கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

5. Thanks உன் Butterfly அழகா இருந்தது

Appusiva

Moderator
Staff member
கதை என்று ஆரம்பிக்கும்பொழுது ஒரு ஆரம்பம், பொருள் அப்புறம் அதற்கு ஒரு, ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லது சரியான முடிவு என்று பழகியுள்ளோம் இல்லையா நண்பர்களே. ஆனால் நினைத்துப்பாருங்கள், நம் வாழ்வின் குறிப்பிடத்தகுந்த சம்பவம் அல்லது ஒரு மறக்க இயலா நிகழ்வு… நிகழ்வது ஒருகணம் மட்டுமே. அதன் நினைவுகள் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதன் நூலைப்பிடித்து தேடிச்சென்றோமாயின் அதன் நுனி நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே, ஒரு மாயத்திரையாய் ஆரம்பித்து ஒரு கணத்தில் நம்முன் ரூபத்தைக்காட்டி பின் மறுபடியும் கலைந்து செல்லும்.

கல்லூரியின் காலம் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னமும் மனதில் நிழலாடிக்கொண்டே இருப்பது அந்த ஒரு காட்சி மட்டுமே. அது திரும்ப வராது. இன்னொருமுறை நிகழாது. எனக்கே எனக்கான தனிப்பட்ட ஒரு மாயாஜாலம். உங்களுக்கும் நிகழ்ந்திருக்கும். வேறு காட்சிகளாக.

முதல் ஆண்டு எப்போதும் போலவே ஓடியது. நான் மிகசாதாரணமாகவே நிறைய பேசுபவன். அதன் பலனாக நண்பர்கள் அதிகம். ஆண் பெண் பேதங்களை கடந்து அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்போம். அதில் ஒரு பெண் என்னிடம் தயங்கி, தயங்கி பேசுவார். அவரது தயக்கமும், ஆள் இல்லாதபோது நெருங்கி பழக விரும்புவதையும் அவரது அணுகுமுறைகள் மூலம் புரிந்துகொண்டேன். காதல், கோபம், எல்லாமே அறிவியல் விளையாட்டு என்பதை ஒருநாள் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவரிடம் பேசுவதுபோல் விளக்கமளித்தேன். அவரும் மிகச்சரியான முடிவாக கல்லூரி படிக்கும்போதே சொந்தத்தில் திருமணம் முடிந்து சென்றுவிட்டார். அத்துடன் முடிந்தது. ஆனால் நான் எவ்வளவு அறிவிலி என்பது இரண்டாம் ஆண்டு முடியும்போது தெரிந்தது. எல்லாமே அறிவியல்தான். அதனால் என்ன…

இறுதியாண்டின் முதல் நாள்,
கணித ஆசிரியருக்கு நான் எப்போதும் விருப்பமானவன். அவர், போர்டில் ஆரம்பித்துவிட்டு, என்னிடம் கைகாட்டுவார். நான் எழுந்து சென்று மீதத்தை முடித்து தருவேன். அன்று ஏதோ ஞாபகத்தில் அவரே போட்டுக்கொண்டிருந்தார். நான் அவரை முந்தி என் நோட்டில் வேகவேகமாக போட்டுமுடித்துவிட்டேன்.

அவர் போட்ட வழிமுறையில் பிழை இருந்ததால் முடிவும் தவறாக இருப்பதாக தோன்றியது. வேகமாக எழுந்து,

“ சார்… தப்பா இருக்கு… “ என்றேன்.

திரும்ப பார்த்து, புருவத்தை உயர்த்தி…

“ சொல்லுங்க ஐன்ஸ்டீன்…. … “ என்றார்.

பின்புறம் இருந்து எழுந்த அந்த சிரிப்பொலி, உடனே என்னை திரும்பிப்பார்க்க வைத்தது. அவள், தலையை குனிந்தவாறு தன் வாயை தன் விரல்களால் மெல்ல மூடியபடி சிரித்துக்கொண்டிருந்தாள். கணித ஆசிரியரின் கிண்டலான இழுத்தபடியான “ சொல்…லு…ங்க.. ஐன்…..ஸ்ஸ்டீன்… “ என்ற தொனிக்கு நானாக இருந்தாலும் சிரித்திருப்பேன். நான் கோபமாக திரும்பிப் பார்க்கவில்லை. புதிய குரல், இதுவரை கேட்காத அந்த சிரிப்பொலி என்னை திரும்பிப்பார்க்கவைத்தது.

“ அங்க என்னடா முறைக்கற… வா… வந்து சரியா போடு பார்க்கலாம்.. “
என்ற அவரின் குரல் கேட்டு சட்டென்று நிமிர்ந்தவள், ஏதோ தவறிழைத்த பாவனையில் என்னிடம் இறைஞ்சுவது போல் பார்த்தாள். அறிவியலும் கணிதமும் என்னைப்பார்த்து கேலியாய் சிரிப்பதை உணர்ந்தேன்.

