கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-4

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-4

மீரஜாவை சுப்பையாபிள்ளையும் முத்துராக்கம்மாளும் கூட்டிக்கொண்டு மதுரைக்கு அருகில் உள்ள தாமரைக்குளம் என்ற கிராமத்தில் குடியேறினர்.

மீரஜா மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்… அவள்மேல் அன்பு மழையைப்பொழிந்தனர் மீரஜாவின் அப்பத்தா முத்துராக்கம்மாளும், தாத்தா சுப்பையாபிள்ளையும்.

மீரஜா வளர வளர அவளுடைய குறும்புகளும் சேர்ந்து வளர்ந்தன…

காலையிலிருந்து இரவுவரை மீரஜாவை கட்டிமேய்க்கவே சுப்பையா பிள்ளைக்கும் முத்துராக்கம்மாவிற்கும் நேரம் சரியாக இருந்தது…

தாத்தா ஜவுளிக்கடைக்குப் சென்றபிறகு, அப்பத்தாவை ஏமாற்றி மாடிப்படிகளில் ஏறி மாடிக்குச் சென்றாள். ஆனால் ஏறும்பொழுது கவனமாக ஏறியவளுக்கு, இறங்கும்பொழுது, கீழிருக்கும் அடுத்தப் படியில் கால் பதிப்பதிப்பதில் ஏற்பட்ட கவனப்பிசகால் மாடிப்படிகளில் உருள, சட்டென்று படிகள் பஞ்சுப்பொதிகள் ஆயின… அதனால் ஒரு முறைகூடச் சின்னச் சிராய்ப்பு கூட இருக்காது மீரஜாவிற்கு. இவ்வாறே தினமும் அப்பத்தாவை ஏமாற்றி மாடிக்குச் செல்வதும், இறங்கும்பொழுது உருண்டபடியே வீட்டின் கீழ்தளத்திற்கு வருவதும் மீரஜாவிற்கு வழக்கமாகியது.

இதை அறியாமல், 'பிள்ளை விழுந்து விட்டாளே, அடிபட்டுவிட்டதோ?' என்று முத்துராக்கம்மாள் பதற, அதைப் பார்த்த மீரஜா தனது அப்பத்தாவிற்குதான் ஏதோ பிரச்சனை என்று நினைத்து, அவரை அணைத்து தட்டிக் கொடுப்பாள்.

மீரஜா தனது ஒன்றரை வயதை எட்டும்பொழுது, செல்வராஜனுக்கு மீண்டும் ஒரு பெண்குழந்தை பிறந்தது.

குழந்தையைப் பார்க்க, தாத்தா, அப்பத்தா, பேத்தி மூவரும் புன்னைவனம் சென்றார்கள்.

பிறந்த குழந்தையையும், மாலினியையும் ஆசையாக மீரஜா நெருங்கும்பொழுது,

"பாப்பா பக்கத்துல வராத… அம்மாவ தொந்தரவு பண்ணாம அப்பத்தாட்ட போய் விளையாடு!" என்று மாலினியின் அம்மா மனோகரி தடுத்தார்.

செய்யாதே! எனும் போதுதானே மீரஜாவிற்கு அந்த விசயத்தின் மீது ஆர்வம் பிறக்கும்!

மாலினியின் அம்மா இல்லாத சமயங்களில் அறைக்குள் சென்று, தனது தங்கையின் கைகளை, கன்னத்தை ஆச்சரியமாகத் தொட்டுப்பார்ப்பாள்.

மாலினியின் மடியில் குழந்தை இருந்தால், "நானு… நானு…” என்று தன்னையும் மடியில் தூக்கி வைத்துக் கொள்ளச்சொல்லி கேட்பாள்.

மாலினியும் பிறந்த குழந்தையைப் படுக்கையில் கிடத்தி விட்டு, மீரஜாவை மடியில் வைத்துக் கொஞ்சுவாள். உடனே திருப்தியாகிவிடும் மீரஜா, ஐந்து நிமிடம் கூடத் தன் அம்மாவின் மடியில் இருக்காமல், தானாகவே இறங்கிச் சென்றுவிடுவாள்.

"அடுத்தக் குழந்தை பிறந்தால் முதல் குழந்தைக்குச் `சவலை பாயும்` என்பார்கள்… அதனால் தான் இப்படிச் செய்கிறாள்… மீரா உன்னைத் தொந்தரவு செய்தால் என்னைக் கூப்பிடு" என்று மாமியார் கூற,

அதே சமயம், "மீராவுக்குச் செல்லம் அதிகம் கொடுக்கிறார்கள்… நீயும் அவள் சொல்வதையெல்லாம் செய்து, அவளைக் கெடுத்துவிடாதே!" என்றார் மாலினியின் அம்மா மனோகரி.

