கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-31

meerajovis

Moderator
Staff member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-31

கண்டீரவன்!

"கண்டீரவன் ஓகேயா டாலி?" என்று கேட்ட மீரஜாவை விநோத ஜந்துவைப் பார்ப்பது போல் பார்த்தாள் டாலி செல்சியா.

"இதென்ன பார்வை? பேர் பிடிக்கலையா?"

"எந்தப் பேரோ வச்சுக்க. ஆனா மனசுல நிக்கிற மாதிரிகூட வேண்டாம். அட்லீஸ்ட் ஓரு பேர் மாதிரியாவது இருக்க வேண்டாமா?"

"ஏன்? கண்டீரவனுக்கென்ன?"

"பேர் மாதிரியா இருக்கு? ‘கண்டீரா அவனை?’னு யார்கிட்டயோ கேட்கிற மாதிரி இருக்கு."

"உனக்கு அப்படித்தான் இருக்கும். நான் தானே அவரை நேர்ல பார்த்தவ.”

“எங்க பார்த்த? சந்திச்சேன்னு சொல்லு. சரி! போகட்டும். இந்தப் பேரை அவருக்கு ஏன் வச்சேன்னாவது தெரிஞ்சுக்கலாமா?”
“ம்ம்… அவரோட குரல் எப்படி இருந்துச்சுத் தெரியுமா? அவருடைய குரலுக்கே அத்தனை கம்பீரம்னா? அவர் எப்டி இருப்பார்? அப்போ, அவருக்கேத்த பேரா இருக்கவேண்டாமா?

"ஏன்? 'ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்டன்னு' பேர் வச்சிருக்க வேண்டியதுதானே?"

"சே...ச்சே! அது பழய பேரு"

"அப்போ இது மட்டும் மாடர்ன் நேம் மா?"

"கண்டீரவன்' சொல்லும்போதே முதுகெலும்பு நிமிருதுல?"

"எனக்கு அப்டித் தெரியல"

"பரவாயில்ல! எனக்குப் பிடிச்சிருக்கு."

"பா...வம்! அவருக்குப் பிடிக்கனுமே?"

"எனக்குப் பிடிச்சா அவருக்கும் பிடிக்கும்." என்றதும் மீண்டும் கண்கூசும் வெளிச்சத்துடன் இடி முழங்கியது‌!

சலிப்புடன் வானத்தை நிமிர்ந்து பார்த்த டாலி செல்சியா,
"வானத்தப் பார்த்தா இந்த ஜென்மத்துல மழை வர்ற மாதிரித் தெரியல… ஆனா இடியும் மின்னலும் மட்டும் இங்க என்ன பண்ணுது?… அப்பப் புடிச்சு ‘டமார்!’ ‘டுமார்!’னு கிட்டு" என்று வானத்தைப் பார்த்துப் பேசிய டாலியிடம்,

"கண்டீரவரைப் பார்க்க ஏதாவது ஐடியா குடு டாலி?"

"நீ முடிவே பண்ணிட்டியா? நிஜமாவே இதுதான் பேரா? எங்கிருந்து புடிச்ச இந்தப் பேர?"

“அதுவா? நான் தங்கியிருந்த ஹாஸ்டல் பொண்ணுங்க மார்கழி நோன்பு வைக்கும்போது விடிகாலைல பக்கத்துல இருந்த பெருமாள் கோயிலுக்குப் போவாங்க… அவங்களோட ஒருநாள் நான் போனப்ப கதாகலட்சேபம் நடந்துச்சு. அங்கதான் இந்தப் பேர் சொன்னாங்க."

"பெருமாள் பேரா அது? நான் கேள்விப்பட்டதில்லையே?"

"நீ பைபிள்ல தேடினா எப்படிக் கிடைக்கும்?"

"என் பேரு ராதான்னு தெரிஞ்சபிறகு நான் கண்ணனைப் பத்தித் தெரிஞ்சுக்க நிறைய புத்தகங்கள் படிச்சேன்பா… அதுல
இந்தப் பேர் வந்ததில்லையே?"

"ஹேய்! என்ன சொல்ற?" என்று மீரஜா ஆச்சர்யமாகக் கேட்கும்போது அறைக்குள் வந்த டாலியின் அம்மா,

"வாங்கடா சாப்பிடலாம்!" என்றழைக்க,

"நீங்க போங்கம்மா இதோ வர்றோம்" என்ற டாலியை,

அவளுடைய அம்மா குறும்பாகப் பார்த்தவாறு,

"இன்னைக்கு வொய்ட் சாஸ் சிக்கனும், பெப்பர் சிக்கனும் பண்ணீருக்கேன்…" என்று கூறிவிட்டு அறைக்கதவை நெருங்கும்முன்,

டாலிசெல்சியா, மீரஜாவையும் இழுத்துக் கொண்டு, டைனிங் ரூம் வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக்கொண்டிருந்தாள்.

