கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம்-2

ksk2022-writer

Well-known member
KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா?
அத்தியாயம் -2

ஆஸ்மின் தனது வீட்டிற்கு வருவதற்கு முன்னர் சமையலுக்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கடைவீதிக்குச் சென்றாள்.அங்கே மைனி(அண்ணி) எழுதிக் கொடுத்த பொருட்களை எல்லாம் சரி பார்த்து வாங்கிக் கொண்டிருந்தாள்.


அதில் சில பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.அதையும் வாங்கலாம் என்று திரும்பி இன்னொரு கடைக்கு போகலாம் என்று நடக்கும் பொழுது தூரத்தில் ஒருவர் நடந்து வருவதைக் கண்டாள்.


அவரைப் பார்த்ததும் பயந்தவள் மனதினுள் 'இன்னைக்கு இவங்க கண்ணில் பட்டால் அவ்வளவு தான்.மானத்தை வாங்கமால் விட மாட்டாங்க ' என்று நினைத்து தன்னை மறைத்துக் கொள்ள கடைவீதியின் இன்னொரு வழியாக உள்ளே நுழைந்தாள்.


வாங்கிய பொருட்களை கையில் தூக்கி சுமந்து நடக்க முடியாமல் திணறினாள்.'சரி ஒரு ஆட்டோவிலாவது போய் விடலாம்' என்று தன் கைப்பையை திறந்து அதில் பணம் எதாவது பொருட்கள் வாங்கி மிச்சம் இருக்கிறதா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை,அதில் இன்று அண்ணன் இன்டர்வியூக்காக கொடுத்த பணத்தின் மிச்சம் இருந்தது.அதை வைத்து தான் அவள் நாளைக்கும் திரும்ப கம்பெனிக்குச் செல்வதற்கான போக்குவரத்திற்கு சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்டாள்.அதனால் நடந்து செல்வதே நல்லது' என்று கைப்பையை தோளிலும் ஒரு பையைத் தூக்கி இடுப்பிலும் இன்னொரு பையை கையால் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.


அவளது நிலைமையைப் பார்த்து அவளுக்கே அழுகையாய் வந்தது.தன் நினைவு வந்த நாளிலிருந்து ஒரு நாளும் இப்படி அவள் ரோட்டில் நடந்தது கிடையாது.அதை நினைத்து அவளுக்கே கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

மனதினுள் 'இறைவா! எனக்கு ஏன் இந்த மாதிரி ஒரு நிலைமையை கொடுத்திட்டே? எது எனக்கு வேண்டாம்னு சொல்லுறேனோ அதையே என் கையில் வலுக்கட்டாயமாய் திணிக்கிறியே!' என்று மனதினுள் பொருமிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

வந்தவள் வாசலில் எல்லாற்றையும் இறக்கும் பொழுது அங்கே வந்த அவளது அம்மா நிற்கும் மகளின் நிலைமையைப் பார்த்து "ஆஸ்மின் ஏன் தூக்க முடியாமல் இப்படி கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தே? மைனிட்ட சொல்லி இருந்தால் பாதி பொருளை பைக்ல ஏத்திட்டு வந்து இருப்பாளே"


"இல்லைம்மா மைனி சொன்னாங்க வெளியே போய்ட்டு வர லேட்டாகும் அதனால நீயே வாங்கிட்டு வந்திடுன்னு சொன்னாங்க" என்றாள் அப்பாவியாய்…


அவளின் குரலைக் கேட்டு மெதுவாய் அழகாய் அன்னநடை நடந்து வந்து மெதுவாய் தலை சாய்த்து பார்த்து சிரித்தது நான்கு வயது பெண் குழந்தை.

ஆஸ்மினைக் கண்டதும் "ம்மா வந்துட்டீங்களா?" என்று ஓடி வர….

"வந்துட்டேன் செல்லம்"என்று சிரித்தாள்.

ஆஸ்மினைப் பார்த்து மேலே கையைத் தூக்கி "ம்மா தூக்கு" என்றதும்

"இரு செல்லம் ம்மா பர்தா கழற்றி முகத்தை கழுவிட்டு வரேன்" என்று பையைத் தூக்கி சமையலறையில் வைத்து விட்டு முகத்தை கழுவி துடைத்து விட்டு அவளது செல்ல மகள் ஸஹானாவை தூக்கி கொஞ்சினாள்.

