கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

48. காதலுக்கு மொழியேது?

Annapurani Dhandapani

Active member
காதல் மொழி - 48


"பாரி மாமாவோட தம்பி இளங்கோவும் அவங்க வைஃப் வள்ளியும் முத்து பத்தாவது படிக்கறப்ப ஒரு ரோட் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க.. அப்பலேர்ந்து முத்துவோட முழு பராமரிப்பையும் பாரி மாமா எடுத்துக்கிட்டார்.. அவன நல்லா படிக்க வெச்சி பெரிய ஆளா ஆக்கி விடறது தன் கடமைன்னு எப்பவும் சொல்வார்.. அங்கையற்கண்ணி அத்தைக்கும் முத்துன்னா ரொம்ப இஷ்டம்.. சின்ன வயசில இருந்தே அவனை கொழுந்தன் மகன்னு நடத்தாம தன்னோட இன்னொரு மகனாதான் நடத்துவாங்க.. அவங்கம்மா அப்பா இறந்தப்றம் முத்து பேரண்ட்ஸ் இல்லாதத நினைச்சி வருந்தவே கூடாதுன்னு அவன் மேல இன்னும் அதிகமா அன்பு செலுத்த ஆரம்பிச்சாங்க..

அவனும் அவங்கம்மா அப்பாவ மிஸ் பண்றானே தவிர அன்பையும் பாசத்தையும் மிஸ் செய்யறதில்ல.. அப்டிதான் அவன் எப்பவும் சொல்வான்.." என்று துர்கா முத்துப் பாண்டியனைப் பற்றி சொல்லியதைக் கேட்டு கண்மணிக்கு முத்துவின் மேல் கழிவிரக்கம் தோன்றியது.

அவன் தன் பெரியப்பாவின் தயவில் வளர்ந்தாலும் தன் சொந்தக்காலில் நின்று அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்து நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததும் அவன் மேல் நன்மதிப்பு உண்டாயிற்று.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொண்ட பின்பு துர்காவும் அவர்களின் நட்பு பாலமாக இருந்ததால் அவர்களின் நட்பு வளர்வதில் தடையெதுவும் இருக்கவில்லை.

அப்படி அவர்களின் நட்பு வளர்கையிலேதான் முத்துவுக்கு சூரஜைப் பற்றியும் செல்வியைப் பற்றியும் தெரிய வந்தது.

"ப்பா.. கிரேட்.. உங்க செல்வி பாபி பத்தி நீ சொல்ல சொல்ல எனக்கு அவங்கள பாக்கணும் போல இருக்கு.. எக்சாம்ஸ் முடிஞ்சதும் மும்பைக்கு டிக்கட் போட்ற வேண்டியதுதான்.. என்ன சொல்ற துர்கா.. நம்மல்லாம் ஒண்ணா போலாம்.. ஜாலியா இருக்கும்.." என்றான்.

"நம்ம ஒண்ணா போனா ஜாலியாதான் இருக்கும்.. ஆனா மும்பையில செல்வி பாபி இருக்கணும்ல.. அவங்கதான் எங்க போனாங்கன்னே தெரியலயே.." என்றாள் துர்கா.

"என்ன சொல்ற? செல்வி பாபிய காணமா? எப்டி? எப்பலருந்து? இத சூரஜ் அண்ணன் எப்டி தாங்கிகிட்டார்?" என்றெல்லாம் வரிசையாகக் கேள்வி கேட்டான்.

கண்மணி தன் கண்களில் கண்ணீருடன் நடந்ததை விவரிக்க, முத்துவுக்கு அதைக் கேட்டு சொல்லொணாத் துயர் ஏற்பட்டது.

அதுவும் கண்மணியின் கண்ணீர் அவனை என்னவெல்லாமோ செய்தது.

'இவ கண்ணீர் என்ன ஏன் இவ்ளோ பதற வைக்கிது.. இவ அழுதா ஏன் என்னால தாங்க முடியல..' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

"ஹேய்.. ஏன் இப்டி அழற? அவங்க கண்டிப்பா கிடைச்சிடுவாங்க.." என்று கூறி சமாதானம் செய்ய முயன்றான்.

