கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

7. நதியிலே புதுப்புனல்

Annapurani Dhandapani

Active member
7.


தினேஷை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்கள்.

வீட்டு வாசலில் சோர்வாக வந்திறங்கிய மச்சினர், கணவர் மற்றும் மூத்த மகனுடன் இரண்டவது மகனைக் கண்ட ரேவதி, குழப்பத்துடன் அவர்கள் அருகில் வந்தாள்.

"என்ன எல்லாரும் ஒண்ணா வந்திருக்கீங்க? தினுவும் வேற வந்திருக்கான்? என்னடா லீவா? அடுத்த வாரம்தானே வருவேன்னு சொன்ன?" என்று கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தவள் அவனுக்கு ட்ரிப்ஸ் போட்டதற்கான அடையாளமாக இடது புறங்கையில் குத்தப்பட்டிருந்த ஊசியைக் கண்டு பதறினாள்.

"ஐயோ! என்னடா? என்னாச்சு?" என்று கேட்க, பத்மநாபன் மனைவியின் கையை ஆதரவாகப் பிடித்து,

"தினுவுக்கு ஒண்ணுல்ல ரேவதி! லேசா காச்சலாம்! அதான் ட்ரிப்ஸ் போட்டிருக்கு.. பயப்படாத.. வா.. உள்ள போய் பேசலாம். அவன் டயர்டா இருக்கான்ல.." என்றார்.

"வாப்பா! வா! உள்ள வா!" என்று அவள் அழைக்க, அதற்குள் உள்ளே சென்று அவனுடைய அறையை தயார் செய்தான் முகேஷ்.

தினேஷை அழைத்துப் போய் படுக்க வைத்து விட்டு,

"ம்மா ரேவதி! அவனுக்கு பிடிச்சதா சமைச்சி குடுமா. அப்பதான் உடம்பு தேறும்! இப்ப கொஞ்சம் காபி மட்டும் குடும்மா! கிளம்பறேன்!" என்றார் ராகவன்.

"சரிங்க பெரியத்தான்!" என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள் ரேவதி.

அதற்குள் எல்லாருக்குமாக காபி கலந்து எடுத்து வந்தாள் ஷிவன்யா.

"நீ ஏம்மா இதெல்லாம் செய்யற?" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் ரேவதி.

"பரவால்ல ஆன்ட்டி! எனக்கும் சும்மா இருந்தா போர் அடிக்கிது!" என்று சொல்லிக் கொண்டே காபியை எல்லாருக்கும் கொடுத்தாள்.

"என்ன ஷிவன்யா? இங்க உனக்கு பொழுது போகுதா?" என்று கேட்டுக் கொண்டே அவள் கொடுத்த காபியைப் பருகினார் ராகவன்.

"கொஞ்சம் போர் அடிக்கதான் செய்யுது! அதான் ஆன்ட்டிக்கு ஹெல்ப் பண்றேன் அங்கிள்." என்றவள்,

"அப்பா எப்டி இருக்காங்க அங்கிள்? நா அப்பாவ பாக்க வரலாமா?" தயக்கமாகக் கேட்டாள்.

"ம்.. நல்லா இருக்கான் மா.. ஆனா நீ வர வேணாம்மா! அவன் ஒத்துக்கவே மாட்டான். நீ கொஞ்சம் அமைதியா இரு. நா அவன் கிட்ட பேசிட்டு உன்ன கூட்டிட்டு போறேன்." என்றார்.

"ம்ச்.. ஏன்தான் இப்டி பிடிவாதம் பிடிக்கறாரோ?" என்று சலித்துக் கொண்டாள் ஷிவன்யா.

"விடுமா! அவன் குணம்தான் உனக்கு நல்லா தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு எல்லாரிடமும் சொல்லிவிட்டு முகேஷைப் பார்த்து போன் செய்யுமாறு சாடை காட்டி விட்டுக் கிளம்பினார்.

அவனும் தன் தலையை மெலிதாக ஆட்டினான்.

பத்மநாபனும் முகேஷும் பயணக் களைப்பில் அப்படியே ஹால் சோபாவில் சாய்ந்தனர்.

ஷிவன்யாவும் தன் கைபேசியுடன் ஐக்கியமானாள்.

ரேவதி சென்று தன் இளைய மகனுக்கு காபி எடுத்துப் போய் கொடுத்தாள்.

