கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -6

ksk2022-writer

Well-known member
KSK-7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம்-6

கயலும் ஆஸ்மினும் வேலையை முடித்து விட்டு ஒன்றாக பேருந்து நிலையத்தை நோக்கி ஒன்றாக நடந்தனர்.இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நண்பர்களானதோடு சரி.


ஒருவரைப் பற்றி இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் இருந்தனர்.பேருந்து நிலையத்தில் நிற்கும் போது தான் இரண்டு பேரும் எங்கிருந்து வருகிறோம் என்பதைப் பற்றி பேசத் தொடங்கினர்.


கயல் "ஆஸ்மின் உன் வீடு எங்கே இருக்கு?"

"நான் சைதாப்பேட்டை இருக்கேன்"

"அப்படியா! நான் டி.வி.எஸ்ல இருக்கேன்"

"அப்படியா! அப்போ ரெண்டுபேருக்கும் ஒரே பஸ் தான்"

"ஆமாம் இனிமேல் நான் ஏர்ற டைம்மும் பஸ் நம்பரும் சொல்றேன் நீயும் என்கூடவே வா ரெண்டுபேரும் ஒன்னாகவே கம்பெனிக்கு போய்ட்டு வரலாம்"

"ம்ம்… சரி அப்படியே செய்யலாம் நாளைக்கு எனக்கு கிளம்புறதுக்கு முன்னாடி மெஸேஜ் செய் நான் அதுக்கு ஏற்ற மாதிரி வரேன்" என்றாள்.


இருவரும் பேசி வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் வரலாம் என முடிவெடுத்துக் கொண்டனர்.

ஆனால் கயலும் தன்னைப் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையை சொல்லவில்லை ,ஆஸ்மினைப் பற்றியும் கேட்கவில்லை.

அதனால் ஆஸ்மின் எப்பொழுது இதைப் பற்றிய பேச்சு வருகிறதோ?அப்பொழுது கயலிடம் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்து இருந்தாள் ஆஸ்மின்.


அன்றைய பொழுது அப்படியே கழிந்தது.வீட்டிற்கு வந்த பிறகு எப்பொழுதும் போல் சுமுகமான ஒரு நிலைமையே நிலவியது.ஆஸ்மின் தன்னையையும் குழந்தையையும் கவனித்துக் கொண்டு அமைதியாய் அவள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பானு தன் அம்மாவிடம் அலைபேசியில் பேசும் பொழுது "ம்மா இங்கே யாரும் ஆஸ்மின் கல்யாணத்தைப் பற்றி இப்போ பேசக் கூடாதுன்னு சொல்லி வைச்சுட்டாங்க,நான் என்ன தான் செய்யுறது?"


"ஆஸ்மின் கிட்டேயே எல்லா வேலையையும் பார்க்கச் சொன்னியா?இல்லையா?"


"சொன்னேன் இத்தனை நாளா அவள் தான் எல்லா வேலையையும் பார்த்துட்டு இருந்தாள்,இப்போ வேலைக்கு போறதுனாலயும்,நான் அன்னைக்கு வேற கொஞ்சம் இல்ல அதிகமா பேசிட்டதாலயும் உடம்பு முடியாமல் போயிடுச்சு இப்போ இவங்க தான் வேலை செய்றாங்க" என்றாள் சோகமாக…


"நீ அமைதியா இரு பானு உற் மாப்புல எவ்வளவு நாள் தான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்க்கிறார்னு பார்ப்போமே" என்றார் பானுவின் தாய்.


"ம்மா என்னப் பேசுறீங்க? அவங்களை வீட்டு வேலைப் பார்க்க வைச்சுட்டு நான் கால் நீட்டி உட்கார்ந்தால் சரியில்லைம்மா"

"சரியில்லை தான் ஆனால் ஆஸ்மினை உன் வீட்டுல இருந்து வெளியே அனுப்பனுமா? வேண்டாமா? "

"ம்மா இதுவுமே நீங்க சொல்லித் தான் நான் கேட்கிறேன் நாளைக்கு பிள்ளைங்க வளர்ந்த பிறகு சீரு,செலவு எல்லாம் ஆஸ்மின் மவளுக்கும் சேர்த்து செய்ய எங்களால் முடியாது. அதனால என் பெற்ற பெண் பிள்ளைகளுக்கு செய்றதில் குத்தம், குறைவு வந்திடக் கூடாதுன்னு தான் ஆஸ்மினுக்கு கல்யாணம் செய்யலாம்னு நினைச்சால் நடக்கிறது எல்லாம் வேற மாதிரி இருக்கு ம்மா" என்றாள் கோபமாக…


