கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-25

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-25

முகத்தில் ஜில்லென்று தண்ணீர் மோத, தன்னுணர்வு பெற்ற தாத்தாவிற்கு இருமல் வந்துவிடுகிறது.

"ஐயா! ஐயா!" என்று நல்லசிவத்தின் குரலும், தோணிக்காரரின் குரலும் மாறி மாறிப் பதட்டத்துடன் கேட்க,

"இவங்களும் என்னைத் தேடி குகைக்குள்ள வந்துட்டாங்களா?" என்று எண்ணிய தாத்தா, முகத்திலிருந்த தண்ணீரைக் கையால் வழித்துவிட்டு, கண்களைத் திறந்து பார்த்தார்.

தாத்தாவின் முகத்தையே கலவரமாகப் பார்த்துக் கொண்டிருந்த நல்லசிவம்,

"ஐயா! உடம்புக்கு ஒன்னுமில்லையே? மயக்கம் தெளிஞ்சிடுச்சாங்கய்யா?" என்று பதறியவாறு கேட்டான்.

"இல்லை யில்லை… நான் நல்லாயிருக்கேன்… நீங்க எப்படி இங்க வந்தீங்க?" என்று கேட்டார்.

"முடிஞ்சவர மாம்பழமெல்லாம் பறிச்சுட்டு பார்த்தோம். உங்கள காணோம்… தேடி வந்தப்ப இங்க, நீங்க பேச்சு மூச்சில்லாமக் கிடந்ததப் பார்த்ததும் என் உசுரே போயிடுச்சுங்கய்யா… எம்மேலதான் தப்புங்கய்யா மாம்பழத்துமேல ஆசப்பட்டிருக்கக் கூடாது." என்று நல்லசிவம் பேசிக்கொண்டே போக,

சுற்றுப்புறத்தைப் பார்த்த தாத்தாவிற்கு, தான் குகைக்குள் இல்லாமல், சுனை அருகில், குகைக்குள் செல்வதற்கு முன்பு அமர்ந்திருந்த இடத்தில் இருப்பதைக் கண்ட தும், அதிர்ச்சியும் யோசனையும் போட்டியிட,

'இது என்ன அதிசயம்? நான் குகைக்குள்ளே அந்த… அந்த… " என்று அந்த நினைவுகளில் மூழ்கியவருக்கு, அந்த அமானுஷ்ய சக்தியின் முழு உருவமும் ஞாபகத்திற்கு வந்து, தாத்தாவின் உடம்பு முழுவதும் வியர்க்க ஆரம்பித்தது.

"மறுபடியும் இங்க எப்படி வந்தேன்?' என்று யோசித்தவரின் முகச்சுளிப்பைக் கண்டு பயந்த நல்லசிவம்,
"ஆஸ்பத்திரிக்குப் போவோமாய்யா? உங்க முகம் சரியில்லையே?" என்று கேட்டான்.

நல்லசிவத்தின் பயத்தை உணர்ந்து, சாதாரண மனநிலைக்கு மாறிய தாத்தா,

"எனக்கு ஒன்னுமில்ல நல்லசிவம், நீ இங்க வரும்போது எம் பக்கத்துல யாராவது இருந்தாங்களா?" என்று கேட்டார்.

"இல்லையேய்யா? நீங்க யாரையாவது பார்த்தீங்களா?" என்று கேட்டபடி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தவனுக்கு மனதில் கிலி பிடித்தது.‌..

'ஆள் நடமாட்டமில்லாத அத்துவானக் காட்டுல யார் இருக்காங்க? ஐயா எதையாவது பார்த்துப் பயந்துதான் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களோ?' என்று தோன்றவும்,

"நாம இங்கிருந்து கிளம்புவோமாய்யா…" என்று அவசரமாகக் கேட்டான்.

