கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-16

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-16


அருள்மிகு முருகப் பெருமானிடம் தனது தம்பியுடன் பேசுவதுபோல் பேசிய மீரஜாவையும், அதற்குப் புன்னகையையே பதிலாகத் தந்த முருகப்பெருமானையும் பார்த்த அதிர்ச்சியில் தாத்தா தன் நெஞ்சைப் பிடிக்க,

விரைந்து சென்று, அவரை அருகிலிருந்த ஷோபாவில் அமரவைத்து, அவரது நெஞ்சைத் தடவிக் கொடுத்த அப்பத்தாவைப் பார்த்துத் தாத்தா, திடுக்கிட…

"போதும்… என்னையப் பார்த்துவேற அதிர்ச்சி அடைய வேணாம்… முதல்ல உங்களுக்கு மூச்சு சீராகட்டும்." என்ற அப்பத்தாவிடம்,

"நீ எப்ப வந்த?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

"கோயிலுக்குப் போகும்போது சூடம் வச்சிருக்கிற டப்பாவ மறந்துட்டுப் போயிட்டேன்… அது எடுக்க வரும்போது, நீங்க மீராக்குட்டிய அறைக்குள்ள கூட்டிட்டுப் போறத பார்த்தேன்." என்றதும்,

தனக்கும் மீரஜாவிற்கும் இடையே நடந்த உரையாடல்களைத் தனது மனைவி கேட்டுவிட்டதை உணர்ந்த தாத்தா,

"அதுவந்து முத்துரா… சித்தர நான் பார்த்துட்டேன்…"

"அது எனக்கு நேத்தே தெரியுங்க… இத்தனை வருசமா உங்ககூட இருக்கேன். உங்க முகத்தப் பாத்தே, உங்க மனசுல இருக்கிறத கண்டு பிடிச்சுட மாட்டனா?... எதுவா இருந்தாலும் நீங்களா சொல்லட்டும்னு இருந்தேன்." என்றதும்,

சித்தர் கூறிய அனைத்தையும் கூறி முடித்த தாத்தா, தீவிரமான பாவானையில்,

"சித்தர் சொன்ன மாதிரியே, நம்ம மீராக்குட்டி, கடவுளைத் தம்பின்றாளே? யார பார்த்து இந்தமாதிரி பேசக் கத்துட்டிருப்பா?" என்று கேட்டார்.

"அது தெரியலைங்க… ஆனா அவள, நாம நினைச்சா மாத்திடமுடியும்னு சித்தர் சொன்னாரே! அது போதாதா நமக்கு?"

"நமக்குப் பின்னாடி குழந்தை கஷ்டப்பட்டுடக் கூடாது முத்துரா."

"அவளுக்குக் கல்யாணம் ஆகிறவரைக்காவது நாம இருப்போம்ல? பிறகென்னங்க? அதுக்கு இன்னும் காலம் இருக்கு... அதுக்குள்ள நம்ம மீராக்குட்டிய முழுசா மாத்திடலாம்…"

"முதல்ல தம்பின்னு முருகனச் சொல்றத நிறுத்தவைக்கனும் முத்துரா… யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இந்த மனுசங்க இருக்காங்களே, அவங்க உணராத ஒரு விசயத்த, வேற யாராவது உணர்ந்துட்டாலே, ஒன்னு, உணர்ந்தவங்க பொய் சொல்றாங்கன்னு சொல்வாங்க… இல்ல பைத்தியம்னுடுவாங்க…"

"இதுக்குத் தான்ங்க வெளியூர் ஜோதிடர்ட்ட போகச் சொன்னேன்."

இவ்வாறு தங்களுக்குள் அடிக்கடி கலந்துபேசி மீரஜா, முருகனை அழைப்பதையே தடுத்து நிறுத்தினர்… நாளாக ஆக மீரஜாவிற்குத் தனக்குத் தம்பி என்ற உறவு இல்லையென்ற ஏக்கம் மறைய ஆரம்பித்தது.

அதன்பிறகுதான் நிம்மதி அடைந்தனர் முதிய தம்பதிகள்.