"குட்டிப் பொண்ணு ஸ்கூல் போய்ட்டு வந்துடீங்களா?"


"ம்ம்… போய்ட்டு வந்து டிரெஸ்ஸே மாத்திட்டேன்" என்று சிரித்தாள்.


"ம்ம்… குட் கேர்ள் மும்மம்மாவை(பாட்டி) தொல்லை செய்யாமல் தானே இருந்தே"


"ஆமாம் அம்மா மும்மம்மா என்னச் சொன்னங்களோ அதே மாதிரி கேட்டு இருந்தேன்" என்றாள் ஸஹானா.

குழந்தையின் நெற்றியில் உச்சி முகர்ந்தவள் "சரி குட்டிப் பொண்ணு போய் விளையாடுங்க,ம்மா போய் சாப்பிட எதாவது செஞ்சி கொண்டு வரேன்" என்று சமையலறையில் உள்ளே நுழைந்தாள்.


தாகம் எடுக்கவே தண்ணீரை எடுத்து குடிக்கும் பொழுது அலுவலகத்தில் நடந்த நிழ்வுகள் ஞாபகம் வர மெல்லிய புன்னகை வந்து அவளை தழுவிக் கொண்டது.


ஆஸ்மின் தாயார் ஆமினா அவளுக்கு அருகில் வந்து "ஆஸ்மின் இன்னைக்கு வேலைக்காக போனியே என்னாச்சு?"

"நாளைக்கு திரும்ப வரச் சொல்லி இருக்காங்க,அந்த இன்டர்வியூவை முடிச்சிட்டேன்னா வேலை கிடைக்கும்னு நம்புறேன்"

அதைக் கேட்ட ஆமினா "நிச்சயம் அந்த இறைவன் உனக்கு ஒரு நல்ல வழியை காட்டனும்மா"


"நானும் அந்த நம்பிக்கைல தான் ம்மா இருக்கேன்" என்று பேசிக் கொண்டே பாத்திரத்தை துலக்க ஆரம்பித்தாள்.

"ஆஸ்மின் வந்த உடனேயே வீட்டுவேலையை ஆரம்பிச்சுட்டே கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எடும்மா"

"வேண்டாம் ம்மா மைனி வந்தவுடனே ஏன் இன்னும் வேலையை முடிக்கலைன்னு சத்தம் போடுவாங்க அதனால வேலை எல்லாம் முடிச்சிட்டே போய் ரெஸ்ட் எடுத்துகிறேன்" என்று பாத்திரத்தைத் துலக்கிக் கொண்டிருந்தவள் அடுப்பில் சாப்பாடிற்கான தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏத்தி விட்டு ஒவ்வொரு வேலையாக பார்க்கத் துவங்கினாள்.


ஆமினா அவளிடம் "நான் கொஞ்சம் உதவி செய்றேன்னு சொன்னாலும் ஏம்மா கேட்க மாட்டேங்கிற? இன்னும் சீக்கிரமா வேலை முடிஞ்சிடும்ல"

"ம்மா இதோ இந்த காயை மட்டும் உட்கார்ந்து நறுக்கிக் கொடுத்திங்கன்னா சீக்கிரம் தாளிச்சு அடுப்பில ஏத்திடலாம் அதனால இதை மட்டும் செய்ங்க அது போதும்" என்று காய்கறிகளை எடுத்து கொடுத்தாள் ஆஸ்மின்.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ஆமினாவின் கண்கள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.
'திருமணம் முடிந்து தாய் வீட்டிற்கு வரும் பெண்கள் ஓய்வை எதிர்பார்ப்பார்கள், ஆனால் தன் மகளின் நிலைமையை நினைத்து தாயுள்ளம் வருந்தியது'

ஆஸ்மின் எல்லா வேலைகளையும் முடித்து தன் அறையில் வந்து உட்காரவும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்பொழுது ஸஹானா அவளருகில் வந்து "ம்மா பசிக்குது" என்றதும் திரும்ப சமையலறைக்கு சென்று உணவை எடுத்து வந்து மகளுக்கு விசிறியால் வீசி ஊட்டி விட்டாள்.