இரண்டாவது பெண் குழந்தைக்கும் புரோகிதரை அழைத்துப் புண்ணியானம் செய்து, சந்தோஷி என்று பெயர் வைத்தனர்.

சந்தோஷி பிறந்து மூன்று மாதம் ஆனபொழுது, பொங்கல் திருநாள் வந்தது.
பொங்கல் திருநாள் கொண்டாட சுப்பையா பிள்ளையும், முத்துராக்கம்மாளும் மீரஜாவுடன் புன்னைவனம் வந்தனர்…

அதிகாலையில் எழுந்து பொங்கல் வைப்பதை முத்துராக்கம்மாளும், மாலினியும், செல்வராஜும் கவனிக்க, குழந்தைகள் இருவரையும் சுப்பையாபிள்ளை கவனித்துக் கொண்டார்.

சந்தோஷி, மீரஜாவின் விளையாட்டுக்களை வேடிக்கை பார்த்துச் சிரித்தாளே தவிர, சேட்டைகள் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

அவளுக்கு அணிவித்த வசம்பு, பால்மணிமாலை போன்றவை போட்டபடியே இருந்தது.

அதனால் சுப்பையாபிள்ளைக்குச் சந்தோஷி எந்தவகையிலும் வேலை வைக்கவில்லை… ஆனால் மீரஜா?!!!

ஒரு இடத்தில் நிற்காமல் எதையாவது செய்தவண்ணம் இருக்கவும், “தாத்தா பாவம் இல்லையா? கால் வலிக்குது, பாப்பா பக்கத்துல உட்கார்ந்து விளையாடுவோமா?” என்று சுப்பையாபிள்ளை கேட்டதும், சம்மதித்து அமர்ந்தவளின் உடல் ஓய்வெடுக்க, மூளை சுறுசுறுப்பானது.

பொங்கல் திருநாள் சம்மந்தமான மீரஜாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார் தாத்தா.

"ஏன் அப்பத்தாவும், அம்மாவும் முத்தத்துல சோறாக்குறாங்க"

"இன்னைக்குப் பொங்கல் திருநாள் டாம்மா… அதான் பொங்கல் வைக்கிறாங்க…"

"அதை ஏன் இங்க வைக்கிறாங்க"

"சூரியன் னால தான் நமக்கு அரிசி, காய்கறி கிடைச்சுச்சா, அதான் சூரியனுக்கு நன்றி சொல்றாங்க"

"சூரியனா? அது யாரு?"

"அதோ வானத்துல இருக்கே அதுதான் சூரியன்!" என்று மீரஜாவிற்கு சூரியனை சுப்பையாபிள்ளை காட்ட,

சூரியனையே பார்த்துக் கொண்டிருந்த மீரஜா,

"தாத்தா சும்மா சொல்றீங்க… கடையிலதான காய் வாங்கினீங்க?"

"கடைக்காரனுக்கு, அரிசி, காய் எல்லாம் யார் குடுத்தா?"

"யாரு?"

"விவசாயி! அவரோட வயல்ல அரிசி கிடைக்கச் சூரியன் உதவுச்சு…"

"அப்போ விசாயி (விவசாயி), கடைக்காரருக்குலாம் நன்றி சொல்லலை?"

"அதானே? இனி நாம சொல்லுவோம். சரியா?"

"எப்போ?"

என்று கேள்விகள் தொடர, இந்த சம்பாசனைகளைக் கேட்ட மாலினி, மாமியாரான முத்துராக்கம்மாவிடம்,

"ஆனாலும் மாமாவிற்கு ரொம்பப் பொறுமை அத்தை… இவ என்னவெல்லாம் கேட்கிறா பாருங்க." என்று மாலினி சிரிக்க,

"ஆமாம்மா… இவ கேட்கிற கேள்விக்கெல்லாம் அவரால்தான் பதில் சொல்ல முடியும்" என்று முத்துராக்கம்மாளும் சிரித்தார்.

"அத்தான் பரிட்சை பேப்பரை திருத்திக்கிட்டிருக்கும்போது, நானெல்லாம் பக்கதிலேயே போகமாட்டேன்… நேத்து மீரா, எனக்கும் ஒரு பேப்பரைக் குடுங்கப்பா… பேனா குடுங்கப்பா ன்னு வாங்கி, அத்தான் செய்றதப் பார்த்து டிக் பண்றா… அடிக்கிறா…அத்தானை வேலை செய்யவிடாம வள வள ன்னு பேசிட்டே இருந்தா… ஒரு லெவலுக்கு மேல பொறுமையிழந்த அத்தான், 'எந்திரிச்சு ஓடுறியா? முதுகுல ரெண்டு போடட்டுமா?ங்கிறாங்க, 'முதுவுல என்ன போடுவீங்கப்பான்னு' அதுலயும் சந்தேகம் கேட்டா… இதுக்கு மேல பேசினா நிஜமாவே அடிவாங்கிடப் போறான்னு தூக்கிட்டு வந்துட்டேன்…" என்று நேற்றைய நினைவில் சிரித்தாள் மாலினி.

