கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

AAS-24, சின்னக்கண்ணன் அழைக்கிறான்!, அத்தியாயம்-5

aas2022-writer

Well-known member
AAS-24,
சின்னக்கண்ணன் அழைக்கிறான்!,
அத்தியாயம்-5



மீரஜாவின் இரு கரங்களிலும் மருதாணி வைத்துவிட்டு,

"கைய மடக்காம இப்படி விரிச்சே வச்சிருக்கனும் சரியா?" என்று சாந்தி தன் உள்ளங்கையை விரித்துக் காட்டினாள்.

"ஏன் க்கா?"

"அப்பதான் அழகா இருக்கும்" என்று மீரஜாவின் குண்டு கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிவிட்டு அப்பத்தாவிடம்,

"நா வீட்டுக்குப் போயிட்டு வர்றேன் ம்மா!" என்று சாந்தி விடைபெற்றுச் சென்றாள்.

தாத்தா அறைக்குச் சென்ற மீரஜா, "தாத்தா இங்க பாருங்க!" என்று மருதாணி வைத்த தன் கரங்களைக் காட்டினாள்.

மருதாணி யார் வைத்திருந்தாலும் அழகுதான் அதிலும் குழந்தைகள் கைகளில் இருக்கும் மருதாணியைப் பார்க்கும் எவருக்கும் கண்களுடன் சேர்ந்து நெஞ்சமும் மலர்வது இயற்கை. தாத்தாவிற்கும் அப்படிதான் இருந்தது.

"மீரா குட்டிக்கு எவ்ளோ அழ...கா இருக்கு!" என்று மகிழ்ச்சி ததும்பக் கூறிய தாத்தாவின் விகசித்த முகப் பாவத்தைக் கண்ட மீரஜா,

தன் கையைப் பார்த்தாள், "கை அலகா இருக்கா? ஓ... இப்டி இருந்தா அலகா தாத்தா" என்று கேட்ட பேத்தியைத் தூக்கி டேபிள் மேல் அமரவைத்து,

"ஆமா டா… மருதாணி வைக்கிறது அழகுதான்… அழகு ன்னு நாக்கை இப்படி நல்லா மடிச்சு சொல்லனும்… இப்படிப் பல்லுக்குப் பக்கத்துல நாக்க வச்சு சொன்னா அலகு ன்னு ஆகுது பாரு… அலகு ன்னா காக்கா குருவிவியோட வாய் பகுதி டா கண்ணா!" என்று தனது நாவை மடித்து மேல் அண்ணத்தில் வைத்துக் காட்டி விளக்கினார்.

வழக்கம்போல எதுவும் பேசாமல் சிறிதுநேரம் தன் தாத்தாவின் முகத்தைப் பார்த்த மீரஜாவின் கவனம் மாறியதால் மருதாணி வைத்திருந்த கைகள் இயல்பாக மடங்க,

தாத்தா, கையில் வைத்திருந்த மருதாணியை மீரஜா கசக்கிவிடக் கூடாதென்று, அவளது இரு கைகளையும் தன் உள்ளங்கையில் வைத்தபடி கதைகள் கூற, ஆரம்பித்தார்‌.

நேரம் செல்லச் செல்லதன்னுடைய கைகளை அசைக்காமல் வைத்திருப்பது மீரஜாவிற்குச் சிரமமாக இருந்தது.

அப்பத்தா சாப்பாடு ஊட்டி உறங்க வைப்பதற்குள் நூறுமுறை, "கைய கழுவி விடுங்க அப்பத்தா!" என்று மீரஜா சொல்வதும்,

"கை சிவக்க வேண்டாமா? அப்போதானே அழகா இருக்கும்." என்று கூறுவதுமாகக் கழிந்தது.

காலையில் எழுந்து பார்க்கும்பொழுது கை கழுவத் தேவையில்லாமல் மருதாணி காய்ந்து உதிர்ந்து, அந்தப் பிஞ்சுக்கைகள் சிவந்திருந்ததைப் பார்த்த முத்துராக்கம்மாள் அவளுடைய கையை எடுத்து முகர்ந்து பார்த்து முத்தமிட்டார்.

