கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-21

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-21

"ராதா!" என்று டாலி செல்சியாவின் அம்மா கூறவும்,

டாலி செல்சியாவிற்குத் தலை சுற்றாத குறை. ஒரு செகண்ட் தலையின் உள் பாகத்தில் மின்சாரம் தாக்கியதைப் போன்ற உணர்வு எழ, கண்களை மூடிக்கொண்டு தலையைக் குலுக்கிய, டாலி செல்சியா,

"என்னம்மா சொல்றீங்க? என்னோட இன்னொரு பேரு ராதாவா? எங்கிட்ட நீங்க சொன்னதே இல்லையே?" என்று அதிர்ச்சி விலகாமல் டாலி செல்சியா, தனது தாயின் முகத்தைப் பார்க்க,

"நீதான் கேட்கவே இல்லையேன்னு கடிக்கமாட்டேன்‌… ஆனா, வீட்டுவேல, ஆபீஸ் வேலன்னு நிக்கக்கூட நேரமில்லாம நான் ஓடுறதால, உங்கூட வெட்டிக்கதையடிக்க எனக்கு நேரமில்லைனு வேணும்னா சொல்லலாம்." என்று கிண்டலாகப் புன்னகைத்தார்.

'ஓ… நான் வீட்டுவேல பார்க்காம சும்மா இருக்கேன்னு குத்திக் காட்டுறாங்கலாஆஆமா?' என்ற தன் நினைவை டாலி செல்சியா வெளிக்காட்டாமல்,

"அம்ம்மா.‌‌.. ப்ளீஸ்மா... விளையாடாம சொல்லுங்கம்மா, எனக்கு ராதான்னா பேர் வச்சீங்க?" என்ற டாலி செல்சியாவின் முகத்திலிருந்த தீவிர பாவனையில் சற்று யோசித்தாலும்,

"ஆமா…" என்றார் அம்மா.

"இதுவரை, நம்ம வீட்ல யாருமே, என்னைய ஒருதடவ கூட ராதான்னு கூப்பிட்டதில்லையேம்மா?"

"அது… உனக்கு ரெண்டு வயசிருக்கும்போது, விஷக் காய்ச்சல் வந்துச்சு. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் குடுத்தும், உன் உடம்புல எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்லாம ரொம்பக் கஷ்டப்பட்ட. அஞ்சு நாளா ட்ரீட்மெண்ட் பண்ணியும் காய்ச்சல் மட்டும் குறையவே இல்ல… இது பத்தாதுன்னு உனக்கு வலிப்பு, அதான்… ஃபிட்ஸ் வந்துடுச்சு. அதனால பிரைவேட் ஆஸ்பத்திரிலருந்து, கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிலயும்,

“பிள்ளை பிழைக்கிறது கஷ்டம், கடவுள்தான் காப்பாத்தனும்னு சொல்லிட்டாங்க…”

ஆஸ்பத்திரி வராண்டால பைத்தியம் பிடிச்சமாதிரி, நானும் உங்கப்பாவும் உட்கார்திருந்தோம்.

அது டிசம்பர் மாசம், கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கின சமயம். அந்தச் சமயத்துல நம்ம ஊர்ல, கிருஸ்துமஸ் தாத்தா மாதிரி வேசம் போட்டுக்கிட்டு, கிருஸ்துமஸ் பாட்டு பாடிட்டு வருவாங்க… அந்த மாதிரி அன்னைக்கு ஆஸ்பத்திரிக்கு ஒரு குரூப் வந்தாங்க.

அப்ப நாங்க ரெண்டு பேரும் உன்னை நினைச்சு அரண்டுபோய்க் கண்ணெல்லாம் கண்ணீர் வழிய, உசுரக் கைல பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம். எங்களப் பார்த்ததும் கிருஸ்துமஸ் தாத்தா வேசம் போட்டிருந்தவர், எங்க பக்கத்துல வந்து, எங்ககிட்ட எதுக்காக, யாருக்காகக் கலங்கி நிக்கிறோம்ன்னு கூட, எந்த விவரமும் கேட்காம,

"கவலப்படாதீங்க, கர்த்தர் உங்களக் கைவிட மாட்டார்"னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போயிட்டாங்க…

உடனே உங்க அப்பா, "கடவுளே ஏசப்பா! ராதாவக் காப்பாத்திக் குடுத்துடுங்க... நாங்க காலம்பூரா உங்களையே கும்பிடுறொம்ன்னு வேண்டி இருக்கிறார்.