இவ்வாறு சந்தோசமாகப் பேசிச் சிரித்தவாறு, பொங்கல் செய்து கடவுளுக்குப் படைப்பதற்காக, பூஜையறையில் மாலினி இலையை விரிக்கவும்,

"சாமிக்கு நைவைத்தியம் வச்சா, பூசை செய்றதுக்கு முன்னாடி, மீரா எடுத்துச் சாப்பிட்டுறுவா… அவள கவனிச்சுக்கிட்டிருக்க முடியாது மாலினி… நீ சின்னவளை தூளியிலருந்து தூக்கி படுக்கையில் படுக்கவச்சிட்டு, மீராவ தூளியில போட்டுடு… தூளியிலருந்து இறங்கமாட்டா… நாம நிம்மதியா சாமி கும்பிடலாம்…" என்று முத்துராக்கம்மாள் கூறியதும், மீரஜாவை தோட்டிலில் படுக்கவைத்தாள்.

பூஜையை முடித்து, குடும்பத்தினர் அனைவருக்கும் பிரசாதம் எடுத்துக்கொண்டு, அக்கம்பக்கத்தினருக்கு சர்க்கரை பொங்கலைக் கொடுத்துவிட்டு அமர்ந்தனர்…

அதேபோல் அக்கம்பக்கத்திலிருக்கும் உறவினர்களும், சுப்பையாபிள்ளை வீட்டிற்கும் பொங்கல் கொண்டு வந்து கொடுத்தவண்ணம் இருந்தனர்.

அடுத்தத் தெருவில் இருக்கும் உறவினரான பாலா என்ற இருபது வயது வாலிபன் தங்கள் வீட்டில் செய்த பொங்கலைக் கொண்டு வர, அவனை வரவேற்பதற்காக மாலினி,

"வா ப்பா பாலா!" என்று வரவேற்க,

தூளியில் படுத்துக்கொண்டு தொட்டில் சேலையை விலக்கி வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மீரஜா, மாலினி வரவேற்பதை பார்த்து விட்டுத் தானும்,

"வா ப்பா பாலா!" என்றதும், அனைவரும் ஷாக் காகி பார்க்க, தொட்டிலிலிருந்து மீரஜா குரல் கொடுத்ததில் அனைவரும் அடக்கமுடியாமல் சிரித்தனர்.

"இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை மீரஜா உங்களுடன் இருக்கட்டும்" என்று முன்னர் கூறிய செல்வராஜ் இப்போது, "சந்தோஷி பிறந்து மூன்று மாசமாயிடுச்சு… மீராவ நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்லிடுவானோ?' என்று கலங்கினர் முதிய தம்பதியர்.

ஆனால் அவ்வாறு செல்வராஜோ, மாலினியோ கூறாததால் மீரஜாவை அழைத்துக்கொண்டு தாமரைக்குளத்திற்குத் திரும்பினர்.

மீரஜாவின் இரண்டாம் வயது பிறந்தநாளிற்காகக் காலையில் கோயிலுக்குச் சென்று வந்த அசதியில் மதிய உணவிற்குப் பிறகு, முத்துராக்கம்மாள் சிறிது நேரம் உறங்கினார்.

மாலையில் எழுந்து, வாசல் கூட்டுவதற்காக விளக்குமாறும் வாளியும் எடுக்கச்சென்ற முத்துராக்கம்மாள், விடுவிடுவென்று வீட்டு திண்ணைக்கு வந்தவர், தேமே என்று தாத்தாவுடன் விளையாடிக்கொண்டிருந்த மீராஜாவைப் பிடித்துத் திருப்பி,

"மீரா… அப்பத்தாவை செத்தநேரம் அசந்து தூங்க விடுகிறாயா?" என்று அதட்டினார்.

முத்துராக்கிடமிருந்து பிள்ளையைப் பறித்துத் தன் கைகளுக்குள் அரவணைத்த சுப்பையா பிள்ளை,

"பிள்ளை என்னுடன் விளையாடுறா… அவள ஏன் அதட்டுற?" என்று கேட்டார்.

"உங்க அருமை பேத்தி, வாளியில இருந்த தண்ணீயில துணிதுவைக்கிற சோப்பை போட்டு, அதுல பீரோல அடுக்கி வச்சிருந்த துணிகளை முக்கிட்டா?" என்று கூற,

இரண்டு வயது மீராஜாவை ஆச்சரிமாகப் பார்த்த சுப்பையா பிள்ளை, அவளைத் தூக்கிக்கொண்டு, கொள்ளைபுரத்துக்குச் சென்று வாளியில் ஊறிக் கொண்டிருந்த துணிகளைப் பார்த்து விட்டு, சிரித்தபடியே,

"இதை மீராக்குட்டியா பண்ணு ச்சு?" என்று கேட்டார்.

