கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-29

meerajovis

Moderator
Staff member

"நீ வரும் பாதையைப்
பார்க்கிறேன் நான்…"
(ப்ரியசகி... ஓ… ப்ரியசகி. படம்: கோபுர வாசலிலே)

என்று மீரஜா, தாமரை இலையில் எழுதி, வைகை ஆற்று நீரில் விட, அது வைகை ஆற்றில் மிதந்து சென்றது.

ஆற்றில் மிதந்து வந்த இலையை ஒரு வலிய ஆண்கரம் எடுத்தது…

வைகை ஆற்றில் துள்ளி விளையாடிய மீன்களுக்குப் பொரியைப் போட்டு, மீன்கள் சாப்பிடுவதைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தவனின் கரங்கள் வாலிப முறுக்கேறியிருந்தது.

சுருண்ட கருமையான கேசம் ஆற்றங்கரைக் காற்றால் அலைக்கழிக்கப்பட்டாலும் அதுவும் அவனுடைய ஆண்மைக்கு அழகு சேர்த்தது… சூரியனின் வெப்பமான கதிரில் சந்திரனின் குளுமை எப்படிச் சேர்ந்திருருக்க முடியும்? என்று காண்போரை வியக்க வைத்தது அவனுடைய பார்வை வீச்சு.

ஆழ்மனதின் தூண்டுதலால், பார்வையை ஆற்றங்கரை ஓரமாகச் செலுத்தியவனுக்கு, தூரத்தில் மீரஜாவும், டாலி செல்சியாவும் ஏதோ ஒரு இலையை ஆற்று நீரில் மிதக்கவிட்டு, அந்த இலை மிதந்து செல்வதை, கைகளைப் பிசைந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது‌.

அந்த இலை தனதருகில் வரவும், அதைப் பார்த்தான் நந்தன்!

தாமரை இலைமீது விளக்கோ, பூக்களோ எந்தப் பொருளும் இல்லாமல் வெற்று இலையாக இருக்கவே,

'வெற்று இலையை ஆற்றுநீரில் விட்டுவிட்டு, தவிப்புடன் ஏன் நிற்கிறார்கள்?' என்று எண்ணியவாறு மீரஜா, டாலிசெல்சியா நின்றிருந்த இடத்தைப் பார்க்க,

அவர்கள் இன்னும் அங்கே நின்றபடி ஆற்றுநீரைக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் நிற்கும் தோரணையே அவர்களிலிருவரும் விளையாட்டாக எதுவும் செய்யவில்லை என்பதும்… தீவிர மனப்பான்மையில் இருப்பதும் தெரிந்தது‌.

'அப்படியென்ன இருக்கிறது?' என்று எண்ணியபடி இலையைக் கையிலெடுத்து, அதை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தவனுக்கு, இலையின் மேல் சிவப்பு வண்ண மெழுகில் எழுதியிருப்பது புலப்பட்டது…

பாடல் வரிகளை வாசித்த நந்தன்,

'சந்திக்க விரும்புகிறாளோ?... ஆனால், நான் இங்கு இருப்பது அவர்கள் கண்களில் பட வாய்ப்பில்லையே?!! நாணல்கள் மறைத்திருக்குமே? பிறகு எந்த நம்பிக்கையில் இந்த ஒற்றை இலையைத் தூது அனுப்பியிருக்கிறாள்?' என்று அவர்களைப் பார்த்தவண்ணம் யோசித்தவனின் மனம் குளிர இதழ்பிரிக்காமல் சிரித்துக்கொண்டான்.

"சந்தித்துவிட்டால் போச்சு!" என்று புன்னகை தவழக் கூறிவிட்டு அந்த இலையை ஆற்று நீரிலேயே போட்டுவிட்டு சாலையை நோக்கி நடந்தான் நந்தன்.

சூரிய ஒளியின் பின்னணியில் நிழல் நோக்கி நடந்தவனின் தேஜசைப் பார்த்தவர்கள், தேவலோகத்திலிருந்து வந்தவனோ என ஐயுறுவர். இருபதுகளில் இருந்த நந்தன் கட்டிளங்காளையாகத் திகழ்ந்தான். சியாமள வண்ணம் அவனுக்குக் கம்பீரத்தைக் கொடுத்தது… பார்வையில் தீட்சண்யமும், குறும்பும் கொப்பளித்தது… இதழ்களோ அவனது குறும்புப் பார்வைக்கேற்றவாறு அபிநயம் செய்துகொண்டிருந்தது…

அங்கே தாமரைஇலையோ மீண்டும் மிதந்து சென்றது… மாந்தோப்பைக் கடந்து சென்ற இலை, அங்கே நின்று சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தவரின் மார்பில் உரசி நின்றது.

