கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-15

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-15

காலக்கணித சித்தரின் குடிலைச் சுற்றியிருந்த பிருந்தாவனத்தில் உறங்கிக்கொண்டிருந்த தாத்தாவை, சீடன் ஒருவன் எழுப்பினான்.

"ஐயா! ஸ்வாமி வந்துட்டார். உங்களை அழைச்சுட்டு வரச்சொன்னார்." என்றான்.

"இதோ! வந்துட்டேன்." என்று தாத்தா எழுந்ததும், சீடன் குடிலை நோக்கிச் சென்றுவிட்டான்.

வேகமாக முகத்தைக் கழுவிவிட்டு சித்தரின் முன் அமர்ந்த தாத்தா,

"மன்னிச்சிடுங்க… முன்னாடியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்காம வந்துட்டேன்." என்றார்.

அதற்குச் சித்தர், "பரவாயில்ல… சொல்லுங்க…" என்றதும்,

பேக் கிலிருந்து மீரஜாவின் ஜாதகத்தை எடுத்துக் காலக்கணித சித்தர் முன் வைத்த தாத்தா,

"இது…" என்று ஆரம்பிக்கும்போதே,

"உங்க அருமை பேத்தியின் ஜாதகம்…" என்றார் சித்தர்.

"ஆமா…" என்று ஆமோதித்து, தாத்தா கொடுத்த மீரஜாவின் ஜாதகத்தை எடுத்துப் பிரித்தார் காலக்கணித சித்தர்.

"சாதாரண பலன் பார்க்க இவ்வளவு அவசரமா வந்திருக்க மாட்டீங்க." என்று கூறியபடியே,

சிறிதுநேரம் மீரஜாவின் ஜாதகத்தைப் பார்த்த சித்தர், தனது சீடனை அழைத்து, ஓலைச்சுவடியின் நம்பர் சொல்லி எடுத்துவரச் சொன்னார்.

சீடன், சித்தர் சொன்ன ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து கொடுத்தான்.

ஓலைச்சுவடியை ஊன்றிக் கவனித்த சித்தர், "உங்க பேத்திகூட பழகுற குழந்தைகளப் பத்தி தெரிஞ்சுக்க வந்திருக்கீங்க… சரியா?"

"ஆமா!" என்றார் தாத்தா.

"உங்க பேத்திகூட சில அமானுஷ்ய தேவதைகள் பழகும்… அதாவது தெய்வமும் உங்க பேத்திகூட இருக்கும், ஆத்மாவும் உங்க பேத்தி கூட இருக்கும்… இந்த இரண்டையுமே ஈர்க்கக்கூடிய ஆத்மசக்தி, உங்க பேத்திக்குப் பிறவிலயே இருக்கு…"

"என்ன இப்படி சொல்றீங்க? இது ஆபத்தில்லையா?"

"மனித சகவாசத்தவிடவா இவையெல்லாம் ஆபத்த கொண்டு வந்துடப்போகுது? ஹாஹ்ஹஹா…"

"..."

"நான் விளையாட்டுக்குச் சொல்லல… உங்க பேத்தியின் சுபாவமே, அவளை நம்பினவங்களுக்கு, உண்மையா இருப்பா… அதையே பிறர்ட்டயும் எதிர்பார்ப்பா… எல்லார்மீதும் அன்பு வச்சிருப்பா… உண்மையான அன்ப மட்டும் தான் எல்லோரிடமும் எதிர்பார்ப்பா… பிரதிபலன எதிர்பாக்காம பிறருக்கு உதவுவா… இந்தக் குணமெல்லாம் இருக்கிற மனிதர்கள் இந்தக் காலத்துல ரொம்ப குறைவு, இப்ப சொல்லுங்க… இவளுக்கு மனிதர்களோட சகவாசம் ஒத்துவருமா?"

"அப்படினா மனிதர்களோட எம் பேத்தி ஒத்துப்போகமாட்டாளா?" என்று கவலையுடன் கேட்டத் தாத்தாவை நோக்கி இதமான புன்னகை சிந்திய சித்தர்,

"அவ ஒத்துப் போகமாட்டான்னு எப்ப சொன்னேன்…? ஆனா, அவ காட்டும் அன்பை, அவளை அடிமைப்படுத்தத்தான், மத்தவங்க உபயோகப்படுத்துவாங்க…"

"யாரு?"

