கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

KSK -7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -7

ksk2022-writer

Well-known member
KSK -7 இமைகள் இரண்டும் சேர்ந்திடுமா? அத்தியாயம் -7

மறுநாள் காலையில் ஆஸ்மின் பேருந்து நிறுத்தத்தில் வந்து பேருந்திற்காக காத்திருக்கும் பொழுது அங்கே அவளுக்கு அருகில் ஒரு இருசக்கர வாகனம் வந்து நின்றது.

ஆஸ்மின் அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால் அவள் கவனம் முழுவதும் அலைபேசியில் இருந்தது.அப்பொழுது வெறுப்பாய் ஒரு குரல் ஒலித்தது.

"இன்னும் நீ திருந்தவே இல்லையா?ச்சே" என்று சொன்னதும் அந்த குரலின் சத்தத்தைக் கேட்டவளின் மனமும் செவியும் பதறியபடி நிமிர்ந்துப் பார்த்தாள்.

அங்கே நின்றிருப்பவனைக் கண்டதும் அவள் முகமே மாறிப் போனது.

"என்ன ஷாக்காகி பார்க்கிறே? வசமா சிக்கிட்டோமேன்னு பயப்படுறியோ?" என்று மறுபடியும் அவளை கேவலப்படுத்துவதிலேயே இருந்தான்.

ஆஸ்மின் அப்பொழுதும் அமைதியாக நின்றாள்.அவளருகில் நின்ற மற்றவர்களும் அவளையும் வண்டியில் இருப்பவனையும் மாறி மாறிப் பார்த்தனர்.

"இன்னும் நீ அடங்கலைப் போல இருக்கே? அதான் திமிராக நிற்கிறே? கொஞ்சமாவது கூச்சம், நாச்சம் எல்லாம் கிடையாதுல்ல உனக்கு? உன் ம்மாவும்…" என்று அவன் ஆரம்பிக்கவும்…


ஆஸ்மின் வேகமாய் "வாயை மூடுங்க சலீம் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க அப்புறம் உங்க மரியாதை காணாமல் போய்டும் பார்த்துக்கோங்க"
என்றாள் கோபமாக…

"சபாஷ் கட்டின புருஷனையே பேர் சொல்லி கூப்பிடுற பாரு நீ எப்படிப்பட்ட பொம்பளைன்னு எல்லோருக்கும் தெரியும்டி வேலைக்கு போற போல அதான் இன்னும் திமிரு ஜாஸ்தியா இருக்ககுடி உனக்கு"

"ம..ரியாதை மரியாதையா பேசுங்க நான் எப்படி மரியாதையா பேசுறேனோ அதே மாதிரி பேசுங்க"

"ப்ச்சீ… ஆளையும் பேச்சையும் பாரு மரியாதை வேணுமா? எங்க வீட்டு மானத்தை எல்லாம் வாங்கிட்டு போனவ நீ மரியாதையைப் பற்றி பேசுறியா?உனக்கு என்ன கொடுத்தாலும் நிறைவுங்கிறதே கிடையாதே"

"தேவையில்லாததையும் பேசாதீங்க"

"அப்படித் தான் பேசுவேன்.உன்னால என்ன செய்ய முடியும்? ஒன்னுமே பண்ண முடியாது ஏன்னா நான் ஆம்பளை நான் சொல்றதை அடங்கிப் போய் நீ கேட்டுத் தான் ஆகனும் அப்படி இருக்க முடியாதுன்னு தானே வீட்ல இருந்து ஓடிப் போன?"

ஆஸ்மின் அங்கே நிற்க பிடிக்காமல் அங்கிருந்து நகர்ந்துச் செல்ல நினைத்து முதல் அடியை வைக்கும் போது சலீம் வேகமாய் ஒரு அழைப்பிதழை எடுத்து அவள் கையில் திணித்தான்.

"நீ என்னச் சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா? இருக்காது ஆனால் எனக்கு ஞாபகம் இருக்கு,உன்னை மாதிரி ஆளை எல்லாம் யார் கல்யாணம் செய்வாங்கன்னு கேட்டல்ல இந்த பாரு என் ம்மா உன்னைவிட அழகா,படிச்சவளா,வசதியானவளா நல்ல பொண்ணா பார்த்து எனக்கு சம்பந்தம் பேசி முடிச்சிருக்காங்க இன்னும் பத்து நாள்ல கல்யாணம் கண்டிப்பா வந்து ஐயோ நம்மத் தலையிலேயே நாமே மண்ணை அள்ளி போட்டுகிட்டோமே நினைச்சு அழுது நல்ல சாப்பிட்டுட்டு போ சரியா? ஷ்ப்பா… உன்கிட்ட இருந்து விடுதலை கிடைச்சதே எனக்கு பெரிய நிம்மதி" என்றான்.

