கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-22

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-22

கோலம் போட்டு முடித்து, மீதமிருந்த பாத்திரங்களை விளக்கி விட்டு, பால் காய்ச்சிய பிறகு, மீரஜாவை எழுப்புவதற்காக ஹாலுக்கு வந்த அப்பத்தா, ஹாலில் மீரஜாவைக் காணாமல்,

'எங்க போய் இருப்பா? மாடிக்குப் போயிட்டாளோ?' என்று நினைத்து,

"மீராமா! மீராமா!" என்று மாடியை நோக்கி, இருமுறை அவள் பெயரைக் கூறி அழைக்க,

மாடியிலிருந்து எட்டிப்பார்த்த செல்வராஜ், "அங்க தானம்மா தூங்கினா… இங்க வரலையே!" என்று கூற,

"காலைல என் கூடச் சேர்ந்து கோலம் போட்டா செல்வம். அப்புறம் ஆளக் காணோம்!" என்று அப்பத்தா சற்றுப் பதட்டமாகக் கூறவும்,

செல்வராஜும் மாலினியும் வேகமாகக் கீழே இறங்கி வந்தனர்.

"நைட் இங்கதானம்மா தூங்குனா?" என்ற செல்வம் மீண்டும் கேட்க,

"ஆமாம் செல்வம்! இங்கதான் தூங்கினா. காலையில் எந்திரிச்சு வாசல பெருக்கி, தண்ணி தெளிக்கப் போனா. நான் கோலம் போட வாசலுக்குப் போனேன், வாசல் தெளிச்சிருக்கு, ஆனா மீராமா வக் காணோம். அவ உள்ள வந்து தூங்கி இருப்பான்னு நினைச்சேன். ஆனா இங்க இல்லையே… இந்த நேரத்துல புள்ள எங்க போயிருக்கும்?" என்று கலங்கிய அப்பத்தாவிடம்,

"டாய்லெட்டில பார்த்தீங்களா அத்த?" என்று மாலினி கேட்டதும், உடனே மூவரும் வேகமாக டாய்லெட்டுக்கு சென்று பார்க்க, அங்கு யாரும் இல்லை.

அதற்குள் சுப்பையாபிள்ளையும் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி வந்தார்.

மூவரும் பதட்டமாக இருப்பதைக் கண்டு, "என்னாச்சு ஏன் மூணு பேரும் திண்ணையில் நின்னுட்டு இருக்கீங்க?" என்று கேட்க,
"மீராமா வக் காணம்…" என்று நடுங்கும் குரலில் கூறியபடி அப்பத்தா, தாத்தாவின் அருகில் சென்று,

“ராத்திரி எம் பக்கத்துல தான்ங்க படுத்தா. காலையில் எழுந்து வாசல் தெளிச்சா. நான் கோலம் போட வரதுக்குள்ள எங்க போனான்னு தெரியல." என்று கூறினார்.

"எங்க போயிருப்பா... இங்க பக்கத்துல யார் வீட்டுக்காவது போயிருப்பா." என்று கூறியவர்,

தனது கார் டிரைவர் நல்லசிவத்தை அழைத்து,

“இந்தத் தெருவில் இருக்கும் மீராமா ஃபிரண்ட்ஸ் வீட்டுக்குப் போய், நான் வரச்சொன்னேன்னு சொல்லி மீராமா வக் கூட்டிட்டு வா!" என்று கூறி அனுப்பினார்.

அவன் சென்று விடவே அனைவர் மனதிலும் சின்னப் பதட்டம் தொற்றிக்கொண்டது.

அதற்குள் தனராஜனும் பவானியும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தனர்.

"எல்லாரும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க…" என்று கூறிபடி தாத்தா ஹாலுக்குள் நுழைந்தார்.

மற்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர்.

