கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

36. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 36


ஆனந்தியின் வளைகாப்புக்கு சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் பெண் வீட்டார் அனைவரும் இரண்டு நாள் முன்னரே வந்து விட்டனர்.

வீடே களை கட்டியது. செல்வியையும் ஆனந்தியையும் அனைவரும் கொஞ்சி மகிழ்ந்தனர். பூங்குழலியும் மங்கையும் அருகில் நின்ற தீபிகாவை நெற்றியில் முத்தமிட்டு திருஷ்டி வழித்தனர்.

பாட்டி பேரன் பேத்திகள் எல்லாரையும் வட்டமாக அமர்த்தி சாதம் பிசைந்து கையில் போட்டபடி கதை சொன்னார்.

சூரஜுக்கும் விராட்டுக்கும் தீபிகாவுக்கும் அதிசயமாக இருந்தது. ஆனால் மிக மிக மகிழ்ச்சியாகவும் இருந்தது. பேசி சிரித்து கிண்டல் செய்து சாப்பிட்டனர். அனைவரின் உள்ளமும் பூரித்து இருந்தது.

வளைகாப்பு அன்று ஆனந்தி சிவப்பு பாடருடன் கூடிய வெந்திய நிற பட்டுப்புடவை உடுத்தி அதற்கேற்ற நகைகள் அணிந்து மங்கலகரமாய் இருந்தாள். அவளது நகைகளும் புடவையும் அவள் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் இருந்தது. அவள் முகம் பொன்னிறத்தில் ஜொலித்தது!

விராட் தன் அன்பு மனைவியை மென்மையாய் அணைத்து முத்தமிட்டான்.

அவளுடைய கை பிடித்து மெதுவாக கீழே அழைத்து வந்தான்.

"நான் கூட்டிகிட்டு போறேன் மாப்ள!" என்ற பூங்குழலியிடம்,

"ம்ஹூம்! என்னோட ஆனந்திய நான்தான் கூட்டிகிட்டு வருவேன் அத்த!" என்று கூறி அவனே அழைத்து வந்தான்.

பூங்குழலியும் கீர்த்திவாசனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.

செல்வி பச்சை பாடருடன் கூடிய நீல நிற பட்டுப் புடவை உடுத்தி இருந்தாள். மசக்கையினால் கொஞ்சம் சோர்வாகவே இருந்ததால் எந்த வேலையும் செய்யாமல் ஹால் சோபாவில் பாட்டியின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அவளருகிலேயே சூரஜும் அமர்ந்து விட்டான்.

தீபிகா பட்டுப் பாவாடை கட்டி தாவணி அணிந்து தலையில் சவுரி வைத்து பின்னி ஜடை வைத்து அதனடியில் குஞ்சலம் வைத்திருந்தாள். கையில் கல் வைத்த வளையல்கள், கழுத்தில் கல்வைத்த அட்டிகை, நீண்ட ஆரம், இடுப்பில் ஒட்டியாணம், வங்கி, நெற்றிச்சுட்டி, ராக்கொடி, காலில் கொலுசு என கோவில் நகைகள் அணிந்து சர்வாலங்கார பூஷிதையாக வந்தாள்.

செல்வி அவளுக்கு தாவணியை அணிவித்து ஜடையைப் பின்னி நகைகளை அணிவித்துவிட்டுதான் வந்து அமர்ந்தாள். தீபிகாவின் தோழிகள் அவளுக்கு மேற்கொண்டு அலங்காரம் செய்தனர். பார்ப்பதற்கு அச்சு அசல் தமிழ்ப்பெண் போலவே தோற்றமளித்தாள் தீபிகா.

பார்க்கும் அனைவரும் அவளைக் கொஞ்சிக் கொண்டே இருக்க, தீபிகா மகிழ்ச்சியுடன் வளைய வந்தாள்.

வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கியது. பெற்றவர்கள் பெரியவர்கள் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாரும் வந்து பல வண்ண கண்ணாடி வளையல்களை அழகாக ஆனந்தியின் கைகளில் அடுக்கி அவளுக்கு சந்தனம் குங்குமம் இட்டு அட்சதை தூவி வாழ்த்தினர். அனைவரும் நெஞ்சம் நிறைய தம்பதிகளை வாழ்த்தினர்.

