கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

manjam 13

Manjam 13


அதிதிக்கு கொடுக்குமாறு தன் தம்பியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தாள். தன் அம்மாவுக்கு தன் நிலை தெரியவேண்டாம் என்று அதிதி நினைத்திருக்க, வித்யாவோ மகளின் நிலைமை எண்ணி மனசுக்குள் மருகினாள்.


மாடியில் தனது அறைக்கு சென்ற நிரஞ்சனுக்கோ மனது நிலை கொள்ளவில்லை. அவளுடன் பள்ளிக்காலம் முதல் கழித்த தருணங்கள்... இருவரும் சேர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சி.ஏ இன்ஸ்டிட்யூட் சென்றது, இவனுக்காக அவளும்

சி.ஏ சேர்ந்தது, இருவரும் சேர்ந்தே விடிகாலை வகுப்புகளுக்கு சைக்கிளில் சென்றது, வித்யாவின் அன்பு, தன் வீட்டிலிருந்து வெளியேறும் சமயம் அதிதி தன் வீட்டில் தனக்கு இடமும் கொடுத்து, மேற்கொண்டு படிக்க வழி செய்தது, என்று ஒவ்வொன்றாய் மனதிற்குள் ஒட்டிக்கொண்டிருந்தவனுக்கு, சட்டென்று அதிதியின் திருமணத்திற்கு முன் தனக்கும் விஸ்வத்திற்கும் நடந்த சம்பாஷைனை ஞாபகம் வர அவன் உடலும் உள்ளமும் அத்தனை நேரம் இருந்த மிருது தன்மையை மீறி இறுகியது. தன்னைக் கட்டுப்படுத்துவதற்கு நிரஞ்சனுக்கு வழி தெரியவில்லை. விஸ்வம் மீது அவனுக்கு இன்னும் கோபம் தீரவில்லை. அந்த கோபத்தின் வெளிப்பாடாகதான் விசுவம் எத்தனையோ முறை அழைத்தும் கூட அவரைப் பார்க்கவும் வரவில்லை. அவரது அலுவலகத்திலும் சேரவில்லை. ஆனால் ஏனோ அதை வித்யாவிடம் காண்பிக்க அவனுக்கு மனமில்லை.

அதிதி அனுப்பிக் கொண்டிருந்த மெயில் களுக்கு அவனால் பதில் அனுப்ப முடியவில்லை அவன் மனம் முழுவதும் காதல் நிரம்பி இருக்க, என்னவென்று தன் திருமணமான காதலிக்கு பதில் அனுப்ப முடியும்?

உள்ளூர ஊறும் தனது காதலை பெண் அவளுக்கு கடத்த அவன் காத்திருக்கையில், அவளோ தன் அப்பா அம்மா நிச்சயம் செய்த பையனை தனக்கு பிடித்திருக்கிறது, நான் திருமணத்திற்கு தயார் என்று தன்னிடமே கூறும்பொழுது நிரஞ்சன் உள்ளூர நொறுங்கிப் போனான்.


அப்பொழுதும் அவன் அதிதியிடம் தன் காதலை பகிர்ந்து கொள்ளவில்லை. அப்படியே சொல்லி இருந்தாலும் அவள் ஒப்புக்கொண்டு இருப்பாளா என்பதும் தெரியவில்லை.


சி ஏ. இன்டர் படிக்கும் சமயம் மூன்று வருட பயிற்சி காலத்தை அதிதியும் நிரஞ்சனும் விஸ்வத்தின் சி. வி. என் ஆடிட்டிங் நிறுவனத்தில் தான் எடுத்தார்கள். அந்த சமயம் அதில் ஒரு பங்குதாரரான நாராயணன் அவரின் மகள் மித்ராவும் பயிற்சி காலத்திற்கு என்று சேர்ந்திருந்தாள். அவளுக்கு நிரஞ்சனை பிடித்துப்போக , நேரடியாக அவளிடம் தன் காதலை சொல்ல தயங்கிக் கொண்டு அதிதியின் மூலம் தூது விட, நிரஞ்சன் பெரிதாக எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. அதேசமயம், நிரஞ்சனுக்கும் மித்ராவுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை அதிதி உணர்ந்தாள். மித்ராவின் காதலை நிரஞ்சன் ஒப்புக்கொண்டு விட்டதாகவே அதிதி அவளுக்கு தோன்றியது.