"அவளோட நெருங்கிப் பழகுறவங்ககிட்டதானே அன்பு வச்சிருப்பா?"

"புரியுது!"

"சுருக்கமா சொன்னா, நெருங்கிய உறவுகளே அவளுக்கு உண்மையா இருக்க மாட்டாங்க… அதனால ஒவ்வொரு உறவுட்டயிருந்தும் மனசளவுல அவ பிரிய நேரும்… அல்லது சில உறவுகள் அவளுக்கு இருக்காது… உதாரணத்துக்கு அவளுக்குத் தம்பி இல்லை... இல்லயா?"

"ஆமா!"

"இந்நேரம், அவளுக்குத் தம்பியா, அவ விரும்புற மாதிரி விளையாட, ஒரு சிறுவன் வந்திருக்கணுமே?"

"ஆமா! ஆமா!... ஆனா"

"ஆனா?"

"ரெண்டு பசங்க அவளோட விளையாடுறாங்க… ஒரு வருசத்துக்கு முந்தியே, தாமரக்குளத்துல, ஒரு பையன் மீராவோட விளையாட வருவான். ஆனா அப்ப அவளுக்குத் தம்பிங்கிற உறவைப் பத்தியே தெரியாதே?" என்று தாத்தா கேட்டதும்,

மீண்டும் சுவடியைப் பார்த்தவர்,
"உங்க பேத்திக்குப் பேர் வச்சது யாரு?"

"புரோகிதர்!"

"அவர் சொன்ன பேரத்தான், கொஞ்சம்கூட மாத்தாம, உங்க பேத்திக்கு வச்சீங்களா?"

"ஆமா… ஏன் அதுல ஏதாவது பிரச்சனையா?" என்றதும் தாத்தாவைக் கூர்ந்து பார்த்த சித்தர்,

மீண்டும் சுவடியைப் பார்த்தார். "அந்தப் புரோகிதர உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?"

"இல்ல"

"பிறகு எப்படி நீங்க அவரச் சந்திச்சீங்க?"

"புண்ணியானம் பண்றதுக்காக, புரோகிதர பார்க்கப் போனப்போ, அவராக வந்து எங்கிட்ட பேசினார்."

சிறிது நேரம் கண் மூடி இருந்த சித்தர், மீண்டும் ஓலைச்சுவடியைப் பார்த்துவிட்டு,

"அவர் வெறும் புரோகிதம் மட்டும் தெரிஞ்சவரா இருக்க வாய்ப்பில்ல… நம்மள மிஞ்சின ஒரு சக்தியாலதான் அனுப்பப்பட்டிருக்கார்…"

"எதுக்கு? அதுதான் தப்பாயிடுச்சா?"

"நான் தப்புன்னு சொல்லலையே…? ஆனா மனுச சக்திய மீறிய சக்திதான், உங்க பேத்தி பிறப்பிலிருந்தே சம்மந்தப் பட்டிருக்கு."

"ஏதாவது போன ஜென்மம்… அது இதுன்னு ஏதாவதா?" என்ற தாத்தாவை மீண்டும் கூர்ந்து சித்தர்,

"உங்கள் பேத்தியின் வாழ்க்கையே அமானுஷ்யம் நிரஞ்சதாத்தான் இருக்கும்… அவளுக்குப் பெயர் வச்ச புரோகிதரக் கூட, அதுக்கப்புறம் நீங்க பார்த்திருக்க மாட்டீங்களே?"

"ஆமா!"

"இனியும் பார்க்க முடியாது. ஆனா உங்க பேத்தி, ஒருநாள் அவர சந்திப்பா. அன்னையிலிருந்து அவ வாழ்க்கை வேறு திசைக்குப் பயணமாகும்.”

“பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்குமான்னு வந்தேன்... மேலும் கவலைப்பட வைக்கிறீங்களே!”

“நாந்தான் முதல்லயே சொல்லிட்டேனே உங்க பேத்தி வாழ்க்கையே அமானுஷ்யம் நிரஞ்சதுன்னு.”

“பிள்ளை கஷ்டப்படுவாளா?”

