கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

kodimalar 32

32


ஷ்யாம்... அவன் எவ்வளவு மென்மையானவனாக இருந்தானோ அவ்வளவு கடினம் ஆகி போனான். இந்த காலகட்டத்தில் சியாவால் அவனை நெருங்கவே முடியவில்லை. எப்பொழுதுமே ருத்ரனாகவே இருந்தான். அவனது காதல் கானல் நீராக ஆகி போயிற்று.

"இது ஒரு சிறு விஷயம் உடம்பில் ஏற்பட்டிருக்கும் ஒரு தாக்கம், இவ்வளவு சீக்கிரம் மனிதனின் இயல்பை மாற்றி விட முடியுமா"என்று தவித்தாள் சியா. ஷ்யாம் அவன்
ஸியாவை கண்டாலே வெறுப்பை மட்டும் உமிழ்ந்தான்.

இன்னும் சொல்லப்போனால் அவள் முகம் அவனது கையாலாக தனத்தை கண்ணாடி போல் காட்டுவதாக தோன்றிய உணர்வு தான் அவள் மீதான கோபம்,வெறுப்பு எல்லாவற்றுக்கும் அடிப்படை.

தனிமையில் தனது அறையில் இரவு நேரங்களை கடக்கையில் அவனையும் அறியாமல் விசும்பல் வெளிப்படுகிறது. கடைசியாக சியாவை அணைத்து முத்தம் இட்டதும், அவன் உணர்வுகள் மொத்தமாக அணைந்து போனதுவும்...
நிச்சயம் அதற்கு காரணம் சியாதான்.
ஆனால், அவன் கண்ணீர் சியாவை அணைக்க முடியாததாலா, இல்லை அவளை வறுத்தெடுக்கும் குற்ற உணர்ச்சியாலா.. இதற்கு நிச்சயம் ஷாயாம் தான் விடை சொல்லி ஆக வேண்டும்.

இத்தனை நாட்களாக நந்தா மட்டும் செய்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை இப்போது சியாமும் மனதளவில் செய்ய ஆரம்பித்து விட்டான்.
ஆம், அவனது மனம் ராம்-சியா இருவரையும் ஜோடி சேர்த்து பார்த்து கோவம் கொண்டது.
ராமின் மனைவி நந்தா சரியில்லாமல் போகவே, இடம் வலம் பாராமல் ஓடத் தொடங்கி விட்டது ஷ்யாமின் மனது.

வீட்டில் அமைதி என்பது சுத்தமாக இல்லை. ஷ்யாம் அவனது உறவினர்கள் இப்போது யாரும் பெங்களூருவில் இல்லை. அவரவர் தொழிலை பார்க்க வேண்டும் என்று எப்போதோ கிளம்பி விட்டார்கள்.

வீட்டில் சதா சர்வ காலமும் சியாவை சண்டைக்கு இழுத்து அவளை கதற விடுவதை தனது முக்கிய வேலை ஆக்கிக் கொண்டான் ஷ்யாம்.
அலுவலகத்தில் அனைவரும் முன்னாலேயும் அவளை அவமானம் செய்தான்.
பலமுறை கண்ணீரை உள் இழுத்துக் கொள்ளும் சியா.. சில சமயங்களில் தன்னையும் மீறி அழுது விடுகிறாள்.
அதற்கும் அவனிடம் இருந்து " நடிக்காத சியா " என்று திட்டு தான் விழுகிறது. போடாத குறைக்கு சுற்றி இருப்பவரின் பரிதாப பார்வைகள் அவளை கூறு போட்டு தின்றது.
எவ்வளவோ முயன்றும் அவளால் இந்த சூழ்நிலைகளை ஜீரணிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் விஷயம் தெரிந்த அதிர்ச்சியில் இவ்வாறு நடந்து கொள்கிறான். நாட்பட்ட நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருந்தவளுக்கு கிடைத்ததெல்லாம் மேன்மேலும் அதிர்ச்சிகள் தான்!
ஷ்யாம் தனது கடின தன்மையையும் இவள் மீதான எதிர்மறை எண்ணங்களையும் வளர்த்துக் கொண்டு இவளை வதைத்தானே தவிர தன்னை மாற்றிக் கொள்ள முனையவில்லை.

ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் குழந்தை கிருஷ்ணாவிடம் மட்டும் எப்போதும் புன்னகை முகம் தான்! உண்மையை சொல்லப்போனால் கிருஷ்ணாவின்
தொடுகை மட்டுமே அவனை குளிர்வித்தது.

ஒரு சில முறை இராமின் முன்னாலேயே வேண்டுமென்றே சியாவை கண்ணீர் உகுக்கச் செய்தான் ஷியாம்.

ராமிற்கும் நன்றாக புரிந்தது. வேண்டுமென்றே தன் முன்னால் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் என்ன என்று தான் அவனால் உணர முடியவில்லை.

ஷ்யாம் உடல்நிலை பற்றி ராமிற்கும் வேறு யாருக்கும் இன்று வரை தெரியாது. அது தெரிந்திருந்தால் தான் ஏதேனும் முயற்சி செய்திருப்பான், ஷ்யாமை இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு.

ஒரு ஆணாக இருந்து பார்த்தால் தான் புரியும்.. ஷ்யாம் எப்பேர்பட்ட வலியில் சிக்கிக் கொண்டிருக்கிறான் என்று. அத்துடன் அவன் அனுபவிக்கும் ஆழ்மன அழுத்தம்.

ஷியாமின் முகத்தை பார்க்கவே பயம் கொண்டாள் சியா. இப்படிப்பட்ட நரகம் தனக்காக காத்திருக்கிறது என்று அவள் சத்தியமாக எதிர்பார்த்து இருக்கவில்லை.

அலுவலகத்தில் இதற்கு மேல் அவமானப்பட வேண்டாம் என்று எண்ணியவளாக வேலையை ராஜினாமா செய்து விட்டாள் பெண்.
முன்பாக இருந்திருந்தால், ஷ்யாம் அவ்வளவு எளிதில் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் இப்பொழுது நக்கலாக ஒரு பார்வை பார்த்தபடிக்கு, அவளது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து இட்டுவிட்டான்.

வீட்டில் குழந்தை கிருஷ்ணாவை கவனிப்பது மட்டுமே அவளது முழு வேலையானது .

தனது மாமியாரிடம் பேசும் போது, குழந்தைக்காக வேலையை விட்டு விட்டதாக சொல்லி சிரித்தாள் சியா. இவளது இந்த முடிவில் அவள் மாமியார் வீட்டில் மிகுந்த மகிழ்ச்சியே!

ஆனால், ஷியாமின் உடல் நிலை பற்றி தெரிந்த அவன் அப்பா அண்ணன் இருவருக்கும் சியாவின் இந்த முடிவு பற்றி அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த உணர்வு.

தன் மனைவியை ஒரு நொடி கூட பிரிந்திருக்க விரும்பாத ஷ்யாம் அவளது இவ்வளவு பெரிய முடிவுக்கு உட்பட்டிருக்கிறான் என்றால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை.. அது பற்றி வயதில் மூத்தவரான ஷாமின் அப்பாவிற்கு நன்றாகவே புரிந்தது.
தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று பெரியவர் எவ்வளவு முயன்றும் கூட அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

ஷியாம், அவனது குணம், பிடிவாதம் எல்லாம் அவருக்கு அத்துப்படி.

ஒருமுறை ஷாமின் வீட்டிற்குச் சென்று ஒரு வாரம் தங்கி இருந்து நிலவரத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்து
ஒரு வாரம் தொழிலை பார்த்துக் கொள்வதற்கு தன் தம்பியிடமும் மகனிடமும் சொல்லிவிட்டு,ஷ்யாம் மின் வீட்டிற்கு தன் மனைவியுடன் கிளம்பியும் விட்டார்.

ஷ்யாம்மின் வீட்டில் மாமனார் மாமியார் இருவரையும் சியா அன்பாகவே கவனித்துக் கொண்டாள். தங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மன வேறுபாட்டை மறந்தும் அவள் காண்பிக்கவில்லை.
ஆனால் ஷியாம்..
அவன் யாருக்காகவும் கூட நடிக்க விரும்பவில்லை. வெளிப்படையாகவே சியா மீதான தனது உணர்வுகளை காண்பிக்க தொடங்கி விட்டான்.
அவனைப் பெற்றவர்கள் இருவருக்கும் கூட இந்தச் சூழலை எப்படி கையாள்வது என்று புரியவில்லை.