"எனக்கும் அது புரியுது முத்து.. பட் எப்டீன்னுதான் புரியல.. பாபியோட நம்பர் நாட் ரீச்சபிளா ஆகி அப்றம் ச்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு. பாபி எனக்கு குடுத்திருந்த மெயில் ஐடியும் அதேதான்.. இன்ஃபேக்ட், முதல்ல அனுப்பின மெயிலுக்கு பதில் கூட அனுப்பினாங்க.. ஆனா அப்றம்.. எந்த மெயிலும் டெலிவரியே ஆகல.. ஃபெயிலியர் நோட்டிஃபிகேஷன்தான் வருது.. அப்றம் துர்கா இந்த பாரதியார் கவிதை புக்ல ஒரு மெயில் ஐடி இருக்குன்னு கண்டுபிடிச்சா.. அந்த மெயிலுக்கு இது வரைக்கும் நாலஞ்சு மெயில் அனுப்பிட்டேன்.. டெலிவரி ஆயிடுச்சின்னு நினைக்கிறேன்.. ஏன்னா ஃபெயிலியர் நோட்டிஃபிகேஷன் எதும் வரல.. ஆனா பாபி அத பாத்தாங்களா.. படிச்சாங்களா.. எதுவும் புரியல.." என்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டினாள்.

"சரி.. நீ டென்ஷன் ஆகாத.. இதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் இருந்தே தீரும்.. அவங்களோட ரெண்டு மெயில் ஐடியும் குடு.. அவங்க எங்க வெச்சி அத டீஆக்டிவேட் செய்தாங்க.. ஆக்டிவா இருக்கற ஐடில அனுப்பின மெயில் எல்லாத்தையும் அவங்க படிச்சாங்களா இல்லையான்னு நாம கண்டு பிடிக்கலாம்.." என்றான் சட்டென்று.

"என்ன சொல்றீங்க முத்து? உண்மையாவா?"

"உண்மையாவேதான் கண்மணி.. நீ மெயில் ஐடி சொல்லு.." என்று அவன் கேட்க, அவள் அதை அவனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினாள்.

"உங்களுக்கு வாட்ஸ்அப் செய்திருக்கேன் பாருங்க.." என்றாள்.

"சரி! இத வெச்சி நாம அவங்கள கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்.. நீ உன் படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணு.. ஓகே!" என்று கண்மணியிடம் கூறினான்.

"ம்.." என்று தலையாட்டிவிட்டு உள்ளே போனாள் கண்மணி.

"துர்கா! இவ அழாம பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு.. சரியா.." என்று துர்காவிடம் கூற,

"ம்.." என்றாள் அவளும்.

அவளிடம் நன்றி கூறிவிட்டுச் சென்றான்.

அவர்கள் மூவருக்கும் ஆண்டுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன.

அதனால் மூவரும் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.

அவ்வப்போது செல்வியின் நினைப்பு வந்தாலும் தன்னை நம்பி படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பால் பாண்டியன் மாமா, தன் மேல் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காகவும், கல்விதான் தனக்கு இப்போது மிக முக்கியம் என்பதையும் மனதில் நன்றாகவே பதிய வைத்துக் கொண்டிருந்த கண்மணி, கண்ணும் கருத்துமாகப் படித்தாள்.

துர்காவும் கண்மணியும் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு படித்ததால் அவர்களால் நன்றாகப் படிக்க முடிந்தது.

முத்துவும் தன் பெரியப்பா தன் மேல் வைத்த நம்பிக்கையை மெய்யாக்க வேண்டிய கடமை தனக்கு உள்ளது என்பதை மனதில் இருத்திக் கொண்டு நன்றாகப் படித்துக் கொண்டிருந்தான்.

இரண்டு மாதங்கள் வெகு வேகமாய் ஓடிப்போனது.

மூவரும் தங்கள் கடின உழைப்பைப் போட்டு தங்கள் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடித்தார்கள்.

