கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-27

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-27

கண்ணனின் விருப்பமில்லாது, மீராவால் கண்ணனை காதலித்திருக்க இயலாது, என்பது புரிந்து டாலி செல்சியா அமைதியாகச் சாப்பிட,

"நீ ஏதோ, இதுலயும் டவுட் ன்னு சொன்னியே அது என்ன?" என்று டாலி செல்சியாவிடம் கேட்டான் நந்தன்.

"மீரா, கண்ணனைக் காதலிச்சிருந்தா ஏன் வேறொருத்தன கல்யாணம் பண்ணனும்?" என்ற டாலி கேட்க,

"அது அவளுடைய குடும்பச் சூழ்நிலைனு ஈசியா சொல்லிடலாம் ஆனா…"

"ஆனா?"

"பரமாத்மா கண்ணனும், மீராவை விரும்பியது, மீராவுக்குத் தெரியாமல் போனதுதான் உண்மையான காரணம்… அப்படித் தெரிந்திருந்தால், மீராவின் கைதளம் பற்றக் கட்டாயம் 'கண்ணன் வருவான்' என்று காத்திருந்திருப்பாள்."

"அதாவது... கடவுளைக் கல்யாணம் பண்றதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படாதுன்னு நினைச்சிருப்பாங்களோ?"

"அதான் சொன்னேனே 'கண்ணன் வருவான்'னு மீராவுக்கு நம்பிக்கையில்லை"

"கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசி நந்தா, ஒரு பொண்ணால எத்தன காலத்துக்குக் கல்யாணம் பண்ணாம இருக்க முடியும்? ஊர் அவளைத் தூற்றியே கொன்னுடாதா?" என்று மீரஜா கேட்க,

"கண்ணனா? ஊர் மக்களா? யார் முக்கியம்? மத்தவங்க மீராவ கஷ்டப்படுத்துறத, கண்ணன் பார்த்துக் கொண்டிருப்பார்னு நினைக்கிறியா?" என்று, மீரஜாவின் கண்களைப் பார்த்தபடி நந்தன் கேட்டான்.

"ஆமாம் ஆமாம்! நந்தன் சொல்றது சரிதான். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளைக்கூட ஊர் மக்கள் தூற்றினாங்க… ஆனா அந்தம்மா விடாப்பிடியா இருந்ததால கண்ணன்ட்ட ஐக்கியமாயிட்டாங்க பார்த்தியா?!!." என்று டாலி செல்சியாவும் ஆமோதிக்க,

"ஆண்டாள் பிராட்டியின் விருப்பத்துக்கு அவர் அப்பாவோட துணையிருந்தது டாலி! எத்தனை பெண்களுக்குக் காதல் விசயத்தில் பெத்தவங்க சம்மதம் கிடைக்கிறது?" என்று எதிஎ கேள்வி கேட்ட மீரஜாவிடம்,

"சரி... வேறொருத்தரக் கல்யாணம் பண்ணிட்டு, மீரா சந்தோசமா இருந்தாங்களா?" என்று டாலி செல்சியா கேட்டாள்.

அதற்கு நந்தன், "கண்ணனின் காதலியுடன் ஒரு மானிடனால் வாழ முடியாது டாலி… ஆண்தன்மை மட்டும் இல்ல… மனைவின்ற பிரியமே அந்த மானிடனுக்கு வர வாய்பிருக்காது."

"ஆமால்ல, ராதாவக் கல்யாணம் பண்ணினவங்களும் அப்படித்தானே?" என்று டாலியும் நந்தன் கூறியதே சரி என்று ஒத்துக்கொள்ள,

நந்தன் மீரஜாவின் முகத்தைப் பார்த்து, அவளுடைய எண்ண ஓட்டங்களை அறிய முற்பட்டான்...

மாலையில்
பூஜையறையில் அப்பத்தா விளக்கேற்ற, அருகிலிருந்து கும்பிட்ட மீரஜா கண்ணில் குழலூதும் கண்ணன் படம் தென்பட்டது.