“நடக்கிற நிகழ்வுகள, அவ எடுத்துக்கிற விதத்தப் பொருத்தது… நீங்க வழிகாட்டுங்க… இன்னும் சரியா சொல்லப்போனா உங்க கூட இருக்கும் காலம்வரை சந்தோசமா இருப்பா...”

“எனக்கு அப்புறம்?”

“சரியான வழிகாட்டுதல் இல்லாம, சரியான விஷயங்கள, அவ தப்பா புரிஞ்சுக்க வாய்ப்பிருக்கு.”

“ஓ… அவ கல்யாண வாழ்க்கை எப்படியிருக்கும்?”

“உங்க பேத்திக்கு, கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கும் முன்னாடி இங்க வாங்க. சொல்றேன்.”

அதுவர நான் இருப்பேனா?

“நிச்சயமா”

“உஷ்… சரி… இதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கா?”

“அவளுக்கு இருக்கும் ஈர்ப்பு சக்திய வரம்னு நினைச்சா, அது வரம் தானே, பிறகு எதுக்கு தப்பிக்கனும்?”

“ஆமானுஷ்யங்களோட பழகுறது எப்படி வரமாகும்?”

“இதுவரை தவறா ஏதாவது நடந்திருக்கா?”

“இல்ல”

“பின்ன என்ன?”

“அப்டீனா, சதாரண மனுஷி வாழ்க்கைய எம் பேத்தியால வாழ முடியாதா?”

“மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வர்றீங்க. இப்ப சாதாரண குழந்தை மாதிரி தானே இருக்கா?”

"அவ யார் கூடப் பழகுறான்னு அவளுக்கு இப்ப புரியல… அதனால பிரச்சனை இல்ல… ஆனா புரியுற வயசு வரும்போது பயந்துட மாட்டாளா?“

“இப்பவே பயப்படலயே?”

“இப்பா அவ குழந்தை... இல்லையா?”

“அவ விரும்பினாத்தானே யாருமே, எந்த சக்தியா இருந்தாலுமே, அவகிட்ட நெருங்க முடியும்?… தான் விரும்புறவங்களப் பார்த்து எப்படி பயப்படுவா?”

“இதைத் தடுக்க வழியில்லயா?”

“இருக்கு… அதுவும் உங்க பேத்தி கையில தான் இருக்கு… அவட்ட இருந்து உடல் அளவிலோ, மனசளவிலோ பிரியுற மனிதர்களுக்குப் பதிலாதான், அமானுஷ்ய உறவுகளை அவளே ஏத்துக்கிடுவா… இதைத் தடுக்கனும்னா, உங்க பேத்தி மனித உறவுகளைத்தவிர மற்றவர்களை உறவாக நினைக்கக் கூடாது. ”

“அப்படி இருந்துட்டா?”

“நீங்க சொல்ற பிரச்சனை, கொஞ்சம் தூரமா இருக்கும். ஆனா உங்க காலத்துக்குப் பிறகு அதுக்கு சாத்தியமே இல்ல… ஏன்னா? அவளோட அழகும், திறமையுமே அவளுக்கு எதிரியைச் சம்பாரிச்சுக் கொடுக்கும். உங்களுக்குப் பிறகு அவ அன்புக்கு ஏங்குவா… இப்பவேகூட உங்களையும், உங்க மனைவியையும் தவிர அவ மேல அன்பா இருக்குற நெருக்கமான உறவுகள், குறைவாத்தானே இருக்கும்?” என்றதும்,

தாத்தாவிற்கு, மாலினியும், அவளுடைய அம்மாவும் கண்களுக்குள் தெரிய,

“ஆமா” என்ற தாத்தாவின் கண்களில் வலி மிகுந்திருந்தது.

“கவலைப்படாதீங்க… நிதர்சனத்த சொல்லவேண்டியது என் கடமை… மறுபடியும் சொல்றேன். உங்க கூட இருக்குற வரை அவளுக்கு யாரும், தேவைப்படாது…"

"அப்டீனா?"


"நீங்களும், உங்க மனைவியுமே, இப்ப அவளுக்கு எல்லாமா இருக்கிறீங்க… இப்ப உங்க பேத்தியோட பழகுற சிறுவர்கள்ல, ஒருத்தன் அவளுக்கு நண்பனா பழகுறான், அவனோட நட்பை, உங்க பேத்தி விரும்பாம இருக்க வழியில்லை… இன்னொருத்தன் அவளுக்குத் தம்பி. நீங்க மனசு வச்சா, அவளுக்குத் தம்பி தேவைப்படாது.”