சாப்பிட்டு முடிக்கவும் போன மின்சாரம் திரும்ப வரவும் மகளை தூங்க வைத்து அவளும் அங்கேயே படுத்து உறங்கினாள்.

சிறிது நேரத்தில் ஏதோ சத்தம் வரவும் விழித்துக் கொண்டவள் வரவேற்பறையில் எட்டிப் பார்த்தாள்.அங்கே அவளது அம்மாவின் சொந்தத்தைச் சேர்ந்த இருவரும் உட்கார்ந்து இருக்க அவர்களுக்கு அருகில் அம்மாவும், மைனியும் அமர்ந்து இருந்தனர்.


அவர்கள் பேசுவது இவள் காதிலும் மெதுவாய் கேட்டது.வந்திருந்தவரில் ஒருவர் "இப்படியே பொண்ணை எவ்வளவு நாள் பாதுகாத்துட்டு இருப்பீங்க? அவளோட சேர்ந்து இன்னொரு பொண்ணு வேற இருக்கு"

ஆமினா எதுவும் சொல்லாமல் தலையை குனிந்துக் கொண்டார்.ஆனால் ஆஸ்மினின் அண்ணண் மனைவி பானுவோ "இதை நினைச்சு தான் எங்களுக்கும் கவலையா இருக்கு" என்று சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டார்.

இன்னொருவர் "ஆஸ்மின் வேணாம்னு சொல்லிட்டு வந்தவன் இவளை விட அழகான பொண்ணா பார்த்து முடிவு செய்தாச்சுன்னு கேள்வி பட்டோம்,இவதான் வாழ முடியாதுன்னு வந்துட்டா குடும்பம்னா அப்படி இப்படி இருக்கத் தான் செய்யும் நாம தான் அனுசரிச்சு போகனும் இப்போ பாருங்க அவங்க அடுத்த பொண்ணை தேடியாச்சு" என்றார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் இருவரின் முகமும் மாறிப் போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது "நாங்க ஆஸ்மினைத் தான் பார்க்க வந்தோம்,ஆனால் அவ நிம்மதியா தூங்கிட்டு இருக்கா,இப்படி கண்ட நேரத்தில் தூங்கினால் இன்னும் குண்டானால் அவ்வளவுதான் இனிமேல் எந்த சம்மதமும் அமையாது" என்று கடும் வார்த்தைகளால் வதைத்தனர்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆஸ்மினுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.ஆனால் மனதினுள்ளே 'இந்த மாதிரி எல்லாம் பேசுவார்கள்' என்று அறிந்து புரிந்து தானே அவள் இந்த முடிவை எடுத்து இருக்கிறாள்.அதனால் அமைதியாக இருந்தாள்.


தற்போது அவர்களை சந்திக்காமல் இருப்பதே நல்லது.'நாளை நிச்சயம் இந்த வேலை கிடைத்து விட்டால் இவர்களின் வெட்டிப் பேச்சிலிருந்து தப்பித்து ஒரு புது வாழ்க்கைக்கான வழியினை ஆரம்பிக்கலாம்'
என்று நினைத்தாள்.


சிறிது நேரத்தில் அவர்களும் சென்று விட்டனர்.பின்னர் அறையிலிருந்து வெளியே வந்தவள் தனக்கான உணவை சமையலறையிலிருந்து எடுத்து வந்து சாப்பிட ஆரம்பித்தாள்.


அவளின் சைகையைப் பார்த்து பானு "ஆஸ்மின் இப்போத் தான் சாப்பிட போறியா?" என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.