"பானு தேவையில்லாததைப் போட்டு குழம்பிட்டு வராதே,நான் சொல்றதை கேளும்மா"

"இல்லை ம்மா இந்த தடவை நீங்க சொல்றதை நான் கேட்கவே மாட்டேன்,அவங்க வேலை செய்றதை பார்த்து என்னால தாங்க முடியல,அதோடு அவங்களுக்கு என் மேல வெறுப்பு வந்தாலும் என்னால் ஏத்துக்க முடியாது"

உடனே பானுவின் தாய் "அப்போ என்னத் தான் செய்யப் போறே?"

"கொஞ்ச நாளைக்கு ஆஸ்மினைத் தொல்லை செய்யாமல் இருந்தால் எல்லோரும் அவங்களோட வேலையைப் பார்த்துட்டு அமைதியா இருப்பாங்க அதுக்கு இடையில் ஆஸ்மினுக்கு ஒரு நல்ல சம்பந்தமா நானே பார்க்கிறேன்.அப்போ யாராலையும் எதிர்தித்து பேச முடியாதுல்ல"


"ஆனால் பானு உன்னை எல்லோரும் பழைய மாதிரி வேலைக்காரியா உபயோகம் படுத்தாமல் பார்த்துக்கோ"


"ம்ம்… சரி ம்மா"

"ஏன் ஆஸ்மினுக்கு கஷ்டப்பட்டு வரன் தேடுறே? என்கிட்டயே இரண்டு மாப்பிள்ளை இருக்காங்க அதைப் பாரு"

"ஏன் ம்மா பழைய படி பிரச்சினை வர்ற மாதிரியே பேசுற? உன் கையில் இருக்கிற இரண்டும் மாப்பிள்ளைங்களா? உன் மனசாட்சியை தொட்டு சொல்லு,ஒன்னு வேலைக்கு போகாமல் இருக்கிற ஊதாரி, இன்னொருத்தருக்கு வயசு அதிகம் ஆஸ்மினுக்கும் அந்த ஆளுக்கும் குறைந்தது இருபது வயசு வித்தியாசம் இருக்கும் அதை நினைப்பில் வைச்சு பேசுனதுக்கு சரியான சண்டை வந்தது தான் மிச்சம்.அதனால் இந்த தேவையில்லாததை எல்லாம் விட்டுட்டு ஒரு நல்ல சம்பந்தமா சொல்லும்மா அப்போ தான் அவளை கல்யாணம் செய்து வைச்சாலும் எங்களை தொல்லை செய்யாமல் அவ வாழ்க்கையைப் பார்த்துட்டு இருப்பாள்" என்றாள் பானு.


"ம்கும்… நல்ல சம்பந்தம் என் கையில் இருந்தால் உன் தங்கச்சிச்கு பேசி முடிக்க மாட்டேனா? நான் எங்கே போய் தேடுறது?ஆஸ்மினை விட இரண்டு வயசு தான் சின்னவ அவளுக்கும் ஒன்னும் அமையலை என்னச் செய்ய?இவளாவது கல்யாணம் முடிஞ்ஙசு குழந்தையோடு வாழ வெட்டியாக தான் இருக்கா, ஆனால் உன் தங்கச்சி கல்யாணமே ஆகாமல் வீட்ல இருக்கா" என்றதும்


ம்மா பேசுவது பிடிக்காத பானு "எதை எதோட பொருத்திப் பேசனும்னு அளவு கிடையாது,என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கு தெரியும் பார்க்கலாம்" என்று பானு தன் தாயோடு அலைபேசியில் பேச்சை முடித்துக் கொண்டாள்.

தன் கணவனின் அதிரடிச் செய்கையால் பானு எதுவும் சொல்லாமல் அவளும் அமைதியாக இருந்தாள்.கொஞ்ச நாட்கள் போகட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டுவேலைகளில் ஆஸ்மினோடு அவளும் உடனிருந்து வேலைச் செய்ய எல்லாம் எளிதாக இருந்தது.


