கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-18

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-18


வீட்டு தெய்வம் காமாட்சி பற்றி மீரஜா கேட்டபோது,

எல்லா விசயங்களுக்கும் விளக்கம் கொடுக்கும் அப்பத்தாவும், தாத்தாவும் இதற்கு மட்டும் பதில் சொல்வதில்லை…

தாத்தாவிடம் கேட்டால், "நான் எந்தச் சாமியையாவது கும்பிட்டுப் பார்த்திருக்கியா டா? பின்ன? எனக்கு எப்படித் தெரியும்?" என்று கூறிவிட்டு வேறுபேச்சுக்குத் தாவிவிடுவார்.

அப்பத்தாவோ, "எனக்கும் இந்திரா சொன்னவரைக்கும்தான் மீராமா தெரியும்." என்று கூறிவிட்டு, உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்.

அன்றிலிருந்து தினமும் சூலத்தைப் பார்த்தபடி, "நீ யாரு?" என்று வரிசையாகக் கேள்விகள் கேட்பாளே தவிர வேண்டுதல் எதுவும் வைப்பதில்லை.

அதே போல் இன்றும் சூலத்தைப் பார்த்தபடி நின்றவளிடம்,

"சாமியக் கையெடுத்துக் கும்பிடனும்." என்று அப்பத்தாக் கூற,

கையெடுத்துக் கும்பிட்டவாறே சூலந்தையே பார்த்தாள்.

"கண்ணு ரெண்டையும் மூடிட்டுக் கும்பிடு மா" என்று வழக்கம்போல அப்பத்தாக் கூற,

அப்பத்தா நின்றிருந்த பக்கம் இருக்கும் ஒரு கண்ணை மட்டும் மூடி, மறு கண்ணால் சூலத்தைப் பார்த்தபடி நின்றாள்.

சாமி கும்பிட்டு விட்டு அமர்ந்த அப்பத்தா,

"அப்பத்தாவோட வலது காது தோடு திருகாணியக் காணோம் மீராமா… எங்க விழுந்துச்சுன்னு தெரியல… காலைல இருந்து தேடுறேன்." என்று கவலையாகக் கூறிய அப்பத்தாவைப் பார்க்க மீரஜாவிற்குப் பாவமாக இருந்தது.

‘எங்க விழுந்திருக்கும்?’ என்ற யோசனையுடன் திரும்பிப்பார்த்த மீரஜாவின் பார்வையில் காமாட்சியாகிய சூலம் தெரிய,

"தினமும் உன்னைக் கும்பிட வர்றாங்கல்ல? அவங்கத் தோட்டோட திருகாணி எங்க இருக்குன்னு காட்டக் கூடாது?" என்று மனதிற்குள் கேட்டாள்.

அப்பொழுது "நெல்லுகுதிருக்குக் கீழ ஒரு சிவப்பு டப்பா இருக்கும். அங்க பாரு" என்று யாரோ, யாருடனோ பேசிய குரல் மட்டும் மீரஜாவின் காதில் விழ, அது மீரஜாவின் கேள்விக்குப் பதில் தருவதைப் போல் இருந்தது.

"இது நீ எனக்குத் தர்ற பதிலா காமாட்சி?" என்று கேட்டாள்.

அவள் கவனம் மாறியது தெரியாமல் "வேற தோடு போட்டிருக்கிறத உங்க தாத்தா இன்னும் கவனிக்கல… நீ ஒரு தடவ வீட்ட நல்லா பெருக்கிப் பாக்கிறியா?" என்று மீரஜாவிடம் பேசிக்கொண்டிந்தார்.

'எது?... தோடத் தேடித் தரவா?!! விளையாடப் போகனுமே?” என்று நினைத்தவள்,

"நெல்லுக்குதிருக்குக் கீழ சிவப்புக்கலர் டப்பா இருக்கும். அங்க பாருங்க... இல்லைனா, நான் விளையாடிட்டு வந்து தேடித்தர்றேன்” என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டாள்.

