aas2022-writer
Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-26
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-26
'ஏழு மணிதான் ஆகுது… வீட்டுப்பாடம் எழுதி முடிச்சாச்சு… இப்ப என்ன பண்றது?' என்று தீவர யோசனையில் இருந்தாள் மீரஜா.
மீரஜா பெரிய மனுசி ஆகும்முன், மாலைநேரம் மயங்கி, இருள் சூழ ஆரம்பிக்கும் வரை வீட்டிற்கு வெளியே விளையாடிவிட்டு வந்து, வீட்டுப்பாடம் முடித்து, தாத்தா அப்பத்தாவுடன் வாயாடி, இரவு உணவு உண்டு, ஒன்பதரை மணிக்கு உறங்க, நேரம் சரியாக இருந்தது…
இப்போது? மாலை பள்ளி முடிந்து வந்ததும் அப்பத்தாவுடன் சேர்ந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு, சிறிது நேரம் அப்பத்தாவுடன் பேசிவிளையாடிய பிறகு, வீட்டுப்பாடம் செய்ய ஆரம்பிக்கும் காட்டாயத்திற்கு உள்ளானாள்… வேறு வழி? அவளுக்குத்தான் போர் அடிக்கிறதே, பாவம்!
இப்பொழுதெல்லாம் மாலைவேளை வீட்டில் விளக்கு ஏற்றியபிறகு, காமாட்சி கோயிலுக்குக் கூட, தினமும் மீரஜாவை அப்பத்தா அழைத்துச் செல்வதில்லை. வெள்ளிக் கிழமைகளில் மட்டும் தான் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்...
சோ… ஐந்தரை மணிக்கு வீட்டுப் பாடத்தை ஆரம்பித்தாலும் ஏழு மணிக்குள் வீட்டுப் பாடமும் முடிந்து விடுகிறது...
சும்மா இருக்கும் மனசு எதையாவது நினைப்பது வாடிக்கைதானே? மீரஜா மட்டும் விதி விளக்கா என்ன?
அவளுக்கு அன்று பள்ளியில் டாலி செல்சியாவுடன் நடந்த உரையாடல் ஞாபகத்திற்கு வந்தது.
'டாலி செல்சியா சொன்னது போல, கண்ணன் வாழ்வில் ராதை பிடித்த இடத்தை, மீரா ஏன் பிடிக்கவில்லை?' என்ற சந்தேகம் மீரஜாவிற்குத் ஏற்பட்டது.
அந்தச் சந்தேகமே கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ராதைமேல் கண்ணனுக்கு இருந்த காதலில் வந்து நின்றது.
'ராதையைக் கண்ணன் விரும்பியது போல, என்னையும் யாருக்காவது பிடிக்குமா?' என்று மீரஜாவுக்குத் தோன்றிய மாத்திரத்தில் குகைக்குள் சந்தித்தவரின் ஞாபகம் வந்தது.
'யார் அவர்? ஏன் என் முன்னாடி வரவில்லை?...' என்று எண்ணும்போதே,
'சான்சே இல்ல… அவர் குரல் எவ்வளவு கம்பீரமா இருந்துச்சு? குரலே இந்த அளவுக்கு நல்லா இருக்குதுன்னா, அவர் எப்படி இருப்பார்?' என்று எண்ணம் ஓட,
அந்த எண்ணத்துக்குச் சொந்தமானவருக்கு வடிவம் கொடுக்க எண்ணினாள்.
ஓரு பேப்பரை எடுத்து, ஆண்மகனின் உருவத்தை வரைய ஆரம்பித்தாள்…
அவள் என்ன செய்வாள் பாவம்! கவிதை எழுதத் தெரிந்திருந்தால், அவரை நினைத்துக் கவிதை எழுதியிருப்பாள். மீரஜாவிற்கு ஓவியம் வரைவதுதானே கைவந்த கலையானது!
'நம் கற்பனைக்கு எட்டியவகையில், அவருடைய குரலுக்குத் தகுந்தாற்போல் கம்பீரமான உருவத்த வரஞ்சாச்சு... முகம்?!!! ஒரு முறைகூடப் பார்க்காத அவரோட முகத்த எப்படி வரையிறது?'... என்று விட்டத்தைப் பார்த்து யோசித்தாள். உட்கார்ந்து யோசித்தாள், குப்புறப்படுத்து யோசித்தாள், ஜன்னலுக்கு வெளியே இருந்த இருளைப் பார்த்து யோசித்தாள்… முடிவில்...
'ஏதோ ஒரு படத்தில், ஹீரோயின் செய்தமாதிரி நமக்குப் பிடிச்ச கண்ணு, மூக்கு, வாய்னு வரைவோமா?' என்று யோசனை நீண்டது.
