கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

4. அதிர்ஷ்டம்

Appusiva

Moderator
Staff member
சாரதா டீச்சர் எந்தளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பது அவரின் வார்த்தைகளில் புரிந்துகொண்டான் ப்ரகாஷ். பணிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் இப்படியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்தான். யாரும் நம்புவதற்கே சிரமம்தான்.

“குனிஞ்ச தல நிமிராம எவ்வளவு நேரம்ப்பா நடப்பாரு ?” என்ற வார்த்தைகளில் எவ்வளவு சோகம்.

அவர் குறிப்பிட்டது அவரது கணவர் பூவராகன் சார் பற்றி. பூவராகன் சார் ப்ரகாஷின் ஒன்பதாம் வகுப்பு தமிழாசிரியர். மிக எளிய மனிதர்.

“ யாரெல்லாம் ட்யூசன் போறீங்க …..? ” என்பார்.

யாரும் கை தூக்கவில்லை. வம்பு. அறிவியல் ஆசிரியர்களிடம் ட்யூசன் போகும் மாணவர்களுக்கு வகுப்பு தேர்வுகளில் செய்முறை பாடங்களில் முழுமார்க் உண்டு. அச்சு அசலாய் வரையும் சிவாவுக்கு பத்துக்கு ஏழும், மனித செல்லுக்கு பேட்டரி செல் வரைந்த நாகராஜ்க்கு பத்து மார்க்கும் கொடுத்த காலம். நல்ல மார்க் எடுத்தால் “என்ன ட்யூசனா…?” என்ற கேள்வியிலேயே சுருக்கென்றிருக்கும்.

“ சரி… யாரெல்லாம் போகல….. ? ” என்பார்.

ப்ரகாஷ், சிவா, இன்னும் இரண்டு பேர் கை தூக்கினார்கள்.

“ நாளையில இருந்து நீங்க சாயந்திரம் வீட்டுக்கு வந்திருங்க… ட்யூசன் எடுத்திடுவோம். “

“ சார்… எங்க வீட்ல வேணாம்பாங்க “

“ தம்பி.. ஃபீஸ் ல்லாம் வேணாம்பா ”

இப்படி இலவச ட்யூசனில் படித்துதான் நல்ல மார்க் வாங்கினார்கள். பூவராகன் சாரின் மனைவி சாரதா டீச்சர், ஆங்கில வகுப்பெடுப்பார். அவர்களது ஒரே மகன் டாக்டருக்கு படித்து அப்போதே அமெரிக்காவில் பணியிலிருந்தார். சார் தமிழாசிரியர் எனினும் கணிதம், அறிவியலில் அபார ஞானம். எந்த கேள்விக்கும் குறிப்புகளை பார்க்காமல் பதிலளிப்பார். அப்புறம் ஏன் தமிழில் உயர்கல்வியை தேர்ந்த்தெடுத்தார் என்ற பல நாள் கேள்விக்கு ஓர் நாள் பதிலளித்தார்.

“ அறிவியலில் மிகுந்த ஆர்வம் உண்டுப்பா…. முக்கியமா ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரி, குவாண்டம் பிஸிக்ஸ், ஆனா தமிழ் படிக்க வெறி… எவ்ளோ இருக்கு… இப்ப என்ன கெட்டுப்போச்சு… “ என்பார்.

வருடம் முடியும் ஓர் சமயம், வீடு சுத்தம் செய்ய ஒரு நாள் ட்யூசன் விடுமுறை என்றார். இவர்கள் நால்வரும் அன்றும் அவர் வீட்டுக்கு சென்றார்கள். சுத்தம் செய்ய உதவுவதாய் சொன்னார்கள். பலவிதமாக மறுத்த அவர், அன்பின் பிடிவாதத்தால் புத்தக அலமாரியை மட்டும் சுத்தம் செய்ய அனுமதித்தார். பிரம்மிப்பின் உச்சத்தை அன்று அடைந்தார்கள். ஒரு ஆயிரம் புத்தகமாவது இருக்கும். தமிழ், ஆங்கில மொழிகளில் இலக்கியம், அறிவியல், கட்டுரைகள், ருஷ்ய இலக்கியங்கள்….. முடிந்து கிளம்பும்போது, நன்றி சொல்லும் விதமாக ஆளுக்கொரு புத்தகம் எடுத்துக்கொள்ள சொன்னார்.
ப்ரகாஷ், துடைக்கும்போதே கண்ணை உறுத்திய பெரியார் புத்தகத்தை எடுத்தான்.

