கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

7. இறந்த காலம்

Appusiva

Moderator
Staff member
ஆயிரம் பூக்களை அள்ளி மேலே கொட்டியதுபோல் இருந்தது ப்ரசன்னாவுக்கு. ஐந்து ஆண்டுகளாக வலைவீசி தேடிய ஒரு விஷயம், இனி கிடைக்கவே கிடைக்காது என்று மனதளவில் முடிவுசெய்யப்பட்ட ஒன்று, இன்று மறுபடி கிடைக்கப்போகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இதன் முழு பெருமையும் ஆனந்துக்கே சாரும். அவனுக்கு இன்று இரவு ஒரு முழு பார்ட்டியை திகட்டத்திகட்ட கொடுத்துவிட வேண்டியதாய் முடிவு செய்தான். ஆனால் தேடியவளிடம் பேச ஆரம்பித்துவிட்டால் அவனுக்கு நேரம் ஒதுக்கமுடியாது என்பதால் இன்னொரு நாள் அவனை கவனித்துவிடலாம் என்றும் தனக்குள் பலவாறு பேசிக்கொண்டான்.

ப்ரசன்னா ஒரு தனியார் நிறுவனத்தில் விளம்பர துறையில் தலைமைப்பொறுப்பில் இருப்பவன். ஐந்தாண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில் ஒரு துணை வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தபோது, பயிற்சியின் பொருட்டு மும்பை செல்லவேண்டியிருந்தது. இரண்டு நாள் பயணமாக ரயிலேறியபோதுதான் அவளை சந்தித்தான்.

இவன் பதிவு செய்திருந்த இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள். அது ஜன்னலோரம் என்பதாலோ அல்லது தெரியாமலோ அமர்ந்திருக்கலாமென இவன் முன்புறம் காலியாய் இருந்த இருக்கையில் இடம்பிடித்தான். ஒரு அரைமணி நேர முடிவில், சற்று போரடிக்க, தனது பையில் இருந்து ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் கதையை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அவள் தன்னையே உறுத்துப்பார்ப்பதை ஓரக்கண்ணால், கவனித்தான். அது வித்தியாசமாய் படவில்லை. ஒரு இருபத்தெட்டு வயது இளைஞன், காமிக்ஸ் படிப்பதை முட்டைக்கண்ணால் முறைக்கும் உலகம்தானே இது. இது அடிக்கடி உணரும் விஷயமென்றாலும், தனது வேலைக்கு தேவையான கற்பனைத்திறனை தக்கவைத்துக்கொள்ள காமிக்ஸுடனான தொடர்பு அறுந்துவிடாமல் பார்த்துக்கொள்வான்.

“ சார்… “

என்ற அவளின் மெல்லிய குரலுக்கு நிமிர்ந்து பார்த்தான்.

“ இதுமாதிரி வேற புக்… ஏதாவது இருக்கா… படிச்சுட்டு தரேன்… ” என்றாள்.

அவளது குரலில் இழையோடிய மென் சோகத்தை அவன் உணரத்தவறவில்லை. தனது பையிலிருந்து டைகரின் ‘ மின்னும் மரணம் ‘ என்ற மெகா சைஸ் புத்தகத்தை எடுத்து நீட்டினான். அதை கையில் வாங்கியதும் அவள் முகம் ஒரு குழந்தையின் முகம் போல சட்டென்று மிக அழகாய் மாறியது.

“ இதெல்லாம் இப்ப கிடைக்குதா சார்… ஒரு காலத்தில இதுமாதிரி நெறயா படிச்சிருக்கேன்.. “ என்றாள்.