விஷயம் அறிந்த தனராஜன், செல்வராஜனிடம், "வா அண்ணே! நாம ரெண்டு பேரும் போயி, ஆத்தகரைப் பக்கம், தண்ணீர் டேங்க் பக்கம் விளையாடிக்கிட்டு இருந்தா கூட்டிட்டு வருவோம்!" என்று கூறியபடி செல்வராஜோடு வேகமாக வெளியேறி, டூவீலரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

"நீங்க மூணு பேரும் வீட்டுக்குள்ளேயே எங்கேயாவது படுத்துத் தூங்கிட்டு இருக்காளான்னு பாருங்க!" என்று பெண்கள் மூவரையும் அனுப்பி வைத்தார் சுப்பையா பிள்ளை.
பிறகு தனது அறைக்குச் சென்று பார்த்தார். அங்கும் மீரஜா இல்லாததால், நெஞ்சம் லேசாக நடுங்கவும் அவரது இருக்கையில் சாய்ந்தார்.

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்த, எழுந்து ஹாலுக்கு வந்து, பெண்கள் மூவரிடமும், நானும் கொஞ்சம் வெளியே போய்ப் பார்க்கிறேன்… அதுக்குள்ள பிள்ள வந்துட்டா, அவள அடிக்கிறது, திட்டுறதெல்லாம் கூடாது… புரியுதா?" என்று குறிப்பாக மாலினியிடம் கேட்டுவிட்டுத் திரும்பினார்.

நல்லசிவம் வந்து, "ஐயா! மீராமா அங்க எங்கயும் இல்லைய்யா… நான் ஊருக்குள்ள பார்த்துட்டு வரட்டா?" என்று கேட்க,

"சரி! ஆனா யார்ட்டயும், மீராமா வக் காணோம்னு விசாரிக்காத. மீராமா வரச்சொன்னாங்கன்னு மட்டும் சொல்லிக் கேளு. புரியுதா?" என்றதும்,

‘வயதுவந்த பெண்ணைக் காணாமல் தேடுவது குடும்பத்தவர்களுக்கு எத்தனை வெதனையான விசயம்? வெளியே சொல்ல முடியாமல் வேதனையைத் தொண்டைக்குள்ளேயே அதக்கி வைக்கனும்.' என்று நினைத்த நல்லசிவம்,

"நிச்சயமா மூச்சு விடமாட்டேன்ய்யா. பக்குவமாப் பேசித் தெரிஞ்சுட்டு வரேங்கய்யா." என்று கூறி அவன் வெளியேறியதும், திண்ணையில் போட்டிருந்த செருப்பைத் தாத்தா மாட்டியபொழுது,

தனராஜனும், செல்வராஜும் வீட்டுக்கு வந்தவர்கள், தங்களது தந்தையிடம், மிகவும் குறைந்த தொணியில்,

"வழக்கமா மீரா விளையாடுற இடத்துலெல்லாம் தேடிட்டோம்யா. எங்கயும் மீரா இல்ல."

"பிள்ள, அவளா எங்கயும் போகலையோ?" என்ற சந்தேகம் வலுக்க, தன் குடும்பத்தினரிம் கூறிவிட்டு, தாத்தா வீட்டிலிருந்து கிளம்பினார்.

தாத்தாவிற்குக் கடவுள் பக்தி இல்லையென்றாலும், ஆழ்மன எண்ணங்கள் வெற்றிபெரும் என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்தவர்.

இப்பொழுதும் அதை நம்பித் தேட வந்திருக்கிறார்.

சுற்றிலும் பார்வையால் துழாவியபடி மெதுவாக நடந்தார்.

"மீராமா… தாத்தா உன்னைக் காணாம தேடி வர்றேன்டா… தாத்தா கூப்பிடுறது உனக்கு நிச்சயம் கேட்கும்… தாத்தாட்ட வந்துடுடா…" என்று மனதிற்குள் அழைத்தபடியே நடந்தார்.