பெருமையாகத் தலையை நிமிர்த்தி, "ஆமா தாத்தா!" என்றவளை, அப்படியே அள்ளி அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, தன்னை முறைத்துக் கொண்டிருந்த முத்துராக்கம்மாளிடம்,
"குழந்தை எவ்வளவு புத்திசாலி பார்த்தியா? நீ துணி துவைக்கிறதப் பார்த்து, செஞ்சிருக்கா… சொல்லப் போனா நீ மீராக்குட்டியை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்திருக்கனும்…" என்று சிரித்தார்.

"ஏன் சொல்லமாட்டீங்க? இப்ப நான்ல துவைச்ச துணியை மறுபடியும் துவைக்க னும்." என்று சலிக்க,

"நீ போய் வாசல்ல கோலம்போடுற வேலையைப்பாரு. நானும் என் செல்லமும் சேர்ந்து துணியை அலசிக் காயப் போட்டுடுறோம்." என்று கூறிவிட்டு, மீரஜாவையும் துணியைப் பிடித்துக் கொள்ளச்சொல்லி, துணியை அலசி, மீராவை இடது கையில் தூக்கிக்கொண்டு, வலது கையால் இருவரும் சேர்ந்து காயப்போட, வாசலில் கோலம் போட்டு விட்டு வந்த முத்துராக்கம்மாள், தன் பேத்தியைப் பெருமை பொங்க பார்த்தார்.

"என்ன முத்துரா அப்படியே நின்னுட்ட?"

"இரண்டு வயசு குழந்தை இவ… ஆனா பாருங்க நாம செய்யுறத கவனமா பார்த்துச் செய்றா… வேலை செய்யும்போது என்கூடவே திரிவாங்க…"

"ஹாஹ்ஹா…. குழந்தைக்கு, சரி எது? தப்பு எதுன்னு தெரியாது. அதனால நாம ரொம்பக் கவனமா இருக்கனும்… "

"சரிங்க"

அதன் பிறகு பீரோவை பூட்டி சாவியை மீரஜாவிற்கு எட்டாத உயரத்தில் வைத்துவிட்டனர்.
காலையில் அப்பத்தாவுடனேயே எழுந்துவிடும் மீரஜா, வாசலில் அவர் கோலமிடுவதைப் பார்த்து, அந்தக் கோலத்தைச் சுற்றி அவளால் முடிந்த கிறுக்கல்களும் கோலங்களாயின…

ஒரு நாள், வீட்டு வேலையில் புகுந்து சேட்டை செய்யும் மீரஜா, சமத்தாக ஹாலில் பொம்மைகளுடன் பேசி விளையாட, வாசல் கேட் பூட்டியிருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திவிட்டு, சமையல் செய்ய ஆரம்பித்தார்.

சமையலை முடித்து, ஹாலுக்கு முத்துராக்கு வருவதற்கும், சுப்பையா பிள்ளை மதிய உணவுக்காக வீட்டிற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

சுப்பையா பிள்ளைக்குக் கேட் ஐ திறந்து விட்டு, ஹாலுக்கு வந்த முத்துராக்கு, மீராஜாவின் பொம்மைகள், பொம்மைகள் வைக்கும் பெட்டியில் இருப்பதைப் பார்த்தவர், மீரா எங்கே? என்று தேட, வீடு முழுவதும் பார்த்தும் மீரஜாவைக் காணாமல் பயந்து, தன் கணவரிடம் சென்றார்.

"என்னங்க! ஹால்ல விளையாடிக்கிட்டிருந்த மீராவ காணோம்!" என்று பதற்றமாகக் கூறியவரைப் பார்த்து,

"இங்கே தான் எங்காவது இருப்பா!" என்று கூறியவரும் சேர்ந்து தேட, பிள்ளையைக் காணவில்லை.

"நான் வரும்போது கேட் பூட்டிதானே இருந்தது? பிறகு எங்கே போயிருப்பா?" என்று கலக்கத்துடன் சுப்பையாபிள்ளை தெருவில் இருப்போரிடம் விசாரித்தார்.

பயத்தில் அரண்டுபோன முத்துராக்கம்மாள், "அம்மா! கம்பனரியா காமாட்சி! பிள்ளை எங்கேன்னு தெரியலையே… அவளை என் கண்ணுல காட்டு" என்று கடவுளிடம் வேண்டிய படியே மீண்டும் "மீரா! மீரா!" என்றபடி வீடு முழுவதும் தேடினார்.

