கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

4. (வி)சித்திரமாய்...

Annapurani Dhandapani

Active member
4.

பிச்சாண்டி மருந்து மாத்திரைகளின் உபயத்தால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனுடைய காதருகே,

"பிச்சூ! பிச்சூ!" என்று யாரோ அழைப்பது போலிருந்தது.

அவன் தன் கண்ணைத் திறக்காமலேயே,

"ம்.." என்றான்.

"பிச்சூ! என் கூட வா.." என்று அழைத்தது அந்தக் குரல்.

"ம்.." என்றான் மீண்டும்.

"பிச்சூ.. என்ன காப்பாத்து.. என்ன காப்பாத்து பிச்சூ.. நா பெரிய ஆபத்தில இருக்கேன்.." என்று குரலில் இப்போது பதற்றம் தொனித்தது.

"ம்.. வரேன்.. வரேன் மல்லி.." என்று குரல் கொடுத்தபடியே எழுந்து அமர முனைந்தான் பிச்சாண்டி. ஆனால் அவனால் அசையவே முடியவில்லை. கண்களைத் திறக்கவும் முடியவில்லை.

"பிச்சூ.. ம்.. ம்.." என்று அந்தக் குரல் அழத் தொடங்கியது.

அவனும் அந்தக் குரலுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்கத் தொடங்கினான்.

அவனால் அப்போதைக்கு அதுதான் முடிந்தது.

அவனுடைய அழுகுரல் கேட்டு அவன் படுத்திருந்த மெத்தையருகே தரையில் படுத்திருந்த அவனுடைய தந்தை முத்துக்கருப்பன் எழுந்தான்.

"தம்பி.. பிச்ச.. இன்னாபா ஆச்சு.. ஏன் அயுவற?" என்று கேட்டுக் கொண்டே மகனை உலுக்கினான்.

மகனிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக அழுகைதான் அதிகமாகியது.

"அப்பா.. அப்பா.. நம்ம மல்லி.." என்று முனக வேறு செய்தான்.

"உன்னுமா அவள நெனச்சிகினு கடக்க.. ஐயோ.." என்று சத்தமாகப் புலம்பிய முத்து,

"ஐயா.. ஐயனாரப்பா.. எம்புள்ள உன்னும் எத்தினி நாளுக்குதான் அத்த நென்ச்சிகினு கடப்பானோ தெர்லயே.. அவன காப்பாத்துப்பா.." என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டான்.

இவனுடைய குரல் கேட்டு அவனருகில் படுத்த காவேரி எழுந்தாள்.

"இன்னாய்யா? இன்னா ஆச்சு?"

"பாவம்டீ.. மல்லி மல்லின்னு உன்னும் செத்துப் போனவளையே நென்ச்சிகினு பொலம்பறான்.." என்றான் முத்து.

"போனவ போயிட்டா.. இருக்கறவன் நிம்மதி பூட்ச்சி.." என்று காவேரியும் வருந்தினாள்.

"சரி! இருய்யா.. நா துன்னூறு எடுத்தாறேன்.." என்று எழுந்து அருகிலிருந்த சமையலறைக்குச் சென்றாள் காவேரி.

அதற்கு அடுத்த அறைக்கதவு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அந்த அறையில் சக்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.

"ஒண்யு இல்ல.. தூங்கு நைனா.. அல்லாம் சரியா பூடும்.." என்று சொல்லிக் கொண்டே மகனின் நெற்றியில் திருநீறு இட்டுவிட்ட காவேரி, தானும் இட்டுக் கொண்டு தன் கணவனின் நெற்றியிலும் இட்டாள்.

"புள்ள நல்லாகி வூட்டுக்கு போனதும் நம்ம ஐய்யனாருக்கு படையல் போட்ருலாங்க.. அப்பதான் அந்த மல்லி பொண்ண இவன் மறப்பான்.." என்றாள்.

"ம்.. அப்டியே ஒரு பொண்ண பாத்து கட்டி வச்சிரணும்.. இல்லன்னா இவன் இப்டியே இருந்திருவான்.." என்றான் முத்து.

"ம்.. ஆமா.." என்றபடியே மகனின் அருகில் அமர்ந்து அவன் தலையை ஆதரவாகக் கோதினாள்.

"நல்ல வேளை.. இந்த சத்தத்தில அந்தப் பொண்ணு சக்தி எந்திரிக்கல.." என்றான் முத்து.

"ஆமாய்யா.." என்றாள் காவேரி.

முத்து தூக்கம் கலைந்தவனாய் எழுந்து கழிப்பறைக்குச் செல்ல, வீட்டுக்கு வெளியே கருப்பாய் ஒரு உருவம் வேகமாக ஓடி மறைவதைக் கண்டு குழம்பினான்.