"சரி" என்று தலையசைத்து எழுந்து, ஆற்றில் மிதந்த தோணியை நோக்கிச் சென்றவருக்கு,

'ஒருவேளை அந்தச் சுனை பக்கத்திலேயே தூங்கிட்டேனா? இதுவரை, தான் கண்டது கனவா?... அப்படித் தோனலையே? இப்பக்கூட அவர நினைச்சா உடம்பு சிலிர்க்குதே?' என்று மனம் குழப்பியது.

காரில் தாத்தா ஏறவும்,

"இங்கயே சாப்பிட்டுட்டு, பாபநாசம் போவோமாய்யா?" என்று நல்லசிவம் கேட்டான்.

'அந்தக் குகையில் நடந்தது உண்மை என்றால் பாபநாசம் போகத் தேவையில்லை… ஆனால்… குகைக்குள் இருந்த நான் எப்படிச் சுனை அருகில் வந்தேன்?' என்று மீண்டும் தாத்தா யோசிக்க,

குகைக்குள் இருந்த ஆஜானுபாகுவானவரின் முகம் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

"அவரை நேரில் கண்டால் மீராமா பயந்துவிடுவாளே தவிர, பிரியம் வருவதற்கு வழியில்லை… இப்ப என்ன செய்ய?" என்று யோசித்தவர்,

"வீட்டுக்கு வண்டிய விடு நல்லசிவம்!" என்று கூறினார்.

நடந்த சம்பவங்களும், தாத்தா முகத்தில் தெரிந்த குழப்பமும், ஏற்படுத்திய பாதிப்பில், 'வீட்டிற்குச் செல்வதே நல்லது' என்று நல்லசிவத்துக்கும் தோன்ற, எதுவும் கூறாமல், வண்டியை வீட்டை நோக்கி ஓட்டினான்.

மதிய உணவு முடித்து, உறங்கச் செல்லும் முன் பூஜை அறைக்குச் சென்று, 'பாபநாசம் சென்றிருக்கும் தாத்தா நல்லபடியாக வேலையை முடித்துத் திரும்ப வேண்டும்' என்று அப்பத்தா கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கும்போது, வீட்டு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

'இது அவரோட கார் சத்தம் மாதிரி இருக்குதே?' என்று எண்ணி, அப்பத்தா வேகமாக வாசலுக்கு விரைந்தார்.

வீட்டிற்குள் வந்த தாத்தா, முகம் கைகால் கழுவி விட்டு வரவும், அப்பத்தா சாப்பாடு பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்துத் தாத்தா அவரது அறைக்குச் செல்ல, அங்கே படுக்கையைத் தயார் செய்துகொண்டிருந்தார் அப்பத்தா.

"ஊருக்குப் போகாம திரும்பி வந்ததப் பத்தி, நீ எதுவும் கேட்கலையே முத்துரா?" என்று அமைதியாகக் கேட்டார் தாத்தா.

"உங்க முகமே, நீங்க குழப்பத்துல இருக்குறதக் காட்டுது… இப்ப தூங்கி எந்திரிங்க… அப்புறமா பேசலாம்" என்று கூறிச் சிரித்துவிட்டு வெளியே சென்று விட்டார்.

'இவகிட்ட நடந்த விசயங்களச் சொல்லலாமா?' என்று யோசித்தவர் படுக்கையில் அமர்ந்தார்.

மாலை நாங்கு மணியளவில் வாசல் கூட்டி கோலம் போட்டுவிட்டு வந்து தாத்தாவின் அறையை எட்டிப் பார்த்தார் அப்பத்தா. தாத்தா அப்பொழுதுதான் எழுந்திருந்திருக்க வேண்டும்… தலையைக் கூட, சீர் செய்யாமல் யோசனையில் இருந்தவரின் அருகில் சென்று அமர்ந்த அப்பத்தா,

"எதுவா இருந்தாலும் சொல்லுங்க…" என்று கூற,

முகம் நிறய மஞ்சள் பூசி, நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமத் திலகமிட்டு சிரித்தமுகத்துடன் அமர்ந்து, தன்னையே பார்க்கும் அப்பத்தாவைப் பார்த்தவருக்கு,

'இவளுடைய முகமே, எனக்குள்ள நேர்மறையான சக்தியைக் குடுத்துடுது.' என்று தோன்ற, அப்பத்தாவிடம் நடந்த அனைத்தையும் கூறினார்.