"சோம்பேரிக்கழுத… விளையாடப் போறேன்னு சொல்லவேண்டியதுதானே? வாய்க்கு வந்தத சொல்லிட்டு ஓடிருச்சுப் பாரு.” என்று புலம்பியபடியே வழக்கம்போலத் தனியாக வீடு திரும்பினார்.

ஆமாம்! தினமும் கோயிலுக்கு வரும் மீரஜா, சாமி கும்பிட்டதும் விளையாட ஓடிவிடுவாள்... அப்பத்தா, தனியாக வீடு வருவது வழக்கம்தான்.

வீட்டிற்கு வந்து சிறிது நேரம் அமர்ந்துவிட்டு, பூஜையறை விளக்கில் குங்குமமிட்டு, தீக்குச்சியால் விளக்கின் திரியை எண்ணைக்குள் இழுத்தபடி, “சாந்தி! சாந்தி!” என்று விளக்கைக் குளிரவைத்தார். பிறகு

பவானியின் சமையலறைக்குச் சென்று, பவானியுடன் பேசியபடி இரவு உணவிற்காகச் சப்பாத்திக்குப் பிசைந்தார்.

மாவை உருட்டி அதன்மேல் ஈரத்துணியை வைத்து மூடிவிட்டு எழுந்தவர் கண்ணில், நெல்குதிருக்குக் கீழே ஏதோ சிவப்பு நிறத்தில் தெரிந்தது.

அதைப் பாத்ததும் கோயிலில் வைத்து மீரஜா, விளையாட்டாகக் கூறியது, அப்பத்தாவின் ஞாபகத்திற்கு வந்தது.

தன்னையும் அறியாமல் அப்பத்தாவின் கால்கள் நெல் குதிர் அருகில் செல்ல, கீழே சிவப்புநிறத் துணி கிடந்தது.

'அவள், சிவப்பு நிற டப்பா என்றாளே?' என்று தோன்றினாலும்,

அப்பத்தாவின் கரம் அந்தச் சிவப்புத்துணியை எடுக்க, அதிலிருந்து அப்பத்தாவுடைய தோட்டின் திருகாணி விழுந்தது.

ஒருகணம், அப்பத்தாவிற்குத் தன் கண்களை நம்பமுடியவில்லை...

‘இது இங்க இருக்குன்னு, எப்படி மீராமாவுக்குத் தெரிஞ்சுச்சு?” என்று குழம்பிப் போனவர், மீரஜா வருகைக்காகக் காத்திருந்தார்.

வழக்கம்போல மாலை மயங்கி இருள் பரவ ஆரம்பித்த வேளையில் வீட்டுக்குத் திரும்பிய மீரஜா, திண்ணையிலிருந்த தண்ணீரால் கால்களைக் கழுவ,

“மீராமா இப்படி வா!” என்று அப்பத்தா, ரகசியமாகத் தங்களது அறைக்குள் அவளை அழைத்துச்சென்று கேட்டார்.

“அப்டீனா அங்கதான் திருகாணி இருந்துச்சா?" என்று மீரஜா ஆச்சரியமாகக் கண்களை விரித்துச் சிரிக்க,

'இவளே ஆச்சரியப்படுறா?' என்று பார்த்த அப்பத்தா,
"ஆமா! அதுனாலதான கேட்கிறேன்… உனக்கு எப்படித் தெரிஞ்சுச்சு."

" அதுவா, நான் காமாட்சிட்ட கேட்டனா? அந்தநேரத்துல யாரோ இதைச் சொன்னாங்க. நானும் அப்போதைக்குத் தோடு தேடுற வேலையிலிருந்து தப்பிக்கிறதுக்குச் சும்மா, அவங்க சொன்னதையே சொன்னேன் அப்பத்தா.” என்று சிரித்துக்கொண்டே கூறியவளை இமைக்காமல் பார்த்தவர்,

"யார் சொன்னாங்க? என்னன்னு சொன்னாங்க?" என்று கேட்டார்.