பிறகு கொள்ளைபுறம் சென்று குரல் கொடுத்தும் மீரஜாவிடமிருந்து எந்தப் பதிலும் வரமல் போகவே, கொள்ளைப் புறத்திலிருந்த தோட்டத்திலும் இறங்கித் தேடினார்.

வெளியே தேடிவிட்டு வந்த சுப்பையாபிள்ளை, "முத்துரா வாசல் கேட்ஐ உள்பக்கமாகப் பூட்டிதானே வச்சிருந்த? அவளுக்குத் தாழ்ப்பாள் எட்டாதே? எங்க போயிருக்கும் பிள்ளை?" என்று கேட்டார்.

"தெரியலையேங்க..." என்று கூறி அழுத முத்துராக்கம்மாவை,

"நீ வேற அழுது என்னைப் பயமுறுத்தாம தேடு!" என்று வருத்தமாகக் கூறியபடி, வீட்டுத் தேவைக்காக, வளர்த்த பசு இருந்த கொட்டகையில் சென்று பார்த்தவரின் கண்கள் கலங்க,

"முத்துரா! முத்துரா~ என்று அழைத்தார். அங்கே பதறியபடி வந்த முத்துராக்கம்மாவிடம் பசு இருந்த இடத்தைக்காட்டினார்.

பசுவுக்கு அருகிலேயே, பசு சாப்பிட வைத்திருந்த புல்லின் மேல் படுத்து நன்கு உறங்கிக் கொண்டிருந்த மீரஜாவின் வாயில் பால் வடிந்து இருந்தது.

மீராவை எழுப்பி, "இங்க வந்து ஏண்டா படுத்திருக்க?" என்று கேட்டார்.

"நான் பொம்மைகூட விளையாடிட்டிருந்தப்போ ஒரு பையன் வந்தான். வா வெளிய போய் விளையாடலாம்னான்… இங்க வந்து விளையாடினோம்… அந்தப் பையனுக்குக் குடிக்கத் தண்ணி வேணும்ன்னு நம்ம மாட்டுகிட்ட பால் குடிச்சான்… அத பார்த்து நானும் குடிச்சனா… தூங்கிட்டேன்…"

"பையனா? அந்தப் பையன் எங்க?" என்று தாத்தா சுற்றிலும் பார்வையால் துழாவியபடி கேட்க,

"தெரியலயே!"

"தெரியலையா? அவன் யார் மீரா?"

"பையன்!" என்ற பதிலில் பயந்துபோன தாத்தா,

"யார் வந்து மீரஜாவுடன் விளையானது முத்துரா?" என்று அப்பத்தாவிடம் கேட்டார்.

"நெஜமா நான் பார்க்கலங்க!"

"யாரோ ஒரு பையன் வீட்டுங்குள்ள வந்ததுகூடத் தெரியாம என்ன பண்ணிட்டிருந்த?" என்று தன் கோபத்தை அடக்கியவராய்க் கேட்க,

முத்துராக்கம்மாவிற்கும் மிகவும் அதிர்ச்சியாக இருக்கவே, மீரஜாவைத் தன் மடியில் அமரவைத்து,

"அந்தப் பையனை நாம எங்க பார்த்தோம்?" என்று கேட்டார்.

"தெரில."

"வாசல் கேட் பூட்டியிருந்துச்சே எப்படி வந்தான்? நீ கதவத் திறந்தியா? உனக்கு எப்படி எட்டுச்சு?" என்று அப்பத்தா கேட்ட எந்தக் கேள்விக்கும் மீரஜாவால் பதில் கூற முடியவில்லை…

"என்னங்க நடந்திருக்கும்? நான் வாசல்ல கேட் மூடியிருந்ததைப் பாத்துட்டுதான அடுப்படிக்குள்ள போனேன்? நீங்க வந்தபிறகும் நான் தானே கேட் ஐத் திறந்துவிட்டேன்." என்று முத்துராக்கம்மாள் குழம்ப,

வீட்டிற்குள் சென்று, சோபாவில் அமர்ந்து, மீரஜாவை மடியில் வைத்துக்கொண்ட தாத்தா,

"இனி அந்தப் பையன பார்த்தா, தாத்தாட்ட, இல்ல... அப்பத்தாட்ட காட்டனும் சரியா?" என்று கேட்க,
"சரி!" என்று பெரிதாய் தலையாட்டினாள் குழந்தை.

"இனிமே யார் கூட விளையாடினாலும் என்னையும், அப்பத்தாவையும் விளையாட்டுல சேர்த்துக்கனும்... நாங்க பாவம்ல?"

"ஆமாமாம்!"