அனைத்தையும் கேட்ட அப்பத்தாவின் கண்களில் சற்றுக் கலக்கம் இருந்தாலும், "நாளைக்கு நானும் வர்றேன் பாபநாசம் போயிட்டு வருவோம்" என்று கூறவே,

தாத்தா தொலைபேசியை எடுத்துப் பாபநாசத்திற்கு அழைப்பு விடுத்து, அடுத்த நாள் வருவதாகத் தகவல் கூறினார்.

அடுத்த நாள், காலக்கணித சித்தரின் முன் அமர்ந்து, நடந்த விபரங்கள் அனைத்தையும் காலக்கணித சித்தரிடம் தாத்தா கூறினார்.

தாத்தாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சித்தர், "நீங்க கனவு காணல… நீங்க பார்த்ததெல்லாம் உண்மைதான்… நீங்க குகையில பார்த்தவர், மீராவின் ஒவ்வொரு ஜென்மத்திலும் மீராவுக்காகக் காத்திருக்கிறார்…"

"ஒவ்வொரு ஜென்மத்திலும்னா?" என்ற தாத்தாவிடம்,

"அவருக்கான பெண், அவரைச் சேருவதற்காகப் பல பிறப்புகள் எடுத்திருக்கலாம்… ஆனால் இதுவரை அந்தப் பெண் அவரை அடையவில்லை… அந்தப் பெண்தான் உங்க மீரா"

"இந்த ஜென்மத்திலும் சேரலைனா?" என்ற தாத்தாவைக் கூர்ந்து பார்த்த சித்தர்,

"அது பாவமில்லையா?... இந்த ஜென்மத்தில்தான் மீரா, அவரைச் சந்தித்து விட்டாளே…"

"ஆனால்… அவரோட சக்திக்கு முன்னால… இவ குழந்தையில்லையா?… பொருந்த வேணாமா?" என்ற தாத்தாவைப் பார்த்துச் சிரித்த சித்தர்,

"அதுசரி… ஆனால், இன்னொருவனையும் மீரா இந்நேரம் சந்தித்திருக்க வேண்டுமே?!"

"அடக்கடவுளே? அவன் யாரு? அவனும் இவரைப்போலத்தானா?" என்று அப்பத்தா பதற,

"தெரியவில்லை… ஆனால், அவன் உங்கள் மீராவின் அன்புக்கு ஏற்கனவே பாத்திரமாகிவிட்டான்… இனி என்ன நிகழப்போகிறதென்று நம்மைப் படைத்தவனுக்குத்தான் தெரியும்…" என்று சித்தர் கூரினார்.

‘இவர் என்ன இப்படிச் சொல்றார்? ஒருத்தரோட ஜாதகத்த வச்சே எதிர்காலத்தக் கணிக்கக் கூடியவராச்சே!’ என்று நினைத்தபடி தாத்தாவும், அப்பத்தாவும் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

பிறகு, "அப்டீனா, மீராமாவுக்கு மனுசனோட கல்யாணம் நடக்காதா? மீராமாவோட ஜாதகத்துல, அவளோட கல்யாண வாழ்க்கைப் பத்தி இருக்குமே!" என்று அப்பத்தா கேட்டதும்.

