கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-23

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-23


தன் அருமை பேத்தி வருவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த தாத்தாவின் பின்னால்.

"வந்துட்டியா? உன்ன என்ன செய்றேன் பாரு!" என்று கரகரப்பான குரல் கர்ண கொடூரமாகக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுத் திருப்பிப் பார்த்தார் தாத்தா.

"நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்தீங்க?" என்று தாத்தா தன் எதிரில் நின்று கொண்டிருந்த தன் இரு புதல்வர்களையும் பார்த்துக் கேட்டார்.

"நாங்க வந்து கால்மணி நேரத்துக்கு மேல ஆகுதுங்கய்யா. உங்களக் கூப்பிட நினைச்ச நேரத்துல நீங்க தூரத்துல வந்துகிட்டிருந்த தோணியையே பார்க்கவும், நாங்களும் பார்த்தோம். தோணில வந்துகிட்டிருந்தது மீரான்னு தெரிஞ்சதும் அப்படியே நின்னுட்டோம்." என்று கூறினான் செல்வராஜ்.

செல்வராஜுக்கு அருகில் நின்று கொண்டிருந்த தனராஜன், செல்வராஜ் கூறியதை ஆமோதிப்பது போலத் தலையசைத்தான்.

"அது சரி இப்ப பேசினது யாரு? உங்க குரல் ஏன் இவ்வளவு கர்ண கொடூரமாப் போயிருச்சு?" என்று கேட்டார் தாத்தா.

உடனே தன் தொண்டையில் கையை வைத்து நீவியபடி, "தெரியலங்கய்யா... இரண்டு நாளாவே தொண்ட சரியில்ல… அதுவும் இன்னைக்குக் காலைலருந்து தொண்ட கட்டிக்கிடுச்சு." என்று கொஞ்சம் பிசுறு தட்டியவாறு கூறினான் செல்வராஜ்.

"ஏற்கனவே மன கஷ்டத்துல தனியா நின்னுட்டிருக்கும்போது திடீர்னு பின்னாடி வந்து இப்படியா பேசுவாங்க?" என்று கூறி தன் நெஞ்சைத் தடவிக் கொடுத்தபடி நெருங்கி வந்து கொண்டிருந்த தோணியைப் பார்த்தவருக்கு செல்வராஜ், மீரஜாவைப் பார்த்து, "உன்ன என்ன செய்றேன் பாரு!"ன்னு கோபமாகச் சொன்னது ஞாபகத்திற்கு வர,

"மீராமா வ நான்தான் தோணில அனுப்பிவச்சுட்டு நடைபயிற்சிக்கு போனேன். வயசாயிடுச்சுல்ல? மறந்துட்டேன். வீட்ட விட்டு, பிள்ளயத் தேடி வெளிய வந்ததும்தான், தோணில போகனும்னு பிள்ள ஆசப்பட்டதும், இன்னைக்குக் காலைல நான் கூட்டிட்டுப் போயி தெரிஞ்சவரோட தோணியில ஏத்திவிட்டது ஞாபகத்துக்கு வந்துச்சு."

"நீங்கதான் அனுப்பி வச்சீங்களா ஐயா?" என்று சற்றே நிம்மதியாக செல்வராஜும்,

"எனக்கு அப்பவே தோணுச்சுண்ணே... பிள்ள நம்மட்ட சொல்லாம தனியாக எங்கேயும் போகாதே ன்னு." என்று தன ராஜனும் கூறவும்,

'அப்பாடி! ரெண்டுபேரும் நம்பிட்டான்க' என்று நிம்மதி அடைந்த தாத்தா மேலும் தொடர்ந்தார்.

'ஆமாப்பா… எனக்கும் அப்படித்தான் தோணுச்சு… அப்புறந்தான், பிள்ளைய தோணில ஏத்திவிட்டு, நான் வர்றவரை பிள்ளைய தோணில கொஞ்சதூரம் கூட்டிப் போயிட்டு வா! ன்னு சொல்லி அனுப்பி வச்சது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதான் இங்க வந்து நிக்கிறேன்." என்று தன் புதல்வர்களின் மனவோட்டத்தை ஆராய்ந்தவருக்கு, அவர்கள் தான் சொன்னதை நம்பிவிட்டது நன்றாகத் தெரிந்ததும்,

"நான் தானே அனுப்பிவச்சேன் பிள்ளைய யாரும் ஒன்னும் சொல்லாதீங்க…" என்று, செல்வராஜைக் குறிப்பாகப் பார்த்துக் கூறினார்.

குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் யாருக்கும் இந்த விசயம் தெரியாமல் இருப்பதே, பல வகையிலும் மீரஜாவிற்கு நல்லது… என்று நினைத்து உண்மையை மறைத்தார் தாத்தா.

மகன்கள் இருவரும், "சரிங்கய்யா… உங்கள இங்க பார்ததுமே, தூரத்துல வர்ற தோணில மீரா இருக்கிறது ஐயாவுக்கு எப்படி முன்னாடியே தெரிஞ்சு, இங்க வந்து நிக்கிறார்னு நெனச்சோம்." என்று கூறிச்சிரிக்க,

"ரெண்டு பேரும் டூவீலர் ல தான வந்திருக்கீங்க?" என்று சட்டென்று பேச்சை மாற்றினார்.

"ஆமாய்யா!"
"சரி! நான் பிள்ளையைக் கூட்டிட்டு வர்றேன். நீங்க முன்னாடி போய் வீட்டுல சொல்லிடுங்க." என்று இரு மகன்களையும் அந்த இடத்திலிருந்து அவசரமாகக் கிளப்பினார்.

மகன்களுக்கும் தாத்தா கூறியது சரியெனப்படவும், வேகமாக வண்டியை வீட்டுக்கு விரட்டினர்.

தோணியிலிருந்து மீரா பத்திரமாக இறங்குவதற்கு உதவுவியாக, ஆற்றில் இறங்கி நின்றுகொண்டார் தாத்தா.

மீரஜா வந்த தோணி தாத்தாவை நெருங்கவும், தொணியை இயக்கி வந்தவரிடம் பேச எண்ணிப் பார்க்கும்போதுதான், தோணி தானாக மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியுடன் ஸ்தம்பித்து நின்றார்.

அவரருகில் வந்து ஆடியபடி நின்ற தோணி, மீரஜா இறங்கும்போது தோணி ஆடாமல் இருப்பதையும்,

தோணியிலிருந்து இறங்கிய மீரஜா, தாத்தாவிடம் ஓடிவந்து நின்று கொண்டு, தோணியைப் பார்த்து,

"ரொம்ப நன்றி! மறுபடியும் எப்ப பார்க்கலாம்னு அவர்ட்ட கேட்டேன்னு சொல்லுங்க." என்று கூறி, கையசைத்து விடை கொடுப்பதையும், கண்டவருக்குத் தொண்டை வறண்டு பேச்சுவரவில்லை.

"தாத்தா! தாத்தா! வாங்க வீட்டுக்குப் போகலாம்." என்று எதுவுமே நடக்காததைப் போன்று மீரஜா தனது தாத்தாவை அழைக்கவும் தன்னுணர்வுக்கு வந்தவர், மீரஜாவை அதிர்ச்சியுடன் பார்த்தபடி எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி நடக்க,

"உங்க பக்கத்துல அப்பாவும், சித்தப்பாவும் நின்னுக்கிட்டிருந்தாங்களே?" என்று மீரஜா கேட்டாள்.

‘அவர் எந்தக் காரணத்திற்காக மகன்களை அனுப்பி வைத்தார்’ என்பது தாத்தாவிற்கு ஞாபகம் வந்ததும்,

"அது வந்து மீராமா… காலைலருந்து வீட்ல எல்லாரும் உன்னைத் தேடிக்கிட்டிருக்கோம். நீ தோணில வர்றதப் பார்த்ததும் செல்வத்துக்குக் கோபம் வந்துடுச்சு… பெத்தவன் இல்லையா? வயசுப் பொண்ணு, வீட்ல யார்ட்டயும் சொல்லிக்காம எங்கயோ போயிட்டு வந்தா, கோபம் வரத்தான செய்யும்?" என்று தாத்தா மீரஜாவைப் பார்க்க,

'தன்னிடம் ‘எங்கே போனாய்’ என்று தாத்தா கேட்காமலயே, அப்பாவின் கோபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றியிருக்கிறார்' என்று அறிந்த மீரஜா, "ஆமா!" என்று கூறித்தலையசைத்தாள்.