இரவு நேரங்களில் தனியாக சோபாவில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் மருமகளை தேற்றும் வகையும் தெரியவில்லை.
"யார் கண் பட்டாதோ" என இருவரும் தவித்தார்கள்.

ராம் வீட்டில், தனது மகளுக்கு பேறுகாலம் என்று சொல்லி ராமின் அம்மா மும்பை கிளம்பி சென்றுவிட்டாள். ஷ்யாமின் நிறுவன பிரச்சனைகள் இப்போது அவன் திரும்பி வந்த பிறகு, சீராகி விட்ட நிலையில் இனி அடிக்கடி தானாக போக வேண்டாம் என்று எண்ணியவன், சியாம் அலுவலகத்திற்கு செல்வதை குறைத்துக் கொண்டு விட்டான்.

நாட்களும் பழையபடி ஓடத் தொடங்கி விட்டது. தாரா க்ரீச், பிறகு வீடு என்று தன்னை பழக்கிக் கொண்டாள்.

இரவு நந்தா, ராம் இருவரில் யார் சீக்கிரம் வந்து விட்டாலும், அவர்களின் பொறுப்பில் குழந்தையை விட்டுவிட்டு, குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண் கிளம்பி விடுவார்.

எல்லாம் ஓரளவிற்கு சுமாராக போய் கொண்டிருக்க, நந்தா அலுவலத்தில் அவளை மூன்று ஆண்டுகளுக்கு ஆஸ்திரெலியா செல்ல ப்ரோமோஷனுடன் கூடிய வாய்ப்பு முன்வைக்க பட்டது.

வழக்கம் போல் அவள் மனதில் குழப்ப அலைகள். ஏற்கனவே சலிப்பில் இருந்தவளுக்கு இந்த வாய்ப்பை இழக்க மனமில்லை.

அவளுக்கு தாரா பற்றி எல்லாம் எந்த கவலையும் இருந்திருக்கவில்லை. ஆனால் ராம் என்ன சொல்வானோ.. இதற்கு அனுமதிக்க மாட்டான் என்று நிச்சயம் அவளுக்கும் தெரியும்.

எதையோ நினைத்து கணக்கு போட்டவளாக அவள் அணுகியது வழக்குறைஞர் ஒருவரை.

ராமிடமிருந்து நிரந்தரமாக பிரிய அவள் தயாராகி விட்டாள். 'குழந்தை பொறுப்பை குழந்தையின் தந்தையை எடுத்துக் கொள்ளட்டும் தனக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை' என்றும் விவாகரத்து பத்திரத்தில் அவள் தெளிவாக குறிப்பிட்டிருந்தாள்.

இவளது வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த வழக்குறைஞர் மனதில் இவள் மீதான ஆச்சரியம் கூடிக் கொண்டேன் சென்றது.

அவளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவருக்கு, ஆயாசம் மிச்சம். எப்படியோ போகட்டும்..தனக்கு ஒரு கேஸ் கிடைத்தது என்று அவரால் எண்ண முடியவில்லை.
முடிந்தவரை இவங்களுக்கு நல்ல வார்த்தை கூறி பார்த்தால் இவளும் அசைவதாக இல்லை. வேறு வழி இன்றி பத்திரத்தில் தயார் செய்து கொடுத்தார். அவர் முன்னாலேயே தனது கையெழுத்தை இட்டவள், அன்று இரவே ராமிடம் கையெழுத்து வாங்க தயாராகினாள்.

மிகுந்த களைப்புடன் வீட்டிற்கு வந்த ராமுக்கு அடுத்த கட்ட நிச்சய அதிர்ச்சி தான் இது.

