கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

என்னை மயக்கிய கார்குழலே.... அத்தியாயம் - 8

Kodhai Nappinnai

Moderator
Staff member
அத்தியாயம் - 8


எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க... அங்கே யார் என்ன பேசுவது என்று புரியாத ஒரு மயான அமைதியுடன், அவர்கள் அனைவரும் சூர்யாவையே வெறித்துப் பார்த்தனர்.


ஆனால் அவனோ, குழலியைத் தன் கண்களால் ‘ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை என்னை எதிர்த்துப் பேசினாய்... நடக்கிறதே வேறு!’ என மிகக் கடுமையாக எச்சரித்துக் கொண்டிருந்தான்.


‘உச்சிவெயில் மண்டையைப் பிளந்தால்... சித்தம் கலங்கி இப்படிப் பேசுவார்கள்! ஆனால், இப்படி வானமே இரண்டாகப் பிளந்து கொண்டு ஊற்றும் போது கூடவா... இப்படிப் பித்து பிடித்தது போல் ஒருத்தன் உளறுவான்?’ என்று குழலி நினைக்கையிலேயே, திடீரென்று அவர்கள் நின்ற இடம் பூகம்பம் வந்தது போல் லேசாக அதிர்ந்ததைப் போல உணர்ந்தாள்.


“ஐய்யோ!” என்று அரண்டு போய் சூர்யாவைப் பார்த்தாள்.


இப்போது அவனின் பார்வை, எச்சரிக்கையிலருந்து விசித்திரமாக மாற... வேடிக்கை பார்ப்பது போல் அவளைச் சாவகாசமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.


அந்த ஒற்றைப் பார்வையில் அவளுக்கு அங்கமெல்லாம் அனல் பற்றியது போல திகுதிகுவென்று எரிய, ‘எந்த மாதிரிச் சமயத்தில்... இப்படிப் பிடித்து வைத்த கல் பிள்ளையார் மாதிரி அப்படியே நிற்கிறானே!’ என்று வெகுண்டவள், எதைப் பற்றியும் யோசிக்காமல் அவன் புறம் நோக்கி ஓர் அடி எடுத்து வைக்க... திடீரென்று பூமி வேகமாகச் சுழன்றது.


‘நான் மட்டும் நிற்க... மற்றவர்கள் ஏன் இப்படிச் சுழல்கிறார்கள்?’ என்று யோசிக்கையிலேயே, அவளது காலடியில் பூமி நழுவுவது போல் ஒரு பிரமை தோன்ற, “சூர்யா! பூ...க...ம்...” என்றவளுக்கு அதற்குமேல் பேச முடியாது நா வரண்டு போக, அவன் கையைப் பற்ற விழைகையிலேயே... நூறு கிலோமீட்டர் வேகத்தில் பூமிப்பந்தானது தன்னை மட்டும் விட்டுவிட்டு சுழல்வது போல் இருக்க, சுழற்சியின் வேகம் தாங்காது கண்களை மூடியவள், அப்படியே முன்னால் சரிய... அன்னிச்சையாக நீண்ட அவனுடைய கரங்கள் அவளைத் தாங்கிப்பிடித்து அணைத்துக் கொண்டன.


“மை காட்... குழலி!” என்று அழைத்தபடி, அவளைப் பரபரப்போடு தன் படுக்கையில் கிடத்தினான் சூர்யா.


அவளருகில் வந்த பாட்டி, அவளைத் தொட்டுப் பார்த்துவிட்டு “உடம்பு இப்படி நெருப்பா கொதிக்குது... அவளுக்கு ஜுரம் இருக்குன்னு கூடவா தெரியாது, மழையில் ஆடிட்டு வந்திருக்கீங்க?” என்றார் கம்பீரம் குறையாமல்.


இவன் பதில் பேச வாய் திறக்கும் முன், “பூகம்பம் சூர்யா... இங்கிருந்து போகணும்!” என பிரம்ம பிரயத்தனம் செய்து முனகலாய்க் கூறியபடி எழ முயன்றாள் குழலி.


“மண்ணாங்கட்டி! ஏன் ஜுரம்னு சொல்லலை?” என்று கடிந்தவன், “வேண்டாம்... நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்! கொஞ்சம் நேரம் வாயை மூடிக்கிட்டு, பேசாமல் படு!” என்று எரிந்து விழுந்தான்.