அடுத்த ரெண்டு நாள்ல உனக்குக் காய்ச்சல் குறைய ஆரம்பிச்சுச்சு… பத்துநாள்ல, நல்லா குணமாகி, உன்னை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்த அன்னைக்குதான் கிருஸ்துமஸ் பண்டிகை…

எனக்கும், உங்கப்பாவுக்கும், அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தா வாழ்த்துனது ஞாபகத்துக்கு வந்தது. அந்த வருசமே உனக்கு, சர்ச்ச் ல ஞானஸ்நானம் பண்ணி. ‘டாலி சொல்சியா’ன்னு பேர் வச்சோம்." என்று அன்றைய நினைவிலிருந்து மீண்டவரின் நாசியில் ஏதோ அடிபிடிக்கும் வாசனை வர,

சட்டென்று அடுப்பைப் பார்த்தார். பால் பொங்கி வழிந்து, பாதி அளவு பால்தான் பாத்திரத்தில் இருந்தது.

அடுப்பை அணைத்து விட்டு, "டாலி இந்த அடுப்பை, சுத்தம் பண்ணு. நான் வேற பால எடுத்துட்டு வர்றேன்." என்று கூறி ஃபிரிட்ஜ் ஜை நோக்கிச் சென்றார்.

டாலி செல்சியாவிற்கோ, ‘தனக்கு ராதா என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த விஷயம், நந்தனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?’ என்ற சந்தேகம் எழ,

மீண்டும் பால் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்த தனது அம்மாவிடம்,

"எனக்கு ராதான்னு பேர் வச்சது எல்லோருக்குமே தெரியுமாம்மா?" என்று கேட்டாள்.

"இந்த ஊருக்கு நாம வந்து மூனு வருசந்தானே ஆகுது… இங்க யாருக்கும் தெரியாது. நம்ம முன்னாடி இருந்த கன்னியாகுமரில இருந்தவங்களுக்குத்தான் தெரியும். ஏன்?"

"நேத்து, நம்ம மீராவோட சைல்ட் ஹூட் பிரண்ட் வந்தாள். அவதான்மா, என் பேரு ராதான்னு சொன்னா. அவளுக்கு எப்படித் தெரியும்?” என்று நந்தனைத் தோழியாக்கிக் கேட்க,

"சான்சே இல்ல டாலி… சும்மா விளையாடியிருப்பா" என்று சிரித்துவிட்டு நகர்ந்தார்.

'நந்தனுக்கு எப்படித் தெரியும்?' என்று அடுத்த நாள் பள்ளிக்கூடத்திற்குள் சென்றதும் மீரஜாவிடம் கேட்டாள்.

"அப்டீனா உம் பேர் நிசமாவே ராதா வா டாலி?"

"இவ்வளவு நேரமா அததானே சொல்றேன்."

"ஹிஹி… ஆச்சரியமா இருக்கு இல்ல?"

"நந்தனோட சொந்த ஊர் கன்னியாகுமரியா?" என்று டாலி கேட்க,

"தெரியாது"

"அப்போ அவனும் புன்னைவனத்துக்காரனா?"

"தெரியல… ஆனா நாங்க தாமரைக்குளத்தில் இருக்கும் போதே எனக்கு அவனத் தெரியும்."

"தாமரைக்குளமா? அங்க, பக்கத்து வீடா?"

"இல்ல…"

"ஸ்கூல் மெட் டா?"

"இல்ல"

"பின்ன எப்படிதான் தெரியும்?" என்று சலித்த டாலி செல்சியாவிடம்,

"ஸ்கூலுக்கு என்னோ விளையாட வருவான்." என்றாள்.

"அவன் வீடு எங்கேன்னு உனக்குத் தெரியாதா?"

"ம்ஹூம்"

"என்ன படிக்கிறான்? எந்த ஸ்கூல்ல படிச்சான்னாவது தெரியுமா?"

"தெரியாது… இப்பவுமே அவன் பேரைத்தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது."

"லூசா நீ? பின்னே எந்தத் தைரியத்துல அவனோட பேசுற?" என்று சற்றுக் கோபமாகக் கேட்ட தோழியிடம்,

"அவன் நல்ல பிரண்ட் டாலி… பிரண்ட்ஷிப் க்கு எதுக்குப் பயோடேட்டா? இதுவர இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னு எனக்குத் தோணவே இல்ல..." என்ற மீரஜாவைக் கண்ணிமைக்காமல் பார்த்தாள் டாலி சொல்சியா.

