கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தீராநதி 25

Jeyalakshmi Karthik

Moderator
Staff member
நாக்கு மீன் அல்லது எருமை நாக்கு மீன் என்று அழைக்கப்படும் தட்டையான மீன் இனம், வெப்பமண்டலம் மற்றும் சம தட்பவெட்ப மண்டல கடலில் வாழ்பவை. பொதுவாகத் தட்டையான மீன்களின் கண்கள் ஒரு பக்கத்துக்கு ஒன்றாக இருப்பதற்கு மாறாக எருமை நாக்கு மீனின் ஒரு கண் ஒரு பக்கத்திலும் மற்றொன்று மறுபக்கம் அமையாமல் முதுகின் நடுக்கோட்டிலும் அமைந்திருப்பது தனித்தன்மையானதாகும். இது மணலில் தரையோடு தரையாக கிடப்பதால் கண் இவ்வகையில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தியப்பெருங்கடலில் இது அதிகம் கிடைப்பதால் உணவில் இது மிகவும் பிரசித்தம்.

- தீராவின் தகவல் பலகையில்

தேடல் 25

வாசலைக் கடந்த வருணுக்கு மனதில் பெரும் வலி எழுந்தது. இதற்கு முன் நதி அவனிடம் பேசியதில்லை தான். ஆனால் அவள் கண்களில் அப்போது குறும்பு கூத்தாடும். தான் செய்யும் குரங்கு சேட்டைகளை பாட்டி மூலம் அறிந்து அவள் வயிறு வலிக்க சிரித்ததெல்லாம் அவனும் வாணி மூலம் அறிந்தே இருந்தான்.

மாமாவுக்கு அவள் மேல் காதல் என்று நினைத்தபோது அவனுக்கு உயிர் வரை வலித்தது. அதெல்லாம் இல்லை என்று மாமா தெளிவு செய்தபின் தான் நதியா மீதான முழுமையான காதலை அவன் உணர்ந்தான். ஆனாலும் மாமா சொன்ன விடலைக் காதல் அவசரம் வேண்டாம் என்ற அறிவுரையும், பாட்டி சொன்ன தன்னையே மாற்றும் காதலும் இப்போதைக்கு வேண்டாம் என்று முயன்று மனதை கட்டுக்குள் வைத்திருந்தவன் முன்னே கன்னியவள் வந்ததும் அவன் இதயம் தடம் புரண்டது.

ஆசையாய் அவளருகில் அவன் செல்ல அவளோ சட்டென்று எழுந்ததோடு ஓர் அந்நியப் பார்வையை வீசிவிட அவன் மனம் துடித்தது. யோசனையில் வண்டியோட்டிச் சென்றவன், பக்கத்து பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனுக்கு வேலை எதுவும் இல்லை. வீட்டிலிருந்தவன் அவள் ஏனோ அவனை வெளியேறச் சொன்னது போல கேள்வி அமைந்திடவே வெளியேறி வந்துவிட்டான்.

அவன் எண்ணமெல்லாம் ஒரு வேளை அவள் தன் தந்தையோடு பேசத்தான் தன்னை விரட்டினாளோ என்று உழன்றது. ஏனென்றால் அவன் தந்தை அன்று அறையில் கறுவியதை மாமாவிடம் செல்ல உள்ளே சென்றான். ஆனால் அவரோ உலகமே மறந்த நிலையில் கண்களில் ஏக்கம் மின்ன நதியாவும் அவரும் இருக்கும் புகைப்படத்தில் கண்ணை வைத்திருக்க, ஒன்றும் புரியாது அவரிடம் ஏதும் சொல்லாது வந்தவன் அன்று முதல் தந்தை மேல் ஒரு கண் பதித்து வைத்தான்.

இன்று நதியா அனைவரும் அகன்றதும் தன்னை போகச் சொல்லிக் கேட்டது கண்டிப்பாக தன் தந்தையிடம் ஏதோ பேசத்தான் என்று புரிந்து கொண்டவன் மனம், தந்தை அவளைச் சீண்டி இருப்பாரோ என்று தோன்றியது.

