கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

9. நதியிலே புதுப்புனல்

Annapurani Dhandapani

Active member
9.


தினுவும் ஷிவன்யாவும் ஒன்றாக தினுவின் இருசக்கர வாகனத்தில் வந்து இறங்குவதைக் கண்ட முகேஷும் ரேவதியும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.

வண்டியிலிருந்து இறங்கிய ஷிவன்யா, நேராக ரேவதியிடம் சென்று,

"ஆன்ட்டி! நீங்க ஜெய்ச்சுட்டீங்க! நா ஒண்ணும் பயந்தாங்கொள்ளி இல்ல! தைரியமானவதான்னு உங்க பையன் கிட்ட கெத்தா சொல்லுங்க ஆன்ட்டி!" என்று வீராவேசமாகச் சொல்லிவிட்டு தினுவை முறைப்பது போல பார்த்து வைத்தாள்.

அவனோ பெரிய குரலில் கடகடவென்று சிரித்தபடியே உள்ளே வந்து,

"எப்டி? நா சொன்னேன்ல.. அவள என் பைக்ல உக்கார வெச்சி கூட்டிட்டு வருவேன்னு சொன்னேன்ல.. வந்தேனா.. இப்ப நம்பறீங்களா.." என்றான் தன் அம்மாவைப் பார்த்து.

ஷிவன்யாவுக்கு மீண்டும் கோபம் வந்தது.

"யூ.. யூ.." என்று அவனைப் பார்த்து கோபமாக எதையோ சொல்ல வந்துவிட்டு எதையும் சொல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டு தோற்றுப் போன உணர்வில் தன் காலை ஓங்கி தரையில் மிதித்துவிட்டு தான் தங்கியிருந்த அறைக்குள் சென்றாள்.

"என்னடா இதெல்லாம்? அவ கிட்ட ஏன் சும்மா சும்மா வம்புக்கு போற?" என்று ரேவதி கேட்டாள்.

"ம்மா! ஜஸ்ட் ஃபார் ஃபன்! இப்ப அவ அவங்கப்பாவ பாத்துட்டு வந்துட்டால்ல.. அதுதானே இம்பார்டன்ட்.." என்றான் இலகுவாக.

"என்னடா சொல்ற? அவங்கப்பாவ பாத்துட்டு வந்தாளா? அவங்கப்பா அவள எதுவும் சொல்லலியா?" என்று வியந்து போய்க் கேட்டான் முகி.

"எதுவும் சொல்லலியாவா? எக்கசக்கமா திட்டினாரு.. அப்றம் நாந்தான் உள்ள புகுந்து அவள காப்பாத்தினேன்.. அதுக்கப்றம்தான் அவங்கப்பா தன் கோபத்தை கைவிட்டு அவ கிட்ட சிரிச்சி பேசினார்.. அவ ரெண்டு நாளைக்கு ஒரு முறை அவரை வந்து பாக்கலாம்னு பர்மிஷன் வேற குடுத்திருக்கார்.. எல்லாம் ஐயானாலதான்.. தெரியும்ல.." என்று அவன் அங்கு நடந்ததைக் கூறி தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.

உள்ளறையிலிருந்து இவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷிவன்யாவுக்கு ஒரு பக்கம் கோபமாக வந்தாலும் அவன் தன் அப்பாவை சமாளித்த விதத்தை எண்ணி வியப்பாவும் இருந்தது.

'எப்டி சரளமா புளுகறான்.. ப்பா.. ஜகஜ்ஜால கில்லாடியா இருப்பான் போலிருக்கு.. இவன் கிட்ட எப்பவும் கொஞ்சம் கவனமாவே இருக்கணும்..' என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த வந்த இரண்டு வாரங்களுக்கு அவள் தினுவின் பக்கமே திரும்பவில்லை. அதற்கு அவளுக்கு நேரமும் இருக்கவில்லை.

அவளுடைய அப்பாவின் கட்டளைப்படி முகேஷிடம் கம்பெனி தொடர்பான விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மும்முரமாக இருந்தாள்.

கம்பெனி தொடர்பான விஷயங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்பாவிட்டாலும் முகேஷுக்கு வேறு வழியிருக்கவில்லை.

ஆனால் அவன் கடனேயென்று கற்றுக் கொடுத்தாலும் ஷிவன்யா மிகவும் கவனமாகவே கற்றுக் கொண்டாள்.