"நெல்லுகுதிருக்கு கீழ சிவப்பு டப்பால இருக்குன்னு சொன்னாங்க… ஆனா யார்னு தெரியல…."

'காமாட்சியா பேசீருப்பா?... இல்லயில்ல!... கோயிலுக்குப் பக்கத்து வீட்ல இருக்கிறவங்களா இருக்கும். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி எதார்த்தமா மீராமா வும் சொந்ன இடத்துல கிடைச்சுடுச்சு.’ என்று தன் மனதுக்கு ஏற்றார்போல், தானே சமாதானம் செய்து கொண்டார்.

மீரஜா ஒன்பதாம் வகுப்பு ரிவிசன் எக்சாமிற்குப் படித்துக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த அப்பத்தாவிற்கு ஏதோ உணர்த்த, மீரஜாவிடம் வந்து,

“இனி ஆத்தங்கரைப்பக்கமெல்லாம் தனியா போகாத மீராமா... “

“ஏன் அப்பத்தா?”

“உன்கூடப் படிக்கிற பிள்ளைகள்லாம் வயசுக்கு வந்துருச்சுகல்ல? அதான் சொல்றேன்” என்றார்.

“அப்போ ஆத்துக்குள்ள போய் விளையாடலாமா?” என்றவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவர்,

செல்வராஜையும், மாலினியையும் அழைத்து, “வர்ற தை மாச பொங்கலுக்கு மீராமாவுக்குப் பாவாட தாவணி எடுத்துடுவோம் செல்வம்... கூடிய சீக்கிரமே பெரியமனுசி ஆயிடுவா.” என்று கூறி அனுப்பினார்.

இதையே தாத்தாவிடமும் அப்பத்தாக் கூற, அவர்கள் கையில் ஒரு பெண் வளர்ந்து விரைவில் பெரியவளாகப் போகிறாள் என்று நினைத்த தாத்தாவிற்கு அளவில்லாத சந்தோசம்...

அடுத்தநாளே தாத்தா, அப்பத்தாவையும், மீரஜாவையும் அழைத்துக்கொண்டு, ஜவுளிக்கடைக்குச் சென்று, மீரஜாவிற்குப் பட்டுப் பாவாடை தாவணிக்குத் துணி எடுத்தனர்.

"பாவாடை, தாவணி போட்டுட்டா, கையிலும் கழுத்திலும் தங்கம் போடனும்" என்று அப்பத்தா கூற,

பள்ளிக்குச் செல்வதற்குத் தகுந்தார்போல், கழுத்தை ஒட்டினாற்போல் மெல்லிய செயினும், கைக்கு ஒன்றாகப் பெரிய வளையலும் வாங்கி வந்து, சந்தோசமாகத் தன் குடும்பத்தினரிடம் காட்டினர்.

செல்வராஜும், மாலினியும் சந்தோசமாகப் பார்க்க, பவானியின் கண்களில் பொறாமை கொழுந்துவிடத் தொடங்கியது.

ஏனென்றால் பவானிக்கும் இரண்டாவதாகப் பெண்குழந்தை பிறந்திருந்தது.

ஆனால் மீரஜாவிற்கு அந்த வீட்டில் இருந்த செல்வாக்கு சந்தோஷிக்கோ, பவானியின் மகள் சுந்தரிக்கோ இல்லை.

அந்த வீட்டில் செல்வராஜ் மாலினியின் குடும்பம் மாடியில் இருக்க, தனராஜன், பவானி குடும்பம் கீழ்வீட்டிலிருந்தாலும், தாத்தா அப்பத்தாவிற்குத் தனிச் சமையலறை, பவானி, தனராஜன் குடும்பத்திற்குத் தனிச் சமையலறை என்று மூன்று குடும்பமும் ஒரே வீட்டில், மூன்று குடித்தனம் போல் தனித்தனியே சமையல் செய்தனர்.

ஆனால், மீரஜா மட்டும் அனைவருக்கும் பொதுவானாள். காரணம்... அவள், தாத்தா அப்பத்தாவின் செல்லப் பேத்தி...