வீட்டிற்குள் நுழையும் பொழுதே அப்பாவின் கோபக் குரல் வாசல்வரை கேட்டது மீரஜாவிற்கு,

'நான் டாலி வீட்டுக்குக் கிளம்பும் போதுகூட நல்லாதானே இருந்தாங்க… எவன் வந்து எங்கப்பா மூடைக் கெடுத்தான்னு தெரியலையே?' என்று எண்ணியபடி திண்ணைக்கு வந்து கீழ் வீட்டிலிருக்கும் அப்பத்தாவைப் பார்க்கச் சென்றாள்.

வரவேற்பறைக்குள் மீரஜா வந்ததும், “அத்தை மீரா வந்துட்டா” என்று பவானி பதட்டமாகக் கூற,

அப்பத்தா வேகமாக மீரஜா அருகில் வந்து அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு, பின்கட்டில் இருக்கும் சமையலைறைக்குக் கிட்டத்தட்ட இழுத்துச் சென்றார்.

"என்னப்பத்தா? ஏதாவது ஸ்பெசல் ஐட்டம் செஞ்சிருக்கீங்களா?" என்று சிரித்தபடி மீரஜா கேட்க,

"நீ செஞ்சிருக்கிறதே பத்தாதா? நான் வேற செய்யனுமா?" என்று கூறியபடி சமையலறைக்குள் சென்று கதவைத் தாளிட்டார்.

அப்பொழுது தான் அப்பத்தாவின் முகம் அழுது சிவந்திருப்பதைக் கண்ட மீரஜா,

'இந்த அப்பா, அம்மா பேச்ச நம்பி அப்பத்தாகூடச் சண்டை போட்டுட்டாரோ?' என்று வருந்தி கவலையாகப் பார்க்க,

"இங்கபாரு! அப்பத்தா கேட்கிறதுக்கு உண்மை சொல்லனும் புரியுதா?" என்று ஆரம்பிக்க,

‘ஆகா! அம்மா என்னைக் கோர்த்து விட்டுட்டாங்க போலயே?’ என்று நினைத்தபடி,

"உங்கள்ட்ட நான் எப்பப் பொய் சொல்லீருக்கேன்?" என்று புன்னகைத்தவளிடம்,

"விளையாட்டா பேசுறத நிறுத்து மீராமா… உன் அப்பன் ரொம்பக் கோபமா இருக்கான்."

"எதுக்கு?" என்று இயல்பாகக் கேட்டவளின் முகத்தை ஒரு நிமிடம் யோசனையுடன் பார்த்தவர்,

"நீ மறுபடியும் அந்த நந்தனைப் பார்த்தியா?" என்று கேட்க,

"நந்தனா? இங்க வந்தானா அப்பத்தா? நான் பார்க்கலையே?" என்றவள்,

'நந்தனைத்தான் தற்போது அப்பா திட்டுறாரோ?' என்று பயந்து,

"அவன் மாடில இருக்கானா?" என்று கேட்ட மீரஜாவின் பதட்டம்,

'இவ நந்தனை பார்த்தாளா? இல்லையா?' என்று தோன்றவைக்க,

"நான் கேட்டதுக்கு ஆமா, இல்லை ரெண்டுல ஏதாவது ஒன்னு சொல்லு போதும்?" என்றார் கறாராக.

"நிஜமா இல்லப்பத்தா!" என்றாள்.

"அப்டீனா… ம்ம்ம்… நீ படிச்ச காலேஜ்ல ஆம்பளப் பசங்களும் படிச்சாங்கதானே?"

"ஆமா!"

"அவங்கள்ல யாரையாவது இங்க பார்த்தியா?"

"அவங்க எல்லாருமே வடமாநிலத்த சேர்ந்தவங்க அப்பத்தா… அவங்கள எப்டி நான் இங்க பார்க்க முடியும்?"

"நீ எவனையாவது… வரச்சொன்னியா?" என்று மிகவும் தயங்கி அப்பத்தா கவலையுடன் கேட்க,

"இங்க பாருங்கப்பத்தா, எதா இருந்தாலும் நேரா கேளுங்க… நான் யாரையும் வரச்சொல்லல… யாரையும் பார்க்கல"

"நிஜமாவா மீரா?"

