கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-19

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-19

பதினோராம் நாள் தலைக்குத் தண்ணீர் ஊற்றி, உறவினர்களை அழைத்து, சிறிய அளவில் சடங்கு வைத்து, மீரஜாவைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

அதுவரை தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து சென்ற மீரஜாவை, சந்தோஷி மற்றும் தோழிகளுடன் காரில் அனுப்பி வைத்தார்கள் தாத்தாவும், அப்பத்தாவும்.

காரில் தாத்தாவைத் தவிர யாரும் பயணம் செய்ததில்லை… தாத்தாவுடன் சென்றால் மட்டுமே செவரலெட் டில் குடும்பத்தினர் பயணம் செல்ல முடியும்.

அப்படியிருக்க, மீரஜாவிற்குத் தனது காரை, தாத்தா அனுப்பியது, பவானிக்குச் சற்றுக் கோபத்தைத் தந்தது.

‘தனராஜனிடம் கூறினால் அதற்கும் ஏதாவது காரணம் சொல்வான்’ என்று நினைத்தவள்,

‘சொல்லிவைப்போம்… எறும்பு ஊறக் கல்லே தேயும்னு சொல்வாங்க… என்னைக்காவது அவர் மரமண்டையில் உறைத்தால் சரி!’ என்று முடிவுக்கு வந்த பவானி தனராஜனிடம்,

"ஏங்க! உங்க ஐயா ஒருநாளாவது நமக்குச் செவரலெட் குடுத்து அனுப்பியிருப்பாரா?" என்று ஆரம்பித்தவள் முன், தன் கையை நீட்டி, ‘நிறுத்து’ என்பது போல் சைகை செய்து,

"நேத்தே என்ட சொல்வேன்னு நினைச்சேன்… பரவாயில்ல ஒரு நாளாவது யோசிச்சிருக்க... இப்ப என்ன? மீராவ ஐயாவோட கார்ல ஸ்கூலுக்கு அனுப்பிட்டார். அதானே? காரையே மீராவ வச்சுக்கச் சொல்லலையே?"

"அதுவும் ஒருநாள் செய்வார்."

"உன்னைய என்னால புரிஞ்சுக்க முடியல… மீராவுக்குப் பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ற, நல்ல சாப்பாடு சமைச்சா, அவளக் கூப்பிட்டு, என்னோடயும் நம்ம பிள்ளைகளோடயும் சேர்ந்து சாப்பாடு போடுற… இதெல்லாம் நல்லாதான் இருக்கு… ஏன்னே தெரியல அப்பப்பக் கிறுக்கு புடிக்குது..." என்று சிரித்தான்.

"அது... பிள்ளைகளுக்குள்ள நான் பாகுபாடு பார்க்கல… ஆனா உங்க ஐயா பாகுபாடு பார்க்கும்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு…"

"இதெல்லாம் ஒரு பிரச்சனைனு என்ட வர்ற பாரு." என்று சிரித்தபடியே சென்று விட்டான்.

வழக்கம்போலத் தன் தலையில் லேசாகத் தட்டிக்கொண்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்பவானி.

பள்ளிக்குச் சென்ற மீராவைத் தோழிகள் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர்…

"பாவாடை தாவணி ல நல்லா இருக்க மீரா." என்று தோழிகள் கூறவும்,

"அப்படியா? அப்போ பாவாடை, சட்டையில நான் நல்லா இல்லையா?" என்று கேட்டாள்.
"அதுல சின்னப் பிள்ளை மாதிரித் தெரிஞ்ச… இப்போ நல்லா பளபளன்னு பெரிய பொண்ணாட்டம் இருக்க…" என்று ஒரு தோழியும்,

"பெரியபொண்ணு ஆயிட்டாவே முகத்துல ஒரு தேஜஸ் வந்துடும்." என்று ஒரு தோழியுமாக மாற்றி, மாற்றி ஏதேதோ கூற, மீரஜாவிற்குத் தன்னைக் கண்ணாடியில் பார்த்தாக வேண்டும் போலிருந்தது.

வீட்டிற்கு வந்ததும், கண்ணாடி முன் நின்று பார்த்தவளுக்கு அவளுடைய உருவம் இடுப்புவரைதான் தெரிந்தது.