கயலும் ஆஸ்மினும் வேலைக்குச் சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.அந்த நிறுவனத்தில் இவர்கள் இருவரையும் "ஜோடிப் புறாக்கள்" என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.

கயலும் ஆஸ்மினும் அதை அன்பாய் ஏற்றுக் கொண்டனர்.அவர்கள் இருவரும் அப்படித் தான் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துக் கொண்டு, ஒருவரின் வேலை முடிந்து விட்டால் இன்னொருவர் உதவி செய்வது என்று தங்களுக்குள் உதவியாகவும் இருந்தனர்.


ஒருநாள்…

இருவரும் ஒன்றாக பேருந்து நிலையத்திலிருந்து நடந்து வந்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் நடந்துக் கொண்டு வந்தது ஒரு பெரிய தெரு,அதன் முனையிலிருந்து நடந்து வந்து கடைசியில் தெரு முடியும் இடத்தில் திரும்பி அவர்களின் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும் அப்போழுது அந்த தெருவின் முடியும் இடத்திலிருந்து கொஞ்சம் முன்னால் ஒருவன் தன்னுடைய மோட்டார் வாகனத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்தான்.

இருவரும் தூரத்தில் வரும் பொழுதே எதிரில் நிற்பவன் இவர்களைத் தான் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவன் தன் உடலை அசைக்காமல் அப்படியே அவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை வைத்து ஓரளவு யூகித்தனர்.அதைக் கவனித்த கயல் "ஆஸ்மின் எதிரில் நிற்கிறவன் இந்த இடத்துல புதுசா வந்து இருக்கான் போல"

"இருக்கலாம் கயல் எதுக்கு இப்போ இதைப் பற்றி எல்லாம் நீ யோசிக்கிற? இந்த ஏரியாவுக்கு யாராவது புதுசா வந்திருப்பாங்க"

"இருக்கலாம் ஆனால் அவன் நம்மைத் தான் கவனிக்கிறான் போல" என்று இருவரும் பேசிக் கொண்டே அவனுக்கு அருகில் வரத் தொடங்கினர்.

ஆஸ்மின் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

மோட்டார் வாகனத்தில் நிற்பவனை அருகில் பார்த்ததும் கயல் மெதுவாக
"ஆஸ்மின் இங்கே நிற்கிறவனை கொஞ்சம் நிமிர்ந்து பாரேன்" என்றதும் ஆஸ்மின் பயந்துபோய் குனிந்துக் கொண்டு "கயல் என்னை இப்படி எல்லாம் பார்க்க சொல்லாதே" என்று தலையை திருப்பிக் கொண்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு ஆஸ்மினை மேலிருந்து கீழ் வரைப் பார்த்துக் கொண்டே கயலும் அவளும் நிறுவனத்தின் உள்ளே நுழைந்தனர்.

அங்கே நுழைந்ததும் கயல் ஆஸ்மினிடம் "ஹேய் நான் என்னவோ உன்னை அந்தப் பையனைப் பார்த்து எனக்கு ஓகேவா என்று சொல்லுன்னு கேட்கிற மாதிரி ஐய்யய்யோன்னு பதறுறே?"

"அ...து ஏற்கனவே அந்த ஆளு நம்மையே பார்க்கிறாங்கன்னு சொன்னல்ல அதான் கொஞ்சம் பயந்துட்டேன்"

"ஷ்ப்பா… மிடியலை"

"எதுக்கு அந்த ஆளைப் பார்க்க சொன்னே?"

"அ...து" என்று கயல் சிரிக்க…

ஆஸ்மின் அவளின் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் "எதுக்கு சிரிக்குறே கயல்?"

"அது அந்த ஆளைப் பார்த்தேன் செம ஹான்சம்மா அழகா சைட் அடிக்கிறாப்புல பார்க்க நல்லா இருந்தாரு,என் கண்ணுக்கு மட்டும் தான் அழகா தெரியுறானா? இல்லை எப்படி இருக்கான்னு நீயும் ஒரு தடவைப் பார்த்தால் கன்பார்ம் பண்ணலாமேன்னு உன்னையும் பார்க்கச் சொன்னேன் நீ என்னடான்னா முகத்தையே திருப்பிட்டே போ நீ பார்க்க முடியாமல் மிஸ்ஸாயிடுச்சு இனி எப்போ வருவானோ?" என்று அவள் கன்னத்தில் கைவைத்து கவலையாகச் சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான ஆஸ்மின் "என்ன சைட் அடிக்கிறியா?" என்று வாயைப் பிளந்தாள்.