"ஆமா அப்பத்தா! இதுல எதுக்குப் பொய் சொல்லப் போறேன்?"

"கடவுளே! வெகுளியா பேசுறாளா? என்னன்னு தெரியலையே!" என்று, மேலே பார்த்துப் புலம்பிவிட்டு,

"மீராமா நீ இப்ப பெரிய பொண்ணு… படிக்கிற இடத்துல பசங்கட்ட பேசாம இருக்க முடியாது. ஒத்துக்கிறேன்… ஆனா..."

"ஆனா?"

"அவங்க ஃபிரண்ட்ஸ்சிப்லாம் படிக்கிற இடத்தோட விட்டுடனும்"

"நான் தான் யாரையும் கூட்டிட்டு வரலைங்கிறேன்ல… என்னை நம்பலையா அப்பத்தா!"

"இந்த உலகத்துல உன்னை நம்பாம வேற யார நம்பப்போறேன்… கிறுக்குப் பயபுள்ள வெவரம் தெரியாம எந்த வினையையும் இழுத்துவிட்றக் கூடாதுல்ல?"

"புரியல"

"உடைச்சுப் பேசிடுறேன்… இனிமே நீ ஆம்பளப் பசங்க கூடத் தனியா பேசினா, அத இந்த ஊரும் உலகமும் தப்பாதான் பார்க்கும்… அது என்னக் கருமமோ தெரியல. ஒரு ஆணுக்கும் பொண்ணுக்கும் சாதாரணமா பேச எதுவுமே இல்லையா? ஆனா அதெல்லாம் நாம புரியவைக்க முடியாது."

"நீங்க சொல்றது புரியுது… ஆனா நான் தான் யாரையும் பார்க்கலையே!"

"நேத்து நம்ம மொட்டமாடில நீ யாரோ ஆம்பளப்பையன்ட்ட பேசினதா உங்கப்பன்ட்ட யாரோ சொல்லீருக்கானுங்களே மீரா!" என்றதும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளானாள் மீரஜா,

'அந்த முனிவரையா சொல்றாங்க? அவர் என் கண்ணுக்கே தெளிவாத் தெரியலையே? அப்படியே இருந்தாலும் மாடி இருட்டால இருந்துச்சு… மங்கிப்போன தெருலைட் வெளிச்சத்துல, பக்கத்து வீட்டு மாடிலருந்து பார்க்க வாய்ப்பே இல்லையே?' என்று யோசித்த மீரஜாவின் முகப்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பத்தா,

"என்ன மீரா திருதிருன்னு முழிக்கிற? யாரையாவது பார்த்துத் தொலச்சிட்டியா?" என்று கேட்டதும் சுதாரித்தவள்,

"யாரு இந்த மாதிரிலாம் போட்டுக் குடுக்கிறதுன்னு யோசிக்கிறேன் அப்பத்தா!"

"போட்டுக்குடுக்கிறதா?!! நீ யாரையாவது பார்த்தாலும் போட்டுக்கொடுப்பாங்கன்னு ஒரு அர்த்தம் வருது... ஒழுங்கா பேசமாட்டியா? "

"யார? எப்பப் பார்த்தாங்களாம்?"

"இதெல்லாம் உங்கப்பன்ட்ட கேட்கிற மாதிரியா இருக்கான்? சரி!... இங்கயே உக்கார்துக்க. தாத்தா வரட்டும். என்ன ஏதுன்னு விசாரிப்போம்."

"என்னன்னே தெரியாம எதுக்கு ஒழியனும்? நான் போய்க் கேட்கிறேன்."

"சும்மா இருக்க மாட்டியா மீரா! அந்தக் கத்து, கத்திட்டிருக்கான்… நானே கொலநடுங்கிப் போய் உக்கார்ந்திருக்கேன்… சொன்னாக் கேளு… இங்கயே இரு… நான் ஹாலுக்குப் போறேன்… தாத்தா வந்ததும் வர்றேன். புரியுதா?" என்று கூறிவிட்டு சேலை முந்தானையால் முகம், கழுத்தைத் துடைத்துக்கொண்டே சமையலறையை விட்டு வெளியேறி, தனது பேத்தியைப் பரிதாபமாகப் பார்த்துக் கலங்கி, கதவைச் சாத்திவிட்டுச் சென்றார்.