அதுவரை மேற்கில் மறைந்து கொண்டிருந்த ஆதவனை வணங்கிக் கொண்டிருந்தவர், தனது மார்போடு ஒட்டிக் கொண்ட இலையைத் தோட்டதுமே,

மீரஜாவின் அழகிய வதனமும், துருதுருவென்ற கண்களும், துடிக்கும் இதழ்களும் நினைவிலாட இலையைப் பார்த்தார்.

அந்த வரிகளில் இருந்த காதலில் கரைந்து, எழுதியவளின் வேதனையை உணர்த்திய எழுத்துக்களைத் தனது விரல்களால் வருடியவரின் மனக்கண்ணில்,

அந்த இலையில் மீரஜா மெழுகால் எழுதியது முதல், ஆற்றுநீரில் மிதந்து வந்த இலையை நந்தன் எடுத்துப் பார்த்துவிட்டு முகம் பிரகாசிக்க மீண்டும் இலையை ஆற்றில் போட்டுவிட்டு கரையேறியது வரை காட்சிகளாக விரிய,

"இவன் வேறு" என்று முணுமுணுத்து விட்டுக் கரையேறினார்.

கையிலிருந்த இலைக்கே பார்வையால் உயிர்கொடுத்தபடி குகைக்குள் வந்தவரைப் பார்த்த, முனிவருக்கு நடந்த விசயங்கள் தெரிந்து விட்டது.

"இன்று காலையிலிருந்தே சில சுப சகுனங்கள் வந்தன… இப்பொழுது தங்களின் இதயதேவியிடமிருந்து மடல் வந்துவிட்டது." என்று சிரிக்க,

எந்தப் பதிலும் கூறாமல் கண்கள் முழுவதும் சந்தோசத்தால் நிரப்பிப் பார்த்தவரைக் கண்ட முனிவர்,

"மீராவும், தங்களை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்… ஆச்சரியமாக இருக்கிறது… 'கண்முன் நிற்காத ஒன்று கருத்திலும் நிற்பதில்லை' என்பார்கள்… ஆனால் கண்களுக்கே புலப்படாத ஒருவர் மீது இத்தனை அன்பு சாத்தியமா?" என்று முனிவர் கூறியதும்,

சந்தோசத்தில் முகம் சிவக்க இலையைப் பார்ப்பதுபோல் குனிந்து கொண்டு, மென்னகை புரிந்தவரைப் பார்த்த முனிவருக்கு, ஆச்சரியத்தில் உடலேங்கும் புல்லரித்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன.

'எப்பேற்பட்டவர், இவரது கண்கள் கோபத்தில் சிவந்துவிடக்கூடாதென்று தவமிருக்கும் முனிகளுள் நானும் ஒருவன், அவ்வாறு சிவந்துவிட்டால் இந்த அகிலமே நடுநடுங்கிவிடுமே!!! இவரது தேஜஸ்சைக் கண்டாலே இதயம் பயத்தில் தாறுமாறாகத் துடிக்குமே!!! இவரது சிரிப்பு சப்தமே சிம்மத்தின் கர்ஜனையாக எட்டுத்திக்கும் எதிரொலிக்குமே!!! சூரியனுக்கே சவால்விடும் விழிகள் நாணத்தில் நிலம் நோக்குவதா? காதலுக்கு இத்தனை சக்தியா?' என்று ஆச்சரியத்தில் முனிவர் வாயடைத்து நிற்க,

முனிவரின் பேச்சு நின்றதைக்கூட உணராமல் தன் வழியே நடந்து சென்றவரை முனிவர் அழைத்தார்

"மன்னிக்க வேண்டும்… சாதாரண மானுடப் பெண் இறுதிவரை இதே காதலுடன் கைபிடிக்க வருவார்களா? அப்படியே வந்தாலும் மானுடப் பெண்ணுடன் ஆகாயத்தையே குலைநடுங்கச்செய்யும் சக்தியால் இணைய முடியுமா?"

"இதுவரை காதலுடன் எனக்காகக் காத்திருப்பவள்தானே?"

"மீரா இன்னும் தங்களைச் சந்திக்கவில்லை…" என்று முனிவர் தயங்க,

"புறக்கண் வழியாக என்னைக் காணும்போது அஞ்சி விடுவாள் என்கிறீரா?"

'ஆமாம்' என்று கூறும் சக்தி எவருக்கு இருக்கிறது? அதனால் மௌணமாக அவரையே பார்த்தார் முனிவர்,

"இல்லை என்றும் கூறவில்லை!" என்று கூறி குகையே அதிரும் அளவு சிரித்தவர்,

"உருவமோ அழகோ கண்ணுக்குத்தானே? மனசுக்கு இல்லையே? நேர்ல பார்க்கும்போது மனசுல இருக்கிற காதல் இல்லாமலா போயிடும்?"