அசையாமல் தன்னையே பார்த்த டாலி செல்சியாவின் முகத்திற்கு முன்னால் கையை அசைத்து,
"ஹேய்! என்னாச்சு?" என்று மீரஜா கேட்கவும், தலையைக் குலுக்கித் தன்னிலை அடைந்த டாலி செல்சியாவிடம்,

"ஆமா… ட்ரீட் க்குப் பணம் கொண்டு வந்திருக்கியா?" என்று கண்களில் குறும்புடன் கேட்ட மீரஜாவை, யோசனையுடன் பார்த்து,

"என்ன ட்ரீட்?" என்று கேட்டாள் டாலி செல்சியா.

"ஹான்! நந்தனோட பெட் கட்டினியே... உன் பேரு ராதா ன்னு உங்கம்மா சொல்லிட்டா, நந்தன் கெட்கிறத நீ வாங்கித் தரேன்னு. மறந்துட்டியா?"

"ஓ… ஆமால்ல? அவனுக்கு எப்படித் தெரியும்ங்கிற குழப்பத்துல இருந்தேனா? இதெல்லாம் மறந்திருச்சு." என்று சிரித்தாள் டாலி செல்சியா.

மதிய உணவுவேளையில் ஆஞ்சனேயர் கோயிலில் மீரஜாவும், டாலி செல்சியாவும் சாப்பிடாமல் நந்தனுக்காகக் காத்திருந்தனர்.

சிறிது நேரம் கழித்து வந்த நந்தனுடன் உணவையும், பள்ளியில் நடந்த விசயங்களையும் பகிர்ந்து சந்தோசமாகச் சிரித்துப்‌ பேசிவிட்டு வகுப்புக்குத் திரும்பியதும்,

"மீரா, நந்தன்ட்ட அவன் எங்கே படிக்கிறான்? எங்க இருக்கான்ற விபரம்லாம் கேட்கனும்னு இருந்தேன் சுத்தமா மறந்துட்டேன்." என்று கூறினாள் டாலி செல்சியா.

"மறந்துட்டியா? நந்தன்கிட்ட, உன் பெயர் ராதா தான்னு, நீ சொல்லாம இருக்கவும், நந்தன் ட்ரீட் கேட்டா, என்ன பண்றதுன்னு சொல்லாம இருக்கே ன்ல நெனச்சேன்."

"அடிப்பாவி எங்கிட்ட ரகசியமாவாவது கேட்டிருக்கலாம்ல?"

"நீ மறந்துட்டேன்னு நான் கனவா கண்டேன்?"

"சரி! நாளைக்கு மறக்காமல் பேசிடனும்." எனறு கூறிவிட்டு அவளுடைய இருக்கையில் அமர்ந்தாள் டாலி செல்சியா.

இரவு உணவு முடிந்து தூங்குவதற்காக மாடிக்குச் செல்லவிருந்த மீரஜாவிடம்,
"அப்பத்தாவுக்கு ரொம்ப மூட்டுவலிக்குதுன்னு மாத்திரை குடிச்சிருக்கேன். இந்த மாத்திரைய சாப்பிட்டா விடியக்காலைல எந்திரிக்கிறது ரொம்பக் கஷ்டமாயிடுது மீராமா… நீ இன்னைக்கு அப்பத்தா கூட இங்க படுத்துக்கிறியா?" என்று அப்பத்தா மீரஜாவிடம் கேட்டார்.

"நான் இங்கேயே படுத்துக்கிறேன்… ஆனா எதுக்கு?" என்று பதில் கேள்வி கேட்ட மீரஜாவிடம்,
"அப்பத்தா விடிகாலைல தூங்கிட்டா நீ எழுப்பி விடுவேல்ல? அதுக்குதான்!"

"நானா? உங்கள எழுப்பவா? எப்பவும் நீங்கதான என்னை எழுப்பிவிடுவீங்க?"

"நான் எந்திரிச்சு புழங்குற சத்தம் கேட்டுதான எந்திரிக்கிற? நாளைக்குத் தாத்தா எழுந்து வாக்கிங் கிளம்புறப்ப அவர் புழங்கும் சத்தத்துல நீ எந்திரிச்சுடுவ… அப்ப என்னை எழுப்பு."

"ம்ம் சரி!" என்று கூறி அப்பத்தா அருகிலேயே தூங்கினாள்.

‘விடிகாலையில் எழ வேண்டும்!’ என்று நினைத்துக்கொண்டே உறங்கியதால் வெளியே பசுக்கள் எழுந்து "ம்மா" என்று அழைக்கும் சப்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தாள்.