ஆனால் கூடவே காரணம் என்ன என்ற கேள்வியும் எழ, முதிர்ச்சியற்ற பையன் என்பதால் பெரிய ஆளவில் அவனால் அதையெல்லாம் யூகிக்க முடியவில்லை. நாளை தந்தையிடம் பேசலாமா அல்லது நதியிடம் கேட்கலாமா என்ற குழப்பத்தில் அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

தன் அறையை கண்களை விரித்து ஆசையாய் நோக்கும் மகளை அதை விட ஆயிரம் மடங்கு ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் தீரேந்திரன்.

அவள் கண்கள் சுழன்று அறையின் மூலையில் இருந்த அந்த ஓவியத்தில் நிலைத்தது.

அதனருகே செல்ல அவள் எத்தனிக்கும் சமயம் அவள் கைப்பற்றி மெத்தையில் அமர்த்தினான் தீரன்.

"திடீர்னு வந்துட்டு சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்ட, ஓகே. மார்ட்டின் எப்படி உன்னை அலோ பண்ணினார்?" என்று கேள்வி எழுப்ப,

"இதென்ன அநியாயம். என் படிப்பு நான் போறேன், அவர் யார் என்னைத் தடுக்க?" என்று நிதானமாகக் கேட்டாள்.

தீரேந்திரன் மனம் கசங்கியது. இத்தனை நாள் பார்த்துக்கொண்டவருக்கே அவ்வளவு தான் மரியாதை, இதில் இனி தான் ஏதும் சொன்னால் இவளின் பதில் என்னவாக இருக்கும் என்று அவன் யோசிக்க, அதை புரிந்து கொண்டவளாக,

"தீரா நாம யாரோட எவ்ளோ நாள் பழகிறோம் அப்படிங்கறது முக்கியமில்லை, அவங்க நம்ம மனசுல என்ன இடத்தில் இருக்காங்க அப்படின்றது தான் முக்கியம்." என்று கண் சிமிட்டி சிரித்தாள்.

விளையாட்டாய் அவள் தலைமுடி கலைத்தவன், "சரி நீ ரெஸ்ட் எடு. வந்ததும் உன் வேலையை ஆரம்பிக்காத" என்று அவன் படிப்பைப் பற்றிப் பேச, அவளோ,

"அதெல்லாம் வந்ததும் சிறப்பா செஞ்சுட்டேன்" என்று நம்பியை மனதில் வைத்து சிரித்தாள்.

அவள் சொல்வது தீராவுக்கு புரியாது போகவும், "என்ன கண்ணம்மா சொல்ற?" என்று கேட்டு மீண்டும் அவளருகில் அமர்ந்தான்.

"ஒன்னும் இல்ல தீரா உன் ரெஸ்டாரெண்ட்ல மீன் பத்தி எழுதி தகவல் பலகை இருக்குல்ல, இதோ இதைப்பாரு" என்று வேகமாக கைப்பையில் துழாவி தன் குறிப்பேட்டை எடுத்து நீட்டினாள்.

அதை வாங்கி வாசித்தவன், "ஓ பவளப்பாறைகள்ல இவ்ளோ விஷயம் இருக்கா?" என்று கேட்டதும்,

"சும்மா எனக்காக ஒன்னும் தெரியாததை போல பேசாத தீரா. ஐ க்னோ யூ" என்று சொல்லி அவன் தோளில் வாகாக சாய்ந்து கொண்டு கண்மூடினாள்.

தன் தந்தையிடம் உரிமையாக சாய்ந்து கொள்ள முடியவில்லையே என்று அவள் மனம் ஏங்கியது.

கண்டிப்பாக அம்மாவின் படத்தைப் பார்த்த பின் அவருக்கு தான் அவர் மகள் என்று சந்தேகம் வந்திருக்கும். ஆனால் உண்மையில் அவர் மகள் தானா என்று யோசித்திருப்பாரோ என்று சிந்தனை எழுந்ததும், தீரா அந்த ரகமில்லை என்று அந்த எண்ணத்தை தூக்கி எறிந்தாள்.

சட்டென்று எழுந்து "தீரா கொஞ்சம் வெளில போகலாமா?" என்று கேட்டதும் அவன் அவளை வாஞ்சையாக நோக்கினான்.

