கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -4

ksk2022-writer

Well-known member
KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா?
அத்தியாயம்-4

ஆஸ்மின் வீட்டின் உள்ளே நுழைந்ததும் நஸிரா வந்து ஆஸ்மினின் கைப்பையை வாங்கிக் கொண்டபடி "வா ஆஸ்மின் நல்லா இருக்கியா?"

"ம்ம்… நல்லா இருக்கேன் அக்கா நீ நல்லா இருக்கியா? மச்சான் (மாமா) வந்து இருக்காங்களா?" தெரியாதது போல் கேட்டாள்.


"வந்து இருக்காங்க அவங்க உள்ளே அறையில இருக்காங்க"


"சரி பாப்பாவும் பஷீரும் எங்கே?"

"அவங்க ரெண்டுபேரும் மாமியோட இருக்கா.மைனி வரச் சொன்னாங்கல்ல அதான் நானும் அவங்களும் உடனே கிளம்பி வந்துட்டோம்" என்று கண்ணைக் காட்டினாள் நஸிரா.

'மைனியோட கட்டாயத்துல தான் வந்தேன்'என்பது போல் பானு பக்கமாய் கண்ணைக் காட்டினாள்.

ஆஸ்மினைக் கண்டதும் பானு வந்து "என்னம்மா பெரிய துரையாட்டம் கிளம்பி போனே வேலை கிடைச்சி இருக்காதே" என்று நக்கலாய் கேட்டாள்.

"இல்லை மைனி வேலை கிடைச்சிருக்கு" என்று வேலைக்கான கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள்.அதை வாங்கிப் பார்த்த பானு "ம்ம்… பரவாயில்லையே" என்றதோடு வாயை மூடிக் கொண்டாள்.

பக்கத்தில் இருந்த நஸிரா ஆஸ்மினின் கையைப் பிடித்து "கங்கிராட்ஸ் ஆஸ்மின் வாழ்க்கையில் முதன்முதலா உன் விருப்பப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கே,ரொம்பவே எனக்கு சந்தோஷமா இருக்கு இதுல கண்டிப்பா நீ பெரிய வெற்றி பெறனும்" என்று மனதார பாராட்டினாள் நஸிரா.


அதைப் பார்த்த பானு முறைத்துக் கொண்டே "நஸிரா நான் உன்னை எதுக்காக இங்கே அழைச்சேன்? நீ என்ன பேசிட்டு இருக்கே அதோட அவளை இன்னும் ஏத்தி விட்டுட்டு இருக்கே?"


"இல்லை மைனி நீங்க சொல்றது எனக்கு புரியாமல் இல்ல,ஆனால் அவ முயற்சிக்கும் ஒரு நல்ல பலன் கிடைச்சி இருக்குல்ல அதனாலத் தான் அவளை வாழ்த்தினேன்" என்றாள்.


"ஏதோ நான் ஆஸ்மினுக்கு கெடுதல் நினைக்கிற மாதிரி நான் பேசுறேன்னு நினைக்காதே நஸிரா அவ நல்ல இருக்கனும் அப்படிங்கிறதுக்காகத் தான் நான் எல்லாமே சொல்றேன்"

"புரியுது மைனி நீங்களும் அண்ணனும் எப்பவும் எங்களுக்கு கெடுதல் நினைக்க மாட்டீங்கன்னு தெரியும்.வாப்பா (அப்பா) மௌத் (இறப்பு) ஆனதிலிருந்து அண்ணன் தான் எங்களை தகப்பனா இருந்து எல்லாம் செய்தாங்க,அதுக்கு அப்புறம் நீங்களும் தானே கூட இருந்து எல்லாமே செய்தீங்க அதனாலே இந்த மாதிரி எதுவும் பேசாதீங்க மைனி" என்றாள்.


ஆஸ்மின் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.அப்பொழுது அறையில் இருந்து வெளியே வந்த நஸிராவின் கணவன் அமீர் ஆஸ்மினைக் கண்டதும் "கொழுந்தியா நல்லா இருக்கியாம்மா? நாங்க வரும் பொழுது நீ வீட்டில் இல்லையே வேலைக்காக இன்டர்வியூக்காக போனேன்னு மாமி சொன்னாங்க என்னாச்சு போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா?

"ஆமாம் மச்சான் வேலைத் தேடித்தான் போனேன்.வேலை கிடைச்சிருச்சு"

"அப்படியா! ரொம்ப சந்தோஷம் ஆஸ்மின்"

அப்பொழுது அங்கே வந்த பானு "அண்ணே இங்கே வாங்க வந்து உட்காருங்க ஒரு முக்கியமான விஷயம் பேசனும்" என்று வரவேற்பறையின் நடுவில் அழைத்து உட்கார வைத்தாள்.