‘இவ்வளவு காய்ச்சல் அடிக்க... தான் அதை உணரவே இல்லையே!’ என்று மனசாட்சி அவனைக் குடைய, கண்களை ஒரு வினாடி இறுக மூடினான்.


அதற்குள் அங்கேயிருந்த ஐம்பது வயது மதிக்கதக்க அந்தப் பெண்மணி, குழலியின் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு “ரொம்பக் காய்ச்சலா இருக்கே தம்பி... ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போவோமா?” என்று தயக்கமாகக் கூறினார்.


“இல்ல தேவிம்மா! ஹாஸ்பிட்டல், ஊசி, மாத்திரைன்னா... அலறி ஊரையே கூப்பிடுவாள்! அங்கே போய் இவளைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்டம்! அதுவும் இந்த மழையில்... அவளை நனையாமல் கூட்டிட்டுப் போவதே சிரமம். அதனால் வீட்டில் இருக்கும் மாத்திரையை வைத்தே பார்த்துக்கொள்ளலாம்! ஜுரம் குறையாமல் இருந்தால்... சிவாவை வந்து பார்க்க சொல்றேன்!” எனத் தன் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தவளை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடிக் கூறினான்.


யாரோ கதகதப்பாக தன் முகத்தில் ஏதோ வைத்ததும், காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தவளை இரக்கமே இல்லாமல் எழுப்பி வாயில் திரவமாக எதையோ புகட்டியதும், பின் ஒரு மாத்திரையைக் கொடுத்து விழுங்கச் சொல்லி இம்சை செய்ததும் நினைவுக்கு வர... “ஐய்யோ... எனக்கு மாத்திரை வேண்டாம்... என்னை விடுங்க!” என்று உளறிவிட்டு, மீண்டும் படுக்க முற்பட்டாள் குழலி.


“குழலி! இதை மாத்திரையைப் போட்டுக்கலன்னா... ஊசி போடுவேன் பரவாயில்லையா?” என்று ஈவு இரக்கமே இல்லாமல் சொல்லியதோடு நிற்காமல், அவளின் வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து மாத்திரையை உள்ளே போட்டதும் கனவு போலத் தோன்ற, மெல்ல அப்படியே கண்ணயர்ந்தாள்.


புரண்டு படுக்கும் போது லேசாக விழிப்பு தட்ட, இரு குரல்கள் ஆக்ரோஷமாகப் பேசிக்கொள்வது அரசல் புரசலாக அவளது காதில் விழுந்தது.


“அப்ப எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும்... அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போற இல்ல?” என்றது வயதான, ஆனால் கம்பீரமான பெண்மணியின் குரல்.


“கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழப் போறவன் நான் தான்! உங்களை விட, எனக்குப் பிடித்திருக்க வேண்டியது அவசியம் பாட்டி!” என்று எப்பொழுதும் போல் தெனாவட்டாகப் பதில் சொன்னது, அந்தப் பழக்கப்பட்ட ஆணின் குரல்.


‘நம் வீட்டில் யார் சண்டையிடுவது?’ என்று குழலி யோசிக்கையிலேயே, மீண்டும் அந்த வயதான குரல் கேட்டது.


“உன் அப்பனுக்குத் தப்பாமல் பிறந்தவன்னு நிரூபித்துவிட்டாய்... அப்படித்தானே?” என அக்குரல் கடுஞ்சீற்றத்துடன் ஒலித்தது.


“மகன், அப்பா மாதிரி இல்லாமல்... வேற யாரை மாதிரி இருப்பான்?” எனச் சிறிதும் பிசிறற்று வந்தது பதில்.


‘இது எங்கோ கேட்ட குரலாக இருக்கே? யாருடையதாக இருக்கும்?’ என்று வெகுவாக யோசித்தவள், தன் மசமசத்த மூளைக்கு ஒன்று நினைவு வராது போகவே அப்படியே துயிலில் ஆழ்ந்தாள்.


மெல்ல கண் விழித்த குழலிக்கு, யாரோ பத்து அரக்கர்கள் தன் மேல் படுத்திருப்பது போல் உடம்பு வலிக்க, பிரம்ம பிரயத்தனப்பட்டுக் கண்ணைத் திறந்தவளுக்கு ‘இது... எங்கே?’ என்ற கேள்வி எழ, அவளது அம்மாவின் குரல் காதில் விழுந்தது.