"இப்போ தானே வந்த, ரெஸ்ட் எடு கண்ணம்மா. ஜெட்லாக் இருக்கும்." என்று முன்னே வந்து விழுந்த முடியை காதுகளுக்கு பின் ஒதுக்க, கதவை படாரென்று திறந்து உள்ளே வந்த கல்பனா இருவரும் அமர்ந்திருக்கும் நெருக்கம், அவன் கரங்கள் அவள் காதுகளருகில் இருப்பது என்று வெறித்துப்பார்த்தவள்,

"இந்திரா அந்த பொண்ணுக்கு ரூம் ரெடி" என்று சொல்லிவிட்டு அவள் உடமைகளில் கை வைத்ததும்,

"ஆன்ட்டி" என்று அழைத்தவள் எழுந்து அவளருகில் வந்தாள்.

மென்மையாய் கல்பனாவை அணைத்துக்கொண்டாள். கல்பனாவின் உடல் ஒரு நொடி சிலிர்த்தது. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் சட்டென்று ஓர் இணக்கம் வந்து ஒட்டிக்கொள்ள,

"வா கீழே லாஸ்ட் ரூம்" என்று கூறி அவள் ரோலர் சூட்கேசை எடுக்கப்போக,

"வேண்டாம் ஆன்ட்டி நான் தீரா கூடவே இருந்துப்பேன்" என்று கூறியதும், தீரேந்திரனுக்கு சந்தோசக்கடலில் தன்னை யாரோ தள்ளியது போல இன்பமாய் மிதந்தான்.

ஆனால் கல்பனா சட்டென்று இறுக்கமானவள், "என்ன பேசற நீ?" என்றதும் அவள் பக்கமே திரும்பாமல்

"தீரா, நான் உன்னோடயே இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, தன் ட்ராவல் பேகிலிருந்து ஒரு பூந்துவலையை எடுத்துக்கொண்டு அந்த அறையின் மூலையில் இருந்த குளியலறை நோக்கிச் சென்றாள்.

அவள் போவதை ஆதுரத்துடன் தீரேந்திரன் நோக்க, ஆத்திரத்துடன் நின்றிருந்தாள் கல்பனா.

"என்ன இந்திரா இதெல்லாம்? அப்போ மாமா சொன்னது உண்மையா?" என்று தன் சனி புகுந்த வாயால் கேட்டு வைக்க,

நொடிப்பொழுதில் தீரேந்திரன் முகம் கோபத்துக்கு மாறியது.

"அதான் அவ இங்கேயே இருக்கேன்னு சொல்லிட்டால்ல விடு நான் பார்த்துக்கறேன்." என்று கத்தரித்தார் போல பேசினான்.

"நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை இந்திரா." என்று அவள் முகத்தில் கடுகடுப்பைக் காட்ட,

அவனோ தன் மகள் என்று சொல்ல முடியாத இயலாமையையும் நம்பியின் பெயர் வந்ததில் கோபத்தையும் சேர்த்து,

"இந்த பதில் உனக்கு சொன்னா போதுன்னு அர்த்தம் கல்பனா. ஹோப் யூ அண்டர்ஸ்டான்ட். இனி அவ விஷயத்துல நீயோ உன் கணவரோ தலையிடுறதுல எனக்கு விருப்பம் இல்லை. சோ.. ப்ளீஸ்." என்று வாயிலை நோக்கி கை நீட்டினான்.

கோபத்தில் முகம் சிவந்தவள், "இதெல்லாம் நல்லத்துக்கு இல்ல இந்திரா." என்று உரைத்து அவ்வறையை விட்டு வெளியேறினாள்.

தீரேந்திரன் மனதிற்குள் நதிக்கு மட்டும் நான் தான் அப்பான்னு தெரிஞ்சா எவ்ளோ நல்லா இருக்கும் என்று நினைத்தபடி அவள் இருக்கும் குளியலறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் வரும் அறிகுறி தெரிய, அவள் இளைப்பாறட்டும் என்று வெளியே சென்றான்.