''ஹஹ்ஹஹா… இது திரைப்பட வசனம்! "

"ஆனாலும் உணர்ந்து கூறிய வரிகள்! எங்களுக்கும் பொருந்துகிறதுதானே?"

"தங்களுக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியும் என்றே இத்தனைகாலமாக நான் அறிந்திருக்கவில்லை…"

"அதுசரி!"

“ஆனால்…” என்று முனிவர் மீண்டும் தயங்க,

“ம்ம்… சொல்லுங்கள்”

"மனதிற்குள் மட்டும் காதல் இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை… அது வெளியே தெரியவரும் சமயம் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும்… கண்ணை இமை காப்பதுபோல் தன்னை வளர்க்கும் தாத்தா, அப்பத்தாவை மீறி மீரா வரவேண்டுமே"

"வருவாள்!"

“மீண்டும் மன்னிக்க வேண்டும்… முதன் முதலில் உங்களைச் சந்திக்கும் எவரும் அச்சம் கொள்வது இயல்பு… மீராவோ சிறு பெண்ணல்லவா?

"இதற்கான பதில் ஏற்கனவே கூறிவிட்டேன்"

"இருந்தாலும், பல நேரக்களில் எதிர்காலத்தை, நிகழ்காலம் ஜெயிப்பது இயல்பு.”

“அதாவது”

“எதிர்காலத்தில் வரப்போகும் உறவின் மீதுள்ள காதலை, நிகழ்கால உறவுகள், அதாவது பிறந்தவிட்டினர் மீதுள்ள அன்பு ஜெயித்துவிடுவது இயல்பு”

“அதாவது மீரா என்னைச் சேர்வதற்கு இரண்டு தடைகள் இருக்கின்றன என்கிறீர்கள். அப்படித்தானே?”

சிறிது மௌனம் காத்த முனிவர், எதிரில் நிற்பவரைப் பார்க்கும் திரணின்றி நிலத்தை நோக்கியவாறு, “இவ்விரண்டையும் கடக்கும் மனவலிமையைக் காதலால் மட்டுமே கொடுக்க முடியும்.” என்றார்.

“மீரவிடம் என்மீது, ஏதோ ஒருவகையான அன்பு மட்டும்தான் இருக்கிறது எங்கிறீரா?”

“யார் கண்டார்? கண்ணுக்குப் புலப்படாதவர் எப்படி இருப்பார்? என்ற ஆர்வம், அதாவது க்யூரியாசிட்டி. அதைப்பற்றியே சிந்தித்ததால் ஏற்பட்ட தாக்கமாகக் கூட இருக்க வழியிருக்கிறது.” என்று முனிவர் கூறவும், எதுவும் பேசாமல் யோசித்தவாறே நடந்து சென்றவரை,

“ஏதேனும் தவாறாகக் கூறியிருந்தால்…” என்று முனிவர் இழுக்க...

“அப்படியில்லை நீங்கள் கூறியது யோசிக்க வேண்டிய ஒன்றுதான்…” என்று கூறிவிட்டு இதமான பார்வை ஒன்றை வீசிவிட்டு அவர் செல்ல, முனிவருக்குத்தான் மனம் பாரமானது.

‘முதலில் மீராவின் மனதில் உள்ளதை அறிய வேண்டும்!’ என்று முடிவெடுத்த முனிவர், அன்று இரவே மீராவைக் காணச் சென்றார்.

‘கல்லூரியில் படிக்கும் காலங்களில் இரவு பத்து, பதினோரு மணி வரையாவது படிப்பது அல்லது தோழிகளுடன் அரட்டை அடிப்பது என்று பொழுது போவது தெரியாது. இப்பொழுதோ எட்டுமணிக்கே படுக்கை அறைக்கு வந்தாயிற்று ஆனால் தூக்கம்தான் வருவேனா என்று அடம்பிடிக்கிறது.’ என்று எண்ணியவாறு படுக்கையில் புரண்ட மீரஜா,

"இனி முடியாது" என்று கூறிவிட்டு எழுந்து சென்று, படுக்கைஅறையை ஒட்டிய மொட்டைமாடியில் இருந்த ஊஞ்சளில் சென்று அமர்ந்தாள்.

இரவு நேர இளந்தென்றல் காற்று, மந்தோடு உடலையும் தளர்த்த, கால்களால் மென்மையாகத் தரையில் உந்த, ஊஞ்சள் மெதுவாக ஆடியது.

பெருநகரங்களில் காணப்படும் வாகன இரச்சலோ, மக்களின் நடமாட்டமோ இல்லாமல் ஊரே அமைதியாக இருந்தது.

இரவு நேர மனித நடமாட்டமில்லாத வீதியைக் காண ஆசை வரவே, ஊஞ்சளிலிருந்து இறங்கி படுக்கை அறை வழியாகப் பால்கனிக்குச் சென்று வீதியை வேடிக்கை பார்த்தாள்.