அதன் பின்னர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இனிதே நாட்கள் உருள,

முதலாம் வகுப்பு முடிந்து, முழுப்பரிட்சை விடுமுறை வந்தது.

செல்வராஜுக்கும் பள்ளி விடுமுறை விட்டதால், “லீவுக்கு எங்க அம்மா வீட்டிக்கு போகலாமா?” என்று மாலினி, செல்வராஜிடம் கேட்டாள்.

"நான் வரல மாலினி… நான் அம்மாட்ட சாப்பிட்டுக்கிறேன்… நீ பிள்ளைகளைக் கூட்டிட்டுக் கிளம்பு." என்று அனுமதி கொடுத்தான்.

மீரஜாவும், “மதுரைக்கு வரவில்லை!” என்று மறுத்துவிட, தானும் சந்தோசியும் மட்டும் மதுரை செல்வதாக முடிவெடுத்த மாலினி,

தனது தாய்க்கு ஃபோன் செய்து, மறுநாள் மதுரை வருவதாகத் தெரிவித்தாள்.

"உன் புருஷனையும், அந்தப் பிசாசையும் அங்க விட்டுட்டு வர்றதுக்கு, நீ வராமலே இருக்கலாம்" என்று மனோகரி கூறியதும்,

"ஏன்மா நாங்க ரெண்டு பேர் மட்டும் வந்தா என்ன? தொல்லையில்லாம இருப்பேனே… அத்தானும், மீராவும் வந்தா, என்னால நிம்மதியா நினைச்ச நேரத்துல சினிமா போகமுடியுமா? அட்லீஸ்ட் படுத்தாவது தூங்க முடியுமா? ப்ளீஸ் மா... புரிஞ்சுக்குங்களேன்."

"ஆனா, நீ திரும்பிப் போறதுக்குள்ள, உன் மாமியாவும், உன் புருஷனும் சேர்ந்து, உங்க தனிக்குடித்தனத்த மாத்தி, மறுபடியும் கூட்டுக்குடும்பமாக்கிடுவாங்க. பரவாயில்லையா?" என்று மனோகரி கேட்டதும்,

'தனிக்குடித்தனம் போனபிறகு, அத்தானும், மீராவும் ஸ்கூலுக்குப் போயிட்டுத் திரும்பி வர்றதுக்குள்ள, என் இஷ்டப்படி தூங்கினேன்… கத புக் படிச்சேன்… நெனச்ச நேரத்துக்கு அக்கம்பக்கத்திலிருக்கிறவங்க கூடச் சினிமாவுக்குப் போனேன்… ஒரு தடவ சமைக்கிறதோட வேலையும் முடிச்சேன்… மறுபடியும் ஒன்னு சேர்ந்துட்டா இதெல்லாம் செய்ய முடியாதே?' என்று பயந்தவள்,

"இப்ப என்னம்மா பண்றது?" என்று கேட்க,

"உன் புருசனுக்கும், உன் மாமியாருக்கும் பிரச்சனைய இழுத்துவிடு… அவர் வாயாலயே, நான் ஹோட்டல் ல சாப்பிட்டுக்கிறேன்… அம்மாட்ட சாப்பிடலைன்னு சொல்ல வை… அப்புறம் அங்கயிருந்து கிளம்பு." என்றதோடு நிற்காமல்,

தாய்க்கும், மகனுக்குமிடையே எந்தமாதிரி மனஸ்தாபத்தை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லித் தந்தார் மனோகரி.

அவர் கூறியது போல, வேண்டுமென்றே முத்துராக்கம்மாளிடம் வம்பு வளர்ப்பதும், செல்வராஜ் வந்ததும், "என்னை உங்கம்மா திட்டிட்டாங்க"ன்னு அழுவதுமாக நடிக்க ஆரம்பித்தாள் மாலினி.

ஆனால், அவர்கள் நினைத்த அளவிற்குச் செல்வராஜ்க்குக் கோபம் வராமல் போகவே,

"உங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சின்னவரத்தான் புடிக்கும். உங்கமேல பாசமே இல்ல…" என்று சின்னச்சின்ன விசயங்களைக் கூடப் பெரிதாகச் சொல்லிப் பார்த்தாள்.