அதற்கு மேல் நிற்க பிடிக்காத ஆஸ்மின் அவள் நிறுவனத்திற்குச் செல்ல வேண்டிய பேருந்து வரவும் வேகமாய் அதில் ஓடிப்போய் அமர்ந்துக் கொண்டாள்.

சலீமோ அவளை கேவலமாய் பார்த்து சிரித்தவன் 'எங்கே தப்பிக்கப் பார்க்குறே? விடமாட்டேன் உன்னை நிம்மதியா இருக்க விடமாட்டேன்,இனிமேல் தான் உனக்கு உண்மையான வலியும் வேதனையும் இருக்கு ஆஸ்மின் என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போனல்ல உன்னை என்னை விட்டு தூரப்போக விடுவேனா? விட மாட்டேன்' என்று வஞ்சகமாய் நினைத்து அவளையே வெறித்துப் பார்த்தான் சலீம்.


வேகமாய் அவனிடமிருந்து தப்பித்தாள் போதும் என்று பேருந்து ஏறியவள் ஒரு இருக்கை காலியாக இருக்கவும் அதில் போய் அமர்ந்துக் கொண்டாள். அதுவரை அடக்கிக் கொண்டிருந்த கண்ணீர் வேகமாய் வெளிவரத் தொடங்கியது.

கையில் இருந்த அழைப்பிதழை எடுத்து படித்துப் பார்த்தாள்.அதில் சலீமின் பெயரோடு இன்னொரு பெண்ணின் பெயரும் இருந்தது.அதைப் பார்த்ததும் அவள் தொண்டை வறண்டு காய்ந்துப் போய்க் கொண்டிருக்க… அவளின் கண்களோ வற்றாத நீராக கண்ணீரை சிந்திக் கொண்டிருந்தது.

அழைப்பிதழைக் கண்டவளின் மனமோ அன்று தன் வாழ்வில் நடந்த இதே தருணத்தை மனதில் அசைப் போட்டது.

ஆஸ்மின் ஆமினாவின் மூன்றாவது குழந்தை.அவள் அந்த வீட்டில் செல்லப்பிள்ளையாக இருந்தாள்.படிப்பு முடியும் நேரத்தில் அவளுக்கு ஒரு நல்ல வரனைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆஸ்மினும் அவளது அம்மாவும் அவர்களது சொந்த சாசி (சித்தி) வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.அப்படி அங்கே செல்லும் பொழுது அவர்கள் வாடகைக்கு இருந்த உரிமையாளரின் மகனாக சலீம் இருந்தான்.

ஆஸ்மினின் சாசி வீடு கீழேயும் சலீமின் வீடு முதல் மாடி மேலேயும் இருந்தது.மேலே செல்வதற்கான வழி இவர்களின் வீட்டைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.ஆஸ்மின் சாசி வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் சலீம் வெளியில் இருந்து வரும் பொழுது அவளை பார்ப்பதும் பின்னர் அடிக்கடி அவளை பார்க்கும் சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

இதை எல்லாம் ஆஸ்மின் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தாள்.ஒருநாள் சலீமின் தாய் ஆமினாவைச் சந்திக்க வந்திருந்தார்.

வந்தவர் ஆமினாவிடம் "எங்களுக்கு ஆஸ்மினைப் பிடித்து இருக்கிறது உங்களுக்கும் என் மகனை பிடித்திருந்தால் இருவருக்கும் நிக்காஹ் பேசி முடிவு செய்யலாம்" என்று ஆமினாவிடம் சொன்னவர் "உங்க வீட்லயும் பேசி ஒரு நல்ல முடிவா சொல்லுங்க,நாங்க வெயிட் செய்றோம்" என்றார்.

அதைக் கேட்ட ஆமினாவிற்கு சந்தோஷமாக இருந்தது.இவ்வளவு பெரிய சம்பந்தம் அவர்களாகவே வந்து கேட்கவும் மகிழ்ந்த ஆமினா இதைப் பற்றி தன் வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னார்.

ஆஸ்மினும் கேட்டுக் கொண்டிருந்தாள்.ஆனால் இந்த திருமணத்தில் அவளுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை,காரணம் பெண் கேட்டுவந்த சலீமின் குடும்பம் இவர்களை விட வசதியானவர்களாக இருந்தார்கள்.

