கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

47. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 47



தான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் தன்னைப் பார்த்து சீட்டியடித்த இளைஞனைக் கண்ட கண்மணிக்கு கோபம் வந்தது.

'பத்தமீஸ்!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள்,

"ஹே மிஸ்டர்! என்ன கொழுப்பா? வீட்டு காலிங் பெல் அடிச்சிட்டு யாரப் பாக்கணும்னு கேட்டா பதில் சொல்லாம என்ன பாத்து விசில் அடிக்கறீங்க? உங்க வீட்ல உங்களுக்கு ஒழுக்கம் சொல்லி தரலையா?" என்று கோபமாகக் கேட்டாள்.

அவன் அவளுடைய கொஞ்சும் குரலையும் அதை விட அழகாகப் பேசும் தமிழையும் கேட்டு ஒரு நொடி திகைக்கவே செய்தான்.

'நம்ம வீட்டுல யார் இவ புதுசா? அதுவும் அண்ணன மாமான்னு கூப்பிடறா.. பார்க்க துர்கா மாதிரி இருக்கா.. துர்காவோட அம்மம்மா வீட்டு சொந்தமோ.. ஆனா இப்டி ஒரு சொந்தம் அவங்க வீட்ல யாரும் இருக்க மாதிரி தெரீலயே..' என்றெல்லாம் நினைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவன் தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தன்னையே பார்த்தபடி நிற்பதைப் பார்த்த கண்மணிக்கு மேலும் கோபம் வந்தது.

"ஹலோ! மிஸ்டர்!" என்று அவன் முகத்தின் முன்னே சொடுக்கு போட்டாள்.

"சாரி மிஸ்.. ம்.. பாண்டியன்.. வந்து பால் பாண்டியன் இருக்காரா?" என்று கேட்டான் அவன்.

"கொஞ்சம் இருங்க.. மாமாவ கூப்பிடறேன்.." என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் கண்மணி.

"மாமா! உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க?" என்று பாண்டியனைப் பார்த்து அவள் கூறவும்,

"யாருமா?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தான் பால் பாண்டியன்.

"ஹையோ! பேர கேக்க மறந்துட்டேனே.." என்று சொல்லிக் கொண்டே அவள் தன் தலையில் தட்டிக் கொண்டாள்.

அப்போது,

"பாண்டீ! பாண்டீ! பாண்டீ! பாண்டீ!" என்று வடிவேல் ஜோக்குகளில் பின்னணியில் பிஜிஎம் போல் வரும் குழந்தைக் குரலில் சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் அந்தப் புதியவன்.

தனக்குப் பின்னால் ஏதோ குழந்தையின் குரல் கேட்டு திடுக்கிட்டவளாய்த் திரும்பிய கண்மணி, வாசலில் நின்றிருந்தவன் வீட்டுக்குள்ளேயே வந்தது கண்டு,

"பத்தமீஸ்! ஏய் மிஸ்டர்? எதுக்கு வீட்டுக்குள்ள வந்தீங்க?" என்று கோபத்துடன் கேட்டாள்.

அந்தப் புதியவனைப் பார்த்த பால் பாண்டி நிலைமையை ஊகித்தவனாய்,

"கண்மணி! கண்மணி! இரு! இரு! இவன் யாரோ இல்ல.. என் தம்பிதான்.. முத்துப் பாண்டியன்." என்று கூறி அவளை நிறுத்திவிட்டு,

"டேய்! இவ கிட்டயும் உன் விளையாட்ட காட்டினியா?" என்று புதியவனிடம் கேட்டான்.

"நா என்ன செய்யறது? எலி தானாவே வந்து பொறிக்குள்ள சிக்கறேன்னு சொல்லுது.. விடுவேனா?!" என்று கேட்டு சிரித்துவிட்டு,

"சரி! யார் இந்தப் பொண்ணு? உன்ன மாமான்னு சொல்லுது?! நித்யா அண்ணி வீட்டு சொந்தமா? ஆனா பாத்தா அப்டி தெரியலயே.. துர்கா சாயல்ல இருக்க மாதிரி இருக்கா.. ஒரு வேளை கனகம் சித்தி சைடு சொந்தமா என்ன?" என்று கேட்டான் அந்த முத்துப் பாண்டியன்.