அமீர் வந்து உட்கார்ந்தான் அவனுக்கு அருகில் நஸிராவும் நின்றுக் கொண்டாள்.
அவர்களிடம் பானு அன்று நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் சொன்னாள்.அதைக் கேட்ட இருவரும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.


அதைப் பார்த்த பானு "கேட்ட உங்களுக்கே ஷாக்கா இருக்குல்ல எங்களுக்கும் அப்படித் தான் இருந்துச்சு,அந்த உறவே வேண்டாம்னு சொல்லிட்டு வந்தாச்சு இப்போ இன்னொரு வாழ்க்கையை தேடிக்க வேண்டியது தானே எத்தனை நாளைக்கு தான் நாங்களே பார்த்துட்டு இருக்க முடியும்னு சொல்லுங்க அண்ணே ஆஸ்மின் நல்லதுக்காகத் தானே சொல்றேன்,நீங்களும் அவளுக்கு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க அண்ணே" என்றாள்.


ஆஸ்மின் யோசனையோடு மச்சானைப் பார்த்தாள்.அவள் மனதிலோ 'எல்லோரும் ஒரே மாதிரி பேச ஆரம்பிச்சிட்டா அண்ணனால எனக்கு ஆதரவா தனியா நின்னு பேச முடியாதே' என்று கவலையோடு பார்த்தாள்.


நஸிராவின் கணவன் அமீர் ஆஸ்மினை கூர்ந்துப் பார்த்தவர் "பானு நீ பேசுறது எதுவும் எனக்கு சரியாகப் படலை"

"என்ன அண்ணே பேசுறீங்க? நான் என்னது சரியாகப் பேசலைன்னு சொல்லுறீங்க?"

"ஏற்கனவே அவ விரும்பாத ஒரு வாழ்க்கையைத் தான் நீங்க எல்லோரும் தேர்ந்தெடுக்க வைச்சீங்க திரும்பவும் அதே தப்பை செய்யப் போறியா தங்கச்சி? ஆஸ்மின் எப்போ விரும்புறாளோ? அப்போ அவ விரும்புற வாழ்க்கையை அமைச்சுக் கொடுங்க இல்லை நான் கண்டிப்பா ஆஸ்மினைக் கட்டாயப்படுத்தி கல்யாணத்தை செய்வேன்னு அடம் பிடிச்சால் நஸிராவும் ஆஸ்மினோட பிறந்தவ தானே அவளை எங்க வீட்ல வைச்சு பார்த்துக்கிறோம் அதுவும் ஆஸ்மினோட அனுமதியோட இப்போ புரியுதா பானு" என்று அவர் பானுவைப் பார்த்தார்.


நஸிரா தனது கணவனை பெருமையாய் பார்த்துச் சிரித்தாள்.அவரின் பதிலில் பானு ஆடிப் போய் விட்டாள்.ஆஸ்மினுக்கு பெருத்த ஆச்சரியமாய் இருந்தது.மச்சான் என்ன பேசப் போறாரோ? என்று நினைத்தற்கு அவரின் பேச்சு அவளுக்கு சாதகமாய் இருந்ததில் மகிழ்ச்சியாய் இருந்தது.


அப்பொழுது அங்கே வீட்டின் உள்ளே நுழைந்த காதர் நஸிராவையும் அவள் கணவனையும் விசாரித்து விட்டு அமீரிடம் "என்ன மச்சான் பானுக்கு புரியிற மாதிரி ஒரு நல்ல பதிலைச் சொல்லிட்டீங்கன்னு நினைக்கிறேன்.இனிமேல் இதைப் பத்தி அவ பேசினால் நீங்க முடிவு செய்து இருக்கிற விஷயத்தை செய்ங்க அதுக்கு நான் உங்களுக்கு முழு அனுமதி தரேன்" என்றான்.


அதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியான பானு காதரைப் பார்த்தாள்."என்ன பாக்குற? மச்சான் வந்து என்கிட்ட முன்னமே போனை போட்டு விவரம் கேட்டாங்க" என்று அவன் பேச்சை முடிக்கும் முன் பானு முந்திக் கொண்டு "உங்க முடிவை சொல்லச் சொல்லிட்டீங்க அதானே என்னங்க நீங்க யாருமே நான் எதுக்காக பேசுறேன்னு புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க" பானு கோபமாய் பேசினாள்.