"யாரு கூப்பிடாலும், நானோ அப்பத்தாவோ இல்லாம வீட்டைவிட்டு வெளிய போகாத. ம்ம்ம்? ஏன்னா நாங்க வீட்டுல தனியா இருப்போம்ல பயந்துடுவோம். சரியா? " என்று தாத்தா மீரஜாவிடம் கேட்டார்.

அவள் கண்ணிமைக்காமல் தன் தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"நீங்க சொல்றது மீராவுக்குப் புரியல போலங்க." என்ற அப்பத்தாவிடம்,

"புரியுதோ புரியலையோ, அவ தப்பை நாம சுட்டிக் காட்டினோம்னா, அட்லீஸ்ட் 'தாத்தா செய்யக்கூடாதுன்னு சொன்னாங்களேன்னு தோணிச்சுனாகூடப் போதும். அப்புறம் நீ... இனி என்ன வேலையிருந்தாலும் மீராவ உன் கண்பார்வையில் இருக்கும்படி பார்த்துக்க."

சுப்பையாபிள்ளைக்கும், முத்துராக்குக்கும் பயங்கரமான அதிர்ச்சி!...

"நல்லவேளை நம்ம பசுவுக்கு மீராவை அடையாளம் தெரிஞ்சிருக்கு… ஆனாலும்… போனவாரம் நம்ம பால்காரர் பொண்டாட்டி, அவங்க வீட்டுப் பசுமாட்டுக்குத் தண்ணி காட்டிட்டு இருந்தப்ப, பசுமாடு நகரும்போது தெரியாம, அவரோட பொண்டாட்டி காலை மிதிச்சுடுச்சாம்… கால் கட்டைவிரல் நகமே கலண்டு விழுந்துடுச்சாங்க… அவர் சொன்னத இப்ப நெனச்சாலும் எனக்கு ஈரக்குலையே நடுங்குதுங்க..."

"இனி பின்பக்க கதவையும் பூட்டிவிடுவோம்…" என்றார் மீரஜாவைத் தூக்கிக்கொண்டு தனது அறைக்குச் சென்றபடி.

அப்பத்தா கவலையுடன் மறுபடியும் வாசல் கேட்ஐ போய்ப் பார்த்தார்...

ஒரு மாலைவேளையில் இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தபொழுது அந்த மாவை சாப்பிடக் கேட்ட மீரஜாவிற்கு ஒரு சின்னக் கிண்ணத்தில் கொடுத்துவிட்டு, மாவு அரைத்து முடித்தபின் உப்பு போட்டுக் கரைத்து அடுப்பு மேடைமேல் வைத்துவிட்டு, பூஜையறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கைக் குளிரவைத்துவிட்டு, சிறிது நேரம் டீவி பார்க்கலாம் என்று அமர்ந்தவர்,

"மீரா! மீரா…" என்று அழைத்தும் பதில் வராமல் போகவே,

"ஆஹா… இவ சத்தமில்லாம, வீடு அமைதியாயிருந்தா பெருசா ஏதோ பண்றான்னுல அர்த்தமே!... என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியலையே!" என்று முணுமுணுத்தபடியே ஒவ்வொரு அறையாக மீரஜாவை தேடிக்கொண்டு சென்றவர், அடுப்படிக்குள் நுழைந்து அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.

தலையிலிருந்து கால்வரை இட்லி மாவு அபிஷேகம் செய்யப்பட்டு, கண்ணைத் திறப்பதற்காக முயற்சி செய்துகொண்டிருந்தாள் மீரஜா.

"மீரா…. என்னை அஞ்சு நிமிஷம் உட்கார விட மாட்டியா? இப்பதானே இங்கிருந்து நகண்டேன்… அதுக்குள்ள இப்பிடியா பண்ணுவ? " என்று அவள் உடம்பிலிருந்த மாவை எல்லாம் கையால் வழித்து, ஒரு கிண்ணத்தில் வைத்து விட்டு, பாத்ருமிற்குக் கூட்டிச் சென்று, தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிக்கவைத்துக் கொண்டிருக்கும்பொழுது, வீட்டிற்குள் வந்த சுப்பையா பிள்ளை,

"என்ன ஆச்சு?" என்று கேட்க,

"வரவர இவ பண்ற சேட்ட ரொம்ப ஜாஸ்தியாகுதுங்க... இப்பத்தான் இட்லிக்கு மாவரச்சு வச்சுட்டு வரேன்… எடுத்துத் தலை வழியா கொட்டிக்கிட்டா... இருபத்துநாலு மணிநேரமும் இவளையே பார்த்துகிட்டு இருக்க வேண்டியதாயிருக்குங்க... கொஞ்சம் அசந்தா ஏதாவது வேலையப் பார்த்ததுவச்சிடுறா…" என்று சொன்னவாறு, மீரஜாவை தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு, அடுப்படியைச் சுத்தம் செய்யத் திரும்பினார்.