மீரஜாவின் ஓலையைப் பிரித்துப் பார்த்த சித்தர்,

"நீங்கள் ரெண்டுபேரும், உங்களை, மனசளவுல தயார் பண்ணிக்குங்க… மீராவோட திருமணம் மனுசனோடவா அல்லது அந்த சக்திகள்ல ஒருத்தரோடவான்னு மீராதான் முடிவெடுக்க முடியும்… பெரும்பாலும் மீராவுக்கு மனுசனோட திருமணம் நடக்கக் கூடாது… அப்படி நடந்தாலும் மீராவால மனுசனோட வாழ முடியாது… இன்னும் சொல்லப் போனா, மீராவை விரும்புவதாக அவளிடம் கூறும் எந்த மனிதனையும், அந்த சக்தி விட்டுவைக்காது… இப்படியிருக்கத் திருமணத்தை மனுசனோட எப்படி நடத்தவிடும்?"

"மீராமா, அவங்க ரெண்டு பேரையுமே கட்டிக்க ஆசைப்படலைன்னா?" என்று ஆர்வமுடன் அப்பத்தா கேட்க,
"அதுக்கு வாய்ப்பு குறைவு… ஒருவேளை நீங்க, உங்க பேத்தி மீராவுக்கு, மனுசனோட கல்யாணத்த அரேன்ஜ் பண்ணினா, அதோடு மீராவோட சிரிப்பும் தொலைஞ்சுடும்… வாழ்நாள் முழுதும் ஒரு மனித மிருகத்துடன் போராட வேண்டியிருக்கும்… உங்களை நிரந்தரமாகப் பிரிந்து, அவள்மேல் பிரியமில்லாத மனிதர்களின் நடுவில் அன்புக்கு ஏங்கித் தவிங்கும் வாழ்க்கையை வாழ நேரிடும்." என்று காலக்கணித சித்தர் முடிக்கவும்,

"காமாட்சி தாயே! என்ன செய்வேன்?" என்று அப்பத்தா கண்கலங்கினார்…

"நான் தான் சொன்னேனே… மீராவே உணரனும்… அவள் துணை யார்னு அவளே முடிவெடுக்கனும். கடவுள கும்பிட்டுக்குங்க… நல்லதே நடக்கும்." என்று கூறிவிட்டு சித்தர் எழுந்து சென்றுவிட்டார்.

தாத்தாவும், அப்பத்தாவும் மனம் சோர்ந்து போனதில் அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க,

காலக்கணித சித்தரின் முதன்மைச் சீடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி அவர்கள் எதிரில் வந்து,

"உங்க பேத்திக்கு என்ன நடக்கும்னு சித்தருக்குத் தெரியும்… ஆனா உங்கட்ட சொல்லமாட்டேங்கிறார்." என்று ரகசிய தொனியில் கூற,

"என்ன சொல்றீங்க?" என்று தாத்தா அதிர்ச்சியுடன் கேட்டார்.

"இங்க வச்சு நான் எதுவும் சொல்ல முடியாது… உங்க பிரச்சனைக்கான தீர்வு இந்தப் பேப்பர்ல இருக்கு." என்று கூறி மடித்த காகிதத் துண்டை, தாத்தாவிடம் கொடுத்துவிட்டு முதன்மை சீடன் குடிலுக்குள் சென்றுவிட்டார்.

தாத்தா, காரில் அமர்ந்து அந்தக் காகிதத்தைப் பிரித்துப் படித்தார்.

"இதுவரை உங்களுடைய பேத்தியை, பிற சக்திகள் நெருங்காமல் எப்படிப் பார்த்துக் கிட்டீங்களோ, அதேமாதிரி கடைசிவர செஞ்சுடுங்க... உங்களுக்குத் தெரிஞ்ச பையனுக்கே, உங்க பேத்திய கல்யாணம் பண்ணி, வீட்டோட மாப்பிள்ளையா வச்சுக்குங்க… உங்களைவிட்டுப் பிரிஞ்சு போனால் தானே, உங்க பேத்தி வாழ்க்கை சின்னாபின்னமாகும்?… உங்க கூடவே இருந்துவிட்டால்? " என்று எழுதியிருந்தது.

"இது நல்ல யோசனையா இருக்கே முத்துரா?" என்று தாத்தா கேட்க,

"ஆனா இத சித்தர் ஏன் நம்மட்ட மறைக்கனும்?"

