கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-17

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-17

மனோகரி இறந்ததும் மாலினிக்கு வாழ்வே முடிந்துவிட்டதைப் போல ஆனது…

'இனி தாய்வீடு நமக்கில்லை… அப்பாவிற்கும் என்மேல் கோபம்… இனி புன்னைவனத்தை விட்டால் எனக்கு வேறு கதியில்லை…

இது எல்லாத்துக்கும் காரணம் அந்த மீராதான்… 'அவ மட்டும் அப்பாட்ட, போட்டுக்குடுக்காம இருந்திருந்தா இந்நேரம் அம்மா உயிரோட இருந்திருப்பாங்க…' என்று நினைக்க, நினைக்க மீரஜாவின் மேல் மாலினிக்கு வெறுப்பு உண்டானது…

எல்லா விசேசமும் முடிந்து, மாலினியின் கணவர் குடும்பம், மாலினியை விட்டுவிட்டு, புன்னைவனம் சென்றுவிட்டனர்.

அடுத்த வார இறுதியில் மாலினி ஊருக்குக் கிளம்பும்போது, சுப்பிரமணியம் மாலினியை அழைத்துப் பேசினார்.

"இனியாவது உன் குடும்பத்த அணைச்சு வாழப் பழகு… நல்ல குடும்பம்… வீணா குழப்பத்த ஏற்படுத்தி உன் வாழ்க்கையக் கெடுத்துக்காத…" என்று அறிவுரை கூறியவருக்கு, சுயநினைவை இழக்கும் முன் மனோகரி கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது...

"என்னைய வீட்டுக்குக் கூட்டிப் போயிடுங்க…" என்றார் மனோகரி,

"இன்னும் ரெத்தக்கொதிப்பு சரியாகல மனோ? நீ எதையும் போட்டுக் குழப்பிக்காம, நல்லா அசந்து தூங்கினா சரியாகிடும்… அப்புறம் வீட்டுக்குப் போயிடலாம்!" என்றவரைப் பார்த்த மனோகரி,

"உங்கட்ட நிறையப் பொய் சொல்லீருக்கேன்தான். ஆனா இப்ப நான் நிஜமாதான் சொல்றேன். என்னை நம்புங்க…"

"சொல்லு"
"உண்மையிலேயே எனக்கு யாரோ சூடு போட்டாங்க… எனக்கு வாயோரம் ரொம்ப எரிஞ்சுச்சு… ஆனா தீக் காயமேயில்ல… ஒருத்தன், பெரிய மாட்டூசிய வச்சு என் கையில ஓங்கிக் குத்தினான்… வலி பொறுக்க முடியல… ஆனா ஊசி குத்தின தடமே இல்ல…"

"மீராவுக்குச் சூடு போடப்போனது உன் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சிடுச்சு… அதனால தூங்கும்போது கனவு கண்டு முழிக்கிற அவ்வளவு தான்."

"நானும் முதல்ல அப்டித்தான் நினைச்சேன்… ஆனா கண்ணு முழிச்சபிறகும் அதே வலியை அனுபவிக்கிறேங்க… இதுல ஏதோ இருக்குங்க… நான் கற்பனை பண்ணல… "

"சரிசரி! அதையே நினைக்காம தூங்கு… நான் உன் பக்கத்திலேயே இருக்கேன்… யாரும் வந்தா அடிச்சு துரத்திடேறேன் சரியா!" என்றவரைப் பார்த்த மனோகரியின் பார்வையில், தன் கணவன், தான் கூறியதை நம்பவில்லை என்ற வலி தெரிந்தது.