அறைக்குள் வந்த நதியா தீரேந்திரன் இல்லாததைக் கண்டு, "எங்க போயிட்டார் இந்த அப்பா" என்று வாய் விட்டு கேட்டுவிட்டு பின் நாக்கைக் கடித்துக்கொண்டாள். எங்கேனும் அவர் நின்றிருந்தது தன் பேச்சு காதில் விழுந்தால் தன் திட்டம் என்ன ஆவது என்று நினைத்தவள், சுற்றி பார்வையை செலுத்தி தந்தை இல்லாததை உறுதி செய்து கொண்டாள்.

மீண்டும் அந்த ஓவியம் அவளை இழுக்க அருகே என்று அதனை உற்று நோக்கினாள். அது அவள் அன்னையின் ஓவியம் போல இருந்தது. அவர் தான் இப்படி நுணுக்கமாக ஏதாவது வரைந்து வைப்பார்.அந்த மீனின் படமும் அப்படித்தான் என்று நினைத்து அதைக் கையில் எடுக்க பின்னால் ஏதோ தட்டுப்பட்டது.

அந்த ஓவிய சட்டத்தின் பின்புறம் தன் பெட்டியில் இருந்த தாயின் புகைப்படம் போலவே ஒன்று பிரின்ட் செய்து ஒட்டப்பட்டிருந்தது.

தன் மனைவியை மறைத்து வைத்து ஏன் ரசிக்கிறார் என்று எண்ணம் வந்ததும், முன்னொரு நாளில், அவள் வாழ்வில் வேறு ஒருவர் வந்திருந்தால் தன்னால் அவளுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று சொன்னது நினைவில் வந்தது.

"இப்படி காதலிச்ச மனுஷனை போயும் போயும் அந்த நம்பி சொன்னதை வச்சு நம்பிடியே அம்மா" என்று புகைப்படத்தை தாயாய் நினைத்து கேள்வி எழுப்பினாள்.

பெருமூச்சுடன் அதை சுவரில் மாட்டியவள், அறைக்கு வெளியே தலையை நீட்டி, "தீரா" என்று உரிமையாய் கத்தினாள்.

அவன் கீழே மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, அவள் குரல் கேட்டதும், "வந்துட்டேன் கண்ணம்மா" என்று படிகளில் இரண்டு இரண்டாகத் தாவி ஏறினான்.

அவன் செல்வதை கவனித்தபடி உள்ளே நுழைந்தான் வருண். அமைதியாக அவன் சோபாவில் அமர, அவனருகில் வந்த கல்பனா, "என்ன டா நடக்குது இங்க? யாரு டா அவ? இவன் ஏன் இப்படி இருக்கான்?" என்று கேட்டதும்,

"என்னை ஏன் கேட்டுட்டு இருக்க? உன் உடன்பிறப்பு கிட்ட கேட்க வேண்டியது தானே?" என்று அசட்டையாக உரைத்தான்.

"அவன் தான் திரும்பி வந்ததுல இருந்து ஒரு மார்க்கமா இருக்கானே டா. என்னத்த கேட்குறது?" என்று அவள் எரிச்சலுடன் உரைக்க,

"தெரியுதுல்ல.. இது அவர் வீடு. அவரிஷ்டம்." என்று சொல்லி எழுந்து கொண்டான்.

"டேய் என்ன டா இப்படி சொல்லிட்ட. இது நம்ம வீடும் தான் டா." என்று கூறியதும்,

"இங்க பாரு நேத்து பிறந்த பாப்பா மாதிரி பேசாத. இது உன் அப்பா வீடு. உன் வீடுன்னா அது என் அப்பாவோட வீடா தான் இருக்க முடியும். எனக்கு தெரிஞ்சு அப்படி ஒரு விஷயம் இல்லவே இல்ல." என்று சொல்லி அவன் அறைக்கு செல்ல, இதை அவர் அறை வாயிலில் இருந்து கேட்ட நம்பி மனதிற்குள்,

"யாருக்கு டா வீடில்ல? எனக்கா? நாலு வீடு வச்சிருக்கேன். என் கிட்டையேவா? என்ன வாங்கினாலும் இந்த வீடு, அதுக்கு இருக்கிற மரியாதை போல வருமா டா? யாரும் வந்து இதை உரிமை கொண்டாடக்கூடாதுன்னு தானே அவ்ளோ வேலை பார்த்தேன். ச்ச.. எல்லாம் வீணா போச்சு. இவ எப்படி வந்தா? எப்படி தெரிஞ்சிருக்கும்?" என்று நதியாவைப் பற்றிய சிந்தனையில் இருந்தார்.