ஆற்றங்கரை வந்தது… வைகை ஆறு இரு கரையையும் தோட்டு, கண்ணாடியால் ஆன தரை நகர்வதுபோல் ஓடிக்கொண்டிருந்தது… ஆற்றுநீரின் அடியில் இருக்கும் கூலாச்கற்கள் மற்றும் நீந்திச் செல்லும் மீன்கள்கூடத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

ஆற்றுப்பாதையெங்கும் கண்களால் தேடிய தாத்தா, மீண்டும்,

"மீராமா வந்துடு… என் அடி மனசின் தவிப்பு உனக்குப் புரிந்திருக்கும்… வந்துடு… மீராமா…" என்று மனம் பதைக்க அழைத்தார்.

"மீராமா…."

"தாத்தா!" என்று எங்கோ சென்று கொண்டிருந்த மீரஜா நின்றாள்.

இருள் பிரியாத காலைவேளை, சட்டென்று நன்கு விடிந்தாற் போன்ற தாக்கத்தை உணர்ந்த மீரஜா,

சுற்றும் முற்றும் பார்த்தாள். ஏதோ ஒரு குகைக்குள், தான் மட்டும் தனியாக நிற்பதைக் கண்டாள். குகைக்குள் சூரிய ஒளி வருவதற்கு எந்தவிதமான சாத்தியக்கூறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் குகையோ இருளடைந்து காணாமல், ஓரளவு வெளிச்சமாகவே இருந்தது.

‘இங்க மனுசங்க தங்குற மாதிரியும் இல்ல… மிருகங்ளோட வசிப்பிடம் போலத் துர்நாற்றமும் வரல. அப்புறம் எங்கயிருந்து, எப்படி வெளிச்சம் வருது?’ என்று அந்த இடத்தை நோட்டமிட்டவளுக்கு

தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற, ‘இங்க என்னத்தவிர யரோ இருக்காங்க…’ என்று எண்ணியபடி கண்களைக் கசக்கி அவ்விடத்தை அங்குலம் அங்குலமாக உற்று நோக்கினாள்.

ஆனால் அங்கே யாருமில்லை.
'இது எந்த இடம்? நான் எப்படி இங்க வந்தேன்?' என்று எண்ணிக் குழம்பியவளுக்கு,

தாத்தாவின் குரல் கேட்டு, தூக்கத்திலிருந்து அவள் விழித்தது போல் ஞாபகம் வர,

‘தூங்கினேனா? தூக்கத்துலயா இங்க நடந்து வந்தேன்? தாத்தா கூப்பிடுற மாதிரி கேட்டதே?’ என்று நினைத்து,

"தாத்தா! தாத்தா" என்று பலமுறை அழைத்தும் தாத்தா பதில் அளிக்காததால், தாத்தாவின் குரல் எங்கிருந்து வந்ததென்றும், எவ்வளவு யோசித்தும், அது எந்த இடமென்றும் தெரியாமல் போகவே,

'இப்படியே நிற்காமல் ஏதாவதொரு பக்கம் நடந்தால் இந்தக் குகையை விட்டு வெளியேற வழி கிடைக்கும்!' என்ற முடிவுக்கு வந்து நடப்பதற்காகக் காலெடுத்தவளுக்கு அடுத்த சந்தேகம் வந்தது.

'எந்தபக்கம் போறது? எனக்கு, முன் பக்கமா? இல்ல… பின்பக்கமா?’ என்று முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தவள், ‘என்னோட பின்பக்கம்தான் நான் வந்த வழியாக இருக்கனும்' என்று நினைத்து வந்த வழியே திரும்பி நடக்க நடக்கக் குகையின் குறுகிய பாதை நீண்டுகொண்டே சென்றது.

