கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-24

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-24

குகையின் வாயிலை நோக்கிச் சென்ற தாத்தா, 'நல்லசிவத்தை அழைத்து வருவொம்!' என்று எண்ணித் திரும்பினார்.

"குகையின் வாயில்வரை என்னைத்தேடி வந்துவிட்டு, திரும்பிப்போவதேன்?" என்ற கம்பீரமான குரல் கேட்டு, குகையைத் திரும்பிப்பார்த்தார்.

'மீராமா சொன்ன மனிதனோ?' என்று எண்ணிய தாத்தா, குகைக்குள்ளே செல்லாமல், வெளியே நின்றபடி, குகைக்குள் யாரேனும் தென்படுகின்றனரா என்று பார்வையால் அலசினார்.

"உள்ளே வரத் தயக்கமா? இல்லை... மீரா உங்களிடம் சொன்னதுபோல, இவ்விடத்தில் குகை இருக்கிறதா? என்று அறிந்துகொள்ள மட்டும் வந்தீரா?” என்று மென்நகையுடன் வினவியது அந்த ஆகர்சனக் குரல்.

உடனே, ‘என்ன ஆனாலும் அந்த மனிதனைச் சந்தித்து விடுவது’ என்று குகையினுள் சென்ற தாத்தா, "யார் நீங்க?" ஏன் என் பேத்தியை இங்க வரவச்சீங்க?" என்று கேட்டதும், குகை முழுவதும் சிரிப்பொலி எதிரோலித்தது.

மேலும் நான்கடி நடந்த தாத்தாவிற்குத் திடீரென ஒரு யோசனை, 'நல்ல சக்தி என்றால், உருவத்தைக் காட்டாமல் ஏன் மறைந்து நிற்க வேண்டும்?' என்று தோன்ற, சட்டென்று நின்றார்.

கண்களை மூடியபடி, காதுகளைத் தீட்டித் தன்னைச்சுற்றி ஏதெனும் சப்தம் வருகிறதா? என்று கூர்ந்து கவனித்தார்… அருகில் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

'மனித நடமாட்டமில்லாத இக்குகையில் கொடிய மிருகங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதே?!' என்று எண்ணியவர், தன் பர்ஸில் இருந்த மினி டார்ச்சை எடுத்து உயிர்ப்பித்தார்.

இரண்டடி நடப்பதற்குள், நான்கு முறை மின்னிவிட்டு டார்ச்லைட் அணைந்துவிட, அதைக் குலுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ நறுமண வாசம் வரவே, எந்தப் பக்கத்திலிருந்து வாசம் வருகிறது?' என்று ஆழ்ந்த மூச்செடுத்து, கண்களைக் கசக்கித் தேடியபடி,

"நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.

குகை அமைதி காக்கவே,

'இந்தக் குகையில் எதிரில் நிற்பவரே கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை… வெளியே சென்று தீப்பந்தம் ஏதாவது செய்து வரலாம்' என்று எண்ணி, வாயிலை நோக்கித் தாத்தா திரும்ப,

"வந்த வேலை முடிந்ததா?" என்று மீண்டும் குரல் வந்தது.

"நிச்சயமா உங்களோட கண்ணாமூச்சி விளையாட வரல… நீங்க இருக்கிறதே எனக்குத் தெரியல… வெளிச்சம் வர்றதுக்கு ஏத்தமாதிரி எதாவது எடுத்துட்டு வர்றேன்." என்று கூறி நடந்தார் தாத்தா.

"ஏன் இருள் என்றால் பயமா?"

"பயமா? எனக்கா? மிஞ்சி மிஞ்சிப் போனால் உயிர் போகும். அவ்வளவுதானே?"

"மீராவின் ரொல்மாடலான நீங்கள்… பயம்கொள்ள வாய்ப்பில்லைதான். பிறகு ஏன் திரும்புகிறீர்கள்?"

"நல்லவர்கள் இருளில் மறைந்திருப்பதன் அவசியமும் புரியவில்லையே?"

"அதை அறிந்துகொள்ளவா வந்தீர்?"

"நீங்க யாரு? இவ்வளவு சுத்த தமிழ்ல பேசுற உங்களுக்கு, சிறு குழந்தையான மீராமாவுடன் என்ன விளையாட்டு?"