முத்து கல்லூரி விடுதியிலிருந்து திரும்பி வந்து விட கண்மணிக்கும் துர்காவுக்கும் விடுமுறைக் காலம் மகிழ்ச்சியாய் மாறியது.

ஒரு நாள் கண்மணி கேட்டாள்.

"முத்து! செல்வி பாபியோட ஈமெய்ல் ஐடி வெச்சி அவங்கள கண்டுபிடிக்கலாம்னு சொன்னீங்களே.. ஏதாவது தெரிஞ்சிதா.." என்று தயங்கிய குரலில் கேட்டாள். அவள் தயக்கமாய்க் கேட்டாலும் ஆவலாகவே கேட்டாள்.

"என் காலேஜ் லேப் அசிஸ்டன்ட்.. பயங்கர பிரில்லியன்ட்.. ஆனா பாத்தா காய்கறி கடைக்காரன் மாதிரி இருப்பார்.. அவர் கிட்ட இதப்பத்தி கேட்டு கத்துகிட்டு வந்திருக்கேன்ப்பா.. எக்சாம்ஸ்க்கு படிச்சிட்டு இருந்ததால அத கவனிக்க முடியல.. கொஞ்சம் வெய்ட் பண்ணு.. நா அவர் சொன்ன கோடிங் வெச்சி அவங்க மெயில் இப்ப ஆக்டிவ்வா இருக்கா இல்லையான்னு கண்டுபிடிச்சி சொல்றேன்.." என்றான்.

"ம்.." என்ற கண்மணியின் குரலில் ஏமாற்றம் இருந்ததை முத்து உணர்ந்தான்.

தன் மடிக்கணிணியில் தான் கற்றுக் கொண்டதை பரிசோதித்துப் பார்த்தான். அதில் அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

ஆனால் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தபடியே இருந்தான்.

அந்த லேப் அசிஸ்டன்டை அழைத்து பல சந்தேகங்கள் கேட்டுக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டு தன் முயற்சியை தொடர்ந்தான்.

இப்படியே இன்னும் ஒரு மாதம் எந்த மாற்றமும் இல்லாமல் கழிந்தது.

கண்மணிக்கும் துர்காவுக்கும் கல்லூரி திறந்தது.

அவர்கள் தங்கள் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார்கள். முத்துவுக்கும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

அவனும் புதிய வேலைக்கு உற்சாகத்துடன் செல்லலானான்.

புதிய வேலையில் அவனுக்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. அப்படிதான் ஒரு நாள் அவன் ஒரு புதிய கோடிங் கற்றுக் கொண்டான்.

உற்சாகமாக வீடு திரும்பியவன், தன் கணிணியில் அந்த புதிய கோடிங்கை பரீட்சை செய்து பார்த்தான். கூகிள் திறந்து எதையோ தேடினான். தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்து சில சந்தேகங்கள் கேட்டான். மீண்டும் தன் கணிணியில் வேக வேகமாக எதையோ டைப் செய்தான்.

துர்காவும் கண்மணியும் தங்கள் கல்லூரிப் பாடத்தை படித்துக் கொண்டிருந்தார்கள்.

முத்து கணிணியில் மும்முரமாக வேலை செய்வதைப் பார்த்துவிட்டு அவனருகில் வந்தார்கள்.

"என்ன முத்து? ஆஃபீஸ்ல கூட ஹோம் வொர்க்கெல்லாம் தருவாங்களா என்ன?" என்று துர்கா கிண்டலடித்தாள்.

அவன் பதிலெதுவும் சொல்லாமல் கணிணியிலேயே கவனமாக இருந்ததைப் பார்த்தவளுக்கு, ஏமாற்றமாக இருந்தது.

"ஷ்.. துர்கா.. ஏதோ முக்கியமான வேலை போல.. டிஸ்டர்ப் செய்யாத.." என்று மெல்லிய குரலில் துர்காவிடம் கூறினாள் கண்மணி.