"என்னை நீங்க நம்பலைனாலும் பரவாயில்ல… மாலினிட்ட சொல்லிடுங்க… 'மீராவ அடிப்பியா?' ன்னு கேட்டு, என்னை யாரோ மிரட்டுறான்... அடிக்கிறான்… சூடு போடுறான்… அதனால மீராட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க… மீராவ அவ அப்பத்தாகிட்டயே விட்டுடச் சொல்லுங்க?" என்று கூறிய மனோகரியின் கண்களில் கலக்கம் மிகுந்திருந்தது…

அன்று மனோகரி கூறியதை நினைத்துப் பார்த்த சுப்பிரமணியம்,

'இதை மாலினிகிட்ட சொல்லலாமா?... நம்ப மாட்டா… யாருதான் நம்புவாங்க? மீராவுக்கு, சப்போர்ட் பண்றதா நினைப்பா…' என்று யோசித்துக் கொண்டிருந்தவரைப் பார்த்த மாலினி,

"என்னப்பா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. ஆனா தயங்குற மாதிரி இருக்கு… நீங்க தான் ப்பா என்மேல கோபமா இருக்கீங்க… நான் எப்பவும் போலதான் இருக்கேன் சொல்லுங்க." என்றதும்,

'உண்மையோ கற்பனையோ சொல்லிவிடுவோம்' என்று முடிவுக்கு வந்தவர்,

"அம்மா நீ என் பொண்ணு… நல்லா வசதியா வாழ்வேன்னுதான் செல்வராஜுக்குக் கட்டிக் குடுத்தேன்… இதுவர நடந்த எல்லாத்தையும் மறந்து, விட்டுடு… குறிப்பா மீராவ கஷ்டப்படுத்தாத…" என்றதுமே,

"நினச்சேன் அந்தப் பிசாசப் பத்திதான் பேசுவீங்கன்னு." என்று கூறிவிட்டு நகரப் போனவளை,

"அவ உன் பொண்ணு மாலினி… அவட்ட ஏதோ சக்தி இருக்கு… உங்கம்மா பட்ட கஷ்டத்தப் பார்த்தேல?"

"ஏம்பா? என்னைப் பயமுறுத்துறீங்களா?"

"நீ நல்லா இருக்கணும் னுதான் சொல்றேன்… இதையும் உங்கம்மாதான் சொல்லச்சொன்னா…"

"செத்துப் போன அம்மா நெர்ல வந்து சொல்லமாட்டங்கன்னு என்னவேணா சொல்வீங்களா?"

"இங்க பாரு… நீ என்னை நம்பவே வேண்டாம்… ஆனா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்… சரி அதைவிடு... உனக்குத்தான் மீராவ பிடிக்கலைல? அவள அவ தாத்தா, அப்பத்தாட்டயே விட்டுடு…" என்றவரை எரிச்சலாகப் பார்த்த மாலினி,

"அம்மாவே போன பின்னாடியும் அந்தப் பிசாசுக்கு ஏத்துக்கிட்டு பேசுறீங்கள்ல?" என்று கூறிவிட்டுச் சென்றவளைப் பார்த்த சுப்பிரமணியம்,

'இவ மனசுல நல்லா நஞ்சக் கலந்துட்டு, அவ போய்சேர்ந்துட்டா… இனி கடவுள் தான் மாலினிக்கு நல்ல புத்திய குடுக்கனும்.' என்று வேண்டிக் கொண்டார்.

ஆறுமாதம் கழித்து,

சுப்பிரமணியம் இல்லத்தில், பெண்துணையின்றி சுப்பிரமணியம், கதிரேந்திரன், கதிர்வேல் மூவரும் ஆண்களாக இருக்கவே, கதிரேந்திரனுக்கு, மனோகரியின் சொந்தத்திலேயே திருமணம் பேசினர்.

கதிரேந்திரனுக்கு இருபத்து மூன்று வயது ஆனநிலையில் திருமணம் செய்துகொள்ள அவனுக்கு விருப்பமில்லை…

பெண்வீட்டிலிருந்து, பெண்ணின் புகைப்படமும் தரவில்லை...