அதுவும் சரிவரவில்லை…

இறுதியாக "நீங்கதான் மாமாவோட சம்பாத்தியத்தையெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னு உங்கம்மா, உங்க தம்பீட்ட சொன்னாங்களாம்" என்று கூறினாள்.

"உனக்கு யாரு சொன்னா?" என்று செல்வராஜ் கேட்க,

"மீராதான்… அத்தை பேசுனதக் கேட்டுட்டு வந்து, சொன்னா. சின்னப்புள்ள பொய் சொல்லுமா?" என்றதும்,

மீரஜாவிடம் விசாரிக்காமலே, தனது தாய் மீது கோபத்துடன் இருந்தான் செல்வராஜ். அந்தக் கோபத்தை மேலும் தூண்டிவிடுமாறு மனோகரி கூற,

அடுத்தநாளே, "நீங்க படிச்சுட்டு வேலைக்குப் போகாம இருந்தீங்களாமே? அத்தை மீராட்ட சொல்லீருக்காங்க" என்றதும், கோபம் இன்னும் தலைக்கேறியது.

அடுத்தநாள் செல்வராஜ் வெளிய போனதும், தனது தோழிவீட்டுக்குப் போய்விட்டு, வேண்டுமென்றே மதிய உணவு வேளைக்குக்கூட வராமல், சாயந்தரம் செல்வராஜ் வரும் நேரத்திற்குக் கொஞ்சம் முன்னால் வந்த மாலினியிடம், அப்பத்தா,

"எங்கம்மா போன? ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக்கூடாதா? மீராக்குட்டியாவது கீழ, எங்கூட இருந்தா. சந்தோஷி, மாடியில தனியாவே இருந்தா… மத்தியானம் சாப்பிடக்கூட, சந்தோஷி கீழ வரல… அப்புறம் நான் தான் சாப்பாட்ட ஒரு தட்டில் போட்டுக் கொண்டு போய்க் கொடுத்துச் சாப்பிட வச்சேன். எங்க போனாலும் பிள்ளைங்க சாப்பிடுற நேரத்துக்கு வர வேண்டாமா? வர லேட்டாகும்னா சந்தோஷியையாவது, உங்கூடக் கூட்டிட்டுப் போம்மா… பாவம் தனியாவே உட்கார்ந்து இருக்கா… இவ்வளவு நேரமா நானும், மீராவும் சந்தோசிக்குத் துணையா மாடியிலருந்துட்டு, இப்பதான் சாயந்திரமாயிடுசுன்னு விளக்கு பொருதுறதுக்காக இறங்கினோம்.‌‌.." என்று கூறிவிட்டுச் சென்றார்.

செல்வராஜ் வந்ததும், ஓ வென்று அழுது, "இன்னைக்கு, நம்ம கலாகிட்ட செவ்வாய்க்கிழமை கொழுக்கட்டை வாங்கப் போயிட்டு வர்றேன்… அத்தை என்னைய திண்ணையிலயே நிறுத்திவச்சு திட்டிட்டாங்க. நான் வீடே தங்க மாட்டேங்குறேனாம்… உங்களையும், பிள்ளைகளையும் அவங்க தலையில கட்டிட்டு எங்காவது போயிடுறேனாம்… இந்த வயசுல, அத்தை, மாமாவுக்குச் சமைக்கிறதே பெரிசாம்... இதுல உன் புருஷனுக்கும், பிள்ளைக்கும் சமச்சுப் போட எனக்கென்ன தலைவிதியான்னு கேட்டாங்க… அது மட்டுமில்ல அத்தை மாடிக்கு வந்து, எல்லா ரூமையும் செக் பண்ணிருக்காங்க…" என்றதும்,

ஏற்கனவே, வெளியே சென்ற இடத்தில் சின்னப் பிரச்சனையை, சந்தித்துவிட்டு வந்த செல்வராஜின் கோபம், தன் தாயின் மீது திரும்பியது.