பிடித்தமான விஷயங்களை பேச ஆள் கிடைத்துவிட்டால் நேரம் போதாதென்பதை அவன் அன்று முழுதாய் உணர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு முழுநாள் அவளுடன் பேசியபடியே பயணித்தான். அவள், வித்யா. ஒரு நேர்காணலுக்காக செல்வதாகவும், அக்கவுண்ட்ஸ் துறையில் மேல்படிப்பு முடித்திருப்பதாகவும், அவர்கள் வீட்டில் ஒரே பெண் எனவும், வயதான அவளது தந்தையுடன் வசிப்பதாகவும் அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொண்டாள். இருந்தபோதும் அவளது முகத்தில் ஓவியம்போல் படர்ந்திருந்த மெல்லிய கவலைரேகைகளை எப்படி கேட்பது என்ற தயக்கத்தை அவனால் மீறமுடியவில்லை.
வித்யா நடுவழியில் இறங்கிச்செல்லும்போது அவனது கண்கள் அவனைமீறி கலங்கிவிட்டது. அதேபோல் ப்ரியாவிடை கொடுத்துச்செல்லும் அவளது பார்வை அவனை புரட்டிப்போட்டது. ‘மர்மகத்தி‘ என்றொரு கதையில் காலயந்திரத்தில் சென்ற கதாநாயகன் மீளவரும்போது அந்த இளவரசி “இனி நான் இவர்களை சந்திக்கவேமாட்டேனென்று மனது சொல்கிறது“ என்ற காட்சியை அது ஞாபகப்படுத்தியது.

அதன்பின் நேர்காணலில் பங்கெடுத்து, ஒரு புது உத்வேகத்தில் பதிலளித்து, அவனது வளர்ச்சியில் முதலடி எடுத்துவைத்தான்.

அவளது ஃபோன் நம்பரை தொடர்ந்துவந்த மூன்று நாட்களுக்கு அவனால் பேசமுடியவில்லை. அதன்பின் பேச ஆரம்பித்தவள் தினம் குறைந்தது ஒருமணி நேரமாவது பேசுவாள். சிறிது சிறிதாக நேசம் வளர ஆரம்பித்ததை இருவரும் உணர ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் அவளை சந்தித்தே ஆகவேண்டும் என்று முடிவுசெய்து, அவளது முகவரியைக்கேட்டான். எனினும், வித்யா பிடிகொடுக்காமல் பேசியதுடன், அவனை நேரில் சந்திப்பதை தவிர்ப்பது போல் பேசியதை உணர்ந்தான்.

ஒருநாள் திடீரென்று ஃபோன் செய்தவள்,

“ ப்ரசன்னா... நான் உங்கூடவே இருந்திடவா.... “
என்று அழுதபோது இவனால் நம்பமுடியவில்லை.

“ உனக்காகதான் தினம் காத்திட்டிருக்கேன், நான் எப்படி சொல்றதுன்னு தயங்கினேன்.. “ என்றான்.

“ சரி... ரெண்டு நாளில் உன்னை வந்து பார்க்கிறேன்... “ என்றாள் வித்யா.

ஆனால், மறுநாளில் இருந்து அவளுக்கு ஃபோன் போகவில்லை. ஆரம்பத்தில் ப்ரசன்னாவுக்கு அது சீரியஸாக தோன்றவில்லை. வித்யாவுடன், பேசிப்பழகியது சரியாக மூன்றுமாதங்கள் தானிருக்கும். அடிக்கடி அவளுக்கு ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்றிருக்கும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில் தொடர்புகொள்ளமுடியாது போனபோது, அவன் நிலைகுலைந்து போனான். அவளை தேடும் வழி தெரியாது, பைத்தியம் பிடித்தார்போல் சுற்றினான். அவளது ஃபோன் நம்பரை வைத்து தேடும் முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. பின் ஒருவழியாக மனநிலை தேறி... கவனத்தை வேலையின்பால் திருப்பி கொஞ்சம் ஆறுதலடைந்தான்.

சில நேரங்களில்.. “ உங்கூடவே...” என்ற அவளது தயக்கமான, விரக்தியான மெல்லிய குரல் அவனது காதில் எதிரொலிப்பதைபோல் தோன்றும்போது, சொல்லவொணா குற்ற உணர்வு அவனை ஆக்ரமிக்கும்.

ஆனந்த் ஒரு கல்லூரியில் சயின்ஸ் புரஃபஸர். அவனிடம் பார்ட்டியில் பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம், தனது மனதில் இருந்த பாரத்தை அவனிடம் பகிர்ந்துகொண்டான் ப்ரசன்னா. அப்போது அந்த ஃபோன் நம்பரை பெற்றுக்கொண்ட ஆனந்த் இன்று காலை ஃபோன் செய்தபோதுதான் அந்த மகிழ்ச்சியான விஷயத்தை சொன்னான்.

