கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்! - அத்தியாயம்-3

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-3

சுப்பையா பிள்ளையின் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை.

செல்வராஜுக்கும் உடன் பிறந்த பெண்கள் கிடையாது… மாலினியின் உடன்பிறந்தவர்களும் இரு ஆண்களே…

அதனால் குழந்தை வடிவில் அந்தக்குடும்பம் பார்த்த முதல் பெண் குழந்தை, அவள்தான்.

சுப்பையா பிள்ளை, முத்துராக்கம்மாள் தம்பதிக்கு, இரண்டும் ஆண்குழந்தைகள் என்பதால் அடிமனதில் பெண்குழந்தை மீது மிகுந்த ஆசை இருந்திருக்கிறது என்பதை, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்த்தபிறகே இருவருக்கும் புரிந்தது…

பெரியவர்கள் இருவரில் ஒருவர் கையில்தான் அந்தப் பெண்குழந்தை இருந்தது. மாலினி, குழந்தைக்குப் பால் கொடுக்கும் சமயத்தில் மட்டுமே, குழந்தை அவளுடன் இருந்தது‌.

குழந்தையைக் குளிக்க வைப்பது, சாம்பிராணி போடுவதிலிருந்து, பவுடர், பொட்டு வைத்து அலங்கரித்துப் பார்ப்பது, மலஜலம் சுத்தப்படுத்துவது, தூளியில் போட்டுத் தூங்க வைப்பது வரை குழந்தைக்கு, சகலமும் முத்துராக்கம்மாள்தான்.

மாலினிக்கும் குழந்தையைப் பக்குவமாக வைத்துக் கொள்ளத் தெரியவில்லை என்பதால் வீட்டு வேலைகளை மாலினி செய்ய, குழந்தையைப் பார்த்துக் கொள்வது பெரியவர்கள் பொறுப்பானது.

குழந்தையின், பேச்சுத்திறன் அதிகரிப்பதற்காக முத்துராக்கம்மாள் குழந்தையின் கையில் வசம்பைக் கட்டி விட்டார். குழந்தை கைகளை அசைத்து வாயில் வைத்துச் சுவைக்கும். என்று எதிர்பார்க்க, குழந்தையின் சுறுசுறுப்பில் கட்டியிருந்த வசம்பு அறுந்து விழுந்தது… குழந்தை கடிக்கும்போது நாக்கு சுத்தமாவதற்குப் பால்மணியைக் கழுத்தில் போட்டுவிட்டார்… பால்மணியும் இரண்டே நாள்தான் கழுத்தில் இருந்தது. அழுகை வரும்போதெல்லாம் இரு கைகளாலும் பால்மணியைப் பிடித்துக்கொண்டு வீறிட்டு அழுவாள்… குழந்தை பிடிமானத்திற்காகப் பிடித்தாலும் பால்மணியை இறுக்கிப் பிடிப்பதால் பிஞ்சுக்கை சிவந்து வலிக்க, மேலும் அழுகை கூடும்… அழுவதால் மணியை இழுக்கிறாளா? மணியை இழுப்பதால் அழுகிறாளா? என்று குடும்பத்தில் பட்டிமன்றமே நடக்கும்… பட்டி மன்றத்திற்குப் பரிசாக மணியை அறுத்துக் கொடுத்துவிடுவாள்… இடுப்பில் கட்டப்பட் வெள்ளி அரணாக்கொடிதான் தப்பிப்பிழைத்து அப்படியே இருக்கும்…

குழந்தை பிறந்த பதினைந்தாம் நாள் புண்ணியானம் பூஜை செய்வதற்காகப் புரோகிதரை அழைக்கச் சென்றார் சுப்பையாபிள்ளை.

அப்பொழுது அவருக்கு எதிரில் வந்து நின்றார் சிவனடியார்.

'இவரை, புண்ணியானம் பூஜை செய்ய அழைப்போமா?' என்று எண்ணியபடி சிவனடியாரைப் பார்த்தார் சுப்பையா பிள்ளை.

