கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-12

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-12


தனராஜனுக்குத் தலைமகன் பிறந்துவிட்டான்…

பவானி பிரசவத்திற்காகத் தாய்வீடு சென்றுவிட்டதால் தனராஜனுக்குத் துணையாக மீரஜாவையும் அழைத்துக்கொண்டு மூன்று மாதங்கள் கோயம்புத்தூரில் இருந்தனர், முதிய தம்பதியர்.

குழந்தை பிறந்த மூன்றாவது மாதம், கோயம்புத்தூருக்கு பவானியுடன், குழந்தையைக் கவனித்துக்கொள்ள, பவானியின் தாயும் உடன்வர, மீண்டும் மீரஜாவுடன் முதிய தம்பதியர்புன்னைவனம் வந்தனர்.

மூன்று மாதங்கள் கோயம்புத்தூர் சென்றுவிட்டதால், மீரஜா பள்ளிக்கூடம் செல்லமுடியாமல் போனதில், மாலினிக்கு இருந்த வருத்தத்தை, மனோகரி பெரிதாக ஊதிவிட,

அப்பத்தா, தாத்தாவுடன் மீரஜா புன்னைவனம் வந்து ஒரு வாரத்திலேயே, செல்வராஜிடம் தனது நடிப்பை ஆரம்பித்தாள் மாலினி.

பெரும்பாலும் செல்வராஜ் வீட்டிற்கு வரும்போதெல்லாம். மாலினி உடல்நிலை சரியில்லை என்று படுத்துக்கொள்வாள்.

"என்னாச்சு மாலினி?" என்று தனதறையில் படுத்திருந்த மாலினியிடம் செல்வராஜ் கேட்க,

"உடம்புவலியோட, தலைவலியும் சேர்ந்து உயிரெடுக்குதுங்க."

"ஏன் திடீர்னு? டாக்டர்ட்ட போவமா?"

"இதுக்கெல்லாமா டாக்டர்ட்ட போவாங்க? வேலை அதிகங்கிறதால மேலு வலிக்குது… சரியான சாப்பாடு தூக்கம் இல்லாததால தலை வலிக்குது அவ்வளவுதான்… விடுங்க கொஞ்ச நேரம் படுத்திருந்தா சரியாயிடும்." என்று மாலினி கூறியதும்,

'பாவம்! உடல்வலியில் கஷ்டப்பட்டாலும் என்கிட்ட சமாளிக்கிறா.' என்று நினைத்த செல்வராஜ்,

"இத்தனை வருசமா தனியாதானே வேலை பார்த்த, அப்பக்கூட இவ்வளவு கஷ்டப்படலையே நீ?" என்று மிகவும் ஆதுரமாய்க் கேட்டான்.

"ஆஹா! நம்ம நடிப்பு வொர்க்ஔட் ஆகுது!' என்று மனதிற்குள் தன்னையே மெச்சிக்கொண்ட மாலினி,

"அப்போ, சமைக்கிறதும், பிள்ளைய பாத்துக்கிறதும் மட்டும்தானேங்க செஞ்சேன்… அதுக்கே பொழுது சரியாயிருக்கும்... வீடு கூட்ட, பாத்திரம் விளக்க, துவைக்க, மாவு ஆட்ட, தண்ணி அடிக்கன்னு மேல் வேலைக்கு ஆள் இருந்துச்சு. இப்ப சமையல் தவிர இதெல்லாம் நான்தானே பார்க்கிறேன்?"என்று பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு மாலினி பேசிய விதத்தில்,

'ச்சே! இவ்வளவு கடின வேலைகள் செய்தாலும், தன் வலியை மறைத்து, என் மனம் நோகக்கூடாதென்று இதமாகப் பேசுகிறாளே!' என்று நெகிழ்ந்த செல்வராஜ்,

"நானே கேட்கனும்னு இருந்தேன்… மேல் வேலைக்கு இருந்தவங்கள ஏன் வேலையவிட்டு அனுப்புனீங்க?" என்று கேட்டான்.