வளைகாப்பு முடிந்ததும் எல்லாரும் நிச்சயதார்த்ததுக்கு தயாராக இருக்கும் போது வாசலில் கால் டாக்ஸியில் வந்திறங்கினான் ஆனந்தன்.

இவன் வரவு கீர்த்திவாசனுக்கு மட்டும் தான் தெரியும்! தன் மனைவி பூங்குழலியிடம் கூட அவர் சொல்லவேயில்லை!

அனைவரும் வாசலில் வந்து வரவேற்றனர். கௌரியும் தீன்தயாளும் தீபிகா அவசர அவசரமாக தயார் செய்த ஆரத்தியை எடுத்துக் கொண்டு வாசலில் வந்து ஆனந்தனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.

"ஆயியே! ஆயியே! தாமாத்ஜி! ஆயியே!" என்று வருங்கால மருமகனை வாய் நிறைய வரவேற்றாள் கௌரி!

"ஆண்டி! ஆப் ஆனந்த் போல் கர் புகாரியே!" என்றான் மருமகன்.

சூரஜும் விராட்டும் வீட்டு மாப்பிள்ளையை வரவேற்று வீட்டுக்குள் அழைத்து வந்தனர்.

"வாங்க மாப்ள ஸார்!" சூரஜ் சிரித்தபடி வரவேற்றான்.

"மாமா! ஆனந்த்னு கூப்டுங்க மாமா!"

"சரி ஆனந்த் மாப்ள!" சூரஜ் விடாமல் கூறினான்.

"வெறும் ஆனந்த் மட்டும் போதும் மாமா!"

"சரி அத அப்றமா டிசைட் பண்ணிக்கலாம்! முதல்ல உள்ள வாங்க!" விராட் உள்ளே அழைத்து வந்தான்.

வந்தவன் நேராக பாட்டியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

"பாட்டி! ஆசீர்வாதம் பண்ணுங்க!"

"வா! வா! வா! ஆனந்தா! நல்லா இருப்பா! ரொம்ப சந்தோஷம்!"

தீன்தயாளுக்கும் கௌரிக்கும் நமஸ்காரம் செய்தான்.

பெரியப்பா, பெரியம்மா, தன்னுடைய அப்பா, அம்மாவுக்கும் நமஸ்காரம் செய்தான்.

"வா! ஆனந்த்! நீ வரேன்னு சொல்லவேல்ல!" கிரிதரன் கேட்டார்.

"ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் பெரிப்பா!"

"யாருக்கு சர்ப்ரைஸ்! தீபிகாவுக்குதானே!" மங்கை சிரித்தபடி கேட்டாள்.

"பெரிமா! நீங்க கூட கிண்டல் பண்றீங்களே!" வாய் இப்படிச் சொன்னாலும் அவன் இந்தக் கிண்டல்களை ரசிக்கவே செய்தான். அவனுடைய முகம் சிவந்து அவன் வெட்கப்படுவதை காட்டிக் கொடுத்தது.

பூங்குழலி ரகசியமாய் அவன் காதில்,

"ஏய்! மரியாதையா சொல்லு! உங்கப்பாவுக்கு நீ வரது தெரியும்தானே!"

"இல்லமா! நான் யாருக்குமே சொல்லல!"

"எனக்கு தெரியும்டா! உனக்கு இந்த வீட்டுக்கு வழி தெரியாது! இதுக்கு முன்னாடி நீ இங்க வந்ததில்ல! யார்கிட்டயும் சொல்லாம வரணும்னா, உனக்கு அட்ரஸ் தெரியணும்! அது உனக்கு தெரியாதுன்னு எனக்குத் தெரியும்! உங்கப்பாவத் தவிர வேறு யார்கிட்டயும் நீ வரப்போறத சொல்லல! கரெக்ட்டா?" அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினாள்.

"எப்டிமா! நீ ஜீனியஸ்மா!"

"போடா லூசு!" நகர்ந்துவிட்டாள்.