'ச்சேச்சே… அது வேண்டாம்… எனக்குப் பிடிச்ச மாதிரி எதையாவது நான் வரைஞ்சா, அவர நேர்ல பார்க்கும்போது, வேற யாரையோ பார்த்த மாதிரி ஃபீல் ஆயிடாது?...
'அது சினிமா… ஹீரோயின் வரைஞ்ச மாதிரியே, ஹீரோவின் முகம் இருக்கும்… நிஜத்ததுல இது சாத்தியப் படாது…'
'இப்போ முகத்துக்கு என்ன பண்றது?' என்று மீரஜா யோசிக்கும் வேளையில் அப்பத்தா அழைக்கும் சப்தம் வர,
தன்னிச்சையாக அந்த நோட்டை பட்டென்று மூடி, 'யாரும் பார்கிறார்களா?' என்று ஒருமுறை சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, புத்தக அலமாரியில் கடைசி அடுக்கில், நோட்டை மறைத்து வைத்தாள்.
பிறகு அப்பத்தாவுடன் சேர்ந்து இரவு உணவாகக் கோதுமை இடியாப்பம் செய்துவிட்டு தாத்தா அருகில் அமர,
தாத்தா அவருடைய அனுபவங்களைத் தன் பேத்தியிடம் சந்தோஷமாகப் பகிர்ந்தார்.
"ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்!" என்று அப்பத்தா அழைக்கவும்,
தாத்தா எழுந்து செல்ல, மீரஜாவின் பார்வை புத்தக அலமாரிக்குச் சென்றது…
ஹாலில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தாள். சித்தப்பாவின் பிள்ளைகளான, சித்தார்த்தும், சுந்தரியும் வீட்டுப் பாடத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டிருந்தனர்.
'இவங்க இப்போதைக்கு எதையும் கவனிக்க மாட்டாங்க.' என்று எண்ணியவள், தேவையே இல்லாமல் பூனைபோல் பாதம்பதித்துப் புத்தக அலமாரிக்குச் சென்றாள்.
குகை மனிதரின் ஓவியம் வரைந்த நோட்டைக் கண்ணால் பார்க்கும்போதே, மீரஜாவின் இதழ்கள் விரிந்து, முத்துப்பற்கள் மின்னப் புன்னகை சிந்தியது…
நோட்டிற்கு வலித்துவிடுமோ என்பதுபோல் புத்தக அடுக்கிலிருந்து மெல்ல உருவி, ஓவியம் இருந்த பக்கத்தைப் பிரிப்பதற்குள் மீரஜாவின் இதயம் பாலத்தில் ஓடும் ரயிலைப் போன்று பயங்கரச் சப்தத்துடன் தடதடத்தது.
நெற்றியில் வியர்வை பூக்க, விரல்கள் மெல்ல நடுங்க, ஓவியம் வரைந்த பக்கத்தை எடுத்துவிட்டாள்.
மீரஜாவின் கண்கள் அவரது ஓவியத்தைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்ததும் மனதிற்குள் ஓடிய ரயில் மறைந்து, அழகிய பூந்தோட்டமாய் விரிய, அங்கே இதமான தென்றலும் வீசியது…
"நான் சாப்பிடப் போறேன்… நீங்க சாப்பிட்டீங்களா?" என்று முகம் முழுவதும் மத்தாப்பாய் பூரித்தபடி மீரஜா ஓவியத்திடம் கேட்க,
"இதோ ஹோம்வொர்க் முடிச்சுட்டோம்க்கா… நீங்க போய்ச் சாப்பிடுங்க… நாங்க வர்றோம்…" என்று தம்பி சித்தார்த் கூறினான்.
மீரஜாவிற்குத் தூக்கிவாரிப்போட்டு, கையிலிருந்த நோட்டு கீழே விழப்போக, அவசரமாக நோட்டு விழுந்துவிடாமல் பிடித்தவள், நோட்டைத் தன் நெஞ்சோடு அணைத்தபடி சித்தப்பா மகன் சித்தார்த்தைப் பார்த்தாள்.
அவனோ வீட்டுப்பாடத்தை வேகமாக முடிக்கும் அவசரத்தில் மீரஜாவைக் கவனிக்கவில்லை.
'உஷ்ஷ்… அப்பாடா… மனசுக்குள் கேட்கிறதா நெனச்சுச் சத்தமா பேசித்தொலைச்சுட்டேன் போலிருக்கே? ஷ்ஷட்!... நல்லவேள, இவங்க என்னைப் பார்க்கல...' என்று மனநிம்மதியுடன் கண்களை மூடி, மீரஜா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபோது,
"அங்க அலமாரிக்கிட்ட நின்னுகிட்டு தூங்குறியா என்ன? வா! சாப்பிட… தாத்தா காத்திருக்காரு" என்ற அப்பத்தாவின் குரல் கேட்டுப் பதறி, மீண்டும் கீழே விழப்போன நோட்டை கைப்பற்றியவள்,
"இந்தா வந்துட்டேன் அப்பத்தா!" என்று அவசரமாக நோட்டை பழையபடி புத்தக அடுக்குகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அலமாரியை மூடினாள்.