அவளின் அதிர்ச்சியைப் பார்த்த கயல் "என்னப்பா இது? நான் ஏதோ பெரிய கொலைக் குற்றம் செஞ்ச மாதிரி ஷாக்காகி வாயைப் பிளக்குறே"

அவளோ தன் அதிர்ச்சியைக் குறைத்துக் கொண்டு "அ...து இந்த வயசுல இப்படி எல்லாம் யோசிக்கலாமா?" ஆஸ்மின் தயங்கியபடி கேட்க…

கயலோ கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டாள்."என்ன? இந்த வயசா? அப்படி எனக்கு என்ன வயசு ஆயிடுச்சுன்னு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டே?டீன்ஏஜ் ஆக இருந்தால் தான் லவ்,சைட் எல்லாம் செய்யனுமா? கண்டிஷன் போட்டவங்க யாருன்னு சொல்றே?"

"ஐயோ நான் அந்த அர்த்தத்துல சொல்லலை?"

"அது இல்லைன்னா வேற என்ன?"

"சைட் அடிக்கிறது எல்லாம் தப்பு வீட்ல பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறது தான் சரி கயல்.அதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் பேசவோ பார்க்கவோ கூடாது" என்று கயலுக்கு விளக்கமாய் அறிவுரை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

தன் தலையில் கையில் வைத்துக் கொண்ட கயல் "ஷ்ப்பா மிடில கடமை,கண்ணியம்,கட்டுப்பாடுகளைகொண்ட ஆபிஸர் இனிமேல் உங்க முன்னாடி நான் இது மாதிரி பேசினால் நானே போய் சுவற்றுல போய் முட்டிக்கிறேன் சரியா?"

அவளின் பதிலைக் கேட்ட ஆஸ்மின் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு "என்னப்பா இப்படி சொல்லிட்டே?"

"வேற என்னச் சொல்லனும்னு நினைக்கிறே? சும்மா விளையாட்டா பேசினால் நீ சிரியஸா பேசுறே?"

"ஓ… நான் தான் தப்பா நினைச்சுட்டேனா?"

"நீ தப்பா நினைச்சாலும் நான் ஒன்னு சொல்லவா ஆஸ்மின்?"

"ம்ம்… சொல்லு"

"சைட் அடிக்கிறோம் அடிக்கலை அது சாதாரண விஷயம் தான் ஆனால் கா...தல் என்பது" என்று கயல் நிறுத்தி விட…

"காதல் என்பது?"

"மனசார நமக்கானவங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,கொடுக்கலாம்,இழக்கலாம் அதில் அவங்களுக்கான சந்தோஷமும் நம்மோடு எப்போதும் இருக்கிறதுக்காக மட்டும் அன்பாகத் தான் இருக்கனும்" என்று இமைகளை மூடிக் கொண்டு கண்கள் முழுவதும் வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் கயல்.

அவள் சட்டென்று கலங்கிப் போய் இருப்பதைப் பார்த்த ஆஸ்மின் அவள் தோள் மேல் ஆதரவாய் கைவைத்து "என்னாச்சு கயல்?"

"ஒன்னுமில்லை" என்று வேகமாய் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.

ஆனால் ஆஸ்மின் விடாமல் அவளை அழுந்தப் பிடித்தவள் மெதுவாய் "யாரையாவது காதலிச்சியா?"

கயல் பதில் எதுவும் சொல்லவில்லை.அமைதியாக இருந்தாள்.

"சொல்ல விருப்பம் இல்லைன்னா விடு பரவாயில்லை சொல்ல வேண்டாம்"

"ப்ச்ச...விடு நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்கிட்ட சொல்லக் கூடாது என்றெல்லாம் கிடையாது ஆஸ்மின்.சொல்றேன் ஆனால் இப்ப வேண்டாம் அதுக்கான சூழ்நிலை தன்னால வரும்னு நினைக்கிறேன்"என்றாள்.

அதற்கு மேல் ஆஸ்மின் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.
அவளாகவே சொல்லட்டும் என்று விட்டு விட்டாள்.

ஆனால் கயல் விடுவதாக இல்லை.அந்த பேச்சை ஆஸ்மின் பக்கமாக திருப்பி விட்டாள்.