சிவனடியார், தும்பைப் பூப் போன்ற வெள்ளைநிறத்தில் வேஷ்டி துண்டு அணிந்திருந்தார். கருமையுடன் நரையும் கலந்த கேசம்... ஒரு முடிகூடச் சிலும்பாமல் அனைத்தையும் சேர்த்துக் கொண்டையாக முடிந்திருந்தார். மார்பில் ஒன்பது இழைகளையுடைய மூன்று பூணூலை அணிந்திருந்தார்.

அதைக் கவனித்த சுப்பையாபிள்ளை, 'சிவ தீட்சை பெற்றவர்கள்தானே இவ்வாறு பூணூல் அணிவார்கள்.' என்று நினைத்து, சிவனடியாரைக் கடந்து செல்ல முயன்றார்.

"என்ன சுப்பையாபிள்ளை என்னைப் பார்த்தும், பார்க்காதது போல் செல்கிறீர்கள்?" என்று சிவனடியார் கேட்டதும்,

'தன்னுடைய பெயர் இவருக்கு எப்படித் தெரியும்?' என்று யோசித்தபடி, "நான் புரோகிதர பார்க்க வந்தேன்…" என்றார் சுப்பையா பிள்ளை.

"என்னைப் பார்த்தால் புரோகிதம் பண்ணுபவர் போலத் தெரியவில்லையா?"

"அப்படியில்ல… உங்களப் பார்த்தா..."

"சிவ தீட்சை பெற்றவன் போல் தெரிகிறதா? ஏன் உங்கள் இல்லத்தில் சிவ தீட்சை பெற்றவர் புண்ணியானம் பண்ணக்கூடாதா?" என்றதும் சுப்பையாபிள்ளை சிரித்துவிட்டார்.

"சரி வாங்க… இது என் முகவரி..." என்று முகவரி மற்றும் குழந்தை பிறந்த நேரத்தையும் எழுதிக் கொடுத்தார்.

"புண்ணியானம் செய்வதற்கு முன்னால், வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை மெழுகி, சுத்தம் செய்து தயாராக வையுங்கள் பதினைந்தாம் நாள் காலை நான் அங்கு இருப்பேன்." என்று சிவனடியார் கூறியதும், சுப்பையா பிள்ளை வீட்டிற்கு வந்துவிட்டார்.

பதினைந்தாம் நாள் காலை நேரத்தில் புரோகிதராகச் சிவனடியார் வந்ததும், பூஜைக்காக வாழை இலையில் பச்சரிசி, நெல், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மற்றும் ஒரு தாம்பாளத்தில், புரொகிதம் செய்பவருக்கு, காணிக்கையாக, இரு வெள்ளை வேஷ்டி, துண்டுகள் இவற்றை வைத்திருந்தனர்… சிவனடியாரின் முன்பு ஒரு மனையில் செல்வராஜ், மாலினி அமர்ந்திருந்தனர். மாலினியின் மடியில் குழந்தை இருந்தாள். மந்திரங்கள் கூறி, பூஜையை முடித்த சிவனடியார், குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைக்கச் சொன்னார்… காலங்காலமாய்த் ‘தொட்டில் போடும்’ சடங்கிற்காகப் பயன்படுத்தும் மரத் தொட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்ததும், சில மந்திரங்கள் ஓதிய சிவனடியார்,

“மங்கள வாழ்த்து பாடி தொட்டிலை ஆட்டிவிடுங்கள்!” என்று கூறினார்.

முத்துராக்கம்மாளும் மற்ற உறவுப் பெண்களும் மங்கள வாழ்த்தையே தாலாட்டாகப் பாடினர்.

சிவனடியாருடன் வந்திருந்த புரோகிதர் மந்திரங்கள் கூறியபடியே கோமியத்தை மா இலையால் வீடு முழுவதும் தெளித்தார்.