முத்துப் பாண்டியன் பால் பாண்டியனை விட ஐந்தாறு வயது சிறியவன்தான் என்றாலும் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்ததால் அவர்கள் இருவரும் ஒருமையில்தான் பேசிக் கொள்வார்கள்.

"இவ எங்க செந்தில் மாமாவோட பொண்ணுடா.. மும்பையில இருந்து வந்திருக்கான்னு நா சொன்னேனே.. மறந்துட்டியா.." என்று கேட்டான் பால் பாண்டியன்.

"எஸ்! எஸ்! மறந்துட்டேன்." என்றவன் கண்மணியை குறுகுறுவென்று பார்த்தான்.

கண்மணிக்கு குழப்பமாக இருந்தது.

"மாமா! இவர் உங்க தம்பியா? ஆனா.. அத்தைக்கு நீங்க ஒரே பையன்னு அம்மா சொன்னாங்களே! இல்லையா?" என்று கேட்டாள்.

"எங்கம்மாவுக்கு நா ஒரே பையன்தான்ம்மா.. இவன் என்னோட சித்தப்பா பையன்.. அதாவது என் அப்பா பாரிவேந்தனோட தம்பி இளங்கோ. அந்த இளங்கோ சித்தப்பாவோட பையன்தான் இந்த முத்துப் பாண்டியன்." என்று பால் பாண்டியன் விளக்கினான்.

"ஓ! ஓகே!" என்று பதிலளித்தவள் முத்துப் பாண்டியனைப் பார்த்து மெல்லிய குரலில், "சாரி!" என்றாள்.

"நானும் சாரி சொல்லிக்கறேன்.." என்றான் முத்துப் பாண்டியன்.

அவள் மெலிதாக புன்னகைத்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனாள்.

போனவளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான் முத்துப் பாண்டியன்.

"என்ன பகல் கனவா? ஒரு பெண்ணைப் பார்த்து நிலைவைப் பார்த்தேன்னு டூயட் பாட ஓடிட்டியோ? அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா.." என்று நக்கலாகக் கூறினான் பாண்டியன்.

"ஏன்? உன் மாமா பொண்ணுங்கறதால நான் டூயட் பாடக் கூடாதோ?" என்று அதே நக்கலுடன் கேட்டான் முத்து.

"அடேய்! என் மாமா பொண்ணுங்கறதால சொல்லல.. அவ இதுக்கு சரிப்பட மாட்டான்னு சொல்றேன்.."

"என்னடா சொல்ற?"

"அவ கனவு லட்சியம் எல்லாம் ஒரு ஐஏஎஸ் ஆகணும்கறதுதான்.. அவள ஐஏஎஸ் ஆக்கறேன்னு சொல்லிதான் நா அவள மும்பையில இருந்து கூட்டிட்டு வந்திருக்கேன்.. அதனால உன் விளையாட்டெல்லாம் அவ கிட்ட காட்டி அவள டிஸ்ட்ராக்ட் பண்ணாத.. புரியுதா?" என்று கண்டிப்புடன் சொன்னான் பாண்டியன்.

"ஹலோ பிரதர்! என்ன பாத்தா ப்ளே பாய் மாதிரி தெரியுதா? அவள நா ஏன் டிஸ்ட்ராக்ட் பண்ண போறேன்.." என்று அண்ணனிடம் கூறியவன்,

'அவள டிஸ்ட்ராக்ட் பண்ண மாட்டேன்.. ஆனா அவள என் புறமா கட்டாயம் அட்ராக்ட் பண்ணுவேன்..' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு உள்ளே சென்றான்.

முத்து வந்திருப்பதை அறிந்த துர்கா, அவனைப் பார்க்க ஆவலுடன் வந்தாள்.

துர்காவுக்கும் முத்துப் பாண்டியனுக்கும் நான்கு வயது வித்தியாசம். ஆனால் சிறு வயதிலிருந்தே அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடியதால் நீ வா போ என்று ஒருமையில்தான் பேசிக் கொள்வார்கள். உரிமையுடன் சண்டை போட்டுக் கொள்வார்கள். இருவரும் விகல்பமில்லாமல் பழகுவதை வீட்டுப் பெரியவர்களும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். சில சமயம் துர்காவின் பாட்டி இருவரும் பழகுவதைப் பார்த்து ஏதாவது முணுமுணுப்பாள். ஆனால் துர்காவின் அம்மா அதையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டாள்.