“ ப்ரசன்னா... ஒரு விஷயம் சொன்னா ... கவனிக்கறயா... “ என்றான்.

“ வளக்காம சட்டுன்னு சொல்லு... “ என்றான் ப்ரசன்னா.

“ உன் ஆளு... வித்யாவை கண்டுபிடிச்சிட்டேன்... “

ப்ரசன்னா ... தன் நாற்காலியிலிருந்து துள்ளிக்குதித்து எழுந்தான்.

“ டேய்...மச்சி.... என் சொத்தெல்லாம் உனக்குதாண்டா.... என்னடா நெஜமா சொல்றியா... ஏமாத்தாதே “

“ நெஜமா... சொத்தெல்லாம் வேணாம்.. வர சண்டே...ட்ரீட்.. ஓகேவா “

“ வாடா...வாடா... குளிப்பாட்டிடுறேன்.. “

இதோ... சாயந்திரம்.

“ மச்சி... அந்த ஃபோன் நம்பரை வச்சு... ஃபேஸ்புக்... வாட்ஸாப்னு தோண்டிட்டே இருந்தேண்டா... ஒரு சித்திரக்கதை நண்பர், இது எனக்கு தெரிந்த நம்பர்னு காண்டாக்ட் பண்ணார். அத வச்சு ஃபேஸ்புக் ஐடிய பிடிச்சிட்டேன். கடந்த மூணுவருஷமா அது ஆக்டிவ்ல இல்ல. அப்புறம் அதில் உன் வித்யாவுக்கு தொடர்ந்து லைக், ஷேர் குடுக்கிற ஒரு அம்மிணிய பிடிச்சேன். தயங்கி தயங்கி புது நம்பர் குடுத்தாங்க. அவங்க பேசியே ரொம்ப நாள் ஆவுதாம். எழுதிக்கோ... செவன்.. ஃபோர்.. ஒன்... எய்ட்.......... “ என்று ஆனந்த் சொல்லச்சொல்ல படபடவென்று எழுதினான் ப்ரசன்னா.

“ ஆனா மச்சி, அந்த அம்மா சொன்னாங்க.. ரொம்ப நல்ல பொண்ணாம். அமைதியான பொண்ணாம்... அவங்கப்பா தண்ணி பழக்கத்துக்காக நெறய கடன் வாங்கிட்டு, அந்த கடன் கொடுத்தவனுக்கே அவளை கட்டிக்கொடுத்துட்டாராம் “ என்றான் ஆனந்த்.

ப்ரசன்னா அமைதியாக சொன்னான்.

” எதிர்பார்த்ததுதான்... “

“ அந்த கடங்காரன் ஒரு லூசுப்பையனாம்பா... பொண்ணுங்க ஃபேஸ்புக்ல இருந்தாகூட தப்பா பேசுவானாம்.. அடிப்பானாம். தமிழ்பொண்ணுன்னா...ன்னு பேசற குரூப்ப சேர்ந்தவன் போலருக்கு...” என்று தொடர்ந்தான் ஆனந்த்.

“ விடுமச்சி... அவ எங்கிட்ட பேசியிருக்கலாம்... சரி பண்ணியிருக்கலாம். ஆனா அவளுக்காகதான் நான் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு புரியவச்சி... அந்த மாட்டுமூளைக்காரன் கிட்ட இருந்து அவளை மீட்டுடறேன்..” என்றான் ப்ரசன்னா.