அருகில் இருந்த செல்வியின் கையை குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தான்.

"ஹாய்க்கா! கங்க்ராட்ஸ்!"

"தேங்க்ஸ்டா! வெல்கம்!"

தங்கையின் நெற்றியில் முத்தமிட்டான்.

"கங்கிராட்ஸ் டீ ஆனந்தி!"

"தேங்க்யூ! வெல்கம்! வா உக்காரு!"
தங்கையின் அருகிலேயே அமர்ந்துவிட்டான். ஆனால் அவன் கண்கள் அவனுடைய தேவதையைத் தேடிக் கொண்டிருந்தது!

ஆரத்தியை தயார் செய்து கொடுத்துவிட்டு பின் வழியாக மாடிக்கு ஓடிவிட்டாள் தீபிகா! அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி! மறுபக்கம் வெட்கம்! ஆனந்தனின் முன்னால் தாவணியிலா!? அதை மாற்றி ஒரு சுடிதாரை அணிந்துவிடலாம் என்று நினைக்கும் போது செல்வி போன் செய்து மாற்றக் கூடாது என்று கூறினாள். அவன் உனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது போல நீ அவனுக்கு அளிக்கும் சர்ப்ரைஸ் இதுதான் என்றாள். அவளுக்கு படபடவென்று அடித்துக் கொண்டது.

அவளுடைய தோழிகள் மாடியிலிருந்து ஆனந்தனைப் பார்த்துவிட்டு தீபிகாவிடம்,

"ஹே! ஹீ இஸ் ஹாட் யா!" என்று கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

செல்வி விராட்டிடம் தங்கையை அழைத்து வர சொன்னாள். அவனும் சூரஜும் மாடிக்கு சென்றனர். தீபிகாவின் தோழிகள் புடை சூழ சூரஜும் விராட்டும் இருபக்கமும் காவல் வர ஒரு இளவரசியைப் போல வந்தாள் தீபிகா!

ஆனந்தன் தீபிகாவைப் பார்த்ததும் மயங்கியே விட்டான். அதுவும் அவள் பாவாடை தாவணியில் தமிழ்ப் பெண் போலவே அலங்காரம் செய்து கொண்டு வந்ததைப் பார்த்து ஒரு நொடி உலகையே மறந்துவிட்டான்.

தீபிகா ஆனந்தனின் முன்னால் தலை குனிந்தபடி கைகூப்பி வணங்கிவிட்டு செல்வியின் அருகில் அமர்ந்தாள். அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை! அவளைத்தான் வெட்கம் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்ததே! எப்படி அவள் அவனை நிமிர்ந்து பார்ப்பாள்? செல்வி மெதுவாக தீபிகாவின் காதில் கிசுகிசுத்தாள்.

"என் தம்பி உன்னப் பாக்கதானே ஓடி வந்திருக்கான்? நீ அவனப் பாக்காமலேயே இருந்தன்னா அவன உனக்கு பிடிக்கலன்னு அர்த்தமாயிடும்! அவன உனக்கு பிடிக்கும்னா நிமிர்ந்து அவனப் பாரு சுட்கி!"

'ஹையோ! ஹே பக்வான்! யே க்யா முஸீபத்!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு மெதுவாய் நிமர்ந்து ஆனந்தனைப் பார்த்தாள்!

அவன் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பார்த்ததும் அவளைப் பார்த்து புன்னகை செய்தான். 'எவ்ளோ அழகா இருக்கான்..' என்று அவள் நினைத்தாள்.

அதற்கு மேல் அவளுக்கு அங்கு இருக்க முடியவில்லை! எழுந்து மாடிக்கு ஓடிப் போய்விட்டாள்! அவள் ஓடும் போது கேட்ட சிரிப்புச் சத்தமும் கால் கொலுசின் சத்தமும் ஆனந்தனின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது.

