Annapurani Dhandapani
Active member
காதல் மொழி - 41
செல்விக்கு ஏழாம் மாதம் நடந்தது. மசக்கை குறைந்தது. அவளுடைய வயிறு மேடிட்டு தெரிய ஆரம்பித்தது. உடல் கொஞ்சம் பூசினாற்போல ஆகி மினுமினுப்புடன் இருந்தது. கன்னங்கள் செழுமையடைந்து சிரிக்கும்போது தெய்வீகமாக இருந்தது. அவள் மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடக்கும் போது அம்மன் வீதியுலா வருவது போல இருந்தது.
செல்வி தன் வயிற்றில் குழந்தையின் உதைகளை வாங்கத் தொடங்கி இருந்தாள். அதனால் நடக்கும்போது மெதுவாக அன்னநடை பயின்றாள். தன் குழந்தையின் உதைகளை மிகவும் ரசித்து அனுபவித்தாள். சூரஜ் அவள் வயிற்றில் காதை வைத்து கேட்டுக் கேட்டு சிலிர்த்தான்.
விராட்டின் கண்களுக்கு செல்வி இப்போது மிக மிக அழகாக இருப்பது போல தோன்றியது. அவனுக்கு தன் அம்மாவைப் பார்ப்பது போல இருந்தது.
அண்ணி என்பவள் இரண்டாவது அம்மாதானே!
விராட் இடையிடையே திருச்சி சென்று மனைவியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு வந்தான். ஒரு முறை கௌரியும் தீன்தயாளும் பேத்தியை பார்க்க மகனுடன் சென்று வந்தனர்.
ஒருநாள் தோட்டத்தில் அமர்ந்தபடி மனைவிக்கு போன் செய்தான் விராட்!
"நம்ம வீட்டு இளவரசியார் எப்டி இருக்காங்க?"
"நல்லா இருக்காங்க! சமத்தா இருக்காங்க! இப்ப தூங்கிகிட்டு இருக்காங்க!"
"சரி! மகாராணியார் எப்டி இருக்காங்க?"
"அவங்களும் நல்லா இருக்காங்க!"
"மகாராணியார் எப்ப அவங்களோட ராஜ்யத்துக்கு விஜயம் செய்யப் போறாங்க?"
"மகாராஜா ரொம்ப ஏங்கற மாதிரி தோணுதே!"
"இல்லையா பின்ன? எப்ப இங்க வரப் போற?" கொஞ்சலுடன் கேட்டான்.
"அடுத்த மாசம் வந்துடுவேங்க! செல்வி அக்கா வளைகாப்புக்கு வந்திடுவேன்!"
"சரிமா! உடம்ப பாத்துக்கோ! குழந்தையப் பாத்துக்கோ! நான் வெச்சுடுவா!"
"ம்! சரிங்க! நீங்களும் உடம்ப பாத்துக்கோங்க!"
"சரிடா! பை!"
"பை!"
தீபிகாவுக்கு போன் செய்தான்.
"விராட் பையா! "
"சுட்கி! எப்டிடா இருக்கே!"
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"
"ரொம்ப சந்தோஷம்டா! நீ இப்டி உற்சாகமா பேசறப்பவே தெரியுது ஆனந்த் உன்ன நல்லா வெச்சிருக்கார்னு."
ஆனந்தன் இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டபடி வந்தான்.
"ஹாய் விராட்! எப்டி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன் ஆனந்த்! நீ எப்டி இருக்க?
"ரொம்ப நல்லா இருக்கேன்! உங்க தங்கை என்ன நல்லா கவனிச்சுக்கறா! அப்றம் எனக்கென்ன குறை? ஐஷுக்குட்டி எப்டி இருக்கா?"
"சமத்தா இருக்கா! மாமாவும் அத்தையும் எப்ப இண்டியா வரப்போறாங்கன்னு கேக்கறா!"
"அது சரி! நாங்க இண்டியா வரது இருக்கட்டும்! ஆனந்தி எப்ப மும்பை வரா?"
"அநேகமா அடுத்த மாசம்! செல்வி பாபி வளைகாப்புக்கு வந்திடுவா!"
"ஓ! ஓகே! அக்கா எப்டி இருக்காங்க? சூரஜ் மாமா எப்டி இருக்கார்?"
"நல்லா இருக்காங்க! பையாவும் நல்லா இருக்கான்!"
"அத்த மாமா நல்லா இருக்காங்களா?"
"ம்! அவங்களும் நல்லா இருக்காங்க!"