அதுவும் அவள் ஏற்கனவே தான் படித்து முடித்து வந்த எம்பிஏ படிப்பில் கிடைத்த அறிவையும் இவன் கற்றுக் கொடுத்ததுடன் ஒப்பீடு செய்து நன்றாகவே புரிந்து கொள்ளவும் செய்தாள்.

முகேஷுக்கு ஷிவன்யாவைப் பிடிக்கவில்லையென்றாலும் அவள் அறிவாளிதான் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இதற்கிடையில் தினுவுக்கு தான் வேலை செய்யும் நிறுவனத்திவேயே வேலை வாங்கிக் கொடுத்தான் முகேஷ்.

அன்று தினு தன் புதிய வேலையில் சேரக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

முகேஷ் தினுவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அவன் எங்கே போய் யாரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஏற்கனவே தன் வேலைக்கு கிளம்பிவிட்டிருந்தான்.

ஷிவன்யாவும் தன் தந்தையைக் காணக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

தினுவும் ஷிவன்யாவும் ஒன்றாகக் கிளம்பி வெளியில் வர,

"உன் புது வேலைக்கு ஆல் த பெஸ்ட்!" என்றாள் ஷிவன்யா.

"தேங்க்ஸ்!" என்றவன்,

"ஏய்! வண்டில ஏறு! நா உன்ன ட்ராப் பண்றேன்!" என்று அவளை அழைத்தான்.

"நானே போய்க்குவேன்!" வெடுக்கென்று கூறிவிட்டு ஷிவன்யா நடந்து போக முற்பட, அவளுடைய கையைப் பிடித்தான் தினு.

"ஏறுன்னு சொல்றேன்ல!" என்று கோபமாகக் கேட்டான்.

"நானே போய்க்குவேன்னு நானும் சொல்றேன்ல.." என்று அவனை விடக் கோபமாகச் சொல்லிவிட்டு அவள் தன் கையை உதறி விடுவித்துக் கொண்டு வேகமாக நடந்தாள்.

திமிரு பிடிச்சவ! என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவன் தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்ல,

திமிரு பிடிச்சவன்! என்று அவளும் அதையே நினைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள்.

இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றிருந்த ரேவதிக்கு சிரிப்பாக வந்தது.

இப்படியே இன்னும் இரண்டு வாரங்கள் ஓடிப்போனது.

தேவராஜின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அவரை வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர்.

"ஹப்பாடா! இப்பதான் நிம்மதியா இருக்கு! வாங்கப்பா! நாம நம்ம வீட்டுக்கு போலாம்!" என்று ஷிவன்யா கூற,

"ஆமாம்மா! எனக்கும் இப்பதான் நிம்மதியா இருக்கு!" என்றார் தேவராஜ்.

ஷிவன்யா தேவராஜை டிஸ்சார்ஜ் செய்து மைலாப்பூரில் இருக்கும் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்தாள்.

அவரை வீட்டில் விட்டுவிட்டு அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு,

"அப்பா! நீங்க ரெஸ்ட் எடுங்க! நா போய் என் திங்க்ஸ் எல்லாம் எடுத்துகிட்டு ரேவதி ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டு வந்திடறேன்." என்று சொல்லி கிளம்பினாள்.

"ம்ஹூம்! நீ எங்கயும் போக வேணாம்! எல்லாம் நா ராகவன் கிட்ட சொல்லிட்டேன். அவன் பாத்துக்குவான்!" என்றார்.

"இல்லப்பா! அது தப்பு! இவ்ளோ நாள் ஆன்ட்டியும் அங்கிளும் என்னை அவங்க வீட்டு பொண்ணு மாதிரி பாத்துகிட்டாங்க. நா சொல்லாம வந்தா அது மரியாதை கிடையாது. நா சொல்லிட்டு வந்திடறேன்!" என்று கடகடவென்று சொல்லிவிட்டு கிளம்பியேவிட்டாள்.

தேவராஜுக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் பொண்ணு முன்னல்லாம் நான் ம்.. ன்னு சொன்னா அங்க இங்க அசையாம நிப்பா.. இப்ப என்னடான்னா என்ன பேசவே விடாம கடகடன்னு பேசிட்டு ஓடறாளே.. ம்.. என்று அவளுடைய மாற்றத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டார்.

ஷிவன்யா, சென்று தன்னுடைய பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ரேவதியிடமும் பத்பநாபனிடமும் முறையாய் விடைபெற்றாள்.