“அதுக்கு என்ன செய்யனும்?”

“முதல்ல அவ தம்பியா யார மனசுல நினைக்கிறான்னு கேளுக்க… நிச்சயமா மனுசனச் சொல்ல மாட்டா...”

“அப்படின்னா, அவதான் அமானுஷ்யங்களை உறவா தேர்ந்தடுப்பாளா?”

“ஆமா… அதைத்தானே சொல்றேன்... ஆனா இப்ப பழகுற நண்பனையும், இன்னொருவரையும் மட்டும் அவளாகத் தேர்ந்தெடுக்கல…”

"அது யாரு நண்பன்?"

"அனேகமா தாமரக்குளத்துல சந்திச்சவனா இருக்கலாம்‌"

"அந்த இன்னொருவர் யாரு?"

"காலந்தான் பதில் சொல்லனும்."

"அவ ஜாதகத்துல இது சம்மந்தமா எதுவும் இல்லையா?"

"சுவடிலயே இல்ல."

"இவங்கல்லாம் யாரு? ஆத்மாவா?"

"ஆத்மா வான்னா? பேய், பிசாசான்னு கேட்கிறீங்களா?"

"ம்ம்… நல்லவங்களா?… கெட்டசக்தியா?"

"இதுக்கும் என்கிட்ட பதில் இல்லை… ஆனா, எதுவா இருந்தாலும், நீங்க அவ மேல வச்சிருக்கும் பிரியமே அவளக் காப்பாத்தும்… உங்க பேத்தி பாசத்துக்கு ஏங்கும் நிலை வராதவரை பிரச்சனை இல்லை."

"ஏதாவது அவசரம்ன்னா உங்களுக்குக் கால் பண்ணலாமா?"

"தாராளமா? என் சீடர் யாராவது எடுப்பாங்க… நீங்க விபரம் சொல்லுங்க." என்று கூறவும் நன்றிகூறி திரும்பினார்.

சுப்பையாபிள்ளை சென்றதும்,

மீரஜாவிற்காக எடுத்துவந்த ஓலைச்சுவடியை, முதன்மை சீடனிடம் கொடுத்து, அதற்கான இடத்தில் வைக்கச் சொன்னார் காலகணித சித்தர்.

மீரஜாவிற்காக எடுத்து வந்த ஓலைச்சுவடி, சித்தர் படித்த பக்கத்திலேயே திருப்பி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த சீடன், சுவடியைச் சரியான முறையில் அடுக்கிக் கட்டிவைக்க முயன்றான்.

அப்போது அவன் கண்களில், மீரஜாவின் வாழ்க்கையில் ஏற்படும் அமானுஷ்ய விசயங்கள்பற்றி, அந்த ஓலைச்சுவடியில் தெளிவாக எழுதியிருந்ததைப் பார்த்தான்.

'இதில் இருப்பதை ஸ்வாமி ஏன் அந்தப் பெரியவரிடம் கூறவில்லை?' என்று எண்ணியபடி சித்தரைப் பார்க்க,

அவரோ மிகவும் பணிவாக, கண்ணுக்குப் புலப்படாத யாரிடமோ, குறைந்த தொனியில் பேசிக்கொண்டிருந்தார்.

‘என்னாச்சு இவருக்கு? தனியாக, அதுவும் மிகவும் பணிந்து, யாரிடம் பேசுறார்?’ என்று தன் கண்களை, நன்றாகக் கசக்கிவிட்டுப் பார்த்தும், சித்தர் யாரிடம் பேசுகிறார் என்று தெரியவில்லை...

...ஏற்கனவே பயந்திருக்கும் தன் மனைவியிடம், 'இதெல்லாம் எப்படிச் சொல்வது?' என்று யோசித்தபடியே வீடுவந்து சேர்ந்தார் சுப்பையாபிள்ளை.
விசாரித்த அப்பத்தாவிடம், “சித்தரப் பார்க்க முடியல… சீடர்கிட்ட ஜாதகத்தைக் கொடுத்தேன். ஜாதகத்தில் ஒன்னும் பிரச்சனையில்லன்னு சொல்லிட்டார்." என்று உண்மையை மறைத்தார்.