அப்பத்தா நன்கு அசந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அவரை எழுப்ப மனம் இல்லாமல் தாத்தாவைப் பார்க்க, அவரும் அசையாமல் படுத்திருப்பதைக் கண்டு அவரும் உறங்கிக்கொண்டிருக்கிறார் என்பது புரிய, என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்து, தாத்தா எழுவதற்காகக் காத்திருந்தாள்.

தாத்தா எழுந்ததும், அப்பத்தாவை எழுப்பிவிட்டு மீண்டும் படுக்கையில் படுக்கப் போனவளை,

"எழுந்தபிறகு படுக்கையில் சாயக் கூடாது மீராமா, நம்ம லெட்சுமிக்கு (பசு) பால் கறக்க கோபால் வந்துருப்பான். நான் அவனுக்குத் தேவையானத எடுத்துக் குடுக்கிறேன். நீ வாசலக் கூட்டி, தண்ணி தெளிச்சுட்டுச் சொல்லு. நான் வர்றேன்." என்று அப்பத்தா கூறியதும்,

விளக்குமாறு, தண்ணீர் வாளி, கோலப்பொடி டப்பாவுடன் மீரஜா வாசலை நோக்கிச் சென்றாள்.

வாசலைக் கூட்டும்போது, யாரோ தன்னைப் பார்ப்பது போன்று உணர்ந்த மீரஜா, பின்புறம் திரும்பிப் பார்த்தாள். தெருவாசல் முடியும் வரை யாரையும் காணோம்…

ஆங்காங்கே பெண்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

மீரஜா வாசல் தெளித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் யாரோ பார்ப்பது போல் தோன்ற, சுற்றிலும் பார்வையை ஓட்டினாள்.

யாரும் அவளைப் பார்க்கவில்லை…

'யாரோ என்னைப் பார்க்கிறாங்க. ஆனா நான் பார்க்கும்போது மறைஞ்சுக்கிறாங்க… ஏன்?' என்று யோசனை எழுந்ததும்,

வாசல் தெளித்து முடித்துவிட்டதால், வாளியை வாசல்படியில் வைத்துவிட்டு மீண்டும் தெரு முழுவதும் பார்வையை ஓட்டினாள்.

யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்பது புரிந்ததும், அப்பத்தாவை அழைப்பதற்காக வீட்டின் கொள்ளைப்புற வாசலை நோக்கித் திரும்பினாள்.

“மீரா!” என்று யாரோ ஹஸ்கி வாய்சில் அழைத்தார்கள்.

அப்படியே நின்ற மீரஜா, சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாருமே மீரஜா திரும்பிப்பார்ப்பதற்காக எதிர்பார்திருக்கவில்லை.

“என் பேரச் சொன்னது நல்லா கேட்டுச்சே!” என்று நினைத்த மீரஜா,

'எதுக்கும் தெரு முக்குவரை போய்ப்பார்ப்போம்.' என்று எண்ணி,

சுற்றிலும் பார்வையால் அளந்தபடி மெல்ல நடந்தாள்.

“என்ன மீரா? என்ன தேடுற?” என்று, அவர்களுடைய வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த அடுத்த வீட்டு அத்தை கேட்க,

“ஒன்னுமில்ல அத்த… எல்லாரும் வாசல்ல போட்டிருக்குற கோலத்தைப் பார்க்க வந்தேன்” என்று சிரித்து மழுப்பிவிட்டு,

‘இந்த நேரத்துல தனியா நடந்தா எல்லாரும் விசாரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. நாம ஒழுங்கா வீட்டுக்குப் போயிடுவோம்.’ என்று எண்ணித் திரும்பும் நேரத்தில்,

எங்கிருந்தோ மிகவும் மெல்லிய ஓசையுடன் அதிகாலைக் குளிர்ந்த காற்றில் மிதந்து வந்தது பாடல்,

"கண்கள் சொல்கின்ற கவிதை,
இளம் வயதில் எத்தனை கோடி.
கண்கள் சொல்கின்ற கவிதை,
இளம் வயதில் எத்தனை கோடி.

என்றும் காதலைக்
கொண்டாடும் காவியமே…
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது
உறவுக்குப் பெருமை

சின்னக் கண்ணன் அழைக்கிறான்"

என்ற பாடல் இதமான தென்றலுடன் மீரஜாவின் முதுகைத் தீண்ட, தானாக மீரஜாவின் பாதங்கள் நின்றது.

தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.

