கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

46. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member

காதல் மொழி - 46


பால் பாண்டியன் தன் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு சூரஜைப் பற்றி விசாரித்த போது அவர்கள் அளித்த தகவல் அவனுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

சூரஜ் மும்பையிலிருந்து சென்னை செல்லும்போதே தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டான் என்று தெரிவித்தார்கள்.

மேலும் சென்னையிலிருந்த போது ஒரு முறை அலுவல் தொடர்பாக அவனைத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவன் அவர்களுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.

சூரஜ் போன்ற திறமைசாலியான ஊழியர்கள் இப்படி பொறுப்பில்லாமல் வேலையை விட்டுச் சென்றால் நிறுவனம் என்னவாகும் என்று கேள்வி கேட்டு பால் பாண்டியனிடம் சூரஜைப் பற்றி குற்றப்பத்திரிகை வேறு வாசித்தார்கள்.

பால் பாண்டிக்கு ஐயோவென்று இருந்தது.

'அவன் மும்பைல இருந்து கௌம்பறப்பவே வேலைய விட்டுட்டான்னா.. ஒரு முடிவோடதான் கௌம்பியிருக்கான்.. எவ்ளோ மனசு வேதனை இருந்திருந்தா இப்டி ஒரு முடிவை எடுப்பான்.. சே! அவன் தன் குடும்பத்துக்காக எவ்ளோல்லாம் பண்ணியிருக்கான்.. இப்டியா அவன வெறுத்து ஒதுக்குவாங்க..' என்று மனதுக்குள் சூரஜின் குடும்பத்தை திட்டித் தீர்த்தான்.

அவனுக்கு சூரஜ் பற்றி அலுவலகத்தில் அறிந்து கொண்ட தகவல்களை அவன் குடும்பத்துக்கு சொல்ல விருப்பமே இல்லை என்றாலும் விராட்டை அழைத்தான்.

"சொல்லுங்க பாண்டியன்.. சூரஜ் பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சிதா.." என்று ஆவலும் எதிர்பார்ப்புமாகக் கேட்கும் விராட்டை நினைத்து பால் பாண்டியனுக்கு கழிவிரக்கமே தோன்றியது.

"ம்.. நல்லதா எந்த தகவலும் இல்ல விராட்.. சூரஜ் மும்பையில இருந்து சென்னை கிளம்பறப்பவே வேலையை ரிசைன் பண்ணிட்டுதான் கிளம்பியிருக்கான்.. அவன் சென்னையில இருக்கறப்ப அவனை ஆஃபீஸ்ல இருந்து எதுக்கோ கூப்பிட்டாங்களாம்.. அப்ப அவங்களுக்கு பதில் எதும் சொல்ல மறுத்துட்டானாம்.. ஆஃபீஸ்ல அவனப் பத்தி என்கிட்ட புலம்பறாங்க.." என்று கூறினான்.

விராட்டுக்கு தலையில் இடி விழுந்தைப் போல இருந்தது.

"எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல பாண்டியன்.. அவன் மனசு ஒடஞ்சி போயிருக்கு.. நாங்கல்லாம் சேர்ந்துதான் அவன் மனச ஒடச்சிட்டோம்.. ஒரு தம்பியா நா அவனுக்கு சப்போர்ட் செய்திருக்கணும்.. செய்யாம விட்டுட்டேன்.. விட்டுட்டேன்.. என் அண்ணனை நா கை விட்டுட்டேன்.. அவன் எனக்காக தன் குழந்தைய இழந்திருக்கான்.. ஆனா நா அவனுக்கு துணை நிக்காம விட்டுட்டேன்.. நா பாவி.. நா பாவி.." என்று புலம்பியழுதான்.

பாண்டியனுக்கு விராட்டின் நிலை நன்றாகவே புரிந்தது.

"விராட்.. நீங்க தவிக்கறது எனக்கு புரியுது.. மனசு தளராதீங்க.. நாம எப்டியும் அவனை கண்டுபிடிச்சிடலாம்.. எப்டியும் இந்தியாவுக்குள்ளதானே இருப்பான்.. நாம அவனை கண்டிபிடிக்கறோம்.." என்று ஆறுதல் சொல்லி அழைப்பை துண்டித்தான்.

இங்கே மும்பையில் விராட்டின் அழுகையைக் கண்ட ஆனந்தி என்னவென்று வினவ அவளிடம் விவரம் கூறினான் விராட்.

"சூரஜ் மும்பையில இருந்து போகும்போதே வேலைய ரிசைன் பண்ணிட்டு போய்ட்டான்.. இது என்னோட தவறுதான்.. நா அவனுக்கு ஆறுதலா இருக்கல.. அவன கைவிட்டுட்டேன்.. கைவிட்டுட்டேன்.." என்று மீண்டும் அழுதான்.

ஆனந்தி கணவனைத் தேற்றும் வகையறியாமல் தவித்தாள்.

கௌரியும் தீன்தயாளும் கூட அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தனர்.