காதர் தன் குடும்பத்தோடு வாடகை வீட்டில் இருந்தான்.ஆனால் சலீமின் குடும்பமோ மூன்று அல்லது நான்கு வீடுகளுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.அதோடு ஒருதடவை ஆஸ்மின் தன் தாயோடு சலீமின் அக்கா திருமணத்திற்கு சென்றிருக்கிறாள்.

அப்பொழுது அவர்களின் குடும்பத்தார்கள் எல்லோரும் வசதியானவர்களாகவும்,
பகட்டானவர்களாகவும் இருந்தார்கள்.அது அவர்கள் உடுத்தும் உடையிலும் அணிந்திருந்த நகையிலும் தெரிந்தது.அப்படி இருக்க மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்மினை அவர்கள் பொண்ணு கேட்கவும் அவளுக்கு யோசனையாய் இருந்தது.


ஆஸ்மினின் குடும்பத்தார்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.நஸிரா,பானு என எல்லோருக்கும் சம்மதம் தான்.காதர் மட்டும் யோசித்து சொல்வதாக சொல்லி விட்டான்.
ஆஸ்மினுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகிறது என்பது தான் அவர்களின் எண்ணமாக இருந்தது.ஆனால் ஆஸ்மினின் எண்ணங்களோ திருமணத்திற்கு பிறகான அவளுடைய நிலைமையை நினைத்து தான் யோசனையாக இருந்தது.


சலீமின் சம்பந்தம் தனக்கு சரி வருமா? விரலுக்கு ஏற்ற வீக்கமாகத் தான் இருக்க வேண்டுமே தவிர தங்களை விட வசதியானவர்கள் வாழ்க்கைக்கு சரி வருமா? என்பதே அவளின் எண்ணமாக இருந்தது.

ஆமினாவிற்கு மகன் மற்றும் மகளின் விருப்பம் தான் முக்கியமாக இருந்ததால் அவரும் அமைதியாக இருந்தார்.இரண்டு நாட்கள் சென்றபின் ஆமினாவின் தங்கை வந்து "என்ன முடிவு செஞ்சீங்க?"

ஆமினா காதரைப் பார்த்தார்.காதரோ ஆஸ்மினைப் பார்த்தான்.இவர்களைப் பார்த்த சாசி "என்னப்பா நான் கேள்வி கேட்டால் ஒருத்தரையொருத்தர் பார்த்துகிறீங்க"


உடனே ஆமினா "அவங்க வாப்பா இல்லை தங்கச்சி காதர் தான் எல்லாம் பார்க்கனும் அதான் அவன்கிட்டேயே முடிவு கேட்டுரு"

"சாசி அவங்க குடும்பத்தைப் பத்தி எங்களை விட உங்களுக்கு நல்லத் தெரியும் தானே"

"என்னப்பா காதர் இப்படி கேட்டுட்டே? எத்தனை வருஷமா அவங்களை நமக்குத் தெரியும்.அதனால நம்பி கொடுக்கலாம்"

"இல்ல…" என்று யோசித்தவன் "ஒருமுறை ஆஸ்மின்கிட்டேயும் சம்மதம் கேட்டுட்டு முடிவெடுக்கலாம்னு எனக்கு தோணுது"

உடனே சாசி "என்ன காதர் அவகிட்டப் போய் கேட்டால் அவளுக்கு என்ன தெரியும்? பெரியவங்க நாமத் தான் பொண்ணுக்கு என்ன நல்லதோ அதைப் பார்த்து முடிவு செய்து வைக்கனும் இதுல ஆஸ்மின் விருப்பம் என்ன கேட்க வேண்டி இருக்கு?"

அருகில் நின்ற பானு "ஆமாம் மாமி சொன்னது சரி தான் நானும் அதை ஒத்துக்கிறேன்.நாம நினைச்சுப் பார்க்க முடியாத சம்பந்தம் இது"

பானுவை முறைத்துப் பார்த்த காதர் சாசியிடம் "இல்லை சாசி என்ன தான் நாம நல்லதாக பார்த்து முடிச்சாலும் அந்த மாப்பிள்ளையோடு வாழப்போறதும்,அந்தக் குடும்பத்தோடு இருக்கப் போறதும் ஆஸ்மின் தானே அதனால அவளுடைய விருப்பத்தையும் நாம கேட்கனும் அதனால அவ முடிவையையும் கேட்டுட்டு நாளைக்கு முடிவைச் சொல்றேன்" என்றான்.

அவரும் சரியென்று ஒத்துக் கொண்டுச் சென்று விட்டார்.