அவனுக்கு அவளிடம் பேச வேண்டும்! அவள் அழகாய் இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும். நீங்க வந்தா நல்லாயிருக்கும் என்று ஆசையாய் தன்னை கூப்பிட்டதாலேயே வேலையை போட்டுவிட்டு ஓடி வந்திருக்கிறேன் என்று அவளிடம் சொல்ல வேண்டும். இவள் என்னடாவென்றால், "வாம்மா மின்னல்!" மாதிரி மறைந்து விட்டாளே என்று நினைத்தான்.

ஆனந்தியும் செல்வியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் கண் ஜாடை செய்து சிரித்துக் கொண்டனர்.

ஆனந்தன் தன் தங்கையின் கையை சுரண்டினான்.

"என்ன ஆனந்த்?" அப்பாவியாய் கேட்டாள்.

"ஏய்! இதெல்லாம் கொஞ்சமாவது நியாயமா? உன் நிச்சயதார்த்தம் போது நான்தானே மாப்ளய உன்கிட்ட கூட்டிட்டு வந்தேன்!"

"அதுக்கு?" சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

"ப்ளீஸ்டீ!" கெஞ்சுதலாய் கேட்டவனிடம் ,

"நீங்க வாங்க மாப்ள! நான் நன்றி மறக்கவே மாட்டேன்!" என்று விராட் ஆனந்தனை அழைத்துச் சென்றான்.

"தேங்க்யூ மாப்ள!" என்று அவன் கையைக் குலுக்கிவிட்டு அவனுடன் நடந்தான்.

விராட் தீபிகாவின் தோழிகளை கீழே அனுப்பிவிட்டு ஆனந்தனை அவளுடன் பேச அனுப்பி வைத்தான்.

"தீபிகா!"

"ம்!" தலை குனிந்து கொண்டே பேசினாள்.

"நான் உன்ன பாக்கணும்னு ஓடி வந்திருக்கேன்! நீ என்னப் பாக்கவே மாட்டேங்கறியே! என்ன உனக்கு பிடிக்கலயா?"

"அப்டியெல்லாம் இல்ல!" அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் அவளையே பார்த்தான். அவளுக்கு வெட்கமாக இருந்தது. இரு கைகளாலும் தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவன் அவள் அருகில் வந்து அவளுடைய கையை விலக்கினான். அவளுக்கு இதயம் வெகு வேகமாக அடித்துக் கொண்டது.

அவன் அவள் கண்களைப் பார்த்து,

"தீபிகா! நீ இந்த ட்ரஸ்ல ரொம்ப ரொம்ப அழகா இருக்க! எங்க ஊர் பொண்ணு மாதிரியே இருக்க! நான் உனக்கு சர்ப்ரைஸ் தரணும்னு நெனச்சா நீ எனக்கு சர்ப்ரைஸ் தந்திருக்க! எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு!"

அவள் கண்கள் படபடவென அடித்துக் கொண்டது. அவன் கண்ணோடு கண் பார்க்க முடியாமல் தடுமாறினாள். அவன் மந்தகாசப் புன்னகையுடன் அவள் இதழ் நோக்கி குனியவும் அவன் நெஞ்சின் மேல் கை வைத்து தள்ளினாள்.

"நந்து! ப்ளீஸ்! ய கலத் ஹை!" மிக மிக மெல்லிய குரலில் கூறினாள்.

அவன் அவளை கேள்வியாய் நோக்கிவிட்டு நகர்ந்தான்.

"தீபிகா! என்ன உனக்கு பிடிக்கலையா! என்னோட ஸிஸ்டர்ஸும் பாட்டியும் என்னப் பத்தி பேசினதுனால ஒரு அட்ராக்ஷன் வந்துடுச்சா! அத லவ்ன்னு தப்பா நெனச்சுட்டியா? அதான் என் முன்னாடி வர மாட்ற! என் கிட்ட பேச மாட்ற! நானா உன்கிட்ட பேசினாலும் நீ வாயத் தெறக்க மாட்ற?!" தெளிவாகக் கேட்டான்.

'ஐயியோ! இவன் உன்ன தப்பா புரிஞ்சிகிட்டான்.. பதில் சொல்லி உன் மனசில இருக்கறத அவனுக்கு புரிய வை தீபிகா!' என்று தனக்குள் அறிவுறுத்திக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவன் கலவரமடைந்தான்.