அடுத்தநாள் காலை அப்பத்தா கோயிலுக்குச் சென்றதும், மீரஜாவைத் தனது அறைக்கு அழைத்து,

“மீராக்குட்டி! நயினார்கோயில்ல உன் கூட விளையாண்ட பையன் யாரு?” என்று கேட்டார்.

“நைனா கோயிலா? அது எங்கிருக்கு தாத்தா?”

“சந்தோசிக்கும், தம்பிக்கும் மொட்டை எடுக்கப் போனீங்களே?”

“ஓஓ… அவனா? அவன் தம்பி!”

“யாருக்குத் தம்பி?”

“வேற யாருக்கு? எனக்குத்தான்… ஹிஹி”

“உனக்குத்தான் ஏற்கனவே ஒரு தம்பி இருக்கானே? இவன் யாரு புதுத் தம்பி?”

“எனக்குப் பாப்பா தான இருக்கு… தம்பி இல்லையே?” என்ற மீரஜாவின் கண்களில் தெரிந்த ஏக்கம் தாத்தாவைக் கலக்கமுறச்செய்தது.

“நம்ம சித்தப்பா தனராஜனோட மகன் சித்தார்த் உன் தம்பிதானே”

“அச்சோ தாத்தா… அவன் என் தம்பி இல்லையாம்... சித்தப்பாவோட தம்பியாம்.”

“என் செல்லக்குட்டிக்கு யாரு இப்படி சொன்னா? சித்தப்பாவோட தம்பி, உனக்கும் தம்பிதான் டா...”

“நானும் அப்டிதான் தாத்தா சொன்னேன்… ஆனா சித்திதான் எனக்குத் தங்கச்சிப் பாப்பாதான் பிறக்கும்… தம்பி பிறக்கமாட்டான்னு சொன்னாங்க.”

“சித்தியா?... பவானியா இப்படி சொன்னது?”

“ஆமா” என்று மீரஜா சோகமாக முகத்தை வைத்துக் கொள்ள,

'இது என்ன புதுக்குழப்பம்?' என்று நினைத்தவர், மீரஜாவின் மனதை மாற்ற எண்ணி,

“நான் சொன்னா மீராக்குட்டி கேட்பாள்ல?” என்று கேட்டார்.

“ஆமா! ஆமா!” என்று வேகமாகத் தலையாட்டிய விதத்தில், மீராஜாவின் மேலுள்ள ஆசை அதிகரிக்க, அவளைத் தூக்கித் தன் மடிமேல் இருத்திக் கொண்டவர்,

“சித்தார்த் தான் மீராக்குட்டிக்குத் தம்பி! சரியா?” என்று தாத்தா கூறியதும், புருவங்களைச் சுருக்கித் தன் தாத்தாவைப் பார்த்தவள்,

“சித்தார்த் என் தம்பி இல்ல தாத்தா.”

“பவானிய கூப்பிட்டுச் சொல்லச்சொல்லவா?”

“வேணாம்… எனக்கே சித்தார்த்தப் பார்க்கும்போது தம்பி மாதிரித் தெரில தாத்தா.”

‘சிறுகுழந்தையிடம் சொல்லப்படுற வார்த்தைகள் பசுமரத்தாணி போல அவங்க மனசுல பதிஞ்சுடும்னு சும்மாவா சொன்னாங்க?’ என்று வேதனையோடு நினைத்தவரின் முகம் சுணங்கியது.

அதைக்கண்டு பொறுக்க இயலாத மீரஜா, “நீங்க கவலப்படாதீங்க தாத்தா… எனக்குத்தான் தம்பி இருக்கானே!!” என்று கூறியதும்தான்,

‘ஆகா! எத கேட்க வந்தேனோ அத மறந்துட்டேனே’ என்று நினைத்தவர்,

“மீராக்குட்டியோட தம்பி யாரு? நான் பார்க்கனுமே!” என்று மீண்டும் புன்னகையுடன் தாத்தா கேட்டதும், மீரஜாவும் சந்தோசமாக,

“முருகன் தான் என் தம்பி! தாத்தா.” என்றதும்,

'ஓகோ! அந்தச் சிறுவன் பேர் முருகனா?' என்று நினைத்தவர்,

“முருகனா? யாரு அது?”