‘இது கிருஷ்ணாவரமா? ஆனா பெரியம்மா வீடு மாதிரி இருக்கே?’ என்று யோசனை ஓடுகையிலேயே, அவளது அம்மா எதுவோ குடிக்கக் கொடுக்க, எதைப் பற்றியும் சிந்திக்கத் தோன்றாமல் முகச்சுளிப்போடு அதை அருந்தினாள்.


இப்படி விழிப்பும், தூக்கமுமாக ஒன்றும் புரியா மசமசப்புடன் நாட்கள் கழிய... வெகுநாட்களுக்குப் பிறகு, யார் துணையும் இன்றி பெட்டை விட்டுக் கீழே இறங்கி நின்றவளுக்கு, உலகம் லேசாகத் தட்டாமாலையாகச் சுழன்று நின்றது.


‘பெரியம்மா வீட்டில் இருக்கோமா?’ என்று புரியாத தன்மையுடனே பாத்ரூம் சென்று முகம் கழுவி கொண்டு வெளியே வந்தவள், அழுத்தமான காலடியோசை கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.


விழிகள் தீப்பந்தத்தைப் போல் திகுதிகுவென்று எரிய, விரைப்பாக எதிரில் நின்றவனை நோக்குகையில்... மெல்ல, ரயில் நிலையத்தில் இருந்து அவன் தன்னை அழைத்துக்கொண்டு வந்தது முதல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் லேசாக நினைவு வரத் தொடங்கியது.


‘இவன் ஏன் என் பெரியம்மா வீட்டிற்குள் உரிமையோடு... படுகையறை வரை வருகிறான்?’ என்று நினைக்கையிலேயே, ‘நேற்று... அது நேற்று தானா? இல்லையே... நேற்று அம்மா இருந்தார்களே!’ என்று யூகித்தவளுக்கு... ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போல் இனம் புரியாத பயம் மனதில் காட்டுத்தீ போலப் பரவ, அந்த அதிர்ச்சியைத் தாங்காது அவளின் கால்கள் தள்ளாடின.


“மறு ஒளிபரப்பா?” என்றான் இளக்காரமாக.


“என்ன மறு ஒளிபரப்பா?” என்றாள் கரகரத்த குரலில்.


“ஸ்டாப் ஆக்ட்டிங்! நான் எதைச் சொல்கிறேன்னு உனக்கே நல்லா தெரியும்!”


ஆதியும் புரியாமல், அந்தமும் புரியாமல் குழலி பேந்த பேந்த விழித்து வைத்தாள். அப்பாவியாக அவள் விழித்தது, சூர்யாவை மேலும் கடுப்பாக்கியது.


“மை காட்! அதுதான் முன்பே ஆஸ்கார் அவார்டுக்கு நாமினேட் செய்யும் அளவுக்கு... பயங்கரமா பர்பாமன்ஸ் கொடுத்து பின்னி பெடலெடுத்தாச்சே... அப்புறம் எதுக்குத் திரும்பவும் மயங்கி விழுவது போல் சீன் கிரியேட் செய்யணும்?”


‘மயங்கி விழுந்தோமா? சுரி, காய்ச்சல் கண்ட உடம்பு அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்ததில்... எங்கிருந்து நடிப்பு வந்தது? இதைச் சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவனைப் போல் இருபத்தி ஒன்பது வயதில் உலகம் சுற்றும் வாலிபனாக... பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்த அசாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாதோ?’ என்று எண்ணமிட்டவள்,


“என்...” என்று பேசத் தொடங்கியவளின் குரல், தவளையின் குரலைப் போல் கிறீச்சிட... அவளுக்கே சிரிப்பு தான் வந்தது.


தொண்டையை நன்றாகக் கமறிக்கொண்டு, “என் நடிப்புத் திறமையைப் பற்றி அப்புறம் பேசலாம்! இப்ப என் பெரியம்மா வீட்டில் உங்களுக்கு என்ன வேலை?” என்றாள் எரிச்சலாக.


“உன் பெரியம்மா வீட்டில் எனக்கென்ன வேலை? என் வீட்டில் நான் இருக்கிறேன். நீதான் என் அறையில் இருக்கிறாய்!” என்றான் முகத்தில் அடித்தபடி.


“என்னது?” என்றாள் புரியாமல்.