"ம்.." என்ற துர்கா கூறும்போதே,

"கண்மணி.. உன் செல்வி பாபியோட மெயில் பத்திதான் பாத்துட்டிருக்கேன்.." என்றான் முத்து.

கண்மணி படபடப்பாக உணர்ந்தாள். துர்காவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். துர்காவும் கண்மணியின் நிலை புரிந்து அவள் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டாள். இருவரும் அவன் செய்வதையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"ம்.. முடிஞ்சிருச்சு.. இங்க பார் கண்மணி.." என்று கூறிக் கொண்டே தன் மடிக் கணிணியின் திரையை அவள் புறமாகத் திருப்பினான்.

"உன்னோட செல்வி பாபி நீ அனுப்பின மெயில் எல்லாத்தையும் படிச்சிட்டாங்க.." என்றான் ஒரு வெற்றிப் புன்னகையுடன்.

"என்ன சொல்றீங்க முத்து? உண்மையாவா? ஓ மை காட்!" என்று அவள் ஆனந்தக் கூச்சலிட்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மாறாக அவள் இதழ்களில் மலர்ந்த புன்னகை தவழ்ந்தது. துர்காவைக் கட்டிக் கொண்டு கிட்டத் தட்ட குதித்தாள்.

"எஸ்! உன் செல்வி பாபி நீ அனுப்பின மெயில் எல்லாத்தையும் படிச்சிட்டாங்க.. வேணும்னா இப்ப ஒரு மெயில் அனுப்பு.. அத அவங்க படிச்சாங்களா இல்லையான்னு கண்டிபிடிச்சிடலாம்.." என்றான்.

உடனே கண்மணியும் தன் கைப்பேசியிலிருந்து செல்வியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அஞ்சலை வேக வேகமாக டைப் செய்து அனுப்பினாள்.

"அனுப்பிட்டேன் முத்து.." என்றாள்.

அவனுடைய கணிணியில் அது டெலிவரி செய்யப்பட்ட விவரம் வந்தது.

"நீ அனுப்பின மெயில் அவங்களுக்கு டெலிவர் ஆயிடுச்சு.. ஆனா அவங்க இன்னும் அத படிக்கல.." என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

"இல்ல.. படிச்சிட்டாங்க.." என்றான்.

கண்மணிக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

முத்துவின் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டு,

"தேங்க்யூ! தேங்க்யூ சோ மச் முத்து! யூ ஆர் அ சேவியர்! நீங்க எனக்கு எவ்ளோ பெரிய உதவி செய்திருக்கீங்கன்னு உங்களுக்கு தெரியாது.. இப்பதான் பாபிய கண்டுபிடிச்சிடலாம்ன்னு ஒரு பெரிய நம்பிக்கைய நீங்க குடுத்திருக்கீங்க.." என்றாள்.

"கண்டிபிடிச்சிடலாம் இல்ல.. கண்டுபிடிச்சாச்சு.. இன்னும் ஒரே ஒரு ஸ்டெப்தான் பாக்கி.. அவங்க இந்த மெயிலை எங்கேர்ந்து படிச்சாங்கன்னு தெரிஞ்சிட்டா அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சிடலாம்.." என்றான் முத்து.

"தேங்க்யூ சோ மச்.. இந்த உதவிய நா என் உயிர் இருக்கற வரைக்கும் மறக்க மாட்டேன்.. மறக்கவே மாட்டேன்.. யூ ஆர் டெஃபனட்லீ அ சேவியர்!" என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினாள் கண்மணி.

முத்துவின் கைகளில் கண்மணியின் கண்ணீர் விழுந்தது.

அவன் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனான்.

"என்ன.. என்ன இது.." என்று அவன் பேசத் தெரியாமல் திணறினான்.

அதற்குள் துர்கா சென்று நடந்ததைக் கூறி வீட்டுப் பெரியவர்களை அழைத்து வந்தாள்.

முத்து சுதாரித்துக் கொண்டான்.