"நாம ரெண்டு பொம்பளைங்க இருக்கும்போது, வேலைக்கு ஆள் வேண்டாம்னு அத்தைதான் நிறுத்திட்டாங்க." என்று சிரித்துக் கொண்டே கூறிய மாலினியைப் பார்த்த செல்வராஜ்,

'என்ன நடக்கிறது இங்கே? அம்மா ஏன் இப்படிச் செஞ்சாங்க? மாலினிய இவ்வளவு வேலை செய்யச் சொல்றாங்களே?, இவளைப் பார்த்தால் அம்மாவுக்குப் பாவமாகத் தெரியலையா?' என்று மனம் சுணங்கியவன்,

"சரி! அம்மாட்ட, நீ போய்ச் சொல்லவேண்டியதுதானே? இவ்வளவு வேலைபார்க்கிறது, உடம்பு வலிக்குதுன்னு."

"நீங்க வேற, எங்கம்மாவே, இந்த வேலை பார்த்தா என்ன? உடம்பு வளைய மாட்டேங்குதோ? னுதான் கேட்கிறாங்க? இதுல அத்தைட்ட எங்கபோய்ச் சொல்றது?"
'தன் மகள் ரொம்பக் கஷ்டப்பட்டு வேலைகள் செய்றான்னு தெரிஞ்சும், எங்கம்மா இவளைக் கொடுமைப் படுத்துறாங்கன்னு சொல்லாம, இவளை இவ அம்மா திட்டியிருக்காங்களே? எவ்வளவு நல்லவங்க மாலினியின் அம்மா!' என்று உள்ளம் பூரித்தவன்,

"ஓகே! நான் போய் அம்மாட்ட சொல்றேன். நம்ம கஷ்டத்த அம்மாட்ட சொன்னா அவங்க புரிஞ்சுக்குவாங்க." என்றான்.

"வேண்டாங்க… சொல்றதுன்னா நான் போய்ச் சொல்றதுதான் சரியாவரும்… இல்லன்னா வேற மாதிரி ஆயிடும்?"

'எனக்காக, இந்தக் குடும்பத்துக்காக, எவ்வளவு யோசிக்கிறா? நான் போய் அம்மாட்ட சொன்னா, ‘ஏன் இத அவ சொல்ல வேண்டியதுதானே?’ என்று அம்மாவுக்கு மாலினி மீது வருத்தமும், பொண்டாட்டிக்கு வக்காலத்து வாங்குறேனே? ன்னு என்னையும் அம்மா தப்பா புரிஞ்சுக்குவாங்கன்னு நினைச்சுதான் இப்படிச் சொல்றா' என்று நினைத்தவன், மாலினியின் நெற்றியில் இதழ்பதித்து, அவளுடைய தலையை இதமாகக் கோதியவாறு,

"சீக்கிரம் அம்மாட்ட பேசிடு. ம்ம்ம்?" என்று கூறிய செல்வராஜுக்கு,

வேலையாட்களை, வேலையிலிருந்து நிறுத்தியதில், முதன்முறையாக, தன் அம்மாமேல் சின்ன வருத்தமும், மாலினி மீது மலையளவு நம்பிக்கையுடன் கூடிய அன்பும் ஏற்பட்டது.

அதேபோல், 'நான் தடுத்தாலும், நான் கஷ்டப்படுறத பார்த்து, வருத்தப்பட்டு, அவரே அவருடைய அம்மாட்ட பேசுவார்!' என்று மாலினியும் எதிர்பார்த்தாள்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு மேலாகியும் செல்வராஜ், இது சம்பந்தமாகத் தனது தாயிடம் பேசாததைக் கண்ட மாலினி, அதை மனோகரியிடம் கூற,

அவர், "உன் மாமியாருக்கு, மனசளவுல பிரச்சனைய கொடு. அவங்களே, தன் மகன்ட்ட உன்னைப் பற்றிப் புகார் சொல்லட்டும்…"

"அச்சச்சோ! என்னம்மா சொல்றீங்க?"