மீண்டும் "மீராமா… தாத்தா கிட்ட வாடா…" என்ற தாத்தாவின் குரல் அவளுக்குள்ளிலிருந்து ஒலிக்க,

மீண்டும், "தாத்தா! தாத்தா! எங்க இருக்கீங்க? நீங்க கூப்பிடுறது எனக்குக் கேட்குது. என் குரல் உங்களுக்குக் கேட்கலையா?" என்று சுற்றிலும் தன் தாத்தாவைத் தேடியவாறு சத்தமாகக் குரல் கொடுத்தாள்.

அப்பொழுது, "உன் தாத்தா உன்னைத் தேடுறாங்க... அதுதான் உனக்கு இந்த மாதிரி, உனக்குள்ளருந்து அவர் குரல் கேட்குது." என்று மீரஜாவிற்கு, மீண்டும் அவளுக்குள் இருந்து ஒரு ஆண்குரல், ஒரு விதமான எண்ணம்போல் தோன்றியது.

'இங்க என்னதான் நடக்குது? இது எந்த இடம்? ஏன் எனக்குள்ளேயே தாத்தா கூப்பிடுறமாதிரி கேக்குது? இன்னொரு குரலும் கேட்குதே? அது யாரோடது?" என்று யோசித்தவளுக்கு இதயம் லேசாகப் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.

"பயப்படாதே மீரா! இது உன்னுடைய உள்ளுணர்வு?" என்று மீண்டும் அந்த ஆண்குரல் கூற,

'ஓ! இதுதான் உள்ளுணர்வா? அப்போ, தாத்தா என்னைத் தேடுறாங்க போல. என்று யோசித்தவள்,

"எங்க தாத்தா பாவம்… என்னைத் தேடுறார்… அவருக்கு நான் இங்க மாட்டிக்கிட்டத எப்படிச் சொல்றது?" என்று சத்தமாகவே கேட்டாள்.

"நீ உன் மனதிற்குள், வேறு எண்ணமோ, பயமோ எதுவும் இல்லாமல், உன் தாத்தாவை மட்டும் நினைத்தபடி அவருடன் பேசு! அப்பொழுது அவருக்கும் உன் குரல் கேட்கும்!" என்று மீண்டும் அந்த ஆண் குரல் வழி காட்ட,

"ஆமா… நீங்க யாரு? எங்கயிருந்து பேசுறிங்க?" என்று கேட்டாள் குரல் வந்த திசையை நோக்கி.

"அதை நீதான் கண்டறிய வேண்டும்." என்று மென்மையாகச் சிரித்தது அந்தக் குரல்.

அந்தச் சிரிப்பும், குரலும், ஏதோவொரு வகையில் தனக்கு மிகவும் பிடித்திருப்பதை உணர்ந்தாள் மீரஜா. எதிராளியின் மனதை வசீகரிக்கும் விதமாக இருந்தது அந்தக் குரல். அந்தக் குரல் சொன்னதைக் கேட்க வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது,

ஆகவே, தனது தாத்தாவை நினைத்து, இதயம் படபடவெனத் துடிக்கும் இடத்தில், வலது உள்ளங்கையை வைத்து, கண்களை மூடி,

"தாத்தா! நான் ஏதோ ஓரு குகைக்குள்ள, எப்படியோ வந்துட்டேன். வெளிய போற வழி தெரியல." என்றாள்.

"இங்கிருந்து வெளியே செல்லும் வழி தெரியவில்லையென்றால் என்னிடமே கேட்டிருக்கலாமே? ஏன் பெரியவரைப் பயமுறுத்துகிறாய்?" என்று சற்றுக் கிண்டல் தொனியில் கேட்டது ஆண்குரல்.

அதற்கு மீரஜா பதில் கூறும்முன், "மீராமா! பயப்படாத! உனக்கு எந்தப் பக்கம் போனா…, நம்ம வீட்டுக்கு வர்ற பாதை தெரிஞ்சுடும்னு தோணுதோ…, அந்தப் பக்கம் நட டா!" என்று தாத்தா குரல் கொடுத்தார்‌.