காதர் தன் தங்கை ஆஸ்மினை அழைத்து "ஆஸ்மின் உள்ளே இருந்து எல்லாத்தையும் கேட்டு இருப்பேன்னு நினைக்கிறேன் விவரமா சொல்லனுமா?" என்றதும் ஆஸ்மின் மெதுவாய் இல்லை என்று தலையசைத்தாள்.

"அப்போச் சரி ஆஸ்மின் உன் முடிவு என்னன்னு சொல்லும்மா,சலீம் வீட்ல ஓகே சொல்லட்டுமா?"

"அண்ணே உங்களுக்கு இதுல விருப்பமா இருக்கா?"

"என்னோட விருப்பம் முக்கியம் இல்லை ஆஸ்மின் உன்னோட பதில் என்ன? அது தான் எனக்குத் தேவை"

"அண்ணே அந்த குடும்பம் கொஞ்சம் வசதியானவங்க அதோட என்னால சமாளிக்க முடியும்மான்னு தெரியல" என்று நிறுத்தினாள்.

"என் மனசுலயும் அது தான் ஓடிக் கொண்டிருக்கு ஆஸ்மின்"

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பானு ஆமினாவிடம் "மாமி இவங்க ரெண்டுபேரும் என்னப் பேசிட்டு இருக்காங்கன்னு உங்களுக்கு புரியுதா? இந்த மாதிரி ஒரு சம்பந்தம் வேற யாருக்காவது வந்திருந்தால் இந்நேரம் யோசிக்காமல் முடிவு பணிருப்பாங்க நீங்க என்னடான்னா பேசிட்டு இருக்கீங்க?" என்று பானு சொன்னாள்..

அதைக் கேட்ட காதர் "பானு நீ பேசாமல் இரு ஆஸ்மின் சம்மதம் தான் எனக்குத் தேவை மற்றவங்களுடையது கிடையாது" என்றான் முடிவாக…

ஆஸ்மின் தன் மனதில் உள்ள எண்ணங்களை பற்றி விரிவாக எல்லாம் சொன்னாள்.இதை எல்லாம் கேட்ட அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.அதோடு அவள் சொல்லும் காரணங்களும் உண்மை தானே.

உடனே ஆமினா "ஆஸ்மின் உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிடலாம்மா" என்றார்.

பானு இடைமறித்து "ஆஸ்மின் உன் காரணத்தை நீ சொன்னே நாங்க கேட்டோம்ல இப்போ நான் சொல்ற விஷயங்களும் சரியா? இல்லையான்னு நீ கொஞ்சம் யோசிம்மா" என்றதற்கு அவள் சரியென்று தலையசைத்தாள்.

"நீ சொல்றது எல்லாமே சரிதான்.ஏன் இப்படிக் கூட இருக்கலாம்ல அவ்வளவு வசதியானவங்க உன்னை பிடிச்சு வர்றதுக்கு நம்ம குடும்பமும் நீயும் ஒரு காரணமா இருக்கலாம்ல இல்லைன்னா இவங்க ஏன் வந்து சம்பந்தம் பேச போறாங்க? அதோட இறைவன் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும்னு இந்த மாதிரி ஒரு வரன் வந்து இருக்கலாம்.அதோடு நாமளும் உன்னை சும்மா அனுப்ப போறது இல்லை நம்மால முடிஞ்ச சீர்களை செய்யப் போறோம் அதனால நீ சும்மா போகப் போறது இல்லை யாரோ தெரியாதவங்களைப் பார்த்து பேசி நம்பி நிக்காஹ் செய்றதுக்கு நம்ம குடும்பத்துக்கு ரொம்ப வருஷம் தெரிஞ்சவங்களை உனக்கு பேசி முடிக்கிறது தப்பில்லையே சுற்றி சொந்தங்காரங்க நிறைய பேர் இருக்காங்க நாளைக்கு எதாவது ஒன்னுன்னா நாம போய் என்ன ஏதுன்னு கேட்கலாம் அல்லா காப்பாத்தட்டும் அந்த மாதிரி எதுவும் நடக்கக் கூடாது இருந்தாலும் ஒரு பேச்சுக்கு சொன்னேன்" என்றாள்.

பானு சொல்லும் காரணங்களும் சரியாகத் தான் இருந்தது அதனால் ஆஸ்மினும் மற்றவர்களும் யோசனையில் இருந்தார்கள்.