"என்னப்பா? ரொம்ப வேலை அதிகமோ? உடம்ப பாத்துக்க கூடாதா? துரும்பா இளைச்சிட்டியே! இப்டியா காய்ச்சல் வர அளவுக்கு வெச்சிப்ப?" என்று கேட்டு அவனுடைய தலையைக் கோதிவிட்டாள்.

அவன் பதிலொன்றும் பேசாமல் காபியை வாங்கிப் பருகினான்.

"ஏதாவது சாப்பிடறியா தினு?" ரேவதி கேட்டாள்.

"ம்ஹூம்.." என்று மறுத்தவன் எதுவும் பேசாமல் அன்னையை இழுத்து தன்னருகே அமர வைத்துக் கொண்டு அவளுடைய மடியில் தன் தலையைப் புதைத்துக் கொண்டான்.

ரேவதிக்கு அவனுடைய செயல் குழப்பமாக இருந்தாலும் அவனிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

"அவ யாருமா? நம்ம வீட்டுல என்ன பண்றா?" கேட்டான்.

"அவ ராகவ் பெரிப்பாவோட ஃப்ரண்ட் தேவராஜ் இருக்காருல்ல. அவரோட பொண்ணு. இப்ப தேவராஜ் அண்ணனுக்கு உடம்பு சரியில்லப்பா. அதான் நம்ம வீட்ல இருக்கா." ரேவதி சொன்னாள்.

"ஏன்? அவளுக்கு வீடு எதுவும் இல்லையா?"

"ஏய்! பாவம் தாயில்லா பொண்ணு! அப்பாவுக்கும் உடம்பு சரியில்லன்னு கவலப்படப் போறாளேன்னு இங்க இருக்கா!" என்றாள் ரேவதி.

ம்க்கும்.. இப்டிதான்.. பாவம் பாத்து நான் அவளுக்கு எல்லாம் உதவியும் செஞ்சேன்.. ஆனா பெரிய ஆப்பா அடிச்சி அனுப்பினால்ல.. பொண்ணுங்களே இப்டிதான்.. சே.. என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் தினு.

"என்ன தினு! என்ன செய்யுது உடம்புக்கு! தலை வலிக்கிதா?" என்று பாசத்துடன் வினவிய அன்னையை ஏறெடுத்துப் பார்த்தான்.

"ம்ச்.. ஒண்ணுல்ல.. நீங்க போங்க.." என்று கத்தினான்.

அவனுடைய கத்தல் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அங்கே ஓடி வந்தனர்.

"ஏய் தினூ.. என்னப்பா? ஏன் இப்டி கத்தற?" என்று பத்மநாபன் அன்பும் கண்டிப்புமாகக் கேட்டார்.

"என்ன ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க? அப்டியே விட்டிருக்கறதுதானே? நா நிம்மதியா இருந்திருப்பேன்." என்று கத்தினான் தினு.

"நிம்மதியா இருந்திருப்பியா? இல்ல நிம்மதியா இறந்திருப்பியா?" என்று கோபமாகக் கேட்டான் முகேஷ்.

ரேவதி அதிர்ந்து போய் மூத்த மகனைப் பார்க்க, பத்மநாபன்,

"என்ன முகி? ம்ச்.." என்று வேதனையுடன் கேட்டுவிட்டு, தன் தலையில் அடித்துக் கொண்டார்.

"ஆமாம்மா! நா சூசைட் அட்டம்ப்ட் பண்ணினேன். நா எதுக்குமே லாயக்கில்லன்னு ஒருத்தி என்ன அவமானப்படுத்திட்டா." என்று பெரிய குரலில் கத்தினான் தினு.

இதைக் கேட்ட ரேவதி அதிர்ந்து போனவளாய் அங்கிருந்து வேகமாக சமையலறைக்குள் சென்று தன் வாயைப் பொத்திக் கொண்டு விக்கி விக்கி அழுதாள்.

"ஆன்ட்டி! ஆன்ட்டி! வேணாம்! ப்ளீஸ்!" என்று அவள் பின்னாலேயே ஓடி வந்த ஷிவன்யா அவளைத் தேற்றத் தொடங்கினாள்.

"எப்டிமா.. எப்டி அவனால இப்டி ஒரு முடிவுக்கு வர முடிஞ்சது.. எவளோ ஒருத்திக்காக பெத்தவங்களையும் கூடப் பொறந்த அண்ணனையும் விட்டுட்டு போவானா.. மிஞ்சிப் போனா ஆறு மாசம் பழகிருப்பானா.. அவளுக்காக இத்தன வருஷமா பழகின எங்கள எல்லாம் மறந்துடுவானா? என்ன பைத்தியக்காரத்தனம் இது?" என்று அழுதபடி கேட்டாள் ரேவதி.