தாத்தா, பேரன் பேத்திகளுக்கு எதையும் வாங்கிக் கொடுப்பதில் பாகுபாடு பார்க்காவிட்டாலும்,

நொறுக்குத்தீனியிலிருந்து, நகைவரை மீரஜா விரும்புவதுதான் மற்றவர்களுக்குக் கிடைக்கும்.
ஐஸ்கிரீம் கேட்டால் கூட மீரஜா கேட்டால் மட்டுமே அனைவருக்கும் ஐஸ்கிரீம் கிடைக்கும்.

அவள், "ஐஸ்கிரீம் வேணாம் தாத்தா, பனம்பழம் வாங்கித் தாங்க!" என்று கேட்டால், மறுபரிசீலனையே கிடையாது. அனைவருக்கும் பனம்பழம்தான்.

சுப்பையாபிள்ளையிடமும், முத்துராக்கம்மாளிடமும் ஏதேனும் காரியம் ஆகவேண்டுமானால், செல்வராஜ், தனராஜனே மீரஜாவைத்தான் தூது அனுப்புவர்.

மீரஜா கேட்டுவிட்டால் சுப்பையாபிள்ளையும் முத்துராக்கம்மாளும் மறுப்பதே இல்லை...

ஆனால் மீரஜாவும், அத்தியாவசியமாகத் தேவைப்படுவதை மட்டுமே கேட்பாள். அல்லது தம்பி, தங்கைகள் கேட்பதையே தானும் கேட்பாள்.

'மீரஜாவிடம் கோபம்கொண்டால் முதிய தம்பதி இருவரின் வருத்தத்திற்கு ஆளாக நேரிடும்' என்ற பயம் அந்தக் குடும்பத்தில் சிறியவர் முதல், பெரியவர்வரை அனைவருக்கும் இருந்தது உண்மை.

வருடத்திற்கு ஒருமுறை செல்லும், கோடைச் சுற்றுலாவிற்குக்கூட மீரஜா சொல்வதுதான் நடக்கும்.

ஒரு சமயம்,

“இந்த வெயிலுக்கு நாம ஏற்காடு, சிறுமலை இப்படி ஏதாவது குளிர்ப்பிரதேசத்துக்குப் போகலாம் என்று தன் கணவன் தனராஜனிடம் முதலிலேயே சொல்லிவைந்தாள் பவானி.

தனராஜனும் தாத்தாவிடம் கூற, அவரும் சம்மதித்து விட்டார்.

முழுஆண்டு விடுமுறை வந்ததும்,

மீரஜா, தாத்தாவிடம் சென்று, "தாத்தா இந்த வருசம், நாம சென்னைக்குப் போவமா?” என்று கேட்டதும்,

“போகலாமே... ஆனா, சென்னை ஏன்?” என்று கேட்டார்.
"அங்க பெரிய பீச் இருக்காம். சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்காம்... விஜிபி ன்ற பீச் ரொம்ப நல்லா இருக்குமாம். பர்மா பஜார்ல கிடைக்கிற, அத்தோ, மொய்ஞா, பேஜோ லாம் ரொம்ப டேஸ்ட்டா இருக்குமாம்,” என்று வரிசையாக அடுக்கிக்க்கொண்டே போக,

சென்னையே உறுதியானது...

முதலில் பவானிக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும், பவானியும் சென்னைக்குச் சென்றதில்லை என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை…

இதுபோலப் பல சம்பவங்கள்…

"ஆனால் இன்னைக்கு? மீரா இன்னும் வயசுக்கு வரல… அதுக்குள்ள கிட்டத்தட்டப் பத்து பவுனுக்கு நகை வாங்கியிருக்காங்க. ஃபாரமாலிட்டிக்காவது மத்தக்குழந்தைகளுக்கும் டிரஸ்சாவது வாங்கி வந்திருக்கலமே?" என்று தன் கணவன் தனராஜனிடம் வத்தி வைத்தாள்.

தனராஜனோ எப்பொழுதும் போல் தலையாட்டி வைத்தான்.