குழந்தையின் மருதாணி வைத்திருக்கும் கையைப் பார்த்தபோது கடவுளின் கரங்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, மீரஜாவின் கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார்.

கண்விழித்தவுடன், "கையைப் பார்த்தாயா? எப்படிச் சிவந்திருக்கு. மோந்து பாரேன்…" என்று அப்பத்தா சொன்னதும்,

தன் கையை முகர்ந்து பார்த்த மீரஜா, ஓடிச்சென்று, திண்ணையில் அமர்ந்து, பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் தாத்தாவிடம் கையை நீட்டி முகர்ந்து பார்க்கச்சொன்னாள்.

தாத்தாவும் மீரஜாவின் கரங்களைப் பிடித்து முகர்ந்தவர், "அடடா மீராக்குட்டி கை மணக்குதே எப்படி?" என்று கேட்க,
"மர்ராணி தாத்தா!..."

"அப்படியா? நல்லாயிருக்கே…" என்று கூறவும்,

எதிர்வீட்டு சாந்திக்கு காட்டுவதற்காக ஓடிய மீரஜா, வீட்டு முற்றத்தில் துளசி மாடத்திற்கு அருகில் உள்ள திண்டில் அன்றொருநாள் தன்னுடன் விளையாடிய பையன் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். உடனே அவனிடம் சென்று,

"என் கைய பார்த்தியா? மோந்து பாரேன் நல்லா மணக்குது…" தன் கரங்களை அவன் முன் நீட்ட,

சந்தோசமாக மீரஜாவின் கரங்களைப் பற்றி முகர்ந்து பார்த்தவன்,

"அருமையான நறுமணம்... இல்ல?" என்றான்.

"ஆமாம்! ஆமாம்! என்றவள், இங்கயே இரு நான் சாந்தியக்கா ட்ட காட்டிட்டு வர்றேன்" என்று வாசலை நோக்கி ஓடினாள்.

அன்று முழுவதும் கையை முகர்ந்து பார்த்தபடியே தான் திரிந்தாள் மீரஜா.

மீரஜாவின் நான்காவது வயதில் அருகில் இருந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல் கே ஜி சேர்த்து விட்டபிறகு காலைப் பொழுது மிக அமைதியாக மட்டுமல்ல மதிய உணவு தாயாரிப்பதும் எளிமையாக இருந்தது முத்துராக்கம்மாவிற்கு.

ஆனால்… வேலை பார்த்துக் கொண்டே இருந்தாலும், மீரஜா வீட்டில் இல்லாதது ஒரு வெறுமையை மனதில் உண்டு பண்ணியது...

மதியஉணவுக்கு வீட்டிற்கு வரும் சுப்பையாபிள்ளை மீரஜாவையும் பள்ளியிலிருந்து அழைத்து வருவது வழக்கமாகியது.

ஒரு வெள்ளிக்கிழமை காலையிலேயே நல்லெண்ணெயில் ஒரு பூண்டும் 2 மிளகும் தட்டிப்போட்டு, லேசாக சுடவைத்து, தலையிலிருந்து கால்வரை தேய்த்து மீரஜாவையும் குளிக்க ஊற்றி, தாத்தாவிடம் ஒப்படைத்து விட்டு, தானும் குளித்துவிட்டு வருவதற்குள், கணவர் ஜவுளிகடைக்கும், பேத்தி பள்ளிக்கும் கிளம்பி தயாராக இருக்க, அவர்களுக்கு டாட்டா காட்டி அனுப்பிவிட்டு, மதிய சமையல் முடித்து, அவர்களுக்காக அப்பத்தா காத்திருக்க, இருவரும் வந்தனர்.