"ம்ம்… காதலைப் பற்றிய என்னோட விருப்பம் இருக்கட்டும். நீ என்ன நினைக்கிற ஆஸ்மின்"

அவளின் கேள்வியைக் கேட்டதும் ஆஸ்மின் எதையோ வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

கயல் திரும்பவும் "ஏய் உன்கிட்ட தான் கேட்கிறேன் சொல்லு"

"என்னைப் பொறுத்தவரை காதல் என்பதே இல்லை வெறும் ஏமாத்துவதும்,பெண்களை அவங்களுக்கு ஏற்ற மாதிரி யூஸ் செய்றதுக்காக சொல்றது அவ்வளவு தான்" என்றாள் விரக்தியாய்…

இதைக் கேட்ட சற்றே அதிர்ச்சியானபடி "ஏன் இப்படி எல்லாம் பேசுற ஆஸ்மின்?"

"ஏன்னா… ஏன்னா ஏமாற்றத்தை மட்டும் தான் இந்த உலகம் எல்லோருக்கும் கொடுக்குது. உண்மையா? இல்லையா?" கோபமாய் கேட்டாள்.

"ஆமாம் ஆஸ்மின் உண்மைதான். ஆனால் உண்மையான அன்பும்,ஆதரவையும்,
அரவணப்பையும் நீ உன் வாழ்க்கையில் அனுபவிச்சு உணரும் போது காதல் என்பது இருக்குன்னு கண்டிப்பா சொல்லுவே,நானும் அதை கேட்பேன்"

"இல்லை நிச்சயமா அது நடக்கவே நடக்காது.என் வாழ்க்கையில் இனிமேல் எப்பவும் அந்த மாதிரி ஒன்னுக்கு வாய்ப்பே இல்லை"என்று ஆணித்தரமாய் பதில் சொன்னாள்.


அதைக் கேட்டு சிரித்த கயல் "மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது.நீ சொன்ன நிலைமையும் மாறும் இது என்னோட எண்ணம்" என்று கயல் ஆஸ்மினுக்கு பதில் சொன்னாள்.

அவர்களுக்கு இருவருக்கும் அடுத்த வேலைகள் வரவே வேறு பேச்சுகள் பேசுவதற்கு இல்லாமல் போனது.

வேலை முடிந்து மாலை நேரத்தில் இருவரும் ஒன்றாக நிறுவனத்தை விட்டு வெளியே நடக்கத் தொடங்கினர்.


அப்பொழுது அதே நபர் எதிர்புறத்தில் கொஞ்சம் தள்ளி வாகனத்தில் உட்கார்ந்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியான கயல் "ஏய் ஆஸ்மின் காலையில் வரும் பொழுது பார்த்தோமே அவன் தான் இப்பவும் இங்கே நிற்கிறான்" என்றாள்.

ஆஸ்மின் "அப்படியா!" என்று அப்பொழுது தான் அவனை அவளும் பார்த்தாள்.

கயல் "ஹேய் நான் சொன்ன மாதிரியே இருக்கான்ல"

"ம்ம்…" என்று தலையசைத்தாள் ஆஸ்மின்.

"பார்டா நான் சொன்னதும் ஏத்துக்கிட்டே" என்று சிரித்துக் கொண்டே இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டே பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டனர்.

ஆஸ்மின் தன் தோழி கயலைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை,இப்பொழுது இருக்கும் இந்த நிலைமையில் இது தேவை தானா? என்று தேவையில்லாத விஷயங்களில் கயலைப் பற்றி பேசினால் வருத்தமாக இருக்கும் என்று ஆஸ்மின் ம்மாவிடமும் சொல்லவில்லை.


நிச்சயம் பேச்சு வாக்கில் பானு மைனியிடம் சொன்னால் தேவையில்லாத பிரச்சினை என்று அமைதியாக இருந்து விட்டாள்.

மறுநாள் வழக்கம் போல் இருவரும் நடந்து வரும் பொழுது அதே இடத்தில் அதே நபர் அங்கே நின்றிருந்தான்.அதைப் பார்த்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

கயல் மெதுவாக "ஆஸ்மின் இன்னைக்கும் எதுக்காக இங்கே நிற்கிறான்னு தெரியலை" என்று இரகசியமாய் கேட்டாள்.