“ டேய்… இதெல்லாம் வேறடா.. உங்க வீட்ல திட்டப்போறாங்க.. ”

“ பரவால்ல சார்…. சமாளிச்சுக்குவேன் “

அவர் தீவிர பெரியாரிஸ்ட் என்பதையும், அவர் வீட்டில் சாமி படங்களே இல்லாமல் இருப்பதையும், சாரதா டீச்சர் மட்டும் அவ்வப்போது கோயில்களுக்கு போய் வருவதையும், மிக முக்கியமாக அவர் தனது கருத்துகளை இதுவரை யாரிடமும் திணித்ததில்லை என்பதையும் இந்த ஓராண்டில் அவர்கள் அறிந்திருந்தனர்.

அதன்பின் பன்னிரண்டாம் வகுப்பு முடியும் வரை அவருடனான நட்புறவு ப்ரகாஷுக்கு சற்று ஆழமாகவே தொடர்ந்தது. மானசீக குருவாகவே அவரை வரிந்து பல தடவை கருத்து விவாதங்களில் கூட ஈடுபட்டிருப்பான். நல்ல பையனை சாமி கும்பிடாம பண்ணிட்டாரே… என டீச்சர் மட்டும் புலம்புவார்கள். பத்தாண்டுகளில் திருமணம் முடிந்து வெளியூர் வேலையிலமர்ந்து…. தற்போது சொந்த ஊர் வந்து அவரை பார்க்க வந்த இடத்தில்….

“ நம்ப முடில …டீச்சர், இத்தனை வயசுக்குமேல எப்படி இந்தமாதிரி மாறினார் ? ” என்றான் ப்ரகாஷ்.

கண்ணை துடைத்தபடி, டீச்சர் சொல்ல ஆரம்பித்தார்.

“ யுஎஸ் ல… பையன் இருந்தானில்லப்பா, பேரன், இப்ப இருந்தா பத்து வயசிருக்கும்… என் மகனோட கார்ல போயிருக்கான். ஒரு இடத்தில் கதவ சாத்தாம என் பையன் கீழே இறங்கி ஃபோன் பேசிட்டிருந்திருக்கான். பேரன் இறங்கி ரோட்ல நடந்தத கவனிக்கல… ஆக்ஸிடெண்ட்…… அஞ்சு வயசுப்பா…..”

கலங்கிய விழிகளுடன் அவர்களை பார்ப்பதை தவிர்க்கவே நினைத்தான். பக்கத்தில் இருந்த ப்ரகாஷின் மனைவி, லலிதா விசும்பும் சத்தம் கேட்டது.

“அப்ப சில நாள் பிரமை புடிச்சாப்ல இருந்தாரு… அப்புறம் சம்பத்னு வாத்தியார் ஒருத்தர், உனக்கும் தெறியும்பா…. மேத்ஸ் எடுப்பாரு… ஒருசில ஆசிரமமெல்லாம் கூட்டிட்டு போனாரு… கொஞ்சம் கொஞ்சமா தேறினாரு. கோயிலுக்கெல்லாம் வந்தாரு.. ”

“ நல்ல விஷயம்தான்… “ என்றாள் லலிதா.

“ நல்ல விஷயம், ஆனா அளவுக்கு மேலே போனா … என்னதான் பண்றது.. ? கடவுள் அடிக்கடி அவர் கனவில வராராம். “

லலிதா மெல்லிய குரலில் “ கடவுள் இருக்காரு … பாத்தீங்களா “ என்றாள் ப்ரகாஷிடம்.

“ ஸ்… ஸு… அவர் ஒரு ஓரமா இருந்திட்டு போறார்.. கொஞ்ச நேரம் பேசாம இரு..” என்ற ப்ரகாஷ் , புத்தக அலமாரியை கண்களால் தேடியபடியே டீச்சரின் பேச்சை கேட்க தொடர்ந்தான்.

“ ஏதாவது கடவுள் சொன்னாருன்னு, வேண்டுதல் நிறைவேத்த போவாருப்பா… அவர் மனசு நிம்மதியா இருந்தா போதும்னு விட்டிருவேன். பணம் பத்தி கவலையில்ல. அமெரிக்காவில மகனும் இரண்டாவது பெண் குழந்தையோட பழச மறந்து இருக்கான்.”

உள்ளே சென்று ஒரு புகைப்படத்தை எடுத்து வந்தார்.