"மொதல்ல, என்னைய முழுசா சொல்லவிடு!..." என்று அதட்டிய மனோகரி, "அடிக்கடி இந்த மாதிரி உன் மாமியார், உன்னைப்பத்தி சொல்லித்தரும்போது, ஒரு நிலைக்குமேல உன் புருசனுக்கு, உன் மாமியார் மேல கோபம் வந்துடும்…"

"என்னைப்பத்தி சொல்லித் தந்தா என்மேலதான, அவருக்குக் கோபம்வரும்?"

"இதுகூடவா நான் சொல்லித் தரனும்? உன் மாமியாருக்கு கோபத்த ஏற்படுத்து… ஆனா உன் புருசன் முன்னாடி ரொம்ப அமைதியா நல்லபிள்ளையா நடந்துக்க… அவர் உங்க நடவடிக்கைய கவனிச்சுப் பார்க்கும்போது, நீ அமைதியாதான் இருக்க… உன் மாமியார் தான் வீணா பிரச்சனைய கிளப்புறாங்கன்னு தோணும். இப்பயாவது புரியுதா?" என்று மனோகரி கேட்கவும் மாலினியின் முகம் மலர்ந்தது.

அடுத்துவந்த நாட்களில் வேண்டுமென்றே வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்யாமல் முத்துராக்கம்மாள் செய்யும்படி வைத்தாள்.

அப்படியும் பிரச்சனை வராமல் போகவே, மாலினி மனோகரியிடம் சொல்ல,

எப்படியெல்லாம் நடந்துகொண்டால் முத்துராக்கம்மாளுக்குக் கோபம் வருமோ, அதையெல்லாம் மனோகரி, மாலினிக்குச் சொல்லிக் கொடுத்தார். மனோகரி சொல்லித் தந்தபடி,

வேண்டுமென்றே முத்துராக்கம்மாவிற்குப் பிடிக்காத விசயங்களுக்கு ஆதரவாகப் பேசி, கடுப்பேத்தினாள்.

கடுப்பேறி முகம் சுண்டினாலும், 'நமக்குப் பிடிக்காததெல்லாம் மாலினிக்கும் பிடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறது தப்பு… எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சதால, என்னைக் கன்வின்ஸ் பண்ண நினைக்கிறா போலிருக்கு.' என்று நினைத்துச் சிரித்துக் கொண்ட முத்துராக்கம்மாள், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

வாரத்துக்கு ஒருமுறையாவது மனோகரியிடம் பேசி,

ஒரு மனுசியை எவ்வாறெல்லாம் மனதளவில் புண்படுத்தலாமோ அதையெல்லாம் செய்தாள்.

தனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தான், தங்கள் வீட்டிற்கு வர வேண்டும், என்பதுபோல் நடந்துகொண்டாள்.

தன் மாமியாருக்கு அதரவாகப் பேசுபவர்களை, சிரித்துக்கொண்டே நறுக் நறுக் என்று பேசியோ,

முறைத்துக்கொண்டு, எவரும் அறியாவண்ணம், அவர்களுக்கு மட்டும் கேட்கும் மெல்லிய குரலில் திட்டியோ,

அல்லது வீட்டிற்கு வருபவர்களை, வரவேற்காமல், ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டோ வெறுப்பேற்றினாள்.

அதற்குப்பிறகும் தன் மாமியாரிடம் அன்பு வைத்திருப்பவர்களை,

அவர்கள் வீட்டிற்கே சென்று, வேலைக்காரர்களை நிறுத்தி, தன்னை மாமியார் கொடுமைப் படுத்துவதாகவும், எப்பொழுது பார்த்தாலும் திட்டுவதாகவும் கூறி அழுவாள்.

அதுவும் சரிவரவில்லை என்றால்,

முத்துராக்கம்மாள், பிறரைப் பற்றிப் புறம் கூறுவதாகவும், மோசமான வார்த்தைகளில் விமர்சிப்பதாகவும் சம்மந்தப்பட்டவர்களிடமே கூறி,

எவரும் தன் மாமியாருக்கு ஆதரவாக இருக்கவிடாமல் பார்த்துக்கொண்டாள்.