அறைக்கு அழைத்த நதியா, "நாம வெளில போகலாமா தீரா?" என்று கேட்டதும், "சொன்னேன்ல ரெஸ்ட் எடுன்னு" என்று கண்டிக்கும் குரலில் தீரன் பேச,

செல்லமாய் சிணுங்கிக்கொண்டே, "ப்ளீஸ் ப்ளீஸ்.. எனக்கு ஒரு சின்ன விஷயம் மட்டும் உடனே பண்ணனும். நீங்களும் கூட வரணும். ப்ளீஸ் தீரா என் செல்லம்ல.. என் அப்.." என்று ஆரம்பித்துவிட்டு சுதாரித்துக்கொண்டாள்.

"அப்பறம் லேட் ஆயிடும் சீக்கிரமா வாங்க நான் ஹாலில் வெயிட் பண்ணுறேன்" என்று ஓடிவிட்டாள்.

அவள் போவதை பார்த்து தலையசைத்துச் சிரித்தவன், அவள் பின்னே ஹாலுக்குச் செல்ல, வழியில் வருண் அவன் அறைக்குள் நுழைவதைப் பார்த்தான்.

"வரு கண்ணா" என்று அழைக்க, சட்டென்று வெளியே வந்தவன் "என்ன மாமா" என்று அருகில் வர, அவனை அணைத்துக்கொண்ட தீரேந்திரன், அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.

அழகாய் வெட்கம் கொண்ட வருணேஷ் "என்ன மாமா திடீர்ன்னு?" என்று சிரிக்க,

மெல்லிய குரலில் "யார் வந்தாலும் என் மாப்பிள்ளை மேல என் பாசம் குறையவே குறையாது" என்று சொல்ல,

"இப்போ எதுக்கு அது?" என்று தலை சாய்த்துக் கேட்டான் வருண்.

"உன் குட்டி மூளைக்குள்ள அந்த கேள்வி ஓடுதுன்னு எனக்கு தெரியும் டா வரு கண்ணா" என்று அவன் தலையில் முட்ட,

முதல் படியில் நின்று இருவரும் பேசும் அழகை உள் மனம் ரசித்தாலும், மேம்போக்காய் வருணேஷ் மீது கோபத்தை இழுத்து வைத்திருந்த நதியா,

"தீரா போகலாமா? அங்க என்ன ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?" என்றாள்.

சட்டென்று தீரேந்திரனும் வருணேஷும் சிரித்துவிட, காலை உதைத்து, "தீரா" என்று சிணுங்கினாள் நதியா.

இருவரும் தோள் மீது கைபோட்டபடி இறங்கி வர, அதை கோபம் மறந்து ரசித்தாள்.

"மே ஐ ஜாயின் யூ?" என்று இடைவரை குனிந்து வருண் கேட்ட அழகில் சிரிப்பு வந்தாலும்,

"நோ. திஸ் இஸ் அவர் டைம். யூ ஆர் நாட் அலவ்ட்" என்று தோரணையாக கைகளைக் கட்டிக்கொண்டு முகத்தை வெட்டித் திரும்பி நின்று நதியா சொல்ல,

இம்முறை ஆண்கள் இருவரும் கலகலவென்று சிரித்தனர். திரும்பி இருவரையும் தன் முட்டைக் கண் உருட்டி முறைத்து வைக்க, அவர்களோ இன்னுமே அவளைக் கண்டு சிரிப்பை நிறுத்தாமல் இருந்தனர்.

"தீரா" என்று பல்லைக் கடிக்க, "சாரி நதிம்மா" என்று வாய் மூடி சிரிப்பை நிறுத்தினான் தீரேந்திரன். ஆனால் வருணேஷ் நிறுத்தாமல் சிரித்து வைக்க சோபாவில் இருக்கும் குஷனை எடுத்து அவனை நாலு அடி வைத்தாள்.