சுப்பையா பிள்ளை உடை மாற்றிவிட்டு முகம் கழுவச் செல்ல, முத்துராக்கு மீரஜாவிற்கு உடை மாற்றிவிடும்போது,

"கொஞ்சம் இருங்க அப்பத்தா, உங்கட்ட ஒன்னு குடுக்கனும்." என்று கூறி தனது பள்ளிக்குக் கொண்டு செல்லும் பேக்கைத் திறந்து ஒரு பேப்பர் பொட்டலத்தை எடுத்துத் தனது அப்பத்தாவிடம் கொடுத்தாள்.

"என்ன மீராகுட்டி இது?" என்று கேட்டவாறே அந்தப் பொட்டலத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தவாறு கேட்டார்.

"தோடு" என்று தனது காதைக் காட்டி தலையசைத்து கூறிய விதத்தில் மயங்கிய மனது, "தோடா?" என்று அதிர்ச்சியடைந்து மீரஜாவின் காதுகளைப் பார்க்க, அவள் காதுகளில் தோடு இருந்தது.

"என்ன தோடு? யார் தோடு?" என்று மீரஜாவிடம் கேட்டவாறே பொட்டலத்தைப் பிரித்தவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, வேகமாக ஓடிச்சென்று சாமி அலமாரியைப் பார்த்தார்.

"என்னங்க" என்று அப்பத்தா, கணவரை அழைக்க,

'இந்தக் குட்டி வந்ததும் ஏதோ சேட்டை சேய்திருப்பாள்' என்று சிரித்தபடியே வந்தவரிடம், மீரஜா கொடுத்த தோடு பொட்டலத்தை நீட்டினார் அப்பத்தா.

"உன் தோடு மாதிரி இருக்கே?" என்றவரிடம்,

"என் தோடே தான்!"

"இதை ஏன் பேப்பரில் வச்சிருக்கற? தோடுல பதிச்ச கல்லுல எண்ணை இறங்கின மாதிரியும் தெரியவில்லையே?"

"நானா பேப்பர் ல வச்சேன்? உங்க பேத்திதான், நான் எண்ணைத் தேய்த்துக் குளிப்பதற்காகக் கழட்டி வைத்த, என் கல்லுத்தோடை பேப்பரில் வைத்து ஸ்கூலுக்குக் கொண்டு போயிருக்கா." என்றதும்,

அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக மீரஜாவைப் பார்த்தவர்,

"மீராகுட்டி தோடை எதுக்கு எடுத்துட்ட போன?" என்றதும்

"விளையாட தாத்தா! பாருங்க பளபளன்னு இருக்கில்ல?" என்று கண்கள் மின்னக் கூறியவளை பார்த்து,

"தோட வச்சு யாராவது விளையாடுவாங்களா? ஸ்கூல்ல காணாம போச்சுன்னா அப்பத்தா என்ன பண்ணுவாங்க? பாவமில்லையா?" என்று கேட்க,

"நான் பதறிப் போயிருக்கேன் இப்பவந்து கொஞ்சுறீங்களே? அவளுக்கு எப்படி இவ்...வளவு அழகா பொட்டலம் மடிக்கத் தெரியும்?"

"அப்படியா?" என்றவர், மீரஜாவிடம்,

"இந்தத் தோடை நீ பேப்பர்ல மடிச்சா கொண்டு போன?" என்று மீரஜாவிடம் கேட்க,

"இல்ல தாத்தா. நான் பென்சில் டப்பாவில் வச்சு தான் கொண்டு போய் விளையாடினேன்.

"அப்போ எப்படிப் பேப்பர்ல வந்துச்சு?”

"அதுவா? ஒரு மாமாதான் பேப்பரில் வச்சு, பத்திரமா அப்பத்தாட்ட கொண்டு போய்க்கொடுத்தா ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன்னு சொன்னார்." என்று கூற, இருவரும் அதிர்ச்சியாகி,

"யார் அவர்? உங்கள் ஸ்கூல் டீச்சரா?" என்று கேட்க,

"இல்ல தாத்தா." என்றதும், பயந்துபோன தாத்தா, "மீராகுட்டிட்ட அன்னைக்கே தாத்தா என்ன சொன்னேன்? நமக்குத் தெரியாதவங்க கிட்ட பேசக் கூடாது… அவங்க கூட வெளிய போகக்கூடாதுன்னு சொன்னனா இல்லையா?" என்று கேட்டதும், புருவத்தைச் சுருக்கி யோசித்தவள்,

"ஆமாமா!" என்றாள்.