"நீங்க சொல்றத அவரு புரிஞ்சிப்பாரு ஆன்ட்டி. நீங்க கவலப்படாதீங்க!" என்று ஷிவன்யா அவளை சமாதானம் செய்தபடி இருந்தாள்.

தினுவின் காதில் அவள் பேசியது தெளிவாகவே விழுந்தது.

"உங்கம்மா கேக்கற கேள்விக்கு என்னடா பதில் சொல்லப் போற?" என்று கதறினார் பத்மநாபன்.

"என்ன தனியா வுடுங்கப்பா!" என்று மீண்டும் கத்தினான் தினு.

அம்மாவின் கேள்விகள் நியாயமானவைதான் என்றாலும் இப்போதைக்கு தினுவின் மனதில் இன்னும் அந்தப் பெண் கொடுத்துச் சென்ற ஏமாற்றம் மட்டுமே பூதாகாரமாய்த் தெரிந்ததால் அம்மாவின் அழுகை அவனை சாய்க்கவில்லை.

அன்றிரவு அவன், தன்னுடைய அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு மீண்டும் தற்கொலைக்கு முயன்று, முகேஷினால் காப்பாற்றப்பட்டான்.

"டேய்! எவ்ளோ சொன்னாலும் உனக்கு புத்தியே வராதாடா?" என்று முகேஷ் அவனைப் பார்த்துக் கத்தினான்.

"ஒரு பொண்ணால வர அவமானத்தப் பத்தி ஒனக்கென்னடா தெரியும்?" என்று தினு தன் அண்ணனைப் பார்த்து பதிலுக்கு கத்தினான்.

ம்ஹூம்! இது சரிப்பட்டு வராது! இவனுக்கு அப்பா ட்ரிட்மென்ட்தான் சரிப்படும் என்று ஷிவன்யா நினைத்தாள்.

நேராக தினுவின் முன்னால் சென்று,

"உண்மையாவே அந்தப் பொண்ணு சொன்ன மாதிரி நீ எதுக்கும் லாயக்கில்லதான் போலிருக்கே?" என்றாள் ஏளனமாக.

"ஏய்! யாருடீ நீ? இங்கேர்ந்து போடீ!" என்று கத்தினான்.

"உன்னால எதையாவது சாதிக்க முடியும்ன்னா அத சாதிச்சி காட்டறத விட்டுட்டு இப்டி சாகறன்னு சொன்னா.. அப்ப அவ சொன்ன மாதிரி நீ எதுக்கும் லாயக்கில்லன்னுதானே அர்த்தம்! அதான்.. அவ உன்ன பாத்து லாயக்கில்லன்னு சொல்லிருக்கா!"

"ஏய்!" என்று கோபமாகக் கத்தினான் தினு.

"ஏய்! சும்மா கத்தாத! உன் யோக்யதைய செயல்ல காட்டு! உன் திறமை என்னன்னு நிரூபிச்சிட்டு அப்றம் வந்து கத்து!" என்று சொல்லிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

தினுவுக்கு ஆத்திரமாக வந்தது.

நேராக அவள் இருந்த அறைக்குச் சென்றான்.

"எங்க வீட்டுலயே உக்கார்ந்துகிட்டு என்னையே யோக்யதை இருந்தா சாதிச்சி காட்டுன்னு சொல்றியா? காட்டுவேன்டீ! என்னை என்ன சப்பன்னு நெனச்சியா? நா யார்ன்னு நிரூபிச்சி காட்றேன்!" என்று அவளைப் பார்த்துக் கத்திவிட்டு முகேஷிடம் வந்தான்.

"முகி! சென்னைல எனக்கு ஒரு வேலை வேணும்! அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு. இன்னும் ஆறு மாசம்.. ஆறே மாசத்தில நான் யார்ன்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கறேன்.." என்று கூறி விட்டு தன்னுடைய அறைக்குள் சென்று படுத்தான். அவன் வாய் தன் பழைய காதலியை விட்டுவிட்டு ஷிவன்யாவைத் திட்டத் தொடங்கியது.

முகேஷுக்கும் பத்மநாபனுக்கும் ரேவதிக்கும் போன உயிர் திரும்பியதைப் போல இருந்தது.



- தொடரும்....
 
Top