கண்களைச் சுழற்றியவளுக்கு, தான் இருப்பது தன்னுடைய பெரியம்மாவின் வீடு இல்லை என்பது அப்பொழுது தான் புரிய... பட்டென்று அவனின் பாட்டி தன்னைத் திட்டியது, நினைவிற்குப் பளிச்சென்று வந்து நின்றது.


“ஆமாம்... எங்கே அந்த நீலாம்பரி பாட்டி?”


“ஏய்... வயதில் பெரியவர்கள் என்கிற மரியாதை இருக்கட்டும்!” என்றான் அடிக்குரலில்.


“என்ன... என்ன... மரியாதையா? முதலில் மரியாதை என்ற வார்த்தையின் அர்த்தமாவது உங்க குடும்பத்தில் யாருக்காவது தெரியுமா? இல்லை, அது என்னன்னு கேள்வியாவது பட்டதுண்டா? ம்கூம்... உங்களிடம் என்ன வெட்டிப்பேச்சு? கூப்பிடுங்க... அவங்ககிட்ட நானே பேசிக்கிறேன். உங்க பாட்டி பேசின பேச்சிற்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும். ஏதோ நானாக இருக்க போய்... மயக்கத்தோடு போச்சு!” என்று கிறீச்சிட்டாள் குழலி.


மெல்ல தன் இடது கையை உயர்த்தி மணிக்கட்டிலிருந்த சுவிஸ் வாட்ச்சில் நேரம் பார்த்தவன், தலையை நிமிர்த்தி “பாட்டி ஜோசியரைப் பார்த்துட்டு வர இன்னும் ஒரு மணிநேரம் மீதி இருக்கு! அதுவரை நீ உயிரோடு இருக்க ஆசைப்பட்டால்... டோண்ட் எவர்... எவர் ஆடர் மீ! டு ஐ மேக் மைசெல்ப் க்ளியர்?” என்று கர்ஜித்தான்.


‘ஆடரா? அவன் எனக்கு இட்டதிற்குப் பெயர் ஆடரா? இல்லை நான் அவனிடம் கேட்டதற்குப் பெயர் ஆடரா?’ என விரக்தியில் சிரிப்பு தான் வந்தது.


“எங்க கிராமத்தில் வீட்டுப் படியேறி வந்துவிட்டால்... ஜென்மப் பகையாக இருந்தாலும் கூட, மட்டு மரியாதையாகத் தான் பேசுவாங்க! ஆனா உங்க வீட்டில் மட்டும் ஆள் மாத்தி ஆள், இப்படி வாய்க்கு வந்ததைப் பேசுவீங்க... நாங்க அப்படியே காது குளிரக் கேட்டுக்கணும்! ஆனா, அதையே உங்களுக்கு ஒரு தரம் திருப்பிச் செய்தால்... பத்திக்கிட்டுக் கோபம் வருதா?”


“வாட் கோபப்படுறேனா... நானா? ஒண்ணு புரிந்து கொள் கார்குழலி... நான் இப்போ வெறும் கோபத்தில் இல்லை. கொலை... கொலைவெறியில் இருக்கேன்! இந்த ஜென்மத்தில் யாராவது என்னிடம் உதவின்னு கேட்டு, என் வீட்டுவாசலுக்கு வந்து நின்னா... ஒரு தரம், ஒரேயொரு தரம் உன்னை நினைத்துக் கொண்டால் போதும்... உதவ வேண்டும் என்ற எண்ணம் கூடப் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிவிடும்!”


அவனின் மிதமிஞ்சிய கோபமும், வெறித்த பார்வையும், அதில் தோன்றிய பாவமும், நாண் ஏற்றிய வில்லாய் அவன் நின்ற விதமும்... சுதந்திரமாகக் காட்டில் சுற்றித் திரிந்த சிங்கத்தை, கூட்டிற்குள் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்டதை நினைவுப்படுத்த, ‘அபாயம்... அபாயம்!’ என்று மனம் அசரீரியாய் அவள் காதில் ஒலித்தது.


“ஏன் இப்படிப் பேசுறீங்க?” என்றாள் மூச்சடைக்க.


“பேச மட்டும் தான் செய்யறேன்னு சந்தோஷப்படு! எனக்கு வரும் கோபத்திற்கு உன்னை...” என்று கடித்த பற்களின் ஊடே வார்த்தைகளை மென்று விழுங்கினான் சூர்யா.