உடனே அமீர் "பானு நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு காதர் மச்சான்கிட்ட போன் போட்டு என்ன பிரச்சினைன்னு கேட்டேன் மச்சான் விவரத்தைச் சொல்லிட்டு இதுல உங்க தங்கச்சியா இருந்தா என்ன முடிவு எடுப்பீங்கன்னு கேட்டாங்க.நான் சொன்னேன் பானு தங்கச்சி சொல்றதில் தப்பில்லை ஆஸ்மினுக்கு நல்லது தானே நினைக்குதுன்னு சொன்னேன்,அதுக்கு காதர் மச்சான் சொன்னாங்க ஆஸ்மினுக்கு விருப்பம் இல்லை அப்போ எப்படி கட்டாயப் படுத்த முடியும்னு கேட்கிறாங்க? நீ சொல்லும்மா இதே மாதிரி விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை உன்னை கட்டாயப்படுத்துனா பிடிக்குமா?அது தப்பு தானே?"


"தப்பு தான் அண்ணே ஆனால் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"


"சம்பந்தம் இருக்கும்மா ஒரு சின்ன விஷயத்தையே ஏத்துக்க முடியாதுன்னு சொல்லுற இது அவ வாழ்க்கைப் பற்றியது அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு இதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் அதுக்குள்ள ஆஸ்மினின் மனசு மாறிச்சுன்னா அவளுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை நானே பார்த்து முடிச்சு வைக்கிறேன்" என்றார்.


அதைக் கேட்டு கோபமான பானு "அண்ணே நீங்க என்னச் சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியலை" என்றதும் அங்கிருந்த எல்லோரும் அவளை புரியாமல் பார்த்தனர்.

அமீர் பானுவைப் பார்த்து "இன்னும் என்ன விஷயத்தை விளக்கமாக சொல்லனும்னு நினைக்கிற தங்கச்சி?"


"அண்ணே நீங்க சொன்ன ஒரு விஷயம் தான் எனக்கு புரியவே இல்லை.ஆஸ்மினுக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் கேட்டீங்க அது சரி.ஆனால் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையனும்னு சொல்லுறீங்க அது எப்படி சாத்தியம் ஆகும்னு நினைக்கிறீங்க?"

இப்பொழுது அமீர் புரியாமல் பானுவைப் பார்த்து "நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன்?"

"உங்க எல்லோருக்கும் சேர்த்து தான் சொல்றேன் நல்லா புரிஞ்சுக்கோங்க இந்த காலத்துல முதல் கல்யாணம் பண்ணுறதே பெரிய விஷயமா இருக்குது இதுல இரண்டாவது கல்யாணம் எவ்வளவு பெரிய விஷயம்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சிப் பண்ணுங்க இதுல ஆஸ்மின் விரும்பியபடி நடக்கும்னு நினைக்கிறது முட்டாள்தனம்.அவ மட்டுமில்லாமல் அவளோடு ஒரு பொம்பளை பிள்ளை வேறு இருக்கு அதுக்கும் சேர்த்து யாரு பொறுப்பை ஏத்துப்பாங்ககன்னு நினைக்கிறீங்க?" என்றதும்


பானு பேசுவதை பொறுக்க முடியாத காதர் "இப்போ என்னச் சொல்ல வர்றே பானு? இதோட ஆஸ்மின் வாழ்க்கை முடிஞ்சுப் போச்சுன்னு சொல்லுறியா?"


"இல்லை நான் அப்படி சொல்லவே இல்லை அவ வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்கனும் தான் நான் இவ்வளவு தூரம் போராடி முயற்சி செய்றேன்.இதுல நான் எப்படி நான் அந்த எண்ணத்துல பேசுவேன்"


பானுவின் திட்டத்தைப் புரிந்துக் கொள்ள முடியாமலும் அவளின் பேச்சை கேட்க முடியாமல் நின்ற ஆஸ்மின் வெறுப்பாய் "மைனி இப்போ என்னை என்னத் தான் செய்ய சொல்லுறீங்க?" கொஞ்சம் சத்தமாகவே கேட்டாள்.


"நல்லா கேட்டுக்கோ ஆஸ்மின் இனிமேல் நீ விரும்புற வாழ்க்கை கிடைக்காது மற்றவங்க விருப்பத்துக்கு தான் நாம ஒத்துக்கனும்.இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்ய எந்த பையனும் ஒத்துக்க மாட்டான்,அதனால ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறவங்களைத் தான் திருமணம் செய்ய முடியும் அதுக்காக குழந்தை இல்லாதவன் கல்யாணம் செய்ய மாட்டானான்னு கேட்காதீங்க ஏன்னா இவளுக்கு ஒரு குழந்தை இருக்கு அதை வர்றவங்களும் யோசிப்பாங்கல்ல அதனால குழந்தை இருக்கிறவங்கன்னு சம்பந்தம் பார்த்தாலுமே குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது வயசு வித்தியாசத்தில் தான் திருமணத்தை செய்ய முடியும், அதுவும் இப்போ முடித்தால் தான் இன்னும் தாமதமானால் வயசானவங்களுக்கா? இல்லைன்னா என்ன நிலைமைன்னு எனக்கு தெரியலை,இதை எல்லாம் மனசுல நினைச்சுத் தான் அவ கல்யாணத்துக்காக அவசரப்படுறேன் இப்போ நான் என்னச் சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரிஞ்சுதா?" என்று பானு எல்லோர் மனதையும் குறிப்பாக ஆஸ்மின் மனதையும் வார்த்தைகளால் வெட்டி காயப்படுத்தினாள்.