யமுனா முத்துவை வெகுவாகப் பாராட்ட, பால் பாண்டியனும் தம்பியை மனதாற பாராட்டிவிட்டு கணிணியில் அவன் என்ன செய்து அதைக் கண்டுபிடித்தான் என்ற தொழிநுட்ப விவரங்களைக் கேட்டறிந்தான்.

முத்துவும் அண்ணன் கேட்ட விவரங்களைத் தவறாமல் கூற,

"பிரில்லியண்ட்!" என்று தம்பியைப் பாராட்டினான் பால் பாண்டியன்.

"இனிமே சூரஜை ஈசியா கண்டு பிடிச்சிடலாம்.." என்று கூறிவிட்டு அந்த மடிக்கணிணியை வாங்கி அவன் ஏதோ செய்துவிட்டு தன் நண்பனை அழைத்துப் பேசிவிட்டு காத்திருந்தான்.

"என்ன மாமா ஆச்சு?" என்று கண்மணி கேட்க,

"கொஞ்சம் இரு மா.. சொல்றேன்.." என்று கூறினான்.

எல்லாரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, நிமிடங்கள் மெதுவாகக் கரைந்து கொண்டிருக்க, அவனுடைய பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருக்கிறது என்பது அவன் அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருப்பதிலேயே மற்றவர்களுக்குப் புரிந்தது.

தேர்வு முடிவுக்குக் காத்திருப்பது போல அனைவரும் உணர்ந்தார்கள்.

இதோ அதோ என்று பதினைந்து நிமிடங்கள் முழுதாய் முடிந்தது.

இனி காத்துக் கொண்டிருப்பது வீண் என்று நினைத்து அவர்கள் கலைய எத்தனித்த நிமிடத்தில், பால் பாண்டியனின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததாக சத்தம் வந்தது.

அவசர அவசரமாக அதை எடுத்துப் பார்த்தவன்,

"எஸ்! எஸ்! எஸ்! அவங்க இருக்கற இடம் தெரிஞ்சிடுச்சு.. சூரஜ்! ராஸ்கல்! இதோ வரேண்டா! இதோ வரேன்.." என்று ஆனந்தமும் கோபமும் ஒன்று சேர்ந்த குரலில் கூவினான்.

யமுனா கண்களில் கண்ணீருடன் இறைவனுக்கு நன்றி கூற, கண்மணியும் துர்காவும் மீண்டும் ஒரு முறை ஆனந்தக் கூத்தாடினார்கள்.

அனைவருக்குமே மனதில் ஒருவித நிம்மதி பரவுவது போல உணர்ந்தார்கள்.

அடுத்த அரை மணி நேரத்தில் இந்த நல்ல விஷயம் மும்பைக்குப் பறந்தது.

விராட்டுக்கு அழைத்து பால் பாண்டியன் கூற, அங்கும் பல நாட்கள் கழிந்து மகிழ்ச்சி குடி கொண்டது.

"தேங்க்யூ! தேங்க்யூ சோ மச்! இந்த உதவிய நாங்க எங்க உயிருள்ள வரைக்கும் மறக்கவே மாட்டோம்.. தேங்க்யூ சோ மச் பாண்டியன்.." என்று மகிழ்ச்சியில் அரற்றினான் விராட்.

"இது என் கடமை விராட்.. அவன் எனக்கு நண்பனுக்கும் மேல.. உங்க அண்ணன் எனக்கும் ஒரு சகோதரன்தான்.. அவன் நல்லா இருக்கணும்ங்கற அக்கறை எனக்கும் கண்டிப்பா இருக்கு.. எனிவே.. சீக்கிரம் கிளம்பி வாங்க.. நாம அவனை கூட்டிட்டு வரணும்.. இல்லன்னா அந்த ராஸ்கல் திரும்பவும் எங்கியாவது காணாம போய்டுவான்.." என்றான் பாண்டியன்.

"எஸ்! நாங்க இப்பவே கிளம்பறோம்.. கிடைக்கற ஃப்ளைட் பிடிச்சி நேரா மதுரை வரோம்.. மற்ற விவரங்களுக்கு எல்லாம் அப்பப்ப கான்டேக்ட் பண்றேன்.." என்றான்.