"சரி" என்று வந்த வழியே திரும்பியவள், அந்த ஆண்குரலை நினைத்து, "இந்தப் பாதை, சரியானதுதானா?" என்று கேட்டாள்.

"ம்ம் ஓடு!" என்று அக்குரல் கூற, ஓடினாள்.

"மீராமா! வைகைக் கரைய குறிவச்சு வந்துடு! அப்பறம் ஈசியா நம்ம வீட்டுக்கு வந்துடலாம்" என்ற தாத்தா குரல் ஒலிக்கவும்.

"இந்தப் பாதை வைகை ஆத்துக்குப் போகுமா?" என்று அந்த ஆண்குரலிடம் கேட்டாள்.

"ம்ம் போகும்!"

"நான் எப்படி இங்க வந்தேன்?"

"முதலில் எப்படி வெளியே போவதென்று பார்… அப்புறம் மற்றது பேசலாம்?" என்றதும், மீரஜா இன்னும் வேகமாக ஓடினாள்.

சற்றுத் தொலைவில் வெளிச்சம் தெரிந்தது. வேகமாக அந்த வெளிச்சத்தை நோக்கி ஓடி, குகையின் வாயில் வந்ததும் நின்றாள்.

திரும்பிக் குகைக்குள் பார்த்தவள், "நீங்கள் இங்க இருக்கிறவரா?" என்று கேட்டாள்.

"ஏன்?"

"உங்கள்ட்ட பேசனும்னு தோணிச்சுன்னா இங்க வர்றதுக்குத்தான்."

"என்ன?!! இங்கே திரும்பி வருவாயா? உனக்கு என்னிடம் பயம் இல்வையா?"

"இல்லை?"

"ஆச்சரியம் தான்"

"இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு?"

"நான் உன் கண்ணுக்குத் தெரியவில்லை! ஆனால் உன்னிடம் பேசுகிறன்."

"அதுனால?... பயந்துடனுமா?"

"உருவம் தெரியாமல் குரல் மட்டும் வந்தால் பயப்படுவது தானே மனித இயல்பு..."

"எல்லாரையும் அப்படிச் சொல்லிற முடியாது... ஒரு சிலர், ‘அது யாரா இருக்கும்?’கிற கியூரியாசிட்டிலையும், பார்க்க நினைக்கலாம்... இல்லையா?" என்று மீரஜா கேட்க,

"அப்படியென்றால், உனக்கு இருப்பதும் கியூரியாசிட்டியா?" என்று கேட்டவரின் குரல் சற்று கம்மியது…

"அப்படியில்ல."

"பின்னே?"

"நீங்க யாருன்னு நான் யோசித்திருக்கிறதுக்கு முன்னாடி, நீங்க எனக்கு உதவுறதக்குத்தான் வந்திருக்கீங்கன்னு புரிஞ்சது... அப்புறம் எப்படிப் பயம் வரும்?"

"உதவத்தான் வந்தேன் என்று என்ன நிச்சயம்? அதாவது, நான் சொன்னா, அந்தப் பாதை சரியானதுதானென்று எப்படித் தோன்றியது?"

"உண்மையில, அது ஏன் அப்படித் தோணுசாசுன்னு எனக்கும் தெரியல… ஆனா… நீங்க சொன்னபடி நடக்கனும்னு எனக்குத் தோணுச்சு."

"ஏனென்றால், நானும் உன்னுடைய உள்ளுணர்வுதானே?"

"நிச்சயமா இல்ல… எங்க தாத்தாவோட தவிப்புதான் எனக்குள்ள உள்ளுணர்வா உணர்த்தியது… ஆனா… உங்க குரல் எனக்குப் பக்கத்திலிருந்து கேட்குது…"

"ஆனாலும் நீ பயப்படவில்லை!"

"என்னவோ… பயம் வரல.” என்றவள், ”நான் உங்களப் பார்க்க முடியாதா?" என்று ஆர்வமாகக் கேட்டாள்.