"நீங்க இப்படியே தலையாட்டிக்கிட்டு இருங்க… ஒருநள் வீடு, வாசல், தோப்புத் தொரவுன்னு அவ்வளவையும் பேத்திப் பேருக்கு எழுதி வச்சுடப் போறார்."

“மீரா, அவங்க சொல்றதெல்லாம் செய்றா… அவங்க ரெண்டு பேர் கூடத்தான் பொழுதக் கழிக்கிறா... நம்ம பிள்ளைங்க நாம சொல்றதையே கேட்காதுக.”

“அதுக்கு?”

"அம்மா வேணும்னா நீ சொன்னமாதிரி செய்யலாம்… ஆனா ஐயா, எதுலயும் நேர்மையா நடந்துப்பார்… அதனால நீயும் குழம்பி, என்னையும் குழப்பாத…" என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

வழக்கம்போலத் தனியாகப் புலம்பித்தீர்த்தாள் பவானி.

கார்த்திகைக் கடைசி வாரம், சாயந்திரம் தோழிகளுடன் மீரஜா விளையாடிக் கொண்டிருந்தபோது, வேகமாக ஓடியதில் மூச்சு வாங்க, அருகிலிருந்த வீட்டுத்திண்ணையில் அமர்ந்தாள்.
பிள்ளையார் கோயிலில் ஐயப்ப ஸ்வாமிகளின் பஜனை, பூஜை முடிந்து, பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் ஒருவன் மீரஜாவைப் பார்த்துச் சிரிக்க, புருவம் சுருக்கி, 'யாரைப்பார்த்துச் சிரிக்கிறான்?' என்று தனக்குப் பின்னால் பார்த்தாள்.

அவளுடன் விளையாடிய தோழிகள் தவிர அப்பகுதியில் எவருமில்லை…

"ப்சு… யாரோ, யாரையோ பார்த்துச் சிரிக்கிறார்கள்!' என்று எண்ணியவளாய், எழுந்து தோழிகளை நோக்கிச் செல்ல,

"சின்னக்கண்ணன் அழைக்கிறான்…
ராதையை, பூங்கோதையை
அவள் மனம்கொண்ட ரகசிய ராகத்தைப்பாடி,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்…"

என்ற பாடல் ஏதோ ஒரு வீட்டிலிருந்து கசிய,

மீரஜா தன்னிச்சையாக அப்படியே நின்றாள்.

மீரஜா விளையாவராமல் நிற்பதைக்கண்ட தோழி டாலி செல்சியா,

"வா மீரா! இன்னும் ஒரு ஆட்டம் ஆடிடுவோம்… இருட்டப் போகுது." என்றதும்,

"இது என்ன படம் டாலி?"

"எது?" என்று கேட்டபடி, எதிரில் இருந்த சுவரில் ஒட்டப்பட்டுக் கிழிந்து தொங்கிய, சினிமாப் போஸ்டரைத் தலை சாய்த்துப் பார்த்தாள்.

டாலி செல்சியா சினிமா போஸ்டரைப் பார்த்தும்,

"லூசு! நான் போஸ்டர சொல்லல. எங்கயிருந்தோ பாட்டுக் கேட்குது பாரு… அந்தப் பாட்டு, என்ன படம்னு கேட்டேன்." என்று சிரித்தாள்.

"ம்ம் பழைய பாட்டுமாதிரி தெரியுதே மீரா?"

"ம்ம்… ஆனா கேட்க எவ்வளவு நல்லாருக்கு. இல்ல?" என்றவளைப் பார்த்த டாலி செல்சியா,

"வயசாயிட்டா இந்த மாதிரி பாட்டுதான் பிடிக்கும் பாட்டி!" என்று கூறிவிட்டு, மீரஜாவின் கையில் அகப்படாமல் ஓடினாள்.

அவளைத் துரத்திய மீரஜாவிற்கு அடி வயிற்றைப் பிடித்துக் கசக்கியதுபோல் சுருக் கென்று வலித்தது.