"ஹேய்! தீபிகா! வாட் ஹேப்பன்ட்? வொய் ஆர் யூ க்ரையிங்! யாராவது பாத்தா என்னை தப்பா நெனக்கப் போறாங்க!"

அவள் சட்டென்று கண்ணை துடைத்துக்கொண்டாள். அவனருகில் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

"நந்து! நீங்க வரணும்னு ரொம்ப ஆசப்பட்டேன்! ஆனா நீங்க வரலன்னு சொல்லிட்டீங்க.. நீங்க வரப்போறது இல்லைன்னு சொன்னதும் நா அத பெரிசா எடுத்துக்கல.. காலையில சொல்லி மதியம் வரக் கூடிய இடத்தில நீங்களும் இல்ல.. இது கூட புரியாத அளவுக்கு நா குழந்தையும் இல்ல.. உங்களுக்கு ரெஸ்பான்சிபிலிட்டி இருக்குன்னு என்னால புரிஞ்சிக்க முடியும்..

நீங்க வரலன்னு சொன்னதால இந்த சௌத் இண்டியன் காஸ்ட்யூம் சூஸ் பண்ணினேன். ஆனா உங்க முன்னால இந்த டிரஸ்ல நா.. அன்-ஈசியா ஃபீல் பண்ணினேன்.. எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு.. ஆனா எங்க உங்களுக்கு இந்த மாதிரி ட்ரஸ் பண்ணினா பிடிக்காதோன்னு பயமாவும் இருக்கு! வெக்கமாவும் இருக்கு! நீங்க கிஸ் பண்ண வந்தப்ப ரொம்ப பிடிச்சுது! ஆனா, இன்னும் நிச்சயதார்த்தம் முடியலையே! அது முடியாம கிஸ் பண்ணிகிட்டா தப்புல்ல! அதான் வேண்டாம்னு சொன்னேன்! இப்ப உங்களப் பாத்தவுடனே வெக்கமா இருக்கு! இந்த எக்ஸ்ம்க்கு சரியா படிக்காம போய் க்வஸடின் பேப்பரப் பாத்தவுடனே ஒரு மாதிரி கன்ஃப்யூஷன் கலந்த பயம் வருமே அது மாதிரி இருக்கு! எனக்கு இத ஹேன்டில் பண்ணத் தெரில! அதான்!" நீளமாகப் பேசினாள். அவனுடைய கையை விடுவிக்காமலேயே பேசினாள்!

அவள் சொன்னதைக் கேட்டதும் அவனுக்கு சிரிப்பு வந்தது! அவளை அப்படியே கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டும் போல இருந்தது.

தன்னை அடக்கிக் கொண்டான். அவள் கன்னத்தைக் கிள்ளி தன் கையில் முத்தமிட்டான்.

"தீபிகா! ஐ அன்டர்ஸ்டாண்ட்! இந்த ட்ரஸ்ல நீ ஒரு இளவரசி மாதிரி இருக்க!"

"இளவரசின்னா?!"

"ராஜகுமாரி! ம்! ப்ரின்ஸஸ்! அப்டியே இந்த ஃபேரி டேல்ஸல்லலாம் வருமே.. அது மாதிரி இருக்க! எனக்கு உன்ன பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு! இப்டி நீ ட்ரஸ் பண்ணியிருப்பன்னு நான் நெனச்சு பாக்கல! நெனச்சு பாக்கணும்னும் தோணல! நீதானே சொன்ன! நேர்ல வாங்க! நீங்க வந்தா நல்லாயிருக்கும்னு.. உனக்காகவே நான் ஓடி வந்தேன்! நீ என்னப் பாக்கமலே ஓடி வந்துட்ட.. அதான் நான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்! தட்ஸ் ஆல்! ரிலாக்ஸ்!" என்றான்.

"தேங்க்ஸ்!" அவள் மனம் நிம்மதி அடைந்தது!

அவளுடைய உள்ளங்கையில் முத்தமிட்டு அவளுடைய அறையைவிட்டு வெளியே வந்தான்.