அன்று நெடுநேரம் பலதடவை கால் செய்தும் நம்பர் போகவில்லை. செல்ஃபோனை தலையருகே வைத்துக்கொண்டே அப்படியே தூங்கிப்போனான் ப்ரசன்னா. மறுநாள் தன் காரை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்லும் வழியில் குறுக்குத்தடத்தில் பயணித்தான். அது காடு சூழ் வழி. கார் போகும் அளவுக்கு சுமாரான பாதை உண்டு. மனம் சற்று உற்சாகமாய் இருக்கும் சமயங்களில் அந்த தடத்தை தேர்ந்தெடுப்பான். சுமாரான மலைப்பாதை போலிருக்கும் அந்த தடம் சிறுகசிறுக மேலேறி ஒரு சமதளத்தில் நின்று, பின் சட்டென்று கீழிறங்கும். அந்த சமதளத்தில் நின்று சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்புவான்.
காரை நிறுத்தினான். சிறு பறவைகளையும், அணில் கூட்டத்தையும் ரசித்தான். ஒரு பெரிய மயில் அழகாக பறந்துவந்து ஒருமரத்தின் மீது அமர்வதை ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தபோது
....

ஃபோன் ரிங்கானது. எடுத்துப்பார்த்தான். அப்படியே ஒரு நிமிடம் அவனுக்கு கிறுகிறுவென்று வந்தது. அது வித்யா.

“ ஹலோ... ஹலோ,...... வித்யா... நான்...நா... .ப்ரசன்னா... ஹலோ..” என்று பதறினான்.

எதிர்புறம் சற்று நேரம் அமைதியாக இருந்தது. பின்,

“ ப்ரசன்னா... எப்படியிருக்கே....? “

என்ற மெல்லியகுரல்.. வித்யா. அவனுக்கு அழுகை பீரிட்டு வந்தது.

“ ஏண்டா... எங்கிட்ட ஏதும் சொல்லாம...”

“ ப்ரசன்னா... முடிஞ்சிபோனது... போச்சு... வாழ்க்கையே... நீ ஏன் என்னைதேடி வர்ல....? “

“ எனக்கு வழி தெரியல வித்யா...”

“ உங்கிட்ட என் கஷ்டங்களை சொல்லவேணாம்னு நெனச்சேன். ஆனா முடியல. என் ஃபோன் எல்லாம் பிடுங்கி வச்சிட்டாங்க.. நான் ஒரு லெட்டர் எழுதி, பக்கத்து வீட்டு பையங்கிட்ட கொடுத்து உன் ஆஃபிஸ்க்கு போஸ்ட் பண்ணினேன். “

“ அட கடவுளே... என் ஆஃபிஸ் சொந்த பில்டிங் மாறின நேரம்பா... போச்சு... எல்லாம் போச்சு...”

“ அழாதப்பா... எது நடக்கும்னு எழுதியிருக்கோ அதான் நடக்கும். நான் உன் மனசில இன்னும் அழகா வாழ்ந்துட்டுதானே இருக்கேன்..”

“ இல்ல ... விட மாட்டேன் ... இன்னிக்கே கிளம்பிவரேன்... உன்னை கொடுமைப்படுத்தற அவன கழுத்திலயே வெட்டிட்டு... உன்னை தூக்கிட்டு வரேன்.. “

“ ப்ரசன்னா... பழச மற... நீ கல்யாணம் பண்ணாம இருப்ப இல்லியா... அதான் சொல்றேன்.. கல்யாணம் பண்ணிக்கோ... சந்தோஷமா இரு. என்னப்பா, ஒருநாள் முழுசா பழகினோம்... சில மாசம் பேசினோம்.. அவ்ளோதானே... அன்னிக்கு உன் விரல்கூட என்மேல படலை... மனுஷன் நீ “

“ என்னால முடில வித்யா... “

“ எனக்கு ஒரேஒரு ஆசை... ஒரு முத்தம் கொடேன்...” என்றாள் வித்யா.

ப்ரசன்னாவுக்கு அடக்கமுடியாத அழுகை எழுந்தது. அவனது அழுகை சத்தம் அவளுக்கும் கேட்டிருக்கும்.

“ ப்ரசன்னா... வீடியோ கால் பண்ணு...” என்றாள் வித்யா.
படபடவென்று செல்லை கட் செய்து வீடியோ கால் செய்தான். மெல்ல ரிங்க் போனது. மெல்லிய இருளின் வழியே அவளது முகம் பளீரிட்ட வெண்பூவாய் தெரிந்தது. அவன் பிரியும் நேரத்தில் கண்ட அதே ஏக்கமான, வெகுளியான அழகு முகம். மெல்ல இதழ் விரித்து சொன்னாள்,

“ ப்ரசன்னா... ஒரேஒரு முத்தம்... அப்புறம் என்னைத்தேடாதே... வா..” என்றாள்.