எந்த காதலையும் திருமண பந்தத்தையும், நிரந்தரப் படுத்திக் கொள்வதற்காக இத்தனை நாள் அவன் பாடுபட்டானோ.. அதற்கு இன்று அர்த்தம் இல்லாமல் போய்விட்டது.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,
" இப்போ உனக்கு எதுக்கு நந்தா டிவோர்ஸ்?
உனக்கு சொத்து, பணம் வேணுமா... என்னோட எல்லா ப்ரொபேர்ட்டிஸ்சும் உனக்கும் தாராவுக்கும் தானே.. இன்னும் எதை எதிர்பாக்குறே"..
அவனது கேள்வி முடிவதற்குள்ளையே அவனது கண்கள் கண்ணீர் சிந்தியது. அவன் முகம் அப்பட்டமாய் ஏமாற்றத்தை காட்டியது.
ஆனால் இதற்கெல்லாம் மனம் மாறுபவளாக நந்தா இல்லை.

"உனக்கு நிச்சயம் நான் என்ன நினைக்கிறேன் என்று புரியாது ராம். ஐ நீட் எ ஸ்பேஸ். ஆரம்பத்தில் இருந்து எனக்கு இந்த கல்யாணம் இதெல்லாம் நம்பிக்கை இல்லை. யூ போர்ஸ்ட் மீ டு மேரி யூ "

சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

"எனக்கு எதையாவது சாதிக்கனும். கல்யாணம், கணவர் குழந்தை அப்படி எல்லாம் என்னுடைய வட்டத்தை சுருக்கிக்க என்னால முடியாது. நான் அந்த மேக்கே இல்லை."

"நம்ம ரெண்டு பேர் லைஃபும் எப்பவுமே மேட்ச் ஆகாது ராம்.
நீ ரொம்ப நல்லவன் நான் உன்ன குறை சொல்ல மாட்டேன். பட் இனிமே என்னால இங்க இருக்க முடியாது.
சைன் பண்ணிடு ப்ளீஸ்"
"எனக்கு உன்னோட எதுவும் வேணாம். இட் இன்க்ளுட்ஸ் தாரா... அண்ட் ஐ ரியலி மீன் இட் " என்று முடித்து விட்டாள்.

ராமுக்கு கடைசியாக தெளிவாகப் புரிந்த ஒன்று... இனி இவளை இங்கு பிடித்து வைக்க முடியாது

அழுந்த தனது முகத்தை துடைத்துக் கொண்டவன், அவள் கேட்ட கையெழுத்தை போட்டு விவாகரத்து பத்திரத்தை அவளிடமே கொடுத்துவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

தாரா அவனது அருகில் தூங்கிக் கொண்டிருந்தாள். இரவு உறக்கத்தை அவனால் தழுவ முடியவில்லை. அடுத்து என்ன என்பது அவனுக்கு புரியவில்லை.
பெண் குழந்தையை அம்மாவின் நிழல் இல்லாமல் எவ்வாறு வளர்க்க முடியும் என்ற மலைப்பு அவனுக்கு.

அன்று இரவே தனது எல்லா பொருட்களையும், பேக் செய்து கொண்டவள், அடுத்த நாள் காலையில், ராமிடம் ஓரிரு நாட்களில் ஒரு இடம் பார்த்து சென்று விடுவதாக சொல்லிவிட்டாள்.
அன்று இரவு அவள் வீட்டிற்கு வரவில்லை. அடுத்த நாள் காலை, ராமுக்கு அழைத்தவள் பத்து மணி சுமாருக்கு வந்து தனது பொருட்கள் எடுத்துக் கொள்வதாகச் சொன்னாள்.

ராம் சரி என்று விட்டான். தாராவை வழக்கம் போல் க்ரீச்சில் விட்டவன் தனது முன்னாள் மனைவிக்காக காத்திருந்தான்.

அவளும் வந்தாள்.. தன்னுடைய எல்லாவற்றையும் எடுத்துச் சென்றாள்.. முக்கியமான இரண்டையும் விட்டுவிட்டாள்.

இரண்டு நாட்களாக ராம் அனுபவித்த தவிப்பும், பாரமும் நிச்சயம் இப்போது இல்லை.

இனி இப்படித்தான் வாழ்க்கை என்று தன்னையும் தேற்றிக் கொண்டான்.

தனது பெற்றோருக்கும் அழைத்து சொல்லிவிட்டான். அவர்கள் மனதில் கவலையும் மகிழ்ச்சியும் சேர்ந்த கலவையான உணர்வு.

நந்தா வீட்டை விட்டு சென்ற விஷயம், ஷ்யாம் காதுகளையும் எட்டி விட்டது.

இனி...
 
Top