ஒருவிநாடியில் நான் முற்றிலும் உருமாறிப்போனேன்.

போர்டில் போடும்போதுதான் தெரிந்தது. அவர் மிகச்சரியாகவே போட்டிருக்கிறார்.
மிதமிஞ்சிய வேகத்திலும் நம்பிக்கையிலும் நான் தான் தவறாக கணித்திருக்கிறேன். அவர் என் காதைப்பிடித்து “ அவசரகுடுக்கை… அவசரகுடுக்கை.. “ என்றபடி , கிள்ளியெடுத்துவிட்டார். செல்லமாகத்தான் எனினும் சரியான வலி. வகுப்பறை மொத்தமும் சிரிப்பால் அதிர்ந்தது. அவளை கவனித்தேன். அவள் மட்டும் இப்போது சிரிக்காமல் என்னை வருத்தம் தோய்ந்த விழிகளால் பார்ப்பது தெரிந்தது.

அன்று வகுப்பறை முடிந்தும் நான் எனது எழுத்துவேலைகளை முடித்து செல்ல அரைமணி நேரம் அங்கேயே இருந்தேன். எல்லோரும் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து நான் வெளியே செல்ல, … ஒரு கணம் திடுக்கிட்டேன். வாசலை ஒட்டி ஒரு சிறிய மர பெஞ்ச் போடப்பட்டிருக்கும். அதில் நாங்களே உட்காரமாட்டோம். அதில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் பார்வை வகுப்பறையின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தது. நான் வருவதைப்பார்த்து வேகமாக எழுந்தாள். நான் கவனியாதுபோல் வேகமாக கடந்து செல்ல எத்தனித்தேன்.

“ sorry….. “ என்ற அவளது குரல் கேட்டு அப்படியே நின்றேன்.

“ நான் வேணும்னு சிரிக்கலை.. சட்டுனு வந்திடுச்சு… sorry “ என்றாள்.
எனக்கு என் நிலை புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்பது போல மனதிலேயே குழம்பிக்கொண்டேன். எப்போதும் படபடவென்று பேசும் எனக்கு என் வாயை இருபுறமும் இழுத்து காதோடு ஒட்டிவிட்டதுபோல் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தேன். வேறு யாராவது என்னை அப்போது பார்த்தாரெனில் தெளிவாக “ இளிச்சவாய் “ க்கு அர்த்தம் புரிந்திருப்பார்கள்.

“ வந்து … பரவாயில்ல… நான் கூட சிரிச்சேன்.. அவசரமா.. “ என்று ஏதேதோ உளறிக்கொட்டினேன்.

அவள் முகம் வருத்தத்திலிருந்து, மெல்ல இயல்புக்கு மாறியது.

“ நானும், நீங்க போய்தான் சம் முடிப்பீங்கன்னு பார்த்தேன். சார், அவரா போடவும் ‘ஏன்.?’ ... ற மாதிரி யோசிச்சேன்.”

“ என்னை நோட் பண்ணியிருக்கீங்களா ? ”
சட்டென்று பதட்டமானாள்.

“ இல்ல… ங்க… அது.. தோணுச்சு.. “ என்றாள்.

அதன் பின் நடக்க ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட பதினைந்து நிமிட நடை. இருவரும் பேசவே இல்லை. அவள், ஏதோ பேச முனைவதும், தயங்குவதும் பின் நான் தயங்குவதுமாக இருந்தது. நடுவில் சில விநாடி அவள் தன் மெல்லிய விரல்களால் தன் வாயை மூடியபடி சிரிப்பதை கவனித்து வீட்டுக்கு வந்து அதேபோல் செய்துபார்த்தேன்.

அவளுக்கு அவ்வளவு அழகாக இருந்த அந்த செயல் எனக்கு மிக கோணலாக இருந்தது.

மறு நாள் நான் கிளம்புவதற்கு நேரம் எடுத்தது. கண்ணாடி முன் நெடு நேரம் செலவழித்தேன். அடர் நீல உடையணிந்து, தலையை படிவதுபோல் வாரி, உதட்டை மூடியபடி சிரித்துப்பார்த்துவிட்டு கிளம்பினேன்.