மீரஜாவை அழைத்து, "இனி அப்பத்தாட்ட சாப்பிடப் போகக் கூடாது… கீழ் வீட்டுக்கே போகக் கூடாது" என்றதும்,

"ஏன்ப்பா?" என்று மீரஜா கேட்டாள்.

"அப்பா என்ன சொன்னாலும் அப்படியே செய்யப்பழகு… எதிர்கேள்வி கேட்கிறது என்ன கெட்ட பழக்கம்?" என்று திட்டிய மாலினி,

"ஆமா, அப்பத்தா மாடிக்கு வந்தாங்கல்ல?" என்று மீரஜாவிடம் கேட்டாள்.

"ஆமா" என்று மீரஜா கூறியதும்,

‘சொன்னென்ல?’ என்பது போல் செல்வராஜைப் பர்த்த மாலினி,

"பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுத்துட்டுப் போ என்னால முடியாதுன்னு அப்பத்தா என்னைய திட்டினாங்கள்ல?" என்று மாலினி கேட்டதும்,

யோசித்த மீரஜாவைப் படக்கென்று தன் பக்கம் இழுத்து,

"உங்க அப்பத்தா திட்டினதச் சொல்லப் போறியா இல்லையா?" என்று கண்களை உருட்டி, மிரட்டியும்,

மீரஜா ஆமாமென்று சொல்லாமல் நின்றாள்.

"இவ்வளவு பேசுறேன் பதில் வருதான்னு பாருங்க… இது அவங்கட்டப் போய்த் தினம் தின்னதாலதான, நமக்கு இந்த அவமானம்." என்று அழ ஆரம்பித்தாள்.

அதற்குமேல் பொறுக்க முடியாத செல்வராஜ், கோபமாகக் கீழே இறங்கி முத்துராக்கம்மாளிடம்,

"ஏம்மா மாலினிய திட்டுறீங்க? அவ எங்க போனா உங்களுக்கென்ன? என்ட சொல்லிட்டுத்தானே போனா?" என்று கேட்டான்.

"பிள்ளைகளுக்குச் சாப்பாடு குடுத்துட்டுப் போ ன்னுதான் செல்வம் சொன்னேன்."

"உங்கள சாப்பாடு போடச் சொன்னாளா? உங்களால முடியலன்னா சும்மா இருக்கவேண்டியதுதான?"

"நேரத்தோட வீட்டுக்கு வான்னு நான் சொல்லக்கூடாதா செல்வம்?"

"அத நீங்க ஏன் சொல்றீங்க?"

"பிள்ளைய உங்கூடக் கூட்டிட்டுப் போ… சாப்பாடு நேரத்துக்குப் போனா என்ன பண்றதுன்னு கேட்டேன். இதுல என்ன இருக்கு?"

"உங்ககிட்ட நாங்க சாப்பிடுறது பிடிக்கல. அதானே? இனி நானாவது எம் பிள்ளைகளாவது உங்கட்ட சாப்பிட வந்தா, ஏன்னு கேளுங்க."

"நான் அப்படிச் சொல்லல செல்வம்… மாலினி உங்கிட்ட இல்லாதத சொல்றா செல்வம்… நா அப்டி பேசுவனா?"

"ஏன் இப்டிப் பொய் பேசுறீங்கம்மா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க தான சாப்பாடு குடுத்துட்டுப் போ ன்னு நீங்க சொன்னதா, சொன்னேன்னிங்க? இப்ப மாலினி பொய் சொல்றான்றிங்க.”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லல செல்வம்”

“விடுங்கம்மா… எப்ப எங்களுக்குச் சாப்பாடு போடுறத பிரச்சனை ஆக்கினீங்களோ இனி எங்கூடப் பேசாதீங்கம்மா."

"என்ன செல்வம் இவ்வளவு பெரிய வார்த்தை சொல்ற? நா அப்டி சொல்வேனா?"

"நிறுத்துங்கம்மா…" என்று செல்வம் சொல்லிக்கொண்டிருந்த நேரம், சுப்பையாபிள்ளை வீட்டுக்குள் வர,

சட்டென்று திரும்பி, செல்வராஜ் மாடிக்குச் சென்றுவிட்டான்.