தூரத்தில், கரிய போர்வையிலிருந்து எழாத, அதிகாலைநேர பனி, புகை மூட்டமாய்ச் சூழ்ந்திருக்க, தெரு விளக்கின் மங்கலான ஒலியில், நிழல் உருவமாய் ஒருவன், மீரஜாவைத் திரும்பிப் பாத்துவிட்டுப் போவது தெரிந்தது.

‘யாரது?... நந்தனா??... இல்லயில்ல... நந்தனை விடப் பெரியவன் போலிருக்கிறானே?... என்னைத்தான் பார்த்தானா?’ என்று எண்ணியபடி அவனையே கூர்ந்து பார்க்க,

அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தான்.

“ப்ச்சு! யாரோ போகிறார்கள்” என்று தோள்களைக் குலுக்கி விட்டு, வேறுதிசையில் மீரஜா பார்வையைத் திருப்பும் சமயத்தில்,
"சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையைப் பூங்கோதையை
அவள் மணம் கொண்ட
ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்"

என்ற பாடல் மீண்டும் மீரஜாவின் செவியை மிக மென்மையாகத் தீண்ட.

மீரஜா பாடல் வந்த திசையை நோக்கித் தன்னிச்சையாக நடக்க ஆரம்பித்தாள்.

நடந்து செல்லும் பாதையெங்கும் வீசிய ஈர மண் வாசம், நாசிக்குச் சுகந்தம் அளித்தது.

குளிர்ந்த காலைப் பொழுது, மிகமிக மெல்லிய ஒலியில், வீட்டு விலங்குகளின் சப்தங்கள்… அங்காங்கே இருந்த வீடுகளில், மிதமான ஒலியில் சுப்ரபாதம் ஒலிக்க… சாம்பிராணி வாசமும், சந்தன வாசமும் கலந்து ஒருவிதமான மோனநிலைக்குத் தள்ளியது.

ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பது போன்ற இனிய தோற்றம் மீரஜாவை ஆட்கொண்டது‌… பனிப்புகைக்கு நடுவே நடப்பது, மேகத்தில் நடப்பதைப் போன்றதொரு உணர்வைத் தந்தது.

அவள் நடக்க நடக்கப் பாடலும் தொடர்ந்து சென்றது…

'முன்னாடி நிழல்போல நடக்கிறவன்ட்டயிருந்து தான் இந்தப் பாடல் கேட்குதோ?' என்ற எண்ணம் தோன்ற,

அவனை நோக்கிச் சென்றாள் மீரஜா.
பால்கார கோபாலுக்குத் தேவையானதை எடுத்துக் கொடுத்து விட்டு வாசலுக்கு வந்த அப்பத்தா, மீரஜாவைக் காணாமல்,

'வாசல தெளிச்சுட்டு எங்க போச்சு பிள்ள?' என்று எண்ணி, "மீராமா!" என்று மெல்லிய தொணியில் அழைத்தும் பதில் வராமல் போகவே,

"கிறுக்குபயபுள்ள! மறுபடியும் தூங்கப் போயிட்டா போல." என்று முணுமுணுத்துக் கொண்டே கோலப்பொடியை எடுத்துக் கோலம்போட ஆரம்பித்தார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1223

கண்ணன் வருவான்!

🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
யாருடா அது நந்தன்னா.. டேய் கண்ணா அவளை பிரச்சனைல மாட்டி விட்ரதடா பாவம் டா அவ.. எனக்கும் கிறிஸ்துமஸ் ரொம்ப புடிக்கும்.. நான் உன்ன டாலின்னே கூப்பிடுறேன்..
 

aas2022-writer

Well-known member
யாருடா அது நந்தன்னா.. டேய் கண்ணா அவளை பிரச்சனைல மாட்டி விட்ரதடா பாவம் டா அவ.. எனக்கும் கிறிஸ்துமஸ் ரொம்ப புடிக்கும்.. நான் உன்ன டாலின்னே கூப்பிடுறேன்..
நந்தனா? நாம டாலின்னே கூப்பிடலாம் சிஸ்
 

Sspriya

Well-known member
😳😳😳ஏன் அவன் பின்னாடி போற... வீட்டுக்கு போ மீரா.. அப்பத்தா அப்பறம் பயப்படுவாங்க...
 

Aathisakthi

Well-known member
அடடா...பகல்ல தான் அவள சுத்தி சுத்தி வரனா...விடிஞ்சும் விடியாமையுமாஆஆஆஆ🙄🙄🙄🙄
 
Top