மீராவால் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை…

'அந்த முனிவரத் தவிர வேற யாரையும் நான் பார்த்துப் பேசல… பின்ன எப்படி?' என்று நினைத்துக் கொண்டிருந்த போதே,

சமையலறை கதவு படீரெனத் திறக்க,

தூக்கிவாரிப் போட்டு நிமிர்வதற்குள் செல்வராஜ் உள்ளே வந்து மீரஜாவை அடிக்க ஆரம்பித்தது விட்டான்.

"யப்பா! பிள்ளைட்ட என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேட்கிறியா? எவனோ சொல்றதக் கேட்டுக்கிட்டு இந்த அடி அடிக்கிறியே?" என்று அப்பத்தா பதற,

"அம்மா நீங்க பேசாமப் போறீங்களா இல்லையா? நீங்களும் ஐயாவும் கொடுக்கிற செல்லம்தான இதுக்கெல்லாம் காரணம்." என்று எகிறிய செல்வராஜிடம்,

"எதுவா வேணும்னாலும் இருக்கட்டும்… மீரா வயசுப்பிள்ள. இந்த அடி அடிக்கலாமாய்யா? நம்ம பிள்ள என்னதான் சொல்றான்னு கேட்கமாட்டியா? ஊர்ல இருக்கிற கபோதிப்பய பேச்சக் கேட்டுக்கிட்டு பிள்ளைய அடிப்பியா?"

"தப்பு பண்ணலைனா எதுக்கு ஒழிச்சு வைக்கிறீங்க?"

"தப்பா? நம்ம பிள்ளைய நம்மளே இப்படிப் பேசலாமா? அவட்ட ஒரு தடவ கேட்க மாட்டியா?"

"எதுக்குக் கேட்கனும்?"

"ராசு, ஐயா வர்றவரை பொறு… என்ன நடந்துச்சுன்னு கேட்போம்."

"ஆமா! அப்படியே உண்மைய சொல்லிடப் போறா பாருங்க!"

"நீயே அப்படிச் சொன்னா எப்படி? மீரா உங்கிட்ட எதுக்குப் பொய் சொல்லனும்?" என்று கூறியும் செல்வாராஜ் மீரஜாவை அடிக்க,

"இப்ப அடிக்கிறத நிறுத்துறியா… இல்லயா?..." என்று குரலை அப்பத்தா உயர்த்த,

"இல்லைனா என்ன செய்வீங்க? அதயும் சொல்லிடுங்க..‌. என்னைய அடிப்பீங்களா?"

"அடிக்கிறதாவது… உங்கிட்ட நியாயம் பேசுற நிலமைல கூட நீ என்னை வச்சிருக்கலையே…" என்று வேதனையுடன் புலம்பும் பொழுதே அங்கே வந்த சுப்பையா பிள்ளை,

"இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க எல்லாரும்? தெரு சனமே வீட்டு வாசல்ல நின்னு வேடிக்கை பார்த்துக் கிட்டிருக்கிற மாதிரி…" என்று பேசியவர் கண்களில்

தலையெல்லாம் கலைந்து, கன்னம் இரண்டிலும் கை தடம் பதிந்ததால் சிவந்து தெரிய, சுடிதார் கிழிந்து அமர்ந்திருந்த தனதருமைப் பேத்தியின் கோலம் கண்டு நெஞ்சைப் பிடித்துவிட்டார்.

எல்லோரும் பதறித் தாத்தாவை நெருங்க,

"தள்ளிப்போங்க எல்லாரும்… என் பேத்திய அடிக்கும்போது என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?" என்று கோபமாகக் கேட்டவருக்குத் தண்ணீர் கொண்டுவந்து பவானி கொடுக்க,

ஓங்கித் தட்டிவிட்டதில் பித்தளைச் சேம்பு தூரத்தில் விழுந்து நசுங்கியது.

சுப்பையா பிள்ளை, சப்தமாகக் கூடப் பேசியறியாத ஒட்டுமொத்தக் குடும்பமும் ஸ்தம்பித்து நிற்க,

"முத்ரா, பிள்ளைய எழுப்பி என் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ!" என்று ஆணையிட்டார்.

"ஐயா! அவ நம்ம மானத்த வாங்கிட்டாய்யா!" என்ற செல்வராஜை உக்கிரமாகப் பார்த்து,

"மானத்த வாங்கினது மீராவா? நீயா? எதுவா இருந்தாலும் மீராவ இப்டி அடிக்க உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு?"

"மாமா! மீரா…" என்று ஆரம்பித்த மாலதியை கண்கள் சிவக்கத் திரும்பித்தான் பார்த்தார்‌.