சுப்பையாபிள்ளையைப் பார்த்ததும், எவ்வளவு தடுத்தும், அப்பத்தாவிற்குக் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்ட,

"மாலினிதான?" என்று சுப்பையாபிள்ளை கேட்டார்.

"நான்தான் தேவையில்லாம மாலினிய பேசிட்டேங்க… அதான், என்ன நடந்துச்சுன்னு செல்வம் கேட்டுட்டு…

"இன்னும் ஏன் மறைக்கிற முத்துரா? செல்வத்தோட நடவடிக்கையையும் கவனிச்சுக்கிட்டுதான் வர்றேன்… மாலினி என்ன சொன்னாலும் அப்படியே நம்பிடுறதா?"

"விடுங்க… அவன் பொண்டாட்டி பேச்ச கேட்குறது தப்பா?" என்று சமாளித்து விட்டு உள்ளே சென்றார்.

எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருந்த மீரஜாவிற்கு, அப்பத்தா அழுதது மிகவும் வேதனைப்படுத்த, நடந்த விசயங்களைத் தாத்தாவிடம் கூறிவிட்டாள்.

அடுத்து நாள், வீம்பாக மாலினியுடன் பிள்ளைகள் இருவரையும் மதுரைக்குப் பஸ் ஏத்திவிட்டு வந்தான் செல்வராஜ்.

மூன்று வேளையும் ஹோட்டலில், தன் மகன் சாப்பிடுவதைப் பொறுக்க முடியாத முத்துராக்கம்மாள், செல்வராஜ் போகும்போதும் வரும்போதும் நிறுத்திப் பேச,

அவனோ, தனக்கிருந்த கோபத்தைத் தன் தாயிடம் காட்டினான்.

மதுரை வந்த மாலினி, நடந்த விசயங்களை மனோகரியிடம் குதூகலமாகக் கூறினாள்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து,

'மனோகரி சொல்லிக் கொடுத்துத்தான், மாலினி பொய் பேசி, அப்பத்தாவுடன், அப்பாவைச் சண்டையிட வைத்துவிட்டார்' என்று புரிந்துகொண்ட மீரஜா,

சுப்பிரமணியம் ஜவுளிக்கடையிலிருந்து வந்ததும்,

"தாத்தா! ஆச்சி, அம்மாவுக்குப் பொய் சொல்லச் சொல்லிக்கொடுக்கிறாங்க. அப்பா, அப்பத்தாட்ட சண்டை போட்டாங்க. அப்பத்தா அழுதாங்க." என்று நடந்து அனைத்தையும் கூறிவிட்டாள்.

அதைக்கேட்ட சுப்பிரமணியம், மாலினியையும், மனோகரியையும் திட்டிவிட்டு,

"என்ன சொல்லுவீங்கன்னு தெரியாது… அங்க மாப்பிள்ளை, முத்துராக்குட்ட சாப்பிட்டாத்தான் நான் இங்க சாப்பிடுவேன்… அதுவரை நானும் ஹேட்டல்லயே சாப்பிட்டுடுறேன்…" என்று கோபமாகக் கத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

சுப்பிரமணியத்திடம் நடந்தவிசயங்களைக்கூறி, பல வருடங்களாகப் போட்டிருந்த, தன்னுடைய ‘அமைதியானவள்’ என்ற முகத்திரையைக் கிழித்த மீர்ஜாவின் மீது கோபமுற்ற மனோகரி, ஆவேசமாக, ஆத்திரம் தீர மீரஜாவை அடித்தாள்…

தன் தாயைப் பார்த்து, பிள்ளை, "அம்மா அம்மா" என்று அழுதும் மனம் இறங்காத மாலினி,

"தாத்தாட்ட சொல்லிக்குடுப்பியா? அப்ப நல்லா வாங்கு" என்று ஏற்றிவிடவும்,

அடுப்பில் தோசைக்கரண்டியைச் சிவக்கக் காய வைத்து, மீரஜாவிடம் வந்த மனோகரி, "இனிமே யாருட்டயாவது நாங்க பேசுறத சொல்லுவியா?" என்று அதட்டியும்,

"நீங்கதான பொய் சொன்னீங்க?" என்று மீரஜா அழுகையுடன் கேட்டாள்.

