கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

42. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 42


செல்வியின் வளைகாப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு ஒரு வாரம் முன்னதாக ஆனந்தி குழந்தையுடன் வந்துவிட்டாள். ஆனந்தியையும் குழந்தையையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தாள் கௌரி!

தீன்தயாள் மருமகளையும் சம்மந்தியையும் சைகையால் வரவேற்றார். ஆனந்தி அவரிடம் நலம் விசாரித்தாள்.

குழந்தையைப் பற்றி அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தாள். அவர் ஆனந்தியிடம் பேசிவிட்டு கீர்த்தியை அழைத்துக் கொண்டு போனார். செல்வி தங்கையை வாய் நிறைய அழைத்து வரவேற்றாள்.

"வா! வா! வா! ஆனந்தி! உள்ள வாம்மா! வாங்க சித்தி! வாங்க சித்தப்பா!"

"செல்விம்மா! எப்டிடா இருக்க?"

"நல்லா இருக்கேன் சித்தி! ஐஷுக்குட்டி எப்டி இருக்க!" சித்தியிடம் சொல்லிவிட்டு அவள் கையில் வைத்திருக்கும் குழந்தையை வாங்கிக் கொஞ்சினாள். அப்போது அவள் வயிற்றில் வளரும் குழந்தை குதியாட்டம் போட, குழந்தையை அருகில் நின்றிருந்த விராட்டிடம் கொடுத்துவிட்டு மெதுவாய் அமர்ந்து கொண்டாள்.

"அக்கா! அழகா இருக்கக்கா!" ஆனந்தி செல்வியின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆனந்தியும் செல்வியும் சளசளக்க ஆரம்பித்தனர்.

"ஆனந்தி! நம்ம ஐஷுக்குட்டியப் பத்தி பேசினாலே உள்ள இருக்கற அடுத்த ஜூனியர் ஏகத்துக்கும் ஆட்டம் போடறதுடீ! செம்ம உதை!" என்றாள் செல்வி.

"முன்னாடி நான் வாங்கினேன்! இப்ப நீ வாங்கிகிட்டு இருக்கியா?" சிரித்தபடி கேட்டாள்.

"ஆமாண்டி!" என்று சிரித்தாள் செல்வி.

ஆனந்தி செல்வியின் வயிற்றில் காதையும் கையையும் வைத்துக் கேட்டாள். செம்ம உதை!

"மை காட்! என்னக்கா! செம்ம குதி குதி குதிக்கறது!?" ஆச்சர்யமாய் கேட்டாள்.

"என்ன சந்தோஷமோ?" சிரித்தாள்.

"ரெண்டு பேரும் நம்மள மாதிரியே ஒத்துமையா இருந்தாலே போதும்!"

"ஆமாண்டி! நானும் இததான் நெனச்சிகிட்டேன்!"

சூரஜ் வந்தவர்களை வரவேற்றுவிட்டு ஐஷுக்குட்டியை கையில் வாங்கிக் கொஞ்சினான். வீடே குழந்தையின் வரவால் கலகலப்பானது.

செல்வி ஐஷுவை மடியில் வைத்துக் கொஞ்சினாள். அவள் வயிற்றில் குழந்தையின் உதை அதிகமாக இருந்தது. சூரஜிடம் சொன்னாள். சூரஜ் அவள் வயிற்றில் கையையும் காதையும் வைத்துக் கேட்டான்.

"தமிழ்! வாவ்! என்ன குதி குதிக்கறது! சந்தோஷமா இருக்குல்ல!"

"ம்! ஆமாங்க! செம்ம உதை! அம்மா!"

"ஈஸி.. ஈஸி.. ஆனா இந்த அனுபவம் எல்லாம் லேடீஸ்க்குதான்ல்ல! எங்களுக்கு இதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது! நீங்கதான் கிஃப்டெட்!" என்றான்.

"அப்டியெல்லாம் சொல்லாதீங்க சூரஜ்! நாங்க பத்து மாசம்தான் குழந்தைய வயித்தில சுமக்கறோம்! அதுக்கப்புறம் காலம் பூரா நீங்கதானே எங்க ரெண்டு பேரையும் நெஞ்சில சுமக்கப் போறீங்க! அப்ப நீங்கதானே கிஃப்டெட்!"

"ஓ! தமிழ்! யூ ஆர் சோ ஸ்வீட்! இப்டி வேற மாதிரி ஆங்கிள்ல உன்னால மட்டும்தான் யோசிக்க முடியும்!"

செல்வியும் சூரஜும் ஐஸ்வர்யாவை வைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடினார்கள்.

ஆனந்தி குழந்தையை செல்வியிடம் தந்துவிட்டு தன்னுடைய அறைக்கு வந்து குழந்தையின் பொருட்களை வைத்துக் கொண்டிருந்தாள். விராட் பின்னாலேயே அவளுடைய உதவிக்கு வந்து எல்லாவற்றையும் அழகாக அடுக்கினான். முடிந்ததும் ஆனந்தியை அணைத்து முத்தமிட்டான்.