"அது மட்டுமில்ல. நீ மட்டும் தனியா போனது வேற யாருக்கும் தெரிய வெணாம்னு நினச்சு, தோணில ஒரு ட்ரிப் போக நீ ஆசப்பட்டதால, நானே அனுப்பி வச்சேன்னு சொல்லி அனுப்பிட்டேன்." என்று கூறிய தாத்தாவின் புருவங்கள் இன்னும் யோசனையில் நெறிபட்டிருப்பதைக் கண்டவள்,

"நிஜமாவே நானா போகல தாத்தா… எப்படி அங்க போனேன்னு தெரியல." என்ற மீரஜாவை,

'உண்மைதான் கூறுகிறாளா?' என்று உற்று நோக்கினார்.

மீரஜாவின் கண்களிலிருந்த உண்மையைக் கண்ட தாத்தா,

"யார் கூட்டிட்டு போனா?" என்று கேட்டார்.

"யாருமே கூட்டிட்டுப் போகல…" என்று ஆரம்பித்த மீரஜாவிற்கு விடிகாலையில் தன் முன்னால் சென்ற உருவத்தை, தான் பின்தொடர்ந்து சென்றது ஞாபகத்திற்கு வந்தது.

யோசனையால் சுளித்த புருவத்துடன் நின்ற தனதருமைப் பேத்தியிடம்,

"என்னடாமா? என்னதான் நடந்தது?" என்று தாத்தா பரிவுடன் கேட்டதும், நடந்தவை அனைத்தையும் தாத்தாவிடம் கூறினாள்.

'உருவம் தெரியாத மனிதன், உன்னைப் பத்திரமாக அனுப்பி வைத்தானா?' என்று அதிர்ச்சியடைந்த தாத்தா,

"நீ சொல்றதெல்லாம் கேட்க ரொம்ப வித்தியாசமா இருக்கு மீராமா…" என்று குழப்பமான பாவனையில் கேட்டதும்,

"நீங்க என்னை நம்பலையா தாத்தா?" என்று கேட்டாள்.

"வேறு யாரும் சொல்லிருந்தா நம்பீருக்க மாட்டேன்மா… நீ எங்கிட்ட எதுக்குச் சும்மா சொல்லப்போற?... ஆனா... உனக்கு அவங்களப் பார்த்துப் பயமா இல்லையாடா?"

"இல்ல தாத்தா… அவர் என்ன காப்பாத்தத் தானே தாத்தா செஞ்சார்?"

"அவர் உன்னைக் காப்பாத்தினார் சரி. நீ எப்படி அங்க போன? உன்னைக் கூட்டிட்டுப் போனவன் எங்க?... அவன் யாரு?... நீ எதுக்கு அவன் பின்னாடி போன?... என்னடாம்மா இதெல்லாம்? நீ நம்ம வீட்டுல தவமா தவமிருந்து கிடச்ச குலவிளக்கு… பெண்குழந்தை பேறுகிடைக்காத கலியைத் தீர்க்கப்பிறந்தவள்… நீ கவனமா இருக்க வேண்டாமா?"

"சரிங்க தாத்தா இனி கவனமா இருக்கேன்."

"நம்ம வீட்டவிட்டு எங்க போறதா இருந்தாலும், வீட்ல இருக்கிற பெரியவங்க கூடத்தான் போகனும். புரியுதாடாமா?"

"ம்ம்ம்"

"தனியா எங்கயும் போகக் கூடாது… வீட்ல இருக்கிற பெரியவங்கட்ட கட்டாயம் சொல்லிட்டுத்தான் போகனும்"

"ம்ம் சரி"

"எந்த எதிர் கேள்வியும் கேட்காம, நீ தலையாட்டும் போதுதான் தாத்தாவுக்குப் பகீர்ங்குது." என்று கூறித் தாத்தா சிரிக்கவும்,

"போங்க தாத்தா!" என்று செல்லம் கொஞ்சினாள் மீரஜா.

"சரி!சரி! வீடு வந்துருச்சு… தாத்தா சொன்ன மாதிரியே சொல்லிடு... சும்மா, தோணில போக ஆசப்பட்டேன். தாத்தா அனுப்பி வச்சாங்கன்னு சொல்லு ஓகேயா?"