சுப்பையாபிள்ளை, மீரஜா இருவரிடம் மட்டும் மாலினியின் சித்துவேலைகள் எடுபடவில்லை…

சுப்பையாபிள்ளை, மாலினியிடம், "முத்துராக்கு என் மனைவி… அவளப்பத்தி எனக்குத் தெரியாததா உனக்குத் தெரிஞ்சுடுச்சு?" என்று ஆரம்பத்திலேயே கண்டித்துப் பேசிவிட்டதால் அவரிடம் நெருங்கப் பயந்து விலகிவிட்டாள்.

மீரஜாவோ, முத்துராக்கம்மாள் பற்றி மாலினி அவதூறாகக் கூறி அழும்போது, அவளை அணைத்துச் சமாதானம் செய்தாலும், தனது அப்பத்தாவிடம் கோபப்படவுமில்லை… மாலினி எதிர்பார்த்ததுபோல், முத்துராக்கம்மாளை, மீரஜா வெறுக்கவும் இல்லை.

இதனால் மீரஜாமீது மாலினிக்கு இருந்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாக மாறியது…

தமது வீட்டிற்கு வெளியில் இருந்த மனிதர்களை, முத்துராக்கம்மாளுக்கு எதிராக மாற்ற முடிந்த மாலினிக்கு, சுப்பையா பிள்ளையையும், மீரஜாவையும் தனது நடிப்பால் அசைக்க முடியவில்லை.

அதன் விளைவு முத்துராக்கம்மாள் மீதே திரும்பியது.

காலையில் எழும் மாலினி, புருசனையும் மீரஜாவையும் ஸ்கூலுக்கு அனுப்புகிறேன் பேர்வழி என்று, காலை டிபனை அவர்கள் இருவருக்கு மட்டும் செய்து கொடுத்து விட்டு, பள்ளிக்குக் கிளம்புவதற்குத் தேவையானதை இருவருக்கும் எடுத்துக் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

காலையில் எழும் முத்துராக்கம்மாள் வீடு, வாசல்கூட்டி கோலம் போட்டு, இரவு புழங்கிய பாத்திரங்களைத் தேய்த்து, எல்லோருக்கும் பால், காபி கொடுத்து, மற்ற எல்லோருக்கும் டிபன் செய்து, எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறும் நேரத்திற்கு மாலினி வருவாள்…

சந்தோஷிக்கு சாப்பாடு கொடுத்து, தானும் சாப்பிட்டு முடித்துவிட்டு, தன்னுடையதும், சந்தோஷியுடைய துணிகளை மட்டும் துவைத்தாள்.

மாலினிக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடாதென்று செல்வராஜ் தனது துணிகளைத் தானே துவைத்துக் கொண்டான்.

நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சுப்பையாபிள்ளையும் தனது துணிகளையும், மீரஜாவின் துணிகளையும், முத்துராக்கம்மாள் தடுத்தும், தானே துவைத்துக்கொண்டார்...

முத்துராக்கம்மாள், மதிய சமையல் செய்து முடிக்கும்வரை காலையில் புழங்கிய பாத்திரங்களை மாலினி விளக்கிக்கொண்டே இருப்பாள்.

சாப்பிடு தயாரானதும், சந்தோஷிக்கு மதிய உணவு ஊட்டி, தானும் சாப்பிட்டுவிட்டு, மாலினி உறங்கிவிடுவாள்.

முத்துராக்கம்மாள், மதிய உணவு சமைத்து, சுப்பையாபிள்ளை, செல்வராஜ், மற்றும் மீரஜாவிற்கு டிபன் கேரியரில் கொடுத்தனுப்பி விட்டு, தானும் சாப்பிட்டு உறங்கினார்.