ஒரு நிமிடம் நின்றவள், வலித்த பகுதியில் கை வைத்துப் பார்த்தாள்… இப்பொழுது வலிக்கவில்லை…

‘வேகமா ஓடவும் அப்படி வலிச்சிருக்கு' என்று நினைத்தவள், மீண்டும் டாலி செல்சியாவைத் துரத்திக்கொண்டு ஓட…

தோழி ஒருத்தியின் அம்மா, "ஏய்! பிள்ளைகளா வீட்டுக்குப் போங்க! பொழுதடையப்போகுது." என்று கூறயபடி தன் மகளைப் பார்த்து,

‘வா!’ என்று தலையசைத்து விட்டுச் சென்றதும்,

அந்தத் தோழியும் வீட்டிற்குக் கிளம்ப, மற்றவர்களும் வீட்டிற்குக் கிளம்பினர்.

வீட்டிற்கு வந்தவள் வழக்கம்போலத் தாத்தாவுடன் பேச்க்கொண்டே வீட்டுப்பாடத்தை எழுதினாள்.

"சாப்பாடு ரெடியாயிடுச்சு" என்று கூறியபடி அமர்ந்த அப்பத்தா,

அந்த மூவ் வ எடுத்துத் தா மீராமா… காலையிலருந்து குறுக்குக் கடுக்குது." என்று கூறவும், சட்டென்று எழுந்தவளுக்கு மீண்டும் அடிவயிற்றில் ‘சுருக்’ என வலித்து, நின்றது.

அப்பத்தாவிற்குத் தைலத்தை ஏடுத்துக் கொடுத்துவிட்டு, நோட்டுப் புத்தகங்களை டேபிளில் வைத்துவிட்டு, சாப்பிடுவதற்காகக் கை கழுவச்சென்றாள்.

இரவு எட்டு முப்பது மணியளவிவ், தாத்தாவுடன் சேர்ந்து வீட்டு வாசலில், கர்நாடக சங்கீதம் கேட்டவாறே நடை பயில…
வேகமாக வெளியே வந்த பவானி, அப்பத்தாவின் காதில் கிசுகிசுத்தாள்.

வாசல் படியில் அமர்ந்து தாத்தாவும் பேத்தியும் பேசுவதைக் கேட்டபடி இருந்த அப்பத்தா, பவானி கூறிய விசயத்தில் கண்கள் மலர,

"மீராமா… இங்க வா!" என்று அழைத்தார்.

"இதோ ஒரு நிமிசம்… நீங்க சொல்லுங்க தாத்தா…" என்று தாத்தாவின் பேச்சில் ஆர்வமானவளை,

"அப்பத்தாவுக்குக் காலு பிடிச்சிக்கிருச்சு. சீக்கிரம் வா!" என்றதும்,

மீரஜாவுடன் தாத்தாவும் சேர்ந்து வர,

"ஒன்னுமில்ல. நீங்க கொஞ்சம் இருங்க. இவள மட்டும் கூட்டிட்டுப் போறேன்…" என்று முகமெல்லாம் பூரிக்கப் பேசிய முத்துராக்கம்மாளைப் பார்த்தவர்,

"என்ன விசயம்?" என்று கேட்டார்.

"வந்து சொல்றேன்?" என்று மீரஜாவுடன் உள்ளே சென்றவர்,

பதினெட்டு வயது இளஞ்சிட்டாய் துள்ளிவந்து தாத்தாவின் எதிர்ல நின்ற அப்பத்தா,

"வாயத் திறங்க!" என்று கூற,

"என்ன முத்துரா?" என்று கேட்டபடியே வாயைத்திறந்தார்.

கையிலிருந்த நாட்டுச் சர்க்கரையைத் தாத்தாவின் வாயில் ஊட்டியவர்,

"மீராமா வயசுக்கு வந்துட்டா ங்க!" என்று இவ்வுலகத்தையே வென்ற குதூகலத்துடன் கூறினார்.