ப்ரசன்னா மெல்ல அழுகையினூடே அந்த செல்ஃபோனை தன் வாயருகே கொண்டுபோனான். அழுந்த முத்தமிட்டான். அவளும் அவனுக்கு முத்தமிடுவது கேட்டது. உயிரை உறிஞ்சும் முத்தம். அவனுக்கு உலகே இருண்டதுபோல் தோன்றியது. அந்த செல்ஃபோனை தன் முகத்தோடு அழுந்த வைத்துக்கொண்டு முத்தமிட்டான். மெல்ல உதடு சூடாவது தெரிந்தது. நிஜமுத்தம் போலவே அவளது ஸ்பரிசம் அவன் உதடு வழியே உள்ளுக்குள் ஊடுருவியது. அந்த சூடு மெதுவாக அதிகமாகியது. சிறிது சிறிதாக அதிகமாகி கொதிக்கும் நிலையை அடைந்தபோது..... அவனுக்கு முகமே எரிவதுபோல் தோன்றியது. ஃபோனை முகத்தில் இருந்து விடுவிக்கமுயல அது முகத்தோடு ஒட்டி, விட மறுத்தது. தன் பலத்தை அத்தனையும் பிரயோகித்து... ஃபோனை முகத்தில் இருந்து பிடுங்கிப்பார்த்தான். பொளீரென்று யாரோ அவன் முகத்தில் அறைந்தார்போலிருந்தது. அந்த ஃபோனில் தெரிந்த முகம்... வித்யா... மெல்ல மெல்ல மாறி... வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் சென்றது. திடீரென்று மிக பிரகாசமான வெளிச்சம் தோன்ற.... அதில்... கண்கள் இருந்த இடத்தில் கருங்குழிகளாய்... மென் உதடுகள் இரத்தம் வழியும் கிழிந்த உதடுகளாய்... அவளது கண்களின் குழிகளிலிருந்து.... எரியும் நெருப்பை ஒத்த...வெளிச்சம் பீரிட...

” ப்ரசன்னா....”

என்ற ஆண்குரலும், மிருககுரலும் கலந்தார்போல் ஒரு குரல் கூப்பிட விக்கித்துப்போனவன் தனது செல்லை அப்படியே தூக்கி எறிந்தான். எறிந்த வேகத்தில் ஏதோ ஒருவிசை அவனை பின்புறமாய் தூக்கி அடித்தது.
விழுந்தவேகத்தில் ஒரு மரத்தில் மோதி மயங்கியவன், எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானென்று தெரியவில்லை. மீண்டும் செல்ஃபோன் அடிக்க மெதுவாக எழுந்து , பயத்துடன் குனிந்து பார்த்தான். உடைந்து விரிசல் விட்டிருந்த அதில்... ஆனந்த் கூப்பிடுவது தெரிந்தது. அதை எடுத்து ஆன் செய்தான்.

“ ஹலோ... ப்ரசன்னா... மாப்ள... எங்கடா போன... எவ்ளோ நேரமா ஃபோன் செய்றது...? “ என்றான் ஆனந்த்.

“ உ....டம்பு...சரியி...ல்ல்ல.... சொல்லு...” என்றான் ப்ரசன்னா.

“ இப்போ, வித்யா ஃப்ரெண்டு, ஃபேஸ்புக்ல இருந்து அந்த அம்மா பேசினாங்கடா... அவங்களும் மனசு கேட்காம தேடியிருக்காங்க. ஒருதகவல்... வித்யா ரெண்டுவருஷம் முன்னால அவ புருஷன கழுத்திலயே வெட்டிகொன்னுருக்கா.... “ என்றான் ஆனந்த்.

“ சொல்.... அவ எங்க இருக்கா... “ என்றான் ப்ரசன்னா விரக்தியாக.

ஆனந்த் தொடர்ந்தான்.

“ அவனை வெட்டிட்டு... அவளும் தூக்குபோட்டு இறந்துட்டாளாம் மாப்ள....” .
 
Top