“குழந்தைக்குப் பெயர் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா?” என்று சிவனடியார் கேட்க,

“வழக்கமாகப் புண்ணியானம் செய்ய வரும் புரோகிர்கள் கூறும் எழுத்தில் தான் பெயர் தேர்ந்தெடுப்போம்” என்று செல்வராஜ் கூறினான்.

சுப்பையாபிள்ளைக் குடும்பத்தினர், குழந்தைக்கு எந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாலும், ஸ்ரீ ராமனாதர் கூறிய பெயரை வைப்பதற்காகவே வந்திருந்ததால், குழந்தைக்குப் பெயர் வைப்பதில் எந்தக் குழப்பமுமின்றி, சுலபமாக இருந்தது.

இறைவன் வகுத்ததை, மாற்றும் சக்தி எந்த மனிதனுக்கும் கிடையாது என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்ட சிவனடியார்,

தொட்டிலில் இருந்த குழந்தையை ஆசீர்வாதம் செய்து, “குழந்தைக்கு அன்னை மீனாட்சி நாமத்தின் முதல் எழுத்தும், நடனத்திற்கே ஆசானான நடராஜரின் கடைசி இரு எழுத்தையும் இணைத்து, "மீரஜா" என்று நாமம் சூட்டுகிறேன்…" என்று கூறியவர்,

"பெற்றவர்கள், பெரியவர்கள் குழந்தையின் காதில் அவளுடைய பெயரைச்சொல்லி, இந்தத்தேனை அவள் நாவில் தொட்டு வைத்து ஆசி வழங்குங்கள்." என்றதும் அனைவரும் அவ்வாறே செய்தனர்.

குழந்தையைப் பார்த்து, சிரித்தபடி, "மறுபடியும் சந்திப்போம் மீரஜா" என்று சிவனடியார் விடை பெற,

சிவனடியார் கூறியது புரிந்தது போல், அவரைப் பார்த்துக் கண்கள் பிரகாசிக்கப் புன்னகையுடன் இனிய ஒலி எழுப்பினாள் மீரஜா.

சிவனடியார் விடைபெறும் சமயம், சுப்பையாபிள்ளையைத் தனியாக அழைத்து, "மீரஜாவை விட்டு நீங்கள் மூன்று முறை பிரிய நேரிடும்! முதல் இரண்டு முறை பிரிய நேரும்பொழுது, மீரஜாவின் காதருகில் 'நாம் பிரிவதில் எனக்கு இஷ்டமில்லை!' என்று கூறுங்கள். நிச்சயமாகப் பிரிய மாட்டீர்கள்... மூன்றாவது முறை பிரியும்நிலை வரும்போது முடிந்தவரை பிரிவைத் தடுக்க முயற்சி செய்யுங்கள்... ஏனெனில் உங்களைப் பிரிந்து செல்லும் மீரஜா, வாழ்வில் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்!" என்று கூறிவிட்டுச் சென்றார்.

சிவனடியார் கூறிய விசயம், சுப்பையாபிள்ளையின் மனதை அவ்வப்போது கலங்கடித்தது. இதையெல்லாம் குழந்தையின் சிரித்த முகம் மறக்கச் செய்தது.

'குழந்தை மீரஜாவின் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பதே பணி!' என்று இரு பெரியவர்களும் இருக்கையில்,

தாமரைக்குளம் என்ற சிற்றூரின் ஜவுளிக்கடை விலைக்கு வருவதை அறிந்து, சுப்பையா பிள்ளை அதை வாங்கினார்.

புதிய ஜவுளிக்கடையை நிர்வகிக்கத் தாமரைக்குளம் செல்லவேண்டிய அவசியமானதால் சுப்பையாபிள்ளையும் முத்துராக்கம்மாளும் மீரஜாவைப் பிரிய மனம் இல்லாமல் தவித்தனர்.