“ இத பாரு ப்ரகாஷ்…”

அந்த புகைப்படத்தை பார்த்து திடுக்கிட்டான் ப்ரகாஷ். நீண்ட நாளுக்குப்பிறகு பூவராகன் சாரை பார்க்கிறான். முடி நிறைய கொட்டி, கண்கள் ஜீவனிழந்து தலையில் ஒரு பெரிய கட்டு போட்டிருந்தது

“ என்ன டீச்சர் இது… தலையில் காயமா… “

“ ஆமாப்பா, ஒரு ஆறுமாச முன்னால, கனவில சாமி வந்ததாம். அவர் போற இடங்களில் கீழே பணம் கிடைக்கும்னும்.. அதை மறு நாள் பசியோட இருக்கிற யாருக்காவது கொடுக்கணும் னும் சொன்னதாம். அத நம்பி இவர் ரோடெல்லாம் குனிஞ்ச தல நிமிராம தேடிட்டே போறாருப்பா… சில நேரம் சில்லரை கிடைக்கும். சில தடவை நோட்டு, ஒரு தடவ ஐநூறு கூட கிடச்சிது. “

“ கடவுள் அனுக்ரஹம். புண்ணியம்…” என்றாள் லலிதா.

“ தினம் கிடைக்குமாம்மா, கிடைக்காத நாளில் எதயோ பறிகொடுத்த மாதிரி இருக்கார். சக்தி சோதிக்குதுன்னு பெனாத்தறார். சிலசமயம் காய்ச்சலே வந்துடுது. “

“ ஏதாவது ட்ரீட்மெண்ட்…. டீச்சர், தப்பா எடுத்துக்காதீங்க.. போனீங்களா.. ? “

“ போனேம்பா.. டாக்டர் சில மெடிடேசன்லாம் சொன்னாங்க.. அப்புறம் விடுங்க நிம்மதியா இருக்கட்டும் ன்றாங்க… மருந்து எல்லாம் கேட்க மாட்டேங்குது… அதுகூட பரவாயில்ல.. எதிர்ல வர பஸ் கூட கவனிக்காம போய் டமார்னு முட்டியிருக்கார், சட்டுன்னு ட்ரைவர் பிரேக் போட்டதால் தலையில் சின்ன அடியோட போச்சு… அன்னிக்கு காயத்தை மறந்துட்டு இதபாரு , ஐம்பது ரூபா கெடச்சிதுங்கறார். பாங்க்ல இவ்ளோ பணம், வீடு, ரெண்டுபேருக்கும் பென்ஷன், ஆனா நிம்மதியே இல்லப்பா… “

“ இப்ப தனியாவா வெளிய போயிருக்கார் ? “ என்றான் பதட்டமாக.

“ பணம் தானம் பண்ண போயிருக்கார், மதியம் மேலதான் பணம் கிடைக்கும்னு சாமி சொல்லிச்சாம். ஏதோ இந்த ஒரு மாசம் தினமும் ஏதாவது கிடைக்குது. “

பின் அரைமணி நேரம் பேசிவிட்டு ப்ரகாஷும் லலிதாவும் கிளம்பினார்கள்.
அதுவரை சார் வரவில்லை. போகும் வழியில் லலிதா கடவுளின் விளையாட்டுகளை விவரித்துக்கொண்டே வந்தாள். ப்ரகாஷ் இரண்டு தலைவலி மாத்திரைகளை வாங்கிக்கொண்டான்.

அன்று சாயந்திரம் சில பொருட்களை வாங்க இருவரும் கடைவீதிக்கு கிளம்பினார்கள். முடித்துவிட்டு ஆறுமணியளவில் வீடு திரும்ப நினைக்கும் போது சற்று வித்தியாசமாக ஏதோ உணர்ந்தான் ப்ரகாஷ். தூரத்தில் தலைகுனிந்து ஏதோ பறிகொடுத்தார் போல் தேடியபடி அது, அவரேதான் … பூவராகன் சார்.

அதிர்ந்து போனான். எவ்வளவு பெரிய ஆளுமை, ஒரு சின்ன மனப்பிசகில் இவ்வளவு ஒடிந்து போக முடியுமா, அழகாக அயர்ன் சட்டை பேண்ட், ஷூ சகிதம் நிமிர்ந்த நடையில் பார்த்த சார், கசங்கிய சட்டையும், அவசரமாய் இழுத்துக்கட்டிய வேட்டியும், எவரையும் கவனிக்காத குனிந்த தலையும்,…

“ சார்....?"

என்று கூப்பிட்டவனை சட்டென்று பின்னிழுத்தாள் லலிதா. தூரத்தில் கைகாட்டினாள். பூவராகன் சார் குனிந்தபடி செல்லும் அதே சந்தின் முனையில் அவர் பார்வையில் படும்படி ஒரு நூறு ரூபாய் தாளை போட்டுவிட்டு ஸ்கூட்டியில் விரைந்தார் சாரதா டீச்சர்.
 
Top