"அப்புறம் ஏன் அந்த மாமாட்ட பேசினீங்க?"

"அச்சோ தாத்தா… ஸ்கூல்ல என் ஃபிரண்ட் கிரேசாவ தவிர வேற யாரையுமே எனக்குத் தெரியாதே? ஆனா என்ட பேசத்தான செய்றாங்க? அது தெரியாம நீங்கதான் என்னை ஸ்கூல்ல கொண்டுபோய் விடுறீங்க..."

"ஆஹா… இவட்ட வாயக் குடுத்துட்டார்… இனி ஸ்கூல்க்குப் போனமாதிரிதான்.' என்று நினைத்த அப்பத்தா, டைனிங் டேபிளில் சாப்பாடு, தண்ணீரெல்லாம் எடுத்து வச்சாச்சா என்று பார்க்கச் சென்றார்.

"மீராம்மா… ஸ்கூல்க்குள்ள இருக்கிறது பாதுகாப்புதான்டா... ஆனா… இனி யார் எது குடுத்தாலும் வாங்கிச் சாப்பிடக் கூடாது புரியுதா?"

"கிரேசா குடுத்தா?"

"ஃபிரண்ட்ஸ்சோட ஷேர் பண்ணிக்கலாம்!'

"அப்போ மிஸ் குடுத்தா?"

"உன்னோட க்ளாஸ் மிஸ் ஐ உனக்குத் தெரியும்தானே? அவங்ட்டயும் ஷேர் பண்ணிக்கலாம். நான் என்ன சொன்னேன் தெரியாத ஆளுங்கட்ட பேசாத, வாங்கிச் சாப்பிடாத..."

"ஃபஸ்ட் டே மிஸ்ஐ கூட எனக்குத் தெரியாதே தாத்தா!"

"ஆனா தாத்தாவும், அப்பத்தாவும் உனக்கு மிஸ்ஐ இன்ட்ரோ பண்ணினோம்ல? அதாவது மீரா நாங்க யாரை உனக்கு இன்ட்ரோ பண்றமோ அவங்கட்ட நீ பேசலாம் புரியுதா?" என்றதும் வேகமாகத் தலையாட்டிய மீரஜா,

"அப்போ அந்த மாமாவையும் எனக்கு இன்ட்ரோ பண்ணிவிட்ருங்க தாத்தா ப்ளீஸ்… ஐஸ்கிரீம் ரெண்டு வாங்கித் தந்தார்."

சிறிது நேரம் மீரஜாவையே பார்த்த தாத்தா,

"ஓகே! அடுத்து எப்பவாவது அந்த மாமாவ பார்த்தா, என்கிட்ட பேசச்சொல்லு ம்ம்?" என்றதும் மிகவும் குஷியாகி அறைக்குள் ஓடினாள்.

மதிய உணவு சாப்பிடும்போது அப்பத்தாவிடம்,

"இனி மீரா கைக்கு எட்டும் தூரத்தில் எந்தப் பொருளும் வைக்காமல் பார்த்துக்கம்மா" என்றார் தாத்தா.

"இனி உங்களையும் என்னையும் தவிர எல்லாத்தையும் பரண்லதான் போடனும்…" என்ற அப்பத்தா,

"நாளைக்கு ஸ்கூல்ல கொண்டு போய் விடும்போது யார் பேப்பரில் மடிச்சு குடுத்தாங்கன்னு கேளுங்க" என்றார்.