"இல்ல விராட்.. நீ அவன கைவிடல.. நாந்தான் அவன கைவிட்டுட்டேன்.. என்னாலதான் அவன் இந்த வீட்ட விட்டு போய்ட்டான்.." என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் கௌரி.

அவள் அழுவதைக் கண்ட தீன்தயாளும் தன் வாயைப் பொத்திக் கொண்டு மகனுக்காக கண்ணீர் சிந்தினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு ஒரு நிமிடம் கடுங்கோபம் வந்தது.

"எல்லாரும் கொஞ்சம் நிறுத்தறீங்களா.." என்று கத்தினாள்.

அவளுடைய கடுங்கத்தலில் அதிர்ந்து போன மூவரும் தங்கள் ஒப்பாரியை நிறுத்தினார்கள்.

"இப்ப என்ன ஆயிடுச்சுன்னு எல்லாரும் இப்டி ஒப்பாரி வெக்கறீங்க.. அக்காவும் மாமாவும் எங்கியோ நல்லா இருக்காங்கன்னு நம்புங்க.. நல்லா புரிஞ்சுக்கோங்க.. அவங்க உங்க கோவத்தை தாங்கிக்க முடியாமதான் இங்க இருந்து போயிருக்காங்களே தவிர உங்க மேல கோவப்பட்டுகிட்டு இங்க இருந்து போகல.. கொஞ்ச நாள்.. அவங்க மனசு சரியானதும் இங்கதான் திரும்பி வருவாங்க.. நம்மளால அவங்கள விட்டு இருக்க முடியாதுன்னு அவங்களுக்கு நல்லா தெரியும்.. அவங்களாலயும் நம்மள விட்டுட்டு இருக்கவே முடியாது.. தயவு செய்து இப்டி ஒப்பாரி வெக்கறத இதோட விட்டுத் தொலைங்க.. விராட்! நீங்க போலீஸ்ல எவ்ளோ பெரிய பவர்ல இருக்கீங்க.. உங்களால உங்க பவரை வெச்சி உருப்படியா என்ன செய்ய முடியும்னு யோசிங்க.. அத்த! மாமா! அவங்க சீக்கிரம் திரும்பி வரணும்னு சாமிய வேண்டிக்கங்க.." என்று மூவரையும் பார்த்து ஒரு மூச்சு கத்திவிட்டு அங்கிருந்து கோபமாகச் சென்றாள்.

அவள் பேச்சிலிருந்த உண்மையைப் புரிந்து கொண்ட மூவரும் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

அவள் சொன்னதைப் போலவே சூரஜும் செல்வியும் விரைவில் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்று கௌரியும் தீன்தயாளும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

விராட் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கத் தொடங்கினான்.

இங்கே மதுரையில் பால் பாண்டியன் கொணர்ந்த செய்தி பற்றி அறிந்த கண்மணியும் யமுனாவும் செல்விக்காகவும் சூரஜுக்காகவும் மிகவும் வருந்தினார்கள்.

கண்மணி தன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தாள்.

செல்வி அவளுக்கு பரிசாகக் கொடுத்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதில் செல்வியின் கையெழுத்தைத் தொட்டுப் பார்த்து கண் கலங்கினாள்.

அப்போது அங்கு வந்த துர்கா கண்மணியின் கையிலிருந்த பாரதியார் கவிதைப் புத்தகத்தை வாங்கிப் புரட்டினாள்.

அதில் ஒரு பக்கத்தில் செல்வியின் மின்னஞ்சல் முகவரி இருந்ததைப் பார்த்தாள்.

"ஹே! கண்மணி! இங்க பாரு.. இதுல செல்வி பாபியோட ஈமெயில் ஐடி இருக்கு.." என்றாள்.

"ம்ச்.. என்கிட்ட ஏற்கனவே அவங்களோட மெயில் ஐடி இருக்குப்பா.. நா நிறைய மெயில் அனுப்பியிருக்கேன்.. அவங்க உடம்பு சரியில்லாம போனப்றம் அந்த மெயில் ஐடியை டீஆக்டிவேட் பண்ணிட்டாங்க போல.. நா போடற எந்த மெயிலும் அவங்களுக்கு போகவேயில்ல.. ஃபெயிலியர்ன்னு நோட்டிஃபிகேஷன் வருது.. " என்றாள் கண்மணி கவலை தோய்ந்த குரலில்.

"இல்ல.. இது வேற ஐடி.. இங்க பாரு.." என்று கூற, கண்மணியும் அவசரமாக வாங்கிப் பார்த்தாள்.

"ஆமா.. இது வேற மெயில் ஐடி.. என்கிட்ட இருக்கற மெயில் ஐடில சூரஜ் பையவோட பேரும் சேர்ந்திருக்கும்.. இது அவங்க கல்யாணத்துக்கு முன்னால க்ரியேட் பண்ணினது போலிருக்கு.. இதுல பையா பேர் இல்ல.." என்றாள் கண்மணி.