“உனக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே, கொஞ்ச நாள்ல மீராமா பெரியவளாயிடுவான்னு தோணுச்சுதானே? தை மாசப் பொங்கல் அன்னைக்கு மீராமாவுக்குப் பாவாடை தாவணி போடலாம்னு நினைச்ச, கார்த்திகைலயே நம்ம பேத்தி பெரியவளாயிட்டா…” என்று சிரித்தபடி,

வேகமாக வீட்டினுள் சென்ற தாத்தாவிடம், "மீராமாக்கு குளிக்க ஊத்துறோம். நீங்க உள்ள போய் உட்காருங்க." என்று கூறிவிட்டு,

“மாலினி... செல்வம்… சந்தோஷி…” என்று அப்பத்தா, சந்தோச மிகுதியில் சற்றே சப்தமாக அழைக்க, அக்கம் பக்கத்திலிருந்தவர்ளும் எட்டிப்பார்த்து,

"என்ன முத்து?"

"என்னங்கக்கா?"

"என்னங்கம்மா இந்த நேரத்துல இவ்வளவு சத்தமாக் கூப்பிடுறீங்க?" என்று ஒவ்வொருவரும் விசாரிக்க,

"கொஞ்சம் இருங்க... எம் மகனும், மருமகளும் வந்துக்கிறட்டும்." என்று பூரிப்பாகச் சொன்னவர்,

மாடியிலிருந்து செல்வராஜும், மாலினியும் இறங்கி வந்ததும்,

இருவரின் வாயிலும் நாட்டுச் சர்க்கரையை ஊட்டியவர்,

"உங்களுக்குப் பேரன் பொறந்துட்டான்… மீராமா பெரியவளாட்டா." என்றதும், மீரஜாவைப் பார்க்கும் ஆவலுடன் இருவரும் விட்டினுள் சென்றனர்.

தாத்தா மற்றும் தனராஜன் அமர்ந்திருந்த ஷோபாவில் செல்வராஜ், அமர்ந்தான்.

அவர்கள் இல்லத்தில், பல தலைமுறைக்குப் பின் முதன் முதலாய் நடைபெறும் வைபவம்… மூன்று ஆண்களுமே சந்தோச மிகுதியில் ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் புன்னகைத்துக் கொண்டனரே தவிர, பேச்சுக்களே இல்லை…

மாலினி, மீரஜாவைப் பார்க்கக் கொள்ளைப்புறத்திற்குச் சென்றாள்.

நன்றாகத் தலை துவட்டி, சந்தனத்துாள், லவங்கம், ஜாதிக்காய், அகில் கட்டைப் பொடியுடன் பன்னீர் கலந்த பொடி போன்றவை சேர்த்த வாசனை மிகுந்த சாம்பிராணி போட்டுக் காய வைத்து, லூசாகப் பின்னலிட்டு, பூவைத்தனர்.

மீரஜாவின் சட்டையை டக்-இன் செய்து, அப்பத்தா ஒரிருமுறை கட்டிய காட்டன் சேலையைக் கிழித்து, பாவாடை சட்டையின் மேல் தாவணியாகக் கட்டிவிட்டனர்.
பிறகு, காதில் ஜிமிக்கி, கழுத்தில் தாத்தா வாங்கித்தந்த செயின், கைகளில் தங்க வளையல், காலிலிருந்த கொலுசைக் கழட்டிவிட்டு புதுக்கொலுசு மாட்டி, அறையில் அமர வைத்து, மீரஜாவிற்கு முன்னால் மரத்தாலான உலக்கையைப் போட்டனர்.

அதற்குள் விசயம் ஊர் முழுவதும் பரவ, இரவு நேரமாக இருந்தாலும்,

ஒவ்வொருவராய், பால், பிஸ்கட் நாட்டுக்கோழி முட்டை, தோல்உளுந்தம் பருப்பு, என்று வீட்டிலிருந்த பொருட்களுடன் வந்து பார்த்தவண்ணம் இருந்தனர்.