"சரி பயங்கர டயடா இருக்கு! நீங்க உங்க தங்கைட்ட பேசுங்க! பை விராட்!"
"ஓகே! ஆனந்த்! டேக் கேர்! பை!" என்று கூறினான்.
"சுட்கி! ஆனந்தன கவனிம்மா! வேலைலேந்து வந்திருக்கான்! நான் வெச்சுடறேன்! பை சுட்கி!"
"டீக் ஹை பையா! பை பையா!" போனை கட் செய்தனர்!
விராட் மனதுக்குள் ஆனந்தனும் தீபிகாவும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் என்று மன மகிழ்ச்சி அடைந்தான்.
"என்ன விராட்? என்ன யோசனை?" கேட்டுக் கொண்டே மெதுவாக நடந்து வந்தாள் செல்வி.
"மெதுவா பாபி!" என்றபடியே அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் கிடந்த சருகுகளை தட்டி சுத்தம் செய்து அவள் உட்கார வசதி செய்தான்.
"தேங்க்யூ விராட்!"
"ஒண்ணுமில்ல பாபி! சுட்கி கிட்ட பேசினேன்! சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா! ஆனந்தும் பேசினான். தீபிகா என்ன நல்லா கவனிச்சுக்கறான்னு சொன்னான்."
"சூப்பர்!"
"அதான் யோசிச்சுகிட்டிருந்தேன்! ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்ளோ அன்பு வெச்சிருக்காங்கல்ல!"
"ஆமா விராட்! ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்!"
"கரெக்ட் பாபி!"
இருவரும் பேசுவதைக் கேட்டபடி வந்த சூரஜ்,
"இங்கதான் இருக்கீங்களா? சரி இருங்க வரேன்!" உள்ளே சென்றவன் மூன்று பேருக்கும் தேநீர் கலந்து எடுத்து வந்தான்.
"ஹே! சோ ஸ்வீட் சூரஜ்! தேங்க்யூ!" சொல்லிக் கொண்டே வாங்கிக் கொண்டாள் செல்வி.
"தேங்க்யூ பையா!" விராட்டும் வாங்கிக் கொண்டான்.
"என்ன பேசிகிட்டு இருந்தீங்க?"
"நம்ம சுட்கியப் பத்திதான்! அவளும் ஆனந்தனும் ஒருத்தர் மேல ஒருத்தர் ரொம்ப அன்பு வெச்சிருக்காங்க!"
"இல்லையா பின்ன! அவன் மூணு வருஷமா காத்துகிட்டு இருந்து ஜெயிச்சிருக்கானே!"
"இதென்ன புதுக்கதை?" செல்வி அறியாதவள் போலக் கேட்டாள். அவளுடைய திருமணத்தின் போதே இப்படி ஒன்று நடக்கப் போகிறது என்று லட்சுமி பாட்டிதான் ஆரூடம் சொன்னாரே!
"ஆமா பாபி! பையா சொல்றது சரிதான்!"
விராட் ஆனந்தனின் மூன்றாண்டு காத்திருந்து காதலில் ஜெயித்த கதையைக் கூறினான். எதுவும் தெரியாதது போல கேட்டுக் கொண்டாள் செல்வி.
ஆனால் ஆனந்தை நினைத்து அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
சிறு வயதில் எதாவது கிடைக்கவில்லை என்றால் அழுது அடம் பிடித்து சண்டை போட்ட ஆனந்தன் இப்போது தீபிகா மறுத்த போதும் அவளுக்காகக் காத்திருந்தது மட்டுமில்லாமல் அதில் ஜெயித்தும் இருக்கிறானே! என்று நினைத்து நினைத்து வியந்தாள்.
"வயசும் படிப்பும் ஏற ஏற அறிவும் பொறுமையும் ஏறியிருக்கு!" என்றாள்.
"புரியல பாபி!" என்றான் விராட்.
"சின்ன வயசில எல்லாத்துக்கும் அடம் பிடிக்கறவனா இருந்த ஆனந்த் இப்ப இத்தன பொறுமைசாலியா வளர்ந்திருக்கான்னு சொன்னேன்." என்றாள்.
"உண்மைதான் தமிழ்!" என்றான் சூரஜ்.
"ஓகே! விராட்! இதுக்கு மேல உக்கார முடியல! ஐ ஹேவ் டு மூவ் நௌ!" சொல்லிக் கொண்டே சூரஜின் கையைப் பிடித்துக் கொண்டு எழுந்தாள்.
"ஓகே பாபி! மெதுவா போங்க!"
சூரஜ் செல்வியின் கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துப் போனான்.
விராட் செல்வியை நினைத்து நினைத்து வியந்தான்.