"எனக்கும் அதுதான் சந்தேகம்… ஒருவேளை, பல ஜென்மமா காத்திருக்கிறதால, அந்த சக்திகளோட மீரா சேரட்டும்னு நினைக்கிறாரோ?"

"நம்மளா கேட்கிற மாதிரி சித்தர்ட்டயே இத கேட்டுப் பார்த்துடலாமா?"

"சொல்றதா இருந்தா இப்பவே சொல்லீருக்க மாட்டாரா? அவர் சித்தர் இல்லையா? மனுசனவிட மற்ற சக்திகளுக்கு முக்கியத்துவம் குடுக்கிறார்னு நினைக்கிறேன்."

"இப்ப நாம என்னங்க பண்றது?"

"சீடர் சொன்ன மாதிரியே, நம்ம சொந்தத்துல ஒரு நல்ல பையன வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து, மீராமாவ கட்டிவச்சுடுவோம்…" என்று தாத்தா கூற,

'நம்ம காலத்துக்குப் பிறகு அவ வாழ்க்கை?' என்று எண்ணிய அப்பத்தா, கலங்கினார்.

"மீராமாவுக்கு நல்ல பையனா பார்க்கனும்… நமக்குப் பின்னாடி அவள கண்ணப்போலப் பார்த்துக்கிறவனாத் தேடனும்.'" என்ற உறுதியுடன் இருவரும் புன்னைவனத்தை நோக்கிப் பயணித்தனர்.

அவர்களைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம்...

சித்தரின் குடிலுக்குள் சென்று, கண்கள் இரண்டும் ரெத்தமெனச் சிவக்க, நாசி வழியே காற்றுக்குப் பதிலாக அக்னிப் புகை வெளியேற, கை முஷ்டி இறுக, முதன்மைச் சீடனை ஆக்ரோஷமாகப் பார்த்தது…

அதே வேளையில் பள்ளியில், மீரஜாவிற்கும் டாலி செல்சியாவிற்குமிடையே பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது.

"ராதா… கண்ணனுக்குப் பிடிச்ச ஒரே பொண்ணு தெரியுமா?" என்று பெருமையாக டாலி செல்சியா கேட்க,

"சந்தோஷம்… இப்ப அதுக்கு என்ன?" என்று சிரித்தாள் மீரஜா.

"எனக்கு அப்பப்ப தோணும்… கண்ணன் ன்னு சொன்னாலே அவரோட காதலியா ராதாவ தானே சொல்றாங்க? அந்த அளவுக்கு மீராவ சொன்னதில்லையே?ன்னு" என்று செல்சியா கூறியும் மீரஜா மென்மையான புன்னகையுடன் இருக்கவே,

"என்ன மீரா நான்பாட்டுக்குப் பேசிட்டிருக்கேன் நீ ஒன்னும் சொல்லாம சிரிக்கிற?"

"நான் என்ன சொல்லனும்கிற?"

"நீ மீரா, நான் ராதா… இல்லையா?"

"ஆமா! அதுக்கு?"

"உனக்கும் கண்ணனைப் பிடிக்கும் தானே? அடிக்கடி ஒரு பாட்ட ஹம் பண்ணுவியே, அந்தப் பாட்ட நான் நேத்து டீவில பார்த்தேன்."

"எந்தப் பாட்டு?"

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்…" என்று டாலி செல்சியா ஆரம்பிக்கவும்,

"ஹேய்… பாட்ட கெடுக்காத…” என்று சிரித்த மீரஜா, “அடிக்கடி அந்தப் பாட்ட கேட்டுட்டு, அப்புறம் பாடு" என்றாள்.

"சரி! நீதான் பாடேன்."

"கிண்டலா… நாம ஸ்கூல்ல இருக்கோம்… வீட்டுக்குப் போகும்போது பாடுறேன்."