ஆனால் எந்தவித காரணத்தைக் கொண்டும் அவர்களிடையே இருக்கும் உறவு பற்றி அவள் கேட்டதில்லை. நிரஞ்சனும் தான் மித்ராவை காதலிக்கவில்லை என்று அதிதியிடம் எந்த விளக்கமும் சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை மித்ராவும் நிரஞ்சனும் காதலர்கள்.


அந்த எண்ணம்தான் அவள் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கேட்ட போது ஒப்புக் கொள்ளச் செய்தது. அதிதிக்கும் நிரஞ்சனுக்கும் இடையே மூன்றாவது நபர் யாரும் வரும்பொழுது அதிதி இவ்வாறாக தனிமையை உணர்கிறாள். அவளால் வேறு யாரையும் மனதளவில் அனுமதிக்க முடியவில்லை. வெளியே தெரியாவிட்டாலும், அவளே உணராவிட்டாலும் அவள் மனது நிரஞ்சனை தன்னுடைய உடமை எண்ணத் தொடங்கி விட்டது. இது காதல் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த ஒன்றின் மீது வைக்கும்

பற்றுணர்வு.


ஒருவேளை இந்த உணர்வின் தீவிரம் தான் காதல் எனும் நிலையா என்று என்னால் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.

நிரஞ்சனின் இடத்தில் விநயன் என்று அவள் மனம் நம்பியது. இனி தன் வாழ்நாள் முழுவதற்கும் விநயன் தான் என்று தீர்மானம் செய்தது.


நிதர்சனத்தில் நடந்த நிகழ்வுகள் அவள் மனத்தை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக்கியது.


மனம் மிகவும் நுட்பமானது,

நூதனமானது!


தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு அமர்ந்த அதிதிக்கு மனதிற்குள் ஆயிரம் போராட்டம். தனக்கும்

விநயனுக்கும் இடையே நடந்த கசப்பான விஷயங்களை எப்படி தனது பெற்றோர்களிடம் சொல்வது என்ற எண்ணமே அவளுக்கு தலை சுற்றியது . சொல்லாமல் தீராது... ஓரளவிற்கு 'தான்' இங்கு வந்ததில் இருந்தே அம்மா கண்டுபிடித்து இருப்பாள், ஏதோ பிரச்சனை என்று. ஒரு வேளை இத்தனை வருடங்களாக என்னை கண்டுகொள்ளாமல் இருந்த நிரஞ்சனை கூட அம்மாதான் அழைத்திருக்க கூடும்.

அதிதி உள்ளே நுழைந்தவுடன் வித்யாவின் நடத்தை மகளை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் தான் இருந்தது. அப்படி என்றால் நான் சென்னை வந்து விட்டேன் ' என்று அம்மா அப்பாவிற்கு ஏற்கனவே தெரியுமா? பிறகும் ஏன் என்னை தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை என்ற கேள்வி அவளை குடைந்தது. அவர்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?

நாள் முழுவதும் அதிதி தனது அறையின் கதவைத் திறக்கவே இல்லை. இரண்டொரு முறை வித்யா உணவிற்காக அழைத்து கூட அதிதி இப்பொழுது வேண்டாம் என்றுதன் அறைக்குள் இருந்தே குரல் கொடுத்து விட்டாள். நிரஞ்சனுக்கும் சாப்பிடுவதற்கு மனது இல்லைதான். ஆனாலும் கூட, வித்தியாவிற்காக அவள் மனது கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பெயருக்கு சாப்பிட்டான். அதிதி திருமணமாகி சென்ற பிறகு இத்தனை வருடங்களாக அவன் வித்யாவின் கையால் சாப்பிட்டிருக்கவில்லை. மணமக்கள் கிளம்பிய பிறகு தானும் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். விஸ்வத்திற்கோ மனதில் நெருடல். இன்னும்கூட நிரஞ்சனிடம் மென்மையாகப் பேசி இருக்கலாம். அவனுக்கும் தன் மகள் வயது தான். தனக்கு பக்குவம் போதாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டார் விஸ்வம்.