"ம்ம்…மைனி வந்து தூங்கிட்டேன்.அதான் இப்போ சாப்பிடுறேன்"

"அப்படியா! இன்னைக்கும் போன இன்டர்வியூல வேலை கிடைச்சி இருக்காதே"

"இல்லை மைனி நாளைக்கு திரும்ப வரச் சொல்லி இருக்காங்க"

"எப்படி நாளைக்கு இன்னொரு தடவை வரச் சொல்லி வேலை இல்லைன்னு சொல்லி அனுப்ப போறாங்க.அதானே"


ஆஸ்மின் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.நிச்சயம் தன்னிடம் வம்பு இழுப்பதற்காகத் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது அவளுக்கு புரிந்து போனது.


"வந்தவங்க பேசினதை எல்லாம் கேட்டியா?"


அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.தற்போது அவளுடைய நிலைமை அமைதியை கடைப்பிடிப்பது மட்டும் தான்.

"இப்போ உனக்கு காது கேட்காதுன்னு எனக்குத் தெரியும் ஆஸ்மின்.எல்லாமே தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்துக்காதே! வந்தவங்க சொன்னதுல என்ன தப்பு இருக்கு? உன்னால எப்படி தனியா வாழ முடியும்னு நினைக்கிறே? கையில் ஒரு பொம்பளை பிள்ளை வேற இருக்கு,உனக்கு ஒன்னும் வயசாகலை,வாழ வேண்டிய வயசு இருக்கு ஆஸ்மின் புரிஞ்சுக்கோ,நான் சொல்றது உன் நல்லதுக்காகத் தான்"


இதற்கு மேல் பேசாமல் இருந்தால் சரியாக வராது என்று முடிவெடுத்தவள் கண்கள் முழுவதும் கண்ணீரை தேக்கி வைத்து "மைனி நான் எந்த நிலைமைல இந்த வீட்டுக்கு வந்தேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.அப்படி இருக்கும் போது அந்த கல்யாணத்தை பத்தியே ஏன் திரும்ப திரும்ப என்கிட்ட பேசுறீங்க? நான் இப்போ இப்படி நிற்கிறதுக்கு காரணமே நீங்களும் அண்ணனும் தான் அதுல உங்களை நான் இப்படி எதிர்த்து பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க என்னை விட்டுடுங்க" என்று பானுவின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்று விட்டாள்.


அவளின் தாய் ஆமினாவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.அவரிடம் வந்த பானு "மாமி (அத்தை) நான் சொல்றதை ஏன் ஆஸ்மின் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற? நீங்களாவது அவளுக்கு சொல்லி புரிய வைங்களேன்"


அவரும் கலங்கிப் போய் தான் இருந்தான்.'ஆஸ்மினின் கணவன் இன்னொரு திருமணத்தை செய்து அந்தப் பெண்ணோடு நல்லவிதமாக வாழும் பொழுது சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ஆஸ்மின் மேல் தான் குறையிருப்பதாக சொல்வார்கள்' என்று அதை நினைத்து அவர் இன்னும் பயந்துப் போய் இருந்தார்.

"மாமி நான் உங்ககிட்டத் தான் பேசறேன்"

"புரியுது பானு ஆனால் என் யோசனை எல்லாமே வேற காதர் வரட்டும் பேசிக்கலாம்" என்று அதோடு பேச்சை முடித்து வைத்தார்.

ஆஸ்மின் துணிகளை எடுத்து மடித்து வைத்து விட்டு நாளைக்கு நிறுவனத்திற்கு செல்வதற்கான துணிகளை எடுத்து வைத்து அதோடு ஸஹானா பள்ளிக்கு செல்வதற்காகன எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.


அப்பொழுது பானுவின் மூத்தமகள் வந்து "மாமி எனக்கு இந்த பாடம் சொல்லித் தாங்க ஒன்னுமே புரியலை" என்றாள்.


"அப்படியா! ஏன் புரியலை கொடு நான் சொல்லித் தரேன்" என்று அவளின் பாடங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு ஆஸ்மினின் அண்ணன் காதர் உள்ளே வந்தான்.


வீடு அமைதியாகவே இருப்பதைக் கண்டதும் இன்றைக்கு ஏதோ பிரச்சினை நடந்து இருக்கிறது என்று புரிந்துக் கொண்டவன் தன் வேலைகளை எல்லாம் முடித்து வந்து வரவேற்பறையில் உட்கார்ந்தார்.