மீரஜா எம்பி எம்பிப் பார்க்க,

இந்தக்கூத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா,

"இன்னும் குரங்குச் சேட்டைய விடலயா நீ? இப்ப எதுக்கு இந்தக் குதி குதிக்கிற?"

"என் ஃபிரண்ட்ஸ், பாவாடை தாவணி ல நான் நல்லா இருக்கேன்னு சொன்னாங்க… அதான் பார்த்தேன்…" என்று

மாநிறத்தில், பட்டம்பூச்சிபோல் சிறகடிக்கும் கண்களும், வரிசை மிகலேசாகத் தப்பினாலும் அதுவே ஒரு அழகுடன் விளங்கிய வெண்ணிறப் பற்களும், அளவான சதைப் பற்றுள்ள இதழ்களும், இதழ்களின் கீழே ரசகுல்லாவைப் பாதியாக வெட்டி ஒட்டவைத்ததைப் போன்ற நாடியும், விடிவான நெற்றியும், அந்த நெற்றியில் விழுந்த சுருள் முடியுமாகச் சிரித்தவளைப் பார்க்க அப்பத்தாவிற்குக் கண் கொள்ளவில்லை.

"தாத்தாட்டச் சொன்னா, ஆளுயரத்துக்குக் கண்ணாடி வாங்கி வந்துடுவார். அப்ப வந்துக் கண்ணாடியப் பாரு." என்றவரிடம்,

"அப்பத்தா நான் தாவணி போட்டதும் நல்லா இருக்கேன்னு ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க. அப்படியா?"

"பின்ன? எந்தங்கத்துக்கு என்ன? செஞ்சு வச்சத் தங்கச் சிலையாட்டம் இருக்க."

"நிஜமாவா?"

"ஆமா..." என்று அப்பத்தா கூறவும், மீண்டும் கண்ணாடி முன் நின்றவளைக் கீழே இறங்கி வந்த மாலினி பார்த்து விட்டாள்.

"அடிக்கடிக் கண்ணாடி பார்க்கக் கூடாது மீரா…" என்று கூறிவிட்டு,

"அவ விளையாட வெளிய போயிறாம பார்த்துக்குங்க அத்த. அதச் சொல்லத்தான், அவ குரல் கேட்டதும் அவசரமாக் கீழ இறங்கி வந்தேன்‌" என்றாள்.

"அது எனக்குத் தெரியாதா மாலினி?" என்று சிரித்தவரிடம்,

"அவ உங்களை ஐஸ் வச்சே ஏமாத்திடுவா அத்த…" என்று சிரித்துவிட்டு, மாலினி மாடிக்கு ஏறிச் சென்றுவிட,

மீரஜாவைப் பார்த்து, 'இந்தக்குட்டிப் பெருசானதும் குடும்பமே ஒத்துமையா சந்தோசமா இருக்கு… தாயே கம்பனரியா காமாட்சி! இந்தச் சந்தோசம் என்னைக்கும் எங்கக் குடும்பத்துல நிலைச்சிருக்கனும்.' என்று அப்பத்தா வேண்டினார். அதே பேத்திதான் குடும்பம் சிதறுவதற்குக் காரணமாகப்போவது தெரியாமல்.
மாலினி மாடிக்குச் சென்றதும்,

"அப்பத்தா நான் விளையாடப் போயிட்டு வரவா" என்று மீரஜா கேட்க,

"பார்த்தியா? இப்பத்தான அம்மா விளையாடப் போகக்கூடாதுன்னு சொன்னா."

"ம்ஹும்ஹும்ஹும்ம்ம்… ஏன்?" என்று செல்லம்கொஞ்சிய மீரஜாவின் தாடையைச் செல்லமாகப் பிடித்து,

"பெரிய பொண்ணாயிட்டேல? இனி வீடு, வீட்ட விட்டா ஸ்கூல்... வேற எங்கயும் போகக் கூடாது." என்று அப்பத்தா கூறினார்.