"கண்ணா… எனக்கு வழிகாட்டுவாயா? அந்த மீரா மாதிரி மனபலம் மிக்கவள் இல்ல நான்… அரசனையே தூக்கிப்போட்டுட்டு வெளியவர ஒரு கட்ஸ் இருக்கனும்… எத்தனை எதிர்ப்புகளைச் சந்திச்சிருப்பாள்? ஆண்டாளைப் போல அசைக்கமுடியாத வைராக்கியமும் எனக்கு இருக்கான்னு தெரியல… ஆனா என் மனசும் மனுசன மிஞ்சிய யாரோ ஒருத்தர நினைக்குதே… குகைல நான் சந்திச்சேனே, அவர் யாரு கண்ணா? என் மனசு ஏன், கொஞ்ச நேரம் சும்மா இருந்தாக் கூட அவரையேத் தேடுது? அவர் கடவுளா? இல்ல… வேற மாதிரி… நல்ல ஆத்மாவா? எனக்கு நல்லாத் தெரியும் கண்ணா! எங்க வீட்ல அவர எனக்குக் கட்டிவைக்க மாட்டாங்க… கிடைக்காதுன்னு தெரிஞ்ச எந்தப் பொருள்மேலயும் ஆசைப்பட மாட்டேன்… ஆனா இவர் விசயத்துல?!!… என்னால மனச மாத்திக்க முடியலையே கண்ணா!… நான் என்ன பண்ணட்டும்?" என்று மனமுருக வேண்டியவளின் கண்களில் கண்ணீர் வழிய,

கடவுள் பிரசாதமான குங்குமத்தைத் தனது பேத்தியின் நெற்றியில் வைத்துவிடுவதற்காகத் திரும்பிய அப்பத்தா, மீரஜாவின் கண்ணீரைப் பார்த்துப் பதறிவிட்டார்.

மீராமா! மீராமா!" என்று அப்பத்தா அழைத்ததும் கண் திறந்த மீரஜா,

"என்ன அப்பத்தா?" என்று கேட்டாள்.

"ஏன் அழுகுற? யாரும் உன்னைத் திட்டிட்டாங்களாடா மா?" என்று பரிவுடன் கேட்டவரைப் பார்த்த மீரஜாவிற்கு,

தனது மனதிலிருக்கும் குழப்பத்தை அப்பத்தாவிடம் கூறினால் என்ன?' என்று தோன்றியது.

மீரஜாவின் கண்களைப் பார்த்தே, 'அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள். ஆனால், எதுக்கோ தயங்குகிறாள்' என்று புரிந்து கொண்ட அப்பத்தா,

"சரி! வா! பெருமாள் கோயிலுக்குப் போவோம்!" என்று கூறி பேத்தியையும் அழைத்துக் கொண்டு பெருமாள் கோயிலுக்குச் சென்ற அப்பத்தா, பெருமாளையும் தாயாரையும் வணங்கிவிட்டு, கோயிலுக்கு அருகிலிருந்த பெருமாள் தெப்பக்குளத்தின் படியில் அமர்ந்தார்.

மீரஜாவும் அருகில் அமர்ந்ததும் வாழைப்பழத்தை உரித்துப் பேத்திக்குக் கொடுத்தவர், மீரஜாவின் முகம் இன்னும் குழப்பத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டார்.

சுற்றிலும் பார்வையை ஒட்டினார்‌‌… அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குடும்பங்கள் படிகளில் அமர்ந்து கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டவாறும், சிரித்துப் பேசியவாறும் இருந்தனர்…

தங்களுடைய பேச்சுச் சப்தம் கேட்கும் தொலைவில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அப்பத்தா,

"மீராமா… என்னாச்சு என் செல்லத்துக்கு? எதுவா இருந்தாலும் அப்பத்தாட்ட சொல்லு…" என்று அன்புபொங்கக் கூறியும்,

மீரஜா அப்பத்தாவின் முகத்தைப் பார்த்தபடி இருந்தாலே தவிர வாய்திறந்து எதுவும் கூறவில்லை…

"எதுவா இருந்தாலும் அப்பத்தாட்ட சொல்லுமா… நீ தப்பே பண்ணியிருந்தாலும் முதல்ல உன்னைக் காப்பாத்தத்தான் முயற்சி செய்வேன்… புரியுதா?" என்று அப்பத்தாவின் மொழிகள் தந்த ஊக்கத்தில், மீரஜா மனம் திறக்கலானாள்.