"இரு... வாயிலயே சூடு போட்டு விடுறேன்… அப்பதான் நீ அடங்குவ" என்று சொல்லி, மீரஜாவின் தலைமுடியை வலது கையால் பற்றி, பழுக்கக் காய்ச்சிய கரண்டியைக் குழந்தையின் வாய்க்கு அருகே கொண்டு போனதும்,

எங்கிருந்தோ வந்த மரக்கட்டை, மனோகரி கையிலிருந்த கரண்டியைத் தட்டிவிட்டதோடு, மனோகரியின் நடுமண்டையில் நச்சென்று விழுந்தது.

கொதிக்கும் கரண்டி கீழே விழுந்து, காலில் சுட்டுவிட, மரக்கட்டைத் தலையிலும் ஒரே நேரத்தில் தாக்க, மயங்கி விழுந்தார் மனோகரி.

முகத்தில் தண்ணீர் தெளித்தும் மனோகரி எழுந்திருக்க வில்லை…

அதோடு காலில் தீக்காயமும், நடு மண்டையில் மரக்கட்டை விழுந்ததால், மனோகரியின் தலை, கொய்யாப்பழ சைஸ்க்குப் புடைக்கவே, பயந்துபோன மாலினி,

அக்கம்பக்கத்தினரை அழைத்துக்கொண்டு, மனோகரியை ஆஸ்பத்திரியில் சேர்த்தாள்.

சிறிது நேரத்தில் வீடுவந்த சுப்பிரமணியத்திடம், அழுதுகொண்டே, "நான் எங்கப்பத்தாட்டப் போறேன்" என்று மீரஜா சொன்னதும்,

'ஆஹா பிள்ளைய விட்டுட்டுப் போயிட்டேனே' என்று நினைத்த சுப்பிரமணியம்,

"ஆச்சியும், அம்மாவும் எங்க?" என்று அழுதுகொண்டிருந்த மீரஜாவிடம் கேட்டார்.

"ம்ஹும்… சொல்லமாட்டே… சொன்னா, என் வாயில சூடு வச்சுடுவாங்க…"

"சூடா?... யாருடா அப்படிச் சொன்னது?"

"ஆச்சி… இந்தா இந்தக் கரண்டீல சூடு வச்சுடுவாங்க. என்னைய எங்க தாத்தாட்டக் கூட்டிட்டுப் போய் விடுங்க" என்று மீண்டும், மீண்டும் அதையேக் கூறி அழுததும்,

நடந்ததை மீரஜா வாயிலாகவே, இதமாகப் பேச்சுக்கொடுத்து அறிந்துகொண்ட சுப்பிரமணியம், பெரியமகன் கதிரேந்திரனை அழைத்து,

"மீராவ புன்னைவனத்துல கொண்டு போய்விட்டுட்டு வா!" என்று அனுப்பி வைத்துவிட்டு, ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

டாக்டர், "ஏற்கனவே உங்க மனைவிக்கு, ரெத்த அழுத்தமும், உப்புசத்தும் இருந்திருக்கு...‌ இதுல ஒரே நேரத்துல கால்ல சூடும், தலையில அடியும் பட்டதால பிரஷர் எகிறி சுயநினைவ இழந்துட்டாங்க… இரண்டு நாள்ல பிரஷர் குறைஞ்சாதான் தலைக்கு வைத்தியம் பார்க்க முடியும்…" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

படுக்கையில் அசைவில்லாமல் கிடந்த மனோகரியைப் பார்த்த சுப்பிரமணியம், "ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓஞ்சுபோய்ப் படுத்துட்டியா?" என்று புலம்பவே,

"அம்மாவ ஒன்னும் சொல்லாதீங்கப்பா… அந்தக் குட்டிசாத்தான் பொய் பேசுது." என்றதும் எதுவும் பேசாமல், மாலினியை முறைத்தவர்,

"எப்ப உன் வீட்டுக்குப் போவ?" என்று கோபத்தை அடக்கிர குரலில் கேட்டார்.