"அதுதான் ஏன்"

"காத்துக் கருப்பு அடிச்சுடும்னுவாங்க… ஆனா… வயசுப் பொண்ணு வெளில திரிஞ்சா கண்டவங்க கண்ணுல படக்கூடாதுல்ல?"

"இதுக்கு முன்னாடி நா விளையாடலையா? அப்பத்தா ப்ளீஸ் ப்ளீஸ்… ஆத்தங்கரைக்குப் போகமாட்டேன்…"

"இனி ஆம்பளப் பசங்ககூடலாம் விளையாடக் கூடாது மீராம்மா"

"சரி! பொம்பளப் பிள்ளைகளோட விளையாடுறேன்…"

"உன் ஃபிரண்ட்ஸ் ஐ நம்ம வீட்டுக்கு வரச்சொல்லு… நம்ம தோட்டத்துல விளையாடுங்க."
"ஏம்பத்தா இப்படிப் பண்றீங்க?"

"உன் ஃபிரண்ட்ஸ் இன்னைக்கு என்ன சொன்னாங்க… முன்ன மாதிரிச் சின்னப்பிள்ளையாத் தெரியாமப் பெரியவளா தெரியுறேன்னு சொன்னாங்கல்ல?"

"ஆமா…"

"அதே மாதிரி தான் மத்தவங்க கண்ணுக்கும் தெரிவ…"

"அதுனால என்ன?"

"உனக்கு இப்ப புரியாது… அப்பத்தா சொன்னாக் கேட்கனும்… சரியா?"

"எனக்குப் போர் அடிக்கும் அப்பத்தா!"

"பெரியவளாயிட்டேல வீட்டு வேலையக் கத்துக்க… நேரம் போறதே தெரியாது… வா! உனக்குக் கோலம் போடச் சொல்லித்தாரேன்."
என்றதும்,

பேப்பரும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு அப்பத்தா முன் அமர்ந்தாள்.

அப்பத்தா சொல்லித் தந்தபடி பேப்பரில், கோலம் போட்டவளைக் கொள்ளைப் புரத்துக்கு அழைத்துச்சென்று, மண் தரையில் கோலப் பொடியால் கோலமிடச் சொல்லித்தந்தார்.

மீரஜா கொஞ்சம் பிசிறு பிசிறாகக் கோலம் போட்டாள்.

"வெரிகுட்… நாளைக்குச் சாயந்திரம் நம்ம வீட்டு வாசல்ல கோலம் போடுற?" என்று அப்பத்தா சொல்லும்போது தாத்தா வந்தார்.

"என்ன பேத்திக்கு டிரைனிங்கா? நடக்கட்டும்... நடக்கட்டும்…" என்று சிரித்தவர் உடல் கழுவச் சென்றதும்,

"வா! நான் பால் காய்ச்சித் தாரேன். தாத்தாவுக்குக் குடுத்துட்டு, உனக்கும் கலந்து குடிச்சுக்க." என்று மீரஜாவையும் அழைத்துக்கொண்டு, அப்பத்தா சமையலறைக்குச் சென்றார்.

ஹாலில் அமர்ந்து, காலையில் படித்த நியூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்த தாத்தாவிடம், மீரஜா பாலைக் கொடுக்க,

"அடடா... என் செல்லம் எனக்குப் பால் கொண்டு வந்து கொடுக்கிறாளே! உனக்கும் பால் எடுத்துட்டு வந்து இப்படி உட்கார்." என்று ஷோபாவில் தன்னருகே அமரச் சொன்னார்.

“சரி” என்று கூறி, மீரஜா துள்ளித்துள்ளி ஓடினாள்.