"எவ்வளவு நாளாச்சு.. என் செல்ல மகாராணி! எப்டி இருக்கீங்க?" தன் கைவளைவிலேயே வைத்துக் கொண்டு கேட்டான்.

"நல்லா இருக்கேன்! ஆனா ராட்சசி எப்ப மகாராணி ஆனா?" என்று கேட்டாள்.

"தேவைதையப் பெத்த உடனேயே!"

"தேவதையோட அம்மா அப்பாதான் மகாராணியும் மகாராஜாவும்! இந்த ஆனந்தி எப்பவுமே உங்க செல்ல ராட்சசிதான்! விராட் எப்பவுமே எனக்கு செல்ல ராட்சசன்தான்!" அவன் புன்னகையுடன் கூறினாள்.

அவள் சொன்னதைக் கேட்டதும், "என் செல்ல ராட்சசி!" என்று கூறி சிரித்தான்.

குழந்தை அழும் சத்தம் கேட்க இருவரும் கீழே வந்தனர்.

வளைகாப்புக்கு மூன்று நாள் முன்னரே சென்னையிலிருந்து கிரிதரனும் மங்கையும் பாட்டியை அழைத்துக் கொண்டு வந்துவிட்டனர்.
வீடு மீண்டும் திருவிழாக் கோலம் பூண்டது.

இப்போது செல்வியையும் ஆனந்தியையும் தவிர அவர்கள் கொஞ்சுவதற்கு புதிதாக ஐஷுக்குட்டியும் சேர்ந்து விட்டாள்.

வளைகாப்பன்று செல்வி கத்தரிப்பூ நிறத்தில் சிவப்பு பார்டரில் தங்க சரிகையிட்ட பட்டுப்புடவை கட்டியிருந்தாள்.

சூரஜ் தனக்கு சென்னையில் வைத்து வாங்கித் தந்த பவழ செட்டை அணிந்தாள். அவள் முகம் பொன்னைப் போல மின்னியது.

"மெதுவா வா! பாத்து நட!" அவள் கைபிடித்து அழைத்துச் சென்று மணையில் அமர வைத்தாள் மங்கை.

ஐஸ்வர்யா குட்டியை பாட்டி வைத்திருக்க விராட்டும் ஆனந்தியும் சுற்றிச் சுற்றி வேலைகளை கவனித்தனர்.

அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாரும் வந்து செல்வியின் கைகளில் பல வண்ண கண்ணாடி வளையல்களை அடுக்கி முறையாய் செய்ய வேண்டிய சடங்குகளை செய்தனர்.
பெற்றவர்களும் பெரியவர்களும் அட்சதை தூவி வாழ்த்தினர்.

இந்த நிகழ்வுகளை தீபிகாவும் ஆனந்தனும் யூஎஸ்ஸில் இருந்தபடி தொழில் நுட்ப வசதியினால் லைவ் ரிலே பார்த்து ரசித்தனர்.

கூடவே எல்லாரிடமும் வீடியோவில் பேசினார்கள். ஐஷுக்குட்டியை வீடியோவில் பார்த்து கொஞ்சினார்கள்.

வந்திருந்த விருந்தினர்களுக்கு விருந்து பரிமாறி அவர்களை தாம்பூலம் கொடுத்து வழியனுப்பிய பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவுண்டனர். இப்போது இது இவர்களின் சம்பிரதாயமாகவே மாறிப் போயிருந்தது.

குழந்தையை லக்ஷ்மி பாட்டி வைத்திருந்தார். அதுவும் அழாமல் சமத்தாக இருந்தது. எல்லாரும் சாப்பிடும்போது ஆனந்தியின் வளைகாப்பைப் பற்றியும் தீபிகா ஆனந்தனின் நிச்சயதார்த்தம் பற்றியும் ஆனந்தன் திடீரென்று வந்து நின்றதைப் பற்றியும் பேசி சிரித்தனர்.

லக்ஷ்மி பாட்டி அனைவரையும் அமர்த்தி திருஷ்டி கழித்தார்.


மணி வயிற்றில் கரு வளர்ந்து வர
மங்கையும் பேரழகுடன் மிளிர்கிறாள்!
தங்கையும் வந்தாள்! தங்கை பெற்ற
தங்கமகளும் வந்து சேர்ந்தாள்!

குழந்தையின் வருகையால் வீட்டில்
கோலாகலம் கொண்டாட்டம் தான்!
மகிழ்ச்சித் தோரணங்கள் கட்டி
மனங்களும் மலர்ந்தே நெகிழ்ந்தன!

வளைகாப்பு நாளும் வந்ததுவே!
வனிதையின் கையில் வளைகளை
அண்டை வீட்டுப் பெண்டிரும் வந்து
அழகாகச் சூட்டி வாழ்த்தினர்!

அழகுப் பெட்டகமாய் வளைகளுடன்
அன்பு தேவதை செல்வி நடமாட
அவளுடன் குழந்தையும் வீட்டில்
அழகுக்கு அழகு சேர்த்தே சிரித்தது!


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top