அப்பொழுது சிவனடியார் கூறியது ஞாபகத்திற்கு வந்ததும், சுப்பையா பிள்ளை மீரஜாவை பூ மாலையைப் போலத் தூக்கி அவள் காதில்,"எனக்கும், அப்பத்தாவுக்கும் உன்னைவிட்டுப் பிரிய மனமில்லை" என்று கூறியதும் சுப்பையா பிள்ளையின் விரலைப் பிடித்தாள் மீரஜா…

அடுத்தநாளே மாலினி மீண்டும் கர்ப்பமான நற்செய்தியை, லேடி டாக்டர் வாழ்த்தோடு கூறினார்.
வீடு மறுபடியும் சந்தோசக் கடலில் மூழ்கியது…

தாமரைக்குளம், ஜவுளிக்கடை திறப்புவிழா நெருங்கியது.

முத்துராக்கம்மாள், தனது கணவரிம்,

"மூனு மாசத்துக்கு நீங்கத் தாமரைக்குளத்துல எப்படியாவது சமாளிச்சுக்குங்க… அதுக்கப்புறம் மாலினியால சமாளிச்சுக்க முடியும்… நான் உங்கள்ட்ட வந்துடுறேன்… என்ன நினைக்கிறீங்க?" என்று கேட்டதும்,

"நானும் இதேதான் முத்ரா நினைச்சேன்… எனக்கு ஒன்னும் பிரச்சன இல்ல…" என்று சிரித்தார்.

ஜவுளிக்கடை திறப்புவிழாவிற்கு அனைவரும் தாமரைக்குளம் சென்று, அடுத்த இரண்டு நாள் அங்கே சந்தோசமாகத் தங்கியிருந்தனர்…

செல்வராஜுக்கு லீவு முடிந்ததால், சுப்பையாபிள்ளை தவிர மற்றவர்கள் புன்னைவனம் திரும்பினர்…

மாலினிக்கு ஐந்துமாதம் ஆன நிலையில், கர்ப்பகால அவஸ்களான வாந்தி, தலைசுற்றல் குறைந்தது.

இருந்தாலும் கர்ப்பிணிப் பெண்ணைத் தனியாக விட்டுச் செல்ல மனம் இல்லாமல் முத்துராக்கம்மாள் இருதலைக்கொள்ளி எரும்பாய்த் தவித்தார்.

மீரஜா சுவரைப் பிடித்து நடக்க ஆரம்பித்தாள்…

மீராஜாவின் சேட்டைகளும் ஆரம்பமானது…

மாலினியின் சப்தம் கேட்டு அடுப்படியிலிருந்து விரைந்து வந்த முத்துராக்கம்மாள்,

"என்னாச்சு மாலினி?" என்று கேட்டதும்,

"இவள பாருங்கத்தை அலமாரியில் வச்சிருந்த ஹார்லிக்ஸ் பாட்டில ஒடச்சுட்டா!" என்று சலித்தவாறு பிளாஸ்டிக் முறத்தில் ஹார்விக்சையும், கண்ணாடித்துண்டுகளையும் அள்ளினாள்.

"சரி நீ அடுப்புல இருக்குற குழம்பப் பார்த்துக்க… நான் இத சுத்தம் பண்ணிடுறேன். கண்ணாடிச் சில்லு கைல பட்டுறப் போகுது… வயித்துப்பிள்ளக்காரிக்கு ரெத்த காயம் படக் கூடாது…" என்று கூறியபடி முறத்தை வாங்கினார்.

மீரஜாவை முறைத்தபடியே மாலினி அறையை விட்டு வெளியேற, மீரஜா தவழ்ந்து சென்று முத்துராக்கம்மாளின் அருகில் அமர்ந்துகொண்டு மாலினியை பாவமாகப் பார்த்தாள்.