டைனிங் டேபிளில், தனக்குப் பால் கலந்து கொண்டு, அப்பத்தாவிடம் ஒரு டம்ளர் பாலைக் கொண்டுபோய்க் கொடுக்க,

அப்பத்தாவிற்குக் கண்கள் கலங்கியது…

"எங்கம்மாவுக்கு அப்புறம் நீதான் நான் கேட்காமலே எனக்குப் பால் கொண்டு வந்து குடுக்குற." என்றதும்,

அப்பத்தாவின் வார்த்தையின் கனம் புரியாமல்,

"இதுக்கு ஏன் கண்கலங்குறீங்க? இனி தினமும் நானே பால் கலந்து வந்துக் கொடுக்கிறேன்…" என்று சிரித்துவிட்டு தன் தாத்தாவை நோக்கி ஓடியவளை, அப்பத்தா மனம் நிறையப் பார்த்தார்…
"இதுக்குத்தான் பொம்பளப்பிள்ளை வேணும்கிறது… இதுவர, என் பிள்ளைகளோ, மருமகள்களோ நான் கேட்காமல், என் தேவையறிஞ்சு, எனக்கு ஏதாவது கொடுத்திருப்பாங்களா?... ஆனா… மீராமா... மீராமா என் மகள்!" என்று மனம்குளிர பேத்தி கொடுத்த பாலை, அப்பத்தா, அமிர்தத்தைப் பருகுவதுபோல், பரவசாமாகப் பருகினார்.

இரவு உணவு முடிந்த பிறகும், தூங்குவதற்காக மாடிக்குச் செல்லாமல், அப்பத்தா தாத்தாவுடன் கழித்ததில் இரவு பத்துமணி ஆகியிருந்தது.

'இதுக்கு மேல மாடிக்குத் தூங்கப்போனா அம்மாட்டயும் அப்பாட்டயும் நல்லா வாங்கிக் கட்டிக்கனும்…' என்று நினைத்தவள், அப்பத்தாவுடன் கீழ்வீட்டிலேயே உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் வழக்கம்போலக் காலையில் பள்ளிக்கு, மீரஜா, சந்தோஷி, மீரஜாவின் தோழிகள் காரில் சென்றார்கள்.

சிறிய பாலத்தைக் கடந்து, கார் இறங்கும்பொழுது, காரிலிருந்த ஒரு டயர் பஞ்ச்சர் ஆகிவிட்டது.

பள்ளி அருகில் இருந்ததால், எல்லோரும் இறங்கி நடந்து சென்றனர்.

சாலையில் இறங்கியதும் சந்தோஷி, கொஞ்சம் முன்னே நடந்து சென்றுகொண்டிருந்த தன் வகுப்புத் தோழியைப் பார்த்ததும் மீரஜாவிடம்,
"நான் அவளோட முன்னாடி போறேன்க்கா… நீ உன் ஃபிரண்ட்ஸ் சோட வா!" என்று கூறிவிட்டு ஓடிச்சென்று தனது தோழியுடன் இணைந்து நடந்தாள்.
இப்படியே இருவர், இருவராக மற்ற தோழிகளும் கடந்து செல்ல,

மீரஜாவும், டாலி செல்சியாவும் பள்ளியை நோக்கிச் சென்றனர்.

அப்பொழுது, "மீரா!" என்று யாரோ அழைப்பது கேட்டுத் திரும்பப் போன மீரஜாவின் கையை இறுகப் பற்றிய டாலி செல்சியா,

"ரோட்டுல நடந்து போறபோது, நம்ம பேரச் சொல்லி யாராவது கூப்பிட்டாத் திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு எங்க வீட்ல சொல்லீருக்காங்க… திரும்பாத மீரா… இது யாரோ ஆம்பளக் குரல் மாதிரி இருக்கு." என்று கூறவும்,

மீரஜாவும் திரும்பாமல் நடந்தாள்.

சிறிது நேரத்தில், வாலிபத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த ஒருவன், பின்பக்கமிருந்து ஓடிவந்து, அவர்கள் முன் நின்று,

"என்ன மீரா? கூப்பிடுறது கூடக் கேட்காம போற?" என்று கேட்க,

"யாரு மீரா இது?" என்ற செல்சியாவிடம்,

"தெரியல ஆனா பார்த்த முகமா இருக்கு." என்றால் மீரஜா.

"என்ன மீரா என்னத் தெரியலையா?" என்று அவன் சிரிக்க,

சட்டென்று புல்லரித்து எழுந்து அமர்ந்தாள்…

இன்னும் இருள் பிரயாத இரவும், அருகில் அப்பத்தாவும் நன்கு உறங்க,

"ச்சே… கனவு…" என்று மீண்டும் படுத்துக் கண்களை மூடவும், மீண்டும் அவன் முகமே கண்களில் தெரிந்து.