வகுப்பறையில் அந்த ஆச்சரியம் இருந்தது. அவளும் அடர் நீல நிற உடை. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்போது யோசிக்கும்போதுதான் தெரிந்தது. நேற்று நான் கருப்பு உடை, அவளும். நான் எப்போதும் முன் பெஞ்ச். அவள் என்னிடம் இருந்து இரண்டு வரிசை தள்ளி. நான் என் பேனாவை கீழே போடுவதுபோல் குனிந்தபடி அனிச்சையாக பின்புறம் பார்த்தேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

வகுப்பில் என் கவனம் முழுதும் அவளைப்பற்றியே இருந்தது. இரண்டு முழு ஆண்டுகள் என்னோடுதான் இருந்திருக்கிறாள். என்னைப் பார்த்திருக்கிறாள். கவனித்திருக்கிறாள். குறிப்பிட்ட தினங்களில் நான் குறிப்பிட்ட நிற ஆடை அணிவது வரை தெரிந்திருக்கிறாள். நான் தான் ஏதும் அறியாமல் வெறும் வாயாடிப்பையனாய் சுற்றிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் பக்கத்தில் இருக்கும் இரு தோழிகளைத்தவிர வேறு யாரிடமும் பேசி நான் பார்த்ததில்லை. அவள் குரலைக்கூட நேற்றுதான் கேட்கிறேன். சொல்லொணா விரக்தி மனதில் படர்ந்தது. எனினும் இந்த நொடிகளை இழந்துவிடக்கூடாது என்பதை மனதில் நிறுத்திக்கொண்டேன்.

ஆனால், அதன்பின்னும் அவள் என்னிடம் வந்து பேசுவதோ, அல்லது பேச முனையவோகூட இல்லை. இது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒரு சில சமயங்களில் தனது தோழியுடன் வந்து சில சந்தேகங்களை கணிதத்தில் கேட்டுச்செல்வாள். கடந்த ஆண்டுகளிலும் அவள் இதேபோல் என்னிடம் பேசியிருக்கிறாள் என்பது பனிமூட்டமாய் ஞாபகம் வருகிறது. ஆனால் அவள் கேட்கும் கணித கேள்விகளெல்லாம் மிக எளிதானவையென்பதால், அதன் ஊடே என்னருகில் வருகிறாள் என்று நானே முடிவுசெய்து கொண்டேன்.

வெறும் பார்வையாலேயே நாட்கள் கடந்துசெல்ல எனக்குள் பதட்டம் அதிகமானது. அதே சமயம் எனது பிறந்த நாளில் ஒரு இனிய நிகழ்வு நடந்தது.

அன்று நண்பர்கள் போர்டில் எனது படம்போல் வரைந்து வண்ணங்களில் பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் எழுதியிருந்தனர். கடந்த ஆண்டுகளிலும், அனைவர் பிறந்த நாளின்போதும் இது இயல்பாய் நடக்கும் விஷயம் என்றாலும் அன்று எனது கவனம் எல்லாம் அவளையும், அவளது நடவடிக்கைகளையும் கவனிப்பதாகவே இருந்தது. அவள் எப்போதும் போலவே இருந்தாள். மற்ற நாளில் என்னை பார்ப்பதுபோல் கூட பார்க்கவில்லை. ஆனாலும் அவள் தோழி என்னைப்பார்த்தபடி ஏதோ சொல்ல, அவள் ஓரக்கண்ணால் என்னை கவனித்தபடி, அவள் தோழியை கடிந்துகொள்வதையும் பார்த்தேன்.

அன்று, நான் உடனே கிளம்பவில்லை. அவளும் கிளம்பாமல் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. தயங்கி தயங்கி என் அருகில் வருவதை அவள் வாசனையிலிருந்தும், ஜன்னலில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவி ‘விருட்’ டென்று பறந்தோடுவதிலிருந்தும் கண்டுகொண்டேன்.

“ Happy Birthday….. “ என்றாள்.
எனக்கு எப்படி துணிச்சல் வந்ததோ….

“ காலையில இருந்து எதிர்பார்த்தேன்… இவ்ளோ நேரமா…? “ என்றேன்.

“ என்ன செய்றதுப்பா… மத்தவங்க முன்னாடி சொல்ல கூச்சமா இருக்கு.. “

“ இப்போ எப்படி…. பயமில்லயா… “

“ உங்கிட்ட பயமெல்லாம் இல்ல… போன வருஷமே சொல்ல நினைச்சு Greetings எல்லாம் வாங்கி வச்சேன். நீ இந்த பக்கம் திரும்பினாதானே.. “

“ ஓ… என் தப்புதான்… இப்போ.. Gift ஏதும் இல்லயா.. “

பரபரவென்று அவளது பேகை திறந்தாள். அதிலிருந்து ஒரு அழகிய வாழ்த்து அட்டை. இரண்டு பட்டாம்பூச்சிகள் படத்துடன், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்ற அவளது கையெழுத்தில். அவளது எழுத்துகூட மிக அழகு. கொடுத்துவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் என் பாக்கெட்டில் காலையில் வாங்கி வைத்திருந்த சாக்லேட் கொடுத்ததும்…

“ எனக்கு மட்டும் ஸ்பெஷலா… ? “

என்றவாறு வேகமாக வாங்கி தன் பையில் போட்டுக்கொண்டாள்.