"அன்னைக்கு ஒரு குகைக்குப் போனேன் ல?"

'நினச்சேன்! இதத்தான் சொல்லப்போறான்னு'

"அங்க ஒருத்தர் இருந்தார்."

‘அதான் தெரியுமே’

"அவர என்னால பார்க்க முடியல அப்பத்தா… ஆனா… அவர் தான் நான் வீட்டுக்குத் திரும்பிவர உதவுனாரு." என்று கூறி மீரஜா நிறுத்த,

'எங்கிருந்துப்பா நீங்கல்லாம் வர்றீங்க?' என்று மனம் சலித்த அப்பத்தா,

"ம்ம் சொல்லுடா" என்றார்

"ம்ம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது…"

'கடவுளே! கம்பனரியா காமாட்சி… ஏதோ வில்லங்கமா சொல்லப் போறா போலிருக்கே?' என்று கலங்கிய மனதுடன் பேத்தியின் முகத்தைப் பார்த்து.

"இல்ல சொல்லு!" என்றார்.

"அது… வந்து…"

"ம்ம்… என்கிட்ட சொல்ல உனக்கு என்னடாமா தயக்கம்?"

"அதெல்லாமில்ல… வந்து… எனக்கே சரியாத் தெரியல… என்ன பண்றதுன்னும் புரியல…"

'காமாட்சி... பயமுறுத்துறாளே!' என்று மனம் தவிப்பதை மறைத்து,

"பரவாயில்ல சொல்லுமா… தீர்க்க முடியாத விசயம்னு ஒன்னு இருக்குமா என்ன?" என்று நம்பிக்கையளிக்க,

"வந்து… அப்பத்தா… அங்கயிருந்து வந்ததுலருந்து எனக்கு அவர் ஞாபகமாவே இருக்கு..."

"ஆத்தீ… குண்டத்தூக்கிப் போட்டுட்டாளே… காமாட்சி...' என்று கலங்கினாலும்,

"இது ஒன்னும் பெரிய விசயமில்ல டா… அவர நீ கண்ணால பார்க்கல. இல்லையா?... அதுனால அவர் மானுசனா? என்ன?ன்ற க்யூரியாசிட்டி டா செல்லம்… இந்த மாதிரி பொதுவாவே எல்லாருக்கும் தோணும்… கொஞ்ச நாள் போனா சரியாகிடும்." என்றார் அப்பத்தா.

"அவரோட குரல் இன்னும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கே…"

'அடப்பாவி! யாருடா நீயி?'

"உங்களுக்கு என்னைப் பார்த்தா லூசு மாதிரித் தெரியலாம்!"

'அதுல என்ன சந்தேகம் உனக்கு?'

"எனக்கு... அவரோட குரல் பிடிச்சிருக்கு அப்பத்தா…"

'சோலிய முடிச்சுட்டா'

"அது வந்துடாமா… குகைக்குள்ள நீ தனியா மாட்டிக்கிட்டேல?"

"ஆமா!"

"சின்னப் புள்ள இல்லையா? பயந்திருப்ப..." என்று அப்பத்தா, மீரஜாவின் முதுகைத் தடவிக் கொடுத்தவாறு கூறவும்,
'ஆமாம்' என்பதுபோல் தலையசைத்தாள்.

"அந்தச் சமயத்துல அவர் உன்னைப் பத்திரமா அனுப்பி வச்சார்ல?

"ஆமா! ஆமா!"

'மெல்லடா… மெல்ல' என்று நினைத்தபடி,

"அதுனால வந்த நன்றியுணர்வுடா… இது எல்லாருக்குமே இருக்கத்தானே செய்யும்?" என்று,

அது சாதாரண விசயம் என்பது போல மீரஜாவின் மனதில் பதிய வைக்க முயன்றார். ஆனால்,

"நீங்க சொல்ற மாதிரி இருந்தாலும், ஒரு தேங்க்ஸ் சொன்னா முடிஞ்சுடனுமே… எனக்கு அவர பார்க்கனும் போல இருக்கு அப்பத்தா"

'காமாட்சி… இதுக்கு என்ன பதில் சொல்வேன்?'