முதலில் காதருக்கான தேநீரை வந்து கொடுத்த பானு மாமியைப் பார்த்தாள்.ஆமினா மெதுவாக வந்து மகனின் அருகில் உட்கார்ந்தார்.

"காதரு உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்"

"சொல்லுங்க ம்மா"

"கோபப்படாமல் கேட்கனும்"

"ம்ம்…"

ஆமினா நடந்த எல்லா விஷயங்களையும் சொன்னார்.அதைக் கேட்ட காதர் எந்தவொரு உணர்ச்சியும் அதற்கு காட்டாமல் அமைதியாக இருந்தான்.


"என்னப்பா இவ்வளவு சொல்லியும் ஒன்னும் சொல்லாமல் அமைதியா இருக்கே"


"இப்போ என்னை என்னச் செய்யச் சொல்லுறீங்க? முதல்ல உங்களால ஆஸ்மின் மனசை மாத்த முடிஞ்சுதா?"


ஆமினா அமைதியாகி விட்டார்.பானு உடனே "அதுக்குன்னு அப்படியே அவளை விடச் சொல்லுறீங்களா?"


"நான் அப்படி சொல்லலை பானு கொஞ்சம் அவளுக்கு டைம் கொடுக்கலாமே" காதர் சொல்ல…

"ஏற்கனவே அவளுக்கு இரண்டு வருஷம் டைம் கொடுத்தாச்சு இன்னும் டைம் வேணுமா?"


"பானு நடந்ததை எல்லாம் மறந்துட்டியா? அவ என்னவெல்லாம் கஷ்டப்பட்டான்னு கொஞ்சம் நினைச்சு பாரு"


"என்னங்க நீங்களே இப்படி பேசினால் எப்படி? நடந்து முடிஞ்ச பழைய விஷயங்களைப் பற்றியே நினைச்சுட்டு இருந்தால் வாழ்க்கையை ஓட்ட முடியுமா?"

அப்பொழுது ஆமினா காதரிடம் "காதர் அவனுக்கு பொண்ணு பார்த்ததுனால…" என்று ஆரம்பிக்கவும் சட்டென்று கோபம் கொண்ட காதர்

"ம்மா ஏற்கனவே ஒரு தடவை தங்கச்சியோட வாழ்க்கையை பணயம் வைச்சாச்சு இப்போ இதே மாதிரி தேவையில்லாத காரணத்தை சொல்லி இன்னும் அவளை வேதனைப்படுத்த நான் முயற்சிக்க மாட்டேன்"

"இல்லைப்பா அவனுக்கு கல்யாணம் முடிஞ்சு அந்த பொண்ணு நல்லவிதமா வாழ ஆரம்பிச்சுட்டா ஆஸ்மினைத் தானே எல்லோரும் தப்பா பேசுவாங்க"


"அப்படின்னா அவ பட்ட கஷ்டமெல்லாம் பொய்ன்னு சொல்லுறீங்களா?" சகோதரனாய் ஆதங்கப்பட்டு கேட்டான் காதர்.


"இல்லை காதர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை"


"வேற என்ன நினைப்புல இப்படி பேசுறீங்கன்னு நான் நினைக்கிறது? அவன் ஒரு ஆளுன்னு நினைச்சு பொண்ணை கொடுக்கிறான் அவனுங்களைச் சொல்லனும் அவனுக்கு பயந்து ஆஸ்மினுக்கு இப்போ வேக வேகமா கல்யாணம் செய்து கொடுக்க முடியாது ம்மா" என்று இருவருக்கும் சேர்த்து ஒரே பதிலைச் சொன்னான் காதர்.


உடனே பானு "அப்போ எப்பொழுது தான் ஆஸ்மினுக்கு கல்யாணம் செய்து வைக்கிறதா முடிவு செய்து இருக்கீங்க?"


"ஆஸ்மின் மனசுக்கும் எனக்கும் எப்போ நிறைவா தோணுதோ அப்போத் தான் கல்யாணம் செய்து வைப்பேன்" என்றான் காதர்.