"இதுக்கு மெயில் அனுப்பு கண்மணி.. இங்க அவங்கள எல்லாரும் எவ்ளோ தேடறாங்கன்னு தெளிவா எழுதி மெயில் அனுப்பு.. இத அவங்க பார்த்தா கூட போதும்.. ஒரு வேளை அவங்க உனக்கு பதில் போடலன்னாலும் இங்க இருக்கற நிலை அவங்களுக்கு புரியும்ல.." என்று துர்கா கூறினாள்.

உடனடியாக கண்மணியும் செல்வியின் இந்த புதிய மின்னஞ்சல் முகவரிக்கு நீளமான ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.

அது சென்று சேர்ந்தது என்று அலர்ட் வந்தது. அவளுக்கு நிம்மதியாக இருந்தது. இதை செல்வி படித்தாளா இல்லையா என்பது அவளுக்குத் தெரியலவில்லை என்றாலும் ஃபெய்லியரர் மெசேஜ் வரவில்லை என்ற நிம்மதியே அவளை நம்பிக்கை இழக்காமல் இருக்கச் செய்தது.

இதைப்பற்றி தன் அன்னை யமுனாவிடம் கூற, அவளும் செல்வியைக் கண்டறிய ஏதோ ஒரு வழி கிடைத்ததே என்று ஆறுதலடைந்தாள்.

இதனிடையே விராட் சூரஜின் பாஸ்போர்ட் எண் வைத்து அவன் வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான்.

தன்னுடைய பதவி அதிகாரத்தை வைத்து மற்ற மாநில காவல்துறையிடமும் உதவி கேட்டு தன் அண்ணனையும் அண்ணியையும் தேடும் வேட்டையை மேற்கொண்டான்.

அது மட்டுமின்றி இந்தியாவின் பிரபலமான ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் பத்திரிகைகள் அனைத்திலும் சூரஜையும் செல்வியையும் வீடு திரும்ப உருக்கமாக வேண்டுகோள் விடுத்து விளம்பரம் கொடுத்தான்.

எதற்கும் பலனில்லை என்றாலும் அவன் மனம் தளராமல் தன் விளம்பரங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தான். தன் தேடுதல் வேட்டையையும் நடத்திக் கொண்டிருந்தான்.

கண்மணியும் மனம் தளராமல் செல்விக்கு மின்னஞ்சல் அனுப்பியபடியே இருந்தாள்.

இப்படியே மேலும் நான்கு மாதங்கள் தவிப்புடன் கழிந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. பால் பாண்டியன் வீட்டு அழைப்பு மணி அடிக்க, அன்று அங்கிருந்த கண்மணி சென்று கதவைத் திறந்தாள்.

கொஞ்சம் கருமையான நிறத்துடன் துறுதுறுவென்ற கண்களுடன் நெடுநெடுவென்று பனை மரம் போல உயரமாக இருந்த வாலிபன் ஒருவன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்த கண்மணி குழப்பத்துடன்,

"சொல்லுங்க சார்! உங்களுக்கு யார பாக்கணும்? பாண்டியன் மாமாவையா? இல்ல பெரிய மாமாவையா?" என்று கேட்டாள்.

துர்காவின் சாயலில் ஒரு புதிய பெண் வந்து கதவைத் திறந்ததும் திகைத்தான் அந்த வாலிபன்.

அதுவும் பாண்டியன் மாமாவையா? பெரிய மாமாவையா? என்று அவள் கேட்டதும் இந்த வாலிபனின் முகத்தில் குறும்பு மின்னியது.

அவளைப் பார்த்து உல்லாசமாக சீட்டியடித்தான்.

தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் தன்னைப் பார்த்து சீட்டியடித்த இளைஞனைக் கண்ட கண்மணிக்கு கோபம் வந்தது.




தேடுதல் தொடர்கிறது தோல்வியில் முடிந்தாலும்!
தேடும் உறவுகளுக்கோ அலுக்கவில்லை
சளைக்கவில்லை!
அன்பான உள்ளங்களில் அக்கினியைச்
சேர்த்தோமென்று
குற்ற உணர்ச்சியும் குறையவில்லை
அனைவருக்கும்!

கண்மணியும் கலங்கவில்லை தேடலையும்
துறக்கவில்லை!
அன்புள்ளம் கொண்டவளும் ஒருநாள்
கிடைப்பாளென்று
முயற்சிகளில் இறங்கியுமே முனைப்புடன்
தேடுகிறாள்!
மூச்சுக்கு மூச்சு செல்வியின் பெயரை
அரற்றுகிறாள்!

மின்னலென ஒளிக்கீற்று எங்கிருந்தோ
வந்ததுவே!
மின்னஞ்சல் முகவரியும் அவளுக்கும் கிட்டியதே!
எய்துவிட்டாள் அத்திக்கில் சின்னவளும்
கணையொன்றை!
வெற்றியுமே கிட்டிடுமா? வேதனைகள்
தீர்ந்திடுமா!

- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top