'இந்த வூட்டுல வேற யாரோ ஆள் நடமாட்டம் இருக்குமோ.. நேத்திக்கு மாடியில ஆரோ ஓடின மாதிரி இருந்துச்சு.. இப்ப வூட்டுக்கு வெளிய கருப்பா யாரோ ஓடறாங்க.. திருடனா இருக்குமோ..' என்று சிந்தித்தபடியே கழிப்பறைக்குள் நுழைந்தான்.

அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் பேய் பிசாசு இதிலெல்லாம் நம்பிக்கை அறவே இல்லை.

இந்த நவீன காலகட்டத்தில் பேயாவது பிசாசாவது என்றுதான் எப்போதும் சொல்வான்.

அதனால் யாரோ வேண்டுமென்றே தங்களை பயமுறுத்த இப்படி நடமாடுகிறார்கள் என்று முழுதாக நம்பினான்.

அவன் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது மகன் பிச்சாண்டி நன்றாக உறங்கியிருக்க, காவேரி மகனின் அருகில் அமர்ந்த நிலையிலேயே தூங்கி ஆடிக் கொண்டிருக்க, அவளை மெதுவாக எழுப்பி சரியாகப் படுத்து உறங்கும்படி செய்கை செய்தான்.

அவளும் தரையில் தன்னுடைய இடத்தில் படுத்து உறங்கிப் போனாள்.

முத்துவும் தன்னுடைய இடத்தில் படுத்து உறங்க முயற்சி செய்தான்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மெதுவாக எழுந்து வந்த சக்தி, அவர்கள் மூவரும் நன்றாக உறங்குகிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு வீட்டு வாசல் கதவைத் திறந்தாள்.

கருப்பாக ஒரு உருவம் வீட்டினுள் நுழைந்தது.

"எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணுவேன்.. வெளிய எவ்ளோ கொசு தெரியுமா.. புடிங்கி எடுத்துடுச்சு.." என்றது அந்த கருப்பு உருவம்.

"ஹே! சாரியா! அவங்க தூங்க இவ்ளோ நேரம் ஆகிடுச்சு.." என்றாள் சக்தி.

"நாளைக்கு அவனுக்கு ஊசியில கூட கொஞ்சம் மயக்க மருந்து கலக்கணும்.." என்றது அந்த உருவம்.

"ஆமா.. அப்டியே அவன் அப்பாம்மாவுக்கும் சாப்பாட்டுல மயக்க மருந்து சேர்க்கணும்.. புள்ள குரல் கேட்டதும் எழுந்துப்பாங்கன்னு நா கொஞ்சம் கூட எதிர்பாக்கல.." என்றாள் சக்தி.

"ஆமா.. இவங்கல்லாம் நல்லா தூங்கறவங்க.. ஆனா எப்டி சட்டுன்னு எழுந்துக்கறாங்கன்னு புரியல.." என்ற அந்த உருவம்,

"தூங்கட்டும்.. நல்லா தூங்கட்டும்.. இன்னிக்குதான் இவங்க நல்லா தூங்கற கடைசி நாள்.. நம்ம மல்லி சாவுக்கு காரணமான இந்த பிச்சாண்டியையும் அவன் குடும்பத்தையும் பைத்தியமாக்கி சட்டைய கிழிச்சிகிட்டு தெருவில திரிய விடணும்.. அது வரைக்கும் நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் எனக்கு கவலை இல்ல.." என்றபடியே சக்தியை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றது.

அரை குறை தூக்கத்திலிருந்த முத்து இவை அனைத்தையும் கேட்டு அதிர்ந்து போனான்.

ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்படியே அசையாமல் படுத்திருந்தான்.

மறுநாள் பிடிவாதமாக மகனையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு தன் குடிசைக்குச் சென்றுவிட்டான் முத்து.

"ஏன்ய்யா? உனுக்கின்னா பைத்தியமா புட்சிர்க்கு.." என்று கேள்வி கேட்ட மனைவியைக் கோபமாகப் பார்த்தவன்,

"உன்னும் ஒரு நாள் அங்க இர்ந்தா.. மெய்யாலுமே நமக்கு பைத்தியம் புட்ச்சிர்க்கும்.." என்றான்.

"இன்னாய்யா சொல்ற?"

"அந்த பொண்ணு சக்தி நமக்கு நல்லது பண்ண இட்டுனு போவல.. நம்ம அல்லாரையும் பைத்தியமாக்க இட்டுனு போயிருக்கு.." என்று சொல்லி இரவு தான் கேட்டதை அவளிடம் கூறினான்.

அவள் அதிர்ந்தாள்.

"இப்ப இன்னாய்யா பண்ணுவோம்.."