'யார் அவன்? எங்கோ பார்த்திருக்கேனே?' என்று யோசித்தவளுக்கு,

முதன்முதலா வயிறு சுருக் கென்று வலித்த அன்று ஐயப்பப் பக்தர்களுடன் சேர்ந்து நடந்து சென்றபடி, தன்னைப் பார்த்துச் சிரித்தவன் தானே இவன்?... யார் இவன்? இதுவரை ஊர்ல பார்த்ததே இல்லையே?' என்று கனவில் வந்தவனைப் பற்றிப் பலவிதமாக யோசித்தபடியே உறங்கிவிட்டாள்.

அடுத்தநாள் பள்ளிக்குக் காரில் சென்றபோது சரியாக அதே பாலத்தின் இறக்கத்தில் கார் நின்று விட்டது.

'என்ன இது கனவில் வந்தது போலக் கார் நின்னேடுச்சே?" என்று நினைத்த போதே, டிரைவர் நல்லசிவம்,

"மீராமா கார்ல எதோ கோளாறாயிருச்சு… வாங்க ஸ்கூல்வரை நடந்து கூட்டிட்டுப் போய் விட்டுடுறேன்." என்றான்.

"பரவாயில்லண்ணே… நாங்க நடந்து போயிக்கிறோம்… நீங்க கார ரிப்பேர் பண்ணப் போங்க!" என்று கூறிவிட்டு இறங்கவும்,

சந்தோஷி, "அக்கா அதோ என் ஃபிரண்ட் போறா நான் அவளோட ஸ்கூலுக்குப் போறேன்… நீ உன் ஃபிரண்ட்ஸ் சோட வா!" என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

‘மறுபடியும் கனவில் வந்தது போல இருக்கே?’ என்று நினைத்த மீரஜா, 'ப்ச்சு… எதார்த்தமா நடக்குது' என்று தோள்களைக் குலுக்கிவிட்டுத் தோழிகளுடன் நடந்தாள்.
அவர்களுக்குப் பின்னால் சைக்கிளில் வந்தவர்,

"உங்கப்பன் வீட்டு ரோடு மாதிரி நாலுபேரும், வழிய மறிச்சுக்கிட்டு நடக்கிறீங்க? பின்னாடி வண்டி வந்தா என்னாகும்? ரெண்டு ரெண்டு பேரா நடங்க பொண்ணுங்களா…" என்று இலவச அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.

உடனே சுதாரித்த மீரஜா, டாலிசெல்சியாவை விடுத்து, பொற்சிலம்பு எனும் மற்றோரு தோழியுடன் சேர்ந்து, “வா! நாம ரெண்டு பேரும் முன்னாடி போவோம்!" என்றதும்,

அவர்களுடன் வந்த மற்றொரு தோழி கனிஷ்கா, "இன்னைக்கு டெஸ்ட்க்கு என்ன கொஸ்டீன்லாம் வரும்னு, பொற்சிலம்பு எனக்குச் சொல்றேன்னா… நான் அவளோட போறேன் மீரா," என்று கூறிக் கனிஷ்கா, பொற்சிலம்புடன் இணைந்து செல்ல,

மீரஜாவிடம் டாலி செல்சியா, "என்ன கொஸ்டீன் வரும்னு சிலம்புக்கு எப்படித் தெரியும் மீரா?" என்று கேட்டாள்.

"அவ டியூசன் போறால? அங்க சொல்லியிருப்பாங்க…" என்றாள் மீரஜா.

"அப்படியா? நாமும் அங்கயே டியூசன் போவமா மீரா? வீட்ல பர்மிஷன்…" என்று டாலி செல்சியா பேசிக்கொண்டிருக்கும் போதே,

"மீரா…" என்று அவர்களுக்குப் பின்புறமிருந்து ஆண் குரல் ஒலிக்க,
மீரஜாவிற்குத் ‘திக்’ கென்று ஆனது.