முத்துராக்கம்மாள், மாலையில் எழுந்து வாசல்கூட்டி அனைவருக்கும் பால், காபி கொடுக்கும்வரை, மாலினி, வீடுகூட்டி, சந்தோஷிக்கு பால் கொடுக்கும்போதே மீரஜா வந்துவிடுவாள்.

மீரஜாவைக் குளிக்கவைத்து பால் குடிக்க வைப்பதற்குள் அப்பத்தாவிற்குப் பாதி ஜீவன் முடிந்துவிடும்…

பிறகு வெளியே சென்று விளையாடப் போய்விட்டு மீரா வருவதற்குள் இரவு உணவு தயார் செய்துவிடுவார் முத்துராக்கம்மாள்.

மாலை மயங்கி இருள் சூழ ஆரம்பித்ததும், வேலை முடிந்து சுப்பையாபிள்ளையும், செல்வராஜும், விளையாடி முடிந்து மீரஜாவும் வீட்டிற்கு வந்துவிடுவர்.

இதற்குப் பிறகு மாலினியின் சித்து வேலை ஆரம்பிக்கும்… செல்வராஜிடம் மட்டுமல்ல மீரஜாவிடமுமே அப்பத்தா பற்றிப் புகார் பட்டியல் கண்ணீருடன் நீளும்.

செல்வராஜ், மீரஜா மனதில், அப்பத்தா கொடுமைக்காரியாகவும், மாலினி வாய் பேசாத அமைதியின் சொரூபம் என்றும் பதிய வைக்க எடுத்த முயற்சியில் பாதி வெற்றி கிடைத்தது…

செல்வராஜ் முழுவதும் மாலினியை நம்பினான்.

மீரஜா தன் அப்பத்தாவிடம் நேரில் சென்று நடந்த விபரம் கேட்க, தாத்தாவின் பொறுமை பறந்தது.

அடுத்தநாளே செல்வராஜை அழைத்து, "நீ நம்ம மாடிக்குத் தனிக்குடித்தனம் போய்விடு செல்வம்." என்றதும்,

இதுதான் தன் மனைவிக்கும் நல்லதென்று நினைத்த செல்வராஜ் முதல் தவறு செய்தான்… மாடிக்குத் தனிக்குடித்தனம் சென்றான்.

மாலினிக்கே நம்பமுடியவில்லை… தன் திட்டம் இவ்வளவு எளிதாகக் கைகூடும் என்று…

அப்பத்தாவிற்குதான் செல்வராஜ் தனிக்குடித்தனம் சென்றதில் மிகவும் வருத்தம். அதைத் தன் கணவரிம் தெரியப்படுத்த,

"முத்துரா… நான் என்னைக்காவது தப்பான முடிவெடுத்திருக்கேனா? இந்தச் சின்ன விலகல் நம்ம குடும்பத்துக்கு நல்லதுதான்…"

"எதுவா இருந்தாலும் தனியா போ ன்னு சொல்லிருக்க வேண்டாங்க…"

"சின்னப் பிரிவுதான் பல சமயங்களில், அன்புள்ளவங்களை மேலும் இணைக்கும்… அன்பற்றவர்களின் உண்மை முகத்தைக் காட்டிக்குடுக்கும்… ஒரு வருசம் பார்ப்போம்… மாற்றம் தெரிஞ்சா மறுபடியும் ஒன்னாயிக்கலாம்" என்று தாத்தா அவர்கள் அறையில் அப்பத்தாவிற்குச் சமாதானம் கூறும்போது,

மாடியில் தன் தாய்க்கு ஃபோன் செய்து, தனிக்குடித்தனம் வந்ததைப் பற்றி மாலினி கூற,

"இனிதான் மாலினி நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். உன் புருசன் மனசு எப்பவுமே மாறக்கூடாதுன்னா, ஒன்னுமில்லாத விசயத்த பெரிசாக்கி, உன் புருஷன் மேல, மாமியாவுக்கும் மாமனாருக்கும், பாசமே இல்லைனு உன் புருஷன நம்ப வச்சுடு."