காதர் "இரண்டு பேர் சொல்றதும் சரியாகத் தான் இருக்கு,அதனால நாம நமக்குள்ள எதுவும் குழப்பிக்க வேண்டாம் நாளைக்கு சாசி,சாசா,மாமா எல்லோரையும் அழைச்சு ஒரு தடவை பேசி என்னன்னு முடிவெடுக்கலாம்" என்றான்.

மறுநாள் எல்லோரும் சலீமையும் அவனது குடும்பத்தைப் பற்றி நல்லதாகவே சொன்னார்கள்.காதரால் மறுத்து பேச வேறு எந்த காரணமும் சொல்ல முடியவில்லை அதனால் அவன் அமைதியாக இருந்தான்.

எல்லோரும் இணைந்து பேசியதால் பெரியவர்கள் முடிவு சரியாகத் தான் இருக்கும் என அவனும் நினைத்தான்.ஆஸ்மினின் மறுப்பு அங்கே யாருக்கும் பெரிதாகவே தெரியவில்லை.எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவளை வேறுமாதிரி யோசிக்க வைக்கிறது என்பதே எல்லோருடைய பதிலாகவும் இருந்தது.

அதனால் எல்லோரும் முடிவு ஒருமனதாக இருக்க சலீமோடு ஆஸ்மினின் நிக்காஹ் முடிவு செய்யப்பட்டது.மூன்று மாதம் இடைவெளியில் ஆஸ்மினுக்கும் சலீமுக்கும் நிக்காஹ் நடந்தது.இடையில் இருவருமே அலைபேசியில் பேசிக் கொள்ளவில்லை.

ஆஸ்மினுக்கு பல குழப்பங்கள் மனதிலே இருந்தது.அவளுடைய குழப்பத்திற்கு ஏற்ற பதில் கிடைக்காமல் "நீ நினைப்பது போல் இருக்காது" என்று ஆறுதல் பேச்சுக்கள் தான் இருந்தது.

நிக்காஹ் முடிந்து இருவரும் ஒன்றாக வீட்டில் பெண் அழைப்பிற்காக காத்திருந்த பொழுது ஆஸ்மின் அவள் மனதிலுள்ளதை நிறைய தயங்கத்தோடும்,கொஞ்சம் தைரியத்தோடும் கேட்டாள்.

"என்னங்க நான் ஒன்னு கேட்பேன் என்னை எதுவும் நினைக்க மாட்டீங்கல்ல"

சலீம் சிரித்துக் கொண்டே "இல்லை ஒன்னும் நினைக்க மாட்டேன் சொல்லு"

"அ...து" என்று நிறுத்தி விட்டு "என்ன கல்யாணம் செய்ய காரணம்?"

அவளைப் பார்த்து சிரித்தவன் "காரணம் நீ மட்டும் போதுமே" என்றான்.

அவனின் பதிலில் அவளே ஆடிப் போய் விட்டாள்.சலீமின் ஒற்றை பதிலில் அவளின் கேள்விகள் அனைத்தும் காணாமல் போனது.

அதற்கு பிறகு அவர்களின் சுயரூபம் தெரிவதற்கு முன்புவரை அவள் தனது அழைப்பிதழைக் கண்டபொழுது அது இனிமையாய் தெரிந்தது.அதைப் போலவே கையில் இருந்த அழைப்பிதழைத் தொட்டுப் பார்த்தவளுக்கோ அங்கே இன்னொருப் பெண்ணின் பெயரைக் காணவும் நினைத்தது போல் எல்லாம் கனவாகிப் போனது ஆஸ்மினுக்கு அப்படியே கண்மூடி அமர்ந்திருந்தவளுக்கு அவள் இறங்க வேண்டிய இடத்தின் பெயரை நடத்துனர் சத்தமாகச் சொல்ல அந்த அழைப்பிதழை எடுத்து தன் கைப்பையில் உள்ளே வைத்து விட்டு பேருந்தை விட்டு இறங்கி தன் நிறுவனத்திற்குச் செல்வதற்காக நடக்க ஆரம்பித்தாள்.


எப்பொழுதும் போல் அங்கே அந்த புதியவனும் நின்றுக் கொண்டிருந்தான்.

(தொடரும்)
 

ksk2022-writer

Well-known member
நிறைய பேர் புரிஞ்சுக்காமல் இருப்பது தான் பிரச்சினை என்னச் செய்ய? நன்றிகள் 😍
 

Shailaputri R

Well-known member
இது எல்லாம் டூ much.. நீ எல்லாம் மனுஷன்னே இல்ல தெரியுமா.. கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பேச்சு கல்யாணத்துக்கு அப்பறம் ஒரு பேச்சுன்னு
 
Top