"ம்ம்... ஓகே!"

"மறுபடியும் எதிர்கேள்வி கேட்காம சரிங்கிறியே!" என்று கூறி தாத்தா சிரிக்க,

மீரஜாவும் சேர்ந்து சிரித்தாள்…

தாத்தாவும் பேத்தியும் சிரித்துக்கொண்டு வருவதைப் பார்த்த குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அன்று மீரஜாவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்ட பிறகு, அப்பத்தா ஃபினான்ஸ் கம்பனிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தாத்தாவிடம் வந்து நின்றார்.

"என்ன முத்துரா?"

"நீங்கதான் சொல்லணும்." என்று அப்பத்தா அர்த்தமுள்ள பாவனையில் கேட்டதும்,

'ஆஹா! மீராமா பத்திக் கேட்கிறா போலிருக்கே?' என்று நினைத்த தாத்தா, அப்பத்தாவின் முக்த்தைப் பார்க்க,

அப்பத்தாவின் முகத்திலிருந்த அலைப்புறுதலே, ‘தாத்தா நினைத்ததுதான் உண்மை’ என்று கூறியது.

எதுவும் பேசாமல் தன் முகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்த தாத்தாவை நிமிர்ந்து பார்த்து,

"மீராமா ஆத்து தோணில தனியா வந்தாளாமே? வயசுப் பொண்ண, நீங்க தனியா அனுப்பி வச்சிருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்… அதேமாதிரி, அவ எங்க போனான்னு உங்களுக்குத் தெரியும். ஆனா எங்கிட்ட எதுக்கு மறைக்கிறீங்கன்னுதான் தெரியல."

"மறைக்கனும்னு இல்ல முத்துரா… எனக்கு மட்டுமில்ல மீராமாவுக்கே அவ எங்க போனா? எப்படிப் போனான்னு தெரியாது."

"என்ன சொல்றீங்க?"

"இங்க வச்சு எதுவும் பேசவேணாம். அது விசயமா நான், மீராம்மா சொன்ன இடத்துக்குப் போறேன். மேனேஜர்ட்ட நான் வர்றவரை ஆபீச பார்த்துக்கச் சொல்லிட்டேன். உனக்கு விவரம் தெரிஞ்சுக்கனும்னா கொஞ்சம் பொறு. நான் வந்து சொல்றேன்." என்ற தாத்தாவைக் கலக்கத்துடன் பார்த்த அப்பத்தா,

"மறுபடியும் மனுச சக்திய மீறுன சக்திகளோட பழகுறாளா?" என்று கவலையோடு கேட்டார்.

"அவளா விரும்பிக் கூப்பிடல முத்துரா… பாபநாசத்துக்காரர் சொன்னது மறந்துடுச்சா? அவ கூப்பிடாமலும் ரெண்டு சக்திகள் அவகிட்ட வரும்னு சொன்னார்ல?… அதுல ஒன்னத் தான் இன்னைக்குப் பார்த்திருக்கா." என்று தாத்தா கூறவும்,

"கம்பனரியா காமாட்சி! இது என்ன சோதன?" என்று மேலே பார்த்து வணங்கிய அப்பத்தா, தாத்தாவைப் பார்த்து,

"நீங்க என்ன செய்யப்போறீங்க?"

"அவ சொன்னமாதிரி அக்கரையில மலைக்குகை இருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்."

"நீங்க மட்டும் தனியாவா?"

"மீராமாவே தனியாதானே போனா?"

"எனக்கென்னவோ கொஞ்சம் பயமா இருக்குங்க… வேணும்னா மறுபடியும் பாபநாசத்துக்கே ஒரு நட போயிட்டு வாங்களேன்." என்ற அப்பத்தாவைப் பார்த்தவர்,

"சரி! அப்படியே செய்றேன்." என்று கூறி நல்லசிவத்தையும், அலுவலக ஊழியர் ஒருவரையும் அழைத்துக்கொண்டு பாபநாசம் புறப்பட்டார்.