அதேசமயம் வித்யா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நிரஞ்சன் தனது பிடிவாதத்தை விட்டு அதிதியின் வீட்டில் தங்கி இருப்பதற்கு சம்மதிக்கவில்லை. அவனுக்கு என்று பெரிதாக பொருட்கள் ஒன்றுமில்லை. அவனது துணிமணிகளும், இரண்டு அட்டை பெட்டிகளில் புத்தகங்களும் தான். பரிட்சைக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது என்ற நிலையில் அவன் தனது நண்பனின் அறையில் சென்று தங்கி கொண்டு விட்டான். அவன் அம்மா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நிஜத்தில் நிரஞ்சனின் அம்மாவிற்கு அவனுக்கும் விஸ்வம் -நீரு இருவருக்கும் இடையே நடந்த எந்த பேச்சுவார்த்தையும் தெரியாது. தன் மகன் இவ்வளவு வேகமாக இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என்று அவரால் எதையும் யூகித்து பார்க்க முடியவில்லை அந்த நேரத்தில். பின்பு வேறொரு சமயத்தில் வித்யாவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இலைமறைகாயாக வித்யா சொன்ன தகவல்தான் இருவருக்குமான பேச்சுவார்த்தை. ஆனால் அதையும் நிரஞ்சன் அம்மாவிடம் வித்யா முழுதாக சொல்லவில்லை.


எப்பொழுதுமே, நிரஞ்சனுக்கு வித்யாவின் கைப்பக்குவம் இரண்டு

பிடிகள் அதிகமாக சாப்பிட செய்யும். ஆனால் இன்று அவனால் உணவை ரசித்து சாப்பிட முடியவில்லை. சாப்பிடும் போது இரண்டு முறை புரையேறியது. போதாத குறைக்கு நிரஞ்சன் அதிதியின் வீட்டிற்கு வந்த புதிதில் இன்னொரு வீட்டில் வந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு கூச்சம் கொண்டான். வித்யாவும் விஸ்வமும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கூட அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை.

இதை கவனித்துக் கொண்டே இருந்த அதிதி தான் அவன் சாப்பிடும்போது ஒவ்வொரு சமயமும் அவன் அருகிலேயே அமர்ந்து கொண்டு பரிமாற தொடங்கினாள். எப்பொழுதுமே அதிதி, நீரு சாப்பிட்ட பிறகு சாப்பிடுவதை தனது பழக்கமாக மாற்றிக்கொண்டு விட்டாள். அவனும் அதிதி உணவு பரிமாறும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாய் தனது கூச்சத்தை விட்டு நன்றாக சாப்பிட தொடங்கிவிட்டான். அதிதி திருமணமாகி செல்லும்வரை அவளது இந்த பழக்கம் மாறவே இல்லை. தன் நடவடிக்கை நிரஞ்சனின் மனதில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்று பெண்ணும் உணரவே இல்லை.


நிரஞ்சனின் எண்ணங்கள் அவனை அவனது பழைய நாட்களை நோக்கி அழைத்துச் சென்றது. அவன் வாழ்வில் ஆறாம் வகுப்பில் இருந்து இன்று வரை நீக்கமற நிறைந்து இருப்பவள் அதிதி. அவனது ஒவ்வொரு செயல்களிலும் அதற்குப் பின்னும் அதன் விளைவுகளிலும் வியாபித்திருப்பவள் அவள் மட்டுமே.