"இன்னைக்குதானப்பா வந்தேன்?… அது என் வீடுன்னா, நம்ம வீடு?"

"இது உனக்கு அப்பா வீடு … நீ இனிமே இங்க விருந்தாளாதான் வரனும்… உன் புருஷன் வீடுதான் உன் வீடு."

"ஏம்பா இப்டி மகள்னு கூடப் பார்க்காம இரக்கமில்லாம பேசுறீங்க?"

"மீரஜாவும் உனக்கு மகள் தான? அந்தப் பச்சக் குழந்தைட்ட நீங்க ரெண்டு பேரும் இரக்கம் காட்டுனீங்களா? பிஞ்சு மனசு எவ்வளவு பயந்திருக்கும்?*

"பார்த்தீங்களாப்பா? அவ்வளவு அடி வாங்கியும், நீங்க வந்ததும் உங்கட்ட போட்டுக்குடுத்துடுச்சு… அது வாயில சூடு போட்டு விட்டிருக்கனும்." என்ற மாலினியைப் பார்த்தவர்,

"பிள்ளை இல்லைனு எத்தனையோ பேர் தவங்கிடக்க, உனக்குப் போய்ப் பிள்ளை கொடுத்தானே ஆண்டவன் அவனச் சொல்லனும்." என்றவர் அதற்கு மேல் மாலினியிடம் பேச விருப்பமின்றி அமர்ந்து விட்டார்.

மருந்து மயக்கத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த மனோகரியின் வாயில் யாரோ பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போடவும், தீக்காயத்தால் ஏற்பட்ட எரிச்சல் பொறுக்கமுடியாமல் அலறியபடி எழுந்தார்.

நன்கு உறங்கிக் கொண்டிருந்த மனோகரி அலறி எழுந்ததும்,
"என்னாச்சு மனோ?" என்று சுப்பிரமணியம் கேட்க,

"யாரோ என் வாயில் சூடு போட்டுட்டாங்க." என்று வலியால் துடித்தவரை,

"கனவு கண்டிருக்க மனோ… தொட்டுப்பாரு… சூடு எதுவும் போடல." என்று கூறிய சுப்பிரமணியம், மொபைல் ஃபோன் காமராவை, மனோகரியின் முகத்தின் முன் காட்ட,

‘சுட்ட வடு கூட இல்லையே?’ என்று இதழோரம் தடவிப் பார்த்தார் மனோகரி.

மனோகரியைப் பரிசோதிக்க வந்த டாக்டர், “அடுத்த நாள் டிஸ்சார்ஜ் பண்ணிவிடலாம்!” என்று கூறினார்.

சுப்பிரமணியம், "நான் வீடுவரைக்கும் போயிட்டு வரவா?" என்று மனோகரியிடம் கேட்டதும், மனோகரி சம்மதித்தார்.

சுப்பிரமணியம், நர்ஸிடம், மனோகரியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்தில் கதவு திறக்கவும், சுப்பிரமணியமோ, மாலினியோ வந்துவிட்டார்கள் என்று நினைத்து, மனோகரி திரும்பிப் பார்த்தார்.

அங்கே கோபத்தால் கண்களிரண்டும் சிவக்க நின்ற இளைஞன், "இந்தக் கைதானே மீராவிற்குச் சூடு போட வந்தது?" என்று அறையே வெடிக்கும் அளவிற்கு சப்தமாக மிரட்டியபடி,

அவன் கையில் வைத்திருந்த மாட்டு ஊசியால், மனோகரியின் கையில் பலமாகக் குத்த, கையெல்லாம் ரெத்தம்பெருக்கெடுத்தது. அவ்வளவு பெரிய ஊசி இறங்கியதில் வலது கையே கலண்டு விடுவதைப் போலக் கடுத்தது.

மீண்டும் அந்த இளைஞன் மனோகரியை நெருங்க,

"காப்பாத்துங்க… காப்பாத்துங்க..‌." என்று அலறினார் மனோகரி.