ஆற்றங்கரையில் செவரலெட் பயணிக்கும்போது மீண்டும் 'அக்கரையில் என்ன இருக்கும்?' என்று தாத்தாவிற்குத் தோன்ற,

"நல்லசிவம்! அக்கரையில மலைக்குகை இருக்காமே? கேள்விப்பட்டேன்." என்று டிரைவரிடம் வினவினார்.

"மலைக்குகையா?... நமக்குத் தெரியாம எந்தக் குகை ய்யா இருக்கப்போகுது? சிறுவயசுல ஆத்துல நீந்தி, நீங்களும் அக்கரைக்குப் போயிருப்பீங்கதானே?"

"ஆமா… இருந்தாலும் போய்ப் பார்க்கலாமான்னு ஒரு யோசன…"

"பாபநாசம் போயிட்டு வரும்போது பார்த்துடுவோமா ய்யா?"

"இல்ல நல்ல சிவம். இப்ப போய்ப் பார்த்துட்டு, அப்புறம் பாபநாசம் போகலாம்." என்றதும்

தாத்தாவை ரியர்வியூ மிரரில் பார்த்த நல்லசிவம்,

"சரிங்கய்யா! தோணிக்கு ஏற்பாடு பண்றேன்" என்று கூறிவிட்டு, மொபைல் போனில் யாருடனோ பேசியவன், வண்டியைப் பார்க்கிங்கில் நிறுத்தியதும்,

மூவரும் கிளம்ப, ஆபீஸ் ஊழியரைப் பார்த்த தாத்தாவிற்கு, 'இவர ஏன் மலைக்குகைக்குக் கூட்டிட்டுப் போகனும்? குடும்ப விசயம் அலுவலகம்வரை தெரிய வேண்டாம்." என்று நினைத்த தாத்தா,

ஆபீஸ் ஊழியரிடம் வேறு வேலை சொல்லி அனுப்பிவிட்டு, நல்லசிவத்துடன் வைகை ஆற்றங்கரையிலிருந்த தோணியில் ஏறினார்.

அக்கரையை ஓட்டித் தோணி மிதந்து சென்றது… கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவு கடந்தும் எந்த மலையும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

"நான் இருவது வருசமா இங்கதான் சுத்துறேன். இதுவர எந்த மலையையும் பார்த்ததில்லீங்க." என்று தோணிக்காரர் சொல்ல,

"இன்னும் கொஞ்சதூரம் போய்ப்பார்ப்போம். எதுவும் வரலைனா, அக்கரைக்குப் போயிடலாம்" என்று தாத்தா கூறினார்.

பதினைந்து நிமிட பயணத்திற்குப் பின் எந்த மலையும் கண்ணுக்குத் தெரியாததால், தோணியைக் கார் நிறுத்தியிருந்த இடத்துக்குத் திருப்பினார் தோணிக்காரர்.

ஆற்றங்கரையை ஒட்டி நிறைய மாமரம் செழித்து வளர்ந்திருந்தன. மரத்தில் இலையே தெரியாத அளவிற்கு மாங்கனியும், காய்களும் காய்த்துக் குலுங்கின.

அதைப் பார்த்த நல்லசிவம், "ஐயா இவ்வளவு தூரம் வந்ததுக்கு, இந்த மாம்பழங்களையாவது பறிச்சு வீட்டுக்குக் கொண்டுபோவோம்." என்று கேட்டான்.

"சேச்சே! இது யாருடைய தோப்போ?" என்று தாத்தா மறுக்க,

"இந்த இடம் யாருக்கும் சொந்தமில்லீங்கய்யா… ஆத்துல வெள்ளம் வரும்போது அடிச்சுட்டு வந்து ஒதுங்குன விதைதான் மொளச்சுக் கிடக்கு." என்று தோணிக்காரர் கூறினார்.

தாத்தாவின் சம்மதம் கிடைத்தவுடன், தோணி கரை ஒதுங்கியது.

கரையில் இறங்கியதுமே மாம்பழ வாசம் அந்த ஏரியாவையே இனிக்கச் செய்திருந்ததைக் கண்டு வியந்து நின்றனர் தாத்தாவும், நல்லசிவமும்.

ஒரு கோணிப்பையைத் தோணிக்காரரிடமிருந்து வாங்கி, நல்லசிவம் மரத்தின் மீதேறி மாங்கனிகளையும் காய்களையும் பறித்துப்போட, தோணிக்காரர் கோணிப்பையில் சேகரித்தார்.

சிறிதுநேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாத்தா, மெல்ல சுற்றிலும் பார்த்தபடி நடந்து சென்றார்.

தாத்தாவிற்கு, தண்ணீர் தாகம் எடுக்கவும், மீண்டும் ஆற்றுக்குத் திரும்ப எத்தனித்தார். அப்பொழுது அவருக்கு அருகில் எங்கேயோ சளசளவெனத் தண்ணீர் விழும் சப்தம் கேட்டது.

சப்தம் வந்த திசையில் தாத்தா சென்றார்.

சுற்றிலும் பசுமையான அடர்ந்த மரங்களுக்கு இடையே சிறிய சுனை ஒன்று இருந்தது. கண்ணுக்குத் தெரியவில்லையென்றாலும் பலவகையான இசையை இசைத்தது போன்று பறவைகளின் இனிய ஓசை நிறைந்திருந்தது… மரங்களின் பச்சை வாசனையுடன் பூக்களின் வாசமும் கலந்து அவ்விடத்திற்கு மணம் பரப்பியது.
'என்ன ஒரு அழகான இடம்? இந்த இடத்தில் இப்படியொரு சுனை எப்படி?' என்று சுற்றுப்புறத்தை ரசித்தவரே சுனை அருகில் சென்று, சுனை நீரில் கைகளை நன்கு அலம்பிவிட்டு, சிறிது தண்ணீரை முகத்தில் அடிக்க,
சில்லென்று முகத்தில் மோதியது தண்ணீர்.

அந்த இன்பத்தில் சிறிது நேரம் திளைத்துவிட்டு, தண்ணீரை எடுத்துப் பருகியவருக்கோ ஆச்சரியத்தில் உடல் சிலிர்த்தது.

சுனைநீரின் சுவை இளநீரின் சுவை போலிருந்தது… 'சுற்றிலும் மாமரமே இருக்க, இளநீர் சுவை எப்படி வந்திருக்க்கூடும்?' என்று நினைத்தவர், தாகம் தீரும்வரை தண்ணீர் பருகிவிட்டு, அங்கிருந்து செல்ல மனம் இல்லாமல் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டார்‌.

சிறிது நேரத்தில் ஒரு பசு அவரைக் கடந்து சென்றது. அதைப் பார்த்தவர்,

'இந்தப் பகுதியில் வீடுகள் இருக்கிறதோ?' என்று எண்ணி, 'இங்குள்ளவர்களிடம் இப்பகுதியில் குகை எதுவும் இருக்கிறதா?" என்று கேட்டுப் பார்க்கலாம்.’ என்று நினைத்தபடி, பசு சென்ற வழியைப் பின் தொடர்ந்து சொன்றவருக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன…

அடர்ந்த வனத்திற்குள் சிறிய மலையும்… அதனுள் குகையும் இருப்பதைக் கண்டவர்,

குகையின் வாயிலை நோக்கிச் சென்றார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1352

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
தாத்தா குகைய கண்டுபிடிச்சிட்டார்.. அதோட 2 தடவை மீராவ தன்னோட வச்சிருக்கணும்ன்ற சான்ஸ்யும் use பண்ணிட்டார்.. இனி மீராக்கு ஆபத்து வராமல் இருக்கணும்
 

Sspriya

Well-known member
ப்பா சூப்பர் 👌🏻👌🏻👌🏻👍🏻... தாத்தா தாத்தா தான்... பேத்தி காக மட்டும் தான் யோசிப்பாரு 😍😍💞... தாத்தாவும் குகை குள்ள போக போறாரா 🙄... இவரு கிட்டயும் பேசுவாரா குகை மனிதர்
 

Sspriya

Well-known member
Todays punch 💞

மீரா யார்கிட்டயும் சொல்லாம போன இடம் குகை

சமயத்தில் தாத்தா மட்டும் காப்பாத்தாம போய் இருந்தால் ஆகி இருக்கும் அப்பாவுக்கும் பொண்ணுக்கும் பகை 🙄🤔
 

Aathisakthi

Well-known member
இவருக்கு குகை இருக்கற இடம் தெரிஞ்சுடுச்சி ...அடுத்து😐🤔🤔🤔🤔🤔
 
Top