“இப்ப என்ன ஆச்சுன்னு நீங்க...” என்று ஆரம்பித்தவளை மேலே பேச விடாமல்,


“இன்னும் என்ன ஆகணும்... நமக்குக் கல்யாணம் தான் ஆகணும்!” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.


அப்பொழுது தான் அவன் தன்னை மணந்து கொள்ளப் போவதாகக் கூறியது நீரில் முழுகிய பந்து போல் ‘குபீர்’ என்று ஞாபகம் வர, நினைவுகளின் தாக்குதலால் சுவாசிக்க முடியாமல் மூச்சு முட்ட, திணறலோடு “இப்ப என்ன... என்ன சொன்னீங்க?” என்றாள் மிகுந்த பிராயசனப்பட்டு.


“இத்தனை நேரம்... நான் பேசியது எல்லாம் திவ்யமா விழுந்த உன் காதுக்கு... இப்ப மட்டும் என்ன கேடு வந்துவிட்டது என்று திரும்பவும் கேட்கிறாய்?”


“காதில் விழாததால் கேட்கவில்லை... விழுந்தது புரியாததால் மீண்டும் கேட்கிறேன்!”


“இப்ப நான் பேசியதில் எந்தப் பகுதி உனக்குப் புரியவில்லை? கல்யாணம்னா என்னன்னு தெரியாமல் இருக்க... நீ என்ன சின்னதம்பி பிரபுவா? இல்லை, அர்த்தமே புரியாமல் இருக்க... நான் என்ன ஹிந்தியிலா பேசினேன்?” என்றான் இகழ்ச்சியாக.


அவன் சொன்ன வார்த்தைகள், செம்மட்டியால் அடித்தது போல் மனதைப் பிளக்க... அதிர்ச்சி, வலி, துக்கம் என்று மாறி மாறிப் பீடிக்க, துடிதுடித்துப் போய் நின்றாள் குழலி.


அவனே தொடர்ந்து, “எனக்கு என்னவோ... என் வாயால் திரும்பத் திரும்ப கல்யாணத்தைப் பற்றிச் சொல்லி, உன் காது குளிரக் கேட்பதில்... உனக்கு ஒருவிதக் குரூரமான ஆனந்தம் இருக்குமோன்னு தோணுது!” என்றான்.


‘கடவுளே! இவனால் மட்டும் எப்படி... இப்படியெல்லாம் பேச முடிகிறது?’ என்று நினைக்கையில், ‘முதலில் என்னைப் பற்றிப் பேச இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவன் உச்சாணிக் கொம்பில் வீற்றிருக்கும் கோபுரக் கலசமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக அனைவரையும் தூசியாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லையே?’


“எந்தச் சந்தர்ப்பத்திலும்... எப்படிப்பட்ட சூழலிலும்... உங்களை மணக்க மாட்டேன்!’’ என்றாள் ஆக்ரோஷமாக.


அவள் என்னவோ பெரிய விட்டடித்து விட்டது போலத் தலையைச் சரித்து, “ஹா ஹா” என்று தெனாவட்டாகச் சிரித்தவன், தன் இடது ஆள்காட்டி விரலால் தன்னைத்தானே சுட்டிக்காட்டி “சூர்யா இன்டஸ்ட்ரீஸின் சேர்மேன் என்னை... இந்த சூர்யபிரகாஷைக் கல்யாணம் செய்து கொள்ள உனக்குக் கசக்குதுன்னு நீ சொன்னா... அதை நம்ப, நான் என்ன முட்டாளா?” என்றான் இறுமாப்புடன்.


அவனைப் போலவே தானும் இளக்காரமாகச் சிரித்த குழலி, “உங்களைப் பற்றி நீங்களே பீற்றிக் கொள்வதைக் கேட்டால்... எங்க ஊர் சந்தையில் விற்காத சரக்கை இப்படித்தான் கூவி, கூவி விற்பார்கள். அது மாதிரி இருக்கு நீங்க பேசறது! நீங்க சூர்யா இன்டஸ்ட்ரீஸின் சேர்மேனாக இருங்க... இல்ல செக்யூரிட்டியாக இருங்க... எனக்கு என்ன வந்தது?” என்றாள் அலட்சியமாக.


இப்போது அவளைவிட இளக்காரமாக அவளையே பார்த்தான் சூர்யா.