அதோடு, அவனுக்குப் பார்த்திருக்கும் பெண்ணின் பெற்றோர் பார்ப்பதற்குச் சுமாராக இருக்கவே,

தன் தாய்வீட்டு ஆண் சொந்தங்களிடம், "பெண் எப்படி இருப்பாள்?" என்று கதிரேந்திரன் விசாரித்தான்.

பெரும்பாலோர் அமைதியாக இருந்தனர்.

ஒருசிலர் "அமைதியான பொண்ணு", என்று பதிலளித்தனர்.

பெரியவர்களோ, "சொந்தத்துல இருந்து வர்ற பொண்ணுதான் உன் அப்பாவையும், தம்பியையும் பார்த்துக்குவா… அதுமட்டுமில்ல, அவளுக்கு நிறைய நகை போட்டு, சீரும் நல்லா செய்வாங்க." என்றனர்.

கதிரேந்திரன், மாலினிக்கு ஃபோன் செய்து பெண்ணை நேரில் பார்த்து, வருமாறு கூறினான்.

அடுத்த நாள், மதுரைக்கு மாலினி வந்தாள்.

இதை அறிந்த சுப்பிரமணியம், கடையிலிருந்து வீட்டிற்கு வந்து,

“என்ன விஷேசம்? திடீர்னு புறப்பட்டு வந்திருக்க?” என்று கேட்டார்.

“கதிரு ஃபோன் பண்ணி, அவனுக்குப் பார்த்திருக்கிற பெண்ணை, நேர்ல் ஒரு தடவ பார்த்துட்டு வரச்சொன்னான் ப்பா.”

"உங்க அம்மா சொந்தத்துலதான பெண் எடுக்கிறேன்? பிறகு ஏன் பெண்ணைப் பார்க்கனும்?" என்று கேட்டார்.

"பொண்ண பார்க்காம எப்படிப்பா? பெண்ணோட ஃபோட்டோவையாவது கதிருட்ட காட்டச் சொல்லுங்கப்பா"

"எதுக்கு?"

"பொண்ணு எப்படி இருப்பான்னு கதிருக்குத் தெரிய வேணாமாப்பா?"

"இல்ல தெரியாமதான் கேட்கிறேன்… நீ உன் மனசுல என்னதான் நினைச்சிருக்க? செல்வராஜ் சினிமா ஹீரோ மாதிரி இருக்கார், கவர்மெண்ட் உத்தியோகம்... வசதியான, நல்ல குடும்பம்னுதானே, உன்னை அங்க குடுத்தேன்? அன்னைக்கு நீயும், உன் அம்மாவும் என்ன சொன்னீங்க? 'அழகும், பணமுமா முக்கியம்? அதுஇது'ன்னு ஆயிரம் குறை சொன்னீங்க?"

"இல்லப்பா கதிரு ராஜா மாதிரி இருக்கான்… அவனுக்குப் பொருத்தமான பொண்ணா இருக்க வேண்டாமா? அதான் ஒரு தடவ நெர்ல போய்ப் பார்த்துட்டு வந்துடுறேன்."

"போதும் மாலினி… நீயும் உங்கம்மாவும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ரெண்டு குடும்பத்தையுமே நிம்மதியில்லாம பண்ணிட்டீங்க…"

"..."

"இப்பவும் உங்க இஷ்டப்படி, மனோகரி சொந்தத்துலதான பெண்ணெடுக்கிறேன்? இப்ப என்ன பிரச்சனை உனக்கு?"

"நானா ஒன்னும் வரல… கதிருதான் பொண்ண நேர்ல பார்த்துட்டு வரச்சொன்னான்."

"நீ முதல்ல, உன் குடும்பத்த பார்த்துக்க... அது போதும்… இந்தக் குடும்பத்தப் பார்த்துக்கிறதுக்கு எனக்குத் தெரியும். நீ ஊருக்குக் கிளம்பு…"

"அப்பா! கதிரு கேட்டா என்ன சொல்வேன்?"