‘கடந்த மூன்று வருட நகர வாழ்க்கையில் இப்படியொரு அமைதியான சாலையைப் பார்ப்பது அரிதாகிப் போனது… அதற்கு முந்தயக் காலங்களில் இதே அமைதி பெரிதாகத் தோன்றவில்லை.’ என்று எண்ணியவளுக்கு,

‘முன்பொருமுறை மார்கழி மாத விடியலில் வாசல் தெளிக்கும்போது, தான் ஒருவனை இதே சாலையில் பின் தொடர்ந்து குகைக்குச் சென்றது நினைவிலாட, கூடவே அன்று அழைத்துச் சென்றது அந்தக் குகை மனிதன் தானோ?’ என்ற சந்தேகம் வழக்கம்போல வந்தது.

“யார் நீங்கள்? உங்களை ஏன் என்னால் மறக்க முடியவில்லை?...” என்று தன் முன் வியாபித்திருந்த இருளைப் பார்த்துக் கேட்டவளுக்கு, குகை மனிதனின் நினைவு அலைக்கழிக்க,

"எனக்கு உங்களைப் பார்க்கவெண்டும் போலிருக்கிறது… உங்கள் குரலைக் கேட்க வேண்டும் போலிருக்கிறது… எனக்குச் சந்தோசம் கொடுக்கும் விஷயங்களில் மட்டுமல்ல கஷ்டம் கொடுக்கும் விஷயங்களில் கூட உங்களையே தேடுகிறேன்." என்றவளுக்குத் தேடலின் வலி மனதைப் பிசைய...

"உங்களுக்கு என்னைச் சந்திக்கத்தோணலையா? என்னை மறந்துவிட்டீர்களா? இல்லை, எல்லோரும் சொல்வது போல், வழி தவறி வந்த பெண்ணாக மட்டும்தான் என்னை நினைத்தீர்களா?" என்று கூறும்போதே மீரஜாவின் கண்களின் வழியே சூடாகக் கண்ணீர் இறங்கியது.

"உங்களை மறுபடியும் எப்படிச் சந்திப்பேன்?" என்று கூறிய மீரஜாவின் பின் பக்கம் யாரோ நிற்பது போல் உணர்ந்து திரும்பிப் பார்த்தவளின் அதரங்கள் துடிக்க, கண்கள் விரிந்தன...

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Aathisakthi

Well-known member
அம்மாடி வந்துட்டீங்களா...வாங்க வாங்க🌹🌹🌹❣️❣️❣️

இரண்டு பேரும் இப்படி இருந்தா என்ன ஆகறது...இந்த புள்ள காலை மயக்கத்துல காலார நடந்தத மறக்கமுடியாம அல்லாடுது...இதுல தாத்தோவ் என்ன முடிவு எடுக்க போறீர்...யாருப்பா அது அர்த்த இராத்தியில ...அதுவும் பின்னால...அந்த புள்ள என்னமோ அசால்லட்டா தான் எனக்கு தான் பக்குறு இருக்குது....😌😌😌😌
 

Sspriya

Well-known member
யாரு வந்தது 🙄🤔🤔🤔...😍😍💞very interesting 👌🏻👌🏻👌🏻... மீராக்கு இருப்பது curiosity மட்டும் இல்ல காதலும் தான்... இல்லை னா ஏன் கண்ணீர் வருது... அந்த முனிவர் குழப்பம் பண்ணுறார்... ஒத்துக்க மாட்டேன் 🙈😜
 

meerajovis

Moderator
Staff member
அம்மாடி வந்துட்டீங்களா...வாங்க வாங்க🌹🌹🌹❣️❣️❣️

இரண்டு பேரும் இப்படி இருந்தா என்ன ஆகறது...இந்த புள்ள காலை மயக்கத்துல காலார நடந்தத மறக்கமுடியாம அல்லாடுது...இதுல தாத்தோவ் என்ன முடிவு எடுக்க போறீர்...யாருப்பா அது அர்த்த இராத்தியில ...அதுவும் பின்னால...அந்த புள்ள என்னமோ அசால்லட்டா தான் எனக்கு தான் பக்குறு இருக்குது....😌😌😌😌
வந்துட்டேன்... :love::love::love:
 

meerajovis

Moderator
Staff member
யாரு வந்தது 🙄🤔🤔🤔...😍😍💞very interesting 👌🏻👌🏻👌🏻... மீராக்கு இருப்பது curiosity மட்டும் இல்ல காதலும் தான்... இல்லை னா ஏன் கண்ணீர் வருது... அந்த முனிவர் குழப்பம் பண்ணுறார்... ஒத்துக்க மாட்டேன் 🙈😜
யார் வந்ததுன்னு தெரியலயே!! நானும் ஒத்துக்கமாட்டேன் சகி
 
Top