"என் உருவத்தைப் பார்த்தால், நீ இப்படி என்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டாய்." என்றதும்,

'அவ்வளவு பயங்கரமா இருக்குமோ?' என்று ஒரு நிமிடம் யோசித்தவள்,

"இருக்கலாம். ஆனா… உங்க மனசு நல்லா இருக்கே? உருவத்தவிட மனசத்தான எல்லாரும் விரும்புவாங்க?" என்று மீரஜா கூறியதும் அவரிடமிருந்து பதில் வரவில்லை.

மீரஜாவிற்கோ, ‘தாத்தா பயந்துகொண்டிருப்பார்’ என்று தோன்ற,

"சரி நான் போயிட்டு வரேன்… வீட்ல தேடுவாங்க… நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லாம பேச்ச மாத்திட்டீங்க." என்று கூறிக்கொண்டிருக்கும் பொழுதே
"மீராமா!...." என்ற தாத்தாவின் குரல் கேட்டதும்,

"இன்னொரு நாள் பார்ப்போம்!" என்று கூறி ஓடியவள், குறுக்கே ஓடிய வைகை ஆற்றை எப்படிக் கடப்பது என்று விழித்தாள்.

"ஹஹ்ஹஹ்ஹாஹா… அதோ அந்த மரத்தில் ஒரு தோணி கட்டப்பட்டிருக்கிறது பார்… அதில் ஏறிச் செல்." என்றது அந்த ஆண் குரல்.

"அச்சச்சோ! எனக்குத் துடுப்பு வழிக்கத் தெரியாதே?"

"நீ ஏறு. அது உன்னை, உன் இடத்திற்குக் கொண்டு செல்லும்."

"எப்படி?... ஓ… நீங்க என்னைக் கூட்டிட்டு போய் விடப்போறீங்களா?"

"இல்லை… ஆனால்… நீதான் நான் என்ன சொன்னாலும் கேட்பதாகக் கூறினாயே? தைரியமாக ஏறுவதற்கென்ன? பயம் வந்துவிட்டதா?"

"ம்ஹும் நானாவது பயப்படுறதாவது." என்று தலையை ஒரு சிலுப்பு சிலுப்பிவிட்டு, அந்தத் தோணியை அவிழ்த்தாள்.

தண்ணீரில் ஆடிக்கொண்டிருக்கும் தோணியில் ஏற மீரஜா கொஞ்சம் தயங்கவே, தோணி ஆடாமல், யாரோ இறுகப்பிடித்திருப்பதைப் போல் அப்படியே நின்றது.

ஒரு நிமிடம் அந்தத் தோணியைக் கூர்ந்து பார்த்தாள்.

அதனருகில் யாரும் நிற்பது போல் தெரியவில்லை…

"ஓகே!" என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு தோணியில் ஏறியவள்,

"ரை... ரைட்… போகலாம் என்று குஷியாகக் கூறிய வினாடியில்,

"மீரா…" என்ற அவரது அமானுஷ்ய குரல் பன்னீர்ப்பூக்களின் வாசம்தாங்கி மீரஜாவின் முகத்தில் இதமான தென்றலாய் மோத,

கண்கள் மூடி, சற்றே அன்னாந்தபடி, பன்னீர்ப்பூவின் வாசனையை முகர்ந்தவளின் செவியில் ‌"மீரா…" என்ற குரல் மனதை ஏதோ செய்யக் கண்திறந்து பார்த்தாள்.

அந்த உணர்விலிருந்து வெளிவர மீரஜாவிற்குச் சில நொடிகள் ஆனது.

தோணி மெல்ல நகர்வதைக் கண்டவள், "உங்க பேர் என்ன?" என்று குகை வாயிலை நோக்கி, சப்தமாகக் கேட்டாள்.

"அதையும் நீயே கண்டுபிடி!" என்று கூறிய விதத்திலேயே, அவர் சிரித்தபடி பேசுகிறார் என்று மீரஜாவிற்கு உணர்த்தியது.