"அவன் பொறுப்பானவன், புரிஞ்சுக்குவான்… உன்னை மாதிரி, தங்கமான குடும்பத்துல கூட வாழத்தெரியாம, அவன் வாழ்க்கைய கெடுத்துக்க மாட்டான். நீ கிளம்பு." என்று கதிர் வேலையிலிருந்து திரும்புமுன் மாலினியை புன்னைவனத்துக்குப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டார்.

ஒரு மாதத்தில் திருமணம் முடிந்தது.

மணப்பெண் நாகராணியின் ஃபோட்டோவை ஏன் பெண் வீட்டில் கொடுக்கவில்லை என்ற காரணம் அவளைப் பார்த்ததும் அனைவருக்கும் புரிந்தது.

கதிரேந்திரன், செல்வராஜ் அளவிற்கு அழகாக, கம்பீரமாக இல்லையென்றாலும், சிவந்த நிறமும், சராசரி உயரமும், உயரத்திற்கு ஏற்றப் பருமனும், சுருள் கேசமுமாக, பார்ப்பதற்குக் கண்ணுக்கு லட்சணமாக இருந்தான்…

நாகராணியோ, நல்ல கருத்த நிறத்துடன், குட்டையாக, குண்டாக இருந்ததோடு, மனோகரியின் தாய்வீட்டு உறவினர்கள் அனைவரையும் போலக் கொஞ்சம் தெத்துப் பற்களையும் கொண்டிருந்தாள்.

கதிரேந்திரன், மாலினி மட்டுமல்ல கல்யாணத்திற்கு வந்தவர் அனைவருமே வாயடைத்துப் போயினர்.

'பெண்ணைக் காட்டாமல் ஏமாற்றிக் கல்யாணம் செய்துவிட்டார்கள்' என்ற கோபமும் சேர்ந்துகொள்ள, கதிரேந்திரன் நாகராணியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை…

விளைவு, நாகராணியின் தாய் தடாதகை உருவில் வந்தது…

மனோகரி விதைத்த வினை அவள் வீட்டிலேயே வளரத்தொடங்கியது…

கதிரேந்திரனை தனிக்குடித்தனம் நடத்துமாறு கேட்க,

கதிரேந்திரனுக்குக் கோபம் தலைக்கேறியது… "என் அப்பா, தம்பிய பார்த்து க்குவான்னுதானே இவளை என் தலையில கட்டினாங்க? வந்த ஒரு வாரத்துல குடும்பத்தப் பிரிச்சுத் தனிக்குடித்தனம் போகச்சொல்றீங்க?" என்று அவனும் பதிலுக்கு எகிற,

அடுத்து வந்த நாட்கள் சுப்பிரமணியம் குடும்பத்தில் போர்க்கலமானது.

தாய்வீட்டில் பழைய சந்தோசம் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததாலும், மீராஜாவையோ, குடும்பத்தையோ கெடுக்கும் யோசனையை, மாலினிக்குச் சொல்வார் யாருமில்லாததாலும், மாலினி அமைதியாகத் தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்தாள்.
ஆகவே குடும்பம் சந்தோசமாகவும், அமைதியாகவும் இருந்தது. மனோகரியைவிட மோசமான எதிரி பதுங்கியிருப்பது தெரியாமல்…

பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த மீரஜா, அவசரமாகப் பேக்கைத் தூக்கி ஷோபாவில் எறிந்து விட்டு, கொள்ளைப்புறத்தில் இருக்கும் கழிவறையை நோக்கி ஓடினாள்.

பாலைக்காய்ச்சி தாத்தாவிற்குக் கொடுத்துவிட்டு சமையலறைக்குத் திரும்பிய அப்பத்தா, மீரஜா ஓடியதைப் பார்த்து, சிரித்துவிட்டார்.