"தெரியலையே கயல் நாம அமைதியா கண்டுக்காமல் போய்டுவோம்" என்றாள் ஆஸ்மின்.

இருவரும் ஓடாத குறையாக வேகமாக நடந்துச் சென்றனர்.

கம்பெனிக்குள் சென்றதும் கயல் ஆஸ்மினிடம் "ஆஸ்மின் எனக்கு என்னமோ அவன் நம்ம இரண்டுபேர்ல யாரையோ கண்காணிக்க வந்து இருக்கான்னு நினைக்கிறேன்" என்றாள் யோசனையோடு....

"அவன் கண்காணிக்க நாம எந்த தப்பும் செய்யலையே! பிறவு ஏன் நீ இப்படி பயந்துப் போய் பேசுறே?" என்றாள் ஆஸ்மின்.

ஆஸ்மினின் பதிலைக் கேட்டதும் ஓரமாய் அமர்ந்துக் கொண்ட கயல் "இவ தெரிஞ்சு பேசுறாளா? இல்லை தெரியாமல் பேசுறாளா? எனக்கு ஒன்னுமே புரியலை,இந்த உலகத்துக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறாளே! ஐயோ கடவுளே ஒரு நல்ல வழியைக் காட்டுப்பா" என்று வாய்விட்டே புலம்பினாள் கயல்.

அதைக் கேட்ட ஆஸ்மின் "இப்போ நீ என்னத் தான்பா சொல்ல வர்றே? அதையாவது சொல்லேன்"

"நாம தப்புச் செய்தால் தான் அவன் நம்மளை பாலோ பண்ணனும் அப்படி எல்லாம் கிடையாது,நாம பொண்ணுங்க பசங்க நம்ம பின்னாடி சுத்துறது சகஜம் தானே" என்று அவள் தோளைக் குலுக்கிக் கொண்டுச் சொன்னாள்.

இப்பொழுது இதைக் கேட்ட ஆஸ்மின் தன் தலையில் கைவைத்து ஓரமாய் உட்கார்ந்துக் கொண்டு "ஐயோ இந்த பொண்ணுக்கு இதை விட்டால் வேற யோசனையே வாராதா? கடவுளே இந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல புத்தியைக் கொடுத்து வழிச் சொல்லுப்பா" என்று கயல் சொன்னதைப் போலவே தோளைக் குலுக்கிக் கொண்டு அதே முறையில் ஆஸ்மின் தன் கருத்தைச் சொல்ல இதைப் பார்த்த கயல் வாய் விட்டுச் சிரித்தாள்.

அதைப் பார்த்த ஆஸ்மினும் சிரித்தாள்.கயல் "ஹேய் ரொம்பத் தான்ம்பா பண்றே? என்னை மாதிரி பேசி கிண்டல் செய்றியா?உன்னை என்னச் செய்றேன்னு பாரு" என்று மிரட்டினாள்.

"இது வொர்க்கிங் டைம் அதனால விளையாட்டெல்லாம் கிடையாது ஒழுங்கா வேலையைப் பாரும்மா, அப்படின்னு கம்பெனில சொல்லுவாங்க பார்த்துக்கோங்க உங்களுக்கு தான் சொன்னேன்" என்றாள்.

"ஓ… அப்போ என்னை வேலையை விட்டு தொரத்து வாங்க உன்னை துரத்த மாட்டாங்களா?" என்று இருவரும் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துக் கொண்டிருக்கும் போது இவர்களுடன் பணிபுரியும் பணியாளர் வந்து அவர்களுக்கான வேலையைப் பற்றிய காகிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அதோடு இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்.

அன்று மாலை அதே போல் அந்த நபர் அங்கே நின்றுக் கொண்டிருந்தான்.இருவரும் நடந்து வரும் பொழுது தன் மோட்டார் வாகனத்தில் உட்கார்ந்திருந்தவன் கொஞ்ச தூரத்தில் இவர்களைக் கண்டதும் எழுந்து நின்றுக் கொண்டான்.


அவனது செய்கையைப் பார்த்த கயல் "ஆஸ்மின் அவன் என்னவோ சொல்ல வர்றான் போல இருக்கே" என்று அவளை குனிந்துப் பார்த்தாள்.

ஆஸ்மினோ மெதுவாக "ஹேய் அவன் உன்கிட்ட பேச வந்தால் என்னை ஏன் இப்படி பார்க்கிறே?"