"பசங்க பழகறத நாம தப்பா சொன்னாதான் அவங்க மனசில தப்பான எண்ணங்கள் வரும்.. இல்லாத ஒண்ணை நாம ஏன் அவங்க மனசில பதிய வைக்கணும்.. அப்றம் ஏன் கஷ்டப்படணும்.. நாம எதுவும் சொல்லாம இருந்தாலே அவங்க சரியா இருப்பாங்க.." என்று கூறுவாள்.

அதனால் துர்காவுக்கும் முத்துப் பாண்டியனுக்கும் நடுவில் நல்ல நட்பு ஆரோக்கியமாக வளர்ந்திருந்தது.

"ஹாய் துர்கா!"

"ஹாய் முத்து! எப்டி இருக்க? ஏன் இவ்ளோ நாளா வரல.." என்று கேட்டாள்.

"என்ன செய்ய.. படிப்பு! நா என் சொந்தக் கால்ல நிக்கணும்ல.. எவ்ளோ காலத்துக்குதான் பெரியப்பாவோட நிழல்லயே இளைப்பாற முடியும்.. அதான்.. படிச்சி முடிச்சதும் வேலை கிடைச்சிடணும்னு தீயா வேல செய்யறேன்.. ரெண்டு மூணு சர்டிஃபிகேஷன் கோர்ஸ் பண்ணிட்டிருக்கேன்.. காலேஜ் எக்சாம்ஸும் நெருங்குது அதான்.." என்றான்.

"ம்.. ரொம்ப பொறுப்பா பேசற.. சரி.. சரி.. நல்லா படி.." என்றாள்.

"என்ன கேக்கறியே? நீ எப்டி இருக்க?" துர்காவைப் பார்த்துக் கேட்டான் முத்து.

"எனக்கென்ன? சூப்பரா இருக்கேன்.. முன்னல்லாம் வீட்ல நா மட்டும்தான்.. இப்ப கண்மணியும் இருக்கறதால ரொம்ப ஜாலியா இருக்கு.." என்றாள்.

"ஆச்சர்யமா இருக்கு.. முன்னல்லாம் நீ யார் கூடவும் அதிகம் மிங்கிள் ஆக மாட்ட.. இப்ப எப்டி.. அதுவும் மும்பையில வளர்ந்த பொண்ணு கூட எப்டி உனக்கு சிங்க் ஆகுது.." என்று

"கண்மணி கூடவும் எனக்கு ஒத்துப் போகலதான்.. ஆனா ஒரு க்ரிட்டிக்கலான சிட்யுவேஷன்ல கண்மணி என் மானத்த காப்பாத்தினா.. அப்பதான் அவ நல்ல மனசை நா புரிஞ்சிகிட்டேன்.." என்று நடந்ததை துர்கா விளக்கமாகக் கூறினாள்.

"வாவ்! தட்ஸ் கிரேட்! கண்மணி இவ்ளோ தைரியமான பொண்ணா? அவளுக்கு கராத்தேல்லாம் தெரியுமா?!" என்று வாய் விட்டு கூறினான்.

"கண்மணிக்கு மட்டுமில்ல.. இப்ப எனக்கும் கராத்தே தெரியும்.. நாங்க ரெண்டு பேரும் இப்ப சிலம்பம் கிளாசும் போறோம்.." என்றாள் துர்கா பெருமையாய்.

"தட்ஸ் கிரேட் பா.." என்றான் முத்து.

இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போனார்கள்.

கண்மணியைப் பற்றி துர்கா கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.

'அதான்.. நா அவ கிட்ட வம்பு பண்றச்சே என்ன அத்தன அதட்டினாளா.. ஆனா நான் இந்த வீட்டு பையன்னு தெரிஞ்சதும் தயங்காம சாரியும் கேட்டாளே.. உண்மையாவே ரொம்ப நல்ல மனசுதான்..' என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

'செந்தில்வேல் மாமா பத்தி பாண்டி நிறைய சொல்லியிருக்கான்.. ஒரு துணிச்சலான நேர்மையான போலீஸ்காரர்.. அத்தையோட மானத்தை காப்பாத்தறதுக்காகவே அவங்கள கல்யாணம் கட்டிகிட்டாரு.. ஆனா அப்டி கட்டிகிட்டாலும் அவங்கள ரொம்ப லவ் பண்ணினாருன்னு எல்லாம் சொல்லியிருக்கான்.. ரௌடிங்களோட சதியால செத்துப் போனாலும் அவங்களோட குண்டுகளை நெஞ்சில தாங்கிதான் செத்துப் போனாரே தவிர முதுகுல வாங்கலன்னு பாண்டி தன் மாமவை பத்தி ரொம்ப பெருமையா பேசுவான்..' என்று கண்மணியின் தந்தை பற்றி பால் பாண்டியன் முன்பு கூறியிருந்ததையெல்லாம் நினைவுபடுத்திப் பார்த்துக் கொண்டான்.