அறைக்குள் வந்த நர்ஸ், மனோகரியை உலுக்கி, "ஏம்மா சும்மா தூங்கமாட்டீங்களா? இப்ப எதுக்கு இந்தக் கத்து கத்துறீங்க? பக்கத்து ரூம்ல எல்லாம் பேஷண்ட்ஸ் இருக்காங்க… நானே பயந்துட்டேன். அவங்க பயந்துடமாட்டாங்க?" என்று அதட்ட,

"என் கையப் பாருங்க எவ்வளவு ரெத்தம்?” என்று மனோகரி, கையைக் காட்ட,

கையில் சிறு கீரல்கூட இல்லை… ஆனால் இரத்தக்கொதிப்பு அதிகரித்திருந்தது.

அதனால், ஒருவாரம் பெட்டில் அட்மிட் பண்ணி வைத்தியம் பார்த்தும் பிரஷர் குறையாமல் போகவே,

"உங்க மனைவிக்கு உடம்பவிட மனசுலதான் ஏதோ பிரச்சனை இருக்கு… முதல்ல அத சரிபண்ணுங்க… அப்பதான் பிரஷர் குறையும்... இப்பவே பெரியாஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போங்க," என்று அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்க்கொண்டு போகுமாறு டாக்டர் சொல்லிவிட்டார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தனர்.

அங்கும் தன்னை யாரோ அடிப்பதாகவும், சூடு போடுவதாகவும் அலறி அலறி மனோகரி தூக்கத்திலிருந்து எழுந்ததால், இரவு, பகல் என்று, நாள் முழுவதும் சுத்தமாகத் தூக்கம் தொலைந்தது.

"தூங்காம பயந்து கத்தினா எப்படிப் பிரஷர் குறையும்? பிரஷர் இவ்வளவு இருக்கக் கூடாதுங்க… என்று கூறினர் மருத்துவர்கள்.

பிரஷர், உடல்வலி, தூக்கமின்மை, பயம் என்று எல்லாம் சேர்ந்து அமுக்கியதில் மீண்டும் சுய உணர்வை இழந்தார் மனோகரி.

பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனது.

மேலும் ஒருவாரம் பார்த்துவிட்டு,

"இனி பிழைக்கமாட்டாங்க… வீட்டுக்குக் கொண்டுபோங்க!" என்று டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார்கள்.

வீட்டிற்கு வந்த பதினைந்துநாள் ரொம்பக் கஷ்டப்பட்டு இறந்தார் மனோகரி!


வார்த்தைகளின் எண்ணிக்கை - 1699

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼

 

Shailaputri R

Well-known member
ஆடி ஓடி இந்த உடம்பு அனைஞ்சிடுச்சா.. இனி இந்த மாலினிய ஒரு கை பாரு கண்ணா.. பெத்தவளா அவ.. பிசாசு.. பிசாசு வைத்துல பிறந்த பிசாசு..
 

Sspriya

Well-known member
பாவம்... நல்லா இருந்த குடும்பத்துல சண்டைய மூட்டி விட்டால் கடவுள் சும்மா விடுவாரா... அதுவும் குழந்தைனு கூட இரக்கம் இல்லாம இப்படி செஞ்சா... அதான் கடவுள் வச்சி செய்ஞ்சிட்டாரு...
 

Sspriya

Well-known member
Todays thought 💞

தன் மகள் வலியின் பிடியில் சிக்கி தவிக்கும் போது தாய் மனம் துடிகாதா

தாய் என்ற வார்த்தைக்கு அருகதை அற்றவள் இந்த மாலினி 😡😡
 

Aathisakthi

Well-known member
பெத்த மகள் வாழ்க்கை என்று பார்க்காமல் கொள்ளி கட்டை வைத்த தாய்க்கு...காலம் தண்டனை தந்துவிட்டது...

மகளாக அல்ல குழந்தை யாக கூட பாவிக்காத இவளுக்கு என்ன காத்திருக்கோ😳😳😳😳😳😞😞😞
 
Top