'திரும்பி ப் பார்ப்போமா வேண்டாமா?' என்று மீரஜா யோசிக்கும் போதே,

மீரஜாவின் கையைப் பிடித்த டாலி செல்சியா,

"திரும்பிப் பார்க்காத மீரா… நாம பெரிய பொண்ணாயிட்டோம்… இனி ரோட்டுல யாராவது நம்ம பேரச்சொல்லிக் கூப்பிட்டாத் திரும்பிப் பார்க்க க் கூடாது." என்ற செல்சியாவிடம்,

சட்டென்று வறண்ட தனது இதழ்களை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு, நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளைக் கர்ச்சீப்பால் ஒற்றியவாறே,

"அப்டீனு உங்க வீட்ல சொன்னாங்களா?" என்று மீரஜா, தோழியிடம் கேட்டாள்.

"அட! ஆமா… எங்கம்மா சொன்னாங்க… உனக்கெப்படித் தெரியும்?… ஓ... உங்க வீட்லயும் தினமும் உட்கார வச்சு அட்வைஸ் ன்ற பேர்ல மூணு காலப் பூஜையும் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா? ஹஹ்ஹஹ்ஹாஹா…" என்று சிரித்தாள்.

‘அந்தக் குரலுக்குரியவன் எங்களுக்கு முன்னாடி வரலயே? திரும்பிப் பார்க்கலாமா?' என்று மீரஜா யோசிக்கும் போதே,

"என்ன மீரா நான் கூப்பிடக்கூப்பிடக் காதுல வாங்காமப் போற?" என்று தன் முன்னால் வந்து நின்றவனை அதிர்ச்சியில் கண்கள் விரியப் பார்த்தாள் மீரஜா…

தனது தொழியின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், அதனால் பூத்த வியர்வையையும் கண்ட டாலி செல்சியா,

“யார் இது மீரா? உனக்குத் தெரிஞ்சவங்களா?” என்று கேட்டாள்.

“இல்லை” என்பது போல் மீரஜா தலையாட்ட,

“ஹேய்! என்ன? என்னைத்தெரியலயா? நான் நந்தன்...” என்று கூறியவனைப் பார்த்தாள் மீரஜா.

‘தன்னுடன் பழகிய நந்தனை விடச் சற்றே உயரமாகவும், முன்புபோல் பப்ளியாக இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகுடன், லேசாக அரும்பிய மீசையும், கண்களில் நிலவின் குளிர்ந்த பிரகாசத்தையும், சிரிக்கும்போது தெரிந்த முத்துக்கள் கோர்த்தது போன்ற பற்களும், ‘தன்னை மீரஜா அடயாளம் கண்டு கொண்டாளா? என்று பரபரக்கும் பார்வையுமாக, தன் முன் நிற்பவன் நந்தனே தான்…

… ஆனால் நேற்று கனவில் வந்தவன் யார்? இவன் இல்லையே?’

வார்த்தைகளின் எண்ணிக்கை - 1345

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
டேய் நந்தா வளர்ந்துட்டியா.. உனக்கும் அரும்பு மீசை வந்துருச்சா.. பவானிய புரிஞ்சிக்கவே முடியல.. 😍
 

Sspriya

Well-known member
நந்தன் entry சூப்பர் 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻... எல்லார் வீட்லயும் இதே ரூல்ஸ் தானா 🤦🤦🤦... பாவம் பொண்ணுங்க.... அப்பத்தா ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க.... மீரா cute 💞💞💞
 

Sspriya

Well-known member
Todays thought 💞💞

முதல் முதலாய் பாவாடை தாவணியில் பெண்ணுக்கு வரும் வெட்கம் அழகு

பதின்ம பருவத்தில் ஆணுக்கு வரும் அரும்பு மீசை அழகோ அழகு 💞💞💞

💞💞cute சீன் 💞💞

ஆட்டோகிராப்,96 movie நியாபகம் வருது 😂😍
 

Aathisakthi

Well-known member
தாத்தா வும் அப்பத்தாவும கையிலேயே மீராவ வளர்த்ததனால அவங்க கிட்ட மீரா ஒட்டறது இவங்களுக்கு அவங்க காட்டற பாசமா தெரியுது..மத்த குழந்தைங்க இப்படி வளரல...அதனால மனம் முரளுது....
 
Top