"ஹேய்… ப்ளீஸ்... ப்ளீஸ்… ப்ளீஸ்ப்பா… எனக்கு அந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சுப் போச்சு, இப்ப லன்ச்டைம்தானே பாடு!" என்று டாலி செல்சியா கெஞ்சவும்,

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்…
சின்னக் கண்ணன் அழைக்கிறான்…
ராதையைப் பூங்கோதையை…" என்று மீரஜா கண்களை மூடி லயித்துப் பாட,

முதன்மைச் சீடனைத் தாக்குவதற்காக நெருங்கிய உருவம் அப்படியே நின்று, புன்னைவனம் நோக்கித் திரும்பி, புகையாய் மறைந்தது…

"அந்த மாயனின் லீலையில்
மயங்குது உலகே…
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!" என்று மீரஜா பாடி முடிக்க,

"சூப்பர்! சூப்பர்! எவ்வளவு அழகா பாடுற? உனக்கும் கண்ணனைப் பிடிக்கும் தானே?"

"பிடிக்கும்"

" அததான் சொன்னேன்… நீ மீரா… நான் ராதா… கண்ணனுக்கு ராதாவத்தானே பிடிக்கும்?" என்றதும் கலகலவெனச் சிரித்த மீரஜா,

"ஆமாம்… ஆனால் மீராவ பிடிக்காதுன்னு இல்லையே?*

"மீராவுக்குத்தான் கண்ணனைப் பிடிக்கும்… கண்ணனுக்கு ராதாவைத்தான் பிடிக்கும்…" என்ற டாலி செல்சியாவைப் பார்த்த மீரஜா,

"நீ மீராபாய் கதையைச் சரியாக் கேட்கலைன்னு நினைக்கிறேன்… அதில் கண்ணனை மீராபாய் ஃபீல் பண்ணுவாங்க… கண்ணனும் மீராபாயுடன் விளையாடுவார்…"

"இதை நீ நம்புறியா மீரா?"

"எத?"

"ஒரு சாதாரணப் பொண்ணு சாட்சாத் கண்ணபிரான பார்த்ததுங்கிறத?" என்ற டாலி செல்சியாவைப் பார்த்த மீரஜா,

"நம்புறேன்… கடவுள்ங்கிறதும், காதல்ங்கிறதும் ஃபீல் பண்றது தானே? மீராபாய் கண்ணனைப் பார்த்திருப்பாங்க…"

"நீ கண்ணனைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கியா? இந்தப் பாட்டு உனக்குப் பிடிச்சதுக்குக் காரணம் உன் பேரும் மீரான்றதால தான?" என்று டாலி செல்சியா சீரியஸாகக் கேட்க,

"இந்தப் பாட்டு எதுக்குப் பிடிச்சதுன்னு எனக்குத் தெரியாது… அதே மாதிரி என் பேரு, நீ நினைக்கிற மீராபாய் இல்ல… மீனாட்சி, நடராஜனின் சேர்க்கைதான் மீரஜா… அதாவது அவங்களோட குழந்தை…"

"அப்டீனா நீ கண்ணனோட மீரா இல்லையா?" என்று டாலி செல்சியா சிரிக்க,

எதுவும் கூறாமல் சிரித்தாள் மீரஜா…

இந்தச் சம்பாசனைகளை அருகிலிருக்கும் மரநிழலில் நின்று கேட்ட அந்த உருவத்தின் கண்கள் மின்னலை விடப் பிரகாசமானது….

வார்த்தைகளின் எண்ணிக்கை -1295


கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
சூப்பர். அந்த உருவம் தான் நந்தன்னா மாறி வருதா.. இல்ல நந்தன் வேற அந்த உருவம் வேறயா..
 

Sspriya

Well-known member
Ohhh 👌🏻👌🏻💞... மீரா காக 2பேரு காத்துட்டு இருகாங்க ளா... ஏன் முதன்மை சீடன் அப்படி எழுதி குடுத்தான்... நல்ல சக்திய கல்யாணம் பண்ணா என்ன பிரச்சனை வர போது 🤔🤔🤔
 
Top