“பேச்சு எல்லாம் பிரமாதம்... ஆனா நம்பத்தான் முடியலை!”


“நான் சொல்லுவதை முழுமையாக நம்பும் ஆளைத்தான் நான் மணப்பேன்!’’


“ஹா ஹா” என்று முன்பு போலவே எகத்தாளமாகச் சிரித்தவன், “இந்த மாதிரி லாஜிக்கெல்லாம்... ஒரு பெண்ணால் தான் பேச முடியும். நீ சொல்லுறயே... அந்த மகானுபாவர்... அவரைச் சீக்கிரம் தேடிக் கண்டுபிடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று தெனாவட்டாக.


“எல்லோரையும் உங்களைப் போல் எடை போடாதீங்க... நல்லவங்களும் இருக்கத் தான் செய்வாங்க!” என்றாள் குழலி வெகுண்டு.


“என்னது நல்லவனா? ட்ரஸ்ட் மீ கார்குழலி! சில விஷயங்களில்... ஓர் ஆண்மகனின் கண்ணோட்டமும், மனநிலையும் வேறு மாதிரித் தான் இருக்கும்!”


“நான் உங்களை மாதிரி... சராசரியைப் பற்றிப் பேசவில்லை! மறுமணமே சாதாரண விஷயமாகி விட்ட இந்தக் காலத்தில்... ஒரு... ஒரு...” என்றவள், இதற்கு மேல் எப்படிச் சொல்வது என்று புரியாது தத்தளித்தாள்.


பின் சமாளித்துக் கொண்டு, “இந்த மாதிரி விஷயத்திற்காக... யாரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்களா?” என்று கேட்டாள்.


“எப்படிப்பட்ட கல்யாணமாக இருந்தாலும் சரி... தான் மணம் செய்து கொள்ளவிருக்கும் பெண், இன்னொருத்தனிடம் ‘பிஸிகல் அட்ராக்ஷ’னை பீல் பண்ணுகிறாள் என்றால்... அதைப் பரந்த மனசாக ஏற்றுக் கொள்வாங்கன்னு... நீ நம்புற பார்! வேணும்னா... நீ தேடிக் கண்டுபிடிக்கும் அந்த ‘ஸோ கால்டு’ மனிதருள் மாணிக்கத்திடம்... இங்க நடந்த எல்லாத்தையும் ஒண்ணு விடாமல் சொல்லேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்?” என்று சவால்விட்டவன், தொடர்ந்து


“அப்புறம் நீ சொன்னீயே... என்னைப் போல சராசரி ஆண்! அந்தச் சராசரியில் நானும் ஒருவனாக இருந்திருந்தால்... இந்நேரத்திற்கு நீ உலகத்திலிருக்கும் அத்தனை கெட்டப் பெயரையும் சுமந்துகொண்டு, அவமானத்தால் கூனிக்குறுகிப் போயிருப்பாய்! வாய் இருக்குன்னு... வந்ததைப் பேசிக்கிட்டே போறீயே... எனக்கு மட்டும் பட்டிக்காட்டில் பிறந்து வளர்ந்து, படிப்பு வாசனையே இல்லாத ஒரு பட்டிக்காட்டைக் கல்யாணம் செய்துக்க ஆசையா என்ன?” என்றான் எகத்தாளமாக.


வேறொரு சமயமாக இருந்திருந்தால்... அவள் என்ன படித்திருக்கிறாள், என்ன வேலை செய்கிறாள் என்பதை முகத்திலடிப்பது போல் கூறியிருப்பாள்.


‘இப்ப அதுவா பிரச்சனை? இல்லையே... இவன் மட்டும் என்னைத் தூக்காமல் இருந்திருந்தால்... இந்தப் பிரச்சனையே எழுந்திருக்காதே? செய்வதையெல்லாம் செய்துவிட்டு... வாய்க் கூசாமல் பேசுவதைப் பார்?’


முகம் அவமானத்தால் கன்றிச் சிவக்க, “போதும்! இந்தப் பிரச்சனைக்கே மூலக் காரணம் நீங்க தானே? நீங்க மட்டும் என்னைத் தூக்கிக்கொண்டு வராமல் இருந்திருந்தால்... இந்தப் பிரச்சனையே வந்திருக்காதே?” என்று ஆதங்கம் கலந்த குமுறலுடன் வினவினாள்.