"தோடு எடுத்துட்டு போனான்னு சொன்னா நம்மைத் தான் ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்வாங்க முத்துரா… இருந்தாலும் விசாரிக்கிறேன்." என்றவர்,

அடுத்த நாள் காலைப் பள்ளியில் மீரஜாவை விட்டுவிட்டு, அவளுடைய வகுப்பு ஆசிரியையிடம், விவரம் கேட்க,

ஆசிரியை மீரஜாவை அழைத்து விசாரித்தார்.

"யார் மீரஜா அவர்?" என்று கேட்க,

"ஒரு மாமா"

"நம்ம ஸ்கூல்ல எங்க இருக்கார் அந்த மாமா?"

"தெரியல" என்றதும் மீரஜாவைத் தூக்கிக்கொண்டு எல்.கே. ஜி படிக்கும் குழந்தைகளுடன் தொடர்புடைய ஒவ்வொரு ஆண் அலுவலரிடம் கூட்டிச் சென்று அடையாளம் காட்டச் சொல்ல, அங்குள்ள யாரையுமே, "இல்லை!" என்று விட்டாள்.

"அவர் எப்படி இருந்தார்?" என்றதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்க, ஆசிரியைக்குமே மனதிற்குள் பயம் வந்தது. உணவு இடைவேளை என்றாலும், யாரேனும் பெற்றோர்களாக இருக்கும் எனலாம்… ஒரு பீரியட் முடிந்து அடுத்த ஆசிரியை வரும் இடைவேளையில் பள்ளி வராண்டாவில் விளையாடிய குழந்தையிடம், யார் பேசி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்திருப்பார்கள்?' என்று யோசிக்க,

"இன்னைக்கு மதியம் பிள்ளைகள கூட்டிட்டுப் போக ப்ள்ளிக்கு வரும் பெற்றோர்களையும் பார்த்து விட்டுச் சொல்றேன்… வெளி ஆட்கள், வாட்ச்மேனைத் தாண்டி வர வாய்ப்பே இல்ல… நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க… இன்னும் கவனமா மீரஜாவைப் பார்த்துக்கிறேன்." என்று தாத்தாவை வழியனுப்பி விட்டு, மதியம் குழந்தைகளை அழைத்துச்செல்ல வந்த பெற்றோர்களைக் காட்டி அடையாளம் கேட்க,

மீரா, “யாருமே இல்லை” என்றாள்.

பெற்றோர்களிடம், "நேற்று யாராவது பள்ளியில் வகுப்புகள் நடக்கும்போது வந்தீர்களா?" என்று விசாரிக்க, அதற்கும் "இல்லை!" என்ற பதிலே வந்தது.

இன்றைக்கு வந்திருப்பவர்கள்தான் நேற்றும் குழந்தையைக் கூட்டிச் செல்ல வந்தார்களா? என்பதையும் உறுதியாகத் தெரிந்து கொண்டு பிறகு,

வாட்ச்மேனிடம், மீரஜா சொன்ன நேரத்திற்கு யாரும் பள்ளிக்குள் வந்தார்களா? என்று வருகை பதிவேட்டில் சரிபார்த்தும், யார் வந்தார்கள் என்று தெரியவில்லை…

பள்ளி விடும் நேரத்திற்கு வரும் ஐஸ்வண்டிக்காரரிடமும் விசாரிக்க,

அவரும், "நேத்தும் வழக்கம்போலப் பன்னிரண்டு மணிக்கு மேல் தான் டீச்சர் வந்தேன்" என்றதும்,

அவரிடம், "பெற்றோர் யாரும் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு பள்ளிக்குள் சென்றார்களா?" என்று கேட்க,
"பன்னெண்டரை மணிக்குக் கொஞ்சபேர்தான வருவாங்க… அதோட பிள்ளைகள் கேட்டாமட்டுந்தான் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பாங்க… அதனால எனக்கு நல்லாத் தெரியும்… நேத்து யாரும் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, உள்ள போகல டீச்சர்" என்று உறுதியாகச் சொன்னார்.