"அதுக்குள்ள உங்க பொண்ணு வளர்ந்து பெரிய பொண்ணாகி அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டி வந்துடும்,அப்போ பொண்ணுக்கு வரனை தேடுவீங்களா? இல்லை தங்கச்சிக்கு வரன் தேடுவீங்களா?" என்று விவாதம் பேசினாள் பானு.


"இதோட இந்த பேச்சை நிப்பாட்டு பானு.மனுஷன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் நிம்மதியா இருக்க முடியுதா? எதாவது ஒன்னு சொல்லி உடனே தொல்லை செய்யுறது" என்று கோபப்பட்டான் காதர்.


பானு அதோடு வாயை மூடிக் கொண்டாள்.இதற்கு மேல் அவள் எதாவது பேசினால் அவர்கள் இருவருக்குள்ளும் மோதல் வரும் என்று அமைதியாக இருந்தாள்.


காதர் தன் அறைக்குச் செல்வதற்கு முன் ஆஸ்மினின் அறை வாயிலில் வந்து நின்று "ஆஸ்மின் இன்னைக்கு இன்டர்வியூ போனேல்ல என்னாச்சு?"


"அண்ணே நாளைக்கு திரும்பவும் வரச் சொல்லி இருக்காங்க அந்த இன்டர்வியூவும் முடிந்த பிறகு தான் வேலைக்கு கிடைக்குமா? இல்லையான்னு தெரியும்"


"சரி நாளைக்கு வந்து ஒரு நல்ல முடிவா சொல்லு அப்போத் தான் இங்கே இருக்கிறவங்களோட வாயை கொஞ்ச நாளைக்கு மூட முடியும் புரியுதா?"


"புரிஞ்சுது அண்ணே எப்படியும் வேலை கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில் தான் நானும் இருக்கேன்.இறைவன் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்"


"காட்டணும் ஆஸ்மின் கண்டிப்பா உன் வாழ்க்கையையும் சேர்த்து அந்த இறைவன்ஒரு நல்ல வழியைக் காட்டணும் தான் நானும் விரும்புறேன் என்ன நடக்கப் போகுதுன்னு பார்க்கலாம்" என்று விரக்தியாய் ஒரு பதிலைச் சொல்லி விட்டு தன் அறையில் கண்களை மூடி படுத்துக் கொண்டான் காதர்.


அவன் கண்களை மூடியதும் ஆஸ்மினின் கள்ளமில்லா சிரிப்பு முகமும் இப்பொழுதுள்ள அவளுடைய வாடிய முகமும் மாறி மாறி வந்து அவனை வதைத்தது.


இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பானு ஆமினாவிடம் "மாமி நாளைக்கு நஸிராவையும் அவ மாப்பிள்ளையையும் வீட்டுக்கு வரச் சொல்லுங்க"


"எதுக்கு பானு அவங்களை இங்கே வரச் சொல்லுறே?"

"அவளும் இவங்க கூட பிறந்தவ தானே அவகிட்டேயும் பேசினால் தான் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் அதனால வீட்டுக்கு அழைங்க இல்லைன்னா நான் போன் போட்டு அழைக்கிறேன்" என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆமினா நடப்பதை எல்லாம் நினைத்து வேதனையில் அப்படியே அமர்ந்திருந்தார்.


(தொடரும்)
 

Shailaputri R

Well-known member
ஆஸ்மின் வாழ்கைல ரொம்ப அடி வாங்கிருப்பாளோ 🤔.. கடவுள் அவளுக்கு நல்வழி காட்டட்டும்.. Everything will be ok
 

ksk2022-writer

Well-known member
ஆஸ்மின் வாழ்கைல ரொம்ப அடி வாங்கிருப்பாளோ 🤔.. கடவுள் அவளுக்கு நல்வழி காட்டட்டும்.. Everything will be ok
[/QUOTE
மனமார்ந்த நன்றிகள் சகி ❤❤
 

Aathisakthi

Well-known member
என்னப்பா.. இவங்க அவ அவ்வளவு. கஷ்டப்பட்டு டூ வந்திருக்கா...வெட்டி பேஞ்சிக்கெல்லாம் காது கொடுத்திட்டு இருகக முடியுமா?ச்ப்ப்😞😞😞
 
Top