“என்னது... இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணம் நானா? எங்க என் கண்ணைப் பார்த்துச் சொல்லு... இதற்கு நானா காரணம்?”


அது தானே அவள் பிரச்சனையே! அந்தத் தேன்நிறக் கண்களைப் பார்த்தால் தான் அவளுக்குப் புத்தி மங்கி விடுகிறதே! இந்த லட்சணத்தில் எங்கிருந்து பேசுவது? தன்னையும், தன் பரிதாபகரமான நிலையையும் நினைக்கையில்... சிறு வயதில் படித்த ‘நெபந்தஸ்’ என்ற பூச்சியை இரையாகக் கொள்ளும் ஒருவகைத் தாவரம் தான் ஞாபகத்திற்கு வந்தது.


‘நெபந்தஸ்’ தாவரம் தன் செக்கச் சிவந்த சுரைக்குடுக்கை போன்ற பூவினால் பூச்சிகளைக் கவரும் தன்மையுடையது. அந்த நிறத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட பூச்சிகள், மயங்கி சென்று அந்தப் பூவின் வாயில் பேரானந்தமாய் அமரும். அடுத்த நொடி, அப்படியே அந்தச் சுரைக்குடுக்கை போலிருக்கும் அந்தப் பையின் உள்ளே வழுக்கி விழுந்து, அந்தப் பூவிற்கே இரையாகிப் போகுமாம்!


அதுபோல, அவனுடையைத் தேன் நிற விழிகளிலே கிறங்கியவளை... அவன் தனது படுக்கையறைக்குத் தூக்கிச் செல்கிறான் என்பதைக் கூட உணராது, அவனது கையில் கட்டுண்டு கிடக்க... இப்போது யாருக்கு யார் இரையாகப் போகிறார்கள்? எப்படிப்பட்ட இக்கட்டில் மாட்டிக்கொண்டாள்?


‘இப்பொழுது தான்தொலைத்திருப்பது வெறும் சாவியை மட்டுமா? இல்லை, தன் வாழ்கையையே வா?’ என்ற விடை தெரியாத கேள்ளவி அவளை மிரட்டி மருட்டியது. அதீத பயத்தில் நெஞ்சு விபரீதமாக அடித்துக்கொள்ள, அவளின் கால்கள் தள்ளாடத் தொடங்கின.


அவனது கண்ணைத் தவிர்த்துவிட்டு, பொதுவாகப் பார்த்து “நானா... நானா உங்களைத் தூக்கச் சொன்னேன்?” என்றாள் தடுமாற்றத்துடன்.


“நான் உன்னைத் தூக்கிக்கொண்டு இரண்டு படி ஏறும் வரை திமிறினாய்... அப்புறம் மீதியிருந்த இருபது படிகளும் உன்னைத் தூக்கிக்கொண்டு ஏறி, என் பெட்ரூமிற்கு வரும் வரை... நீ எங்கே போயிருந்தாய் கார்குழலி?” என்றான் இளக்காரமாய்.


பேரதிர்ச்சியில் உறைந்தவள் பின் பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்து, அவனது சட்டையைப் பாய்ந்து பிடித்து “எவ்வளவு திமிர் இருந்தால்... என்னை உங்களுடைய பெட்... பெட் ரூம் வரை தூக்கி வந்திருப்பீர்கள்?” என்று தீப்பிழம்பாய் கொதித்தாள்.


“ஹனி, நீ என்னைப் பார்த்த பார்வைக்கு... உன்னை பெட்ரூமுக்குத் தூக்கிக்கொண்டு போகாமல், பின்னே கிட்சனுக்கா போகச் சொல்லுகிறாய்? ஐயம் ஆல்வேஸ்ஸ்ஸ்...” என்று மிஸ்டர். தெனாவட்டாகப் பதில் சொல்லிக்கொண்டு போக,


அதற்குமேல் அவனைப் பேசவிடாது ஓங்கி ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைய, அத்தோடு சூர்யாவின் பேச்சு நின்றது. காரில் செய்யத் தவறியதை, இப்போது கனகச்சிதமாகச் செய்து முடித்தாள் கார்குழலி.


“இது அருவாள் பிடித்து, கதிர் அறுத்த கை! உங்க நாக்கை அறுக்கவும் தயங்காது! உங்க நாக்கு உங்களுக்கு வேணும்னா... இனி ஒரு வார்த்தை... ஒரு வார்த்தை மேலே பேசாதீங்க!” என்று பத்திரகாளி அவதாரம் எடுத்தாள்.