“ இன்னொரு… ட்ரீட் இருக்கு…. கண்ணை மூடேன்…. “ என்றேன்.

“ ஒண்ணும் வேணாம் … நாளைக்கு உன் பிஸிக்ஸ் ரெகார்ட் கொண்டுவா… பார்த்து எழுதணும்… “ என்றுவிட்டு சிட்டுக்குருவிபோல் விருட்டென்று ஓடினாள்.

அன்று இரவு முழுதும் நான் தூங்கவில்லை. நண்பர்களே இது போன்ற சமயங்களில் தூக்கம்கூட வருமா… “ ஒண்ணும் வேணாம்… “ என்ற அவளின் குறும்பான, கொஞ்சலான ஓட்டத்தை இன்னும் இன்னும் பார்க்கவேண்டி மனம் அடித்துக்கொள்கிறது. அவளுக்கு ரெகார்ட் நோட்டை எடுத்து வைத்தேன். வகுப்பறையில் அவள் கண்டிப்பாக பேசமாட்டாள். நான் பேசுவதையும் அவள் பயந்தபடியே அனுமதிக்கிறாள். அல்லது நட்புறவில் பழக முயலும் அவளை நான் தான் தவறுதலாக நினைக்கிறேனோ, அல்லது இப்படியே பழகி, ஆண்டு முடிந்ததும் பிரிந்துபோய்விடும் உறவாய் இது மாறிவிடுமோ என்றவாறு பலவித குழப்பங்களினூடே அவளுக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். அதன் உள்ளே என்ன எழுதினேன் என்பதை இப்போது வெளியிடப்போவதில்லை நண்பர்களே.
அதன் வெளிப்புறம்

“ Thanks உன் Butterfly அழகா இருந்தது “

என்று எழுதினேன். அதை எப்படி கொடுப்பது என்ற யோசனையில் ரெகார்ட் நோட்டின் பிரௌன் அட்டையைப்பார்த்தேன். அதை பிரித்து அதனுள் கடிதத்தை வைத்து மறுபடி அட்டை போட்டேன். யாராவது யூகமாய் யோசித்து அந்த அட்டையை பிரித்தாலொழிய, மிகசாதாரணமாய் கண்டறிய இயலாது. அவள் என்னைப்போல் யோசிப்பாள் என்றே நம்பினேன்.

மறு நாள், மதிய இடைவேளை வரை அவள் பக்கம் நான் திரும்பகூட இல்லை. மனம் முழுதும் பயம் அப்பிக்கொண்டது. மிகப்பெரும் தவறு செய்கிறேனோ என்ற பதட்டத்தில் வியர்வை மழையில் நனைந்துகொண்டிருந்தேன். மதிய உணவு வேளையில் எல்லோரும் கிளம்பியிருக்க அவள் தோழி அவளை கூப்பிடுவதும், அவள் கோபமாய் பேசுவதையும் கேட்க இன்னும் நடுக்கம் அதிகமானது. தோழி சற்று வெளியேற, நான், தற்கொலைக்கு முயலுபவன் யோசிக்காமல் உயரத்திலிருந்து குதிப்பதுபோல் என் பெஞ்சில் இருந்து ஒரு குதிகுதித்து தாண்டி, அவளை நெருங்கினேன்.

“ இந்தா … பிஸிக்ஸ் ரெகார்ட்… “

“ ஏன் … அவ இருக்கும்போதே குடுத்தா என்னா…. “

“ எனக்கும் கூச்சம் இருக்காதா….”
என்றபடி வேகமாக வெளியேறினேன். என்னை தாண்டி அவள் தோழி உள்ளே சென்றாள். நான் வெளியேறி, எங்கள் வகுப்பறையின் ஜன்னல் தெரியும் வகையில் மாடியில் உள்ள வேறொரு வகுப்பில் அமர்ந்து அவர்களை கவனித்தேன். எனக்கு அவர்களைத்தெரியும். ஆனால் அவர்களிடத்திலிருந்து பார்த்தால் நான் வெளிச்சத்தில் சற்று தீற்றலாகதான் தெரிவேன். அவள் தோழி அவளிடம் ரெகார்ட் நோட்டை பிடுங்க எத்தனிப்பது தெரிந்தது. பிசாசு. ஆனால் அவள் அதை தொடக்கூட விடவில்லை. அந்த பிசாசு தோழி அவளை திட்டிக்கொண்டே வெளியேறினாள்.

அவள்,

அந்த ரெகார்ட் நோட்டின் ப்ரௌன் அட்டையை தடவிப்பார்த்தாள்.

அவள் முகத்தில் அரும்பிய மெல்லிய புன்னகையை தனது விரல்களால் மறைத்துக்கொண்டாள்.
 
Top