"அத்தான் நான் சொல்றத அப்படியே நம்புறார்ம்மா… அவர மாறவிடாம பண்றது ஈசி… இந்தக் குட்டிப் பிசாசு மீரா, நான் என்ன சொன்னாலும் நம்பாத பார்வைதான் பார்க்குது… அப்படியே நம்பினாலும் உடனே அவங்கப்பத்தாகிட்ட நேர போயி கேட்டுடுது… அந்தப் பிசாசுனாலதான் மாமாவுக்கு என் மேல கோபம் வந்து, தனிக்குடித்தனம் போ ன்னு சொல்லிட்டார்." என்ற மாலினியிடம்,

"என்ன செய்ய? என் அப்பா...வி மக வயித்துல, அவ அப்பாத்தா மாதிரியே விஷம்ல வந்து பொறந்திருக்கு? ஒன்னு செய்… உன் மாமியா திட்டுறதா சொல்லி அழுவுறதோட விடாம, அந்தப்பிசாசை உன் மாமியாட்ட போயி சண்டை போடச் சொல்லிக்கொடு…"

"எப்படி?"

"நீ என்ன சொன்னாலும், அவ அப்பத்தாட்ட போயி குட்டிப்பிசாசு கேட்குதுல்ல? அதையே நீ யூஸ் பண்ணிக்க… ஃபோர்ஸான வார்த்தைகளை, குட்டிப்பிசாசுக்குச் சொல்லிக் கொடுத்து, அப்படியே போய் அவ அப்பத்தாட்ட கேட்கச் சொல்லு."

"அப்படிச் செஞ்சா?"

"நீ என்ன சொல்லிக் கொடுக்குறியோ… அத அப்படியே உன் மாமியாட்ட, அந்தக் குட்டிப்பிசாசு கேட்கும்போது, உன் மாமியாவுக்குக் குட்டிப்பிசாசு மேல கோபம் வந்து, அந்தக் குட்டிப்பிசாச திட்டிடுவாங்க இல்லையா?…"

"சூப்பர் ம்மா!"

"முழுசா கேளு… இந்த மாதிரி செஞ்சுக்கிட்டே இருந்தா… அவங்கப்பத்தா என்ன பேசினாலும் திட்டுவாங்கன்னு பயந்து இந்தக் குட்டிப்பிசாசு, அவங்கட்ட ஒட்டாது. உன் மாமியாவும், கோபத்துல குட்டிப்பிசாசுட்டயிருந்து விலகிடுவாங்க… என்ன நான் சொல்றது புரியுதா? மொதல்ல அது ரெண்டையும் பிரி…" என்று மனோகரி சொன்ன வேளையில்,

பப்ளிக் பூத்திற்கு வெளியே "ஹேஏஏஏய்!" என்ற உக்கிர குரல் கேட்க, மிரண்டு நிமிர்ந்துபார்த்தால், அங்கே ஏதோ ஒரு பைக், தடம் மாறி, தறிகெட்டு, மனோகரியை நோக்கி வந்தது.

பயந்து ரீசீவரைப் போட்டுவிட்டு மனோகரி நகர,

மனோகரியை நோக்கிச் சீறிவந்த பைக் சுவரில் மோதி, மோதிய வேகத்தில் மனோகரியின் மீதே விழுந்தது.

பைக் ஓட்டிவந்தவனுக்கோ, எந்த அடியும் இல்லை. சின்னச் சிராய்ப்புகூட இல்லை…

ஆனால், மனோகரிக்கு கால் பிசகி சுளுக்குப் பிடித்துவிட்டது…
எழுந்து நிற்கக்கூட முடியாமல் மனோகரி வலியில் துடிக்க, வேடிக்கை பார்த்த வாலிபன் ஒருவன் வேகமாக மனோகரி வீட்டிற்குச் சென்று, மனோகரியின் மகன்களை அழைத்து வந்தான்…

மனோகரியை வீட்டிற்குத் தூக்கிவந்து விட்டதும், பப்ளிக் பூத் அருகே அயர்ன்வண்டி வைத்திருப்பவர், பெரிய மகன் கதிரேந்திரனிடம்,

"தம்பி! உங்கம்மா ஃபோன் பண்ண வரும் போதெல்லாம் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துடுது… இது ரெண்டாவது தடவ… மயிரிழையில் உயிர் தப்பிச்சு வர்றாங்க… இனி உங்கம்மா ஃபோன் பண்ணப் போகும்போது உங்கள்ல யாராவது துணைக்குப் போங்க…" என்று கூறிவிட்டுப் போனார்.