"நான் யாரென்று மீராவால் தான் உங்களுக்குச் சொல்ல முடியும்…"

"நீங்கள் யாரா வேணா இருந்துங்குங்க. என் பேத்திய தொந்தரவு செய்யாதீங்க." என்று தாத்தா கூறியதுதான் தாமதம், அவருடைய முகத்திற்கு மிக அருகில் அனல் வீசும் மூச்சுக் காற்றை உணர்ந்த தாத்தா, கைகளால் எதிரிலிருக்கும் உருவத்தைப் பிடிக்க முயன்று, காற்றைத் துழாவினார்.

கூடவே யாரோ கோபமாக உறுமும் சப்தமும் கேட்க,

இருளில் அந்த உறுமல் சப்தம் குகையைச் சுற்றிலும் பயங்கரமாக எதிரொலித்தது.

சற்று மனம் படபடத்தாலும், "நீங்கள் எந்தப் பதிலும் தருவதாகத் தெரியவில்லை… சாதாரண மனிதன் நான். என் எதிரில் நீங்கள் வருவதாகவும் இல்லை… உங்களுக்கு என்னதான் வேண்டும்?"

"என் மீரா"

"அவள் என் பேத்தி என்பது நினைவிருக்கட்டும்… தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாத உங்களுடைய நட்பு என் பேத்திக்குத் தேவையில்லை."

"யாரிடம் பேசுகிறீர்கள்? நான் நினைத்தால் இக்கணமே மீராவை இங்கு வரவைக்க முடியும்."

"வரவைக்க முடியலாம்… பிரியத்தை வாங்க முடியுமா? பிரியமில்லாத சிறு குழந்தையுடன், இக்குகையில் மறைமுக வாழ்க்கை வாழும் உங்களுக்கு நட்பெதற்கு?"

"அவளுக்கா என்மீது பிரியமில்லை?"

"நீங்க யாருன்னே தெரியலன்னு சொல்றா… இதுல பிரியம் எங்க இருக்கு?"

"தன்னிலை மறந்திருக்கிறாள்… சமயம் வரும்போது என்னைத்தேடி வருவாள்."

"ரொம்ப சந்தோஷம்… அவளுக்கு உங்கமேல பிரியம் வரட்டும். அதுக்கப்புறம் அவளை இங்கே வரவைப்பதைப் பற்றி யோசிப்போம்… அதுவரை அவள் நிம்மதியாக எங்களுடன் வாழட்டும்." என்று கூறியதும்,

சுற்றிலும் சூரைக்காற்று வீச, ஆற்று மணல் மேலெழும்பி சுப்பையாபிள்ளையை நோக்கி வந்தது. அந்தச் சுழல் தன்னைத் தாக்கத்தான் வருகிறது என்பதை உணர்ந்த தாத்தா,

"என்னைய கொன்னுட்டு, மீராமாவோட நட்பை, இந்த ஜென்மத்தில நீங்க சம்பாதிக்க முடியும்னு நினைக்கிறீங்களா?…" என்று கேட்டதும்,

சூரைக்காற்று வீசுவது நின்று. மணல் பொலபொலவெனத் தரையில் விழுந்தது.

"நீங்கள், சாதாரண மனிதன் என்பதை மறந்து, என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்."

"அதைத்தான் நானும் சொல்றேன்… நாங்க சாதாரண மனுசங்க… எங்க கூட, உங்கள மாதிரி அமானுஷ்ய சக்திகள் நட்புறவு வச்சுக்கிறது சாத்தியமான விசயமில்ல…"

"அத மீரா சொல்லட்டும்."

"அவ குழந்தை… இளம் கன்று பயமறியாது… அவளுக்கும் உங்களுக்கும் இடையேயான நட்பால் ஏற்படும் விளைவுகளை அவள் அறியும் வயது வரும்வரை, அவளைத் தொந்தரவு செய்யாமலிருக்கக்கூடாதா? ப்ளீஸ்...!" என்று தாத்தா கெஞ்சவும்,

"நான்…"

"யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்… மீராவின் மனநிலை முக்கியமில்லையா?" என்று மீண்டும் கெஞ்சும் பாவனையில் தாத்தா கேட்டார்.