"என்கிட்ட பேச வரான்னு எனக்கு எப்படி தெரியும்? இரண்டு பேரும் ஒன்னா தானே வரோம் ஏன் உன்கிட்ட எதோ பேச வரான் போல" என்று சொன்னதும் தான் தாமதம் ஆஸ்மின் திகிலாகி "என்ன? என்கிட்டா பேச என்ன இருக்கு?"

"எனக்கு எப்படி தெரியும்? நீ தான் ஒரு யோசனை சொல்லனும்?"

ஆஸ்மினோ ஙே என்று முழித்தவள் "கயல் இன்னும் சீக்கிரமா நடந்து பஸ் ஸ்டாண்ட் கிட்டே போய்டலாம்"
என்றாள்.

"ஹேய் இதென்ன அநியாயமா இருக்கு?"

"என்ன அநியாயம் நடந்துச்சு?"

"என்கிட்ட பேச வரான்னு நினைச்சு மெதுவா நடந்து வந்தே? உன்னுடன் சொன்னதும் சீக்கிரமா போகலாம்னு சொல்றே? அப்போ இது அநியாயமா இல்லையா?"


"ஐயோஓஓஓ… ஆளை விடு இப்போ இங்கிருந்து போகலாம் வா" என்று கயலின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடாத குறையாக வேகமாக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள் ஆஸ்மின்.

அவளின் செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே வந்த கயல் "ஆஸ்மின் ஏன் பயப்படுறே? உன்னை என்ன அப்படியே முழுங்கிடவா போறான்?"

"ம்ச்ச்… என்ன கயல் இப்படி பேசுற?"

"வேற அவன் எதுக்கு நின்னான்னு நமக்கு தெரியாது.அப்படி இருக்கும் போது நான் சொல்றேன்னு உடனே என்ன ஏதுன்னு யோசிக்காமல் அவசரப்படுறே ஆஸ்மின்?"

"கயல் நீ தானே சொன்னே? அதான்" என்றாள் அப்பாவியாய்…

"இதெல்லாம் சரி கிடையாது ஆஸ்மின்.நான் இல்லை யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நீ எதுவாக இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சுட்டு முடிவு செய் சரியா?அதோட அவன் பேச வரான்னே வைச்சுக்கோ அதுக்காக பயந்து ஓடி வருவியா? இங்கே பஸ் ஸ்டாப்க்கு வந்துட்டா எங்கே போவே? நேரா நின்னு என்னன்னு கேளு?"

"என்ன?நானா? " அவள் அதிர்ச்சியாக கேட்டாள்.

"நீ ஷாக் ஆகுற அளவுக்கு ஒன்னுமில்லை.வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அதை தைரியமா எதிர்க்கொள்ளனும் புரியுதா?"

ஆஸ்மினுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.'அவள் தன் அண்ணனிடம் தவிர வேறு எந்த ஆணிடமும் கொஞ்சம் சத்தமாக பேசியதில்லை.அவள் அப்படி ஒரு தடவை தன் கணவனை எதிர்த்து பேசியே இந்த நிலைமையில் இருக்கும் போது இதெல்லாம் தேவைதானா?' என்று தான் அவளுடைய மனநிலைமை இருந்தது.

ஆனால் கயல் சொன்னதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தாள் ஆஸ்மின்.

"நான் சொல்றது புரியுது தானே"

"ம்ம்…" என்றாள்.

"நாளைக்கு பார்க்கலாம்" என்று இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி பிரிந்துச் சென்றனர்.

(தொடரும்)
 

Shailaputri R

Well-known member
யாருடா அது புதுசா அவங்களுக்கு ஏற்கனவே இருக்க பிரச்சனை பாத்தாதா. நீயாவது நல்லவனா முதல்ல.. ப்பா பானுவோட அம்மா தான் சகுனியா 🤨
 

ksk2022-writer

Well-known member
யாருடா அது புதுசா அவங்களுக்கு ஏற்கனவே இருக்க பிரச்சனை பாத்தாதா. நீயாவது நல்லவனா முதல்ல.. ப்பா பானுவோட அம்மா தான் சகுனியா 🤨

மனமார்ந்த நன்றிகள் 😍😍அடுத்த எபி போட்டுட்டேன் சிஸ்
 
Top