"இவ என்ன செய்வா? இவளோட புத்திசாலித்தனத்தையும், சுறுசுறுப்பையும் நம்மட்டதானே காட்டுவா… இதெல்லாம் செஞ்சாதான் பிள்ளைகள்…. அத புரிஞ்சுக்கிட்டாதான் நம்மால ரசிக்க முடியும்…" என்று கூறி சிரித்து மீரஜாவைத் தூக்கிக்கொண்டு ஹாலுக்குச் சென்றார்.

"மீராவுக்கு மாவு வேணும்னா அப்பத்தாட்ட கேக்க வேண்டியதுதானே?" என்று கூறியபடியே தாத்தா அவளுக்குத் தலை துவட்டிவிட,

"அப்பத்தா சாமி கும்பிட்டுக்கிட்டிருந்தாங்க தாத்தா…"

"சாமி கும்பிட்டு வர்றவரை விளையாடிட்டு இருந்திருக்கலாம்ல?"

"..."

ஒன்றும் கூறாமல் தாத்தாவைப் பார்த்துச் சிரித்தவளிடம்,

"மாவு பூரா கொட்டிடுச்சு பாரு? அப்பத்தா பாவம்ல… எவ்வளவு நேரமா அரைச்சாங்க... சாப்பிடுறது தப்பில்ல… ஆனா கீழ கொட்டுறது வீணாதானே போகும்? இனி ஏதாவது வேணும்னா எங்கிட்டயோ அப்பத்தாகிட்டயோதான் கேட்கனும் சரியா? " என்றதும்,

"சரி தாத்தா!" என்று வேகமாகத் தலையாட்டிய மீரஜாவை இழுத்து அணைத்து முத்தமிட்டார்.
அடுத்தநாளே அடுப்படிக்குக் கதவு போடப்பட்டது.

வளரவளர மீரஜாவின் சேட்டையும் சேர்ந்து வளர்ந்தது…

வீட்டிலிருக்கும் பால்பௌடர், ஹார்லிக்ஸ், அரிசிமாவு, பழங்கள், காய்கள் என எல்லாமே வயிற்றுக்குப் பாதியும், பூமிக்கு பாதியுமாக கொடுத்துக்கொண்டிருந்தாள்…

கண்ணாடி பொருட்கள், பொம்மைகள் உடைந்தன…

ஒவ்வொரு முறையும், செய்யக்கூடாத விஷயங்களால் ஏற்படும் விளைவுகளைச் சொல்லி அமைதியாகப் புரியவைத்தனர் பெரியவர்கள்.

செல்லமாகவும், நல்லது சொல்லியும் வளர்க்கப்பட்டாள்...

தீபாவளிக்கு எல்லோருக்கும் உடை எடுத்துக்கொண்டு வரும்பொழுது எதிர் வீட்டுப் பெண் ஓடிவந்தாள்.

"அம்மா! எங்க வீட்ல மருதாணி அரைச்சிருக்கோம், மீராவுக்கு மருதாணி வச்சுவிடவா?" என்று முத்துராக்கம்மாவிடம் கேட்க,

"சரிமா!" என்று சம்மதிக்கவும், மீராவைத்தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று, மருதாணியை மீராவின் கையில் வைப்பதற்காக, மீராவின் இடது கையைப் பிடித்துக்கொண்டு, சிறிது மருதாணியை எடுத்து விரலருகில் கொண்டு சென்றதும் சட்டென்று தன் கை இழுத்துக்கொண்ட மீரஜா,

"ஐய்யய்யே… என்னக்கா சாணியை என் கையில் வைக்கிறீங்க?" என்ற மீராவின் முகத்தில் தெரிந்த அருவருப்பில் சிரித்த எதிர்வீட்டுப் பெண் சாந்தி,

"இது சாணி இல்லடா..‌. மருதாணி!"
"அப்படினா?" என்று நம்பாத பார்வை பார்த்தவளிடம்,

"அது ஒரு இலைடா… இலை பச்சையாதானே இருக்கும்? அதை அரைச்சா இப்படிதானே இருக்கும்?"

"ஓ!"