தேன் நிறக் கண்களில் கொள்ளிக்கட்டையைப் போல் தீ எழ, “ப்ளடி பி... ஹெவ் டேர் யூ? யாரைப் பார்த்துக் கையை நீட்டுற... யாரைப் பார்த்து ஆடர் போடுற?” என்றவன், பட்டென்று அவளது கைகள் இரண்டையும் முதுகிற்குப் பின்னால் பிடித்து, அவள் திமிறியதை ஒரு பொருட்டாகக் கூடக் கருதாது, மற்றொரு கையால் அவளின் முகவாயைத் தூக்கிப் பிடித்தான்.


“முன்பே எச்சரித்தேன் கார்குழலி... என்னைக் கோபப்படுத்துவது உனக்கு நல்லதில்லைன்னு! ஆனா நீதான் யார் சொன்னாலும் கேட்கமாட்டியே! என்ன சொன்ன... பேசாமல் இருக்கணுமா? அன்று பஸ் ஸ்டாப்பில்... மழையில் நனைந்த உன் தர்ட்டி சிக்ஸ், டுவண்ட்டி எயிட், தர்ட்டி டூ உடலை... வேட்டை நாயின் வெறியோடு சில தடிமாடுகள் பார்த்தாங்களே... அப்போ... அப்போ எனக்கு என்னன்னு பேசாமல் இருந்திருக்கணும்டி!


அப்புறம், நீ திமிரெடுத்து நட்ட நடுரோட்டில் இறங்கி சேற்றில் விழுந்து வாரினாய் பார்... அப்படியே ஜன்னி வந்து சாவுடின்னு பேசாமல் போயிருக்கணும்டி! அப்புறம் உன் சாவியைத் தொலைத்துவிட்டு, அழுத கண்ணோடு என் வீட்டு வாசலில் வந்து நின்ன பாரு... அப்ப பேசாமல் போயிருக்கணும்டி! இது எல்லாத்தையும் விட, என் பாட்டி உன்னைத் தரக்குறைவா பேசும்போது... வாயை மூடிக்கிட்டுப் பேசாமல் இருந்திருக்கணும்டி! அதை விட்டுட்டு, உன் மானத்தையும், உன் குடும்பக் கௌரவத்தையும் காப்பாற்ற... போயும் போயும் உன்னை என் வருங்கால மனைவின்னு சொன்னேன் பார். அதுதான்... அது தான்டி எல்லாத்துக்கும் ஹை லைட்!” என்று நெருப்பை வார்த்தைகளாகக் கக்கினான் எஸ்.பி.

தொடரும்...

அடுத்த பதிவு - புதன்

DEAR READERS...

உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
 

Mehala Devi

New member
கல்யாணம் பண்ணிக்கிட்டடும் சண்டை தான் போடா போறாங்க போல kothai dear. Very nice epi.
 

Dra ananth

New member
Haha 🤣🤣
I didn't expect this ka .... மயக்கம் வந்தா பூகம்பம் னு சொல்லி கிட்டு இருக்கா 🤣 🤣 .....
Surya முன்ன எல்லாம் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்து இருக்கான்.... flash back la... இப்போ தான் என்னவோ ஆயிடுச்சி போல....
Nice epi ka 🤗
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
கல்யாணம் பண்ணிக்கிட்டடும் சண்டை தான் போடா போறாங்க போல kothai dear. Very nice epi.
பின்ன குடும்ப நடத்தவா கல்யாணம் பண்ணிக்கிறாங்கன்னு நினைக்கறிங்க?? சரியா போச்சு போங்க...
 

Kodhai Nappinnai

Moderator
Staff member
Haha 🤣🤣
I didn't expect this ka .... மயக்கம் வந்தா பூகம்பம் னு சொல்லி கிட்டு இருக்கா 🤣 🤣 .....
Surya முன்ன எல்லாம் நல்லாத்தான் பேசிகிட்டு இருந்து இருக்கான்.... flash back la... இப்போ தான் என்னவோ ஆயிடுச்சி போல....
Nice epi ka 🤗
அதுதான் நம்ம குழலி... நிறைய நடந்து இருக்கு.. பாருங்க புரியும்..
நன்றி DRA,,,
 
Top