"இது க்யூரியாசிட்டியேதான்மா… நீ அவரப் பார்த்திருந்தேன்னு வையி… அப்பவே மறந்திருப்ப…"

'அப்டீங்கிறீங்க? ஆனா…"

'இன்னும் முடியலையா?'

"அவரோட குரல்… எனக்கு… எப்படிச் சொல்றதுன்னு தெரியல…"

'எனக்குப் புரிஞ்சுடுச்சு…'

"அவரோட குரல்… எனக்கு மனசுக்குள்ள ஏதோ மாதிரி குறுகுறுன்னு…" என்று மீரஜா கூறி முடிக்கும் முன்,

"அவரோட குரல் உனக்குப் புடிச்சிருக்கு அதானே?" என்று மிகவும் அசால்ட்டாக அப்பத்தா கேட்க,

"ஆமா…" என்றாள்.
"இதுல என்னடா இருக்கு? எனக்குக் கூடத்தான் எஸ்பிபி வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும்… அவரோட பாட்ட கேட்டுக்கிட்டே இருக்கனும்னு தோணும்… இதெல்லாம் ஒரு விசயமா?" என்றதும்,

"அப்டீனா இது ஜஸ்ட் லைக் தட் தானா அப்பாத்தா?"

"ஆமாடா!"

"வேறொன்னுமில்லையே?"

"ம்ஹும்… ஒன்னுமில்ல… எஸ்பிபி மேல எனக்கு என்ன ஃபீலிங் இருக்கு? அப்படிதான் இதுவும்… எப்பப்பார்த்தாலும், ஒரே விசயத்த, அது என்னவா இருக்கும்? இது என்னவா இருக்கும்? னு யோசிச்சாலே, நம்மளையும் அறியாம, ஏதோ இருக்குன்னு, நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சுடும்… அதனால அதத் தூக்கிப் போட்டுட்டு, உனக்குப் பிடிச்ச வேற விசயத்துல கவனத்த திருப்பு… ஆட்டமெட்டிக்கா எல்லாத்தையும் மறந்துடுவ" என்று கூறிவிட்டு,

"சரி வாடா! வீட்டுக்குப் போயிடலாம்" என்று எழுந்தார்.

ஆனால் மீரஜா மறந்தால்தானே?

காலையில் எழுந்ததுமே மீரஜாவிற்கு, ‘அவர் இன்னேரம் எழுந்திருப்பாரா?’ என்று தோன்றக் குகை இருக்கும் திசையை நோக்கி, “குட் மார்னிங்க்” என்றாள்.

ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும், “நீங்க சாப்பிட்டுட்டீங்களா?” என்று கேட்கத்தவறவில்லை…

பள்ளிக்குக் கிளம்புமுன் தாத்தா, அப்பத்தவிடம் விடை பெறும் போதே நோட்டில் இருக்கும் அவரது ஓவியத்திடமும், “ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றென்!” விடை பெற்றாள்.

அடுத்தடுத்து வந்த நாட்களில், ஆற்றைக் கடந்து கார் போகும்பொழுதெல்லாம், மீரஜாவிற்கு அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றதே ஒழிய மறையவில்லை…

‘அவரை மீண்டும் எப்படிப் பார்ப்பது?’ என்று யோசிக்கலானாள்.
ஒவ்வொரு முறை ஆற்றைக் கடக்கும் பொழுதும், ‘ஆற்றில் தோணி எதுவும் இருக்கிறதா?’ என்று பார்ப்பதையும், தோணியைக் காணாமல் கண்கலங்குவதையும் மீரஜாவால் தடுக்க முடியவில்லை.

வைகை ஆற்றைக் கடக்கப் பாலங்கள் இருந்ததால், பொதுமக்களுக்குத் தோணியின் தேவை இருக்கவில்லை, தேவைப்படும் தனியார் வசம் மட்டுமே தோணி இருந்ததால், அந்தக் குகைக்கு மிண்டும் செல்ல வழி இல்லாமல் தவித்தாள்.

‘அவரைப் பார்க்க வேண்டும்’ என்ற எண்ணம் மனதை அழுத்தியதால் அதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தாள்.