"இத மோந்து பாரு நல்லா வாசனையா இருக்கும்… இங்க பாரு அக்கா கைய... சிவப்பா இருக்குல்ல? அந்த மாதிரி உன்னோட குட்டிக் கையும் சிவப்பாகும்…" என்று கூறிய பிறகும் தன் கையை நீட்டாமல் மருதாணியையே மீரஜா பார்க்க, சாந்தியின் அம்மா பொறுமையிழந்தவராக,

"இந்தக் குட்டிக்குப் பதில் சொல்லி மாளாது… இதுகூட மல்லுக்கட்ட நம்மால முடியாது. அவங்க அப்பத்தாகிட்ட குடுத்துட்டு வா… நிறைய வேலையிருக்கு." என்றதும்,

"ஏம்மா? குட்டி பொண்ணும்மா…" என்று கூறும் பொழுதே,

தன் புருவங்களைச் சுருக்கி அந்தப் பெண்மணியைப் பார்த்த மீரஜா,

"வா க்கா எங்க வீட்டுக்கே போயிடுவோம்!" என்று கூறி எழுந்ததும்,

"பார்த்தியா மொளச்சு மூனு இலை விடல, அதுக்குள்ள இதுக்கு வர்ற கோபத்த?" என்று முகத்தைச் சுண்டியபடி பேசிய தன் அம்மாவிடம்,

"எப்படிதான் மூணு பிள்ளை பெத்தியோ? ஒரு குழந்தைட்ட பேசுற மாதிரியா பேசுற?" என்று கூறி மீரஜாவை ஒரு கையிலும், மருதாணியை மற்றொரு கையிலும் எடுத்துக் கொண்டு, குழந்தைக்குச் சிரிப்பு காட்டியபடியே மீரஜாவின் வீட்டை நோக்கி நடந்தாள் சாந்தி.

இருந்தும் யோசனையான கண்களோடு எதிர்வீட்டம்மாவையே பார்த்தபடி சென்றாள் மீரஜா...
.
"இதுதான் ஆரம்பம் மீரா… இது மிகவும் மோசமான உலகம்... உன் புத்திசாலித்தனத்திற்கும், சுறுசுறுப்பிற்கும், தேடலுக்கும், திறமைக்கும் நிறையப் பொறாமைக்காரர்களைச் சம்பாதிப்பாய்… உன்னைப் புரிந்து கொள்பவர் சிலரே… தன்னால் செய்யமுடியாத விஷயத்தை ஒரு பெண் செய்வதில் பொறாமைப்படுபவர்களையும், அல்லது உன் அறிவுக்குத் தீனி போடத் தெரியாமல் உன்னை அடக்கி ஒடுக்க நினைப்பவர்களையும்தான் சந்திக்கப் போகிறாய்… கலங்கிவிடாதே மீரா உனக்கு நான் இருக்கிறேன்…" என்றான் இராமேஸ்வரத்து மாதவன்.

மாதவனையும், மீரஜாவையும் பார்த்துக்கொண்டிருந்தது குடைவரையிலிருத்தவரின் கண்கள்.

வார்த்தைகளின் எண்ணிக்கை -1914

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼

சவலை, சவலைப்பிள்ளை அல்லது சவலை பாய்தல் என்னும் சொற்றொடர்கள் நாட்டுப்புற வாழ்வியலில் வழங்கப்படுபவை

தாய் அடுத்தக் குழந்தையைப் பெற்றெடுக்கத் தயார் நிலையை எய்துகிறபோது, அம்மூத்த குழந்தையின் செயல்பாடுகள் உடல் வளர்ச்சி முதலியவற்றில் ஒருவித மந்தத்தன்மை தோன்றும். இதனால் அக்குழந்தை அதன் உணவு, விளையாட்டு முதலான இயற்கையான செயல்பாடுகளை மறுத்து உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு உடல் வளர்ச்சியிலும் ஒரு தேக்கத்தைக் காட்டுகிறது. வீட்டில் அனைவரிடமும் அடம்பிடிக்கும்... மூத்த குழந்தையின் இத்தன்மையைச் சவலை பாய்தல் என்றும் அக்குழந்தையைச் சவலை அல்லது சவலைப் பிள்ளை என்றும் அழைக்கின்றனர்
 

Chitra Balaji

Well-known member
Super Super maa.... Semma episode.... மீரா seriyanaa chuttiya இருக்கா... Romba sharp kuda.... யாரு அந்த paiyan..... அவல romba safe ah paathukuraanga....
 

Sspriya

Well-known member
தாத்தா அழகா பாத்துகிறார் மீராவை... அவளோட சேட்டை எல்லாம் ரொம்ப அதிகம்... பாவம் பாட்டி... மாதவன் வந்து கூட விளையாடிட்டு கிளம்பிட்டாரா 😍😍💞.. சூப்பர்
 

Sspriya

Well-known member
Todays thought 💞😍

மீராவின் அடுகடுக்கான கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்றாரு தாத்தா

யாருக்கும் தெரியாம வீட்டுக்கு வந்து மீரா கூட விளையாடுனாரு சின்ன கண்ணன் செம்ம கெத்தா 💞💞💞
 

Mohanapriya Ayyappan

Active member
சூப்பர் 👌👏
மீராவோட குறும்பு ரசிக்கவைக்குது❤️😍
தாத்தா_பாட்டி அன்பு அலாதியானது ❣️
அந்த பசு சீன் சூப்பர் ❤️👌👏
 
Top