"இருளுக்குள் இருப்பெதெல்லாம் துஷ்டசக்தி கிடையாது." என்று கர்ஜிக்க,

"நல்ல சக்தி இருளுக்குள் இருக்க வேண்டிய அவசியமுமில்லையே?" என்று தாத்தாவும் பிடிகொடுக்காமல் வாதாட,

"என்னுடைய ரூபம் காரணமாகவும், உங்கள் பார்வைக்கு என்னை வெளிக்காட்டாமல் இருக்கலாம் இல்லையா?"
"ரூபம்?"

"ஆமாம்!... நல்ல சக்தி என்றாலே அழகான வடிவத்துடன்தானே ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?"

"அப்படிச் சொல்லிவிட முடியாது… கோர வடிவத்திலிருக்குற சக்திகளைக் கடவுளாகவே பார்க்கத்தான செய்றோம்… அப்படிங்கிறப்ப, அந்தமாதிரி சக்திகள் தங்களை ரட்சிக்கும் ன்ற நம்பிக்கைதான அடிப்படையாகுது? ரூபத்தையா பார்க்கிறோம்?"

"அவ்வாறெனில் என் ரூபத்தைக் கண்டு நீங்கள் அஞ்சிவிட மாட்டீர்களா? ஏனென்றால் நீங்கள் குறிப்பிடும் சக்திகள் ஆலயத்தில் இருக்கின்றன… ஏதோ ஒரு வகையில் அங்கீகரித்துக் கொள்கிறீர்கள்… ஆனால் நான்… உங்களுடைய பேத்தியின் அன்புக்காகக் காத்திருக்கிறவன்… இச்சூழ்நிலையில் என் ரூபம் உங்களுக்கு முக்கியமில்லையா?" என்று கேட்டதும்,

"இப்பொழுது உங்கள் ரூபமோ, நீங்கள் எந்தமாதிரியான சக்தி என்பதோ என் பிரச்சனை இல்லை… மனித சக்திக்கு மீறுன சக்திகளோட பழக்கம், என் பேத்திக்கு நல்லதில்லைனு சொல்ல வந்தேன்… அதுக்கு உங்க உதவியும் எனக்கு வேணும்…"

"ம்ம்… என்ன செய்ய வேண்டும்?"

"என் பேத்திக்கு, ஒரு மனுசனுக்கும், அபரீத சக்திக்கும் இடையிலிருக்கிற வித்தியாசம் தெரியுற வரை…" என்று தாத்தா இழுக்க,

"மீராவை நான் தொந்தரவு செய்யக் கூடாது. அதுதானே?"

"ம்ம்ம்"

"நல்லது… அவளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விபரங்கள் தெரியும்வரை நான் காத்திருக்கிறேன்…" என்று கூறவும்,

இவ்வளவு எளிதாகத் தன் கோரிக்கைக்குச் சம்மதம் கிடைக்குமென்று எதிர் பார்க்காத தாத்தா, வியப்புடன் குரல் வந்த பகுதியைப் பார்த்தார்.

சற்று தயங்கி, "ரொம்ப நன்றி!" என்று கூறிவிட்டு, வந்த வழியே திரும்பியவருக்கு அக்குகையினுள் இருப்பவர் நல்ல சக்திதானோ?' என்று தோன்ற, மீண்டும் திரும்பிப் பார்த்தார்.

"என்ன?... இங்கிருந்து செல்ல மனசில்லையா?" என்று இளநகையுடன் கேட்டவரிடம்,

"நான் உங்களை ஒருமுறை பார்க்க முடியுமா?" என்று தாத்தா மிகவும் தயங்கிக் கேட்டார்.

"என் ரூபத்தை நீங்கள் காண்பதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை… ஆனால் உங்களுக்கு?..."