அடுத்து இருந்த சமையலறையில் ஏதோ சிற்றுண்டி செய்து கொண்டிருந்த பாவானியும் மீரஜாவைப் பார்த்துச் சிரிக்க,

"ஒம்பதாங்கிளாஸ் போயிட்டா… இன்னும் இந்தப் பழக்கம் போகுதா பாரு?"

"அவளுக்குத்தான் ஸ்கூல் டாய்லட்ட யூஸ் பண்ணப் பிடிக்கலையே அத்தை…" என்று பவானி கூறும்போதே,

அடுபடிக்குள் வந்த மீரஜாவை,

"மீராமா, டாய்லெட் லருந்து நேரா அடுப்படிக்கு வராதேன்னு சொல்லீருக்கேனா இல்லையா?" என்ற அப்பத்தாவின் அருகில் வந்தவள்,

"சித்தி என்ன பலகாரம் பண்றாங்கன்னு பார்க்க வந்தேன்…" என்று கூறியபடி, கண்களில் குறும்பு மின்ன, ஈரக்கையை அப்பத்தாவின் சேலை முந்தியில் துடைக்கப் போனாள்.

"ஏய் வாலு… சேலையத் தொடாத… நான் சாமிக்கு விளக்கு பொருதனும்…" என்று செல்லமாக அதட்டிய அப்பத்தா, பவானியிடம்,

"வேணும்னே பண்றா பவானி…" என்று சிரித்தபடி கூறிவிட்டு மீரஜாவிடம்,

"நீ போய் உடம்பு கழுவிட்டு வா! ஆள் வளர்றியே தவிர, சேட்டை குறையுதா பாரு!" என்று சிரித்தார்…

உடல் கழுவிவிட்டு கீழே வந்தவள் "அப்பத்தா பால்!" என்று அப்பத்தாவிடம் கூறிவிட்டு,
"சித்தி, நான் விளையாடப் போகனும்… சீக்கிரம் மரவள்ளிக்கிழங்க குடுங்க." என்று கூறியபடி அடுப்படி மேடைமேல் ஏறி அமர்ந்தாள்.

"மீராமா… கீழ இறங்கு… நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்ல… இனிமே வெளியே போய் விளையாட வேண்டாம்."

"ஏம்பத்தா இப்படிப் பண்றீங்க?"

"அப்பத்தா சொன்னா கேட்கனும்… வா! நம்ம ரெண்டு பேரும் காமாட்சிக்கு விளக்கு போட்டுட்டு வருவோம்!" என்று அழைக்கவே,

அப்பத்தாவுடன் காமாட்சியம்மனை தரிசிக்கக் கிளம்பினாள்.

சிறு குடிலில், ஒரு சூலம் மட்டுமே இருக்கும் சிறு கோயில் அது… அந்தச் சூலத்தைத் தான் காமாட்சி என்று வணங்கினர்.

"திரியத் தூண்டிவிட்டு விளக்கு பொருது, மீராமா!" என்று அப்பத்தாக் கூறிதும்,

உள்ளே இருந்த விளக்கில், வீட்டிலிருந்து கொண்டு வந்த எண்ணையை ஊற்றி, திரியை இரு விரலால் அழுத்தித் திரித்துவிட்டு, விளக்கேற்றியபிறகு வழக்கம்போல் அந்தச் சூலத்தையே பார்த்த மீரஜாவிற்குப் பழைய ஞாபகங்கள் வந்தன.

மீரஜா ஆறாம் வகுப்புப் படித்தபோது, இதேபோல், காமாட்சிக்கு விளக்கேற்றியவள், அப்பத்தாவிடம், "நேத்து டீவில 'காஞ்சிக் காமாட்சி'னு ஒரு படம் போட்டாங்களே! அந்தக் காமாட்சியா அப்பத்தா இவங்க?" என்று கேட்டாள்.

"இல்ல" என்றவர், 'ஆஹா சாமிய பத்தி துருவ ஆரம்பிக்கிறாளே?' என்று நினைத்து,

"எந்தக் காமாட்சியா இருந்தா என்ன? கும்பிடு." என்று அப்பத்தா கூறிய விதமே, மீரஜாவிற்கு ஆர்வத்தைத் தூண்டியது.