அடுத்தநாள், சந்தையிலிருந்து செல்வராஜ் வாங்கிவந்திருந்த காய்கறிகளை மாலினி எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

மீராஜா தவழ்ந்து காய்கறி ஒவ்வொன்றையும் எடுத்துக் கடிக்க முற்பட,

"பச்சையா சாப்பிடக் கூடாது.' என்று கூறி மீரஜாவின் கையிலிருந்து உருளைக்கிழங்கைப் பறித்து மூங்கில் கூடையில் போட்டுக் கொண்டுபோய் வைத்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தவளுக்குக் கோபம் தலைக்கேறியது.
"இவ்ளூண்டா இருந்துக்கிட்டு என்ன பண்ணி வச்சிருக்க மீரா?" என்று மாலினி அதட்ட, முத்துராக்கம்மாள் ஓடிச் சென்று பார்த்தவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது…

கூடையில் இருந்த தக்காளிப்பழத்தைக் கீழே தள்ளி, அதில் காலை வைத்துத் தக்காளிப்பழங்களின் மீதே விழுந்து, எழ முடியாமல் வழுக்கி, அம்மாவின் அதட்டலைக் கேட்டு எழுந்து உட்கார்ந்த மீரஜா, தன் அப்பத்தாவைப் பார்த்ததும், தட்டுத்தடுமாறி மீண்டும் தக்காளிப் பழத்தின் மீதே தவழ்ந்து வழுக்கி, சமாளித்து முத்துராக்கம்மாள் அருகில் சென்று அமர்ந்து கொண்டு மாலினியைப் பார்த்தாள்…

"நான் மீராவ அடுப்படிக்குத் தூக்கிட்டு போறேன்!" என்று சிரித்தபடி முத்துராக்கம்மாள் நகர,

"இவ்வளவு தக்காளிய நாசம் பண்ணெருக்கா. இவங்க என்ன சிரிச்சுட்டு போறாங்க?" என்று ஆச்சரியப்பட்டாள்.

அடுத்த நாள், செல்வராஜ் சாப்பிடும்போது அருகிலிருந்த தண்ணீர் டம்ளரை, மீரஜா எடுக்க நினைத்து, கை வழுக்கித் தண்ணீர் முழுவதும், செல்வராஜ் சாப்பாட்டிலேயே கொட்டிவிட்டது.

செல்வராஜ் பள்ளிக்குச் செல்வதற்கான அரிபறியில் இருந்த மாலினி, மீரஜாவின் முதுகில் ஒரு அடி வைக்க,

அதிர்ந்து நின்றனர் முத்துராக்கம்மாளும், செல்வராஜும்.

"உனக்கென்னாச்சு? ஏன் குழந்தைய அடிச்ச? வேணும்னேவா பண்ணா? ச்சே…" என்று கையை உதறியவன், வாஷ்பேசினில் கையைக்கழுவ,
"சாப்பிட்டு போ ய்யா! அம்மா வேற தட்டுல இட்லி எடுத்துட்டு வர்றேன்." என்று முத்துராக்கம்மாள் கூற,

"எனக்கு நேரமாச்சு ம்மா… நான் கிளம்புறேன்..." என்று கோபமாகக் கிளம்பியவனைப் பார்த்த மாலினிக்கு அந்தக் கோபமும் மீரஜா மேல் திரும்ப,

மீரஜா தவழ்ந்து சென்று முத்துராக்கம்மாள் காலடியில் அமர்ந்து கொண்டு மாவினியைப் பார்த்தாள்.

மாமியாரிடம் தஞ்சம் புகுந்த மகளை ஒன்றும் சொல்லமுடியாமல், முறைத்துக் கொண்டே புழக்கடைப்பக்கம் சென்றாள்…

இதுவே அடிக்கடி தொடர, ஒரு நாள் மாலை, பள்ளியிலிருந்து வந்த செல்வராஜின் அறைக்குச் சென்ற முத்துராக்கம்மாள்,

"ராசு... அம்மா ஒன்னு சொல்லனும்!" என்று தன்னிடம் பேசத் தயங்கி நிற்கும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்த செல்வராஜ்,

"சொல்லுங்கம்மா…" என்றதும்,

"வந்து… மாலினி மசக்கையா இருக்கிறதால, மனசும் உடம்பும் கொஞ்சம் படுத்தும்… நம்ம மீரா ரொம்பத் துறுதுறுன்னு இருக்கா… கையிலிருக்கும் பிள்ளையையும், வயித்திலிருக்கும் பிள்ளையையும் ஒரே நேரத்தில் சமாளிக்கிறது கஷ்டம்தான்… அதனால…"

"அதனால?"