“ஊர் கிணத்துல பொம்மய போட்டு எடுத்தானே? அவன் தான்.”

“அவன் எப்படி என் செல்லத்துக்குத் தம்பி ஆவான்? அவங்க அம்மா அப்பா திட்டமாட்டாங்களா?”

“நாந்தான் முருகன்ட்ட என் தம்பியா இருக்கியான்னு கேட்டேன்.”

“உன் தம்பி உன்னோட தானடா இருப்பான்? எங்கயோ தூரத்துல இருக்குற வேற யாரோவையெல்லாம் நம்ம தம்பின்னு நினைக்கிறது சரியா?”

“ம்ம்… தூரத்துல இல்ல… நான் கூப்பிட்டா வந்துடுவான்.”

“எப்படிடா வருவான்?”

"இப்ப நான் கூப்பிடவா?" என்று ஆர்வமாகக் கேட்ட மீரஜாவிடம்,

"அவனோட ஃபோன் நம்பர வாங்கிட்டு வந்துடியா?" என்று கேட்டார்.

"ஃபோனா?... அதெல்லாம் வேணாம்… சும்மா கூப்டுறேன்."

"சரி கூப்பிடு பார்ப்போம்." என்றதும் வேகமாகப் பூஜையறைக்குச் சென்றவள், தமிழ்க்கடவுள் அருள்மிகு முருகப் பெருமானுடைய ஃபோட்டோ முன் நின்று,

"தம்பி! வா வ்ளாடலாம்!" என்று அழைத்ததைக் கண்டவருக்குக் கண்கள் இருட்டி, சட்டென்று உடல் எடைக் கூடி கால்கள் பலமிழக்க, தடுமாறியவர் பூஜையறைக் கதவைப் பிடித்தபடி, மீரஜாவையும், புகைப்படத்திலிருக்கும் அருள்மிகு முருகப்பெருமானையும் மாறி மாறிப் பார்த்தார்.

மீரஜாவோ எதிரில் நிற்கும் ஒருவருடன் பேசுவதுபோல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

அதேபோன்று, முருகனும், சம்மதம் என்று சிரிப்பதைப் போல் அவருக்கே தோன்றவும், அதிர்ச்சியில், வயிறு காலியாகி ஒட்டுமொத்தக் காற்றும் நெஞ்சை அடைக்க, நெஞ்சைப் பிடித்தார்…

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1272
கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
யக்கா புல்லரிக்குது அக்கா.. ஏன் இப்படி.. நான் கண்ணா தான நினச்சேன்.. ஆனா தம்பின்னு முருக வந்துருக்காரு.. ஆனா தாத்தா ஒரு விஷயத்த மறந்துட்டாரு.. அன்ப கொடுத்து அன்ப வாங்க நல்லென்னம் கொண்டவர்களாக தான் முடியும்.. அப்படின்னா மீராவ சுத்தி இருக்க ஆத்மாக்கள் நல்லாத்மாக்களே
 

Sspriya

Well-known member
முருகா முருகா wooww 💞💞💞முருகன் தான் மீரா குட்டி தம்பியா 😍😍😍சூப்பர்.... தாத்தா பாட்டி ரெண்டு பேரும் எப்பவும் அவ கூடவே இருக்கனும் முருகா 🙏🙏🙏... சித்தர் வேற ரொம்பவே பயமுறுதிட்டார் 🙄🙄
 

Sspriya

Well-known member
Todays punch 💞💞

ஜாதகம் பார்க்க போன இடத்தில் சித்தர் தாத்தாக்கு கொடுத்த ஷாக் ல பயந்து போய் வந்தாரு ஊருக்கு


பேத்திகிட்ட அவளோட நண்பர்கள் பத்தி கேக்க போனா அவ சித்தர் சொன்னதை விட பெரிய ஷாக் கொடுத்துட்டா தாத்தாக்கு 🙄🙄
 

Aathisakthi

Well-known member
அடடா....அழகுடா செல்லம்...அந்த முருகனையே கூப்பிட்ட குரலுக்கு வரவைச்சிட்ட இல்ல🤗🤗🤗🤗🤗
 
Top