"நாம ஏண்டீ பயப்படணும்.. அந்த பொண்ணு மல்லிய காப்பாத்த இவன் எவ்ளோ போராடினான்னு நமக்கு தெரியும்.. அந்த பொண்ணு சக்தி இன்னா பண்றான்னு ஒரு கை பாத்துக்கலாம்.. ஆனா புள்ளைக்கு இதெல்லாம் தெரிய வோணாம்னுதான் நா நம்ம வூட்டுக்கு இட்டுனு வண்ட்டேன்.." என்றான்.

"இல்லய்யா.. வோணாம்.. அவங்க தப்பா நென்ச்சினு இர்க்காங்கதான்.. ஆனா கோவத்தில இர்க்காங்க.. அதனால கொஞ்சநாள் நம்ம எங்கியாச்சு போய்டலாம்.."

"ஏண்டீ? மூட்ட பூச்சிக்கு பயந்துகினு வூட்ட வுட்டு போ சொல்றியா?"

"நம்ம புள்ள நல்லா ருக்கணும்ல.. அவனுக்கு ஒரு கண்ணாலம் காச்சி நடக்க வோணாமா.. அவனும் மத்த புள்ளிங்க மாரி புள்ள குட்டினு இர்ந்தாதான நமக்கும் மன்சு நல்லாருக்கும்.." என்று கேள்வி கேட்டாள்.

"ம்.. நீ சொல்றதும் சர்த்தான்.. ஆனா எங்க போறது?"

"எங்காத்தா வூட்டுக்கு போலாம்.. அங்க இப்ப தம்பி மவ உண்டாயிருக்கால்ல.. வளகாப்புக்கு போற மாரி போலாம்.. அங்கயே எதுனா வேல இர்ந்தா பாரு.. கொஞ்ச நாள்.. புள்ளக்கி ஒரு பொண்ண பாத்து கட்டி வச்சிட்டா அல்லாம் சரியா பூடும்.. அப்றம் நாம இங்க வந்துடலாம்.." என்றாள்.

மனைவியின் ஆலோசனைப்படி அன்று மாலையே யாரிடமும் சொல்லாமல் வீட்டை காலி செய்து கொண்டு மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு போய் விட்டான் முத்து.

அவனை எங்கு தேடியும் காணாமல் சக்தியும் அவன் கூட்டாளியும் திகைத்தார்கள்.

*****

நந்தாவின் மேல் தவறில்லை. அவர் மிரட்டினார்தான்.. ஆனால் அது தனக்கு துரோகம் செய்தால் எல்லாருக்கும் வரும் நியாயமான கோபம்தான்.. ஆனால் அதற்காக அவர் அமரனை எதுவும் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டது.

நந்தா தவறிழைக்காதவர் என்ற நற்பெயருடன் வெளியில் வந்தார். இதற்குள் முழுதாக ஒரு வருடம் முடிந்துவிட்டது.

தன் அலுவலகத்துக்கு வந்தார் நந்தா.

அந்தக் கட்டிடம் அவர்களுடைய சொந்த இடத்தில் கட்டப்பட்டிருந்தது. அதனால் அது அவரைப் போலவே ஆதரிக்க யாருமற்ற அநாதையாக பராமரிப்பின்றிக் கிடந்தது.

அவருடைய மற்ற உணவகங்கள் தங்குமிடங்கள் பல வாடகை இடமாதலால் அங்கெல்லாம் வேறு கடைகளும் வணிகர்களும் வந்துவிட்டனர்.

இந்த ஒரு இடம் மட்டுமே இப்போது இவர் வசமிருந்தது.

"இனிமே என்ன பண்ண போறோம்.." என்று மலைத்துப் போய் நின்றார் நந்தா.

"நம்ம ஒண்ணும் பரம்பரை பணக்காரங்க இல்லையே.. தள்ளுவண்டியில இட்லி வித்துதானே நம்ம வாழ்க்கைய ஆரம்பிச்சோம்.. அன்னிக்கு ஒண்ணுமே இல்லாமலேயே இவ்ளோ பெரிசா வளர முடிஞ்சிது.. இப்ப நமக்குன்னு இந்த கட்டிடம் இருக்கே.. திரும்பவும் ஆரம்பிக்கலாம்.. கவலப்படாதீங்க.." என்றாள் பரமு.

"அப்ப சின்ன வயசு.. உடம்பிலயும் மனசிலயும் தெம்பிருந்தது.. சாதிக்கணும்னு வெறியிருந்தது.."