கூட படிக்கும் மாணவியாக அறிமுகமானவள் பின்னர் மெல்ல மெல்ல தோழியானாள். தோழி என்ற நிலைக்கு மேல் உயிர் தோழி என்ற நிலையில் நிரஞ்சனின் மனதில் அவள். அவன் வீட்டை விட்டு வெளியேறும் சமயத்தில் மிகவும் தவித்தது அவன் அம்மாவிற்காக தான். எப்பொழுதுமே அவன் தன் அம்மாவை விட்டு நகர்ந்து சென்றதே இல்லை.

ஆனால் இப்போது வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பட்ட பொழுது அவன் அம்மாவின் கண்ணீர் மட்டும்தான் அவன் கூட வந்தது. எங்கு செல்வது என்பது புரியாமல் தனது தோழனின் வீட்டுக்குச் சென்ற சமயம் நான் இருக்கிறேன் என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனுக்கு அடைக்கலம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவனது மனதையும் புரிந்து கொண்டு கூடவே இருந்தாள். அவளின் அந்த பார்வை அவனை அவளை நோக்கி வேகவேகமாக எட்டுகள் எடுத்து வைக்கத் தூண்டியது.

அதிதியின் அதீத அமைதி பலருக்கு கோபத்தை உண்டு பண்ணக் கூடும். ஆனால் அவனுக்கு அவளிடம் பிடித்ததே அந்த அமைதி தான். அவளது அந்த குணங்களோடு அவளை அப்படியே ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தபோதும் விஸ்வம் ஏன் தனது பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்?இன்று அவள் திரும்ப வந்து நிற்கிறாளே... என்ற ஆதங்கம் அவனை துளைத்து எடுத்தது. அவனுக்கும் அதிதிக்கும் இடையே உள்ள உறவு அற்புதமானது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அரும்பு மீசை முளைக்கும் போதே நிரஞ்சன் மனதில் அதிதி தனக்கு மட்டுமே உரித்தானவள் என்ற எண்ணம் வளர்ந்து விட்டது.

இதற்குப் பெயர்தான் காதல் என்ற புரிந்தபோது நீருவுக்குள் எப்படி அவளுக்கு புரிய வைப்பது என்று பயம் வந்தது நிஜம்.

மித்ரா தனது காதலை அதிதி மூலம் சொல்லி அனுப்பியபோது, நிரஞ்சன் நேரடியாகவே மித்ராவிடம் சென்று மறுத்துவிட்டான். தான் அதிதியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக யாருக்கும் சொல்லவில்லை தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ரசாயனம் அதிதிக்கு புரிந்ததோ இல்லையோ...

நிரஞ்சனுக்கு நன்றாகவே புரிந்தது. படிப்பு முடியும் வரை புத்தியை சிதறடிக்க கூடாது என்று தன்னை எவ்வளவு கட்டுக்குள் வைத்திருந்தான்...?ஒருவழியாக சி.ஏ முடித்துவிட்டால் தைரியமாக அதிதியை பெண் கேட்கலாம்... அவளை தன்னுடனேயே வைத்துக் கொள்ளலாம். கைகளில் வைத்து பொக்கிஷம் போல் அவளை பாதுகாக்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவன் அவ்வளவு வேகமாக படித்தது. அவனை தூண்டிவிடும் தூண்டுகோல் அதிதி. அதிதியின் இவ்வாறான குணங்களுக்கு வேறு எந்த ஆண்மகனாலும் ஈடு கொடுக்க முடியாது என்பது ஒரு ஆணாக நிரஞ்சனுக்கு புரிந்திருந்தது. சிறுவயதிலிருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அவளின் குணநலன்கள் இவனுக்கு பெரியதாகவோ குற்றமாகவோ தெரியவில்லை.

மாறாக அவள் மீது ஈடுபாடு தான் அதிகரித்தது. அதைக் காதல் என்று உணர்ந்துகொண்ட தருணம் என்றும் பச்சை பசுமையாய் நிரஞ்சனுக்குள்.
 
Top