கீழே நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. சூரஜும் விராட்டும் ஆனந்துக்கு மரியாதை செய்தனர். ஆனால் அவனுக்குப் போட மோதிரம் வாங்கவில்லை! அவன்தான் வரப் போவதில்லையே என்று விட்டு விட்டனர். கல்யாணத்தின் போது வாங்கிக் கொள்ளலாம்! இப்போது அவசரம் இல்லை என்று அவனுக்கு மோதிரம் வாங்காமல் இருந்து விட்டனர். ஆனால் இப்போது மாப்பிள்ளையாய் வந்து நிற்பவனுக்கு மோதிரம் போட வேண்டாமா? என்ன செய்ய என்று சூரஜும் விராட்டும் கையைப் பிசைய,

"பரவால்ல மாப்ள! நோ ஃபார்மாலிட்டீஸ்!" என்று பெருந்தன்மையாய் விட்டுக் கொடுத்தார் கீர்த்திவாசன்.

ஆனால் ஆனந்தியும் செல்வியும், தங்கள் கணவர்களிடம் அவர்களுக்கு தங்கள் தந்தை போட்ட மோதிரத்தை கழற்றித் தரச் சொன்னார்கள். அவர்களும் மகிழ்ச்சியுடன் கழற்ற முற்படும் போது, தீன்தயாள் அவர்களைத் தடுத்தார்.

மருமகனுக்கு மாமனார்தான் மோதிரம் போட வேண்டும்! நான் என் மாமனார் எனக்குப் போட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை என் மருமகனுக்குப் போடுகிறேன் என்று சைகையால் உணர்த்தி தன் கையிலிருந்து தன்னுடைய மோதிரத்தைக் கழற்றி சூரஜிடம் கொடுத்து ஆனந்தனுக்கு அணிவிக்கச் செய்தார்.

தீபிகாவுக்கு செய்ய வேண்டிய மரியாதையை செல்வியும் ஆனந்தியும் செய்தார்கள். பூங்குழலி தான் வாங்கிய தங்கச்சங்கிலியை ஆனந்தியிடம் கொடுத்து தீபிகாவுக்கு அணிவிக்கச் செய்தாள்.

லக்னப் பத்திரிகை வாசிக்க நிச்சயதார்த்த வைபவம் இனிதே நிறைவுற்றது.

ஆனந்தனும் தீபிகாவும் ஜோடியாய் நின்று அனைவரையும் நமஸ்காரம் செய்தனர். பூங்குழலியும் கௌரியும் ஆரத்தி எடுத்தனர்.

லக்ஷ்மி பாட்டி அனைவரையும் அமர்த்தி திருஷ்ட்டி கழித்தார்.

வளைகாப்பு வைபவமும் நிச்சயார்த்த வைபவமும் நிறைவுற்றபின் விருதுண்ண வந்த அக்கம் பக்கத்தவர்களை சூரஜும் விராட்டும் அன்போடு உபசரித்தனர். அதன் பின்னர் பிள்ளை வீட்டாரை உணவுண்ண அழைத்தனர்! ஆனால் இம்முறை மங்கையும் பூங்குழலியும் விராட் ஆனந்தி திருமணத்தின்போது எப்படி ஒன்றாக உணவுண்டோமோ அப்படித்தான் இப்போதும் தொடர வேண்டும் என்று கூறி அனைவரையும் அழைத்தனர். அதன்படியே அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவுண்டனர்.




வளை சூட்டும் நன்னாளில்
வந்து சேர்ந்தான் மன்னவனும்!
வீட்டினரும் புது மாப்பிள்ளையை
வரவேற்றே கொண்டாடினர்!

எதிர்பாராத மங்கையோ நாணி
ஓடி ஒளிந்தாள் தன்னறையில்!

தமிழ்ப்பெண்ணாக உருமாறி நின்ற
தன்னவளை மன்னவன் இரசித்தான்!

தனியே பேசிக் களித்தனர்!
காதலில் கனிந்தே சிரித்தனர்!
இன்று போல் என்றும் அன்புடன்
இதயங்கள் இணைந்து மகிழட்டும்!


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top