"அன்னிக்கு நமக்கு சமையல் பத்தி எதுவும் தெரியாது.. இட்லி சட்னி தவிர சாம்பார் கூட எனக்கு செய்ய தெரியாமதான் இந்த கடைய ஆரம்பிச்சோம்.. இன்னிக்கு நம்மகிட்ட அனுபவம் இருக்கு.. மக்களுக்கு என்ன மாதிரி குடுத்தா மக்கள் வாங்குவாங்கன்னு தெரியும்.. கொஞ்சம் கஷ்டப்படணும்தான்.. இல்லைங்கல.. ஆனா நம்மளால முடியும்.. முடியணும்.. சட்டத்தின் முன்னாடி நீங்க குற்றமற்றவர்ன்னு நிரூபணம் ஆகிடுச்சி.. ஆனா அது இந்த மக்களுக்கு போறாது.. மக்கள் ஒத்துக்கணும்னா நாம மறுபடியும் சாதிச்சி காட்டணும்.. விழறது தப்பில்ல.. ஆனா ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு அப்டியே விழுந்து கிடந்தாதான் தப்பு.." என்று கூறி அவர் கையை ஆதரவாகப் பிடித்தாள்.

நந்தா நம்பிக்கையோடு பாழடைந்து கிடந்த தன் அலுவலகத்தினுள் நுழைந்தார்.

இருவருமாகச் சேர்ந்து அந்த இடத்தைச் சுத்தம் செய்தனர்.

ஒவ்வொன்றாக எடுத்து வைக்கும்போது சுவற்றின் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு படம் பரமுவின் கண்ணில் பட்டது.

அதை எடுத்தாள். மரப்பட்டை போல அடையாய் தூசி படர்ந்திருந்தது.

மெதுவாய் அதைத் தட்டினாள்.

ஓவியப் பெண்ணின் முகம் லேசாகத் தெரிந்தது.

"இது என்ன புதுசா? எப்ப வாங்கினீங்க?" என்று கேட்டாள்.

நந்தா அவளருகில் வந்து அதைப் பார்த்துவிட்டு,

"இதுவா.. அந்த டென்டர் விஷயம் நடந்த அன்னிக்குதான்.. ஒரு ஆர்ட் எக்சிபிஷனுக்கு எதேச்சையா போனேன்.. நல்லா இருந்ததுன்னு வாங்கினேன்.." என்றார் அசிரத்தையாய்.

"ஓ!" என்றவள், அதை மீண்டும் சுவரோரமாகச் சாற்றி வைத்துவிட்டு மற்ற பொருட்களை எடுத்து தூசி தட்டத் தொடங்கினாள்.

"என்னத்த சொல்ல.. இன்னிக்கு இவ்ளோ தூசி படிஞ்சி போய் இருக்குற இந்த படம் அன்னிக்கு விலை ரெண்டு கோடி.. தெரியுமா?" என்று ஏதேச்சையாகக் கூறினார்.

பரமு அதிர்ந்தாள்.

"என்னங்க சொல்றீங்க?"

"ஆமா பரமு.. இது விலை ரெண்டு கோடி.. இது வாங்க செம்ம போட்டி வேற.. வரதாச்சாரி, டைகர் துரை.. எல்லாருக்கும் இத நா வாங்கினதுல செம்ம காண்டாச்சு தெரியுமா.. அப்டியே ரெண்டாயிர ரூபா கட்டை ப்ரீஃப்கேசில இருந்து எடுத்து குடுத்து வாங்கினேன்.." என்றார் அன்றைய நினைவில்.

"கேஷ் குடுத்து வாங்கினீங்களா?" என்று வியப்பாகக் கேட்டாள்.

"ஆமாம்மா.."

"ஏங்க.. இதாங்க நமக்கு முதலீடு.. இந்த படம்தான் இப்ப நமக்கு முதலீடு.. இது இப்ப ஆன்டிக் பீஸ்.. இத வித்து வர காச முதலீடா போட்டு நம்ம தொழிலை ஆரம்பிக்கலாம்ங்க.." என்று யோசனை கூறினாள் பரமு.

"அவ்ளோ ரூபா இதுக்கு கிடைக்குமான்னு தெரீலயே.. மேலும் இது ரொம்ப அழுக்காகி பழுப்பா வேற இருக்கே.." என்றார் நந்தா.

"அழுக்கு இருந்தாதான் ஆன்டிக் பீஸ்ங்க.. அவ்ளோ பணம் கிடைக்கலன்னா பரவால்ல.. எவ்ளோ கிடைச்சாலும் அத வெச்சி நாம ஆரம்பிக்கலாம்.." என்றாள்.

"ம்.." என்றபடியே அவர் மீண்டும் அந்த ஓவியத்தை கையிலெடுத்தார்.

"சரி! முயற்சி செய்யறதில தப்பில்ல.. நா எதாவது ஆர்ட் கேலரில கேட்டுப் பாக்கறேன்.." என்றபடியே மீண்டும் அதை அங்கேயே வைத்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிடத் தொடங்கினார்கள்.

அவர்கள் அந்த இடத்தை ஓரளவு சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

அவர்கள் அங்கிருந்து அகன்றதும் அந்த ஓவியப் பெண்ணின் முகம் விகாரமாக மாறி அந்த இடமே அதிர்வது போல அகோரமாகச் சிரித்தது.




- தொடரும்....
 
Top