அவனோ, "வலிக்கலயே" என்று சிரிக்க,

"டேய்.." என்று பக்கத்தில் இருந்த பூஜாடியைத் தூக்கிக்கொண்டு அவனை அடிக்க வர, அவன் சோபாவை சுற்றி ஓடினான்.

அவன் ஓட இவள் துரத்த என்று வீடே ஒரு நொடியில் சொர்க்கமாக, தீரேந்திரன் விழிகள் நீரால் நிறைந்து முகம் புன்னகையில் குளித்திருக்க,

"ஏய் நிறுத்துங்க. என்ன டி நீ? அறிவில்ல, விருந்தாளியா வந்த வீட்டுல இப்படி தான் ஆட்டம் போடுவியா? இந்த கூத்தெல்லாம் உனக்கு தலையாட்டுற இந்திரன் கிட்ட மட்டும் வச்சுக்கோ. என் பையனை நெருங்காதே" என்று கல்பனா எச்சரிக்க,

தீரேந்திரன் பதற்றமாக பதிலளிக்க வாய் திறக்க, அவனை கைப்பற்றித் தடுத்தாள்.

அவனுக்கு எங்கே அவள் காயப்பட்டு விடுவாளோ என்று பதற, அவளோ மிகவும் சாவகாசமாக, சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து,

"விருந்தாளி.. நான் விருந்தாளி.. ஓகே.. டன். இப்போ இன்னிக்கு தான் நான் விருந்தாளி. ஆனா அதை இந்த வீட்டோட நிரந்தர விருந்தாளி சொல்றது தான் எனக்கு சிரிப்பா இருக்கு." என்று சொல்லிவிட்டு,

"தீரா போகலாமா?" என்றவள் வருணிடம் திரும்பி, "வர்றியா இல்ல உன் அம்மா சேலைக்கு பின்னாடி ஒளிஞ்சுப்பியா?" என்று நக்கலாக கேட்டாள்.

அவனோ, "எப்பவும் நான் என் மாமா பிள்ளை. நீ இல்ல யார் வந்தாலும் அது மாறாது." என்று அழுத்தமாக உரைத்தவன்,

"மாமா கார் ஸ்டார்ட் பண்றேன். இங்க யாருக்காவது ஏதாவது சொல்லணும்நா சொல்லிட்டு வாங்க." என்று தீரனிடம் சொன்னவன்,

"மகாராணி வர்றீங்களா?" என்று நதியாவின் கைப்பற்றி அழைத்துப்போனான்.

அவர்கள் வாசல் தாண்டிச் சென்றதை உறுதி செய்து கொண்ட தீரேந்திரன்,

"ஏற்கனவே உன் புருஷன் மேல செம கோபத்துல இருக்கேன். இன்னும் எனக்கு முழுசா விபரம் தெரியல. அதுனால சும்மா இருக்கேன். நதியா... அவ.." என்று இழுத்தவன்

"எனக்கு முக்கியமானவ. அவளை சீண்டிப்பார்க்காதே. நான் சும்மா இருக்க மாட்டேன். சரிக்கா சரிக்கான்னு போன காலம் முடிஞ்சு போச்சு. உன் புருஷன் பேச்சைக் கேட்டு அசிங்கமா எதுவும் பேசாம இருக்கறது தான் நம்ம அப்பா வளர்ப்புக்கு நீ கொடுக்கிற மரியாதையா இருக்கும். பார்த்து பேசு" என்று சொல்லிவிட்டு தன் இடது கால் உயர்த்தி வேட்டி நுனியைப் பற்றியவன் வலது கையால் தலை முடியை சீராக்கியவாறு வாயிலை அடைந்தான்.

அவன் பேச்சில் இருந்த காரமும், அவன் நடையில் தெரிந்த அழுத்தமும் கல்பனாவை அச்சம் கொள்ள வைத்ததென்றால், இதனை கவனித்துக்கொண்டிருந்த அறிவுடைநம்பிக்கு எரிச்சலை விதைத்தது.

நதி பாயும்..
 
Top