அதைக் கேட்டு எல்லோரும் ஒரு நிமிடத்தில் ஆடிப் போய் நின்றனர்.பானுவின் பேச்சைக் கேட்டு ஆஸ்மின் அங்கிருந்து அழுதபடியே தன் அறைக்குள் போய் கதவை தாழிட்டுக் கொண்டாள்.


பானு வார்த்தைகளை இஷ்டத்துக்கு பேசி வதைப்பவள் தான் ஆனால் இன்றைக்கு அவள் அவனது பொறுமையை மீறி பேசினாள்.அதைக் கேட்டு கோபமடைந்த காதர் சட்டென்று பானுவை நோக்கி கையை ஓங்கவும் அருகில் இருந்த ஆமினா வேகமாய் அவன் கையைத் தட்டி விட்டு "காதர் கோபத்தில நிதானத்தை இழந்துராதேப்பா ஆஸ்மினுக்கு இப்போ இந்த நிலைமைக்கு காரணம் ஒருவகையில் அவளுடைய கணவன் அவளை இந்த மாதிரி அடிச்சு துன்புறுத்தினான் அப்படிங்கிறதை மறந்துடாதே ஏற்கனவே நம்ம வீட்டிலுள்ள குமர் (பெண்) கஷ்டப்படுற நீ இன்னொரு குமரையும் கஷ்டப்படுத்தினாள் அந்தப் பாவம் நம்மளை சும்மா விடாது" என்று அழுகையை அடக்கிக் கொண்டே மகனை அதட்டி எச்சரித்தார்.

"ம்மா அதுக்காக இவ பேசுறதை எல்லாம் பொறுமையா கேட்கச் சொல்லுறீங்க? அவ என்ன பேசுறான்னு உங்களுக்கு புரியுதா?"

"புரியுதுப்பா அவ சொன்னால் எல்லாம் உடனே நடந்துடுமா? அப்போ இறைவன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? சொல்லு?" காதர் அமைதியாக இருந்தான்.


மேலும் ஆமினா "எனக்கு நம்பிக்கை இருக்கு ஆஸ்மின் வாழ்க்கையில் எல்லாமே மாறும் பொறுமையாய் இரு,வாழ்க்கை ஒரே நாள்ல மாறாது கொஞ்சம் கொஞ்சமா மாறும் நிச்சயமா மாறும் நான் நம்புறேன்"என்றார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நஸிராவும் அமீரும் எழுந்துக் கொண்டதும் அமீர் "மச்சான் கொஞ்ச நாள் போகட்டும் திரும்ப இதைப் பற்றி பேசலாம் நாங்க இப்போ கிளம்புறோம்" என்று தற்போதுள்ள சூழ்நிலையை மாற்ற அவர்கள் அங்கிருந்து சொல்லிக் கொண்டு சென்றனர்.


ஆனால் பானு இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லாமல் தன் அறைக்குள் நுழைந்தாள்.காதர் அப்படியே இருந்த இடத்தில் தலையை சாய்த்து அமர்ந்துக் கொண்டான்.ஆமினா கண்கள் முழுவதும் கண்ணீரையும் மனம் முழுவதும் பாரத்தையும் சுமந்துக் கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்தார்.

(தொடரும்)
 

Shailaputri R

Well-known member
பானு நிறைய சீரியல் பார்ப்பீயோ.. அதுல வர மாதிரியே பேசுற.. எப்படி அவளோ உறுதியா அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையாதுன்னு சொல்ற.. இந்த காலத்துலயும் நிறைய நல்ல பசங்க இருக்காங்கம்மா
 

ksk2022-writer

Well-known member
பானு நிறைய சீரியல் பார்ப்பீயோ.. அதுல வர மாதிரியே பேசுற.. எப்படி அவளோ உறுதியா அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை அமையாதுன்னு சொல்ற.. இந்த காலத்துலயும் நிறைய நல்ல பசங்க இருக்காங்கம்மா

கண்டிப்பா உண்மை தான் சிஸ் மனமார்ந்த நன்றிகள் 😍😍
 
Top