"இப்ப யாருக்கு ஃபோன் பண்ணப் போனீங்கம்மா?" என்று பெரிய மகன் கேட்க,

"வேற யாருக்கு? உன் அக்காவுக்குத்தான்… " என்றார் சுப்பிரமணியம், மனோகரியைக் கோபமாகப் பார்த்தவாறு.

பிறகு மனோகரியிடம், "நான் சொன்னா உன் காதுல ஏறாது… அயர்ன் வண்டிக்காரர் சொன்னதாவது காதுல விழுந்துச்சா?... அந்தக் குடும்பத்துல குழப்பம் பண்றத இதோட விடு…"

"நான் நல்லதுதான் செய்றேன்..."

"யாருக்கு?"

"உங்க மகளுக்குத்தான்."

" நீ வாய வச்சுக்கிட்டுச் சும்மா இருந்தாலே மாலினி, அவ குடும்பத்தை நல்லா பார்த்துப்பா... நீ இடைல புகாத… நாம செய்றது நமக்குத்தான் வரும்."

"ஆமா ஆமா... பெருசா பேச வந்துட்டாரு."

"இங்க பாரு… அன்னைக்கும் இப்படிதான் பெரியவன் வீட்டுக்கு வரும்போது, படுக்கையில மூச்சுமுட்டி மயங்கிக்கிடந்திருக்க… மயக்கந்தெளிஞ்சு எந்திரிச்சுட்டு, பேய் பிசாசுன்னு உளறியிருக்க."

"அந்தச் சினிமாக்கு போய் விழுந்தத சொல்றீங்களா? அதுதான் கனவுன்னு சொன்னேனே"

"கனவோ எதுவோ நம்மள மீறுன ஏதோ ஒரு சக்தி உன்னை எச்சரிக்கை பண்ணுது. இப்பவே தப்பு பண்றத விடு. இல்ல ரொம்பக் கஷ்டப்படுவ சொல்லிட்டேன்…" என்று எச்சரித்து விட்டு, பெரிய மகனிடம் திரும்பிய சுப்பிரமணியம்,

"அம்மாவ ஆஸ்பத்திரியில காட்டிடு… நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்." என்று கூறிவிட்டுச் சென்றார்.

கால் சரியான பிறகு, 'சுப்பிரமணியம் சொன்னமாதிரி மாலினிக்கு அட்வைஸ் பண்ணும் போதுதான் பிரச்சன வருதோ?' என்று நினைத்த மனோகரி,

அருகில் இருக்கும் மசூதிக்குச் சென்று விபரங்கள் கூறி மந்திரிக்கச் சென்றார்.

விபரங்களைக்கேட்ட பாபா, "உங்க மகளுக்கு ஒரு பொண்ணு இருக்கா?" என்று கேட்க,

'ஐய!! இவர் தப்பா சொல்றாரே? இவரு மந்திரிச்சு எனக்குச் சரியாகவா!!' என்று நினைத்தபடி,

"என் மகளுக்கு ரெண்டு பொம்பளப்பிள்ளைங்க இருக்காங்க பாபா" என்றார்.

சிறிது நேரம், கண்மூடி பாபா யோசிக்க,

'ம்ஹுககும்! தப்பா சொல்லிட்டதால சீன் போடுறாரோ?' என்று மனோகரி நினைக்கும்போதே,

"அதுல ஒரு பொண்ண உங்களுக்குப் பிடிக்கல. சரியா?" என்று பாபா கேட்டார்.