"வந்து..."

"நானே உங்கட்ட இது விசயமா பேச நினைச்சேன் ம்மா… எனக்கும் மாலினியின் கஷ்டம் புரியுது… நீங்கத் தாமரைக்குளத்துக்குப் போகயில மீராவையும் கூட்டிட்டுப் போயிடுங்க. அடுத்தக் குழந்தை பிறக்கும் வரையாவது மீரா உங்கள்ட்ட இருக்கட்டும்* என்றதும் சந்தோசத்தில் முத்துராக்கம்மாளின் கண்கள் கலங்க,

இந்த விசயத்தைத் தாமரைக்குளத்தில் இருக்கும் சுப்பையாபிள்ளைக்கு ஃபோனில் தெரிவித்தார்.

ஃபோன் ரிசீவரைக் கூட வைக்காமல், சிவனடியார் கூறியதையும், நடந்த சம்பவங்களையும் சேர்த்துப் பார்க்கலானார்.

இது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. என்பதைப் போல ஏதார்த்தமாக நடந்ததா? அல்லது?!!' என்று கையிலிருந்த ரீசீவரைப் பார்த்தவாறே சிந்திக்க ஆரம்பித்தார்…

இராமேஸ்வரத்தில் இருக்கும் மாதவன் மீராவைப் பார்த்துச் சிரிக்க, மீராவும் கைதட்டி சிரித்துக் கொண்டாள்.

குடவரையில் இருப்பவர், யோக நிஷ்டையிலிருந்து, கண்களைத் திறந்து மீராவின் சந்தோசத்தைப் பார்த்தார்.

"வெற்றிக் களிப்பில் இருக்கும் உனக்கு, நடந்த சம்பவங்கள் புரியாது மீரா… புரியும்போது..." என்று நிறுத்திவிட்டு சிரித்தார்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1156

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Shailaputri R

Well-known member
டேய் Husband (குட்டி கண்ணன் ) and wife (மீரா) சேர்ந்து அந்த v2ல விளையாண்டுட்டு இருக்கிங்களா.. எல்லாம் இறை சித்தம்.. ஆனாலும் மீரா குட்டி பயங்கர சேட்டை தான்.. மீராக்கும் தாத்தா - பாடிக்கும் உள்ள relation ரொம்ப அழகா இருக்கு..
 

Sspriya

Well-known member
மீரா ஓட சேட்டை அடி தூள் 💞💞💞😍😍... தாத்தா பாட்டி னா வே செல்லம்.. இதுல ஆசை பேத்தி அப்புறம் சொல்லவா வேணும்... சிவனடியார் சொன்ன 3முறை ல ஒன்னு ஓவர்... Next 🙄🤔
 

Sspriya

Well-known member
Todays punchu 😍💞

ராமேஸ்வரத்தில் வேண்டிய பலனாக வரமாய் கிடைத்த பிள்ளை மீரா குட்டி

அவளுக்கு அதிகமா செல்லம் குடுத்து சேட்டை செய்ய வைக்குறாங்க அவளின் தாத்தா பாட்டி 😍💞💞💞
 

Mohanapriya Ayyappan

Active member
சூப்பர் ❤️😍👌
கண்ணா பண்றது ஒன்னும் சரியில்லை
உன் ஜோடி உன்ன மாதிரியே குறும்பா யார் சமாளிக்குறது.
நீரஜா❤️👌
 
Top