"சரி சரி வாங்கடா சாப்பிட்டுட்டு ஹோம்வொர்க் பண்ணலாம்!" என்று தனராஜனின் பிள்ளைகளிடம் கூறியபடி டைனிங் ஹாலுக்குச் சென்றாள்.
வழக்கம்போல இரவு உணவு முடிந்து, இரவின் அமைதியைக் கெடுக்காத அளவிற்கு மெல்லிய ஒலியில் இசைத்த கர்நாடக சங்கீதத்தை ரசித்தவாறு தாத்தாவும், பேத்தியும் வாசலில் நடந்து கொண்டிருந்தனர்.
வழக்கம்போல, அப்பத்தா வாசல்படியில் அமர்ந்தவாறு இருவரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
இந்த அழகிய தருணத்தைக் கலைப்பதைப் போல் அடுத்த வீட்டில் ஒன்பதுமணி சீரியலுக்கான பாடல் ஒலிக்க,
'எப்படித்தான் இந்த நேரத்துல டீவிய இவ்வளவு சத்தமா வச்சுப் பார்க்கிறாங்களோ? அவங்களுக்கு மட்டும் வசனம் கேட்டா பத்தாது?' என்று எண்ணமிட்டவள், தனது மனதைக் கட்டுப்படுத்துவதற்காகக் கண்களை இறுக மூட,
அவளுடைய இதயமோ,
"நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா…"
என்று பாடும் போதே,
"கண்ணனுக்கு ராதாவைத்தான் பிடிக்கும்!" என்ற டாலி செல்சியாவின் குரல் கரடியாய் ஞாபகத்துக்கு வர,
"ராதா?!!.... இல்லையில்லை…" என்று மறுப்பாகத் தலையாட்டிவிட்டு,
"நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி மீரா…"
என்று மீரஜாவின் நினைவலையில் ராதா, மீராவாக மாறிய கணத்தில்,
குகைக்குள் இருப்பவரும், இரேஸ்வரத்தில் இருக்கும், சேது மாதவரும் புன்னைவனத்தை நோக்கினர்.
ராதா… மீராவாக மாறியதில் நெஞ்சம் இனிக்க, முகம் சிவந்து தலை குனிந்தபடி சிரித்தாள் மீரஜா.
இந்த அதிஅற்புதமான காட்சியை மூவர் பார்த்தனர்.
மூன்றாமவரான அப்பத்தா, "என்ன மீராமா தனியா சிரிக்கிற? எங்கிட்ட சொன்னா நானும் சிரிப்பேன்ல?" என்று சாதாரணமாகக் கேட்க,
அதற்கு மீரஜா கொடுத்த ரியாக்சன் தான் அப்பத்தாவின் புருவங்களை முடிச்சிடச் செய்தது.
'அச்சச்சோ பார்த்துட்டீங்களா?' என்பதுபோல், தப்பு செய்து மாட்டிக்கொண்ட பார்வை பார்த்த மீரஜா,
"ம்ம்?... என்னப்பத்தா?... அது வந்து…" என்று, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திருதிருத்தவளுக்கு, அடுத்தவீட்டிலிருந்து வந்த டீவி சீரியலின் ஒலி கேட்டது.
"ம்ம்… வந்து அப்பத்தா, கவிதாக்கா வீட்லருந்து டீவி சீரியல் சத்தம், என் காதைக் கிழிச்சுதா, இந்த நேரத்துல இப்படியொரு சீரியல் பார்த்துட்டு எப்படித் தூங்க முடியுதுன்னு யோசிச்சேன்… சிரிப்பு வந்துருச்சு."
'இவ ஏதோ சமாளிக்கிற மாதிரி இருக்கே? நிசமாவே அதுக்குத்தான் சிரிச்சாளா?' என்று பேத்தியின் முகத்தை அப்பத்தா பார்க்க,
மின்சார விளக்கின் ஒலியில், மீரஜாவின் முகபாவத்தைக் காணமுடியவில்லை…
அடுத்தநாள் மதிய உணவு இடைவேளைக்கான மணி ஒலிக்கவும், டாலி செல்சியாவும், மீரஜாவும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நந்தனுக்காகக் காத்திருந்தனர்.