"எல்லாத்தையும் நானே கண்டுபிடிக்கிறதுன்னா எப்படி?" என்ற மீரஜாவின் கேள்விக்கு, அவரின் சிரிப்பொலியே பதிலாகக் கிடைத்தது.

தோணி ஆற்றில் மிதந்து செல்ல, தனக்கு எதிரே யாரோ அமர்ந்து, தோணி இயக்குவது நன்றாகவே மீரஜாவிற்குப் புரிந்தது.

"நீங்க யாரு?... உங்க உருவமும் ஏன் என் கண்ணுக்குத் தெரியல?... எனக்கு நல்லதுதான பண்றீங்க?" என்று மீரஜா கேட்டதும்,

‘நல்லதா?!! இந்தக் குகைக்கு, இந்தக் குழந்தை எப்படி வந்தாள்? என்பதை மறந்துவிட்டாளா?’ என்று நினைத்தபடி மீரஜாவைக் கரிசனமாகப் பார்த்தது அவள் எதிரிலிருந்த முதிய உருவம்.

ஆற்றங்கரையில் தனியாக நின்றபடி, எப்படியும் மீரஜா வழியறிந்து வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தாத்தாவிற்கு, தூ…ரத்தில் ஒரு தோணியும், அதில் மீரஜா வருவதும் தெரிந்தது.

மீரஜா வந்துவிட்ட சந்தோஷத்தில், தோணி தானாக இயங்கி வருவதைத் தாத்தா கவனிக்கவில்லை.

தாத்தா மீரஜாவைப் பார்த்துக் கையசைக்க,

எதிரிலிருந்த உருவத்தை எப்படியாவது பார்த்துவிடும் ஆராய்ச்சியில் இருந்த மீரஜாவின் பார்வையில் தாத்தா கையசைப்பது தெரிய, அவளும் தாத்தாவைப் பார்த்துக் கையசைத்தாள்.
தன் அருமை பேத்தி வருவதை ஆவலுடன், தனியாக நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் பின்னால்.

"வந்துட்டியா? உன்ன என்ன செய்றேன் பாரு!" என்ற கரகரப்பான குரல், கர்ண கொடூரமாகக் கேட்டுத் தூக்கிவாரிப் போடத் திருப்பிப் பார்த்தார் தாத்தா.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1500


கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
மீராக்கு தெய்வ சக்திய உணர முடியும்ல so அது கண்டிப்பா பாசிட்டிவ் vibration a தான் இருக்கணும், ஒரு வேலை பரிசில் ஓட்டுறது அவளுக்கு பேர் வச்ச சித்தர்ரா இருக்குமோ, பின்னாடி இருக்கது யாரா இருக்கும் 🤔
 

aas2022-writer

Well-known member
மீராக்கு தெய்வ சக்திய உணர முடியும்ல so அது கண்டிப்பா பாசிட்டிவ் vibration a தான் இருக்கணும், ஒரு வேலை பரிசில் ஓட்டுறது அவளுக்கு பேர் வச்ச சித்தர்ரா இருக்குமோ, பின்னாடி இருக்கது யாரா இருக்கும் 🤔
மீராவுக்கு ஆத்ம சக்தியையும் உணர முடியுமே சிஸ்?
 

Sspriya

Well-known member
யாரு அப்படி கர்ண கொடூரமா பேசறது... குகை மனிதன் யாரு பா... பேர் கூட சொல்ல மாற்றங்க... ஆழ் மன உணர்வு நல்லா வேலை செய்யுது... நம்ப try பண்ணுவோம் நமக்கும் வேலை செய்யும் 👍🏻👍🏻👌🏻😍
 

Aathisakthi

Well-known member
யாரது பின்னால அவங்க அம்மாவா. .😎😎😎😎😎....யாராடா அது இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்தது😐😐😐😐🤔🤔🤔🤔
 
Top