"ஆன்ட்டி! அங்கிள்! நா போய்ட்டு வரேன்! அப்பாவ வீட்டுக்கு அனுப்பிட்டாங்க! நா அப்பாவ வீட்ல விட்டுட்டுதான் வந்தேன். நா கிளம்பறேன் ஆன்ட்டி! உங்க பையன் கிட்ட சொல்லிடுங்க; கம்பெனி டீடெய்ல்ஸ் எல்லாம் நல்லா சொல்லி குடுத்ததுக்கு நா தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க; ஆங்.. பிரியா கிட்டயும் சொல்லிடுங்க; நீங்க எல்லாரும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரணும்! ஆனா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன் ஆன்ட்டி!" என்று நீளமாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ரேவதியும் பத்மநாபனும் தலையாட்டி விடை கொடுத்தனர்.

ஷிவன்யா கிளம்பிப் போன அரைமணி நேரத்தில் முகேஷ் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டில் ஷிவன்யாவின் அறை காலியாக இருப்பதைப் பார்த்துவிட்டு,

"எங்கம்மா அவ?" என்று கேட்டான்.

"அவப்பா டிஸ்சார்ஜ் ஆகிட்டாருடா. அவளும் அவ வீட்டுக்கு போய்ட்டா!" என்றாள் ரேவதி.

"ஹப்பாடா! போய்ட்டாளா! நிம்மதி!" என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய அறைக்குள் சென்றான்.

"போடா! லூசு மாதிரி பேசாத!" என்றாள் ரேவதி.

"அவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணுமாம்.." என்று அலட்சியமாகக் கேட்டான் முகேஷ்.

"சரி! தேவையில்லாத பேச்சை இதோட விடு! ஆனா அவ உனக்கு ரொம்ப தேங்க்ஸ்ன்னு சொல்ல சொன்னா!" என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றாள் ரேவதி.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் தினு.

"என்னம்மா? யார் என்ன சொல்ல சொன்னாங்க?" என்று கேட்டான்.

"ஒண்ணுல்லடா! ஷிவன்யாவோட அப்பா டிஸ்சார்ஜ் ஆகிட்டாரு. அவளும் அவரக் கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டா! போறச்சே உங்க அண்ணனுக்கு ரொம்ப தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டுப் போனா!" என்றாள்.

இதைக் கேட்டதும் தினுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

போய்ட்டாளா? என்று நினைத்துக் கொண்டான்.

"ம்.. தேங்க்ஸ் அண்ணனுக்கு மட்டும்தான் சொன்னாளா?" என்று கேட்டான்.

"ஆமாடா! அவ அவனுக்கு தேங்க்ஸ்ன்னு சொன்னா. உங்க அண்ணி பிரியாகிட்டயும் பை சொன்னேன்னு சொல்லிட சொன்னா. உன்கிட்ட எதையும் சொல்ல சொல்லி சொல்லலடா!" என்றாள் ரேவதி.

"ம்.. சரி.." என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துவிட்டு அவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

'என் கிட்ட சொல்லிக்காமலேயே கிளம்பிட்டியே.. சரி.. இதுவும் நல்லதுக்குதான்.. ஒருத்தியால பட்ட அவமானமே போதும்.. இவங்கப்பா ஒரு அரக்கிறுக்கு.. இவ அதுக்கு மேல ஒரு முழுக்கிறுக்கு.. வேணாம்டா சாமி.. இந்த பொண்ணுங்களோட சகவாசமே வேணாம்..' என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்.

இங்கே தினு இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில் அங்கே ஷிவன்யாவும் தினுவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

'அவன் கிட்ட பை சொல்ல சொல்லி ஆன்ட்டிகிட்ட சொல்ல மறந்துட்டேனே.. என்ன தப்பா நெனச்சிப்பான்ல.. பாவம்.. பொய்தான் சொன்னான்னாலும் அப்பாவை பாக்க எனக்கு ஹெல்ப் பண்ணினான்.. கொஞ்சம் அரக்கிறுக்குதான்.. ஆனாலும் ஸ்வீட் கய்.. அடுத்த முறை பாக்கறப்ப தேங்க்ஸ் சொல்லி சாரியும் சொல்லணும்..' என்று நினைத்துக் கொண்டாள்.

இருவரும் இப்படி ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டே தங்களுடைய கடமையை செய்து கொண்டிருந்தனர்.



- தொடரும்....
 
Top