அவ்வளவுதான் மாலதியின் திருவாய் தானாக மூடிக்கொண்டது.

வேகமாக உள்ளே வந்த அப்பத்தா அழுதுகொண்டே,

தனது பேத்தியின் தலையைக் கொதிவிட்டபடி அழ,

பவானி ஒரு துண்டை எடுத்து வந்து போர்த்திவிட்டு மீரஜாவின் கையைப் பிடித்துத் தூக்கிவிட,

எழுந்து நின்ற மீரா முகமெல்லாம் கண்ணீர் வழிய தனது தாத்தாவைப் பார்த்தாள்.

தன் பேத்தியின் பார்வையும், கண்ணிரும் தன்னை உயிரோடு வதைக்க,

"யாரும் எங்ககூட வர வேண்டாம்…” என்று பொதுவாகக் கூறிவிட்டு,

அப்பத்தாவிடம், “முத்ரா! பிள்ளைக்குக் குடிக்க எதாவது எடுத்துட்டு வா." என்று கூறி நடந்தவர்,

"எந்த அளவுக்குப் பிள்ள பயந்திருந்தா, தன் வீட்டிலேயே வந்து ஒழிஞ்சிக்கிட்டிருந்திருப்பா… நம்மளப் பார்த்துப் பயப்படுறவங்கட்ட காட்டுறது வீரமில்ல… அப்பனாவே இருந்தாலும் தோளுக்குமேல வளர்ந்த பொண்ண கை நீட்டுறது நல்லதில்ல." என்று உறுமிவிட்டு,

மீரஜாவின் கையைப் பிடித்துத் தனதறையை நோக்கிச் சென்றவர், அப்படியே நின்று,

"இந்த வீட்டோட இளவரசி என் பேத்தி, இனி இவ மேல யார் கை பட்டாலும் அவங்களுக்கு என் சொத்துல சல்லிக்காசு தரமாட்டேன்!" என்று எச்சரித்துவிட்டு தனதறைக்குள் சென்று அங்கிருந்த ஷோபாவில் மீரஜாவை அமர வைத்து ஃபேனை ஆன் செய்தவர்,

"இங்கயே இருடா… இதோ வர்றேன்" என்று கூறி மீரஜாவிற்குத் தனிமை ஏற்படுத்தித் தந்துவிட்டு ஹாலுக்குச் சென்று அமர்ந்தார்.

கையில் மோருடன் வந்த அப்பத்தா, "பிள்ளைய தனியா விட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்களே" என்றதும்,

"மீரா என் பேத்தி… ரெத்ததுலயே தைரியம் இருக்கும். முதல்ல அவளே அவள அசுவாசப்படுத்திக்கட்டும்… இன்னைக்கு யாரும் எதுவும் அவட்ட கேட்க வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்" என்றார் தாத்தா,

அவரிடம் ஆமோதிப்பாய் தலையசைத்துவிட்டு தாத்தாவின் அறைக்குள் சென்ற அப்பத்தா,

தனது பேத்தியை அணைத்து அவளுடைய விசும்பலை நிறுத்தி, கையோடு கொண்டு வந்த மோரைப் பருகச்செய்தார்.

மீராவின் கைகள் மற்றும் முகமெல்லாம் சிவந்திருக்க,

"என் பிள்ளைய இப்படி அடிவாங்கிக் கொடுத்தவங்க யாரா இருந்தாலும் நல்லாருக்க மாட்டாங்க" என்று கண்ணீர் விட,

அப்பத்தாவின் மொழி கேட்டுத் தாத்தாவிற்கு நெஞ்சமெல்லாம் பிசைந்தது…

ஆனால், அதைக் கேட்டு, அதே வீட்டில் இருந்த ஒரு ஜீவன் மட்டும் அசால்ட்டாகத் தலையைச் சிலுப்பிவிட்டுச் செல்ல,

"உன் சுயரூபத்தை என் மீரா அறியும் வரைதான் உன் வாழ்வு… அதற்குப் பிறகு பார்! நான் யாரென்று உனக்குக் காட்டுகிறேன்… மீரா என் சுவாசமானவள்… அவளைத் துன்புறுத்துபவர்களை ஒருநாளும் மன்னிக்கமாட்டேன்…" என்று குகையிலிருந்து கண்கள் நெருப்பைக் கக்கியவாறு கர்ஜித்தார் கண்டீரவர்!

நாமும் அவரைக் கண்டீரவர் என்றே அழைப்போமே… அவர் யாரென்று அறியும் வரை…

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 
Top