'ஆற்றைக் கடக்க வேண்டுமானால் முதலில் ஸ்கூலுக்கு, இந்தக் காரில் செல்வதை நிறுத்த வேண்டும். அதன்பிறகு ஏதேனும் வழி கிடைக்கலாம்.' என்று தோன்ற,

நேரில் தன் தாத்தாவிடம் சென்று, "நான் ஸ்கூலுக்கு, என் பிரெண்ட்ஸ் கூடப் பேசிச் சிரிச்சுக்கிட்டே நடந்து போறனே தாத்தா… கார்ல போகும்போது, சட்டுனு கண்ண மூடித் திறக்குறதுக்குள்ள ஸ்கூல் வந்துடுது… ஒரு மாதிரி இருக்கு... ப்ளீஸ்!" என்று கேட்டாள்

சாதாரணமாக இருந்திருந்தால் தாத்தாவும் சம்மதித்து இருப்பார்தான்...

தினமும் காலையும், மாலையும் நடப்பது உடம்புக்கு நல்ல பயிற்சி தானே? ஆனால் தாத்தாவுக்கும் அந்த ஆற்றைப் பார்க்கும் பொழுதெல்லாம் அக்கரையில் உள்ள குகை ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்த, பேத்தியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் வலுப்பெற்றிருந்தது… அதனால்,

"உனக்கு ஏன்டா அந்தச் சிரமம்? கார்ல போயி ஜம்முனு ஸ்கூல்ல இறங்குறதை விட்டுட்டு வேர்க்க விறுவிறுக்க நடக்கணுமா என் பேத்தி? என் வீட்டு ராஜகுமாரி இல்லையா?" என்று தாத்தா, மீரஜாவின் தலையைக் கோதியவாறு கண்களில் பாசம் நிறந்து கூறியபோது, மீரஜாவால் மறுத்துக் கூற முடியவில்லை.

நாளாக ஆக, "எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும் போல இருக்கு... உங்க குரலைக் கேக்கணும் போல இருக்கு…" என்ற இரு வரிகளை ஜெபம் போல உச்சரிக்க ஆரம்பித்தாள்.

கண்கலங்க, மனம் தவிக்க ஜெபித்த மீரஜாவின் குரல், குகைக்குள் இருந்தவரின் இதயத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்தது, யோக நிஷ்டையில் இருந்தவரின் தியானத்தைக் கலைத்தது.

மீராவின் மனதிலிருந்த வலி புரிந்த அவருக்கும் மனம் வலிக்க, கண்களை மூடி,

"என்னை மன்னித்துவிடு மீரா! என்னால் உன் முன் இப்பொழுது வர இயலாது... நீ வளர்ந்து பெரியவளாகும் வரை, உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்! என்று உன் தாத்தாவிடம் வாக்களித்து விட்டேன்... நிச்சயம் ஒரு நாள் வருவேன்... எனக்காகக் காத்திரு!" என்று கூறினார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1124


கண்ணன் வருவான்!

🎼🎼🎼🎼🎼🎼
 

Sspriya

Well-known member
மீராவின் மனம் முழுதும் சின்ன கண்ணன் நிறைந்து இருக்கிறார்.... அவரும் பாவம் தாத்தாக்கு வாக்கு குடுத்துட்டு தவிக்குறார்.... 🙄🙄🙄இனி என்ன நடக்குமோ 🤔
 

Shailaputri R

Well-known member
யாருடா நீங்க.. ஸ்கூல்ல முடி மீரா அப்பறம் எல்லாம் பார்த்துக்கலாம்.. இன்னும் நீ படிக்க வேண்டிய போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம் டா குழந்தை புள்ள
 

Chitra Balaji

Well-known member
Super Super maa... Semma episode.... மீரா vuku avara paakanum போல இருக்கு... அவரால ava தாத்தா vuku கொடுத்த வாக்கை kaapaaththa ava kita vara maatengiraaru
 

Aathisakthi

Well-known member
என்னடா இப்படி இருக்கு...எல்லாரும் ஒரு வித தவிப்பிலையே வாழ்க்கை யா ஓட்ட வேண்டும் போல இருக்கே😶😶😶😶
 
Top