"மதுரை வேணாம் விராட்.." என்று பால் பாண்டியன் சொன்ன விவரத்தை கவனமாகக் கேட்டுக் கொண்ட விராட்,

"ஓகே! ஓகே பாண்டியன்.. நீங்க சொல்ற மாதிரியே செய்திடறோம்.." என்று கூறி அழைப்பை துண்டித்தான் விராட்.

விஷயமறிந்த கௌரியும் தீன்தயாளும் ஆனந்தியும் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

ஆனந்தி உடனே சென்னையிலிருந்த செல்வியின் பெற்றோரான மங்கையர்க்கரசிக்கும் கிரிதரனுக்கும் அழைத்து விவரம் கூறிவிட்டு திருச்சியிலிருந்த தன் பெற்றோரான கீர்த்திவாசனுக்கும் பூங்குழலிக்கும் தெரிவித்தாள்.

அவர்கள் அனைவரும் உடனே கிளம்புவதாகத் தெரிவித்தனர்.

அதே போல விராட், அமெரிக்காவிலிருக்கும் தன் தங்கை தீபிகாவுக்கும் அவள் கணவனான செல்வியின் தம்பி ஆனந்தனுக்கும் தெரிவித்தான்.

ஆனந்தனும் தீபிகாவும் அடுத்து உடனடியாகக் கிடைக்கும் விமானத்தில் இந்தியா கிளம்பி வருவதாகத் தெரிவித்தனர்.

எல்லாரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்க, மதுரையிலிருக்கும் யமுனாவும் கண்மணியும் மற்ற அவர்களின் சொந்தங்களும் சூரஜ் மற்றும் செல்வியைக் காணும் ஆவலில் வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ஒரு வித மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள் என்றால் முத்துப்பாண்டி வேறொரு விதமான உணர்வில் திளைத்துக் கொண்டிருந்தான்.

முத்துவுக்கு கண்மணியின் ஆனந்தம் மனதுக்குள் பல ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டது போல இருந்தது.

தன்னவளுக்காக ஒன்று செய்து அவளுடைய மனதின் துன்பம் மொத்தமாய் மறைந்து ஆனந்தக் கூத்தாடும் நிலை வந்ததில் அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான்.

அவனுடைய மனதின் மகிழ்ச்சி முகத்தில் தெரிய, மற்றவர்கள் அதை கவனித்தார்களோ இல்லையோ பால் பாண்டியனின் மனைவி நித்யா துல்லியமாகக் கவனித்தாள்.

'ம்! தம்பி தனி ரூட்ல போறாரு.. இனி வீட்டுல ஃப்ரீ ரொமான்ஸ் எல்லாம் நடக்கும்.. செம்ம ஜாலியா இருக்கப் போகுது..' என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டாள்.


மங்கையின் மனம்கவர எண்ணினான்
மன்னவனும்!
தன்னவளின் தேடுதலில் துடிப்போடு
இறங்கி விட்டான்!
தேவதை உளம்கவர்ந்த தேவியையும்
தேடுகிறான்!
உள்ளத்தில் இடம்பிடிக்கும் வழியதனைத் தேர்ந்தெடுத்தான்!

துர்காவின் நட்போடு துளிர்த்ததொரு
புது நட்பு!
முத்துவின் முயற்சியும் சிறந்ததுவே
முத்தாக!
மூவர்குழு வாழ்க்கையில் முன்னேறும்
முடிவுடனே
கல்வியெனும் கவசத்தைக் கருத்தோடு
அணிந்தனரே!

கல்லூரியில் கற்றகல்வி முடிந்ததுவே
முத்துவிற்கும்!
வேலையில் சேர்ந்தொரு புது வாழ்வை
துவங்கினான்!
தேடுதலைக் கைவிடாமல் புதுமுயற்சி
எடுத்தான்!
ஈட்டினான் பின்னொருநாள் வெற்றியும்
நாட்டினான்!


- C. புவனா.



- காதலின் மொழி என்ன?
 
Top