"இல்லை! எனக்கும் எவ்வித தயக்கமும் இல்லை…" என்று தாத்தா கூறியதுதான் தாமதம்,

குகை முழுவதும் ஜோதியால் ஒளிமிகுந்து பிரகாசித்தது… எட்டு திக்கும் சந்தனத்தின் நறுமணத்தால் நிறைந்திருந்தது… கதம்ப மலர்களை முகத்தருகில் வைத்து முகர்ந்து பார்த்ததுபோல் பூக்களின் வாசனையும் சேர்ந்து, அவ்விடத்தைத் தேவலோகமாகக் காட்டியது… சாம்பிராணி முதல் குங்குலிகம் வரையான வாசனைப் புகைகள் குகை முழுவதும் மிதந்து கொண்டிருந்தன…

இதையல்லாம் பார்த்த தாத்தா, 'உண்மையிலேயே தேவலோக பிரஜையாக இருப்பாரோ? சினிமால காட்டுறது மாதிரி ஏதாவது சாபத்தால, இங்க வந்து மறஞ்சிருக்காரோ?' என்று எண்ணிய தாத்தா, 'பயங்கர ரூபத்திற்கும் இந்த இடத்தோட லெட்சுமிகடாட்சத்திற்கும் சம்பந்தமில்லையே?' என்று எண்ணியவராகப் பார்வையால் அக்குரலுக்குரியவரைத் தேடினார்.

"இதோ இங்கிருக்கிறேன்!" என்று குரல் வந்த திசையில் பார்த்தார்.

அங்கே சிறு பீடம் ஒன்று இருக்க, அந்தப் பீடத்தைச் சுற்றிலும் வண்ணமயமான ஒளி வீசியது. பூங்கொடிகள் இயற்கையான தோரணங்களாகி அப்பீடத்தைச் சுற்றிலும் அலங்கரித்திருந்தன.

ஒளிமிகுந்த அந்த இடத்தில் வாசனைப் புகை கொஞ்சம் கொஞ்சமாகக் கலைய, புகையின் பின்னணியில் யாரோ ஒருவர் தவக்கோலம் பூண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவரைக் கண்டதும், 'முனிவராகவோ, சித்தராகவோ இருப்பாரோ? இவர் மீராமா வைத் தேடி வருவது ஏன்?' என்று எண்ணிய தாத்தா,

புகைமூட்டத்தில் மங்கலாகத் தெரிந்தவரை அருகில் சென்று பார்த்தார்.

தாத்தா, அருகில் நெருங்கும் சமயம், சட்டென்று அந்த யோகி விழிகளைத் திறக்க, யோகியினது கண்களிலிருந்து, நண்பகல் நேரத்த்து சூரியக் கதிரையும் விஞ்சும் ஒளி தாத்தாவின் மீது பாய்ந்தது.

அந்த ஒளியால் தாத்தாவிற்குக் கண்கள் கூச இருகைகளாலும் கண்களை மூடினார்,

"பார்வைக்கே இத்தனை சக்தியா? இந்த வீரிய ஒளியை மனிதனால் எதிர்கொள்ள இயலுமா?... மீராமா…'

கண்களைக் கசக்கி, மீண்டும் உற்று பார்க்க, அந்த சக்தி எழுந்து நின்றார்.

ஆஜானுபாகுவான அவரது தோற்றத்தைக் கண்டவர்,

‘என்ன ஒரு உடற்கட்டு!... அசாத்திய கம்பீரத்தோற்றம்!... குளுமையான, வசீகரமான சந்தன நிறம்… ஆனாலும் உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொள்வாரோ? யோகி போல் தெரிந்தாலும், பட்டு வேஷ்டியும், அங்கவஸ்திரமும், உடலில் ஆங்காங்கே அணிந்திருக்கும் தங்க, வைர, நகைகளையும் பார்த்தால் தேவலோகத்தைச் செர்ந்தவராகத்தான் இருப்பார்.’ என்று கண்கள் ஆச்சரியத்தால் விரிய, ரசித்துப் பார்த்த தாத்தா, அந்த யோகியின் முகத்தை நோக்க,

அதிர்ச்சியில், "மீராமா…" என்று அழைத்தவாறு மயங்கிச் சரிந்தார்.


வார்த்தைகளின் எண்ணிக்கை -927

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼

 

Shailaputri R

Well-known member
யாரை பார்த்து மயங்கிவிழுந்தாரு.. நந்தா நீ தானா அது.. தாத்தாக்கு தான் மீரா மேல என்ன அன்பு.
 

aas2022-writer

Well-known member
யாரை பார்த்து மயங்கிவிழுந்தாரு.. நந்தா நீ தானா அது.. தாத்தாக்கு தான் மீரா மேல என்ன அன்பு.
நந்தனை மிரா பார்த்திருக்களே சிஸ்? தாத்தான்னாலே அன்புதானே
 
Top