மீரஜாவை அழைத்துப் போக வந்த தாத்தாவிடம் எல்லா விபரங்களையும் கூறி, "மீரஜா கற்பனையா ஏதாச்சும் சொல்லியிருப்பா… நீங்க வீட்ல போய்ப் பக்குவமா விசாரிங்க…" என்று டீச்சர் கூற,

ஐஸ்கிரீம் கொடுத்தது கற்பனையா இருந்தாலும், தோட்டை பொட்டலம் கட்டிய விதம் தாத்தாவிற்கு ஞாபகம் வந்து,

"இவ்வளவு அழகா, எனக்கே பொட்டலம் மடிக்கத் தெரியாதே மிஸ்?" என்று கூறி சட்டைப்பையில் மடித்து வைக்கப் பட்டிருந்த பேப்பரைக்காட்ட,

ஆசிரியைக்குமே அதிர்ச்சி தான் அவ்வளவு பக்குவமாகக் குழந்தையால் எப்படி மடிக்க முடியும்? என்பது ஒரு புறம் என்றால், மடிக்கக் கொடுத்த பேப்பர் முதல்நாள் நீயூஸ் பேப்பராக இருந்தது இன்னும் குழப்பத்தை உண்டாக்கியது…

ஒரு வழியாக வீட்டிற்கு வந்த தாத்தா மீரஜாவிடம் துருவித் துருவிக் கேட்டும் ஒரே மாதிரியான பதிலே வந்தது…

`கற்பனை என்றால், குழந்தை முதலில் சொன்ன விசயங்களை மறந்து, மாற்றிப் பதில் சொல்லுமே? தங்கத்திற்காகப் பெரியவர்களையே கொலை செய்யும் அக்கிரமக்காரர்கள் இருக்கும் இந்தகாலத்தில், விபரமறியா குழந்தை யிடம் தோடைப் பத்திரமாகக் கொடுத்து, "அப்பத்தாவிடம் கொடு!" என்று கூறி, ஐஸ்கிரீமும் வாங்கிக் கொடுத்தவர் யார்?... மீரஜாவை இன்னும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று நினைத்தவர், நடுங்கும் கைகளால் மீரஜாவை இறுக அணைத்துக்கொண்டார்…

"யார் அவர்?"


வார்த்தைகளின் எண்ணிக்கை -1245

கண்ணன் வருவான்!
🎼🎼🎼🎼🎼🎼
 

Chitra Balaji

Well-known member
Yaaru avaru..... Kamal ah pathiramaa கொண்டு போய் வீடு la கொடுக்க solli irukaaru.... Yaaruku me avara yaarunu theriyala appadi ஒருத்தர் வந்ததாகவும் theriyala.... Thulasi மாடம் kita அந்த paiyan யாரு nu theriyala.... தாத்தா vuku romba பயமா ஆயிடுச்சி.... Kuzhanthai romba pathiramaa paathukanum nu உறுதி eduthukitaaru... Super Super maa... Semma episode
 

Shailaputri R

Well-known member
வேற யாரு அந்த பொல்லாத குட்டி கண்ணன் தான்.. எப்போ பாரு மீரா கூட இருக்கவங்கள பதட்டத்துலயே வச்சிருக்காரு.. மீரா குட்டி கை அழகா செவந்துருக்கா.. குட்டி கண்ணன் ஸ்மெல் பண்ணி சொன்னாருல..
 

Aathisakthi

Well-known member
வேண்டி வேண்டி பிறந்த குழந்தை ...அதுக்காக எப்பவும் ஒரு பதட்டத்திலேயே வச்சிருக்கிறதெல்லாம் நியாயமில்லை....நீ விசிட்ட அடிச்சிட்டு ஜாலியா போய்டுற...

இந்த பெரியவங்க இல்ல நடுங்கிகிட்டு கெட்க்கறாங்க...

ஆனாலும் அப்பத்திலிருந்து இப்ப வரைக்கும் உன் குசும்பு மட்டும் குறையவே இல்லை...
 
Top