'அப்படிப்பட்டவரோட பொண்ணு இப்டி தைரியமானவளா இருக்கறதுல ஆச்சர்யம் என்ன இருக்கு..' என்று அவனுக்குத் தோன்றியது.

பால் பாண்டியன் தன் தம்பி முத்துப் பாண்டியனை தன் அத்தை யமுனாவிடம் அழைத்துச் சென்றான்.

செந்திவேலைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டிருந்த முத்துவுக்கு யமுனாவைப் பற்றி அதிகம் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் அந்த ஹிந்திக்காரப் பெண்ணுக்கு என்ன நல்ல பண்புகள் இருந்துவிடப் போகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய நினைப்புகளை பொய்யாக்கும் விதமாக யமுனா மிகவும் அன்பும் பண்பும் மிக்கவள் என்பது முதல் பார்வையிலேயே அவனுக்குப் புரிந்தது.

அதுவும் துர்காவின் அம்மா கனகவல்லியிடம் அவள் காட்டும் அன்பும் தன் மாமியார் மாமனாரிடம் அவள் காட்டும் பணிவும் அவனை பிரமிக்கவே வைத்தது.

"பாண்டி சொல்லி நாங்க மும்பை போய் பாக்கறப்ப அக்கா வீட்ல அவங்கம்மா படமும் செந்தில் மாமா படமும் மட்டும்தான் இருந்துச்சு.. வேற சாமி போட்டோ எதுமே இல்ல.. முன்னாடி அத்தையும் மாமாவும் அக்காவ வீட்ட விட்டு வெரட்டினது எதையும் மனசில வெச்சிக்காம அக்கா அவங்க கிட்ட எவ்ளோ மரியாதையா நடந்துகிட்டாங்க தெரியுமா.. இப்பவும் அந்த மரியாதையில இம்மி கூட குறையல.. நானாவது அத்தைய சில நேரம் எதிர்த்து பேசுவேன்.. ஆனா யமுனா அக்கா ஒரு நாளும் அத்தைய எதிர்த்து பேசினதே இல்ல." என்று கனகவல்லி சொல்ல முத்துவுக்கு யமுனாவின் மேல் மதிப்பு கூடிக் கொண்டே போனது. கண்மணியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலும் கூடியது.




கண்மணியும் கண்ணின் மணியாகி
நின்றாள்!
மாமனையும் மற்றோரையும் அன்பால்
வென்றாள்!
துர்காவின் இதயத்தில் உயிர்ப்பித்தாள்
நேசத்தை!
நட்புக்கரம் நீட்டியுமே இதயத்தை
வென்றாளே!


நிமிர்ந்த நன்னடையும் நற்பார்வை
துணிச்சலும்
பெண்ணுக்கு எந்நாளும் தேவையென
எடுத்துரைத்தாள்!
கண்மணியும் துர்காவும் தற்காப்பில்
சிறந்துநிற்க
கராத்தேயும் சிலம்பமும் சிறப்பாகக்
கற்றனரே!

புதியவன் ஒருவனும் இல்லத்தில்
வந்துநின்றான்!
கண்மணியோ கவர்ந்து விட்டாள்
வந்தவனை!
கதவைத் திறந்ததுமே புகுந்தாள் அவன்
இதயத்தில்!
பண்புள்ள யமுனாவின் குணமறிந்து
நெகிழ்ந்திட்டான்!

வந்தவனும் மாமனென்று நங்கையும்
தெரிந்து கொண்டாள்!
சாதிக்கப் பிறந்தவளை நோக்கியவன்
வியப்புடனே
இலட்சியப் பெண்ணவளை நேசிக்க
ஆசை கொண்டான்!
இதயத்தில் இடம்பிடித்து வீற்றிருக்க
இச்சை கொண்டான்!


- C. புவனா.


- காதலின் மொழி என்ன?
 
Top