'குத்துமதிப்பா அள்ளிவிடுறார்… ம்ம்ம எதுவர போகுதுன்னு பார்த்துடுவோம்.' என்று நினைத்த மனோகரி,
"அது பிள்ளையே கிடையாது… பிசாசு!" என்றார்.

மனோகரியைக் கூர்ந்து பார்த்த பாபா,

"அந்தக்குழந்தைட்ட, உங்கனால உண்மையான அன்பு காட்ட முடிஞ்சா சந்தோஷம்… அப்படியில்லாத பட்சத்துல அந்தக் குழந்தைட்டருந்து எல்லாவகையிலும் தள்ளியிருங்க… இல்லைனா உங்க உயிருக்குதான் ஆபத்து… நான் சொல்றது புரியுதா?" என்ற பாபாவிடம்,

"சரிங்க!" என்று தலையாட்டிவிட்டு,

'இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, பரிகாரம் அது இதுன்னு காச புடுங்கிடுவார் போலயே…' என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தார் மனோகரி.

மனோகரியை, ஒர் அமானுஷ்ய உருவம் பின்தொடர்வது, பாபா கண்களுக்குத் தெரிந்தது...

வார்த்தைகளின் எண்ணிக்கை -1556
கண்ணன் வருவான்!

🎼🎼🎼🎼🎼🎼


 

Shailaputri R

Well-known member
இந்த மனோகரிய சொல்லி குத்தம் இல்ல மாலினிய சொல்லணும்.. கொஞ்சம் கூட சுயபுத்தி கிடையாது.. அந்த மனோகரிய கண்ணன் போட போறான் அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம மாலினி முழிக்க போறா எல்லாம் வெளிய வர போகுது.. அப்போ தெரியும் புருஷன் நம்மள நம்புனதுக்கு தாயையும் புள்ளையையும் பிரிச்சி வச்சதும் இல்லாம நம்ம ஆத்தா நம்ம புள்ளையையும் பிரிக்க பார்த்துருக்குன்னு
 

aas2022-writer

Well-known member
இந்த மனோகரிய சொல்லி குத்தம் இல்ல மாலினிய சொல்லணும்.. கொஞ்சம் கூட சுயபுத்தி கிடையாது.. அந்த மனோகரிய கண்ணன் போட போறான் அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம மாலினி முழிக்க போறா எல்லாம் வெளிய வர போகுது.. அப்போ தெரியும் புருஷன் நம்மள நம்புனதுக்கு தாயையும் புள்ளையையும் பிரிச்சி வச்சதும் இல்லாம நம்ம ஆத்தா நம்ம புள்ளையையும் பிரிக்க பார்த்துருக்குன்னு
உண்மைதான் சகோதரி, யாராக இருந்தாலும் நம் குடும்ப விசயத்திற்குள் விடக்கூடாது என்று பல மனைவிகளுக்கும், கணவர்களுக்கும் புரிவதில்லை.
 

Sspriya

Well-known member
மனோகரிக்கு இன்னுமா அவங்க செய்றது தப்புனு புரியல... ஒருத்தரோட வாழ்க்கையில் விளையாடுறது லாம் ரொம்ப பெரிய தப்பு 🙄🙄... ஒரு குடும்பத்தையே இப்படி கெடுக்குறாங்க... இந்த மாலினிக்கு சுய புத்தியே இல்லை 😡😡😡
 

aas2022-writer

Well-known member
மனோகரிக்கு இன்னுமா அவங்க செய்றது தப்புனு புரியல... ஒருத்தரோட வாழ்க்கையில் விளையாடுறது லாம் ரொம்ப பெரிய தப்பு 🙄🙄... ஒரு குடும்பத்தையே இப்படி கெடுக்குறாங்க... இந்த மாலினிக்கு சுய புத்தியே இல்லை 😡😡😡
ஆமால்ல? மாலினி யோசிக்க மாட்றா சிஸ்
 
Top