‘என்ன நடக்கிறது?’ என்று யோசிக்கும் முன்னர், தேவதைபோல் அலங்காரம் செய்து அமரவைத்ததும்…

மனதிற்குள் சின்னதாகச் சந்தோச படபடப்பு…

“எவ்வளவு அழகா இருக்கா?” என்று குடும்பத்தினர் மீரஜாவிற்கு நெட்டிமுறித்துத் திருஷ்டி கழிக்க, திடீரென்று தான் அழகானதைப் போன்ற எண்ணம்...

ஏற்கனவே பெரியவளாகும் விசயங்களைப் பக்குவமாக அப்பத்தா கூறியிருந்ததாலும், வீட்டினர் அனைவரும் சந்தோசமாக இருப்பதைப் பார்த்தும், மீரஜாவின் மனம் சந்தோசத்தில் மிதந்தது…

தங்களின் சந்தோசத்தை மேலும் வெளிப்படுத்தும் விதமாக, வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர் ஸ்பீக்கரில், எஃப்எம் சேனலைத் தனராஜன் ஆன் செய்ய,

அதே நேரத்தில் மீரஜாவின் கழுத்தில், புத்தாக வாங்கிய மெல்லிய செயின் மட்டுமிருப்பதைப் பார்த்த அப்பத்தா, நல்ல வேலைப்பாடுடன் கூடிய கழுத்தை நிறைக்கும், கல் நெக்லசை மீரஜாவிற்கு மாட்டிவிடும்போது,

எஃப்எம் மில்

"சின்னக்கண்ணன் அழைக்கிறான்…" என்று பாட ஆரம்பித்தது.

டீவியில் பாடுகிறதென்று எண்ணி, ‘அந்தப் பாடல் எந்தப் படத்தில் இருக்கிறது?’ என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மீரஜா வேகமாக எழுந்தாள்.

"ஏய்! ஏய்! இங்கிருந்து, இந்த உலக்கையைத் தாண்டி நாங்கள் சொல்லும்வரை வெளியே போகக் கூடாது... சரியா?” என்று கூறியபடி பவானி மீரஜாவின் தோள்களைப் பற்றி அமர வைத்தாள்…

பவானியின் கூற்று எதுவும் காதில் விழாமல், பொம்மைபோல் அமரவைத்த இடத்தில் அமர்ந்த மீரஜா,

கண்கள்மூடி பாடலை ரசித்தாள்…


"நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா...
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா…"

என்ற வரிகளைக் கேட்டவள், இமைகளைத் திறக்காமல், தன்னைமறந்து புன்னகைக்க,

"உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகே

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை, பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்…"

.
வார்த்தைகளின் எண்ணிக்கை - 1640

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
மீரா பெரிய பொண்ணா ஆகிட்டா.. சூப்பர்.. சின்ன கண்ணன் அழைக்க ஆரம்பிச்சிட்டான்.. 😘 மீரா மனசுல ஆசைய தூவ ஆரம்பிச்சிட்டான்.. 😍
 

Sspriya

Well-known member
Woww so lovely 💞💞💞😍... அப்பத்தா சந்தோசமா இருக்காங்க 😍😍😍... மீரா பெரிய பொண்ண ஆனதுல அவங்களுக்கு தான் ரொம்பவே சந்தோஷம் 😍😍... சூப்பர்
 

aas2022-writer

Well-known member
மீரா பெரிய பொண்ணா ஆகிட்டா.. சூப்பர்.. சின்ன கண்ணன் அழைக்க ஆரம்பிச்சிட்டான்.. 😘 மீரா மனசுல ஆசைய தூவ ஆரம்பிச்சிட்டான்..
ஆமா சிஸ்... இனிதான் இருக்கு...
 

aas2022-writer

Well-known member
Woww so lovely 💞💞💞😍... அப்பத்தா சந்தோசமா இருக்காங்க 😍😍😍... மீரா பெரிய பொண்ண ஆனதுல அவங்களுக்கு தான் ரொம்பவே சந்தோஷம் 😍😍... சூப்பர்
பெண் குழந்தை இல்லாத வீட்டில் பிறந்தவளாயிற்றே?...
 
Top