிகைக்கு ஒரு அரசியல் பிரமுகர் விருந்தாட வந்தார். அவருடைய பாதுகாப்புக்காக காவலர்களும் வந்திருந்தனர். அவர்களில் செந்தில்வேலனும் ஒருவர். பாதுகாப்புப்பணியில் இருந்த செந்தில் யமுனாவைக் காப்பாற்றுவதற்காக அந்த பணக்காரரிடம் யமுனா தன்னுடைய காதலி என்றும் விரைவில் மணக்கவிருப்பதாகவும் சொல்லி யமுனாவை அங்கிருந்து காப்பாற்றினான்.

இவன் சொல்வது உண்மையா என்றறிய பின்னால் ஆள் அனுப்பினான் பணக்காரன்! அதனால் அருகில் இருந்த ஒரு அம்மன் கோவிலில் வைத்து தாலியைக் கட்டி உண்மையாகவே யமுனாவை தன் மனைவியாக்கிக் கொண்டான் செந்தில்!

பணக்காரனுக்கு என்ன நல்லெண்ணமோ, சரி பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டான்!

இங்கே செந்திலின் பெற்றோர் இந்தக் கல்யாணத்தை ஏற்கவில்லை! வாழ்ந்தால் இவளுடன் தான் வாழ்வேன் என்று யமுனாவை அழைத்துக் கொண்டு தனிக் குடித்தனம் வந்தான் செந்தில்! கூடவே அவளுடைய அம்மாவையும் வைத்துக் காப்பாற்றினான். கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்! ஓராண்டு கழித்து பெண்குழந்தை பிறந்தது! அதற்கு கண்மணி என்று பெயரிட்டு தன் கண்ணுக்குள் வைத்து வளர்த்தான் செந்தில்! அவள் ஒரு வீராங்கனையாக வளர வேண்டும்! தன் மனைவி அனுபவித்த கஷ்டம் போல தன் மகள் ஒரு கஷ்டமும் அனுபவிக்கவே கூடாது! அவளை ஒரு கலெக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு அவளை கண்ணும் கருத்துமாக வளர்த்தான்! ஆனால் விதி வலியது! கண்மணிக்கு ஐந்து வயதிருக்கும் போது அவனை ஒரு ரௌடி கும்பல் தாக்கியது! அதில் நெஞ்சில் துப்பாக்கி குண்டு தாங்கி வீரமரணம் எய்தினான்!

பணக்காரனின் வீட்டில் பணிபுரிந்த ஒரு வேலைக்காரி, அந்த கயவன் தன் வீட்டில் வேலைக்கு வரும் நர்ஸ் எல்லோரையும் நாசப்படுத்தி விடுவான் என்று புறம் பேசிவிட்டுப் போக, இதைக் கேட்ட அவனுடைய பெற்றோர் யமுனாவை ஏற்க மறுத்தனர்! குழந்தையையும் ஏற்க மறுத்தனர்!

விதியின் விளையாட்டு இதோடு நிற்கவில்லை! வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னை வாழ வைக்கவில்லையே என்ற வருத்தத்தோடு தன் தாயாரோடும் ஐந்து வயது பெண் குழந்தையோடும் டெல்லிக்கு ரயிலேறினாள் யமுனா!

அங்கு யமுனாவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்த மருத்துவர் இவள் அந்த பணக்காரனிடமிருந்து தப்பி வந்ததாக நினைத்துக் கொண்டு இவளை கொலை செய்ய ரௌடிகளை ஏவிவிட்டான்! அப்போதுதான் சூரஜின் பெற்றோர் இவளுக்கு அடைக்கலம் தந்தனர்!

இதைக் கேட்டதும் பாண்டியனுக்கும் நித்யாவுக்கும் இதயம் கனத்தது! அத்தைக்கும் கண்மணிக்கும் அவர்களுடைய உரிமையை பெற்றுத் தந்தே ஆகவேண்டும்! அவளை செந்தில் ஆசைப்பட்டபடி கலெக்டர் ஆக்கியே தீரவேண்டும் என்று மனதுக்குள் உறுதி பூண்டார்கள்.




அண்டை வீட்டில் வசிக்கும்
அழகுச் சிறுமி பிங்க்கியும்
அலங்காரம் செய்து கொள்ள
செல்வியின் உதவி நாடினாள்!

பாவாடை தாவணியில் மின்னி
நீண்ட சடையில் பூச்சரம் சூட்டி
தமிழச்சியாக உருமாறி நின்றாள்!
சிற்றாடை உடுத்தி தேவதையானாள்!

அனைவரும் கண்டு ஆர்ப்பரிக்க
சூரஜூடன் வந்த தமிழ் நண்பரும்
அழகுச் சிறுமியைக் கண்டதும்
திகைப்பில் உறைந்து நின்றனரே!

சிறுமியின் தாயை சந்தித்து
சிந்தையில் ஓடிய ஐயங்களும்
உண்மை எனவுணர்ந்து நின்ற பின்னர்
உரிய செயல் முடிக்க உறுதி பூண்டனரே!

யமுனாவும் கண்மணியும் எங்கள்
உறவுதான் எனறுரைத்த நண்பன்
ஊரில் வசிக்கும் உறவுகளுடன்
சிறுமியைச் சேர்த்திடுவேன் என்றான்!

நாளை வரும் நாள் நன்னாளாகிடுமோ!
சிறுமியின் எதிர்காலம் சிறந்திடுமோ!
இறைவன் வழி காட்டி விட்டான்! இனி
வாழ்வும் சிறந்திடுமே இவர்களுக்கு!


- C. புவனா.


- காதலின் மொழி என்ன?
 
Top