செல்வியை முதல் நாளில் பார்த்ததிலிருந்து அசை போடத் தொடங்கினான்.
முதன் முதலில் பார்த்த போது அவளைப் பற்றி, அவன் தவறாக நினைத்தது, தன் வீட்டுக்கு வந்த முதல் நாளன்று அவளை நல்ல பாம்பென்று நினைத்தது, சூரஜ் இல்லாத போது மும்பையில் அவள் வாழ வந்ததை சந்தேகப்பட்டு அவளை கண்காணித்தது, தனக்கு உடல் நிலை சரியில்லாத போது தனக்கு அவள் சேவை செய்ததை நினைத்து மனம் திருந்தியது, அவள் தன்னை தம்பி என்று தன் அம்மாவிடம் சொன்னது, பிங்கியை அன்புடன் அரவணைத்து அவளை நன்றாகப் படிக்க வைத்தது, ஆனந்தி தன்னிடம் பேசாமல் இருந்ததற்காக அவளிடம் தன் கோபத்தைக் காட்டியபோதும் அவள் தன்னை சமாதானம் செய்தது, ஆனந்தியின் திறமையை கண்டுபிடிக்க தனக்கு க்ளூ கொடுத்து உதவியது, தன்னை நண்பன் என்றது, தனக்கு குழந்தை உண்டான போது அவளுக்கு இன்னும் வரவில்லையே என்று வருந்தியபோது தனக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறியது, பிங்கி மதுரைக்கு கிளம்பியபோது அவளுக்கு வழிகாட்டுதலாய் அறிவுரைகள் கூறியது, என்று எல்லாம் அவன் நினைவுக்கு வந்தது. அவன் செல்வியை நினைத்து நினைத்து வியந்தான்.
அவளால் இந்த குடும்பத்துக்கு கெடுதல் வருமோ என்று தான் தேவையில்லாமல் பயந்தது போக அவளால் தன் குடும்பம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்று நினைத்தான். தன் குடும்பம் மட்டுமல்ல பிங்கியின் வாழ்வும் அல்லவா முன்னேறியுள்ளது! பயம் மட்டுமே வாழ்வு என்றிருந்த பிங்கி எதையும் தாங்கும் இதயம் உள்ளவளாக மாறி படிப்பிலும் முன்னேறிக் காட்டினாளே! அது செல்வியால்தானே!
செல்வி பாபி இல்லையென்றால் இன்று எனக்கு ஆனந்தி என்ற காதல் மனைவி கிடைத்திருப்பாளா அல்லது தீபிகாவுக்குதான் ஆனந்தன் என்ற அருமையான காதல் கணவன் கிடைத்திருப்பானா?
செல்வி இந்தக் குடும்பத்தின் குலவிளக்கு!
செல்வி இந்தக் குடும்பத்தின குத்துவிளக்கு!
இறைவா! இந்த விளக்கு எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்து இந்த குடும்பத்தை விளங்கச் செய்து கொண்டே இருக்க வேண்டும்! அதற்கு நீதான் என்றும் அந்த விளக்கிற்கு துணையிருக்க வேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொண்டான்.
ஆனால் இறைவனின் சித்தம் என்னவோ?
கருவில் குழந்தை அசைகையில்
காரிகையும் ரசித்து சிலிர்க்கிறாள்!
தாய்மை வரமளித்த தலைவனையும்
தலை வைத்து உணரச் செய்கிறாள்!
மனைவியிடம் பேசிய தம்பியோ
மகளைக் காணத் துடிக்கிறான்!
ஒன்றாகும் நாள் என்றோவென
மன்றத்தில் மயங்கி நிற்கிறான்!
புதுவாழ்வு தொடங்கிய தங்கையின்
பூரிப்பைப் பேசி உணர்கிறான் தம்பி!
தன்வாழ்வும் தங்கை வாழ்வும் சிறந்திட
அண்ணியே காரணம் என்றுணர்ந்தான் !
குலவிளக்கு எங்கள் அண்ணி! வீட்டில்
குத்துவிளக்காய் ஒளிவீசும் இவளே
துன்பத்தை அகற்றி இருள் விரட்டி
இன்பமருளும் தேவி என்றுரைத்தான்!
வாழட்டும் அண்ணியும் நீடூழி! அவளால்
வாழ்க்கை சிறக்கும் அனைவருக்கும்
என்றுணர்ந்த தம்பி அண்ணியென்றும்
நன்றுவாழ வேண்டினான் இறைவனை!
- C. புவனா.
- காதலின் மொழி என்ன?