அப்பத்தாவும், பேத்தியும் சாமி கும்பிட்டுத் திரும்பும்போது, கோயிலுக்கு வந்துகொண்டிருந்த, எதிர்வீட்டு இந்திராக்காவைப் பார்த்தவள்,

"அப்பத்தா! நான் விளையாடப் போயிட்டு வர்றேன்!" என்று கூறி பதிலைக்கூட எதிர்பாராமல் ஓடி, இந்திராக்கா முன் நின்று, அதே கேள்வியைக் கேட்டாள்.

"இதுகூடத் தெரியாமலா தினமும் அப்பத்தா கூடக் கோயிலுக்கு வர்ற?" என்று கூறிவிட்டு,

"கொஞ்சம் பொறு சாமி கும்பிட்டுட்டுச் சொல்றேன்." என்றாள்.

சாமி கும்பிட்டு அமர்ந்த இந்திராக்கா, "இந்தக் காமாட்சி நம்ம மூதாதையர்?"

"மூதாதையரா? அப்டீனா?"

"உன்னை மாதிரி, என்னை மாதிரி நம்ம வம்சத்துல பிறந்த பொண்ணு."

"சாதாரணப் பொண்ணா? எப்டி சாமி ஆனாங்க?"

"இந்த ஊர் மக்களுக்காக உயிர தியாகம் பண்ணாங்களாம்."

"எதுக்கு?"

"அதெல்லாம் எனக்குத்தெரியாது… இவங்க நம்ம வீட்டு தெய்வம்… மத்த சாமிய எல்லாம், யார் வேணும்னாலும் கூட்டமா போய்க் கும்பிடுவாங்க… ஆனா நம்ம காமாட்சிய, நம்ம பங்காளிகள் மட்டும் தான் கும்பிடுவோம். அதனால காமாட்சியும் நம்மல நல்லா பார்த்துக்குவா." என்று இந்திராக்கா கூறியதிலிருந்து,

'இந்தக் காமாட்சி யார்? ஏன் உயிர்த்தியாகம் பண்ணாங்க? எப்படித் தெய்வம் ஆனாங்க?' என்று மீரஜாவிற்கு ஏகப்பட்ட சந்தேகங்கள்…

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1179


கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
மாலினி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறா பரவால்ல.. நாகராணி நல்ல பெண்தானா.. யாருப்பா அந்த காமாட்சி.. குலதெய்வம்ம்மா..
 

aas2022-writer

Well-known member
மாலினி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறா பரவால்ல.. நாகராணி நல்ல பெண்தானா.. யாருப்பா அந்த காமாட்சி.. குலதெய்வம்ம்மா..
காமாட்சி, வீட்டுதெய்வம் அதாவது கன்னி தெய்வம் னு சொல்வாங்க சிஸ்... ஏதாவது கன்னிப் பெண் இறந்துட்டா அவளை தெய்வமா நினைச்சுக் கும்பிடுவாங்க...
 

Sspriya

Well-known member
மாலினி செயலில் மீராக்கு எந்த பாதிப்பும் வரல அதுவே போதும்...நாகராணி ஏன் தனியா போனும் சொல்றா 🙄🙄🙄🙄... அவ புருஷன் கூட அவ கூட பேசறது இல்ல எதுக்கு இப்படி 🙄🙄🙄... காமாட்சி அம்மன் பத்தி முழுசா தெரிஞ்சிக்க ஆவல் 😍😍... மனோ விட பெரிய வில்லங்கம் யார இருக்கும் 🤔🤔🤔🤔
 

Aathisakthi

Well-known member
ஆஹா...அடுத்த புயல் காமாட்சி யா!!!!தாத்தோய் அப்பத்தா....☺️☺️☺️☺️☺️☺️
 
Top