"என்ன மீரா! முகத்துல ஒரு பூரிப்பு தெரியுதே? என்ன விசயம்?" என்று டாலி செல்சியா கேட்டுக்கொண்டிருந்த போதே நந்தன் வந்துவிட்டான்.
"நந்தா நேத்துலருந்து என் மண்டைக்குள்ள ஒரு விசயம் குடையுது… உனக்கு என்ன தோணுதோ அத மறைக்காம சொல்லனும் சரியா?" என்று கண்கள் மின்னக் கேட்ட டாலியை, சிரித்தபடி பார்த்த நந்தன்,
"பா...ர்த்துக் கேளுமா" என்றான் கெஞ்சுவதுபோல்.
"கண்ணனுக்கு ராதாவத் தானே பிடிக்கும்? மீராவ, ஒரு பக்தையா தானே கண்ணனுக்குப் பிடிச்சிருக்கனும்?" என்று டாலி செல்சியா கேட்டதும் திடுக்கிட்டு மீரஜாவைப் பார்த்தான் நந்தன்.
அவளும் நந்தனின் பதிலுக்காகக் காத்திருப்பது புரிய,
"கண்ணன் ராதாவ விரும்பியது எல்லோரும் அறிந்த விசயம்… ஆனா மீரா மேல கண்ணனுக்கு இஷ்டமில்லைனா… கண்ணன் மேல மீராவுக்கு விருப்பம் வராமலே, கண்ணனால பண்ணியிருக்க முடியும். இல்லையா?"
"புரியல" என்று இருவருமே கோரஸ் பாட,
"கண்ணன் கடவுள்தானே?"
"ஆமா!"
"அவருடைய பக்தர்கள் மனசுல என்ன இருக்குன்னு, அவருக்குத் தெரியுமா? தெரியாதா?"
"நிச்சயமா தெரியும்"
"அப்போ… மீரா கண்ணனை விரும்பியது தெரிஞ்சிருக்காதா?"
"இதுலயே என்க்கொரு டவுட். அத அப்புறம் கேட்கிறேன். மீரா விரும்புறது கண்ணனுக்குத் தெரியாம இருக்குமா?" என்ற டாலியிடம்,
"அப்போ… நீ சொன்ன மாதிரி கண்ணனுக்கு மீரா மேல விருப்பம் இல்லைனா, கண்ணன் மேல மீராவுக்கு இருந்த காதலை, கண்ணன்னால அழிச்சிருக்க முடியாதா?"
"நல்ல பக்தையோட மனச புண்படுத்த வேண்டாம்னு கண்ணன் நினைச்சிருக்கலாம்ல?"
"கண்ணன் என்ன மனுசனா? மீரா மனசு புண்படாம, அவளுடைய நினைப்ப அழிச்சிட முடியாதா?" என்று நந்தன் கேட்கவும்,
"முடியுமே? அவர் நினைச்சா முடியாததுன்னு ஒன்னு இருக்குமா?" என்ற டாலி சொல்சியாவிடம்,
"இருக்குதே!"
"என்ன? கண்ணனால முடியாத காரியம் இருக்கா?"
"ம்ம்ம்" என்று மீரஜாவைப் பார்த்த நந்தனிடம்,
"அது என்ன?" என்று நம்பாத பாவனையில் மீரஜா கேட்டாள்.
"ஒரு பெண்ணின் மனசு."
"இப்பதான மீராவோட மனச மாத்தமுடியும்னு சொன்ன? மறுபடியும் குழப்புற?"
"ஒரு போண்ணோட மனசுல காதலே வராமக் கூடக் கண்ணனால் செய்ய முடியும்… ஆனா…" என்று நிறுத்திவிட்டு மீரஜாவைப் பார்த்தவாறு,
"தனக்குப் பிடிச்ச பெண்ணோட மனசுல, அந்தக் கண்ணனால கூட, காதலை உருவாக்க முடியாது… அவளா விரும்பனும்." என்று டாலி செல்சியாவிடம் முடித்தான்.
நந்தன் சொல்வதன் உள்ளர்த்தம் புரியாமல்
"அதான் மீரா அவர விரும்பினாளே! மீராவ, கண்ணனும் விரும்பினார்தானே?" என்று மீரஜா வேகமாகக் கேட்டாள்.
"மீராவ விரும்பாம இருக்க முடியுமா?" என்று நந்தன் கூறியதும்,
டாலி செல்சியாவிடம், "போதுமா?... யப்பா இவள சமாளிக்கிறதுக்குள்ள" என்ற மீரஜாவின் முகம் உவகையில் பூவாய்ப் பூத்திருக்க,
குகைக்குள் இருந்தவர் சட்டென்று எழுந்து நந்தனைப் பார்த்தார்.
வார்த்தைகளின் எண்ணிக்கை -1053
கண்ணன் வருவான்!